Archive | July 2015

அவசரப்பட்டு மற்றவர்களைத் தப்பாக எண்ணாதே

avasarappattu matravargalai thappaaga ennaadhe picture 1

நீதி – பொறுமை

உபநீதி – நிதானம்

மாலையில் நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். திடீரென மழைச்சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத் தொடங்கினர். கணவர் வேகமாக ஓடினார்.

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான் மனைவி வந்தடைந்தார். மழைச்சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து வந்ததால் மனைவி பாலத்தை கடக்க பயப்பட்டாள். அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை. மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை அழைத்தாள். கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.அவளுக்கு அழுகையாய் வந்தது.இப்படிப் பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர். திரும்பிக் கூட பார்க்கவில்லையே என மிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.

பாலத்தைக் கடக்கும் போது இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள். கணவரைக் கோபத்தோடு பார்க்கிறாள். அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு எதுவும் செய்யாமல் மௌனமாக இருப்பதாகத் தோன்றும். ஆனால் உண்மையிலேயே அவர் தன் குடும்பத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் இருப்பார். தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.

நீதி:

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை. தூரத்தில் இருப்பது தெளிவாக தெரிந்தாலும் அருகில் வரும் பொழுது தான் பொருள் புரிகின்றது.

 

 

கஸ்தூரி மான்

its all within picture 1

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞான தங்கமே என்ற அழகான வரிகள் இந்த கதைக்கு மிகவம் பொருத்தமானவை.

நீதி – உண்மை

உபநீதி – உட்புற நோக்கு

காட்டுப் பகுதி ஒன்றில் அழகான ஒரு மான் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு புதுமையான நறுமணம் தினமும் மானைச் சுற்றி இருந்தது.

பூக்களுக்கு ஒரு நறுமணம் உண்டு. மழைத் தூறல் வரும் முன் மண் வாசனைக்கு ஒரு நறுமணம் உண்டு. ஆனால் அதையெல்லாம் விட இந்த மான் அனுபவித்த நறுமணம் மிகவும்  தெய்வீகமாக இருந்தது. ஆனால் என்னவென்று புரியவில்லை. ஒவ்வொரு மரத்தையும் முகர்ந்து பார்த்தது. ஏமாற்றம் அடைந்தது.

its all within picture 2

காடு முழுவதும் முகர்ந்து, மோப்பம் பிடித்துப் பார்த்த மானுக்கு ஒன்றும் புலப்படவில்லை. அடுத்தது வண்ணத்துப்பூச்சிகளை முகர்ந்தது. மறுபடியும் ஏமாற்றம். ஒரு வேளை சதுப்பு நிலத்திலிருந்து வருகிறதோ என்று சந்தேகப் பட்டது. அதுவும் இல்லை. பிறகு மார்பு சிவந்த சிறு பறவை (ராபின்) ஒன்றை முகர்ந்து பார்த்தது. குறுகிய மலை இடுக்குகள், செடி புதர்கள் என இங்கும் அங்கும் ஓடிக் கொண்டே இருந்தது. எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம். ஆனால் கடைசியில் சோர்வடைந்து கீழே விழுந்தது.

தரையில் கிடந்த போது எண்ணங்கள் மட்டும் ஓடிக் கொண்டே இருந்தன. அந்த சமயம் தான் அந்த நறுமணம் தன் உடலிலிருந்து தான் வருகின்றது என்று கண்டுபிடித்தது. உடனடியாக ஒரு நிம்மதியான உணர்வு ஏற்பட்டது.  “கடவுளே, இந்த மணம் என்னிடம் இருப்பதை நான் இவ்வளவு நாட்கள் உணரவே இல்லையே,” என்ற எண்ணத்துடன் நிம்மதியாகத் தூங்கியது.

உண்மையான மணம்  மானுடையதே. அதே போல கடவுளும் எங்கேயோ வெளியே இருப்பதாக நினைத்து நாம் தேடிக் கொண்டிருக்கோம். ஆனால் அவர் நம்முள்ளே தான் இருக்கின்றார். அவ்வளவு தேடலுக்குப் பிறகு மான் உணர்ந்த இந்த தெய்வீக உண்மை.

நீதி:

நாம் நன்றாகத் தெள்ளத் தெளிவுடன் ஆராய்ச்சி செய்தால், கடவுளும், நிம்மதியும் நம்முள்ளே இருப்பதை உணர்வோம். குரு ராமதாஸ் மிக அழகாக எடுத்துரைத்திருக்கிறார் – நான் உன் நாமத்தை உண்மையான மனப்பான்மையுடன் ஜபிக்கும் பொழுது எனக்குக் கிடைக்கும் பதில் நிம்மதி.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

பக்தியும் ஆணவமும்

divinity and ego picture 1

பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும். அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், மனம் பாவ விஷயங்களில் ஈடுபட வாய்ப்பிருக்காது. ஒழுக்கமும், நேர்மையும் மனதில் இருந்தால் செயலில் நேர்த்தி நிறைந்திருக்கும்.

ஆணவம் என்பது கண்ணில் விழும் தூசியைப் போல…..தூசியை எடுக்கவில்லை என்றால் தெளிவாகப் பார்க்க முடியாது….. அதே மாதிரி, ஆணவத்தை அகற்றினால் தான் உலகத்தைச் சரியான கண்ணோட்டத்துடன் பார்க்க முடியும்.

நீதி – உண்மை / வாய்மை

உபநீதி –  தெய்வீகத் தன்மை / மதச்சார்பின்மை

முன்னொரு காலத்தில், உத்தங்கன் என்றொரு சிறந்த முனிவர் இருந்தார். மனித குலத்திற்காக அவர் தவம் செய்து வந்தார். பிராமண குலத்தில் பிறந்த அவர், சிறந்த கிருஷ்ண பக்தராகவும் திகழ்ந்தார். ஆசை, மோகம், விருப்பு, வெறுப்பு என்ற தன்மைகள் எல்லாம் துறந்து, ஒரு நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

பகவான் கிருஷ்ணர், முனிவர் செய்த தவத்தினால் திருப்தி அடைந்து அவருக்கு விஸ்வரூப தரிசனம் அளித்தார். அதோடு ஒரு வரமும் தர விரும்பினார். முனிவருக்கு எந்த பொருளிலும் ஆசை இல்லாததால் எதையும் வாங்க மறுத்தார். ஆனால் பகவான் அவர் செய்த தவத்திற்குப் பரிசாக ஏதேனும் ஒரு விருப்பத்தைத் தெரிவிக்குமாறு வற்புறுத்தினார். கடைசியாக முனிவர் ஒரு விருப்பத்தை வெளிப்படுத்தினார். பாலைவனப் பகுதியில் இருந்ததால், நினைத்த நேரத்தில் தாகத்திற்குக் குடிக்க தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். பகவானும் அவ்வரத்தை அளித்து மாயமாய் மறைந்தார்.

ஒரு நாள், உத்தங்க முனிவர் பாலைவனப் பகுதியில் வெகு தூரம் நடந்ததனால் களைப்புற்று சோர்வடைந்தார். தண்ணீர் தாகத்தால் அவதிப்படும் போது, பகவான் கிருஷ்ணர் கொடுத்த வரம் ஞாபகம் வந்தது. அந்த எண்ணம் வந்தவுடன் தொலைவில் கிழிந்த ஆடைகள் அணிந்த ஒரு வேடன் தன் நாயுடன் செல்வதைக் கண்டார். அவர் தோள்பட்டையில் விலங்குத் தோலால் செய்த ஒரு பையில் தண்ணீரும் இருந்தது. அவ்வேடன் தண்ணீர் கொடுக்க முன் வந்த போது, அவன் அணிந்த கிழிந்த உடையைப் பார்த்து பிராமணன் மறுத்தார். மறுபடியும் தண்ணீர் வேண்டுமா என்று கேட்ட பொழுது, முனிவர் கோபத்துடன் வேடனை விரட்டினார். நாயும், வேடனும் மாயமாக மறைந்தார்.

ஒரு நிமிடத்திற்குப் பிறகு முனிவர், “அவ்வேடன் கடவுளாக இருந்திருப்பாரோ” என்று சந்தேகப் பட்டார். பிறகு கீழ் ஜாதியைச் சேர்ந்த அந்த வேடன் கட்டாயமாக மேல் ஜாதியைச் சேர்ந்த அவருக்குத் தண்ணீர் எடுத்துக் கொண்டு வர வாய்ப்பே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த போது கிருஷ்ண பகவான் புன்னகையுடன் எதிரே வந்து, “யார் சண்டாளன்?” இந்திர தேவனிடம் தண்ணீர் அனுப்பினேன். அவர் தண்ணீருக்கு பதிலாக அமிர்தம் எடுத்து வந்து உங்களைச் சிரஞ்சீவி ஆக்க விரும்பினார். ஆனால் ஒரு நிபந்தனையுடன்; அதாவது நீங்கள் எல்லோரிடத்திலும் தெய்வ தன்மையை உணர்கிறீரா என்று பார்ப்பதற்கு தான்.
Divinity and ego picture 2பகவான் கிருஷ்ணர் வைத்த பரீட்சையில் முனிவர் தோற்று விட்டதை உணர்ந்தார். தன் ஆணவத்தால் அமிர்தத்தையும் இந்திர தேவனின் தரிசனத்தையும் இழந்ததார்.

உத்தங்க முனிவர் போன்றவர்களே இந்தப் பரீட்சையில் தோல்வி அடைந்தால். மற்றவர்கள் எல்லோரும் எங்கே?  கடவுளின் லீலைகளையும், மாயையும் நம்மால் புரிந்து கொள்ள முடியுமா?  சாதாரண மக்களுக்குக் கடினம் தான். அதனால் வாழ்க்கையின் உண்மையான தத்துவத்தைப் புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நீதி:

நாம் எல்லோரும் ஒரே குலம். இதை உணர்ந்தால் எல்லோரிடமும் உள்ள தெய்வத்தன்மை புலப்படும். மனதளவில் நிம்மதியாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்கலாம். சோதனைகள் வந்துக் கொண்டிருக்கும். ஆனால் நமக்கு எப்பொழுதும் பகவான் நன்மையே புரிவார் என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.  ஆணவத்தால் முனிவர் தோற்றார். அதனால் நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், ஆணவத்தோடு செயல்பட்டால் சரியான கண்ணோட்டத்துடன் உலகத்தைப் பார்க்க முடியாது. ஆதலால், ஆணவத்தைக் கட்டுப்படுத்த விடா முயற்சி எடுக்க வேண்டும்.

பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும். அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், மனம் பாவ விஷயங்களில் ஈடுபட வாய்ப்பிருக்காது. ஒழுக்கமும், நேர்மையும் மனதில் இருந்தால் செயலில் நேர்த்தி நிறைந்திருக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source:

http://saibalsanskaar.wordpress.com

நன்றி உணர்வு

nandri unarvu picture one

நீதி – தன்னம்பிக்கை / விசுவாசம்

உபநீதி –  செய்ந்நன்றி மறவாமை

ஒரு ஊரில் ராஜா ஒருவர்  பத்து  வெறி நாய்களை வளர்த்து வந்தார். தன் மந்திரிகள் செய்யும் தவறுகளுக்கு இந்நாய்கள் மூலம் அவர்களைக் கொடுமைப் படுத்தி வந்தார்.

ஒரு முறை ஒரு மந்திரி வெளிப்படுத்திய கருத்து தவறாக இருந்ததால் ராஜாவால் ஏற்க முடியவில்லை. ராஜாவுக்குப் கோபம் வந்ததனால், அந்த மந்திரியை நாய்களுக்கு இரையாக்கத் தீர்மானித்தார்.

மந்திரி ராஜாவிடம் “பத்து வருடங்கள் தங்களுக்குத் சேவை செய்ததற்கு இதுதானா பலன்? இத்தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்குப் பத்து நாட்கள் அவகாசம் வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டார். ராஜாவும் சம்மதித்தார்.

nandri unarvu picture twoமந்திரி நாய்களின் காப்பாளரிடம் சென்று  அடுத்த பத்து நாட்களுக்குத் தான் நாய்களுக்கு உணவளிக்க விரும்புவதாகக் கூறினார்.  காப்பாளருக்கு ஒன்றும் புரியவில்லை, இருந்தாலும் சம்மதித்தார். மந்திரி நாய்களுக்கு உணவிட்டு மற்றும் பல தேவைகளையும் கவனித்து வந்தார்.

இவ்வாறு பத்து நாட்கள் கழிந்தன. ராஜா மந்திரியை நாய்களுக்கு இரையாகப் போடும்படி உத்தரவிட்டார். நாய்களின் கூண்டில் மந்திரி நுழைந்தவுடன் நாய்கள் அவரின் கால்களை நக்கி முத்தமிட்டன. இதைக் கண்ட எல்லோரும் ஆச்சரியம் அடைந்தனர். ராஜாவும் நாய்களுக்கு என்ன ஆகிவிட்டது  என்று நினைத்தார். அதற்கு மந்திரி கூறிய பதில். “நான் இந்நாய்களுக்குப் பத்து நாட்கள் தான் சேவை செய்தேன் ஆனால் ஆழ்ந்த  நன்றி உணர்ச்சியை அவை காண்பிக்கின்றன.  தங்களுக்குப் பத்து வருடங்கள் சேவை செய்த  போதிலும்  ஒரு சிறு தவறுக்குத் தாங்கள் எனக்குப் பெரிய தண்டனை கொடுக்க நினைத்தீர்கள். ராஜாவும் தன் தவறை உணர்ந்து மந்திரியை விடுதலை செய்தார்.

நீதி:

இத்தவறு நாம் எல்லோரும் செய்யக்கூடியதே. மற்றவரில் உள்ள நற்குணங்களை மறந்து ஒரு சிறு தவறுக்காக அவர்களை வெறுப்பது சரியல்ல. ஆலோசனை செய்த பிறகு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். நம் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் .

நன்றி மறப்பது நன்றன்று  நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

பாராட்டுதல்

நீதி – நன் நடத்தை / நற்பண்பு 

உபநீதி – வாய்மை

Paaraattuthal3ஒரு ஆசிரியர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து ஒவ்வொருவரையும் வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார். ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது இடைவெளியுடன்!

மாணவர்கள் எழுதி முடித்தவுடன் ஆசிரியர் சொல்கிறார்: “ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள் காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”Paaraattuthal1

மாணவர்கள் ஒவ்வொருவரும்  யோசித்து,  தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர். வாரக்கடைசி –  ஆசிரியர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும் ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள் அவர்களைப்பற்றி எழுதியிருந்த உயர்வான வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி கீழே தன் கையெழுத்தையும் போட்டு,  மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து  அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.

மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று அமர்ந்து படிக்கிறார்கள்.Paaraattuthal4

பத்து  நிமிடங்கள் –  வகுப்பறையே சந்தோஷக் கடலில் மிதக்கிறது. “நான் இவ்வளவு சிறப்பானவரா, என்னைப் பற்றி 

Paaraattuthal2மற்றவர்கள் இவ்வளவு நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா?“ அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள்! அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள குணாதிசயங்களை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,  சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.

பல வருடங்கள் சென்றன.

அந்த வகுப்பில் படித்த மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில் சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து, மரணம் அடைகிறான். அவன் உடல் ராணுவ மரியாதையுடன் சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது. இறுதிச் சடங்கில், கலந்து கொள்ள அந்த ஆசிரியரும் செல்கிறார். மிடுக்கான ராணுவ உடையில் – நாட்டின் தேசியக்கொடி போர்த்தப்பட்டு, சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த  மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார். ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை செலுத்துகின்றனர்.

ஆசிரியர் கடைசியாகச் செல்கிறார். பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார். உடலைத் தாங்கி வந்த, Paaraattuthal5ராணுவ சக வீரர்கள் அருகிலேயே நின்றிருந்தனர். ஒரு வீரர் கேட்கிறார் – ”நீங்கள் சரவணனின் பத்தாம் வகுப்பு ஆசிரியரா?” என்று. ஆசிரியர் ஆம் என்று தலையசைக்கிறார். பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப் பற்றி எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்.” சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத் தோழர்கள் அங்கு ஆசிரியருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.

அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர். அந்த சோகத்திலும் தந்தை ஆசிரியரிடம் கூறுகிறார் – “நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும். இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது  அவனது  பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”. அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக – பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள். ஆமாம் – பல வருடங்களுக்கு முன்னர் அந்த ஆசிரியர் சரவணனைப் பற்றிய நல்ல குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான்! கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் – “ரொம்ப நன்றி  ஐயா – உங்கள் கடிதத்தை அவன்  உயிரையும் விட மேலாக விரும்பினான். இத்தனை வருடங்களும் அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான். அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும்,  பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”  மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து கதறி அழுகின்றனர்.

நீதி:

இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது. எங்கே துவங்கும், எப்படி இருக்கும்,  எப்போது, எப்படி முடியும்?  யாருக்கும் தெரியாது. இருக்கின்ற காலத்தில் நம்முடன் இருப்பவர்களை அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம். நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம். ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால், நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக, அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம். ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை,  குணங்களை அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத் தவறி விடுகிறோம். கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத் தெரிவதில்லை.

சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல் நன்றாக இருக்கும்போது பாராட்டுவது இல்லை! பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை!

இந்த உலகில் அனைத்து உயிர்களுமே, பாராட்டுதலை எதிர்பார்க்கிறது. கிடைத்தால் சந்தோஷப்படுகிறது! நீங்களோ,  நானோ – யாருமே அதற்கு விதிவிலக்கல்ல. வெளிப்படையான பாராட்டுதல் அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும். நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும். தோழமை உணர்வு அதிகப்பட உதவும். மனிதர்களை மேலும் நல்லவர்களாக  உருவாக்க இது உதவும்.

பூசாரியும் முதலையும்

the crocodile and the priest picture 1

நீதி – உண்மை

உபநீதி – ஒற்றுமை

முதலை ஒன்று இருந்தது. தினந்தோறும் வேடிக்கையான சில விஷயங்களை கடைப்பிடித்தது. மற்ற முதலைகள் செய்யாததை அது செய்தது. சூரிய உதயத்திற்கு முன் எழுந்து பய பக்தியுடன் பிரார்த்தனையை தொடங்கியது. சாதனை என்றால் என்ன?

ஆன்மீக குறிக்கோள்களை மனதில் வைத்துக்கொண்டு நடைமுறையில் தினமும் ஒழுங்காக சில காரியங்களை செய்வது தான் சாதனையின் அர்த்தம். இறைவனை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள செய்யும் சில விஷயங்கள் அல்லவா?  நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

சரி, இந்த முதலையின் வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம். தினமும் சூரிய உதயத்திற்கு முன் தியானம் செய்தால் சிறந்தது என புரிந்துக் கொண்டது. அதனால் அதிகாலையில் எழுந்து, உடற்பயிற்சிக்காக நீண்ட தூரம் நீந்திக்கொண்டே மனதளவில் இறைவனிடம் பிரார்த்தனை செய்தது. இந்த சாதனையை முடித்த பிறகு ஆரோக்கியமான உணவை அருந்தி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக பலத்துடன் செயல்பட்டது.

the crocodile and the priest picture 2ஒரு நாள் காலை பூசாரி ஒருவர் அங்கு வந்தார். முதலை பய பக்தியுடன் சாதனை செய்வதைப் பார்த்து ஆச்சரியத்துடன் பூசாரி முதலையிடம், “என்ன செய்கின்றாய்? நீ ஒரு மிருகம் தானே; ஆனால் தினமும் தியானம் செய்து பிரார்த்தனை பண்ணுகின்ற காரணம்? அதனால் என்ன பயன்?” என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டார். அதற்கு முதலை, ” ஆம், நான் மிருகம் தான், ஆனால் இறைவனை உணர வேண்டும் என்ற ஆசை இருப்பதால், நான் தினமும் சாதனை செய்கின்றேன்” என்று பதிலளித்தது. “நீ சாதனை செய்வதனால் பயன் ஒன்றுமில்லை என்று மறுபடியும் பூசாரி கூறினார். அதற்கு காரணம் கேட்டதற்கு, ” நீ ஒரு முதலை. மனிதனாக பிறந்தால் தான் இறைவனை உணர முடியும்” என்று பூசாரி கூறினார்.

அதற்கு தைரியமாக முதலை, “நீ ஒரு முட்டாள். பூசாரி மாதிரி தோற்றம் இருந்தாலும், சாதாரண விஷயங்கள் கூட உனக்கு புரியவில்லையே. உன்னை படைத்த அதே இறைவன் தான் என்னையும் படைத்திருக்கிறார் அல்லவா?” என்று பதிலளித்தது.

பூசாரி இந்த அறிவுள்ள முதலையை பார்த்து பிரமித்து போனார்.

பிறகு முதலை, “நான் தினமும் தியானம் செய்வதால் இறைவனை உணர ஒரு சந்தர்ப்பம் கட்டாயமாக கிடைக்கும். ஆனால் நீ சாதனை ஒன்றும் செய்யாவிட்டால் அவரை உணர வாய்ப்பே இல்லை. மேலும் அடுத்த பிறவியில் முதலையாக பிறவி எடுப்பாய்.” என்று அடித்து சொன்னது.

உடனே அந்த பூசாரி நானா, முதலையாக மாறுவதா என்று சொல்லிகொண்டிருக்கும் போதே முதலையாக மாறி, அவ்விடத்தில் இரண்டு முதலைகள் இருந்தன.

பூசாரிக்கு குழப்பமாக இருந்தது. நான் முதலையாக மாறுவதை பற்றி உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டார். அதற்கு முதலை, “நான் தெய்வீக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் நீ பூசாரியாக இருந்தும் கூட முதலை போல் வாழ்கின்றாய்” என்று பதிலளித்தது.

நாம் எல்லோரையும் இறைவன் படைத்திருக்கிறார். நம்மால் முடிந்த நல்லதை செய்து பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும்.

நீதி:

குரு நானக் சொல்லியிருக்கிறார், “உண்மை வலிமையானது. ஆனால் அதைவிட வலிமை உண்மையாக வாழ்வதில் தான்.”

தினமும் தியானமும் சாதனையும் செய்தால் உண்மையான வாழ்க்கையை வாழ முடியும்.

உன்னை துன்புறுத்துவோர் கூட இறைவனால் படைத்தவர்கள் தான். எல்லாமே ஒரு காரணத்துடன் நடக்கின்றது.

ஒவ்வொரு மூச்சிலும் நாம் அனைவரும் ஒன்று தான் என்று ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source:

http://saibalsanskaar.wordpress.com

செய்வன திருந்தச் செய்

manasaatchi

நீதி: மனசாட்சி

உபநீதி : நேர்மை

 பணக்காரர் ஒருவர் சிலை ஒன்றை வாங்க சிற்பியை அணுகினார். அப்போது, சிற்பி கோபுரத்தின் நான்காவது தளத்தில் வைப்பதற்காக அம்மன் சிலை வடித்துக் கொண்டிருந்தார். அந்த சிலையைப் போலவே, மற்றொரு அம்மன் சிலையும் அங்கிருந்ததைப் பணக்காரர் கவனித்தார்.

“ஒரே கோவிலுக்கு இரண்டு அம்மன் சிலைகள் செய்கிறீர்களே…ஏன்?” என்று கேட்டார் பணக்காரர்.

“ஐயா! கவனக்குறைவால் முதலில் செய்த சிலை உடைந்து விட்டது. எனவே இன்னொன்றைச் செய்கிறேன்,” என்றார் சிற்பி.

“இந்தச் சிலையின் மூக்கில் சிறு கீறல் தானே விழுந்திருக்கிறது! நான்காவது கோபுரத்தில் வைக்கப்போகும் இதை யார் கவனிக்கப் போகிறார்கள். இதையே வைத்து விட வேண்டியது தானே!” என்றார் பணக்காரர்.

அதற்கு சிற்பி, “மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாது என்பது என்னவோ உண்மை தான். ஆனால் நான் இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், இது கண்ணில் பட்டு என் மனசாட்சி உறுத்துமே,” என்றார் சிற்பி.

நீதி:

எந்தத் தொழிலாயினும் அதை மனசாட்சிக்கு விரோதமின்றி திருப்தியுடன் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல! ஏமாற்றவும் கூடாது…