Archive | May 2016

எதிர்ப்பாளரின் தன்மை மாற்றம்

challengers transformation picture 1

நீதி – அஹிம்சை / அன்பு 

உபநீதி  – பொறுமை, மன்னித்தல்

ஒரு குழுவாகச் சில மனிதர்கள் மகான் ஏக்நாத் (மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு மகான்) ஆசிரமத்திற்கு அருகில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிலருக்கு இது ஒரு பொழுதுபோக்கு.

ஒரு நாள், ஒருவனுக்குச் சீட்டு சாதகமாக அமையாததால், தொடர்ச்சியாக தோல்வியுற்றான்; பொறுமையை இழந்து கோபமுற்றான். தன் துரதிர்ஷ்டத்தை விட, மற்றவர்கள் வெற்றிகரமாகத் திகழ்வது தான் அவனுக்குப் பொறாமையாக இருந்தது. அவர்கள் எது பேசினாலும், எதிர்வாதம் செய்து, கடைசியில் சண்டையில் வந்து முடிந்தது.

அங்கிருந்த ஒருவர், “கோபப்படுவதால் யாருக்குப் பயன்?” என்று எடுத்துரைத்தார். உடனடியாகத் தோற்றவன், ”என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நான் மகான் ஏக்நாத் என்ற நினைப்போ, கோபப்படாமல் இருப்பதற்கு?” எனக் கேட்டான். வாதம் திசை மாறியது. கூட்டத்திலிருந்து வேறொருவன் தலையிட்டு, “ஏக்நாத் கோபப்படாமல் இருப்பதற்குப் பெரிய மகானா என்ன? அவரும் சாதாரண மனிதர் தான். கோபமே வராத ஒரு மனிதரை எனக்கு காண்பிக்கவும்” என சவால் விட்டான். மற்றவர்களும் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டனர்.

தோற்றவன், “ஒரு வேளை ஏக்நாத் மகானிற்கு உணர்ச்சிகள் மற்றும் சுய மரியாதை இல்லை போலும்; சுய மரியாதை என்ற குணம் இருந்தால், தன்னை அவமானப்படுத்தும் போது மெளனமாக இருக்க வாய்ப்பே இல்லை” எனக் கூறினான். ஏக்நாத்தை ஆதரித்து ஒரு மனிதர், “மகான் ஏக்நாத்திற்கு ஒரு பொழுதும் கோபம் வராது. எனக்கு அவரை நன்றாகத் தெரியும். நான் அவரைப் பார்த்திருக்கிறேன்” என்றார். முதலில் பேசிய மனிதன் தன் வாதமே சரியென்றான். வாக்குவாதம் முடிவடையாமல் சவாலில் வந்து நின்றது.

ஒரு எதிர்ப்பாளர், தான் ஏக்நாத்தைக் கோபப்பட வைப்பதாகப் பந்தயம் கட்டினான். உடனே முதலில் பேசியவர்,  “தலைகீழாக நின்றாலும், அது நடக்காது” என்றுரைத்தார். சவால் விட்டவன் பந்தயமாக எடுத்துக் கொண்டு, தான் வென்றால் நூறு ரூபாய் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டான். எல்லோரும் சம்மதித்தனர்.

மறு நாள் சவால் விட்ட மனிதன், மகான் வீட்டிற்கு அருகில் சென்று தான் போட்ட திட்டப்படி நின்று கொண்டான். மற்றவர்களும் சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தனர்.

காலை சூரியோதய சமயத்தில் வழக்கம் போல மகான் வெளியே வந்து, விட்டல பஜனைகளைப் பாடிக்கொண்டு கோதாவரி நதிக்கு நீராடச் சென்றார்; தன் பிரார்த்தனையை  முடித்துக் கொண்டு,  வீடு திரும்பிக் கொண்டிருந்தார். எதிர்ப்பாளர் வாயில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு,  ஏக்நாத் அருகில் வந்ததும், அவர் முகத்தில் வெற்றிலை சாற்றைத் துப்பினான். ஒரு நிமிடம் திடுக்கிட்ட ஏக்நாத் யார் என்று திரும்பி பார்த்தார். வார்த்தை ஒன்றுமே பேசாமல், மறுபடியும் கோதாவரி நதிக்குச் சென்று நீராடித் திரும்பினார். மறுபடியும் எதிர்ப்பாளர் வெற்றிலைச் சாற்றைத் துப்பினான். “ஜெய் பாண்டுரங்கா, ஜெய் விட்டலா” என முணுமுணுத்துக் கொண்டு, மறுபடியும் ஏக்நாத் நதிக்குச் சென்று நீராடி வந்தார்.

இது போல மூன்று முறை நடந்தது. மற்றவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஒருவிதமான கோபமும் இல்லாமல், மெளனமாக ஏக்நாத்  நதியில் குளித்து வந்தார்.

அவர் மீண்டும் வந்தவுடன் எல்லோரும் மகான் ஏக்நாத்தின் காலடியில் வந்து பணிந்தனர். தன் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டனர்; தவறு செய்தவன் கண்ணீருடன் தான் முட்டாள்தனமாக செய்த தவறுக்குப் பல முறை மன்னிப்புக் கேட்டான்.

மகான் ஏக்நாத் அம்மனிதரை எழுப்பி, அன்புடன் அவரைத் தழுவிக் கொண்டார். மகான் எதிர்ப்பாளரிடம், “நீ என் மகன் போன்றவன். ஏன் அழுகிறாய்? நீ ஒரு தவறும் செய்யவில்லை. ஒரு விதத்தில் நீ புண்ணியவான்,  ஆதலால், நான் தான் உன்னை வணங்க வேண்டும். இன்று ஏகாதசி; நான் பலமுறை நீராடி, பிரார்த்தனை செய்ததற்குக் காரணமே நீ தான். ஆதலால் நன்றி கூற வேண்டியது என் கடமை” எனக் கூறி கை கூப்பி, விசுவாசத்துடன் எதிர்ப்பாளரை வணங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு,  சீட்டாட்டக் குழு  சீட்டாட்டத்தை விட்டு விட்டு, ஒரு விளக்கு ஏற்றி, நாமங்களைப் பாட ஆரம்பித்தனர். மகானிடமிருந்து பஜனைகள் கற்றுக் கொண்டு, அவரது சிஷ்யர்கள் ஆனார்கள்.

நீதி

மன்னிப்பது ஒரு சிறந்த குணம். இந்த நற்குணத்தை மேம்படுத்தி வந்தால், நாம் நம்முள் அன்பு,  அமைதி என்ற மாற்றத்தைக் கொண்டு வர முடியும். மற்றவர்களை மாற்றுவதற்கும் உதவும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

இரு முயல்கள்

நீதி – நன் நடத்தை

உபநீதி – அறிவை பகிர்ந்து கொள்ளுதல் / உதவி புரிதல் 

Two rabbits 1

மிண்டு, விங்கி என்று இரு முயல்கள் நண்பர்களாக இருந்தன. இருவரும் ஒன்றாக தினமும் உலாவச் சென்றன.  ஒரு நாள், விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, வழியில் இரண்டு கேரட்டுகளைப் பார்த்தன. அதிக இலைகள் நிறைந்த ஒரு பெரிய கேரட்டும், சிறியது ஒன்றும் இருந்தது.

மிண்டு ஊக்கமுடன் பெரிய கேரட்டை நோக்கிக் குதித்துச் சென்றது.

“நான் இந்தக் கேரட்டை எடுத்துக் கொள்கிறேன்” என்று ஆர்வத்துடன் தோண்ட ஆரம்பித்தது.Two rabbits 2

விங்கி மற்றொரு கேரட்டை எடுத்துக் கொண்டது. நினைத்ததை விடப் பெரிதாக இருந்ததை மிண்டு ஆச்சரியத்துடன் பார்த்து, “இது எப்படி சாத்தியமாகும்?” என வினவியது. அதற்கு விங்கி, “பெரிய இலைகள் என்பதனால் கேரட் பெரிதாக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை” என்று பதிலளித்தது. பின்னர், இருவரும் நடக்க தொடங்கின.

சில நிமிடங்களில்,  முயல்கள் மீண்டும் இரண்டு கேரட்டுகளைப் பார்த்தன. கேரட்டின் இலைகள் வெவ்வேறு பரிமாணங்களில் இருந்தன. இந்த முறை, மிண்டு விங்கியை எடுக்கச் சொன்னது. விங்கி கேரட்டின் அருகே சென்று, முகர்ந்து பார்த்து சோதித்தது. பின்னர், Two rabbits 3பெரிய இலைகள் கொண்ட கேரட்டை எடுத்துக் கொண்டது. மிண்டு எடுத்துக் கொண்ட மற்றொரு கேரட் சிறியதாக இருந்தது.

மிண்டுவுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.

பின்னர், மிண்டு விங்கியிடம், “சிறிய இலைகள் கொண்ட கேரட் அளவில் பெரியதாக இருக்கும் என்று நீ தானே சொன்னாய்?” எனக் கேட்டது.

அதற்கு விங்கி, “இலைகளைப் பார்த்து தீர்மானிக்கக் கூடாது என்று தான் சொன்னேன். மேலும், தேர்ந்தெடுப்பதற்கு முன், தீவிரமாக யோசிக்க வேண்டும்” என்றும் கூறியது.

மூன்றாவது முறையாக, மீண்டும் கேரட்டை இரு முயல்களும் பார்த்தன. மறுபடியும் இலைகள் வேறுபட்டிருந்தன; மிண்டுTwo rabbits 4 மிகுந்த குழப்பத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றது. விங்கி மிண்டுவை தேர்ந்தெடுக்கச் சொன்னது. மிண்டு கேரட் எடுப்பது போல் முகர்ந்து பார்த்துப் பாசாங்கு செய்தது. தான் தன் நண்பனைப் போல அறிவாளி இல்லை என்று புரிந்து கொண்டு, குழப்பமான முகத்துடன் விங்கியை நோக்கியது. இன்முகத்துடன் கேரட் அருகே சென்று அதை ஆராய்ந்த பின் ஒரு கேரட்டை விங்கி எடுத்தது. பின்னர், மிண்டு தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு அடுத்த கேரட்டை எடுக்கச் சென்றது. ஆனால் விங்கி மிண்டுவிடம் தான் எடுத்த கேரட்டைக் கொடுத்தது. அதற்கு மிண்டு,  “நீ தான் முதலில் தேர்ந்தெடுத்ததால் அந்த கேரட் தான் பெரியதாக இருக்கும். நீ என்னை விட புத்திசாலி” என்றது.

அறிவைப் பகிர்ந்து கொண்டு, ஒன்றாக வாழும் நுட்பம் இல்லையெனில் ஒருவனுக்கு அறிவு இருந்து என்ன பயன்? மிண்டு கடைசியாக விங்கி செய்தது தான் சரி என்ற முடிவுக்கு வந்தது.

நீதி

கற்றது அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். உலகத்தில் மாறுதல்களை ஏற்படுத்த நாம் முதலில் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு, அனைவருடனும் நமக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டு, மெய்யறிவுடன் செயல்பட வேண்டும்.

“ஒருவன் அறிவில் உணர்ந்த எதையும்,

உலகோர் அனைவரும் ஒத்தனு பவிக்க

பரவச் செய்து பயன்விளை விக்கும்

அற்புத அறிவின் சிற்பமே மனிதன்

வேதாத்திரி மகரிஷி அவர்கள்

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

காக்கையும் மயிலும்

நீதி – உண்மை

உபநீதி – மன நிறைவு

the crow and the peacock1

ஒரு காட்டில், காக்கை ஒன்று மன நிறைவோடு, மகிழ்ச்சியாக இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு, ஒரு அன்னப் பறவையைப் the crow and the peacock2பார்த்தது. மனதில் ஒரு எண்ணம் தோன்றிற்று. “நான் கருப்பாக இருக்கிறேன். ஆனால் அன்னப் பறவையோ வெண்மையான நிறம்; எவ்வளவு அழகு; உலகத்தில் அதிக சந்தோஷத்துடன் வாழும் பறவையாக இருக்கும்”.

இந்த எண்ணங்களை அன்னப் பறவையுடன் பகிர்ந்து கொண்டது. உடனடியாக வந்த பதில், “இரு வர்ணங்கள் கொண்ட ஒரு கிளியைப் பார்ப்பதற்கு முன், நானும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன்”. கடவுளின் படைப்புகளில் கிளி தான் இன்பமாக இருக்கும் என்று கூறியது.

காக்கை கிளியைப் பார்க்கச் சென்றது. கிளியிடமிருந்து வந்த பதில்,  “மிருகக்காட்சி the crow and the peacock3சாலையில் மயிலைப் பார்த்த பிறகு என் அபிப்பிராயம் மாறிவிட்டது”. பல வண்ணங்கள் நிறைந்த அழகான மயில் தான் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று கூறியது.

அடுத்த நாள், காக்கை மிருகக்காட்சி சாலைக்கு சென்றது. பல ஆயிரக்கணக்கான மக்கள் மயிலைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, காகை மயிலிடம் சென்று பேச்சு கொடுத்தது. “உன்னைப் பார்க்க தினமும் பல மக்கள் வருகின்றார்கள். என்னைப் பார்த்தாலே எல்லோரும் துரத்தி விடுகிறார்கள்.” என்று கூறியது.

அதற்கு மயில், “நான் மிக அழகாக இருக்கிறேன் என்று நினைத்துப்  பெருமைப்பட்டேன். ஆனால் என்னை மிருகக்காட்சிthe crow and the peacock5 சாலையில் வைத்திருக்கிறார்கள். நிம்மதியாக இருக்க முடியவில்லை. காகையை மட்டும் கூண்டில் அடைப்பதில்லை. காகையாக இருந்தால் நிம்மதியாக வாழலாமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.” என்று பதிலளித்தது.

இந்தக் கதை நம் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கின்றது. அன்னப் பறவை சந்தோஷமாக இருக்கிறது என்பது காகையின் அபிப்ராயம்; கிளி தான் சந்தோஷமாக இருக்கிறது என்பது அன்னப் பறவையின் அபிப்ராயம்; மயில் தான் சந்தோஷமாக இருக்கிறது என்பது கிளியின் அபிப்ராயம்; கடைசியில், காகை தான் சந்தோஷமாக இருக்கிறது என்பது மயிலின் அபிப்ராயம்.

நீதி

மற்றவர்களுடன் ஒப்பீடு செய்தால் மன நிம்மதியை இழப்போம். எல்லோரின் மகிழ்ச்சியையும் நாம் கொண்டாடினால், நமக்கும் நன்மை வருமாறு நல்லதே நடக்கும். கடவுள் நமக்குக் கொடுத்த அனைத்தையும் நினைத்து இன்பமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சி அடங்கியுள்ளது. சுகமோ, துக்கமோ நம் கையில் தான் இருக்கின்றது.

the crow and the peacock6

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

விலை உயர்ந்த வாள்

the precious sword picture 1

நீதி – அஹிம்சை / பொறுமை 

உபநீதி – சமாதானம், அமைதி 

ஒரு காலத்தில், விலை உயர்ந்த வாள்  ஒன்று இருந்தது.  இந்த வாள் ஒரு அரசுனுடைய உரிமைப் பொருளாகக் கருதப்பட்டது.  பல சமயங்களில், அரசன் கேளிக்கைகளிலும்,  விருந்துகளிலுமே தன் சமயத்தை வீணாக்கினார். ஒரு முறை,  அடுத்த நாட்டு அரசருடன் ஒரு சிறிய தகராறு நடந்து, கடைசியில் போர் புரியும் வரை வந்து விட்டது.

விலை உயர்ந்த வாள் உற்சாகத்துடன் போரிட எண்ணியது. இதுவே முதல் முறையாக உபயோகப்படப் போகிறது என்பதனால் தன் மதிப்பையும், வீரத்தையும் சிறந்த முறையில் காண்பித்து, ராஜ்ஜியத்தில் நல்ல பெயர் எடுக்க விரும்பியது. போர் நடக்கப் போகும் இடத்துக்குச் சென்றவுடன், தான் பல போர்களில் வெற்றி அடைந்து விட்டதாக எண்ணியது. ஆனால் அங்கு சென்ற போது, முதல் போர் முடிந்து, அங்கு நடந்த சம்பவங்களைப் பார்த்தது; தான் எண்ணியவாறு அங்கு எதுவுமே நடக்கவில்லை; பளபளக்கும் ஆயுதங்களையோ, வீரர்களையோ அது காணவில்லை. அங்கு இருந்தவை எல்லாம் முறிந்த ஆயுதங்களும், பசியாலும், தாகத்தாலும் தவிக்கும் வீரர்களும் மட்டுமே. உண்ண உணவு ஒன்றும் இருக்கவில்லை. எல்லா உணவும் அசுத்தமாகவும், துர்நாற்றத்துடனும் இருந்தன. மக்களில் சிலர் இறந்தும், சிலர் ரத்தம் வழியும் காயங்களுடனும் பூமியில் கிடந்தனர்.

அந்தச் சமயத்தில், வாளுக்கு போர் மற்றும் சண்டை மேல் ஒரு வெறுப்பு உண்டாயிற்று. அதற்குப் பதிலாக சமாதானமாகப் போட்டிகளிலும், பந்தயங்களிலும் பங்கு கொள்ள விரும்பியது. அன்று இரவு கடைசிக் கட்டப் போர் தொடங்குவதற்குமுன், போரை நிறுத்த ஒரு வழி தேடியது. சிறிது நேரத்திற்குப் பின், வாள் அதிர்ந்து,  ஊசலாடத் தொடங்கியது. முதலில் சிறிதாக இருந்த சத்தம், பிறகு மிகவும் அதிகமாகி,  கோபப்படும் அளவிற்கு ஆனது. மற்ற போர் வீரர்களின் ஆயுதங்களும் வாட்களும் அரசரின் வாளிடம் வந்து, சத்தம் செய்யும் காரணத்தை அறிய விரைந்தன. அதற்கு பதிலாக அரசரின் வாள் “நாளைப் போர் புரிவதில் எனக்கு இஷ்டம் இல்லை. எனக்குச் சண்டை பிடிக்கவில்லை” என்றது. மற்ற வாட்கள், ”எங்கள் யாருக்குமே போர் பிடிக்கவில்லை, ஆனால் நாம் என்ன செய்ய முடியும்?”என்றன. உடனே அரசரின் வாள் தன்னைப் போல மற்ற வாட்களையும் அதிர்ந்து ஊசலாடும்படிக் கேட்டுக் கொண்டது. சத்தம் அதிகமானால் யாராலும் தூங்க முடியாது என்று கூறியது. மற்ற வாட்களும் உடனே அதிர்ந்து ஊசலாடத் தொடங்கின. இதைக் கேட்ட விரோதிகளின் ஆயுதங்களும் சத்தம் போடத் தொடங்கின. காதே செவிடாகும் போல இருந்ததனால் ஒருவராலும் தூங்க முடியவில்லை.

மறு நாள் போர் தொடங்க வேண்டிய சமயத்தில், எல்லோரும் அயர்ந்து உறங்கினர். மாலை தூங்கி எழுந்தவுடன், மறு நாள் போரை ஆரம்பிக்க நினைத்தனர். ஆனால் வாட்கள் அன்று இரவும் ஓசைப் படுத்தி சமாதான கீதத்தைத் தொடங்கின. இவ்வாறு ஏழு நாட்கள் சென்றபின்,  இரு அரசர்களுமே, போரை நிறுத்தி,  சமாதானம் செய்ய விரும்பினர்.

அனைவரும் சண்டை இல்லாமல், சமாதானமாக, சந்தோஷத்துடன் தம் நாட்டுக்குத் திரும்பினர். அடிக்கடி சந்தித்து, தன் அனுபவங்களைக் கூறி மகிழ்ந்தனர்; இரு நாடுகளையும் சேர்த்து வைத்த காரணம் சண்டையிட காரணமாக இருந்ததைக் காட்டிலும் மிகச் சிறப்பாக இருப்பதை மக்கள் உணர்ந்தனர்.

நீதி

மகிழ்ச்சியும் சமாதானமுமே யாவரும் விரும்புவது. பிரச்சனைகளைத் தீர்க்கப் போர் சரியாகாது. அஹிம்சையே சமாதானம் தரும் சிறந்த சாதனமாகும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

மந்திரத்தில் மாங்காய் வராது

மந்திரத்தால் மாங்காய் வராது picture

நீதி – முயற்சி

உபநீதி – பொறுமை

ஆஞ்சநேய பக்தன் ஒருவன் மாட்டு வண்டியில் தானிய மூட்டைகளை ஏற்றிச் சென்றான். மழை காலம் என்பதால் வழியெங்கும் சேறாக இருந்தது. மாடுகளால் வண்டியை இழுக்க முடியவில்லை. ஓரிடத்தில் சேற்றில் சக்கரம் சிக்கிக் கொண்டதால், வண்டி குடை சாய்ந்து, நெல் மூட்டைகள் சரிந்தன.

வண்டிக்காரன் வண்டியை நகர்த்த முயற்சி செய்யாமல், ”ஆஞ்சநேயா! இங்கிருந்து வண்டி நகர ஏதாவது வழி செய்,” என்று பிரார்த்தித்தான். ஆஞ்சநேயர் பெயரைச் சொல்லி பல முறை கூவினான். ஆனாலும், வண்டி நகர்ந்த பாடில்லை. பொறுமை இழந்த அவன், தன்னைக் காப்பாற்ற வராத ஆஞ்சநேயரைத் திட்டத் தொடங்கினான். அப்போது அவன் முன் தோன்றிய ஆஞ்சநேயர், ”சக்கரத்தை சரிபடுத்தும் பலம் உனக்கு இருந்தும், அதை சரி செய்யாமல் என்னை எதிர்பார்த்து. நிற்கிறாயே, மந்திரத்தால் மாங்காய் வந்திடுமா? முயற்சியில் முழு மூச்சாக ஈடுபடு, எல்லாம் நலமாக அமையும்,” என்று அறியுரை சொல்லி மறைந்தார்.

பக்தனும் தவறை உணர்ந்தான். தோள்களால் வண்டியைத் தாங்கி இழுத்தான். சிறிது நேரத்தில் சக்கரம் சேற்றிலிருந்து மெல்ல நகர்ந்து வெளியே வந்தது.

முயற்சி செய்தால் தான் கடவுள் அருள் செய்வார் என்பதை உணர்ந்த வண்டிக்காரன், ஆஞ்சநேயரை வழிபட்டு புறப்பட்டான்.

நீதி

துன்பங்களுடன் போராடப் போரடத்தான் மனவலிமை உறுதி பெறும். இடரும் இன்னலும் தான் நம்முடைய திறனைச் சோதித்துக் கூர்மைபடுத்தும். தெளிவான இலக்குடனும், கடின உழைப்புடனும், தளராத தன்னம்பிக்கையுடன் விடாது முயன்றால், முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்து விஸ்வரூப வெற்றியுடன் திகழலாம்.