Archive | August 2017

படித்த பண்டிதர்

நீதி – உண்மை

உபநீதி – பயிற்சி

The learned pundit picture 1ஒரு நாள், படகு ஒன்றில், நதியைக் கடந்து செல்ல, பல மனிதர்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களில், ஒரு கற்றறிந்த பண்டிதரும் இருந்தார். பண்டிதர், ஒரு பயணியுடன் இந்து மதத்தைச் சார்ந்த வேதங்களைப் பற்றி பேசி, தன் கல்வி அறிவை வெளிப்படுத்தி, நேரத்தை செலவழிக்க முடிவு செய்தார்.

எனவே, அவர் அந்த பயணியைப் பார்த்து, “உபநிஷதத்தை நீங்கள் the learned pundit - picture 2வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்” என்றவாறு பேச்சைத் தொடங்கினார்.

அப்பயணி, “இல்லை, பண்டிதரே! நான் படித்ததில்லை” என்று பணிவாக பதிலளித்தார்.

“படித்ததில்லையா!” என்று பண்டிதர் மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு, “உங்கள் வாழ்நாளில் கால் வாழ்க்கை வீணாகி விட்டது! என்றார்.

ஆனால், நீங்கள் சாஸ்திரங்களை கண்டிப்பாக படித்திருப்பீர்கள்  அல்லவா!” எனப் பண்டிதர் தொடர்ந்து கேட்டார்.

“இல்லை, ஐயா, படித்திருக்கிறேன் எனக் கூற முடியாது!” என்று மிகுந்த வருத்தத்துடன் அப்பயணி பதிலளித்தார்.

“சரி, உங்கள் வாழ்க்கையில் பாதி வாழ்க்கை வீணாகி விட்டது!” எனப்  பண்டிதர் ஆணவத்துடன் கூறினார்.

“இந்து தத்துவத்தின் ஆறு அமைப்புகள் பற்றியாவது அறிவீர்களா?” எனப் பண்டிதர் தன் அறிவார்ந்த சொற்பொழிவை தொடங்குவதற்கான ஒரு இறுதி முயற்சியில் கேட்டார்.

“நான் அவற்றை பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை, ஐயா!” எனப் பயணி பதிலளித்தார்.

“கேள்விப்படவில்லையா? அப்படியென்றால்,  உன் வாழ்க்கையின் முக்கால் பாகம் வீணாகி விட்டது” எனத் தொடர்ந்தார். பண்டிதர் இதைப் பற்றி கூறியவுடன், படகு திடீரென முரட்டுத்தனமாக காற்றழுத்தத்தினால் தள்ளாட தொடங்கியது.

the learned pundit picture 3“புயல் வந்துவிட்டது! படகை  என்னால் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் இருக்கிறேன்! படகு கவிழ்ந்து விடும் போல தோன்றுகிறது. இதிலிருந்து குதித்து, நீந்தி, கரையோரம் ஒதுங்கி உங்களைக் காப்பாற்றி கொள்ளுங்கள்” எனப் படகோட்டி கூச்சலிட்டார்.

பண்டிதர் அரண்டு போய்விட்டார். “உங்களுக்கு நீந்தத் தெரியுமா?”  என்று அப்பயணி கேட்டார்.

“இல்லை, நான் நீச்சல் கற்றுக் கொள்ளவில்லை!” என்று பண்டிதர் முனகினார்.

“உங்களுக்கு நீச்சல் தெரியாதா! பின்னர் உங்கள் முழு வாழ்க்கையும் போய்விட்டது பண்டிதரே!” என்று வருத்தத்துடன் அந்த பயணி படகிலிருந்து வெளியே குதித்தார்.

கற்பித்தல்:

படிப்பறிவு மட்டுமே போதாது. அதை நடைமுறையில் சரியாக  செயற்படுத்த அனுபவமும், அறிவும், சரியான மனப்பான்மையும் தேவை. ஒருவர் அதிகமாக படித்திருக்கலாம்; ஆனால், தேவையான நேரத்தில் அந்த கல்வியினால் உதவியில்லை என்ற போது, அதனால் எந்தப் பயனும் இல்லை.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

ஸ்ரீ ஆதி சங்கரரின் மூன்று பாவச் செயல்கள்

நீதி உண்மை

உப நீதிசாசுவதமான உண்மை; எண்ணம்,வார்த்தை மற்றும் செயலில்  ஒற்றுமை

The three sins of Adi shankaraஒரு முறை, சங்கரர் தன் சிஷ்யர்களுடன், கங்கையில் நீராடிய பின், காசி நகரிலுள்ள ஸ்ரீ விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்றார். கோவிலில், ஸ்ரீ விஸ்வநாதருக்கு முன் நின்று, தான் செய்த மூன்று பாவச் செயல்களுக்கு மன்னிப்புக் கேட்டார். அவரது சிஷ்யர்கள், சங்கரர் பிராயச்சித்தம் செய்யும் அளவிற்கு, எந்த மூன்று பாவச் செயல்களை செய்திருப்பார் என அதிர்ச்சியடைந்து, ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

ஒரு சிஷ்யர், அந்த மூன்று பாவச் செயல்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார். ஆதலால், அவர் ஸ்ரீ சங்கரரிடம் அதைப் பற்றிக் கேட்டார். அதற்கு சங்கரர், “பரி பூரணமான கடவுள் எல்லா இடங்களிலும் ஸர்வ வியாபியாக திகழ்கிறார் என்பதை நான் நம்புகிறேன். அதை, பல போதனைகளிலும்  எடுத்துரைத்திருக்கிறேன். இருந்தாலும், கடவுள் காசி நகரில் மட்டுமே இருப்பதைப் போல், நான் அவரது தரிசனத்திற்காக இங்கு வந்துள்ளேன். சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று, என்னும் பாவச் செயலை நான் செய்துள்ளேன். இது முதல் தவறு.

தைத்ரீய உபநிஷத்தில் யதோ வாசோ நிவர்த்தந்தே, அப்ராப்ய மனஸா ஸஹ (அதை வார்த்தைகளாலோ, எண்ணங்களாலோ விவரிக்க முடியாது). கடவுள், எண்ணங்களுக்கும் வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டவர் என நான் அறிவேன். இருந்தும், நான் ஸ்ரீ காசி விஸ்வநாதர் அஷ்டகத்தில்அவரை வர்ணிக்க முயற்சித்தேன். சொன்ன உபதேசத்தை அடி பணியாத தவறை செய்துள்ளேன். மறுபடியும் நான் சொன்னது ஒன்று; ஆனால், செய்தது மற்றொன்று. இது என் இரண்டாவது தவறு.

மூன்றாவது தவறு என்னவென்றால்,நிர்வாண சதகம்” என்ற நூலில் நான் தெளிவாக எழுதிய வார்த்தைகள்:

ந-புண்யம் ந-பாபம், ந-சௌக்யம் ந-துக்கம்!

ந-மந்த்ரோ ந-தீர்த்தம், ந-வேதா ந-யக்ஞ:

அஹம் போஜனம் நைவ போஜ்யம், ந-போக்தா,

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

எனக்கு புண்ணியம் அல்லது பாவம் என்ற வேறுபாடு இல்லை. எனக்கு சுகமோ துக்கமோ கிடையாது;

எனக்கு புனிதமான மந்திரங்களோ, தீர்த்த யாத்திரைகளோ, வேத பாடங்களோ, யக்ஞங்களோ தேவை இல்லை.

நான் அனுபவமும் அல்ல; அனுபவத்தை அளிக்கும் பொருளும் அல்ல; நான் அனுபவிப்பவனும் அல்ல.

இந்த ஞானமும், அதிலிருந்து கிடைக்கும் மங்களகரமான பேரின்பமே நான்!

இருந்தும், நான் கடவுளின் முன் நின்று, ஏன் தவறுகளை மன்னிக்கும்படி பிரார்த்திக்கிறேன்? இது என் மூன்றாவது தவறு.

நீதி

சங்கரரின் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம், எண்ணம்,வார்த்தை மற்றும் செயலில் ஒற்றுமை இருக்க வேண்டும் என்ற முக்கியமான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது; ஒருவன், பரம்பொருளை அடைய வேண்டுமென்றால், எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்களில் ஒற்றுமை இருக்க வேண்டும். நம் உத்தேசங்கள் நல்லதாக இருந்தாலும், உலகம் வெளி தோற்றத்தை தான் கவனிக்கின்றது. ஆனால், நம் வெளி தோற்றம் எப்படி இருந்தாலும், கடவுள் நம் உத்தேசங்களை தான் கவனிக்கிறார். மனஸ் ஏகம், வசஸ் ஏகம், கர்மண் ஏகம் மகாத்மன: மனஸ் அன்யதா, வசஸ் அன்யதா, கர்மண் அன்யதா துராத்மன:” என ஒரு வசனம் இருக்கிறது. (எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்களில் ஒற்றுமை இருப்பவர்களே மகாத்மா, அதாவது சிறந்தவர்கள். இவற்றில் ஒற்றுமை இல்லாதவர்கள் தீயவர்கள். இதை ஒருவன் புரிந்து கொண்டு தன் வாழ்க்கை நடைமுறையில் பயிற்சி செய்ய வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

அர்ஜூனனும் கிருஷ்ணரும்

நீதி: நன் நடத்தை

உபநீதி: உதவும் மனப்பான்மை

Arjuna and Krishna - whatsapp - picture 1

அர்ஜூனனும், கிருஷ்ணரும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது, வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும்படி அவர்களைக் கேட்டார்.

அர்ஜூனன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, “ஆஹா! இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே” என்றெண்ணி வயோதிகர் சந்தோஷத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார்.

இதைத் தொலைவிலிருந்து கவனித்த கள்வன் ஒருவன் களவாடி சென்று விட்டான்.

Arjuna and Krishna - whatsapp - picture 2

சுமார் பத்து தினங்கள் கழித்து, மீண்டும் அந்த வழியே வந்த அர்ஜூனன் இதை கேள்விப்பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லை கொடுத்து, “இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையை சுகமாக வாழுங்கள்” என்றான்.

இந்த முறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றவர் தன் மனைவி, பிள்ளைகளிடம் கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்தார். அவ்வப்போது வீட்டில் யாருமில்லாத சமயம் மட்டும் எடுத்துப் பார்த்து விட்டு, கவனமாக பாதுகாத்து வந்தார்.

இதையறியாத அவர் மனைவி, ஒரு முறை பரணிலிருந்த அந்த பானையை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள். பானையை கழுவும் போது, அந்த கல் ஆற்றில் தவறி விழுந்து விட்டது.

அவள் நீரை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையும் சமயம், அதைக் கவனித்த வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி, “எங்கே அதிலிருந்த கல்?” என்று மனைவியை கேட்டார்.

ஏதுமறியாத மனைவி நடந்ததைக் கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவர் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினார்.

சில தினங்கள் கழித்து, மீண்டும் கிருஷ்ணரும் அர்ஜூனனும் வயோதிகரைப் பார்க்கும் போது, அவர் நடந்ததைக் கூறினார். அர்ஜூனன் கிருஷ்ணரிடம், “இவர் அதிர்ஷ்டமே இல்லாதவர்” என்று கூறினான்.

அதை ஆமோதித்த கிருஷ்ணர், “இந்த முறை நான் அவனுக்கு இரண்டு  காசுகளை மட்டுமே கொடுக்கிறேன்” என்றார்.

அர்ஜூனன் ஆச்சரியப்பட்டான். இரண்டு காசுகளை மட்டுமே பெற்ற வயோதிகர் கிளம்பிய பிறகு, அர்ஜுனன் கிருஷ்ணரைப் பார்த்து, “இதென்ன விந்தை….! இரண்டு காசுகள் மட்டும் அவருக்கு என்ன சுகத்தை கொடுத்து விடும்” எனக் கேட்டான்.

“எனக்கும் தெரியவில்லையே” எனக் கூறிய கிருஷ்ணர், “என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, அவன் பின்னால் செல்லலாம்” எனக் கூறினார்; இருவரும் வயோதிகரை பின் தொடர்ந்தனர்.

அவர் வீட்டிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் “உயிருடன் நான் பிடித்து வைத்திருக்கும் இரண்டு மீன்களை வாங்கிக் கொள்கிறாயா?” எனக் கேட்டான்.

உடனே தனக்குள் யோசித்த வயோதிகர், “இந்த இரண்டு சாதாரண காசுகள்  எப்படியும் என் குடும்பத்தின் ஒருவேளை பசியைக் கூட போக்காது” என எண்ணி, மீன்களை மறுபடியும் ஆற்றிலேயே விட்டு விட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கினார்.

அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை விடும் முன், அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து, மீனின் வாயில் விரலைவிட்டு சிக்கியிருந்ததை எடுத்தார்.

அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார்.

ஆம்! அவர் மனைவி ஆற்றில் தவறவிட்ட விலையுயர்ந்த கல் தான் அது…!

உடனே சந்தோஷத்தின் மிகுதியால், “என்னிடமே சிக்கி விட்டது” என்று கூச்சலிட்டார்.

அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவரிடம் கொள்ளையடித்த கள்வன் அங்கு வர, அவன் திடுக்கிட்டு, தன்னைத் தான் கூறுகிறார் என்றெண்ணி, மறுபடியும் ஓடுகையில் கிருஷ்ணரும் அர்ஜூனனும் அவனைப் பிடித்து விட்டனர்.

கள்வன் அனைத்தையும் ஒப்புக் கொண்டு, இவரிடம் களவாடியது மட்டுமல்லாது, மற்ற காசுகள், அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான்.

வயோதிகருக்கு அனைத்தையும் கொடுத்து, அவரை அனுப்பிவிட்டு, ஆச்சரியப்பட்ட அர்ஜூனன் கிருஷ்ணரிடம், “இது எப்படி சாத்தியம்?” எனக் கேட்க கிருஷ்ணரும் சிரித்துக்கொண்டே…

“இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார். அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை. ஆனால், இப்போதோ தன்னிடமிருந்தது மிகக் குறைவான  மதிப்பு என்பது தெரிந்து, தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்ததால், அவரை விட்டு சென்ற செல்வம் அவருக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை” எனக் கூறினார்.

உண்மை என்னவென்று தெரியுமா அர்ஜுனா – மற்றவர்கள் துன்பத்தில் இருக்கும் போது, அவர்களுக்கு நீ உதவி செய்தால், கடவுளின் பணியை நீயும் சேர்ந்து செய்வதால், அவர் உன்னை பாதுகாத்து வருகிறார். மற்றவர்களுக்கு கடவுளின் அன்பை ஏதாவது ஒரு விதத்தில் கொடுப்பது தான் உண்மையான சேவை.

நீதி:

ஒவ்வொருவரும் பலனை எதிர் பார்க்காமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும்.

இத்தகையவர்களுக்கு கடவுள் எச்சமயமும் உதவி புரிவார். தன்னலமற்ற சேவையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

செல்வந்தரும் ஏழைப் பணியாளும்

நீதி – உண்மை

உபநீதி – வாய்மை

Rich man and worker - whatsapp - picture 1ஒரு செல்வந்தர் இருந்தார். ஒரு நாள், அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.

ஏழைப் பணியாள் வாழைக்குலையை எடுத்துச் செல்லும் வழியில், அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே, அக்குலையிலிருந்து இரண்டு பழங்களை எடுத்து சாப்பிட்டு விட்டான்.

Rich man and worker - whatsapp - picture 2மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான். அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார். கனவில் இறைவன் வந்து, “நீ எனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்; ருசியாக இருந்தது” என்றார்.

செல்வந்தருக்கு மிகக் கோபம் வந்தது. ஒரு குலைப் பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப்பட்டார்.

Rich man and worker - whatsapp - picture 3மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தார்.

பணியாள், இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு, மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான். அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று செலந்தருக்குப் புரிந்தது.

நீதி:

ஏழைகளின் துன்பங்களை கடவுள் புரிந்து கொண்டு, தக்க சமயத்தில் காப்பாற்றுவார். அதனால் தான், கடவுளை நாம் “தீன தயாளன்” அல்லது “தீன சம்ரக்ஷகன்” என அழைக்கிறோம்.