Archive | October 2014

கடவுள் உணர்ச்சிகளுக்கு அளிக்கும் மதிப்பு

The lord cares the thought behind the act

நீதி – அன்பு

உபநீதி – கருணை

அப்துல்லா என்ற மனிதன் ஒரு முறை மெக்காவில் உள்ள மசூதியில் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்தான். தூக்கத்திற்கு நடுவில் இரு தேவதைகள் பேசி கொண்டிருப்பதைக் கேட்டு விழிப்படைந்தான். இருவரும் உலகத்தில் உள்ள புண்ணியவான்களின் பட்டியல் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னபடி சிகந்தர் நகரத்தில் இருக்கும் மெஹ்பூப் என்ற மனிதன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லாவிட்டாலும் சிறந்த மனிதன் என்ற பட்டியலில் முதலாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்ட அப்துல்லா சிகந்தர் நகருக்குச் சென்று பார்க்கும் பொழுது மெஹ்பூப் காலணி தைப்பவர் என்று தெரிய வந்தது. மிக ஏழ்மையான மனிதன். ஒரு வேளை உணவிற்குக் கூடக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். தியாகம் செய்து சில செப்புக் காசுகளைச் சேர்த்து வைத்திருந்தான்.

ஒரு நாள் இந்த காசுகளைச் செலவழித்து கர்ப்பமாக இருந்த தன் மனைவிக்குப் பிடித்த ஒரு தின்பண்டத்தைத் தயாரித்து அவளை சந்தோஷப் படுத்த் வேண்டும் என்று எண்ணினான். வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தான். இந்த நிலையைக் கண்ட மெஹ்பூப் எண்ணத்தை மாற்றிக் கொண்டு உணவைப் பானையுடன் பிச்சைக்காரனிடம் கொடுத்து விட்டான் அவன். பசியுடன் உணவைச் சாப்பிடுவதைக் கண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தான். அவனுக்கு இது ஒரு சிறந்த ஸ்தானத்தைக் கொடுத்தது. பல கோடி பொருட்செலவைச்  செய்து தீர்த்த யாத்திரைக்கு என மெக்கா செல்லும் பக்தர்களுக்குக் கிடைக்காத புண்ணியம் இவருக்குக் கிடைத்தது. கடவுள் நம் செயல்களுக்குப் பின் இருக்கும் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கிறார். வெளித் தோற்றத்திற்கு அல்ல.

நீதி:

நாம் பிறருக்கு உதவி செய்யும் பொழுது தரம் தான் முக்கியம், அளவு இல்லை. அன்புடன் செய்யும் சிறிய உதவிகள் அன்பல்லாது செய்யும் பல கோடிகளைக் காட்டிலும் சிறந்தது.

ஆதாரம்:

சின்ன கதா – பகவான் ஸ்ரீ சத்யா சாயி பாபா

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

வார்த்தைகளை விட செயல்களே சிறந்தவை

Stone pushing4

நீதி – நன் நடத்தை

உபநீதி – முயற்சி / தன்னலமற்ற உதவி

ஒரு விவசாயி, சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது, பாதையில் ஒரு சிறிய பாறாங்கல்லைக் கண்டான். உடனே, அவன் நடு வழியில் யார் இந்தக் கல்லைப் போட்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு, அதை யாருமே ஓரமாக நகர்த்தவில்லையே எனக் குற்றம் சாட்டிக் கொண்டே சென்றான்.

அடுத்த நாள், ஒரு பால்காரனும் இதே கல்லைப் பார்த்துவிட்டு முணு முணுத்துக் கொண்டே சென்றான். மற்றொரு நாள், ஒரு மாணவனும் இதே காட்சியைக் கண்டான். எவரேனும் தடுக்கி விழுந்து காயப்படுத்தி கொள்வார்களோ என்ற எண்ணத்தோடு அவன் அந்த பாறாங்கல்லை நகர்த்த முயற்சித்தான். அவன் தனியாகவே கஷ்டப்பட்டு, கல்லை சாலையின் ஓரத்தில் நகர்த்தினான். திரும்பி வந்த பொழுது, அங்கே ஒரு சிறிய காகிதத்தைப் பார்த்தான்.

அதில் எழுதியிருந்த வார்த்தைகள், “நீ தான் நாட்டின் உயர்ந்த பொக்கிஷம்”.

உலகத்தில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றனர். பேசுபவர்கள் ஒரு விதம், செயல்படுபவர்கள் மற்றொரு விதம்.

நீதி

செயற்பட விருப்பம் இல்லாத போது, மற்றவர்களை குற்றம் சாட்ட நமக்கு அதிகாரம் இல்லை. எந்த ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோமோ, அதை நாம் முன்னின்று செயல்படுத்த வேண்டும். சமூகத்திற்குச் செய்யும் சேவை நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்குக் கொடுக்கும் வாடகை.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

தீபாவளி

Deepavali6

தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளது. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சில தீய குணங்கள் உள்ளன. அகங்காரம், பொறாமை, தலைகனம் போன்ற எதையாவது ஒன்றை அகற்றி விட வேண்டும். ஒரு தீய குணத்தையாவது எரித்துவிட வேண்டும்.

“தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்”

தீபாவளி என்றால் தீபம் + வளி … வளி என்றால் வரிசை என்று பொருள். வரிசையாக தீபங்களை வைத்துக் கொண்டாடப்படுகிற பண்டிகையாக இருந்ததால் தீபாவளி என்ற காரணப் பெயராக நிலைத்து விட்டது!

தீமையை விலக்கும் உண்மையாகவும், இருளை விலக்கும் ஒளியாகவும் இந்த விழாவைச் சொல்கிறோம்.

இந்தியத் தத்துவ மரபில் ஒளி என்பது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. எனவே தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள் மனிதனுக்கு ஞானத்தைக் கொண்டு வருவதாக ஐதீகம். பஞ்சாங்கத்தில் தீபாவளியன்று காலையில் “சந்திர தரிசனம்” என்றோ சந்திரோதயத்தின் போது “கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம்” என்றோ காணப்படும். இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆகையால் தான், தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை “கங்காஸ்நானம்” என்று கூறுகிறார்கள்.

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நம் நாட்டில் ஏராளமான கதைகள் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கதையை தங்கள் பேரக் குழந்தைகளுக்கு பாட்டிகள் சொல்லி வருகிறார்கள்.

நம் ஊரில் தாத்தா, பாட்டிகள் சொல்லும் ஜெனரல் கதை ‘நரகாசுர வதம்’.

Deepavali8பூமாதேவியோட மகன்தான் நரகாசுரன்! நரகாசுரன் பிரம்மாவிடம் ஒரு வரம் கேட்டான். தன்னோட தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்று பிரம்மனிடம் வரம் வாங்கியிருந்தான். வரத்தை வாங்கி விட்டோம் என்ற தைரியத்தில் தன்னைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களையும் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான்.

எப்படிப்பட்ட தொல்லை என்றால் இரவில் எவரும் வீட்டில் விளக்கை ஏற்றக் கூடாது என்று உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்ச விளக்குகளை வீட்டில் வைத்தவர்களின் தலைகளை கொன்றான். நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், பகவான் கிருஷ்ணரிடம் முறையிட்டனர். கிருஷ்ணரும் நரகாசுரனை அழிப்பதாக வாக்கு உறுதி  கொடுத்து,  மக்களுக்கு ஆறுதல் சொன்னார்.

பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை எதிர்த்துச் சண்டை போட வேண்டும் என்று முடிவு செய்தார் பகவான் கிருஷ்ணர். சண்டை ஆரம்பித்து விட்டது. போர் நடக்கும் போது நரகாசுரன் விட்ட அம்பால் கிருஷ்ணர் மயக்கமடையிற நிலைக்கு ஆளாயிட்டார். இதனால் கோபமான சத்தியபாமா, நரகாசுரனோட சண்டை போட்டு அவனை வெட்டி வீழ்த்தினாள்.

நரகாசுரன் இறந்து போவதற்கு முன் தன் தாயிடம் ஒரு விண்ணப்பம் செய்தான். எனக்குச் இறந்து போவதற்கு காரணம், நான் எல்லோரையும் விளக்கை ஏற்றக் கூடாது என்று சொன்னதால் தான்! அதனால் நான் இறக்கப் போகும் இந்த நாளை மக்கள் விளக்கேற்றி சந்தாஷமாக கொண்டாட நீங்க தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று  கேட்டான்.

Deepavali10பூமாதேவி நரகாசுரனின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக ஒப்புக் கொண்டார். அதனால் நரகாசுரன் என்ற அந்தக் கொடிய அரக்கன் இறந்து ஒழிந்த அந் நாளை தீபங்கள் ஏற்றி வெளிச்சத் திருவிழாவாக…. தீபத்திருவிழாவாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.

வட நாட்டில்..

ஆனால், வட நாட்டிலோ, 14 ஆண்டுகள் வன வாசத்திலிருந்து ராமரும், சீதையும் நாடு திரும்பும் நாள் தான் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர். வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள். ராமர் மற்றும் சீதா தேவியை வரவேற்க இந்த விளக்குகள் என்பது ஐதீகம்.

தீபாவளியில் அழுக்கு நீங்க எண்ணெயிட்டு நீராடி, புத்தாடை புனைந்து, வரிசையாகத் திருவிளக்குகளை ஏற்றி, ஒளி மயமான இறைவனை மனதளவில்  சிந்தித்து, வாக்கினால் வாழ்த்திக் கொண்டாட வேண்டும். இப்படி வழிபடுவதனால் அக இருள் நீங்கிய இடத்தில் இன்பம் விளையும்.

 Deepavali9

SOURCE:

  1. http://www.tamil.webdunia.com/miscellaneous/webduniaspecial08/deepavali/0810/24/1081024079_1.htm
  2. https://ta-in.facebook.com/Relaxplzz/posts/216419075157665
  3. http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2014/10/19/தீபாவளி-கொண்டாடுவது-எப்படி/articleece

பொன்னான நியதி (அன்பினால் வரும் மாற்றம்)

?????????????????????????????????????????????????????????????????

நீதி – அன்பு

உபநீதி – பெரியோர்களிடம் காட்டும் அன்பும் மரியாதையும்

வெகு காலத்துக்கு முன்பு லீலா என்றொரு பெண்மணி திருமணம் செய்து கொண்டு கணவனுடனும், மாமியாருடனும் வசிக்கச் சென்றாள். கூடிய சீக்கிரமே தன் மாமியாருடன் ஒத்து வாழ இயலாது என லீலா தெரிந்து கொண்டாள். இருவரது இயல்பும் வேறு வேறாக இருந்தன. மாமியாரின் பழக்க வழக்கங்கள் லீலாவை கோபமடையச் செய்தன. மாமியாரும் லீலாவை எப்பொழுதும் தூற்றிக் கொண்டிருந்தாள். பல மாதங்கள் கடந்தும் இருவரும் வாக்குவாதம் பண்ணுவதையும், சண்டை போடுவதையும் நிறுத்தவில்லை. பண்டைய சீன வழக்கம்படி லீலா மாமியாரின் கட்டளைக்கு அடிபணிந்து பணிவாக இருக்க வேண்டும். இதனால் லீலா மிகவும் வருத்தம் அடைந்தாள். வீட்டின் கோப தாபங்கள் கணவரைக் கவலையடையச் செய்தது.

மாமியாரின் துர் குணத்தாலும், அதிகாரத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத லீலா தன் தந்தையின் நண்பர் திரு. ஹரியைக் காணச் சென்றாள். அவர் ஒரு பச்சிலை மருத்துவர். தன் நிலமையைச் சொல்லி லீலா அம்மனிதரின் உதவியை நாடினாள். அவரிடம் ஏதேனும் விஷப் பச்சிலை மருந்து தர வேண்டினாள். தன் கஷ்டங்களுக்கு இதுதான் தீர்வு என எண்ணினாள். திரு. ஹரி லீலாவிடம் அவள் கவலைகளைத் தீர்த்து வைப்பதாகவும் தன் சொற்படி நடக்க வேண்டும் என்றும் கூறினார். லீலாவும் சம்மதித்தாள். ஹரி சற்று நேரத்திற்குப் பிறகு ஒரு பொட்டலம் பச்சிலை மருந்துடன் திரும்பினார். “உன் மாமியாரை தீர்த்துக் கட்ட கடும் விஷம் உபயோகிக்கக் கூடாது. அது சந்தேகத்தைக் கிளப்பும். ஆதலால் மெதுவாக பரவக்கூடிய  விஷத்தை உனக்குக் கொடுத்திருக்கிறேன். தினமும் சாப்பாட்டில் சிறிதளவு கலந்து கொடு. உன்மீது யாரும் சந்தேகப் படாமல் இருப்பதற்கு உனது மாமியாரிடம் மிகவும் அன்பாக நடந்து கொள். வாக்குவாதம் செய்யாமல் அவர்களுடைய ஆசைகளைப் பூர்த்தி செய். மகாராணி போல் நடத்தவும்” என கூறினார்.

லீலா மிக சந்தோஷமாக இருந்தாள். திரு. ஹரிக்கு நன்றி செலுத்திவிட்டு தன் வீட்டை அடைந்தாள். மாமியாரிடம் அன்பாக நடந்து, சாப்பாட்டில் விஷப் பச்சிலை மருந்தை தினமும் கலந்து மாமியாரை மரியாதையாக நடத்தினாள். சில மாதங்கள் சென்றன. திரு. ஹரியின் சொற்படி பொறுமையாக சந்தேகம் வராதவாறு நடந்து கொண்டாள். இப்பழக்கத்தால் நாளடைவில் தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு உண்மையாகவே மாமியாரிடம் அன்பாக நடந்துக் கொண்டாள். மாமியாரும் மாறி மருமகளிடம் மிக அன்பாக இருந்தாள். அவர்கள் இருவரும் தாயார், மகள் போல் நடந்து கொண்டனர். லீலாவின் கணவர் இந்நிகழ்வுகளைக் கண்டு பேரானந்தம் அடைந்தார்.

ஒரு நாள் லீலா மறுபடியும் திரு. ஹரியிடம் உதவி நாடி வந்தாள். “விஷம் மாமியாரைக் கொல்லாதவாறு பார்த்து வேறு மருந்து கொடுங்கள். என் மாமியார் ஒரு நல்ல பெண்மணி. என் தாயாரை போல் அவர்களை நேசிக்கிறேன்” எனக் கூறினாள். திரு. ஹரி புன்னகையுடன், “நான் விஷப் பச்சிலை மருந்து எதுவும் உனக்குக் கொடுக்க வில்லை. வைட்டமின் மாத்திரைகள் தான் கொடுத்தேன்” என பதிலளித்தார். அது உடல் நிலையைப்  பேணிக் காக்கும். உன் மனதில் இருந்த எண்ணம் தான் விஷமாக இருந்து அவரிடம் அவ்வாறு நடந்துக் கொள்ள வைத்தது. தற்போது நீ செலுத்திய அன்பு அந்த விஷத்தையும் மாற்றி விட்டது.” என கூறினார்.

நீதி:

நண்பர்களே, நாம் பிறரிடம் எவ்வாறு நடந்து கொள்கிறோமோ, அவ்வாறே அவர்களும் நம்மை நடத்துவார்கள் எனத் தெரிந்துக் கொள்ள வேண்டும். “பிறரை நேசிப்பவர் எப்போதும் நேசிக்கப் படுவார்” என சீன மொழியில் கூறுவார்கள். அன்பானது ஒரு உயர்ந்த சக்தி. மக்களை மாற்றக் கூடிய ஆயுதம். அதற்குக் கொஞ்சம் நேரம் எடுத்தாலும் விடாமுயற்சியுடன் அன்பாகப் பொறுமையாக நடந்துக் கொண்டால் வெற்றி நிச்சியம் நமக்கு.

சீன மொழியிலிருந்து எடுக்கப்பட்ட கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

முழுநிறைவான சிற்பி – மற்றோர்க்கு சிறந்ததையே செய்

royalty free sculptor1

நீதி – நன்நடத்தை / மனசாட்சி / தன்னம்பிக்கை

உபநீதி – சரியான நேரத்தில் சரியான செயலை செய்வது

பண்புள்ள மனிதர் ஒருவர் ஒரு சமயம் கோயில் ஒன்று கட்டிக் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்றார். அங்கு ஒரு சிற்பி கடவுளின் சிலையைச் செதுக்கிக் கொண்டிருந்தார். திடீரென அதே மாதிரியான மற்றொரு சிலை பக்கத்தில் இருந்ததைக் கவனித்தார். ஆச்சரியப்பட்டு  சிற்பியை அவர் கேட்ட கேள்வி, “ஒரே மாதிரியான சிலைகள் இரண்டு தேவையா?” என்றுதான்.

இல்லை என்ற சிற்பி, “ஒன்றுதான் தேவை. ஆனால் முதல் சிலை செய்து கொண்டிருக்கும் போது கடைசி நிமிடத்தில் சிதைவு ஏற்பட்டது.” என்று சொன்னார்.

அதற்கு அந்த மனிதர் சிலையைப்  பார்த்துவிட்டு, “சிதைவு எங்கு இருக்கு? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே” என்று சொன்னார். சிற்பி வேலை செய்து கொண்டே, “மூக்கில் ஒரு சிறிய கீறல் இருக்கின்றது” என்று பதிலளித்தார்.

இந்தச் சிலையை எங்கே அமர்த்தப் போகிறாய்?? என்று கேட்டார்.

அதற்குச் சிற்பி, ”இருபது அடி தூண் ஒன்றுக்கு மேலே” என்று பதிலளித்தார்.

சிலை அவ்வளவு உயரத்தில் இருக்கும் போது மூக்கில் உள்ள சிதைவை யார் கவனிக்கப் போகிறார்கள்” என்று கேட்டார்.

அதற்குச் சிற்பி புன்முறுவலுடன் எனக்குத் தெரியும், கடவுளுக்குத் தெரியும் என்று சொன்னார்.

நீதி:

மற்றவர்களின் பாராட்டை எதிர்பார்க்காமல் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற விருப்பம் தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டும். இந்த உணர்வு மனதிலிருந்து வர வேண்டும். வெளியிலிருந்து வரும் உணர்ச்சி அல்ல. என்ன காரியம் செய்தாலும், நன்றாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து மன நிறைவு அளிக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

தங்கமீன் ஜாடி

goldfish bowl

 

நீதி – நன் நடத்தை

உபநீதி – அக்கறை / பச்சாதாபம்

உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்சுவாமி விவேகானந்தர்.

ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டிருந்தான். திடீரென, கால்களுக்கு நடுவில், நீர் தேங்கியிருந்ததைக் கண்டான். அவனுடைய காற்சட்டை ஈரமாக இருந்தது. இதயம் நின்றுவிடும் போல் ஒரு பயம். வாழ்க்கையில் அவனுக்கு நடந்த இந்த சம்பவம் கவலையைத் தந்தது. வகுப்புத் தோழர்களுக்குத் தெரிந்தால், அதைப் பற்றியே பேசி கேலி செய்வார்கள் என்று பயந்தான். அதே தோழிகளுக்குத் தெரிந்தால், அவனிடம் பேசவே மாட்டார்கள் என்ற பயம் மற்றொரு பக்கம் இருந்தது.

தலையைக் குனிந்தவாறு  பயத்துடன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். “அன்புள்ள கடவுளே, நான் ஒரு நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். உடனடியாக உதவி தேவை. இன்னும் ஐந்து நிமிடத்தில் உதவி பண்ணவில்லை என்றால் பிணமாகி விடுவேன்.”

பிரார்த்தனைக்குப் பிறகு பார்க்கும் பொழுது ஆசிரியர் அவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். கண்களைப் பார்த்த பொழுது விஷயம் தெரிந்து விட்டது என்று தோன்றியது. ஆசிரியருடன் அவன் தோழி கல்பனாவும் வந்துக் கொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு ஜாடியில் தங்க மீன் நீந்திக்  கொண்டிருந்ததைக் கண்டான். அருகில் வந்தவுடன் காரணம் ஏதுமின்றி, அவன் மடியில் அந்த ஜாடியைப் சாய்த்தாள்.

உடனடியாக சிறுவன் கோபம் வந்ததைப் போல் நடித்தாலும், மனதிற்குள் கடவுளிடம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருந்தான்.

இவ்வளவு நேரம் எல்லோரும் அவனைக் கேலி செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுது, நிலமை மாறிவிட்டது. அவனைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். ஆசிரியர் அவனைக் கீழே அழைத்துச் சென்று வேறு காற்சட்டையை அணியச் சொன்னார். மற்ற குழந்தைகள் எல்லோரும் மேஜைக்குக் கீழ் இருக்கும் நீரைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கையின் திசையே மாறிவிட்டது. அவனைக் கேலி செய்வதற்கு பதில், எல்லோரும் கல்பனாவைப் பார்த்துக் கோபமுற்றார்கள்.

கல்பனா உதவி செய்ய முன் வந்த பொழுது எல்லோரும் அவளைத் திட்டினார்கள். சாயங்காலம் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது சிறுவன் கல்பனாவிடம்,  “நீ வேண்டுமென்றே தானே அந்தச் செயலைச் செய்தாய்?” என்றுக் கேட்டான். அதற்கு கல்பனா, “நானும் ஒரு தடவை என் காற்சட்டையை ஈரமாக்கிக் கொண்டிருக்கிறேன்” என்றாள். அவளிடம் நன்றியை  தெரிவித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.

நீதி

நாம் தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால் நம்மைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளை நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று தான். மற்றவர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும். உபத்திரமாக இருக்கக் கூடாது. நமக்கு அதே மாதிரியான பிரச்சனைகள் வந்திருந்தால் கட்டாயமாக மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com