Archive | November 2014

முனிவரும் ரயில் நிலைய அதிகாரியும் – உண்மையே பேசுதல்

Sage and Stationmaster

உண்மை என்பது மனிதனில் இருக்கும் இறைவனின் விருப்பமும் நோக்கமுமாகும் கலீல் கிப்ரான்

நீதி – உண்மை

உபநீதி – நேர்மை/ மாற்றம்

ஒரு முனிவர் தன் சிஷ்யருடன் ஒரு சிறிய நகரத்திற்கு வந்தார். அங்கிருந்த ரயில் அதிகாரி முனிவரின் தெய்வீகத் தன்மையைப் பார்த்து பேரின்பமுற்றார். தனக்கு ஒரு உபதேச மந்திரம் வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு, அதை ஒழுங்கு முறையாக செயபடுத்துவதாக  உறுதிமொழி கொடுத்தார்.

சிஷ்யர் தன் குருவிடம், “மக்களுக்கு உபதேச மந்திரம் எதுவும் அளிக்க வேண்டாம். அவர்கள் அதைச் செயல்படுத்த மாட்டார்கள்” என்று கூறினார். அதற்கு முனிவர், அதிகாரியுடன் சேர்ந்து அந்தத் துறையில் இருக்கும் மற்ற தொழிலாளர்களும் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்கள் திருந்தி வாழ உபதேசம் கொடுக்கப் போவதாக கூறினார். பிறகு அதிகாரியிடம் வரும் மூன்று மாதங்களுக்கு உண்மையே பேச வேண்டும் எனக் கூறிச் சென்று விட்டார்.

ரயில் அதிகாரி அவர் உபதேசத்தைக் கடைப்பிடிக்க நிச்சயித்தார். மறுநாள் விசாரணைக்காக ஒரு அதிகாரி துறைக்கு வந்து ஊழல் வழக்கு பற்றி ரயில் அதிகாரியைக் கேட்டார். உடனடியாக அவர் தானும் மற்ற தொழிலாளர்களும் லஞ்சம் வாங்கி வந்ததாகவும், சமீப காலத்தில் தான் அப்பழக்கத்தை நிறுத்தி விட்டதாகவும் கூறினார். துறையில் இருந்த சக ஊழியர்கள் கோபமடைந்து அதிகாரி மட்டுமே தவறு செய்ததாகவும், அனாவசியமாக மற்றவர்களின் மேல் பழி சுமத்துவதாகவும் கூறினார்கள்.

உண்மை பேசிய போதிலும் அவரைப் பணியிலிருந்து நீக்கிச் சிறையில் அடைத்தனர். அவரது மனைவியும் மகனும் இக்காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறினர். வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, நீதிபதி அதிகாரியிடம் ஒரு வக்கீல் வைத்து வழக்கை வாதாடுமாறு கூறினார். அதற்கு அதிகாரி எந்த வக்கீலும் வேண்டாம் என்று கூறி முனிவர் தனக்குக் கொடுத்த உபதேசத்தைப் பற்றி எடுத்துரைத்தார். பிறகு நீதிபதி அதிகாரியை அழைத்து முனிவர் யார் என விசாரித்து, விவரங்கள் தெரிந்தவுடன் மகிழ்ச்சியடைந்து அடைந்து தானும் அவரைப் பின்பற்றியதாகக் கூறினார். வழக்கிலிருந்து அவரை விடுவித்தார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு அதிகாரிக்கு மேலிடத்திலிருந்து ஒரு செய்தி வந்தது. அவருக்குப் பத்து லட்சம் நஷ்ட ஈடாக பணம் வழங்கப்பட்டது. அதிகாரியின் தந்தைக்குச் சொந்தமான நிலத்தை ரயில்வே அலுவலகம் தன் உபயோகத்திற்க்காக எடுத்திருந்தார்கள். இந்த விஷயம் அவருக்கே இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டது. வந்த பணத்தை மனைவி, மக்களுக்குக் கொடுத்துவிட்டு ஹிமாலய மலைக்குத் துறவியாகச் சென்று விட முடிவெடுத்தார்.

அவர் மனதில் வந்த எண்ணம், “ஒரு மாதம் உண்மை பேசியதற்காக இவ்வளவு ஒரு சலுகை என்றால், வாழ்நாள் முழுவதும் பொய் பேசாமல் இருந்தால் எவ்வளவு பயனளிக்கும்” என்பதுதான்.

நீதி

வாய்மையே வெல்லும். குருக்களும், முனிவர்களும் உயர்ந்த தத்துவங்களைச் சொல்லிக் கொடுக்கின்றார்கள். இதை நடைமுறையில் செயல்கள் மூலம் வழி நடத்தினால், மாற்றம் ஏற்பட்டு சிறந்த மனிதர்களாக வாழலாம்.

உண்மை புனிதமானது; இனிமையானது. தீமையிலிருந்து உங்களை விடுவிக்கிறது. உண்மையைத் தவிர உங்களைக் காப்பாற்றக் கூடியது இந்த உலகில் வேறெதுவுமில்லை புத்தர்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

கோபமாக இருக்கும் போது கூச்சல் போடுவது எதற்காக?

why shout when you get angry

நீதி – சமாதானம் / அஹிம்சை

உபநீதி – சாந்தம் /  அமைதி /  சிந்தனை, வாக்கு, செயல் இவற்றில் பொறுமை

ஒரு முறை ஒரு ஹிந்துத் துறவி கங்கையில் நீராடச் சென்றார். அங்கு வந்திருந்த ஒரு குடும்பத்தில் ஏதோ வாக்குவாதம் வந்ததால் கூச்சலிட்டு பலமாகக் கத்திக் கொண்டிருந்தார்கள்.

தன் சிஷ்யர்களைப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டே, “மக்கள் ஏன் கோபமாக இருக்கும் போது கூச்சலிட்டு கத்துகிறார்கள்?  என்று கேட்டார்.

சற்று நேரம் யோசித்து விட்டு ஒரு சிஷ்யர், சில சமயங்களில் நம் பொறுமையை இழக்கும் பொழுது  கத்துகின்றோம் என்று பதிலளித்தார்.

அருகிலிருக்கும் நபருடன் ஏன் சத்தம் போட்டுப் பேச வேண்டும்? மென்மையாகவே எடுத்துரைக்கலாமே என துறவி கேட்டார்.

சிஷ்யர்கள் ஏதேதோ பதில் கூறியும் ஒன்றுமே சரியாகப் படவில்லை. கடைசியில் துறவி மிக அழகாக இவ்வாறு எடுத்துரைத்தார்.

இருவர் கோபமாக இருக்கும் போது மனதளவில் ஒரு இடைவெளி ஏற்படுகின்றது. இந்த காரணத்தினால், அருகிலே இருந்தாலும் கூட, கோபத்தினால் கத்திப் பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வருகின்றது. கோபத்திற்கு ஏற்ப குரலும் உயர்ந்து விடுகிறது. இதே, இருவர் காதலிக்கும் போது என்ன ஆகிறது? ஒருவருக்கொருவர் மிகவும் தாழ்ந்த குரலில் மெளனமாக பேசிக் கொள்கிறார்கள். மனதளவில் ஒரே மாதிரியாக எண்ணம் இருப்பதனால் தான் இவ்வாறு இருக்கின்றது. இன்னும் ஆழ்ந்த அளவு அன்பு செலுத்தும் போது, பேசுவதற்குக் கூட அவசியம் இல்லை. பார்வையினாலே அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

பிறகு துறவி தன் சிஷ்யர்களை நோக்கிக் கூறினார் – ஏதாவது வாக்குவாதம் இருந்தால் கூட, மனதை ஒரு நிலையில் வைத்துக் கொள்ளவும். மனதைப் புண்படுத்துமாறு வார்த்தைகளைப் பேசக்கூடாது இல்லாவிட்டால் ஒரு நாள் இடைவெளி அதிகமாக ஆகி,  சமரசம் படுத்துவது கூட இயலாமல் போய்விடும்.

நீதி:

கோபம் வரும்போது மெளனமாக இருப்பது சிறந்தது. இல்லாவிடில், நெருங்கினவர்களோடு மனதளவில் விரிசல் ஏற்பட்டு விடும். அதற்குப் பிறகு, ஒரு சுமூகமான நிலைக்கு வருவது கஷ்டமாக இருக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

உடைமைகளை விட மனிதர்களை மதிக்க கற்றுக் கொள்ளவும்

value people not possessions picture 2

நீதி – நன் நடத்தை / அன்பு  

உபநீதி – விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, நன்றியறிதல்

இரண்டு நண்பர்கள் பாலைவனத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். நடு வழியில், வாக்குவாதம் வந்ததால் ஒரு நண்பன் மற்றவனைக் கன்னத்தில் அறைந்தான்.

அறையப்பட்ட நண்பன் வலியைப் பொருட்படுத்தாமல் மணலில், “என் நெருங்கிய நண்பன் என்னை அறைந்து விட்டான்” என்று எழுதினான்.

பேசிக் கொண்டே சென்ற போது, ஒரு நீர் ஊற்றைப் பார்த்து அதில் குளிக்க தீர்மானித்தார்கள். குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, அறையப்பட்ட நண்பன் தவறி சேற்றில் மூழ்கத் தொடங்கினான்.  இதைக் கண்ட நண்பன் உடனடியாக உதவிக் கரம் நீட்டினான். உடனடியாக காப்பாற்றப்பட்ட நண்பன் அங்கிருந்த கல்லில் செதுக்கிய வார்த்தைகள், “என் நெருங்கிய நண்பன் என்னை ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டான்.”

அதற்கு இந்த நண்பன் “உன் மனதை நான் புண்படுத்திய போது, அதை நீ மணலில் எழுதினாய். ஆனால் உனக்கு நான் உதவி செய்த போது அதை நீ கல்லில் செதுக்கினாய். இச்செயலுக்குக் காரணம் என்னவென்று புரியவில்லையே” என்று கேட்டான். இதைக் கேட்ட மற்ற நண்பன், “மணலில் எழுதப்படும் வார்த்தைகள் எவ்வாறு காற்றடித்தால் அழிந்து விடுகிறதோ, அதைப் போல் நாமும் மற்றவர்கள் நம்மைப் புண்படுத்தியதை மறந்து விட வேண்டும். அவ்வாறே, ஒருவர் நமக்குச் செய்யும் உதவியை எக்காலத்திலும் மறந்து விடாமல் செய்நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே நீ செய்த நல்ல காரியத்தைக் கல்லில் செதுக்கினேன்.”

நீதி:

வாழ்க்கையில் உடைமைகளை விட மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே அவசியம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE:

http://www.moralstories.org/having-a-best-friend/

தன்னலமற்ற அன்பு

Unconditional Love

நீதி – அன்பு

உபநீதி – பேணிக் காப்பதோடு நிபந்தனையற்ற இரக்கம் செலுத்துவது.

சந்திரன் பயந்த சுபாவம் உள்ள ஒரு இளைஞன். ஒரு நாள் அவன் தன் தாயாரிடம் வகுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் வாழ்த்து அட்டை தயார் செய்ய விரும்புவதாகக் கூறினான். இதைக் கேட்ட தாயார் பதட்டப் பட்டார். அவன் அவ்வாறு அட்டை தயாரிக்காமல் இருப்பதே நல்லது என்று எண்ணினாள். தினமும் மாணவர்கள் வகுப்பு முடிந்து வீடு திரும்பும் பொழுது மற்ற குழந்தைகளை விட சந்திரன் பின் தங்கியே வருவதைக் கவனித்தார். மற்ற குழந்தைகள் சிரித்து  உரையாடிக் கொண்டு வந்த பொழுது, அவனை யாருமே தன் அணியில் சேர்த்துக் கொள்ளாததைக் கண்டு வருத்தபட்டாள். தாயாருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் தன் மகனின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்காகத் தாயார் வரைவதற்குக் காகிதம், பசை, வர்ணங்கள் முதலியவை வாங்கி வந்தாள். மூன்று வார காலம் இரவும் பகலும் வேலை செய்து முப்பத்தி ஐந்து வாழ்த்து அட்டைகளைத் தயாரித்தான் சந்திரன்.

தோழர்கள் தினம் வந்தததால் சந்திரன் மிகவும் உற்சாகமாக இருந்தான். அட்டைகளை ஒரு பையில் கவனமாக எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். தாயார் அவனுக்குப் பிடித்த சிற்றுண்டியும்  குளிர் பாலும் தயாரித்து வைத்தாள். பள்ளியிலிருந்து வரும் போது அவனை உற்சாகப் படுத்துவதற்காக அப்படிச் செய்தாள். சக மாணவர்கள் அவனை ஏமாற்றி விடுவார்களோ என்ற பயமும் இருந்தது.

பள்ளி முடிந்து மாணவர்கள் திரும்பி வரும் சமயம்,  பேச்சுச் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். சந்திரன் எப்பொழுதும் போலவே பின்தங்கி இருந்தான். வீட்டிற்கு அருகே வந்தவுடன் கொஞ்சம் வேகமாக நடந்து வந்தான். அழுது விடுவானோ என்று கவலைப்பட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, சந்திரன் கையை வீசிக் கொண்டு உற்சாகத்துடன் உள்ளே வந்தான். உடனடியாகத் தாயார் அவனுக்குப் பிடித்த சிற்றுண்டியைக் கொடுத்தார்.

அவன் அதைப் பொருட்படுத்தாமல் பூரிப்புடன் தாயாரிடம் கூறியது யாதெனில் –  ஒருவர் கூட இல்லை, ஒருவர் கூட இல்லை என்று. ஒரு நிமிடம் தாயார் பயந்த போது அவன் சிரித்துக் கொண்டே, ஒருவரைக் கூட மறக்காமல் எல்லா மாணவர்களுக்கும் கொடுத்ததாகக் கூறினான்.

நீதி:

எதிர்ப்பார்ப்பில்லாமல் அன்பு செலுத்துவது நம் கடமை. கொஞ்சம் கடினமாக இருந்தாலும், நடைமுறையில் இந்தப் பழக்கத்தைக் கொண்டு வந்தால், எல்லோருக்கும் சந்தோஷம் கிடைக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com