வைகுண்ட ஏகாதசி

vaikunta ekadesi picture

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று  ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால்,  ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

ஏகாதசியன்று இறந்தால் முக்தி கிடைத்துவிடுமா?

வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி  என்பர்.

ஏகாதசியன்று செய்யக்கூடாதது:

ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

ஏழு பிரகாரம்:

இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களைக் கொண்ட கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மட்டுமே. இந்தப் பிரகராங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி. அதாவது 156 ஏக்கர். ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. உடலின் நடுவே ஆத்மா <உள்ளது போல, கோயிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.

துவாதசிக்கு  அகத்திக்கீரை:

வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.

ஏகாதசி விரத முறை:

கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி! ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.

மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி (பேச்சு வழக்கில் முக்குட்டி ஏகாதசி, முக்கோட்டை ஏகாதசி) என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாள் இது.

சொர்க்கவாசல்:

வைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக்கோயில்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது.

திருச்சி-பெயர்க்காரணம்:

ஆழ்வார்களால் பாடல்பெற்ற திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். 108 திவ்யதேசங்களில் ஒன்று. கோயில், திருமலை, பெருமாள்கோயில் என்று ஒரு சொல்வழக்கு உண்டு. இதில் கோயில் என்பது ஸ்ரீரங்கத்தையும், திருமலை என்பது திருப்பதியையும், பெருமாள்கோயில் என்பது காஞ்சிபுரத்தையும் குறிக்கும். அக்காலத்தில் திருச்சிஸ்ரீரங்கநாதன்பள்ளி என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்ததால் இந்தப்பெயர் உண்டானது. இதில் ஸ்ரீ என்னும் எழுத்தை தமிழில் திரு ஆக்கிதிருச்சீரங்கநாதன்பள்ளி என்று அழைத்தனர். பின்னாளில், இப்பெயர் திருச்சிராப்பள்ளி என்றாகி, திருச்சியாக சுருங்கி விட்டது.

சூரியவம்ச குலதெய்வம்:

பிரம்மா சத்தியலோகத்தில் ரங்கநாதப்பெருமாளை வழிபட்டு வந்தார். அப்போது பூலோகத்தை ஆண்ட சூரியகுல மன்னனான இக்ஷ்வாகு பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். மன்னனின் தவக்கனல் சத்திய லோகத்தைச் சென்றடைந்தது. நேரில் தோன்றிய பிரம்மா, வேண்டும் வரம் தருவதாக அருள்புரிந்தார். பிரம்மதேவா! உம்மால் நாள்தோறும் பூஜிக்கப்படும் பெரிய பெருமாள் சிலையை எனக்குத் தரவேண்டும்! என்று வேண்டினான். பிரம்மாவும் பள்ளி கொண்ட நிலையில் இருந்த அந்தப்பெருமாளை அவனிடம் கொடுத்தார். இக்ஷ்வாகுவின் வம்சாவழியில் வந்தவரே ராமபிரான். அவரது காலத்தில், அவர் விபீஷணரிடம் தனது பட்டாபிஷேக பரிசாக அந்தச் சிலையைக் கொடுத்தார். அதை விபீஷணர் இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, காவிரிக்கரையில் கீழே வைத்து விட்டு நதியில் நீராடினார். திரும்ப வந்து எடுத்தபோது சிலையைத் தூக்க முடியவில்லை. அந்த இடமே ஸ்ரீரங்கம் ஆனது. பிற்காலத்தில், அவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை:

விபீஷணர் ராமபிரானின் பட்டாபிஷேக நிகழ்ச்சியில், சூரியவம்சத்து குலதெய்வமான ரங்கநாதப்பெருமாளை பரிசாகப் பெற்றார். பிராண வாக்ருதி என்னும் விமானத்தில் பெருமாளைத் தாங்கிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து வந்தார். காவிரிநதிக்கரையில் கோயில் கொள்ள விரும்பிய பெருமாள், அவருக்கு உடல்சோர்வை ஏற்படுத்தினார். அரங்கம் என்னும் அம்மேட்டுப்பகுதியில் பெருமாளை வைத்துவிட்டு நீராடிய வீபிஷணன், மீண்டும் அவ்விக்ரஹத்தை அவ்விடத்தில் இருந்து எடுக்கமுடியவில்லை. தகவல் அறிந்த சோழமன்னன் தர்மவர்மன் அங்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டான். காலப்போக்கில் அக்கோயில் சிதிலமடைந்து காவிரி ஆற்றில் புதைந்தது. தர்மவர்மனின் மரபில்வந்த கிள்ளிவளவன் என்னும் மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கே, ஒரு மரநிழலில் இளைப்பாறினான். அம்மரத்தில் வசித்த கிளி மன்னனிடம், மன்னா! பாற்கடல் வாசனான மகாவிஷ்ணு இங்கே ரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கிறார். ஸ்ரீரங்கம் என்னும் திருத்தலம் இது என்று அரங்கநாதரின் வரலாற்றை எடுத்துச் சொன்னது. அப்போது பெருமாளே தன் இருப்பிடத்தை கிள்ளிவளவனுக்கு காட்டியருளினார்.

பாசுரங்கள் கிடைக்க உதவிய பாசுரம்:

ஆழ்வார்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படுகிறது. இவர் ஒருமுறை கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் மீதானஆராவமுதே என்று தொடங்கும் திவ்யபிரபந்த பாசுரத்தை சிலர் பாடக்கேட்டு மெய் மறந்தார். அதில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்னும் அடி வந்தது. அவர்களிடம் அன்பர்களே! நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்துபாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே? என்று கேட்டார். ஆனால், அவர்களுக்கு இதற்கான பதில் தெரியவில்லை. எனவே நாதமுனிகள் ஆழ்வார்திருநகரி  சென்று இந்த கேள்வியை மதுரகவியாழ்வாரின் வம்சாவழியினரிடம் கேட்டார். அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவியாழ்வாரின் பாசுரங்களை 12 ஆயிரம் முறை யார் ஒருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், என்றனர். நாதமுனிகளும் 12ஆயிரம் முறை மதுரகவி யாழ்வாரின் பாசுரத்தைப் படித்தார். ஆழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய அனைத்துப் பாசுரங்களையும் பெற்றார். அந்தப் பாடல்களுக்கு தமிழ்ப்பண் அமைப்பில் இசையமைத்து திவ்ய பிரபந்தம் என்று பெயரிட்டார். தனது சீடர்களான உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், மேலையகத்தாழ்வான் மூலம் அந்தப் பாசுரங்களை திவ்யதேசங்கள் எங்கும் பாடும்படிச் செய்தார். இவ்வாறு நமக்கு 4000 பாசுரங்கள் கிடைத்தன.

பகல் பத்து ராப்பத்து:

தமிழகத்தில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அரையர் சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் பத்து என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொள்வர். ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி தவிர ஆடி,தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு. கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டைநரசிம்மர் கோயிலில், அபிநயம் இல்லாமல் தாளத்தோடு மட்டும்அரையர் சேவை நடந்து வருகிறது.

Source: http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=2740

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s