நீதி – அன்பு
உப நீதி – பக்தி / நம்பிக்கை
கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த புகழ்பெற்ற உரையாடல் இது.
ஒரு முறை அர்ஜுனன், “கிருஷ்ணா, என்னைப் பொறுத்தவரை – உங்களது வார்த்தைகள் என் கண்கள் காட்டும் ஆதாரத்தை விட நம்பத்தக்கவை” எனக் கூறினான்.
ஒரு சமயம் இருவரும் தோட்டத்தில் உலாவி கொண்டிருக்கும் பொழுது வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவை ஒன்றைப் பார்த்தனர்.
கிருஷ்ணர் அதை சுட்டிக் காட்டியபடி, “அர்ஜுனா, அந்தப் பறவையைப் பார்… அது புறாதானே?” என்று கேட்டார்.
“ஆம் பிரபு! அது கண்டிப்பாகப் புறாவே தான்” என்று அர்ஜுனன் கூற முற்பட்டதும் கிருஷ்ணர், “ஆனால், சற்றுப் பொறு … கழுகு போல எனக்குத் தோன்றுகிறதே. அது ஒரு சமயம் கழுகோ?” என்று தொடர்ந்தார்.
அர்ஜுனனிடமிருந்து. “ஆமாம்! அது நிச்சயமாகக் கழுகு தான்” என்று பதில் வந்தது.
“இல்லை, இல்லை! அது கழுகு மாதிரி இல்லை” என்று கிருஷ்ணர் கூறி, “கண்டிப்பாக அது காகம் தான்” என்றார்.
“சந்தேகமே இல்லை கிருஷ்ணா, அது காகமே தான்”, என்றவாறு அர்ஜுனன் பதிலளித்தான்.
இந்தத் தருணத்தில், கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே அர்ஜுனனைச் செல்லமாகக் கடிந்து கொண்டு, “நண்பா, நீ என்ன குருடா?
உனக்குச் சொந்தமாகக் கண்கள் இல்லையா! நான் எது சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறாயே?” என்றார்.
அதற்கு அர்ஜூனன், “கிருஷ்ணா, நான் என் கண்களால் காணும் ஆதாரங்களை விட உங்கள் சொற்களின் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறேன். நீங்கள் எது சொன்னாலும், அதை உருவாக்குவதற்கான சக்தி உங்களுக்கு இருக்கிறது – அதை ஒரு காகமாகவோ, புறாவாகவோ அல்லது கழுகாகவோ நீங்கள் நினைத்தால் மாற்றலாம். ஆகையால், நீங்கள் ஒன்றினைக் காகம் என்று சொன்னால், அது காகமாகத்தான் இருக்க வேண்டும்!” என்று கூறினான்.
நீதி:
பக்தி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தக் கதையே சான்று. ஆசிரியர் மற்றும் கடவுளின் மீதும் இப்படிப்பட்ட நம்பிக்கையைத் தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நன்மை தீமைக்கு இடையில் உள்ள போரை வெல்ல, கிருஷ்ணரின் மீது அர்ஜுனன் வைத்த இந்த பக்தியே காரணமாகும்.
மொழி பெயர்ப்பு:
வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி
Source: http://saibalsanskaar.wordpress.com