ஸ்ரீ கிருஷ்ணர் உத்தவர் உரையாடல்

krishna udhava story

நீதி – சரணாகதி

உப நீதி – நம்பிக்கை / பக்தி

மகாபாரத்தில் சூதாட்டத்தின் போது கிருஷ்ணர் யுதிஷ்டிரரை ஏன் காப்பாற்றவில்லை ?

(கிருஷ்ணரின் விளக்கம் /சமாதானம்)

பால்யப் பருவத்திலிருந்தே உத்தவர் கிருஷ்ணருக்கு தேரோட்டியாகவும், மற்றும் பல சேவைகளையும் செய்து வந்தார். அவர் கிருஷ்ணரிடம் யாதொரு வரமும் வேண்டியதில்லை. தன் அவதாரத்தின் நோக்கம் முடிவடையும் சமயம், கிருஷ்ணர் உத்தவரை அழைத்து “உத்தவரே, இந்த அவதாரத்தில் பலரும் பல வித ஆசைகளைப் பூர்த்தி செய்து கொண்டு, வரங்களையும் என்னிடம் பெற்றுள்ளனர். ஆனால் நீ என்னிடம் எதுவுமே கேட்டதில்லை. இப்பொழுதாவது உனக்கு என்ன வேண்டுமோ கேள், நான் தருகிறேன். உனக்கும் ஏதேனும் செய்த திருப்தியுடன் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.

உத்தவர் தனக்காக எதுவும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதல் கிருஷ்ணரைக் கவனித்து வந்தார். கிருஷ்ணரின் சொற்களுக்கும், செயல்களுக்கும் சம்பந்தம் இல்லாததைக் கண்டு உத்தவர் பல முறை ஆச்சரியப்பட்டிருக்கிறார்.  இதற்கான காரணத்தை அறிய அவர் விரும்பினார். ஆதலால் அவர் கிருஷ்ணரிடம், நீங்கள் எனக்கு ஒரு விதமான வாழ்வு முறையைக் கற்றுக் கொடுத்திருகிறீர்கள். ஆனால் நீங்களோ வேறு விதமாக நடந்து கொள்கிறீர்கள்
. மகா பாரத நாடகத்தில், நீங்கள்  நடித்த பாத்திரத்தில், உங்களுடைய செயல்கள் பற்றி எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்கு உண்டான காரணங்களை அறிய மிகவும் ஆவலாக உள்ளேன். என் ஆவலைப் பூர்த்தி செய்வீர்களா? என கேட்டார்.

அதற்கு கிருஷ்ணர் வேடிக்கையாக, “குருக்ஷேத்திர போரில் அர்ஜுனனுக்கு நான் உரைத்தது பகவத் கீதை ஆனால் உனக்கு இப்பொழுது உரைக்கப் போவது உத்தவ கீதை. ஆதலால் தயக்கம் எதுவுமின்றி நீ கேட்க நினைத்ததைக் கேள்” என கூறினார்.

உத்தவர் – கிருஷ்ணா, உண்மையான தோழன் யார்?krishna udhava story4

கிருஷ்ணர் – அழைக்காமலேயே தக்க சமயத்தில் உதவும் தோழனே உண்மையான தோழன்.

உத்தவர் – நீங்கள் பாண்டவர்களின் பிரியமான  தோழன். அவர்கள் உங்களையே “ஆபத் பாந்தவன்” என நம்பி இருந்தனர். உங்களுக்கு நடந்தது என்ன என்பதும் தெரியும், நடக்கப் போவது என்ன என்பதும் தெரியும். நீங்கள் சிறந்த ஞானி. சற்று முன்  “உண்மையான தோழன்” என்ற பதத்திற்கு விளக்கம் கூறினீர்கள். ஆனால்  நீங்கள் அதற்குத் தகுந்தவாறு நடந்து கொண்டீர்களா? தர்மராஜனை (யுதிஷ்டிரனை) சூதாட்டம் ஆடுவதிலிருந்து  ஏன் தடுக்கவில்லை? அது தான் ஆயிற்று என்றால் சூதாட்டத்தில் வெற்றியை ஏன் அவர் பக்கம் திருப்பவில்லை? அவ்வாறு செய்திருந்தால் தர்மம் வென்றிருக்குமே; அதையும் நீங்கள் செய்யவில்லையே. எந்த ஆட்டத்தில் தர்மர் தன் சொத்து, வீடு, செல்வம் அனைத்தையும் தொலைத்தாரோ அப்போதாவது அவரைச் சூதாடுவதிலிருந்து தடுத்திருக்கலாம். சூதாட்டத் தண்டனையிலிருந்து அவரைக் காப்பாற்றி இருக்கலாமே; அல்லது தன் தம்பிகளைப் பணயம் வைக்கும் போதாவது நீங்கள் சூதாட்டம் நடந்த அறையில் நுழைந்திருக்கலாமே; அதுவும் செய்யவில்லை. துரியோதனன் தருமரிடம், திரௌபதியை விட்டுக் கொடுத்தால் எல்லாச்  சொத்து சுகங்களையும் திருப்பித் தந்து விடுவதாகக் கூறினான்; அப்பொழுதாவது நீங்கள் தலையிட்டு, தங்கள் தெய்வீக சக்தியால் சூதாட்டக் காய்களை மாற்றி தர்மராஜன் வெற்றி பெறுமாறு செய்திருக்கலாமே; திரௌபதியின்krishna udhava story2 மானபங்க காட்சிக்கு பிறகே நீங்கள் தலையிட்டீர்கள்; ஆடைகள் கொடுத்து அவள் மானத்தைக் காப்பாற்றியதாகப் பெருமைப்படுகிறீர்கள்.

பலர் முன்னிலையில் ஒரு ஆண் மகனால் இழுத்து வரப்பட்டு, மானபங்கம் செய்யத் துணிந்த போது மௌனம் காத்தீர்கள். இதற்கு மேல் ஒரு பெண்ணுக்கு என்ன அவமானம் வேண்டும்? நீங்கள் எதைக் காப்பாற்றினீர்கள்? ஆபத்தில் உதவுபவனே “ஆபத் பாந்தவன்”. உங்களை எப்படி ஆபத் பாந்தவன் என அழைப்பது? இது நியாயமா; தர்மமா? கண்களில் கண்ணீருடன் உத்தவர் மேற்கண்ட கேள்விகளைக் கிருஷ்ணரிடம் கேட்டார். இக்கேள்விகள் உத்தவரது மட்டும் அன்று; மகாபாரதம் படித்த நம் எல்லோருக்கும் இருக்கும் சந்தேகங்கள். எல்லோர் சார்பாகவும் உத்தவர் கிருஷ்ணரைக் கேட்டார்.

இதற்குப் பதிலாக கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே ,”உத்தவா, இப்பூவுலகத்தில் விவேகமாக, பகுத்தறிவுடன் நடந்து கொள்பவனே வெற்றி பெறுவான். துரியோதனனிடம் இருந்த விவேகம் தர்மரிடம் இல்லை. அதனால் தான் தோல்வி அடைந்தார்” எனக் கூறினார் .

இதைக் கேட்ட உத்தவருக்கு குழப்பமாக இருந்தது. கிருஷ்ணர் தொடர்ந்து, “துரியோதனனிடம் சூதாட ஏராளமான சொத்துக்களும், செல்வமும் இருந்தன. அவனுக்குக் காய்களை உருட்டிச் சூதாட திறமை போதாது. ஆதலால் தனது மாமன் சகுனியை வைத்துக்கொண்டு அவன் பந்தயம் வைத்தான். இதுவே விவேகம். தருமரும் அவ்வாறு சிந்தித்து, என்னை தன் சார்பில் விளையாட வைத்திருக்கலாம். எனக்கெதிராக சகுனி ஆடியிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியுமா? நான் கேட்ட எண்களை அவனால் போட முடியுமா? என்னை அழைக்க வில்லை, ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை என்ற விஷயத்தை நான் மன்னித்து விடுகிறேன். ஆனால் விவேகம் இல்லாத மற்றொரு செயலையும் தர்மர் செய்தார். நான் விளையாடும் இடத்திற்கு வருவதையோ அல்லது சூதாடும் விஷயத்தை அறிவதையோ கூட தர்மர் விரும்பவில்லை. தன் துரதிர்ஷ்டத்தால் தர்மர் இந்த ஆட்டத்தை ஆடக் கட்டாயப் படுத்தப்பட்டார். தன் பிரார்த்தனைகளால் என்னைக் கட்டிப்போட்டு, ஆடும் இடத்திற்கு நான் வராதவாறு செய்தார். நான் அறைக்கு வெளியே காத்திருந்தேன். பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் இவர்களும் கூட துரியோதனனை கடிந்து கொண்டு,  தங்கள் துரதிர்ஷ்டத்தை நொந்து கொண்டனர்; என்னை அழைக்க மறந்து விட்டனர்.  தன் சகோதரரின் உத்தரவைப் பின்பற்றி, துச்சாதனன் திரௌபதியின் தலை முடியைப் பிடித்து இழுத்து வந்தபோது, திரௌபதியும் என்னை நினைக்கவில்லை. தன் திறமைக்கு தகுந்தவாறு அவளும் வாக்குவாதம் செய்தாள். கடைசியாக துச்சாதனன் ஆடைகளை இழுத்து மானபங்கம் செய்ய ஆரம்பித்த போது திரௌபதிக்கு உணர்வு வந்தது. தான் சக்தியற்றவள் என அப்பொழுது “ஹரி ,ஹரி, அபயம் கிருஷ்ணா, அபயம்” என அபயக்குரல் கொடுத்தாள். திரௌபதியின் மானத்தைக் காக்க எனக்கொரு வாய்ப்பு கிடைத்தவுடன், அவள் என்னை அழைத்தவுடன், நான் ஓடோடிச் சென்று, அவள் மானத்தைக் காப்பாற்றினேன். இந்தச் சூழ்நிலையில் என்னுடைய தவறு என்ன?” என கேட்டார்.

“அழகான விளக்கம் கண்ணா! என் மனம் கவர்ந்தீர்கள். இருந்தாலும் நான் ஏமாற விரும்பவில்லை. தங்களிடம் மற்றுமொரு கேள்வி கேட்க அனுமதி வேண்டும்” என உத்தவர் கூறினார். “அப்படியானால் கூப்பிட்ட குரலுக்குத்தான் நீங்கள் வருவீர்களா? ஆபத்தில் உதவ, நியாயத்தை நிலை நாட்ட தாங்களே ஓடி வர மாட்டீர்களா” என உத்தவர் கேட்டார்.krishna udhava story5

கிருஷ்ணர் கூறியது யாதெனில் – உத்தவா, இவ்வுலகில் எல்லோரும் அவர்கள் கர்மப்படி, விதிப்படி தான் வாழ்வார்கள். இது நான் நடத்துவதும் அல்ல; தலையிடுவதும் இல்லை. நான் வெறும் “சாட்சி” தான். நான் உன் அருகே இருந்து நடப்பதைக் கவனித்துக் கொண்டிருப்பேன். அதுதான் கடவுளின் தர்மம்.  அதற்கு உத்தவர், “நல்லது கண்ணா! அப்படியானால் நீங்கள் எங்கள் அருகிலேயேஇருந்து, செய்யும் தீயச் செயல்களை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். பாவங்கள், தீயச் செயல்கள் அதிகமாகி, அதிகமாகி நாங்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்; அப்படித்தானே?” என கேட்டார்.  கிருஷ்ணர் உத்தவரிடம் உத்தவா, உன் வார்த்தைகளின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொள். நான் உன் அருகே உள்ள போது, நீ எவ்வாறு தீயச் செயல்களை செய்வாய்? உன்னால் அது முடியாதது. நான் அறியாமல் உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள். தர்மரின் அறியாமை யாதெனில் எனக்குத் தெரியாமலே தான் விளையாட முடியும் என நினைத்தார். நான் எல்லோரிடத்திலும் “சாட்சி” ரூபமாக இருக்கிறேன் என்பதை தர்மர் உணர்ந்திருந்தால் சூதாட்டம் வேறு விதமாக முடிந்திருக்காதா?

இதைக் கேட்ட உத்தவர் பக்தி வெள்ளத்தில் மூழ்கி பேரானந்தம் அனுபவித்தார். எத்தகைய தத்துவம்! உள்ளார்ந்த உண்மை!

நீதி:

பிரார்த்தனைகள் செய்வது, கடவுளுக்குப் பூஜை செய்வது எல்லாம் நம் உணர்ச்சி, நம்பிக்கை. “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்ற நம்பிக்கை இருந்தால் கடவுள் இருப்பதைக் கண்டிப்பாக நாம் உணர்வோம். பகவத் கீதையில் இதையே அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் விளக்கி வந்தார். அவர் சாரதியாகவும், வழிகாட்டியாகவும் அர்ஜுனனுக்கு இருந்தார். தான் போரில் போராடவில்லை.

நாம் செய்யும் எல்லாச் செயல்களையும் கடவுளிடம் அர்ப்பணிக்க வேண்டும். நான் என்ற கர்வம் வந்து விட்டாலே அழிவு தான்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source:

http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s