Archive | February 2017

உழைப்பின் பலன்

நீதி – நன் நடத்தை

உபநீதி – பரிவு / விடா முயற்சி

the-other-side-ofthe-wall-picture-1ஒரு இளம் பெண்மணி, அவள் வீட்டிலுள்ள அழகான பூந்தோட்டத்தை மிக அக்கறையுடன் கவனித்து வந்தாள்; அதை நினைத்து மிகவும் பெருமைப் பட்டாள். அவளுடைய பாட்டி தான், அவளை வளர்த்தாள். மலர்களைக் கவனத்துடன் வளர்க்க, தன் பாட்டி தன்னைப் போலவே பயிற்சி அளித்திருந்தார். ஆதலால், இந்தப் பெண்மணி தன் தோட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதை பேணி காப்பது  தான் எல்லாமே என்ற மனப்பான்மையுடன் செயற்பட்டாள்; மற்றவையெல்லாம் பிறகு தான்.

ஒரு நாள், அவள் செடிகள், மலர்கள் பற்றிய பட்டியல் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் ஒரு அழகான மலர் அவள் கவனத்தைக் கவர்ந்தது. உடனே, சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி, அதை வரவழைத்தாள். இந்தப் பூஞ்செடிக்காகத் தோட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், சுவர் ஓரமாக ஒரு இடம் வைத்திருந்தாள். அம்மலரை அங்கு பயிர் செய்த சில நாட்களில் அழகாகப் பச்சைப் பசேலென்று  இலைகள் வேகமாக வளர ஆரம்பித்தன. அவள் தினமும் அச்செடிக்கு நீர் வார்த்து, உரமிட்டு, கவனமாக வளர்த்து வந்தாள். செடியுடன் பேசவும் செய்தாள். ஆனால் ஒரு பயனும் இல்லை; மலர்கள் வளரவே இல்லை. சில வாரங்களுக்குப் பிறகு, மலர்கள் வராததால், ஏமாற்றமடைந்தாள். அச்செடியை வெட்டி எறியத் தீர்மானித்தாள்.

the-other-side-of-the-wall-picture-2ஒரு நாள், பக்கத்து வீட்டில் வசித்த உடல் நலம் குன்றிய பெண்மணி, தன் தோட்டத்தைப் பார்க்க அழைத்தாள். அங்கு அழகான மலர்கள் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்கின. பக்கத்து வீட்டு பெண்மணி இவளுக்கு நன்றி கூறினாள். அம்மலரின் கொடி சுவற்றின் பிளவு வழியாகப் பக்கத்து வீட்டிற்குச் சென்று அங்கு மலர்ந்தன. உழைப்பின் பலனைக் காண முடியாததால் அதைப் பயனற்றது என்று எண்ண வேண்டாம்.

நீதி:

கடினமான உழைப்பு என்றும் வீணாகாது. நல்ல உழைப்பின் பலன், அந்த குறிப்பிட்ட உழைப்பாளிக்கு உடனே தெரியாமல் இருக்கலாம்.  ஆனால், எங்கேயாவது அந்த பலன் பிரதிபலிக்கும். பிறரது வாழ்க்கையை மாற்றும். நம்பிக்கை, விடா முயற்சி மற்றும் ஒருமுகச் சிந்தனையோடு செயற்பட்டு, கடுமையாக உழைத்தால், வெற்றி நிச்சயம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

மகா சிவராத்திரி

Saibalsanskaar Tamil

shivarathri 1

சைவர்கள் தங்களின் பண்டிகைகளில் மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதுவது மகா சிவராத்திரியை தான். ஒவ்வொரு மாசி மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரியாக கொண்டாடுகின்றனர். ஒரு சமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், “நாதா உங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள் எது?” என்று கேட்டாள். சிவன் அவளிடம், “மாசி மாத தேய்பிறை 14ம் நாளான அமாவாசை நாளே எனக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் என் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்” என்றார். இவ்வாறு சிவபெருமானே சொல்லிய விசேஷ விரதம் இது.

சிவராத்திரியன்று இரவு முழுதும் சிவன் கோயில்கள் திறந்திருக்கும். விடிய விடிய நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். முதல்காலத்தில் பால், இரண்டாம் காலத்தில் தயிர், மூன்றாம் காலத்தில் நெய், நான்காம் காலத்தில் தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

சிவபெருமானின் திருத்தலங்களைப் பற்றி மனதில் எண்ணிணாலே முதலில் நினைவிற்கு வருவது திருவண்ணாமலைதான். இந்த திருத்தலத்தில் தான் இந்துக்களின் மிக முக்கியமான மகா சிவராத்திரி பண்டிகை உருவானது. இப்படி புகழ்பெற்ற புனிதத் தலமாக விளங்குவதுதான் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் என்றும், திரு அண்ணாமலையார் என்றும் அழைக்கப்படும் 2,665 அடி உயரமுற்ற சிவபெருமானின் உருவமாக தரிசிக்கப்படும் திருவண்ணாமலை ஆகும். நினைத்தவுடன்  முக்தி அளிக்கக்கூடிய திருத்தலம் இது. சிவபெருமானின் பஞ்சபூத திருத்தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. இது சிவனின் அக்னித் தலமாகும். காஞ்சி, திருவாரூர் (புவித் தலம்), சிதம்பரம் (ஆகாயம்)…

View original post 422 more words

அன்பின் தன்மை

நீதி – அன்பு / கருணை 

உபநீதி – தன்னலமற்ற சேவை / பச்சாதாபம் 

what-love-is-all-about1ஒரு நாள் காலை, சுமார் எட்டரை மணிக்கு, 80 வயதான ஒரு முதியவர், தன் கட்டை விரலில் உள்ள தையல்களைப் பிரிப்பதற்காக, எங்கள் மருத்துவ நிலையத்திற்கு வந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட நேரம் 9 மணியாக இருந்தாலும், அவர் மிகவும் அவசரத்தில் இருந்தார். அவரது அறிகுறிகளைக் கண்டு, அவரைக் கவனிக்க வேண்டிய மருத்துவர் குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தான் வருவார் என அறிந்த நான், அவரை ஒரு இடத்தில் அமர வைத்தேன். அவர் தன் கடிகாரத்தையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு அப்போது கவனிக்க வேறு நோயாளி இல்லாததால், நானே அவருக்குச் சிகிச்சை அளிக்க தீர்மானித்தேன். பார்த்த போது, அவரது காயம் நன்றாக குணமானது போல இருந்ததால், what-love-is-all-about2தாதியர் மூலம் தேவையான உபகரணங்களை வர வழைத்து, தையல்களைப் பிரித்து, மறுபடியும் காயத்திற்குக் கட்டுப் போட்டு விட்டேன். அவருக்குச் சிகிச்சை அளித்தபடி பேச்சு கொடுத்த போது, அவருடைய அவசரத்திற்குக் காரணம் கேட்டேன். அதற்கு அவர், தன் மனைவியுடன் சேர்ந்து சிற்றுண்டி உண்ண, தான் மற்றொரு மருத்துவ நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்றார். அவரது மனைவியின் உடல்நிலைப் பற்றி விசாரித்த போது, அவர் தன் மனைவி சில மாதங்களாக ஞாபக மறதி நோய் (ALZHEIMER’S) இருப்பதால், மருத்துவமனையில் இருப்பதாகக் கூறினார். பேசியபடிக் கட்டு போட்ட பிறகு, அவர் மனைவியைப் பார்க்கச் செல்ல, சற்று தாமதமானால் கவலைப்படுவாரா என விசாரித்தேன். அதற்கு அவர், அவள் கடந்த 5 வருடங்களாக ஞாபக மறதியினால் யார் என்று அடையாளம் கூட தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகக் கூறினார்.

“உங்களை யார் என்று அறிந்து கொள்ள முடியாவிட்டாலும், தினமும் காலை அவரைக் காணச் செல்கிறீர்களே” எனக் கேட்டேன். புன்சிரிப்புடன் என் கையைத் தட்டியபடி அவர் கூறியது – “அவளுக்கு என்னை அடையாளம் தெரியாது, ஆனால் எனக்கு அவளைத் தெரியுமே.”

நீதி:

உண்மையான அன்பில் எதிர்பார்ப்பு ஒன்றும் இருக்கக் கூடாது. பாராட்டு, நன்றி, புரிந்து கொள்ளுதல், எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லாமல் அன்பு செலுத்த வேண்டும். இக்கதையில் உள்ள வயதானவர் போல், அன்புடன் சேவை செய்ய பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

தாயின் மீது பாசமும், பக்தியும்

நீதி – பாசம்/அன்பு

உப நீதி – பெற்றோரிடம் மரியாதை / பக்தி

ஒரு ஏழைத் தாய் தன் மகனுடன் வசித்து வந்தார். அச்சிறுவன்love-for-mother-picture-one-new பரந்த மனப்பான்மையுடன், புத்திசாலித்தனமாகச் செயற்பட்டான். ஒவ்வொரு நாளும், அச்சிறுவனின் பொலிவும், அறிவும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இருந்த போதிலும், தாய் உற்சாகம் ஏதும் இல்லாமல், சோகத்தில் மூழ்கியிருந்தார்.

தாயாரின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வந்த அச்சிறுவன் ஒருமுறை தாயாரிடம், “அம்மா, ஏன் நீங்கள் எப்பொழுதும் கவலையாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு தாய், “மகனே, ஒரு முறை, ஒரு குறி சொல்பவர், உன் பற்களைப் போலவே பற்கள் கொண்டவர்கள் எல்லோருமே பிரபலமாக இருப்பார்கள்” என்று கூறினார். அதற்கு சிறுவன், “நல்ல விஷயம் தானே; நான் பிரபலமாக இருந்தால், நீங்கள் பெருமைப் பட மாட்டீர்களா?” எனக் கேட்டான்.

love-for-mother-picture-2தாய் உடனடியாக, “கண்மணி! ஒரு தாய்க்குத் தான் பெற்ற குழந்தை பேரோடும் புகழோடும் இருந்தால் கசக்குமா என்ன? எல்லோரும் உன்னைப் பாராட்டினால் அதில் எனக்குப் பெருமை தானே? நான் அதற்காக யோசிக்கவில்லை. இந்தப் புகழினால் நீ என்னை விட்டுப் பிரிந்து சென்று விடுவாயோ என்ற சிந்தனை தான் என்னை கவலைக்குள் ஆழ்த்துகிறது” என்று பதிலளித்தார்.

இதைக் கேட்டவுடன், அவன் அழுது  கொண்டே வீட்டை விட்டு வெளியேறினான். தெருவில் கடந்த பெரிய கல் ஒன்றை எடுத்து, முதல் வரிசையில் இருக்கும் இரண்டு பற்களை நொறுக்கிக் கொண்டிருந்தான்; வாயிலிருந்து ரத்தம் வழிந்தது.

அவனை தொடர்ந்து வந்த தாயும் அவனின் செயலைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அம்மா, “ஏன் இப்படி செய்தாய்?” என்று பதறினார். சிறுவன் தன் தாயின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, “அம்மா, இந்த பற்கள் உங்களுக்கு வலியும் வேதனையும் தரும் என்றால்,  நான் அவைகளை விரும்பவில்லை. அவற்றால் எனக்கு எந்த பயனும் இல்லை. நான் இந்த பற்களால் புகழ் பெற விரும்பவில்லை. உங்களுக்கு சேவை செய்து,  உங்களின் ஆசீர்வாதங்களைப் பெற்று புகழடைய விரும்புகிறேன்” என்று கூறினான்.

நண்பர்களே, இந்த சிறுவன் வேறு யாரும் இல்லை. அறிவும், ஆற்றலும், புகழும் பெற்று,  பிற்காலத்தில் சரித்திரத்தில் இணையில்லா இடம் பிடித்த ‘சாணக்கியர்’ தான்!

நீதி:

love-for-mother-picture-3பெற்றோர் மற்றும் வயதானவர்களின் ஆசீர்வாதம் வாழ்க்கையில் மிகவும் முக்கியம். நம் பெற்றோர்கள் நிபந்தனையற்ற அன்பைச் செலுத்துகிறார்கள். நாம் அவர்களிடம் எப்பொழுதும் அன்புடனும், பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும். பெற்றோரை நேசித்து, மதித்து, சொற்படி கேட்டு நடந்து, உதவி மற்றும் பணிவிடை செய்பவர்கள் ஏராளமான ஆசி பெறுவார்கள். பெற்றோர்கள் மீதான பற்றும் பக்தியும், அவர்களை எப்பொழுதும் நல்வழியில் செலுத்தி, தீய விஷயங்களிடமிருந்து பாதுகாத்து, சிறந்த சாதனைகளைப் புரிய என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.

பக்தி என்பது நம்பிக்கை. பெற்றோர் கூறும் அறிவுரைகளில் ஏதோ ஒரு உள்ளார்ந்த அர்த்தம் இருக்கிறது என்று புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். சிறு வயதில், அந்த நம்பிக்கையுடன் செயற்பட்டால், அதுவே பக்தியாகும்; நம் கடமையும் அதுதான். நம் அன்பை வெளிப்படுத்தும் முறையும் அதுவே ஆகும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி , சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

குருவும் சிஷ்யனும்

நீதி: நன் நடத்தை

உபநீதி: மனதை கட்டுப்படுத்திக் கொள்ளும் மனப்பான்மை,  ஞானம்

guru-and-disciple-crossing-river

வயதான குருவும் அவரது இளைய சிஷ்யனும், தங்களின் ஆசிரமத்திற்குச் செல்ல, இமய மலையின் வழியாக நடந்து கொண்டிருந்தனர். வெகு தூரம் நடக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம்; மேலும், பாதை மேடும் பள்ளமுமாக இருந்தது. ஆசிரமம் செல்லும் வழியில், அவர்கள் சற்று நிதானமாக ஓடிக் கொண்டிருந்த கங்கை நதியின் ஒரு கிளையை கடக்க நேர்ந்தது.

அங்கு, ஒரு இளம் பெண் ஆற்றின் கரையோரமாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளின் வீடு ஆற்றின் மறுபக்கத்தில் இருந்ததனால், அவளுக்கு தனியாகச் செல்வதற்கு பயமாக இருந்தது. அதனால் அவ்வழியே வந்த குருவிடம் நதியைக் கடக்க உதவி கேட்டாள்.

குரு சம்மதித்து, அவளைத் தூக்கிக் கொண்டு, எதிர்க் கரையில் பத்திரமாக சேர்த்து விட்டார். அப்பெண்ணும், தக்க சமயத்தில் உதவி செய்த குருவிடம் நன்றி தெரிவித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள். சிஷ்யன், குருவின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆழ்ந்த யோசனையில் மூழ்கினான்.

அவர்கள் கடினமான பாதையைக் கடந்து, கடைசியில் ஆசிரமம் வந்து சேர்ந்தனர். மிகச் சோர்வாக இருந்த போதிலும், சிஷ்யனின் மனம் அமைதி இல்லாமல, குரு தன்னிடம் ஏதாவது கேட்பாரா என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தான்.

இறுதியாக சிஷ்யன் குருவை நோக்கி, “குருவே, பெண்களைத் தொடக் கூடாது என்ற உறுதிமொழியை மேற்கொண்டுள்ளோம்; ஆனால் நீங்களோ அப்பெண்ணை தூக்கிக் கொண்டு சென்றீர்களே;  எங்களிடம் பெண்கள் பற்றியான எண்ணமே இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு நீங்கள் வேறு மாதிரியாக நடந்து கொண்டிருக்கிறீர்கள்” என்று புகார் கூறினான்.

குரு சிரித்துக் கொண்டே, “நான் அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டு எதிர்க் கரையில்  சேர்த்துவிட்டேன். ஆனால், நீயோ அந்த பெண்ணை இன்னும் உன் எண்ணங்களில் சுமந்து கொண்டிருக்கின்றாய்” என்று கூறினார்.

நீதி:

குரு சொல்லிக் கொடுத்த எந்த பாடமாக இருந்தாலும், அதை மனதில் குழப்பிக் கொண்டு, அதன் கருத்தைத் தவறாக புரிந்து கொள்ளாமல், அந்த உறுதி மொழியின் அர்த்தத்தை மனதில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com