Archive | April 2017

திருடனின் மாற்றம்

நீதி – உண்மை, நன் நடத்தை

உபநீதி – வாய்மை

Transformation of a thief picture 1

ஒரு முறை, திருடன் ஒருவன் ஏதாவது திருடுவதற்காக தேடிக் கொண்டிருந்தான். வாய்ப்பு ஒன்றும் கிடைக்காமல், நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு கோவிலுக்குச் சென்ற போது, அங்கு ஒரு பூசாரி, மதம் சார்ந்த சொற்பொழிவை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். அங்கு வந்திருக்கும் பெரிய வியாபாரிகளிடமிருந்து திருடலாம் என்ற மனப்பான்மையுடன் திருடன் இருந்தான்; பிறகு, உண்மை என்ற தலைப்பில் பேசிக் கொண்டிருந்த பூசாரியின் சொற்பொழிவை சிறிது நேரம் கேட்கலாம் என்று மனதை மாற்றிக் கொண்டான். திருடன் சொற்பொழிவைக் கேட்டு அதில் மூழ்கி விட்டான். நிகழ்ச்சி நிறைவு பெற்றவுடன் எல்லோரும் வீட்டிற்குச் சென்றார்கள்; ஆனால், திருடன் போக விருப்பமில்லாமல் அங்கேயே இருந்தான்.

பூசாரி அவனைப் பற்றி ஏதாவது தப்பாக நினைத்து விடுவாரோ என்று திருடன்transformation of a thief picture 2 பயந்தான். அந்த பயத்தைத் தோற்கடிக்க அவன் பூசாரியிடம், “உங்கள் சொற்பொழிவில் உண்மையைப் பற்றி ஆழ்ந்த அர்த்தம் இருந்தது. மனதிற்குக் கேட்க மிக அருமையாக இருந்தாலும், முழுமையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றான். திருடனுக்கு மனதில் பல கேள்விகளும், வாக்குவாதங்களும் தோன்றியன. ஒரு திருடனால் பொய் பேசாமல் எப்படி வாழ முடியும் என்ற எண்ணங்களும் இருந்தன.

அதற்குப் பூசாரி, திருடன் செய்யும் தொழிலிலும் உண்மையை மட்டும் பேசினால் பாதுகாப்புடன் இருக்கலாம் என்று புத்திமதி கூறினார். அந்த நிமிடத்திலிருந்து திருடன் தினமும் நடைமுறையில் எவ்விதமான இடையூறுகள் வந்தாலும், உண்மையை மட்டும் பேசுவதாக தீர்மானித்தான்.

transformation of a thief picture 3

திருடன் வெளியே சென்ற அதே சமயத்தில் அந்த நாட்டு ராஜாவும் மாறுவேடத்தில், நாட்டின் நிகழ்வுகளைக் கவனிக்க சென்று கொண்டிருந்தார். தற்செயலாக, திருடன் யாரோ ஒரு மனிதனைப் பார்த்தான். அம்மனிதன் திருடனிடம், “யார் நீ?” என்று விசாரித்தான். திருடன் என்று சொன்னவுடன் அம்மனிதன் மகிழ்ச்சியுடன், “நானும் திருடன்” என்று கூறி, இருவரும் கைகளைக் குலுக்கி, அணைத்துக் கொண்டனர்.

புதிய திருடன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், அரண்மனை பொக்கிஷசாலையின் பெட்டகத்தில் இருக்கும் விலையுயர்ந்த பொருட்கள் இருக்கும் இடம் தனக்கு தெரியும் என்று சொல்லி விட்டு, உள்ளே இந்த திருடனையும் கூட்டிச் சென்றான். பெட்டகத்தை உடைத்தப் பிறகு, அவர்கள் ஐந்து விலையுயர்ந்த வைரங்களைக் கண்டார்கள். அரண்மனைக்குள் கூட்டிச் சென்ற திருடன், “நாம் நான்கு வைரங்களை எடுத்துக் கொள்ளலாம்; உனக்கும் எனக்கும் சரி பாதியாக பகிர்ந்து கொள்ளலாம். வைரத்தை பாதியாக உடைக்க முடியாத காரணத்தினால், மற்றொன்றைப் பெட்டகத்திலேயே வைத்து விடலாம்” என்றான். அவ்வாறு செய்த பிறகு, அவர்கள் தங்கள் பாதைகளில் பிரிந்து சென்றனர்.

transformation of a thief picture 4

மறுநாள் காலை, பெட்டகத்தின் பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு, பொருளாளர் அங்கு  சென்று பார்த்த போது, நான்கு வைரங்களை காணவில்லை. இந்த நல்ல வாய்ப்பை எண்ணி   பொருளாளர் அந்த ஒரு வைரத்தை எடுத்துக் கொண்டு, “பெட்டகத்தில் இருந்த ஐந்து வைரங்களையும் காணவில்லை” என்று ராஜாவிடம் அறிவித்தான். பாதுகாவலர்களிடம் திருடனைக் கைது செய்ய ராஜா உத்தரவிட்டார். சிறிது நேரத்தில், திருடனை அரண்மனைக்குக் கூட்டி வந்தனர்.

ராஜா திருடனிடம், “நீ தான் திருடனா? என்ன திருடினாய்?” என்றார்.

உடனே திருடன், “நான் பொய் சொல்ல விரும்பவில்லை. நானும் என் தோழனும் தான் திருடினோம்” என்றான்.

transformation of a thief picture 5அதற்கு ராஜா, “எவ்வளவு வைரங்களைத் திருடினாய்” என்று கேட்டார். “நாங்கள் நான்கு வைரங்களைத் திருடினோம். சரி பாதியாக பகிர்ந்து கொண்டோம். மீதி ஒன்றை உடைக்க முடியாததால், பெட்டகத்திலேயே வைத்து விட்டோம்” என்று திருடன் கூறினான். பிறகு, ராஜா பொருளாளரிடம், “எவ்வளவு வைரங்கள் காணவில்லை?” என்று கேட்டதற்கு, “ஐந்தும் ராஜாவே” என்று பதிலளித்தான். என்ன நடந்தது என்று ராஜாவிற்குத் தெரிந்ததனால்,
transformation of a thief picture 6பொருளாளரை வேலையை விட்டு நீக்கி, திருடனின் நேர்மையைப் பார்த்து அவனைப் புதிய பொருளாளராக நியமித்தார்.

திருடன் உண்மையைப் பேச ஆரம்பித்தவுடன், அவனுக்குப் பரிசு கிடைத்ததோடு எல்லாக் கெட்ட பழக்கங்களையும் விட்டு விட்டான். ஒரு நல்ல பழக்கத்தை மன உறுதியுடனும், திட நம்பிக்கையுடனும் பின்பற்றினால், நம்மிடம் இருக்கும் மற்ற கெட்ட பழக்கங்களையும் அகற்றி, நல்ல மனிதனாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகமாகிறது.

நீதி:

மற்றவர்கள் நமக்குச் செய்யும் தீமையை மறந்து, நாம் மற்றவர்களுக்குச் செய்யும் நன்மையை மறந்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு பணியைத் தெளிவான மனப்பான்மையுடன் செய்தால், மற்ற தீய பழக்கங்களும் நம்மிடமிருந்து அகன்று விடும். நற்குணங்கள் தீய பழக்கங்களை விரட்டி விடும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி,  ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

கிருஷ்ணர், பலராமர் மற்றும் காட்டில் இருந்த அசுரன்

நீதி நன்நடத்தை

உபநீதி தைரியம், தன்னம்பிக்கை

கீழ்வரும் திருக்குறள் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும்.

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.

போர்முனையில் கோழையின் கையில் இருக்கும் வாளும், கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளாதவன் கற்ற கல்வியும் உபயோகமற்றவை.

Krishna, Balarama and the forest monter 1

ஒரு பௌர்ணமி அன்று, கிருஷ்ணரும் பலராமரும் காட்டில் நடந்து கொண்டிருந்தனர். வெகு நேரம் ஆனதால், அவர்கள் அன்று இரவு காட்டிலேயே ஓய்வெடுக்க முடிவெடுத்தார்கள். ஆபத்தான காடாக இருந்ததால் கிருஷ்ணர், “பலதேவா, நள்ளிரவு வரை நான் தூங்கும் போது நீ கண்காணிக்கவும்;  நள்ளிரவுக்கு பின் நீ உறங்கும் போது நான் காவல் இருக்கிறேன்” என்ற ஆலோசனையைக் கூறினார். இருவரும் ஒப்புக் கொண்ட பின், கிருஷ்ணர் உறங்கினார்.

Krishna, Balarama and the forest monter 2

ஒரு சில மணி நேரம் கழிந்தன;  கிருஷ்ணர் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென்று, பலராமருக்கு தூரத்தில் ஒரு உறுமல் சத்தம் கேட்டது; இந்த பயங்கரமான சத்தம் பலராமரைத் திடுக்கிட வைத்தது. அவர் அந்த ஒலி வந்த திசையை நோக்கிச் சிறிது தூரம் சென்றார். அப்பொழுது, தன்னை நெருங்கி ஒரு பிரம்மாண்டமான அசுரன் வருவதை அவரால் பார்க்க முடிந்தது. அசுரன் மீண்டும் உறுமினான்;  பலராமன் பயத்தில் நடுங்கினார்.

அவர் நடுங்கிய ஒவ்வொரு முறையும், அசுரனின் உருவம் இரட்டிப்பாக வளர்ந்தது. அசுரன் பலராமனிடம் நெருங்க நெருங்க மேலும் பெரிதாகிக் கொண்டிருந்தான். இப்போது அசுரன் பலராமனுக்கு மிகவும் அருகில் வந்து விட்டான்; மீண்டும் ஒருமுறை உறுமினான். அசுரனின் பயங்கரமான ஒலி, உருவம் மற்றும் நாற்றத்தினால் நடுங்கிய பலராமர் “கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று அலறிக் கொண்டு மயங்கி விழுந்தார்.

Krishna, Balarama and the forest monter 3.jpg

பலராமரின் அழைப்பைக் கேட்டு எழுந்த கிருஷ்ணர், ஒலி வந்த திசையை நோக்கி சென்றார். அங்கு தரையில் கிடந்த பலராமரைப் பார்த்த கிருஷ்ணர், அவர் தூங்குவதாக நினைத்து “இப்போது நான் முழித்திருக்க வேண்டிய நேரம் போல இருக்கிறது”  என்று குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். அருகில் அசுரன் நின்று கொண்டிருப்பதை கிருஷ்ணர் உணர்ந்தார்.

அசுரன் கிருஷ்ணரைப் பார்த்து உறுமினான். “உனக்கு என்ன வேண்டும்?” என்று கிருஷ்ணர் சிறிதும் பயமின்றி கேட்டார். அசுரனின் உருவம் பாதியாக குறைந்தது. “இங்கே என்ன செய்கிறாய்?” என்று கிருஷ்ணர் மீண்டும் கேட்டார். அசுரனின் உருவம் மீண்டும் சுருங்கியது. கிருஷ்ணர் அசுரனிடமிருந்து பதிலை எதிர்பார்த்து, கேள்வி கேட்ட ஒவ்வொரு முறையும் அசுரனின் உருவம் குறைந்து கொண்டே வந்தது.

Krishna, Balarama and the forest monter 4.png

இப்போது அசுரனின் உயரம் இரண்டே அங்குலம் தான் இருந்தது; ஆனால், கோர உருவம் மாறி, பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தான். கிருஷ்ணர் தனது கரங்களில் அவனை எடுத்து இடுப்பில் உள்ள துணியில் முடிந்து வைத்தார். இரவும் கடந்தது; பலராமர் விழித்துக் கொண்டார்.

பலராமர் கிருஷ்ணரைப் பார்த்து பேரின்பத்துடன், “கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று கத்தினார்.

“கிருஷ்ணா! நீ தூங்கிக் கொண்டிருந்த போது, ஒரு பயங்கரமான சம்பவம் நடந்தது. நம் இருவரையும் கொலை செய்ய ஒரு பிரம்மாண்டமான அசுரன் முயற்சி செய்தான். நாம் எப்படி உயிர் தப்பினோம் என்று புரியவில்லை. கடைசியாக நான் மயங்கி விழுந்தது மட்டுமே ஞாபகம் உள்ளது” என்று பலராமர் முந்தைய இரவு நிகழ்வுகளை ஞாபகப் படுத்திக் கூறினார்.

கிருஷ்ணர் முடிந்து வைத்திருந்த சிறிய அரக்கனை எடுத்தவாறு “இது தானே அந்த அசுரன்?” என்று கேட்டார்.

பலராமரும் “ஆமாம், ஆனால் அவனுடைய உருவம் மிகப் பெரியதாக இருந்ததே! இப்படிச் சிறியதாக மாறி விட்டதே, எப்படி?” என வினவினார்.

அதற்குக் கிருஷ்ணர், “நான் ஒவ்வொரு முறையும் கேள்வி கேட்ட பொழுது, உருவம் சிறியதாகி, இப்போது இப்படி இருக்கிறது” என்றார்.

உடனே பலராமர் முந்தைய தினம் அவர் பயத்தை வெளிப்படுத்திய போதெல்லாம், எப்படி அசுரனின் உருவம் பெரிதாகி கொண்டிருந்தது என்று சொன்னார்.

அதற்குக் கிருஷ்ணர், “நாம் பயப்படும் பொழுது நம் அச்சங்கள் பெரியதாக வளர்ந்து விடுகின்றன;  ஆனால் நாம் அவற்றை எதிர்கொண்டு, கேள்வி கேட்டு, சமாளிக்கும் பொழுது அவை மிகச் சிறிதாகி விடுகின்றன” என்று கூறி முடித்தார்.

நீதி:

நமக்கு ஏதாவது பிரச்சனை அல்லது பயம் ஏற்படும் போது, நாம் அதை எதிர்கொள்வதைத் தவிர்த்து, அவற்றைப் பெரிதாக வளர்த்து வலிமை அடையச் செய்கிறோம். நாம் எந்த ஒரு சூழ்நிலையையும் தைரியமாக சந்திக்கும் பொழுது, அந்த பிரச்சனை அல்லது பயத்திற்கு ஒரு தீர்வு காண முடியும். அந்த தீர்வு நமக்கு சாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்த முயற்சி ஒரு நல்ல பாடமாகவும், மேலும் அச்சத்தை எதிர்ப்பதற்கு ஒரு பயிற்சியாகவும் இருக்கும். நாம் எந்த விதமான சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொண்டால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும். அதைத் தவிர்த்தால், இப்பொழுது இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது நம் வளர்ச்சியில் தடைகள் வரும்.

Krishna, Balarama and the forest monter 5

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி,  ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

ஒரு துறவியின் மன உறுதி (தீர்மானம்)

நீதி –  நன் நடத்தை

உபநீதி – மன உறுதி, நம்பிக்கை

a tapasvis determination - picture 1பலர் கடவுளை மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரு இறுதி இலக்கிற்காகத் தவம் செய்வார்கள். ஒரு முறை, துறவி ஒருவர்  இந்த புனிதமான நோக்கத்துடன், ஒரு புளிய மரத்தினடியில் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார். இறைவனை மகிழ வைத்தால், ஒரு அற்புதமான  காட்சியை அளிப்பார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். அதனால் தினமும் அத்துறவி, அந்த மரத்தை வலம் வந்து அதன் இலைகளையே தனது உணவாக உண்டு வந்தார்.

ஒரு நாள், நாரத மகரிஷி வைகுண்டம் சென்று கொண்டிருந்த பொழுது, இந்தத் a tapasvis deermination - picture 2துறவியைப் பார்த்தவுடன், அவரைச் சந்திக்க வந்தார். நாரத ரிஷியைக் கண்டவுடன் துறவி அவரை வணங்கினார். உடனே, துறவியைப் பார்த்து நாரதர், “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்குத் துறவி கடவுளின் அருளைப் பெறுவதற்காகத் தாம் எடுத்த முடிவைப் பற்றிக் கூறினார். மேலும் துறவி அவரிடம், “நாரத மகரிஷியே! நான் கடவுள் காட்சி அளிப்பார் என்ற நம்பிக்கையில் பல வருடங்களாக இந்தப் புளிய மர இலைகளை மட்டும் உண்டு, தவம் புரிந்து வருகிறேன். தாங்கள் கடவுளைச் சந்திக்கும் போது, எனக்கு தரிசனம் கொடுக்குமாறு என் சார்பில் கேட்கவும்” என்று தாழ்மையுடன் கூறினார். துறவியின் கதையைக் கேட்ட நாரதர் இந்தத் தகவலைக் கட்டாயமாக பகவானிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் வைகுண்டம் சென்றார்.

வைகுண்டம் சென்றடைந்தவுடன், பகவான் நாரதரிடம் “பூலோகத்திலிருந்து ஏதாவது செய்தி இருந்தால் சொல்” என்று கூறினார்.

உடனே நாரதர் அத்துறவியை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, “தங்கள் தரிசனத்திற்காகத் துறவி ஒருவர், ஒரு புளிய மரத்தடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருக்கிறார். தாங்கள் எப்பொழுது அவருக்கு தரிசனம் கொடுப்பீர்கள் என்று அறிய விரும்புகிறார்” என்று கேட்டார்.

a tapasvis determination - picture 3அதற்கு பகவான், “என்னுடைய தரிசனம் பெறுவதற்கு அந்தப் புளிய மரத்தில் எவ்வளவு இலைகள் இருக்கிறதோ அவ்வளவு வருடங்கள் தவம் செய்ய வேண்டும் என்று அவரிடம் சென்று கூறவும்” என்றவாறு பதிலளித்தார்.

இதைக் கேட்ட நாரத ரிஷிக்குக் கால்கள் பலவீனமடைந்தன; ஒரு அடி கூட நகர முடியாதது போன்ற ஒரு உணர்வு; இதயம் படபடத்தது. கடவுளைக் காண ஆர்வத்துடன் இருந்த துறவியிடம் இந்தச் செய்தியை எப்படிச் சென்று கூறுவது?  என்ற ஒரு தயக்கமும் இருந்தது. “நான் அவரிடம் என்ன கூறுவேன்? அவர் தவம் புரியும் உற்சாகத்தையே இழந்து விடுவாரே” என்று நாரதர் நினைத்தார். தளர்ந்த மனதுடன் வான் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்த பொழுது, துறவி அவரைக் கவனித்து அழைத்தார். நாரதர் துறவியிடம் சென்று, தாம் பகவானைச் சந்தித்த விஷயத்தைப் பற்றிக் கூறினார். அதனைக் கேட்ட துறவி சந்தோஷத்தில் மூழ்கினார்.

“பகவான் எனக்கு என்ன செய்தி அனுப்பியிருக்கிறார்?” என்று வினவினார்.

நாரதர் வருத்தத்துடன், “என்னால் அதைச் சொல்ல முடியாது. நான் விஷயத்தைக் கூறினால், தாங்கள் தைரியத்தை இழந்து விடுவீர்கள். மேலும், தவம் புரிவதையே கைவிட்டு விடுவீர்கள்.” என்று கூறினார்.

உடனே துறவி, “பகவான் என்ன கூறியிருந்தாலும் பரவாயில்லை, நான் தைரியத்தை இழக்க மாட்டேன். அவருடைய புனிதமான வார்த்தைகளைக் கேட்கும் பாக்கியத்தைப் பெற்றவனாவேன். அதனால், தயவு செய்து அவர் கூறியதை அப்படியே சொல்லுங்கள்” எனக் கூறினார்.

நாரதருக்கு இன்னும் சந்தேகமாகவே இருந்தது. “இதைச் சொல்லலாமா? அவர் நம்பிக்கையை இழந்து விட்டால் என்ன செய்வது? நான் இத்துறவிக்கு அதைச் செய்ய மாட்டேன்” என்று மனதில் நினைத்தபடி இருந்தார்.

ஆனால் துறவி நாரதரிடம் விஷயத்தைக் கூறும்படி வற்புறுத்தினார்.

உடனே நாரதர், “நீங்கள் இன்னும் பல வருடங்கள் தவம் புரிய வேண்டும்.   இந்தப் புளிய மரத்தில் எவ்வளவு இலைகள் இருக்கின்றதோ அவ்வளவு வருடங்கள் தாங்கள் தவம் புரிய வேண்டும். அதற்குப் பிறகு தான் பகவான் காட்சி கொடுப்பாராம்” என்று பகவான் கூறியதாக சொன்னார்.

அதைக் கேட்ட துறவி மகிழ்வுற்றார். “நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி; பகவான் எனக்குச் செய்தி அனுப்பியுள்ளார். எனக்குக் கண்டிப்பாக தரிசனம் தருவதாகக் கூறியிருக்கிறார். வருடங்கள் விரைவில் கடந்தோடும்” என்று பேரின்பத்துடன் துறவி மூழ்கினார்.

துறவியின் அன்பையும், தைரியத்தையும் கண்ட பகவான் உடனடியாக அவர்A Tapasvis's determination last முன் தோன்றி துறவிக்குக் காட்சி கொடுத்தார். துறவியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இறைவனின் பொற்பாதங்களில் விழுந்தார்.

நாரதரிஷி குழம்பிப் போனார். “பகவான், நீங்கள் எப்படி இங்கே? இவர் பல வருடங்கள் தவம் செய்த பிறகு தானே தரிசனம் அளிக்கப் போவதாகக் கூறினீர்கள்?” என்று ஆச்சரியத்துடன் நாரதர் கேட்டார்.

அதற்கு பகவான், “துறவியின் தைரியத்தையும், மன உறுதியையும் பார். மேலும், பல வருடங்கள் தவம் புரிய வேண்டும் என்று தெரிந்தும் கூட, அவர் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. இப்படிப்பட்ட ஒருவருக்கு தான்  நான் கண்டிப்பாகக் காட்சி அளிப்பேன்” என்று கூறினார்.

நீதி

அந்தத் துறவி நம்பிக்கை இழந்திருந்தால், கடவுளின் தரிசனம் கிடைக்கப் பெற்றிருப்பாரா? இல்லை. ஆனால் அவர் நம்பிக்கையை இழக்காததனால், கடவுளின் அருளைப் பெற்றார். மன உறுதியுடன் இருப்பவன் விரைவில் அவனுடைய இலக்கைச் சென்றடைவான். சரியான மனப்பான்மை, விடா முயற்சி மற்றும் நம்பிக்கை இருந்தால் எந்த இலக்கை நாம் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதைக் கட்டாயமாகச் சென்றடையலாம்; வெற்றி நிச்சயம். 

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

குரு பக்தியின் பிரதிபலிப்பு

நீதி – அன்பு

உபநீதிபக்தி, மரியாதை

love for ones master - picture 1இக்கதை, ஹஜ்ரத் அமீர் குஸ்ரோ என்பவர் தன் குருவிடம் வைத்திருந்த அன்பு மற்றும் பக்தியின் பிரதிபலிப்பு பற்றியது. ஒரு சமயம் ஒரு ஏழை மனிதன், ஹஜ்ரத் நிஜாமுத்தீன் என்ற மகானின் நற்குணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான்;  இந்தியாவிலுள்ள ஒரு சிறு கிராமத்திலிருந்து தன் கஷ்டங்களைத் தீர்த்துக் கொள்ள பண உதவி பெற நினைத்து, அவரை நாடி தில்லி வந்தான். தற்செயலாக அன்று அம்மகானிடம் அவருடைய பழைய காலணிகள் தவிர வேறொன்றும் இல்லாததால், அதை அந்த ஏழை மனிதனுக்குக் கொடுத்தார். மன நிறைவு அடையாத அம் மனிதன், அவருக்கு நன்றி கூறிவிட்டு, அங்கிருந்து தன் கிராமத்திற்குத் திரும்பினான்

திரும்பி வரும்போது, அன்றைய இரவைக் கழிக்க ஒரு விடுதியில் தங்கினான். அதே இரவு, ஹஜ்ரத் அமீர் குஸ்ரோ என்பவரும் தில்லியிலிருந்து வங்கதேசம் திரும்பி வரும் போது,  அதே விடுதியில் வந்து தங்கினார். அமீர் குஸ்ரோ, தங்கம் மற்றும் நவரத்தின கற்களால் செய்த நகைகளை வியாபாரம் செய்பவர்; தில்லியிலுள்ள பெரிய செல்வந்தர்களில் அவரும் ஒருவர். மறு நாள் காலை, அமீர் குஸ்ரோ எழுந்தவுடன், “என் குருநாதரின் நறுமணம் இங்கு வீசுகிறதே” என்று நினைத்தார்.

நறுமணம் வரும் இடத்தை அடைந்தவுடன், அவர் ஏழை மனிதனைப் பார்த்து “தில்லியில் இருந்த போது ஹஜ்ரத் நிஜாமுத்தீன் என்ற மகானின் இல்லத்திற்கு சென்றிருந்தாயா?” என விசாரித்தார். அவன் அதற்கு “ஆம்” என்று கூறி, அங்கு நடந்த எல்லா விவரங்களையும் கூறினான். அவர் கொடுத்த காலணிகளையும் காண்பித்து, அவை பழையது மற்றும் மதிப்பற்றவை என்றும் கூறினான்.

ஹஜ்ரத் அமீர் குஸ்ரோ அவனுக்கு அந்த காலணிகளுக்குப் பதிலாக, தன்னிடம் இருந்த அத்தனை செல்வங்களையும் தருவதாகக் கூறினார். ஏழை மனிதனும் ஒப்புக் கொண்டு, தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக் கொண்டு, செல்வந்தருக்கு நன்றி கூறிவிட்டு, சந்தோஷமாக வீடு சென்றான்.

அமீர் குஸ்ரோ தில்லியை அடைந்தவுடன், அக் காலணிகளை தன் குருவின் காலடியில் வைத்தார். நடந்தது அனைத்தையும் கூறி,  தன் செல்வங்களுக்குப் பதிலாக அக் காலணிகளை வாங்கியதாகவும் கூறினார். அதற்கு மகான் ஹஜ்ரத் நிஜாமுத்தீன் கூறியது  – குஸ்ரோ, மிகவும் மலிவாக வாங்கி விட்டாய்!

நீதி:

ஒரு சிஷ்யன் தன் குருவிடம் வைத்திருக்கும் அன்புக்கு இது ஒரு உதாரணம் ஆகும். குருவின் பாதுகைகள் ஒரு சிஷ்யனுக்கு மிகவும் புனிதமானது. இது தன் ஆணவங்களை விட்டொழித்து, சரணாகதி அடையக் கற்றுக் கொடுக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி,  ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com