அழுகிய வாழைப்பழங்கள்

Rotten bananas

நீதி – நன்நடத்தை

உபநீதி – காலம் தவறாமை

நரிமன் ஒரு நல்ல மனிதர். அவர் கடவுளை ஈடுபாட்டுடன் தியானித்து, மனோபலம் மற்றும் ஊக்கம் பெற வேண்டினார். அவரது நேரம் மற்றும் பணத்தை பெரும்பாலும் ஏழைகளின் சேவைக்காகவே செலவழித்தார். அவர் இலவச மருத்துவ முகாம்கள் நடக்கும் மருத்துவமனைகளில் சேவை செய்து வந்தார். அவர் மருத்துவமனையில் உள்ள ஏழை நோயாளிகளுக்கு பழங்களை வாங்கிக் கொடுப்பார்; சில சமயங்களில், ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகளைத் திரையரங்கிற்கு அல்லது ஐஸ் கிரீம் விருந்திற்கு அழைத்துச் செல்வார். அவர் மேற்கொண்ட ஒவ்வொரு சேவையையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சேவையாகவே கருதினார். ஒரு நாள் அவர் தனது இளைய மகனிடம், “கடவுளுக்கு வாழைப்பழங்களை நைவேத்தியம் செய்வதற்காக நான் இன்று கோவிலுக்குப் போகிறேன். அதற்குப் பிறகு, அவற்றை கோவில் வாசலில் காத்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு விநியோகிப்பேன். நீ என்னுடன் ஏன் வரக்கூடாது?” என்று கேட்டார். பதிலுக்கு அவன் “அட! நீங்கள் வேறு அப்பா!! கோவிலுக்கு செல்வது, பிரார்த்தனை செய்வது… சேவைகளில் ஈடுபடுவது… இவற்றில் எனக்கு விருப்பம் இல்லை. மேலும் இவையெல்லாம் வயதானவர்கள் செய்யும் சில விஷயங்கள். அதனால், உங்களுக்கு ஈடுபாடு இருக்கிறது. நான் ஒரு இளைஞன்; இப்பொழுது எனக்கு இதில் ஆர்வம் இல்லை. உங்களைப் போல வயதான பிறகு யோசிக்கிறேன்!” என்று கூறி, தான் கேட்டுக் கொண்டிருந்த மேற்கத்திய இசைக்கு ஏற்றவாறு, மெதுவாக தனது உடலை அசைத்துக் கொண்டிருந்தான். நரிமன் பதில் ஒன்றும் கூறாமல், தான் நினைத்த காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்காக வெளியே சென்று விட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு நரிமன், பெரிய கூடை நிறைய கனிந்த வாழைப்பழங்களை வீட்டு வாசலில் வைத்து விட்டு, குளிப்பதற்காகச் சென்றார். அச்சமயம் அவரது மகன் கூடை நிறைய கருப்பு நிற வாழைப்பழங்களையும், அவற்றை மொய்த்து கொண்டிருந்த பூச்சிகளையும் கவனித்தான். பார்வைக்கே சகிக்க முடியாத வண்ணம் சில வாழைப்பழங்கள் அழுகிய நிலையில் இருந்தன. தந்தை ஒரு வெள்ளை நிற குர்தா – பைஜாமா அணிந்து வந்து, தனது காரில் வாழைப்பழங்களை வைத்துக் கொண்டிருந்தார். மகன், “அப்பா, நீங்கள் இந்த வாழைப்பழங்களை எங்கே எடுத்துக் செல்கிறீர்கள்?” என்று கேட்டான். “கோவிலுக்கு”, என்று அவர் சர்வ சாதாரணமாகக் கூறினார்.

“ஆனால் அப்பா, இந்த வாழைப்பழங்கள் அழுகி இருக்கின்றனவே. மேலும், பூச்சிகளும் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் கடவுளுக்கு அவற்றை அர்ப்பணிக்க விரும்பியிருந்தால், குறைந்த பட்சம் புதியவற்றை வாங்கியிருக்க வேண்டும், அல்லவா? இவற்றை ஆலயத்திற்கு வழங்குவது இழிவான செயலாகும்” என்று கூறினான்.

அதற்கு நரிமன், “முதியவனாகியப் பிறகு கடவுளுக்கு சேவை செய்வது சரி என்று நினைக்கிறாய்; அந்த வயதான காலத்தில் நீ சேவை செய்வதற்கு தகுதி உள்ளவனாக இருப்பாயா? அப்படி இருப்பது சரி என்றால், இந்த பழைய, அழுகிய வாழைப்பழங்களை கடவுளுக்கு செலுத்துவது சரி தானே!” என்றார்.

மகனுக்கு என்ன பேசுவது என்று புரியாமல் தவித்தான். அவனால் தனது தந்தையின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. சரியான தருணத்தில் சரியான அஸ்திரத்தால் தாக்கியிருந்ததை தந்தை அறிந்திருந்தார். அவர் தொடர்ந்து, “இளமையும், திறனும் இருக்கும் போது இறைவனுக்கு பணியாற்ற முடியும்; சிறந்த சேவைகளை வழங்க முடியும். தேவைப்படுபவர்களுக்கு சிறிது பணத்தை செலவழித்து, நேரத்தையும் ஒதுக்க முடியும். வயதான பின்னர் நமது உடலில் பிரச்சனைகள் இருக்கக் கூடும்; சேவை செய்ய போதுமான வலிமை இருக்காது. நமக்கு செலவுகள் மற்றும்  நிதி வரம்புகள் இருக்கலாம். நாம் தியானத்தில் உட்கார முடியாமல் போகலாம்; யாருக்கு தெரியும்! வாதம் அல்லது வாத நோயால் ஏற்படும் தொல்லைகள் பல இருக்கலாம். அப்பொழுது நம்மால் என்ன செய்ய இயலும்? அந்த நேரத்தில் நமக்கு இறைவனின் கிருபையும் தயவும் மற்ற சமயங்களை விட அதிகமாக வேண்டும்” என்றார்.

தந்தை கடைசிக் கூடையை வண்டியில் வைத்துவிட்டு வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்றார். அவர் தனது கருத்தை தெரிவித்து விட்டு எங்கே சென்றார் தெரியுமா? ஆலயத்திற்குச் செல்லவில்லை, ஏனென்றால் இந்த வாழைப்பழங்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்க பொருந்தாது என்று அவர் அறிந்திருந்தார். அதற்கு பதிலாக அவர் பசுக்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அவற்றிற்கு வாழைப்பழங்களை உணவாக அளித்தார். எந்த இடத்திற்கு போய் சேர வேண்டுமோ, வாழைப்பழங்கள் அங்கு சரியாக போய் சேர்ந்தன.

நீதி:

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்

கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

மற்றவர்களுக்கு ஒரு உதவியை செய்ய கூடிய நிலையில் இருக்கும் போதே செய்துவிட வேண்டும். இது பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஒரு செயல் அர்த்தமுள்ளதாக மாறுவதற்கு, சரியான நேரத்தில் சில பணிகளை செய்ய ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டும். நேரத்தை கடத்தி தாமதப்படுத்தாமல், கடமைகளை ஆற்ற வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s