நிபந்தனையற்ற ஆதரவு

Selfless Love1

நீதி – அன்பு

உபநீதி – தன்னலமற்ற அன்பு

என் மனைவி என்னிடம், “எவ்வளவு நேரம் தான் இந்த செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருப்பீர்கள்? குழந்தை சாப்பிடக் கொஞ்சம் உதவி செய்யுங்கள்” எனக் கூறினாள். உடனே செய்தித்தாளை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு குழந்தையிடம் சென்றேன். எங்களுக்கிருந்தது ஒன்றே ஒன்று ஆனால் போற்றத்தக்க ஒரு குழந்தை சிந்து. அவள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களிலிருந்து தாரைத் தாரையாகக் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. அவள் அருகில் ஒரு கிண்ணியில் தயிர் சாதம் இருந்தது. மிகவும் நல்ல குழந்தை, அவள் வயதிற்கு அறிவாளியும் கூட.

சிந்துவிற்கு எட்டு வயது. அவள் தயிர் சாதத்தை அறவே வெறுத்தாள். ஆனால் என் அம்மாவும், மனைவியும் சம்பிரதாய வாழ்க்கையை நம்பி வந்ததனால் தயிர் சாதம் உடம்பிற்குக் குளிர்ச்சி என்றும் அதை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தார்கள். நான் கிண்ணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, “சிந்து, அப்பாவிற்காகக் கொஞ்சம் சாப்பிடு. இல்லையென்றால் அம்மாவிற்குக் கோபம் வந்துவிடும்.” என்று கூறினேன். சிந்து கண்ணீரை துடைத்துக் கொண்டு பார்த்தாள்.

பிறகு அவள், “நான் கிண்ணத்தில் இருக்கும் தயிர் சாதத்தை முழுதாகச் சாப்பிட்டால் நான் என்ன கேட்டாலும் கொடுப்பீர்களா?” என்று கேட்டாள்.

“கட்டாயமாக” என்று பதிலளித்தேன்

“உறுதியாக?” என்று வினவினாள்

“ஆம்” என்றேன்

உடனே சிந்து அம்மாவையும் உறுதி மொழி கூறச் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு அவளுடைய அம்மா “கட்டாயமாக” என்று அவள் கை மேல் தன் கையை வைத்தாள்.

நான் சற்று கவலையுடன், “சிந்து குட்டி, கணினி போல விலை உயர்ந்த பொருட்கள் ஒன்றும் இல்லையே? இப்பொழுது கொஞ்சம் பணக் கஷ்டம்” என்று மெதுவாகச் சொன்னேன்.

விலை உயர்ந்தது ஒன்றுமில்லை அப்பா என்று மிருதுவாக பதிலளித்தாள்.

மெதுவாகக் கஷ்டப்பட்டுத் தயிர் சாதத்தைச் சாப்பிட்டு முடித்தாள். மனதிற்குள் குழந்தையை இப்படி வற்புறுத்துவதை நினைத்து அம்மா மேலும் மனைவி மேலும் சற்று கோபமாக இருந்தேன். சிந்து உணவை முடித்தவுடன் எதிர்ப்பார்போடு எங்களைப் பார்த்தாள். என்ன கேட்கப் போகிறாள் என்று நினைத்து நாங்கள் எல்லோரும் அவளைப் பார்த்து கொண்டிருந்தோம்.

சிந்து அப்பாவிடம், “எனக்கு இந்த ஞாயிறன்று  மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும்” என்று தீர்மானத்துடன் கூறினாள்.

இது என்ன அபசாரம், முடியவே முடியாது என்று அம்மா ஆத்திரத்துடன் சொன்னாள். அதிகமாகத் தொலைகாட்சி பார்ப்பதால் வந்த விளைவு என்று கூறி நம் கலாசாரத்தைச் சேதம் படுத்துகிற வகையில் உள்ளது என்று அலறினாள். இது நம் குடும்பத்தில் நடக்காது என்றாள்.

சிந்து கண்ணா, “அந்தக் கோலத்தில் உன்னைக் காண்பது ரொம்ப வருத்தமாக இருக்கும். வேறு ஏதேனும் கேள்” என்று கூறினேன்.

அதற்கு அவள் தீர்மானத்துடன், “எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம்” என்று பதிலளித்தாள்

“எங்கள் மனதைப் புரிந்துக் கொள் சிந்து” என்று கெஞ்சினேன்

“நான் தயிர் சாதத்தைச் சாப்பிடுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று பார்த்தீர்கள்; என்ன கேட்டாலும் கொடுப்பதாக எனக்கு வாக்களித்து விட்டு இப்பொழுது மறுக்கிறீர்கள்” என்று கண்ணீருடன் புலம்பினாள். நீங்கள் தான் ராஜா ஹரிஷ்சந்திரனின் நீதிக் கதையில் கொடுத்த வாக்கை உயிர் போனாலும் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தீர்கள்” என்று எடுத்துரைத்தாள்.

அவள் சொன்னதை நன்றாகப் புரிந்து கொண்டு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது சரியான உதாரணமாக இருக்கும் என்று தீர்மானித்தேன்.

சிந்து நீ ஆசைப்படுவது நடக்கும் என்று கூறினேன். மொட்டை அடித்த பிறகு, உருண்டைக் கண்களுடன் வட்டமான முகத்துடன் மிக அழகாக இருந்தாள். திங்கட் கிழமை காலை, பள்ளியில் அவளை விடும் பொழுது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. அவளுக்குக் கை காண்பித்து திரும்பி வரும் பொழுது அவள் வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவன் அவளைக் கூப்பிடும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்த பொழுது ஒரு பையன் வாகனத்திலிருந்து இறங்கினான். அவனும் மொட்டையாக இருந்தான். நாகரீக மாற்றம் என்று நினைத்துக் கொண்டேன்.

Selfless Love2

ஒரு பெண்மணி அவளை அறிமுகம் படுத்திக்கொள்ளாமல் என்னிடம் வந்து, “சிந்து உங்களுக்குக் கிடைத்த வரபிரசாதம் .அங்கு போகின்ற மாணவன் ஹரிஷ். என் பையன் தான். அவன் லுகீமியா என்ற நோயால் பாதிக்க பட்டிருக்கான். போன மாதம் அவனுக்குப் பள்ளிக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை என்று சொல்லிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். வேதியல் சிகிச்சை பண்ணின  பொழுது தலை முடி கொட்ட ஆரம்பித்து விட்டது. மற்ற மாணவர்களுக்குப் பயந்து பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான். உடனடியாக சிந்துஜா “யாரும் கேலி பண்ணாமல் இருக்க நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று சொன்னாள். ஆனால் அதற்காக தன் தலை முடியை எடுப்பாள் என்று நினைக்கவே இல்லை என்று அந்த பெண் கூறலானார்.

எல்லாவற்றையும் கேட்ட பிறகு தான் என் பெண்ணின் எதிர்பார்க்காத அன்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

நீதி:

சந்தோஷமாக இருப்பவர்கள் அவர்களுக்கு வேண்டிய மாதிரி காரியத்தை நடத்துபவர்கள் அல்ல. மற்றவர்களின் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி தன்னையே மாற்றிக் கொள்பவர்கள் தான்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதிரஞ்சனி

 

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s