கிருஷ்ணர், பலராமர் மற்றும் காட்டில் இருந்த அசுரன்

நீதி நன்நடத்தை

உபநீதி தைரியம், தன்னம்பிக்கை

கீழ்வரும் திருக்குறள் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும்.

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.

போர்முனையில் கோழையின் கையில் இருக்கும் வாளும், கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளாதவன் கற்ற கல்வியும் உபயோகமற்றவை.

Krishna, Balarama and the forest monter 1

ஒரு பௌர்ணமி அன்று, கிருஷ்ணரும் பலராமரும் காட்டில் நடந்து கொண்டிருந்தனர். வெகு நேரம் ஆனதால், அவர்கள் அன்று இரவு காட்டிலேயே ஓய்வெடுக்க முடிவெடுத்தார்கள். ஆபத்தான காடாக இருந்ததால் கிருஷ்ணர், “பலதேவா, நள்ளிரவு வரை நான் தூங்கும் போது நீ கண்காணிக்கவும்;  நள்ளிரவுக்கு பின் நீ உறங்கும் போது நான் காவல் இருக்கிறேன்” என்ற ஆலோசனையைக் கூறினார். இருவரும் ஒப்புக் கொண்ட பின், கிருஷ்ணர் உறங்கினார்.

Krishna, Balarama and the forest monter 2

ஒரு சில மணி நேரம் கழிந்தன;  கிருஷ்ணர் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென்று, பலராமருக்கு தூரத்தில் ஒரு உறுமல் சத்தம் கேட்டது; இந்த பயங்கரமான சத்தம் பலராமரைத் திடுக்கிட வைத்தது. அவர் அந்த ஒலி வந்த திசையை நோக்கிச் சிறிது தூரம் சென்றார். அப்பொழுது, தன்னை நெருங்கி ஒரு பிரம்மாண்டமான அசுரன் வருவதை அவரால் பார்க்க முடிந்தது. அசுரன் மீண்டும் உறுமினான்;  பலராமன் பயத்தில் நடுங்கினார்.

அவர் நடுங்கிய ஒவ்வொரு முறையும், அசுரனின் உருவம் இரட்டிப்பாக வளர்ந்தது. அசுரன் பலராமனிடம் நெருங்க நெருங்க மேலும் பெரிதாகிக் கொண்டிருந்தான். இப்போது அசுரன் பலராமனுக்கு மிகவும் அருகில் வந்து விட்டான்; மீண்டும் ஒருமுறை உறுமினான். அசுரனின் பயங்கரமான ஒலி, உருவம் மற்றும் நாற்றத்தினால் நடுங்கிய பலராமர் “கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று அலறிக் கொண்டு மயங்கி விழுந்தார்.

Krishna, Balarama and the forest monter 3.jpg

பலராமரின் அழைப்பைக் கேட்டு எழுந்த கிருஷ்ணர், ஒலி வந்த திசையை நோக்கி சென்றார். அங்கு தரையில் கிடந்த பலராமரைப் பார்த்த கிருஷ்ணர், அவர் தூங்குவதாக நினைத்து “இப்போது நான் முழித்திருக்க வேண்டிய நேரம் போல இருக்கிறது”  என்று குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். அருகில் அசுரன் நின்று கொண்டிருப்பதை கிருஷ்ணர் உணர்ந்தார்.

அசுரன் கிருஷ்ணரைப் பார்த்து உறுமினான். “உனக்கு என்ன வேண்டும்?” என்று கிருஷ்ணர் சிறிதும் பயமின்றி கேட்டார். அசுரனின் உருவம் பாதியாக குறைந்தது. “இங்கே என்ன செய்கிறாய்?” என்று கிருஷ்ணர் மீண்டும் கேட்டார். அசுரனின் உருவம் மீண்டும் சுருங்கியது. கிருஷ்ணர் அசுரனிடமிருந்து பதிலை எதிர்பார்த்து, கேள்வி கேட்ட ஒவ்வொரு முறையும் அசுரனின் உருவம் குறைந்து கொண்டே வந்தது.

Krishna, Balarama and the forest monter 4.png

இப்போது அசுரனின் உயரம் இரண்டே அங்குலம் தான் இருந்தது; ஆனால், கோர உருவம் மாறி, பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தான். கிருஷ்ணர் தனது கரங்களில் அவனை எடுத்து இடுப்பில் உள்ள துணியில் முடிந்து வைத்தார். இரவும் கடந்தது; பலராமர் விழித்துக் கொண்டார்.

பலராமர் கிருஷ்ணரைப் பார்த்து பேரின்பத்துடன், “கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று கத்தினார்.

“கிருஷ்ணா! நீ தூங்கிக் கொண்டிருந்த போது, ஒரு பயங்கரமான சம்பவம் நடந்தது. நம் இருவரையும் கொலை செய்ய ஒரு பிரம்மாண்டமான அசுரன் முயற்சி செய்தான். நாம் எப்படி உயிர் தப்பினோம் என்று புரியவில்லை. கடைசியாக நான் மயங்கி விழுந்தது மட்டுமே ஞாபகம் உள்ளது” என்று பலராமர் முந்தைய இரவு நிகழ்வுகளை ஞாபகப் படுத்திக் கூறினார்.

கிருஷ்ணர் முடிந்து வைத்திருந்த சிறிய அரக்கனை எடுத்தவாறு “இது தானே அந்த அசுரன்?” என்று கேட்டார்.

பலராமரும் “ஆமாம், ஆனால் அவனுடைய உருவம் மிகப் பெரியதாக இருந்ததே! இப்படிச் சிறியதாக மாறி விட்டதே, எப்படி?” என வினவினார்.

அதற்குக் கிருஷ்ணர், “நான் ஒவ்வொரு முறையும் கேள்வி கேட்ட பொழுது, உருவம் சிறியதாகி, இப்போது இப்படி இருக்கிறது” என்றார்.

உடனே பலராமர் முந்தைய தினம் அவர் பயத்தை வெளிப்படுத்திய போதெல்லாம், எப்படி அசுரனின் உருவம் பெரிதாகி கொண்டிருந்தது என்று சொன்னார்.

அதற்குக் கிருஷ்ணர், “நாம் பயப்படும் பொழுது நம் அச்சங்கள் பெரியதாக வளர்ந்து விடுகின்றன;  ஆனால் நாம் அவற்றை எதிர்கொண்டு, கேள்வி கேட்டு, சமாளிக்கும் பொழுது அவை மிகச் சிறிதாகி விடுகின்றன” என்று கூறி முடித்தார்.

நீதி:

நமக்கு ஏதாவது பிரச்சனை அல்லது பயம் ஏற்படும் போது, நாம் அதை எதிர்கொள்வதைத் தவிர்த்து, அவற்றைப் பெரிதாக வளர்த்து வலிமை அடையச் செய்கிறோம். நாம் எந்த ஒரு சூழ்நிலையையும் தைரியமாக சந்திக்கும் பொழுது, அந்த பிரச்சனை அல்லது பயத்திற்கு ஒரு தீர்வு காண முடியும். அந்த தீர்வு நமக்கு சாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்த முயற்சி ஒரு நல்ல பாடமாகவும், மேலும் அச்சத்தை எதிர்ப்பதற்கு ஒரு பயிற்சியாகவும் இருக்கும். நாம் எந்த விதமான சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொண்டால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும். அதைத் தவிர்த்தால், இப்பொழுது இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது நம் வளர்ச்சியில் தடைகள் வரும்.

Krishna, Balarama and the forest monter 5

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி,  ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s