Archive | February 2015

நன்றி மறப்பது நன்றன்று

always remember to be good to others

நீதி – நன் நடத்தை / தியாகம் /  நன்றி உணர்வு 

உபநீதி – மரியாதை

பண்டைய நாட்களில் ஐஸ் கிரீம் சற்று மலிவாகக் கிடைக்கும். அப்பொழுது ஒரு பத்து வயதுச் சிறுவன், ஒரு குளிர்பானக் கடையில் வந்து அமர்ந்தான். பணிப்பெண் அவனுக்கு ஒரு கோப்பை தண்ணீர் கொடுத்து விட்டு, என்ன வேண்டும் என விசாரித்தாள். அச்சிறுவன் ஒரு விசேஷ ஐஸ் கிரீமின் விலையைக் கேட்டான். பணிப்பெண் “50 சென்ட்” என்றவுடன் அவன் தன் சட்டைப் பையில் கையை விட்டு, இருந்த நாணயங்களை வெளியில் எடுத்து எண்ண ஆரம்பித்தான். பிறகு, ஒரு சாதாரண ஐஸ் கிரீமின் விலையைக் கேட்டான். கடையில் நிறைய ஆட்கள் சாப்பிடக் காத்திருந்ததால்,  பணிப்பெண்ணும் சற்று சலிப்புற்று “35 செண்டுகள்” என்றாள். மறுபடியும் சில்லறையை எண்ணிவிட்டு, அச்சிறுவன் சாதாரண ஐஸ் கிரீமை வாங்கினான். பணிப்பெண் ஐஸ் கிரீமையும் விலைப்பட்டியலையும் மேஜை மேல் வைத்து விட்டுச் சென்று விட்டாள். சிறுவன் பணம் செலுத்தி விட்டு வெளியே சென்ற பிறகு பணிப்பெண் மேஜையைத் துடைக்க சென்றாள். அங்கு சில்லறைப் பணம் இருப்பதைக் கண்டு கண் கலங்கினாள்.

சிறுவன் ஏழையாக இருப்பினும் தான் விரும்பிய ஐஸ் கிரீமை சாப்பிடாமல் சாதாரணமானதை சாப்பிட்டு, பணிப்பெண்ணுக்கு சிறு அன்பளிப்பும் கொடுத்துச் சென்றான்.

நீதி:

நமக்கு நன்மை செய்பவர்களை நாம் மதிக்க வேண்டும். மேலும் நாம் புன்சிரிப்புடன் இருந்தால், மற்றவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்; நாமும் இன்பமாக இருக்கலாம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE:

http://moralsandethics.wordpress.com/2006/11/16/five-great-lessons/

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்

being brave is so important

நீதி – தைரியம்

உபநீதி – தன்னம்பிக்கை

ஒரு ஊரில் அரசர் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் முதலில் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.

ஒரு நாள், அவர் காலை சூரியோதத்திற்கு பதிலாக  பிச்சைக்காரர் முகத்தில் விழித்து கோபத்தோடு திரும்பிய போது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது.

அவர் கோபமுற்று பிச்சைக்காரரை அரண்மனைக்கு இழுத்துவரச் செய்து தூக்கிலிட கட்டளையிட்டார்.

அதற்கு பிச்சைக்காரன் கலங்கவில்லை; கல கல வென சிரிக்கத் தொடங்கினான். அரசருக்கு மேலும் கோபம் வந்தது; மற்றவர்களுக்கு திகைப்பாக இருந்தது.

பிச்சைக்காரன் “என் முகத்தில் நீங்கள் விழித்ததால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே . உங்கள் முகத்தில் நான் முழித்ததால் என் உயிரே போக போகிறதே அதை எண்ணிச் சிரித்தேன்” என்று கூறினான்.

அரசன் தன் தவறை உணர்ந்து தலை குனிந்தான்; தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.

நீதி

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாது.

 “தைரியம் தான் வாழ்க்கை பயம் தான் மரணம்” — சுகி சிவம்.

காலத்தினார் செய்த உதவி

Pickup in the rain

நீதி – அன்பு

உபநீதி –  தன்னலமற்ற உதவி

ஓர் நள்ளிரவு அலபாமா நகரத்தின் நெடுஞ்சாலையில் ஒரு கறுப்பர் இனைத்தைச் சேர்ந்த அமெரிக்கப் பெண்மணி, தன் மோட்டார் வண்டி பழுதடைந்து விட்டதால் சிக்கிக் கொண்டு தவித்தாள். பலத்த மழை பெய்து கொண்டிருந்ததனால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டு நின்றிருந்தாள். யாரேனும் உதவி செய்ய முன்வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த போது, ஒரு மோட்டார் வண்டி அங்கு வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். உடனே கை காண்பித்து நிறுத்த முயற்சித்தாள்.

ஒரு இளைய வெள்ளையன் வண்டியை நிறுத்தி அவளுக்கு உதவ முன்வந்தான். 1960களில் சண்டைச் சச்சரவுகள் அதிகமாக இருந்ததனால் உதவி செய்ய முன்வருவது அபூர்வமாக இருந்தது. அந்த சூழ்நிலையிலும், அம்மனிதன் அப்பெண்மணிக்கு ஒரு வாடகை வண்டி ஏற்பாடு செய்து உதவினான்.

அப்பெண்மணி மிக அவசரத்தில் இருந்தாலும், அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, அவரது முகவரியையும் வாங்கிக் கொண்டாள். ஒரு வாரத்திற்குப் பிறகு அம்மனிதனின் வாசற் கதவை யாரோ தட்டினார்கள். கதவை திறந்ததும் ஒரு பெரிய வண்ணத் தொலைகாட்சிப் பெட்டி இருந்தது. அத்துடன் ஒரு சிறு குறிப்பும் இருந்தது. குறிப்பு யாதெனில், “நெடுஞ்சாலையில் அன்று இரவு உதவி செய்ததற்கு மிகவும் நன்றி. மழையானது என் உடுப்புகளை மட்டுமின்றி ஆத்மாவையும் ஈரப்படுத்தியது. நீங்கள் வந்து உதவினீர்கள். உங்கள் உதவியால் மரணப் படுக்கையில் இருந்த என் கணவரைத் தக்க சமயத்தில் வந்து பார்க்க நேர்ந்தது. உங்கள் தன்னலமற்ற உதவிக்குக் கடவுளின் ஆசிகள் நிறைய பெற வேண்டும்.”

 நீதி:

பிறருக்கு உதவி செய்யும் பொழுது, பதிலுக்கு ஒன்றுமே எதிர்ப்பார்க்காமல் செய்ய வேண்டும். பிறரை சந்தோஷப்படுத்துவது நமக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

காலத்தினார் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE:

http://moralsandethics.wordpress.com/2006/11/16/five-great-lessons/

 

மகா சிவராத்திரி

shivarathri 1சைவர்கள் தங்களின் பண்டிகைகளில் மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதுவது மகா சிவராத்திரியை தான். ஒவ்வொரு மாசி மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரியாக கொண்டாடுகின்றனர். ஒரு சமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், “நாதா உங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள் எது?” என்று கேட்டாள். சிவன் அவளிடம், “மாசி மாத தேய்பிறை 14ம் நாளான அமாவாசை நாளே எனக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் என் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்” என்றார். இவ்வாறு சிவபெருமானே சொல்லிய விசேஷ விரதம் இது.

சிவராத்திரியன்று இரவு முழுதும் சிவன் கோயில்கள் திறந்திருக்கும். விடிய விடிய நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். முதல்காலத்தில் பால், இரண்டாம் காலத்தில் தயிர், மூன்றாம் காலத்தில் நெய், நான்காம் காலத்தில் தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

சிவபெருமானின் திருத்தலங்களைப் பற்றி மனதில் எண்ணிணாலே முதலில் நினைவிற்கு வருவது திருவண்ணாமலைதான். இந்த திருத்தலத்தில் தான் இந்துக்களின் மிக முக்கியமான மகா சிவராத்திரி பண்டிகை உருவானது. இப்படி புகழ்பெற்ற புனிதத் தலமாக விளங்குவதுதான் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் என்றும், திரு அண்ணாமலையார் என்றும் அழைக்கப்படும் 2,665 அடி உயரமுற்ற சிவபெருமானின் உருவமாக தரிசிக்கப்படும் திருவண்ணாமலை ஆகும். நினைத்தவுடன் முக்தி அளிக்கக்கூடிய திருத்தலம் இது. சிவபெருமானின் பஞ்சபூத திருத்தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. இது சிவனின் அக்னித் தலமாகும். காஞ்சி, திருவாரூர் (புவித் தலம்), சிதம்பரம் (ஆகாயம்), ஸ்ரீ காளஹஸ்தி (வாயுத் தலம்), திருவானைக்காவல் (நீர்த் தலம்) ஆகும்.

படைப்புக் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கும் தனது பேருண்மையை உணர்த்த சிவபெருமான் அக்னி வடிவமாய் எழுந்தருளிய திருத்தலம் என்று சிவபுராணத்தில் குறிப்பிடப்படுகின்றது.

தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும், விஷ்ணுவும் வாதிட்டனர். அந்த வாதத்திற்கு பதில் தேடி சிவபெருமானிடம் வந்தனர். அவர்களில் யார் பெரியவர் என்பதை விளக்கிட சிவபெருமான் ஒரு சோதனையை நடத்தினார். தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார்.

அந்த சோதனையை ஏற்று வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமியைத் தோண்டிச் சென்றார் விஷ்ணு. அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு எழும்பினார். இருவரும் கடுமையாக முயற்சித்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை. தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விஷ்ணு திரும்பினார்.

உயர உயரப் பறந்து முயன்ற பிரம்மன் களைப்படைந்திருந்த நிலையில், வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார். எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மன் கேட்க, நான் சிவனின் தலைமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். யுகம், யுகமாய் பயணித்தும் பூமியை அடையவில்லை என்று கூறியது.

தான் சிவனின் தலை முடியைக் கண்டதாக அவரிடம் சாட்சி கூறுமாறு பிரம்மன் கேட்க, தாழம்பூ அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே சிவபெருமானிடமும் உரைத்தது. பிரம்மனுக்காக தாழம்பூ பொய் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கோபமுற்று ஜோதி வடிவாய் இருந்தவர், அக்னிப் பிழம்பாக மாறினார். அந்த அக்னியால் ஏற்பட்ட வெப்பம் பூமியை மட்டுமின்றி, சொர்க்கத்தையும் வாட்டியது.

சிவனின் உடம்பில் குடிகொண்டிருந்த இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட பாலகர்கள் எட்டு பேரும் வெப்பம் தாங்காமல் வெளியில் வந்து விழுந்தனர். சிவபெருமானை அமைதி பெறும்படி வேண்டினர். சக்தியும், தேவர்களும் அவ்வாறே வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர். அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அந்த மலையே திருவண்ணாமலையாக அழைக்கப்படுகின்றது.

சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு காலம்  வழிபாடு செய்யவேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவ புராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

இவர் தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் விரதத்தை மேற்கொள்ளலாம். மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமச குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.

சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது  உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.
சிவரத்திரி காலத்தில் ஜபிக்க வேண்டிய சிவபிரானின் திருநாமங்கள்:

ஸ்ரீ பவாய நம: 2. ஸ்ரீ சர்வாய நம: 3. ஸ்ரீ பசுபதயே நம: 4. ஸ்ரீ ருத்ராய நம: 5. ஸ்ரீ உக்ராய நம: 6. ஸ்ரீ மகாதேவாய நம: 7. ஸ்ரீ பீமாய நம: 8. ஸ்ரீ ஈசாநாய நம:

மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.

மகா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது…

உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு மிக முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்.

உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெறமுடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும். வைகுண்ட ஏகாதசியும் இந்த நோக்கம் தான்.

மகா சிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு?

மேலும் சிவபெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர், ஏகாந்தம்; ஏகாந்தம்; ஏகாந்தம். முற்றிலும் அமைதி. இவர் விரும்புவது அமைதி

மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம்.

சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாட்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

ஆன்ம தரிசனம் தேடும் சிவ பித்தர்களுக்கு,

மாலை 6 மணிக்குள் குளித்து விட்டு, உணவு முடித்து விட்டு கோவிலுக்கு செல்லுங்கள், பணியில் உள்ளவர்கள் பணி முடித்து விட்டு குளித்து விட்டு கோவிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து சிவ சிந்தனைகள் செய்தாலே போதுமானது.

மனதில் சொல்லவேண்டிய மந்திரம்

‘சிவாய நம ஓம்

சிவாய வசி ஓம்

சிவ சிவ சிவ ஓம்’

இப்படி செய்வது ஒரு விதம்,

மற்றது 9 லிங்க தரிசனம் ஒரே இரவில் தரிசிப்பது ஒரு விதம்,

சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவருடைய உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம்.

இப்படி சரியாக எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் தொலைகாட்சி பார்த்து கண்விழிப்பது, நண்பர்களுடன் பொழுது போக்கிற்காக கோவிலை சுற்றி வருவது, கோவிலில் உணவு கொடுத்து புண்ணியம் சேர்கிறேன் என்று செய்வது பலன் இல்லை.

சிவராத்திரி என்ற பெயர் வர காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.

நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது “சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை(சிவனை) பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே “சிவராத்திரி” என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

முடிந்தால் முறையாக வழிபாடு செய்யுங்கள், தவறுகளும் மாற்றுதலும் செய்ய வேண்டாம்.

SOURCE:

http://tamizhulagam.com/index.php?option=com_k2&view=itemlist&task=tag&tag=மகா+சிவராத்திரி

 http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=2504

 http://panipulam.net/?p=26204

நல்லதே செய் – மற்றோருக்கு எப்பொழுதும் உதவி செய்

do good and help others 1

நீதி – நன் நடத்தை

உபநீதி – அன்பாக பழகுதல், சேவை புரிதல்

கௌதம புத்தர் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம். ஒரு சிறிய பையன் கெட்ட பழக்கங்களுடன், மற்றவர்களிடம் மரியாதையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொண்டு, சமூகத்திற்கு விரோதமான சில செயல்களைச் செய்து குற்றவாளியாக மாறிக் கொண்டிருந்தான். அவனுடைய தாயார் ரொம்ப சிரமப்பட்டு அவனுக்குப் புத்திமதி கூறி ஒழுங்கு முறைக்கு கொண்டு வரப் பாடுபட்டார். ஆனால் அவள் முயற்சிகள் வீணாயிற்று. வேறு வழி தெரியாமல் புத்தரிடம் சென்று ஆசீர்வாதம் பெற்றால் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பினாள். பையனிடம் கஷ்டப்பட்டுப் பேசி அவரிடம் கூட்டிச் சென்றாள்.

இருவரும் வனத்தில் தியானம் செய்து கொண்டிருந்த புத்தரிடம் சென்றார்கள். அழுதுக் கொண்டே தாயார் அவர் காலில் விழுந்தாள். உடனடியாகப் புத்தர், “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த அம்மா, “என் பையன் கெட்டவனாக இருக்கின்றான். தயவு செய்து உதவி செய்யுங்கள்” எனக் கதறினாள்.

புத்தர் பையனைப் பார்த்து, “இன்னும் ஒரு நாள் தான் உயிரோடு இருப்பான். தாமதமாக வந்திருக்கிறீர்கள்” எனக் கூறினார். வேதனையோடு வீடு திரும்பினார்கள். இரவு முழுவதும் மரண பயத்துடன் இருந்ததனால் தூங்கவே இல்லை. இருபத்தி மூன்று மணி நேரம் சென்றது. புத்தர் அவர்கள் தங்கும் இருப்பிடத்திற்கு சென்றார்.

பிறகு பையனைப் பார்த்து, “இந்த இருபத்தி மூன்று மணி நேரத்தில் ஏதாவது தப்பு செய்தாயா?” என கேட்டார்.

இல்லை என்று பதிலளித்தான்.

அப்படியென்றால், “என்ன செய்து கொண்டிருந்தாய்?” என வினவினார்.

அதற்குப் பையன், “என் உயிர் பிரியும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதால் நான் செய்த தப்புகள் அனைத்தையும் நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன். இந்த விலை மதிப்புள்ள வாழ்வை வீணாக்கியதை நினைத்து வருத்தப் படுகிறேன். ஆனால் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் இருக்கின்றேன்” என வருத்தத்தோடு சொன்னான்.

புத்தர் மிக அன்போடு, “கவலைப் படாதே, தற்பொழுது சாக மாட்டாய். உன் மரணம் தள்ளிப் போடப் பட்டிருக்கிறது. நல்ல எண்ணங்களுடன் மற்றவர்களுக்கு உதவி செய்தால் நாம் இறந்த பிறகும் போற்றபடுவோம். நல்லவர்களாக இருந்தால் மட்டுமே நம்மைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள்” என எடுத்துரைத்தார்.

நீதி

மரணம் யாருக்கு எந்தச் சமயத்தில் வரும் என்று தெரியாது. உயிரோடு இருக்கும் பொழுது நல்லவர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பயனற்ற ஒரு வாழ்க்கைக்குச் சமமாகும்.

do good and help others 3

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதிரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

துப்புரவு பெண் தொழிலாளர்

Cleaning Lady 1

நீதி – நன் நடத்தை / நன்றி உணர்வு  

உபநீதி – மரியாதை 

கல்லூரி இரண்டாவது வருடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் பேராசிரியர் திடீர் போட்டி ஒன்று வைத்தார். கடமையுணர்ச்சி உள்ள பெண்ணாகத் தான் நான் இருந்தேன். கேள்விகள் அனைத்தையும் பார்த்தேன். கடைசிக் கேள்விக்கு மட்டும் பதில் தெரியவில்லை. “உங்கள் கல்லூரியைத் தூய்மை செய்யும் பெண்ணின் பெயர் என்ன?” என்பது தான் கேள்வி.

எனக்கு கேலியாக இருந்தது. அவளை பல முறை பார்த்திருக்கிறேன். நெட்டையாகவும், தலை முடி கறுப்பாகவும், சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண். ஆனால் பெயர் தெரியவில்லை. கேள்வித்தாளைக் கொடுத்து விட்டேன். ஆனால் கடைசிக் கேள்விக்கு பதில் எழுதவில்லை. ஒரு மாணவி அதற்கும் மதிப்பெண்கள் கொடுக்கப்படுமா என்று கேட்டதற்கு “ஆம்” என்று பதில் வந்தது. மேலும் பேராசிரியர், “உங்கள் தொழிலில் வெவ்வேறு விதமான மனிதர்களை சந்திப்பீர்கள். ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கைக்கு முக்கியம் தான். புன்னகையுடன் அவர்களை வரவேற்பதுடன், உங்களின் கவனிப்பும் அக்கறையும் தேவை” என்று எடுத்துரைத்தார். இந்தப் பாடத்தை இன்று வரை நான் மறக்கவில்லை. கல்லூரியைத் தூய்மை செய்யும் பெண்ணின் பெயர் கீதா என்று தெரிந்துக் கொண்டேன்.

Cleaning Lady 2

நீதி:

வாழ்க்கையில் நமக்கு  உதவி செய்பவர்கள் நிறைய மனிதர்கள் இருக்கின்றனகள். ஆனால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை நாம் கொடுப்பதில்லை. சில நிமிடங்களாவது அவர்களுக்காக ஒதுக்கி நல்ல எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வதோ அல்லது  ஒரு நன்றியைத் தெரிவிப்பதோ மிக அவசியமாகும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://moralsandethics.wordpress.com/2006/11/16/five-great-lessons/