Archive | January 2017

மனதா, குப்பை வண்டியா

 

நீதி: நன்னம்பிக்கை

உபநீதி: மனப்பான்மை  

law-of-garbage-truck-picture-1ஒரு நாள், நான் விமான நிலையத்திற்கு டாக்சி’ ஒன்றில் சென்று கொண்டிருந்தேன். போகும் வழியில், சற்றும் எதிர்பாராத விதத்தில் ஒரு கருப்பு கார் எங்கள் வண்டிக்கும், முன்னால் இருந்த வண்டிக்கும் நடுவே இருந்த சிறிய இடைவெளிக்குள் நுழைந்தது. அந்தக் காரின் மேல் மோதுவதைத் தடுக்க என்னுடைய டாக்சி ஓட்டுநர் உடனே ப்ரேக்-க்குகளை அழுத்தினார். அப்போது, அந்த கார் ஓட்டுனர் எங்களைத் திரும்பி பார்த்து உரத்த குரலில் கண்டபடி பேச ஆரம்பித்தார். என்னுடைய ‘டாக்சி’ ஓட்டுனரோ அதற்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அவரின் நிதானம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “அந்தக் கார் ஓட்டுனர் கண்டபடிப் பேசியும் நீங்கள் அமைதியாக, நிதானமாக இருந்தீர்களே, அது எப்படி?” என்று அவரிடம் கேட்டேன். அப்போது தான் அந்த “டாக்சி”  ஓட்டுநர் எனக்குக் குப்பை வண்டியின் விதியை அறிமுகப்படுத்தினார்.

Bin Family.indd“மனிதர்களைக் குப்பை வண்டிகளோடு ஒப்பிடலாம். மனதில் கோபம், வெறுப்பு, கவலை போன்ற உணர்வுகளோடு திரிந்து கொண்டிருப்பார்கள். குப்பைக்குச் சமமான தீய உணர்வுகள் சேரச் சேர, அதை வேறொரு இடத்தில இறக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அப்போது மற்றவர்கள் மீது தங்களது குப்பையை இறக்கி கோபம், வெறுப்பு போன்ற தீய உணர்வுகளைக் காட்டுவார்கள். அப்போது, அதை உள்வாங்கிக்கொள்ளாமல், நாம் நம் பாதையில் நிதானமாகச் சென்றோமானால், மன நிம்மதியுடன் வாழலாம்” என்றார் அவர்.

நீதி:

ஒவ்வொருவரும் எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் விவேகத்துடன் பதில் அளிக்க வேண்டுமே தவிர எதிர்த்துத் தாக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. ஒவ்வொருவரும் அப்படித் தகாத முறையில் நடந்து கொண்டால், எவருக்கும் அது நன்மை பயக்கப் போவதில்லை. நம்மைச் சுற்றி நடப்பதை நம்மால் மாற்ற முடியாத நிலையில் நாம் நம்மை மாற்றிக்கொள்வதே மேல். இதுவே மன அமைதிக்கான இரகசியம்.

மொழி பெயர்ப்பு:

சுப்ரியா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

யார் சிறந்த வள்ளல்

நீதி  நன்னடத்தை

உபநீதி  தாராள மனப்பான்மை

who-is-more-generous

பல யுகங்களுக்கு முன், பகவான் கிருஷ்ணரும், அர்ஜுனனும் ஒரு கிராமத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது அர்ஜுனன் கிருஷ்ணரிடம், “ஏன் கர்ணனைக் கொடை வள்ளல் எனக் போற்றுகிறோம்? என்னையும் அவ்வாறு சொல்லலாமே” என்று கேள்விக்கு மேல் கேள்வியுடன் தொந்தரவு செய்து கொண்டிருந்தான். உடனடியாக அர்ஜுனனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கிருஷ்ணர் செயற்பட்டார். அவர்கள் நடந்து கொண்டிருக்கும் பாதையில் இருந்த மலைகள் பொன்னாக மாறின. கிருஷ்ணர், “அர்ஜுனா, இந்த இரண்டு பொன்னாலான மலைகளை கிராமவாசிகளுக்குப் பகிர்ந்து கொடுக்கவும். ஒன்றுமே மீறாமல் எல்லாவற்றையும் கொடுத்து விடவும்” என்றார். உடனே அர்ஜுனன் கிராமத்திற்கு சென்று, எல்லா கிராமவாசிகளையும் அந்த பொன்னாலான மலைகள் அருகில் வரும்படி வெளிப்படையாகத் தெரியப்படுத்தினான். அர்ஜுனனைக் கிராமவாசிகள் பாராட்டியதை நினைத்து சற்று கர்வத்துடன் தலை நிமிர்ந்து நடந்தான். இரண்டு நாட்கள் முழுவதும், அர்ஜுனன் ஒவ்வொரு கிராமவாசிக்கும் பொன்னைப் பகிர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தார். மலைகளில் இருக்கும் பொன் சற்று கூடக் குறையவில்லை.

சில நிமிடங்களுக்குள், பெரும்பாலான கிராமவாசிகள் மறுபடியும் வரிசையாக நின்றார்கள். சில நேரத்திற்குப் பிறகு, அர்ஜுனன் சோர்வாக இருந்தாலும் கூட, கர்வத்தை விட முடியாமல் கிருஷ்ணரிடம், சற்று ஒய்வு எடுத்துக் கொண்ட பிறகு, வேலையைத் தொடர்வதாகச் சொன்னான். இப்போது கிருஷ்ணர் கர்ணனை அழைத்து, “இந்தப் பொன்னாலான மலைகளிலிருந்து ஒன்றுவிடாமல் எல்லோருக்கும் வாரி வழங்க வேண்டும்” என்றார். உடனே கர்ணன், இரண்டு கிராமவாசிகளை அழைத்து, “இந்த இரண்டு மலைகள் தெரிகின்றனவா? இவை அனைத்தும் உங்களுடைய சொத்து; தயவு செய்து, என்ன வேண்டுமோ, அப்படிச் செய்து கொள்ளவும்” என்று கூறியவாறு சென்று விட்டார்.

அர்ஜுனன் வாயடைத்துப் போய் உட்கார்ந்து கொண்டார். தனக்கு ஏன் இந்த எண்ணம் தோன்றவில்லை? கிருஷ்ணர் புன்சிரிப்புடன், “அர்ஜுனா, உன்னை அறியாமல், அந்தப் பொன் மேல் உனக்கு ஈர்ப்பு இருந்தது. அதனால், உன் மனதிற்கு உகந்தது எனத் தோன்றிய அளவு, ஒவ்வொரு கிராமவாசிக்கும் பகிர்ந்து கொடுத்தாய். உன் கற்பனைக்குத் தகுந்தவாறு அந்த வேலையைச் செய்தாய். ஆனால், கர்ணனுக்கு மனதில் அப்படி ஒன்றுமே இல்லை. அவனைச் சற்றுப் பார்.  மற்றவர்கள் பெருமையாக அவனைப் பற்றி பேச வேண்டும் என்றோ, அவன் சென்ற பின் மக்கள் எப்படி அவனைப் பற்றி பேசுவார்கள் என்ற எண்ணமோ, எதிர்பார்ப்போ அவனுக்கு இல்லை. இது தான் ஞானத்தின் அறிகுறி” என்றார்.

நீதி:

எதிர்ப்பார்ப்பு இல்லாமல் செயற்படுவது தான் உண்மையான அன்பு. மற்றவர்களிடமிருந்து நல்ல பெயர், கவனிப்பு அல்லது பாராட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படக் கூடாது. சரியான காரியமாக இருந்தால், எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் ஒழுங்குமுறையாகச் செய்து, இந்த நற்பண்புடன் எப்பொழுதும் வாழ்க்கையை வாழ்ந்தால் குழப்பமில்லாமல் பேரின்பமாக வாழலாம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

எதிர்ச்செயலா அல்லது ஏற்புத் தன்மையா

நீதி – அமைதி / சரியான மனப்பான்மை

உபநீதி – பொறுமை / நம்பிக்கை /சூழ்நிலையை சமாளிக்கும் திறன் 

reaction-vs-response-picture-1ஒரு கரப்பான் பூச்சி திடீரென பறந்து வந்து அவள் மேல் உட்கார்ந்தது. அதைப் பற்றி வஞ்சகமாகப் பேசியதால் அப்படி செய்ததோ என்று நினைக்கத் தோன்றியது; அவள் பயத்தில் அலறினாள். முகத்தில் பயத்துடன், நடுங்கிக் கொண்டு கரப்பான் பூச்சியை விரட்டுவதற்காகக் குதித்துக் கொண்டே, கைகளால் அதை விரட்ட முயற்சித்தாள். அவளின் எதிர்ச்செயல் தொற்று நோய் போல பரவிற்று. அவளுடன் இருந்த எல்லோரும் சற்று விபரீதமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்கள். இந்த பெண்மணி கரப்பான் பூச்சியை இன்னொரு பெண்மணியிடம் தள்ளி விட்டாள். இப்போது, அந்தப் பெண்மணி இந்த நாடகத்தைத் தொடர்ந்தாள். அங்கு வேலைச் செய்து கொண்டிருந்த பணியாளர் அவர்களைக் காப்பாற்ற முன் வந்தார். பணியாளர் அதைத் தூக்கிப் போடும் போது, அவர் மேல் உட்கார்ந்து விட்டது. இப்போது பணியாளர், தன் இடத்தில் நின்ற படி, கரப்பான் பூச்சியின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தார். சற்று நம்பிக்கை வந்த பிறகு, அதைப் பிடித்துத் தூக்கி எறிந்தார்.

reaction-vs-response-picture-2பானத்தைக் குடித்துக் கொண்டே இந்த வேடிக்கையைப் பார்த்து கொண்டிருந்தேன். சில எண்ணங்கள் தோன்றிய; இந்தப் பெண்களின் அபத்தமான நடவடிக்கையினால் தான் கரப்பான் பூச்சி அப்படி செய்கின்றதோ? அப்படியானால், பணியாளருக்கு அது ஏன் பிரச்சனையாக தெரியவில்லை? குழப்பமே இல்லாமல் கச்சிதமாகச் சூழ்நிலையை எப்படி அவர் சமாளித்தார்? கரப்பான் பூச்சி இதற்கு காரணமில்லை; இந்தச் சூழ்நிலையை சரியாக சமாளிக்க இந்த பெண்மணிகளுக்குத் தான் தெரியவில்லை என்ற தீர்மானத்திற்கு வந்தேன்.

அப்பொழுது தான் ஞானோதயம் வந்தது. என் தந்தையோ, மேலதிகாரியோ கோபித்துக் கொள்வதனால் எனக்குக் குழப்பம் ஏற்படுவதில்லை; அந்தக் கோபத்தை சரியாக சமாளிக்க முடியாததனால் தான், குழப்பம் என்று புரிந்து கொண்டேன்.

சாலைகளில் ஏற்படும் நெருக்கடிகள் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவதை விட, அந்த நெருக்கடிகளைச் சரியாக சமாளிக்காமல் இருப்பது தான் இன்னும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

பிரச்சனையை விட, என் மனப்பான்மை சரியாக இல்லாதது தான் பெரிய பிரச்சனை.

நீதி:

வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும், எதிர்த்துச் செயல்படுவதற்குப் பதிலாக ஏற்புத் தன்மையை வளர்த்துக் கொண்டால், பல பிரச்சனைகளை நன்றாக சமாளிக்கலாம்.

அப்பெண்மணி எதிர் விளைவுகள் வருமாறு நடந்து கொண்டாள். ஆனால், பணியாளர் பொறுமையாக சிந்தித்து, சரியான மனப்பான்மையுடன் செயற்பட்டார்.

சிந்திக்காமல் செயற்பட்டால், பிரச்சனைகள் ஏற்படலாம்; அதனால், ஒழுங்காக ஆராய்ந்து, யோசனைச் செய்து முடிவுகளை எடுக்க வேண்டும். அது தான், வெற்றியாளரின் பாதை.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

நற்குணம் கொண்டவர்

நீதி – அன்பு

உபநீதி – தன்னலமற்ற மனப்பான்மை, இரக்கம்

the-good-samaritan-picture-1சுந்தரம், 76 வயதுள்ள ஒரு மனிதர், மாத சாமான்களை வாங்க ஒரு சிறப்பு அங்காடிக்கு வந்திருந்தார். கமலா என்ற ஒரு 49 வயதுள்ள ஒரு பெண்மணி அதே அங்காடியில் படுக்கை விரிப்புகளை விற்றுக் கொண்டிருந்தாள். இந்த வயதான மனிதர், தன் ஆடைகளை அழுக்குப் படுத்திக் கொண்டு விட்டதை கமலா கவனித்து, சில நிமிடங்களில் அவருக்கு ஒரு புது காற்சட்டையை வாங்கிக் கொடுத்து, அவரைச் சுத்தமாகத் துடைத்து வீட்டிற்குக் கூட அழைத்துச் சென்றாள்.

நடந்த சம்பவத்தின் விளக்கம்:

அந்த அங்காடியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சுந்தரி என்பவள், அவளைச் சுற்றி இருக்கும் அனைத்து மக்களும் நாற்றம் தாங்காமல் அசௌகர்யமான உணர்வுடன் இருப்பதைக் கவனித்தாள். குழப்பத்தில் பார்த்த போது தான், பணம் செலுத்துமிடம் அருகில் நிற்கும் வயதானவரைக் கவனித்தாள். அவரின் காற்சட்டை முழுவதும் அழுக்காக இருந்தது. வயதானவரின் மனைவி என்ன செய்வது என்று தெரியாமல் சக்கர நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டிருந்தார்.

“பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தாலும், ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை” என்று கமலா கூறினாள். அவர் மனைவியும், இந்த பிரச்சனையை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டிருந்த வேளையில், கமலா உதவி புரிய முன் வந்தாள். அங்காடிக்கு எதிரே இருக்கும் ஒரு கடையிலிருந்து புதிய காற்சட்டையை வாங்கி வந்தாள். பிறகு, அங்காடியில் இருக்கும் கழிவறைக்குச் சென்று, விரைவாக ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் துடைக்க துணி எடுத்து வந்தாள். பிறகு, செங்கலால் கட்டப்பட்ட ஒரு சிறிய சுவர் மேல், வயதானவரை உட்காரச் சொல்லி, அவரையும், அவர் அணிந்திருந்த காலணிகளையும் சுத்தமாகத் துடைத்து, புது காற்சட்டையை அணியச் சொன்னாள். இந்த தன்னலமற்ற செயலை செய்து கொண்டிருக்கும் போது, கமலா அந்த வயதானவரிடம், “நீங்கள் கவலைப் பட வேண்டாம். சற்று நேரத்தில் சுத்தமாக ஆகி விடுவீர்கள்” என்றாள். அவளுக்கு எவ்வளவு ஒரு பெரிய மனது. கமலாவிற்கு 1௦ வயதிலிருந்து 25 வயதிற்குள் ஐந்து குழந்தைகள் இருந்தனர். அவர் கணவரும் மரணம் அடைந்திருந்தார்.

எல்லாம் செய்துவிட்டு, தன் வேலைக்கு நடுவில், கமலா இந்த வயதானவர்களை, அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ராஜா என்பவர், கமலாவிடம் அந்த வயதானவர்களை வீட்டிற்குக் கூட்டிச் செல்ல வாடகை வண்டிக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்தார். பிறகு, தினசரி செய்தித்தாளில் இந்த நற்செயல் வர வேண்டும் என்று ஆசைப் பட்டார். “யார் என்று தெரியாத ஒரு மனிதரிடம் கமலா காண்பித்த தன்னலமற்ற அன்பு மிகவும் பாராட்டத்தக்கது.  இது தான் புனிதமான அன்பு” என்றார்.

நீதி:

பழக்கமே இல்லாதவர்களிடம் தன்னலமற்ற அன்பை வெளிப்படுத்துவதற்கு துணிச்சலும், நல்ல மனதும் அவசியம். மற்றவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு, அன்பாகச் செயற்பட்டால், நமக்கும் நல்லது. மற்றவகளின் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

ஒருவனுக்கு மிகவும் அவசியமான காலத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அவன் உதவி செய்த நேரத்தைப் பார்க்கும் போது, அச்சிறிய உதவி இந்த உலகை விடப் பெரியதாகக் கருதப்படும்.

நிஜமாக நடந்த சம்பவம் – சிங்கப்பூர் தினசரி செய்தித்தாள்  Strait Times ல், 15 Oct 2014 வெளிவந்தது. பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com