Archive | September 2014

அஹிம்சையின் சக்தி

the power of non violence

நீதி – அஹிம்சை

உபநீதி – அமைதி / மௌனம் / சிந்தனை, வாக்கு, செயல் இவற்றில் ஒற்றுமை

மகாத்மா  காந்தியின் பேரன் டாக்டர். அருண் காந்தி, ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த பிரபலமான நிறுவனம் தான் எம். கே. காந்தி அஹிம்சைவாதி நிறுவனம். ஜூன் ஒன்பதாம் தேதி, புர்டோ ரிகோ பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அதில் அஹிம்சையின் முக்கியத்துவத்தைக் கீழ்வரும் கதையின் மூலமாக எடுத்துரைத்தார். குழந்தை வளர்ப்பில் அஹிம்சை முறைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தான் எடுத்துக்காட்டாக இந்தக் கதையில் சொல்லப்படுகின்றது.

இந்த சம்பவம் நடந்த போது எனக்கு வயது பதினாறு. என் தாத்தா ஆரம்பித்த நிறுவனம் தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன்(DURBAN) நகரத்திலிருந்து பதினெட்டு மைல் தூரம் இருந்தது. கரும்பு வயலின் நடுவில் இருந்த இந்த நிறுவனத்தில் தான் என் பெற்றோர்களுடன் வசித்து வந்தேன். நாட்டுப் புறத்தில் இருந்ததால் அருகில் வசிப்பவர்கள் யாருமே இல்லை. அதனால் நானும் என் இரண்டு சகோதரிகளும்  நகரத்திற்கு அடிக்கடி சென்று நண்பர்களைப் பார்க்கவும், திரையரங்கத்திற்குச் சென்று சினிமா பார்க்கவும் கிளம்பி விடுவோம். ஒரு நாள் என் தந்தை கலந்துரையாடல் ஒன்றுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்ததால், நகரத்திற்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்று என்னிடம் சொன்னார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. உடனடியாக என் தாயார் நான் வாங்க வேண்டிய சரக்குகள் அனைத்தையும் ஒரு காகித்தத்தில் எழுதிக் கொடுத்தார். தந்தை வேறு நிறைய வேலைகளை செய்து வைக்கும்படி கட்டளையிட்டார். அதில் ஒன்று வாகனத்தை சரிசெய்வதும் கூட.

அடுத்த நாள் தந்தையை நகரத்தில் விடும் பொழுது அவர் சொன்ன வார்த்தைகள் என்னவென்றால் , “நீ எல்லா வேலைகளையும் முடித்து வை. சாயங்காலம் ஐந்து மணிக்கு நான் இங்கு வருகிறேன். ஒன்றாக வீட்டிற்கு சென்று விடலாம்.”

அவசர அவசரமாக வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு ஒரு திரையரங்கிற்குச் சினிமா பார்க்கச் சென்று விட்டேன். ஜான் வேன்(JOHN WAYNE) நடிக்கும் படத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. ஐந்தரை ஆகும் போதுதான் ஞாபகம் வந்தது. உடனடியாக வண்டி சரி செய்யும் இடத்திற்கு சென்று காரை எடுத்துக் கொண்டு தந்தை இருக்கும் இடத்திற்குச் செல்லும் போது மணி ஆறாகி விட்டது.

“ஏன் இவ்வளவு தாமதம்?” என்று தந்தை கவலையுடன் கேட்டார். சினிமாவிற்குச் சென்றேன் என்று சொல்லக் கூச்சமாக இருந்ததால். வண்டியைப் பழுது பார்க்கும் இடத்த்தில் தாமதமாகி விட்டது என்று கூறினேன். ஆனால் தந்தை, தொலைபேசி மூலம் வாகனம் கொடுத்த இடத்திலேயே விசாரித்து வைத்திருந்தார். அவருக்கு உண்மையெல்லாம் தெரிந்து விட்டது.

நான் பொய் சொன்னேன் என்று தெரிந்தவுடன், ” என்னிடம் உண்மையைச் சொல்ல உனக்கு இவ்வளவு தயக்கம் இருந்திருப்பதால் நான் உன்னை வளர்த்த விதம் சரியில்லை. அதனால் வீட்டிற்கு  நடந்தே செல்கிறேன். பதினெட்டு மைல் தூரம் நடக்கும் போது என் மேல் என்ன தப்பு என்று யோசனை செய்து கொண்டே நடக்கின்றேன்.” என்றுச் சொன்னார்.

பிறகு தான் அணிந்திருந்த அலுவலக உடுப்புடன் அந்த இருட்டுச் சாலையில் நடக்க ஆரம்பித்தார். அவரைத் தனியாக விடவும் மனசில்லை. ஐந்தரை மணி நேரம் அவர் நடந்து சென்ற பாதையில் அவருக்குப் பின்னால் வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்றேன். நான் பண்ணின முட்டாள் தனமான காரியத்திற்காக அப்பா கஷ்டப்படுவதைப் பார்த்து மனதுடைந்தேன். இனிமேல் பொய்யே சொல்ல மாட்டேன் என்று சபதம் எடுத்தேன்.

இந்த நிகழ்ச்சி எப்பொழுதும் எனக்கு ஞாபகம் வரும். முக்கியமாக நான் பொய் சொல்லவே மாட்டேன் என்று உறுதியாக இருந்த காரணம்  என் அப்பா நடந்து கொண்ட விதம் தான். இந்தக் காலத்தில் கண்டன முறை வேறு. அப்பா எவ்வளவு அழகாக எனக்கு உண்மையை உணர்த்தினார். இது தான் அஹிம்சையின் சக்தி. மறக்கவே முடியாத ஒரு சம்பவம்,. நேற்று நடந்தது போல் இருக்கிறது.

நீதி:

அஹிம்சை முறைகளைக் கடைப்பிடித்தால் வெற்றியில் முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு மகாத்மா காந்தி. நிறைய பிரச்சனைகளுக்குத் தீர்வு அன்பும் அமைதியும் தான். சில சமயங்களில், கண்டனமான நடவடிக்கைகளை விட அமைதியாக இருப்பதே மன நிம்மதியைத் தரும். ஒரு குழந்தைக்குக் கண்டிப்பு தேவையில்லை. அன்புடன் சொன்னாலே போதுமானது. கோபப்படுவதாலோ கத்துவதாலோ மன கசப்பு தான் அதிகமாகும். நற்குணங்களைப் புகட்ட அஹிம்சை தான் சிறந்த வழி.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

சகல சௌபாக்கியங்களும் தரும் நவராத்திரி விரதம்

NAVARATHRI 1

இந்துக்களிடையே சக்தி வழிபாடு மிகவும் மேலான இடத்தினை பெறுகின்றது. இச்சக்தி வழிபாட்டிலே நவராத்திரி விரதம் மிகச் சிறப்பு மிக்கது. புரட்டாசி மாதப் பிரதமை தொடங்கி நவமி வரை வரும் ஒன்பது தினங்கள் நவராத்திரி விரத காலமாகும். அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாட்களும் பூஜித்து வழிபடும் போது, பூஜை ஆரம்பிக்கும் பொழுது கலசம் வைப்பது தான் மிகவும் விசேஷம். கலசத்தில் தீர்த்தத்திற்கு பதிலாக அரிசி, துவரம் பருப்பு சிறிதளவு மஞ்சள் 2 நிரப்பவேண்டும்.
முதல் மூன்று நாட்கள் ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும்  வேண்டியும், அடுத்த மூன்று நாட்கள் ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாட்கள்  ஸ்ரீ சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள்  என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம். ஒன்பதாவது நாள் நடக்கும் பூஜை கலைமகளுக்கு உரியதாகும். இந்தப் பூஜையின் போது பள்ளி செல்லும் பிள்ளைகளின் புத்தகங்கள் மற்றும்   இசைக்கருவிகளையும் வைத்து வணங்குவார்கள்.

navarathri 2

இதற்கு ‘சரஸ்வதி பூஜை’ அல்லது ‘கலைமகள் விழா’ என்பது பெயராகும். கலைமகள் விழா அத்தனை கோயில்களிலும் நடைபெறும் ஒன்றாகும். சரஸ்வதி   பூஜையின் மறுநாள் விஜயதசமி என்ற பண்டிகை கொண்டாடப்படுகின்றது. பத்தாம் நாள் விஜயதசமியன்று பூஜையுடன் நவராத்திரி பூஜையை நிறைவு செய்கின்றனர். நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில்  தொழிலாளிகள், ஆயுதத்தையுடையவர்கள் ஆகியவர்கள் தங்கள் ஆயுதங்களை வைத்து பூஜை  செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப் பூஜைக்கு ‘ஆயுத பூஜை ‘ என்றொரு பெயரும் உண்டு.

பலவிதமான வண்ணமிகு பொம்மைகளைவைத்துக் கொலு வைப்பார்கள். காலையிலும் மாலையிலும் தேவிக்குப் பூஜைகள் நடைபெறும். இவற்றுள் மாலை   வேளையில் நடைபெறும் பூஜையே சிறப்புடையதாகும்.சுமங்கலி பெண்கள் தங்கள் மங்கல வாழ்வை தேவியிடம் வேண்டிச் செய்யப்படும் பூஜைதான் இதுவாகும் என்று கொள்ளலாம். எனவே, ஒவ்வொரு நாள்   மாலையில் நடைபெறும் பூஜைக்கும் சுமங்கலிப் பெண்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், ரவிக்கைத் துண்டு வைத்துக் கொடுத்து   அனுப்புவார்கள்.

நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பது தான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் முக்கிய தத்துவம் ஆகும். பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவர் ஆவார். இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சகல சொபாக்கியங்களும் கிடைப்பது உறுதி.

நவராத்திரி பூஜை செய்யும் பொழுது சில தெய்வீகமான புத்தகங்களை படித்தால் ரொம்ப விசேஷம். அவை தேவி மகாத்மியம், அபிராமி அந்தாதி,  துர்கா அஷ்டகம், கனகதார ஸ்தோத்ரம், சகலகலாவல்லி மாலை, சரஸ்வதி அந்தாதி, கனகதார ஸ்தோத்ரம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம் ஆகும்.

SOURCE:

http://www.maalaimalar.com/2011/02/26122703/Navratri-viratham.html

http://ta.wikipedia.org/wiki/நவராத்திரி_நோன்பு

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=6039&cat=3

கடலாமையிடமிருந்து ஒரு பாடம் – புரிந்து கொள்ளுதல்

lessons from a terrapain

நீதி – அன்பு / நிம்மதி / அமைதி  

உபநீதி – பொறுமை / நம்பிக்கை 

ஒரு சிறுவன் ஒரு கடலாமையைக் கண்டான். அதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பிய சமயம் ஆமை தலையை ஓட்டுக்குள்  இழுத்துக் கொண்டது. சிறுவன் சற்று ஏமாற்றம் அடைந்தான். ஒரு சிறு குச்சியால் அந்த ஓட்டை திறக்க விரும்பினான். அச்சிறுவனின் மாமா அதைப் பார்த்து விட்டு, “அப்படிச் செய்வது தவறு. இதனால் ஆமை மரணம் அடையலாம். ஓட்டைத் திறப்பதும் கஷ்டம்.” எனக் கூறினார்.

மாமா கடலாமையை வீட்டிற்கு எடுத்துச் சென்று அதை ஒரு புகை போக்கியின் பக்கத்தில் இருத்தினார். சற்று நேரத்தில் வெப்பம் அதிகமானவுடன் ஆமை தன தலையை வெளியில் கொண்டு வந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு கால்களையும் வெளியே எடுத்து ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. ஆமைகள் இப்படித்தான் இருக்கும் என்று சொன்ன மாமா, “மனிதர்களும் இவ்வாறுதான். அவர்களைக் கட்டாயப்படுத்தி எதையும் செய்யவிக்க முடியாது. முதலில் அன்பு என்ற நல்ல குணத்துடன் அக்கறை என்ற நற்பண்பையும் அவர்களிடம் காட்டினால், நாம் விரும்பிய காரியத்தை அவர்கள் செய்வார்கள்.” என்று கூறினார்.

நீதி:

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் யாரையும் எதற்கும் கட்டாயப் படுத்த முடியாது. அன்பும், பொறுமையும் கொண்டே ஒருவர் மற்றவருக்குப் பாடம் புகட்டவோ, நினைத்த காரியத்தைச் செயல் படுத்தவோ அல்லது தங்கள் எண்ணத்தைப்  புரிய வைக்கவோ இயலும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

ஆணவத்தின் அர்த்தம்

what is ego zen master

நீதி – அஹிம்சை

உபநீதி – மன நிம்மதி

டாங் பரம்பரையின் (TANG DYNASTY) பிரதம மந்திரி, நாட்டுக்குச் சிறப்புச் சேர்க்கும் கதாநாயகனாகத் திகழ்ந்தார். அரசியல் அறிஞராகவும், படைவீரராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். புகழ், ஆற்றல், செல்வம் மிகுதியாக இருந்தாலும் கூட,  அவர் பணிவான, கடவுட்பற்றுள்ள பௌத்த சமயத்தினராகத் திகழ்ந்தார். நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்வதற்காக அவர் அடிக்கடி தன் குருவிடம் சென்று வருவார். பிரதம மந்திரியாக இருந்தாலும் அவர்களுக்கிடையே இருந்த உறவுமுறை போற்றத் தக்கதாக இருந்தது. மரியாதைக்குரிய குரு கண்ணியமான சிஷ்யன் என்ற ஒரு அழகான உறவாக அமைந்தது.

ஒரு முறை, குருவைப் பார்க்கச் சென்ற போது, “மரியாதைக்குரிய குருவே!! புத்த மதத்தின் அர்த்தப்படி, சுயநலம் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு குரு கோபமுடன் ஆனால் புரியும் வகையில், “இது என்ன மடத்தனமான ஒரு கேள்வி?” என்று பதிலளித்தார். இந்த எதிர்ப்பாராத பதிலைக் கேட்ட பிரதம மந்திரி முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டு கோபமுடன் பார்த்தார். உடனே அவர் குரு புன்முறுவலுடன் சொன்ன பதில், “இதற்குப்  பெயர் தான் சுயநலம் .”

நீதி:

ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், தெளிவான விளக்கத்தை விட, அனுபவத்தால் கற்றுக் கொள்ளும் பாடம் தான் நிலைத்து நிற்கும். கேள்விக்கு பதில் தேடும் அனைவருக்கும் புத்த மதத்தில் குரு என்பவர் இப்படித்தான் பதிலளிப்பார்.

 

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

கடவுள் உங்களுக்கு எந்த அளவு வேண்டும்

how much do we need god hermit meditating

நீதி – அன்பு

உபநீதி – ஆழ்ந்த அன்பு

ஒரு நதிக்கரையோரத்தில் ஒரு துறவி ஆழ்ந்த தியானம் செய்து கொண்டிருந்தார். ஒரு இளைஞன் அதைக் கலைக்க  முற்பட்டான். “குருவே நான் உங்கள் சிஷ்யனாக இருக்க விரும்புகிறேன்” எனக் கூறினான். “ஏன்”  என துறவி கேட்டதற்கு இளைஞன் சற்று யோசித்து, “எனக்குக் கடவுளைத் தேட வேண்டும்” எனக் கூறினான். துறவி இளைஞனின் பிடரியைப் பிடித்து நதிக்குள் இழுத்துச் சென்று, அவன் தலையை நீருக்குள் மூழ்கச் செய்தார்.

சற்று நேரம் இவ்வாறு இருந்த பிறகு, அந்த இளைஞன் கை கால்களை உதைத்துக் கொண்டு திணறிய போது, துறவி அவனை வெளியே இழுத்தார். இளைஞன் இருமி மூச்சு விடத் திணறினான். சற்று  சமாதானம் அடைந்த பின் துறவி அவனிடம், “நீருக்குள் மூழ்கி இருந்த போது உனக்கு எது மிகவும் தேவையாக இருந்தது?” எனக் கேட்டார். “காற்று” என்றான் இளைஞன். “மிக்க நல்லது, வீட்டிற்குச் செல். உனக்குக் கடவுளும் அதே மாதிரி எப்போது தேவைப் படுகிறாரோ அப்போது என்னிடம் திரும்பி வா” என்று கூறினார்.

நீதி:

நம் வாழ்க்கையில் சில சமயம் கடவுளைக் காட்டிலும் உயிர் வாழும் ஆசைக்கு அதிகமான அளவில் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். பைபிளில் கிறிஸ்து குறிப்பிடுவது யாதெனில் மக்கள் எல்லோரையும் துறந்து விட்டு அவரைத் தொடர்ந்து வந்தால் கடவுளை சீக்கிரமாக அடையலாம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com