நீதி: உண்மை, வேறு விதமாக யோசித்தல்
உப நீதி: நன்னம்பிக்கை
பெற்றோர், குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்காக பவுலோ கோய்லோவின் கதைகளிலிருந்து எடுக்கப்பட்டது
இந்தியாவில், ஒரு வயதான அரசர், ஒரு மனிதனுக்கு மரண தண்டனை அளித்தார். அரசர் தன் தீர்ப்பை படித்து முடித்த போது, தண்டிக்கப்பட்ட மனிதன் “மாட்சிமை உள்ள மன்னரே! தாங்கள் அறிவுள்ளவராகவும், குடிமக்களின் நலனை அறிந்து கொள்ள ஆர்வமுடையவராகவும் இருக்கிறீர்கள். நீங்கள் குருமார்கள், முனிவர்கள், பாம்பாட்டிகள் மற்றும் பக்கிரிகளை மதிக்கிறீர்கள். அருமை! நான் சிறுவனாக இருந்த போது, என் தாத்தா வெள்ளைக் குதிரையை எப்படி பறக்க வைப்பது என்று எனக்குக் கற்றுக் கொடுத்தார். இந்த ராஜ்ஜியத்தில் இதை எப்படிச் செய்வது என்று தெரிந்தவர்கள் எவரும் இல்லாததால், என்னை மரணத் தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும்” என்று கூறினான்.
அரசர் உடனடியாக ஒரு வெள்ளைக் குதிரையைக் கொண்டு வருமாறு கேட்டார்.
தண்டிக்கப்பட்ட மனிதன் “இந்த மிருகத்துடன் நான் இரண்டு வருடங்கள் செலவழிக்க வேண்டும்” என்று கூறினான்.
அரசர் “சரி! உனக்கு இரண்டு வருடங்கள் அளிக்கப்படும்” என்று சற்று சந்தேகத்துடனேயே கூறிய பிறகு “இக்குதிரை பறக்கக் கற்றுக் கொள்ளாவிட்டால், நீ தூக்கில் போடப் படுவாய்” என்றும் கூறினார்.
அந்த மனிதன் மிகுந்த சந்தோஷத்துடன் குதிரையுடன் புறப்பட்டான். அவன் தன் வீட்டை அடைந்த போது, குடும்பத்தினர் அனைவரையும் கண்ணீருடன் காணப் பட்டனர்.
அனைவரும் “நீ என்ன பைத்தியமா? எப்போதிலிருந்து இந்த வீட்டில் இருப்பவர்களுக்குக் குதிரையைப் பறக்க வைக்கத் தெரியும்?” என்று அழுதுக் கொண்டே கேட்டனர்.
அதற்கு அவன் “கவலைப் படாதீர்கள்” என்று கூறி, “முதலாவதாக குதிரைக்குப் பறக்கக் கற்றுக் கொடுப்பதற்கு எவருமே ஒரு பொழுதும் முயன்றதில்லை. குதிரை பறக்கக் கூட கற்றுக் கொள்ளலாம். இரண்டாவதாக, ஏற்கனவே அரசருக்கு வயதாகி விட்டதால், அடுத்த இரண்டு வருடங்களில் அவர் இறந்து கூடப் போகலாம். மூன்றாவதாக, இந்தக் குதிரை இறந்து போகலாம், பிறகு புதிய குதிரைக்குக் கற்றுக் கொடுக்க எனக்கு மேலும் இரண்டு வருடங்கள் வழங்கப் படலாம். மேலும் புரட்சிகள், ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் பொது மன்னிப்புக்கான சாத்தியக் கூறுகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இப்போது இருப்பதைப் போலவே சூழ்நிலைகள் இருந்தாலும், எனக்குக் கிடைத்திருக்கும் இந்த இரண்டு வருடங்களில், நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும். இது உங்களுக்கெல்லாம் குறைவாகத் தெரிகிறதா?” என்று கேட்டான்.
சில விஷயங்கள் நடப்பதற்கு முன்பே, அதை மனதில் போட்டு கொள்வதற்குப் பெயர் முன் நோக்குதல் எனப்படும். சில விஷயங்கள் நடப்பதற்கு முன்பே அதன் முடிவுகள் தவறாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கவலைப் படுவதாகும்.
பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன்பே, அதை சரி செய்ய முயற்சிப்பது தைரியமாகும்.
நீதி:
கவலைப்படுவதால் நம் இடர்பாடுகள் சரியாகப் போவதில்லை; நம் மன அமைதி மட்டுமே பாதிக்கப்படும். நாம் நம்பிக்கையுடன் இருந்து, வேறு விதமாக யோசித்து, அவநம்பிக்கை தரும் சூழ்நிலைகளை நல்ல விஷயங்களாக மாற்றி அமைக்க முயற்சி செய்து, வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொண்டு, தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் முன்னேறிச் செல்ல வேண்டும். கவலைப்படுவதனால் நாளைய துன்பங்கள் மறைந்து போகாது; மாறாக இன்றைய சந்தோஷத்தை பறித்து விடும். நாம் எதை அடைய வேண்டுமோ அதில் கவனத்தைச் செலுத்தத் துவங்க வேண்டும். எதை இழக்க வேண்டுமோ அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மொழி பெயர்ப்பு:
அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE