Archive | April 2015

நமக்கு எந்தக் கோணம் முக்கியம்

Our outlook defines success for us

நீதி – பகுத்தறிவு

உபநீதி – தன்னம்பிக்கை

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாக இருந்தார். பல மன்னர்கள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒரு நாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார் ”ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். பிறகு, ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? என்று கேட்டார்.”

பையன் சொன்னான் ”தங்கம்”.

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான் ”தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

 Our outlook defines success for us 2

நீதி:

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

Advertisements

பிரதிபலிப்பு

Reflections

நீதி – உண்மை / நன்னம்பிக்கை  

உபநீதி – சரியான மனப்பான்மை

ஒரு அப்பாவும் பையனும் ஒரு முறை மலைப்பகுதியில் நடந்து கொண்டிருந்தார்கள். திடீரென பையன் கீழே விழுந்து விட்டான். “ஐயோ” என்று அலறினான்.

உடனடியாக அதே குரல் மலையிலிருந்து எதிரொலித்தது. ஆச்சரியத்துடன் “நீ யார்” என்று கேட்டான். மறுபடியும் “நீ யார்” என்றது அதே குரல். பதிலைக் கேட்டு கோபத்துடன் “கோழை” என்று அலறினான். அவனுக்குக் கிடைத்த பதில் “கோழை” என்று தான்.

எரிச்சலுடன் அப்பாவிடம் “என்ன நடக்கின்றது” என்று கூச்சலிட்டான்.

அதற்கு அப்பா புன்னகையுடன் “நான் சொல்வதைக் கேள்”  என்று பதிலளித்தார். பிறகு குரலை உயர்த்திக் கொண்டு, “உன்னைப் பாராட்டுகிறேன்” என்று சொன்ன போது, அதே வார்த்தைகள் மறுபடியும் ஒலித்தன. அடுத்தபடியாக, “நீ தான் வெற்றியாளர்”  என்று உரக்கச் சொன்னார். எதிர்க் குரல் கேட்டவுடன் பையனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அப்பா மிக அழகாக எடுத்துச் சொன்ன வார்த்தைகள் என்னவென்றால், “எல்லோரும் இதை எதிரொலி என்று சொல்வார்கள். ஆனால் இதுதான் வாழ்க்கை. நாம் என்ன சொன்னாலும், செய்தாலும் வாழ்க்கை அதை நமக்கு திருப்பிக் கொடுக்கும். செய்யும் செயல்களின் பிரதிபலிப்பு தான் வாழ்க்கை. உலகிலிருந்து அன்பு வேண்டுமென்றால், நாம் அன்பாக மற்றவர்களிடம் இருந்து தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். ஒரு அணியிலிருந்து ஆற்றல் எதிர்ப்பார்த்தால் அந்த ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் வாழ்க்கையிலிருந்து எதிர்பார்ப்பது என்ன கொடுக்கின்றோம் என்பதை பொறுத்து உள்ளது.”

நீதி:

வாழ்க்கை ஒரு நிகழ்வு அல்ல. இது பிரதிபலிப்பு தான். நல்ல எண்ணங்களுடன் செயல்பட்டு, நம்பிக்கை வைத்தால் வெற்றி உறுதி

மொழி பெயர்ப்பு: 

சரஸ்வதிரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

ஷாலுக்கின் வெற்றி

boy carrying watermelon

நீதி – அன்பு / மன கட்டுப்பாடு 

உபநீதி – பக்தி

குஜராத் நகரத்தின் மஹுடியா பகுதியில், மேஷ்வோ நதிக்கரை அருகில்  செழிப்பான வயல்கள் இருந்தன. அங்கு, ஜுவன்பால் என்னும் ஒரு ஏழை விவசாயி இருந்தார். சிபடா (CHIBHADA) என்னும் ஒரு வகையான பழத்தை அங்கு பயிரிட்டார். அவருடைய மனைவி கேசர்பாயும், மகன் ஷாலுக் என்பவனும் அவருக்கு உதவி செய்தார்கள்,

ஒரு நாள், ஷாலுக் தன் அம்மாவிடம், “எனக்கு ஒரு ஆசை. ஷிர்ஜி மஹாராஜ் இந்தச் சுவையான பழத்தை உண்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். நான் ஒன்று எடுத்துக் கொண்டு போகலாமா? அவர் சாப்பிட்டால் அது நமக்குக் கிடைக்கும்  பாக்கியம்”  என்று கூறினான்.

அடுத்த நாள், நதிக்கரை ஓரத்திலிருந்து ஒரு பெரிய, ருசியான சிபடாவை எடுத்துக் கொண்டு சென்றான். செல்லும் வழியில் ” மற்ற விலை உயர்ந்த உணவுப் பொருட்களை விட்டுவிட்டு இந்த மலிவான பழத்தை மஹாராஜ் சாப்பிடுவாரா?” என்று நினைத்தான். மேலும் அதை அவருக்குக் கொடுப்பதற்கு பதில் தானே வைத்துக் கொள்ளலாம் என்ற ஒரு எண்ணமும் வந்தது.

அந்த எண்ணம் ஆசையாக மாறிற்று. உடனே பழத்தைச் சாப்பிடத் தீர்மானித்தான். மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட நினைத்த போது, மனதில் “இவ்வளவு பலவீனமாக இருக்கிறாயே? ஆசையாக ஷிர்ஜிக்கு வைத்திருந்த பழத்தை உண்ண எப்படி மனம் வந்தது உனக்கு? அவரிடம் இருக்கும் பக்தி எங்கு போய் விட்டது?” என்று ஒரு குரல் கேட்டது.

இந்த வார்த்தைகள் அவனைச் சம நிலைக்குக் கொண்டு வந்தன. ஷிர்ஜிக்குத் தான் இந்தப் பழம் என்று தீர்மானித்து விட்டு நடக்க ஆரம்பித்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு, பசியும் தாகமும் அதிகமாக இருந்ததால் மனதில் மறுபடியும் ஒரு எண்ணம், “பைத்தியக்காரா, பழத்தைச் சாப்பிடு. செல்வமுள்ள பக்தர்கள் கொடுக்கும் உணவைத் தான் அவர் எடுத்துக் கொள்வார். இந்த மலிவான பழத்தை எப்படிச் சாப்பிடுவார்? சீக்கிரமாக அதைச் சாப்பிடு. பிறகு வீடு திரும்பிச் செல்.”

ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே ஒரு குரல் எழும்பியது. “நீ ஷீர்ஜியின்   உண்மையான  பக்தர்.  மனது  சொல்வதைக்  கேட்காதே.”

அவ்வளவு தான். மனதைத் திடப்படுத்திக் கொண்டான். இந்தப் பழம் ஷீர்ஜிக்குத் தான், மஹாராஜை மனதில் கண்டான். “ஸ்வாமி நாராயண், ஸ்வாமி நாராயண்” என்ற மந்திரத்தை ஓதிக் கொண்டே ஓடினான்.

மஹாராஜ் சபையைச் சென்றடைந்தான். அங்கு கீர்த்தனைகள் பாடிக் கொண்டிருந்தார்கள். ஷாலுக் சென்றவுடன் மஹாராஜ் அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டு அவனைக்  கூப்பிட்டார். மனதில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. பணிவும், மரியாதையும் நிறைந்த மனதுடன் மஹாராஜ் காலில் விழுந்து, அவர் மடியில் பழத்தை வைத்தான்.

பிறகு மஹாராஜ், “பையில் இருக்கும் கத்தியைக் கொடு, எனக்கு இந்தப் பழத்தைச்  சாப்பிட வேண்டும்” என்று கேட்டார்.

அவர் முழுப் பழத்தையும் ஆசையாகச் சாப்பிட்டார். எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். பிறகு மஹாராஜ் ஒரு டப்பா “BURFI” ஷாலுக்கிடம் கொடுத்து,  அவனை அணைத்துக் கொண்டார்.

எல்லோரும் கை தட்டி ஏன் மஹாராஜ்  இவ்வளவு அன்பைப் பொழிகின்றார் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்கள்.

மஹாராஜ் மிக அழகாக எடுத்துச் சொன்ன வார்த்தைகள், “எவ்வளவு ஆசை மனதில் இருந்தாலும், அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு பழத்தை எனக்காகக் கொடுத்திருக்கான். தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் வெற்றிகரமாக நிற்கிறான்.”

அங்கு எல்லோரும் ஷாலுக்கை பாராட்டினார்கள்.

நீதி:

மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டால் அனைத்தையும் வெல்லலாம். இந்தப் பாதையில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுதான் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

கிண்ணத்தில் நூடல்ஸ்

bowl of noodles1

நீதி – அன்பு

உபநீதி – பெற்றோருக்கு மரியாதை செலுத்துதல்

அன்று இரவு, அம்மாவுடன் சண்டை போட்டு விட்டு, வீட்டிலிருந்து வெளியேறினாள் பூஜா. செல்லும் வழியில் தான் ஞாபகம் வந்தது ஜேப்பில் பணம் இல்லை என்று. தொலைபேசியில் வீட்டிற்குப் பேசக் கூட அவளிடம் பணம் இல்லை.

அதே சமயத்தில் ஒரு நூடல்ஸ் கடை வழியாகச் செல்லும் போது, அதன் வாசனை மூக்கைத்  துளைத்தது. சாப்பிட வேண்டும் என்று விருப்பப்பட்டாள், ஆனால் கையில் பணம் இல்லை.

கடைக்காரன் உடனே அச்சிறுமியைப் பார்த்து “உனக்கு நூடல்ஸ் வேணுமா?” என்று கேட்டார்.

அதற்கு வெட்கத்தோடு அவள் “என்னிடம் பணம் இல்லையே” என்று பதிலளித்தாள்.

அடுத்த நிமிடம் கடைக்காரன், “நான் உனக்கு விருந்துபசாரம் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு கிண்ணத்தில் சூடான நூடல்ஸ் தயாரித்து எடுத்து வந்தார்.

கொஞ்சம் சாப்பிட்ட பிறகு அழ ஆரம்பித்தாள்.

“என்ன ஆச்சு?” என்று கடைக்காரர் கேட்டார்.

அதற்கு பூஜா, “உங்கள் அன்பு செயலைப் பார்த்து தலை வணங்குகிறேன்” என்று கூறிவிட்டு , கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

மேலும் நீங்கள் யாரென்று தெரியாத போதிலும், எனக்கு கிண்ணம் நிறைய நூடல்ஸ் கொடுக்கின்றீர்கள். ஆனால் என் அம்மா ஒரு சண்டைக்குப் பிறகு வெளியில் துரத்தி விட்டாள். மிகவும் கொடுமையானவள் என்று அழுதாள்.

அக்கடைகாரன் பெருமூச்சு விட்டார்.

பிறகு அவர், “ஏன் அப்படி நினைக்கின்றாய்?” ஒரு கிண்ணம் நூடல்ஸ் கொடுத்ததற்கு உனக்கு இப்படி இருக்கிறதே. சிறு வயதிலிருந்து உன்னை வளர்த்த அம்மாவை மதிக்காமல் இருக்கலாமா? நீ செய்தது அவமரியாதை அல்லவா? என்று கேட்டார்.

அந்த வார்த்தைகளுக்குப் பிறகு தான் அவளுக்கு மண்டையில் உறைத்தது.  நான் ஏன் அப்படி அம்மாவைப் பற்றி நினைத்தேன் என்று வருத்தப்பட்டாள்.

வீட்டிற்குப் போகும் வழியில் அம்மாவிடம் என்ன சொல்வது என்று யோசனை செய்து கொண்டே சென்றாள். “நான் செய்தது தவறு. என்னை மன்னித்து விடவும்” என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைத்தாள். அவள் உள்ளே சென்றவுடன் அம்மா கொஞ்சம் சோர்வாக இருந்தாலும், “கண்ணா, உனக்காக சமைத்திருக்கிறேன். சூடாகச் சாப்பிடு” என்று மிக அன்போடு கூறினாள்.

அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

வாழ்க்கையில் சில மனிதர்கள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களைப் பார்த்து பெருமைப்பட்டு நன்றி கூறுவோம். ஆனால் பெற்றோர்கள் செய்யும் தியாகத்தை மிக இயல்பாக எடுத்துக் கொள்கிறோம்.

நீதி:

பிறந்ததிலிருந்து நமக்குக் கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் பெற்றோரின் அன்பு தான். அவர்கள் நம்மிடமிருந்து ஒன்றுமே எதிர்ப்பார்ப்பதில்லை. ஆனால் அவர்கள் செய்யும் நிபந்தனையற்ற தியாகத்தை மதித்து பாராட்டுகின்றோமோ?? பெற்றோர்களை அன்போடு நடத்துங்கள். அவர்கள் இல்லாமல் நாம் இல்லை.

 

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதிரஞ்சனி

Source: http://academictips.org/blogs/a-bowl-of-noodles-from-a-stranger/