ஸ்ரீ ராம நவமி

மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்துவது வேதங்கள். அதன்படி வாழ்வது சாத்தியம் அல்ல என்று மக்கள் நினைத்த தருணத்தில் மக்களுள் ஒருவராக இருந்து வேதங்களின் சாரத்தை, தினசரி வாழ்க்கையில் வாழ்ந்து, உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்தது. ராமர் அவதரித்த நாள் ராம நவமியாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் ராமனின் பெருமைகளை அறிந்து கொள்வோம்.

தர்மத்தை காக்க அவதரித்த ராமர்

தர்மம் அழிந்து, அதர்மம் தலை எடுக்கும் போதெல்லாம் மண்ணுலகையும், மக்களையும் காக்க மகாவிஷ்ணு அவதாரங்கள் எடுத்தார் என்கின்றன புராணங்கள். இதில் ஏழாவதாக அவதரித்த ராம அவதாரம் மனித அவதாரமாக இருந்ததால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ஹ, வாமன, மற்றும் பரசுராம அவதாரம் முதல் ஆறு அவதாரங்கள். ஆகியவை. இந்த ராமாவதாரத்தில் மனிதர்கள் படும் அனைத்து இன்னல்களையும் இறைவனும் அனுபவித்து அதன் மூலம் மக்களுக்கு பாடம் புகட்டியிருக்கிறார்.

அவதார சிறப்புகள்

ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக உதித்த ராமன், சீதாதேவியை மணந்து ஏகபத்தினி விரதனாக இருந்தார். தந்தை செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றினார். அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்து மக்களை காத்தார். இவரது சிறப்புகளை விளக்கும் ராமாயணம் நமது இதிகாசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இதில் ராமாவதாரத்தைப் பற்றியும், அவர் செய்த சாதனைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

ராம நவமி கொண்டாட்டம்

அவதார நாயகன் உதித்த நாளை, ஸ்ரீராம நவமி விழாவாக ஆண்டு தோறும் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்;  பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.

நீர்மோர், பானகம்

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர் மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

ராம நாமத்தின் மகிமை

சாஸ்திரம் படித்திருக்காவிட்டாலும் வேதங்கள் தெரியாமல் போனாலும், மந்திர உபதேசங்கள் அறிந்திருக்காவிட்டாலும் இந்த ‘ராம’ நாமத்தைப் பாராயணம் செய்தாலே போதும். அவனுக்கு சகல சௌபாக்கியங்களும், சௌகரியங்களும் அடைந்து சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்திடுவான் என்பது உண்மை. அந்த ராம நாமம் நமக்கு சுபிட்சம் தரும்  என்பது வேதவாக்கு.

இதனை ராக மாலிகையாக ‘நாரணன்’ எழுதியது.

“இராமனை நினைவு கொள்வாய் மனமே-அந்த

கோசலை மகனை துதி செய்வாய் தினமே!

சித்திரை நவமியில் புனர்பூசத்தில் பிறந்து

இத்தரை மாந்தர் வாழ்வில் உய்யவே அவதரித்த அந்த”

இவ்வளவு எளிமையான, இனிமையான லகுவான ராமமந்திரம் வாழ்வைக் கடைத்தேற்ற இருக்கையில் நாம் அதை அனுசரித்துக் கடைப்பிடித்து வாழ்வில் வெற்றியடைவோமாக.

ஸ்ரீ ராம நாமத்தின் மகிமை பற்றி கூற வேண்டும் என்றால் பல ஆயிரம் கதைகள் கூறலாம். ஆனாலும், ஒரு சிறு கதையை மட்டும் உங்களுக்கு கூறுகிறேன்.

ஒரு ஊரிலே ஒரு வயதான ஏழை பிரம்மச்சாரி இருந்தான். அவனுக்கு கண்கள் குருடு. ஆனால் ராம பக்தன். அவனுடைய பக்தியினைக் கண்டு இரங்கி ராமபிரான் காட்சியளித்தான். ‘ஒரே கேள்வியைக் கேட்டு வரம் பெற்றுக் கொள். கண்டிப்பாக மறு கேள்வி கேட்கக் கூடாது என்றான்.’ ராமபிரான். கிழவனும் சரியென்று ஒப்புக்கொண்டு ஒரே ஒரு வரம் கேட்டான்.

‘ஏழு அடுக்கு மாளிகையில் தங்கக் கரண்டியால் என் பேரன் பாலை குடிப்பதை எனது கண்களால் பார்க்க வேண்டும்.’ என்று ஒரே ஒரு வரம் கேட்டான். வரம் கொடுத்து ராமபிரான் சென்று விட்டான்.

வீடு இல்லாதவனுக்கு வந்து விட்டது மாளிகை. பேரன் பிறக்க வேண்டுமானால், அவன் கல்யாணம் முடிக்க வேண்டும் அல்லவா? கிழவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? வர பலத்தால் இளமையும் வந்துவிட்டது. பால் குடிக்கும் கரண்டியே தங்கமானால் எவ்வளவு செல்வம் வரவேண்டும்? அவ்வளவு செல்வமும் வந்துவிட்டது. பேரனைப் பார்ப்பதற்குக் கண்கள் வேண்டுமல்லாவா?

கண்களும் வந்து விட்டன.

கிழவனுக்கு ராம நாம ஜெபத்தின் மகிமையால் தெளிவான ஒரே கேள்வி கேட்டதின் பயனால், மாளிகை, இளமை, செல்வம், கண்கள், இல்லற வாழ்வு இத்தனையும் பெற்றான்.

பக்தி நெறியிலீடுபட்டால் தெளிவான கேள்விகள் உதயமாகி, அறிவு தெளிவடையும்.

பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராம நாமம். ஸ்ரீராம நவமியன்று ராம நாமம் சொல்வதும், ராம நாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. ஞானத்தைத் தூண்டுகிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ராம நாமத்தை சொல்லி ராம நவமி கொண்டாடுவோம். தசரத மைந்தனின் அருள் பெறுவோம்

Source

http://tamil.oneindia.com/art-culture/essays/2011/ramanavami-chithirai-ramayana-temple-aid0091.html

http://anjaneyar.org/ramanama_mahimai.html

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s