Archive | February 2018

கோபக்கார சாது

நீதி: நன் நடத்தை / பொறுமை 

உபநீதி: உள் நோக்குதல்

மக்கள் தொகை அதிகமாக இருந்த ஒரு கிராமத்தில், சாது ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு மரியாதை கொடுத்து, அவரிடமிருந்து தெய்வீக ஞானம் மற்றும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக பல மக்கள் அவரைத் தேடி வந்தனர். மக்களின் கேள்விகள் மற்றும் பிரச்சனைகளை சமாளிப்பதற்கே பல மணி நேரம் ஆனதால், சாதுவிற்குத் தன் தினசரி சாதனைகளையும், தெய்வீக பயிற்சிகளையும் செய்வதற்கு நேரம் போதவில்லை; அதனால், அவர் மிகுந்த கோபமுற்றார். கிராமத்தை விட்டு விட்டு, தொலைவில் இருக்கும் மலை ஏதாவது ஒன்றிற்குச் சென்று, அங்கு நிசப்தமாக ஜபம் செய்தால் கோபம் வராமல் இருக்கும் என்று எண்ணி, அவ்வாறே செயற்பட்டார்.

the angry sadhu - the thatched hut

பல பழ மரங்களும், அழகான நதி ஒன்றும் சூழ்ந்திருந்த ஒரு மலைக்குச் சென்று, அங்கு அவர் ஒரு குடிசையைக் கட்டிக் கொண்டு, தன் சாதனையைத் தொடங்கினார்.

ஒரு முறை, அவருக்குத் தாகமாக இருந்ததால், அவரிடமிருந்த மட்கலம் ஒன்றில் தண்ணீர் எடுக்க, மலையிலிருந்து கீழே வந்து கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக, அவருக்குத் தண்ணீர் கண்ணில் தென்பட்டு, மட்கலத்தில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தார்; கை தவறி மட்கலம் கீழே விழுந்து, மலையிலிருந்து உருண்டு சென்றது. சாது மறுபடியும் கீழே சென்று, தண்ணீரை நிரப்பி வந்தார். ஆனால், இச்சமயம் அவர் கால் ஒரு கல்லில் பட்டு,  சற்றுத் தடுமாறினார். உடனே, சாது கோபமுற்று மட்கலத்தைத் தூக்கி எறிந்தார்.

அச்சமயம் அவருக்கு ஞானோதயம் வந்தது. கிராமத்தில் இருந்த போது, மக்கள் தான் அவர் கோபத்திற்குக் காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்; ஆனால், தற்சமயம் இங்கு மலையில் யாருமே இல்லையே. ஆஹா! கோபம் தன்னுடைய இயற்கை குணத்தினால் வருவது என்றும், மக்கள் ஏற்படுத்தியது அல்ல என்பதையும் புரிந்து கொண்டார்.

ஞானோதயத் தேடலுக்காக, காவி நிற உடையணிந்து, தன் குடும்பத்தை விட்டு விட்டு சாதுவாக மாறி என்ன லாபம்? அன்பு, பொறுமை போன்ற நற்பண்புகளை மேம்படுத்திக் கொண்டு, உள் எதிரிகளான கோபம் மற்றும் கர்வத்தை விட வேண்டும் என அவர் புரிந்து கொண்டார். மக்கள் அவருக்கு மரியாதை கொடுத்து, அவரை ஞானியாக கருதினர்; ஆனால், அவரால் கோபத்தைக் கூட கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் போது, வெளியே இருக்கும் தோற்றத்தால் என்ன பயன்?
the angry sadhu picture 3பொறுமை மற்றும் கோபப்படாமல் இருப்பதற்குத் தேவையான நற்பண்புகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் சாது கிராமத்திற்குச் சென்று, தன் தியானத்தைத் தொடர்ந்து, அதற்குப் பிறகு கோபப்படுவதை விட்டு விட்டார்.

நீதி:

ஜடை முடி வைத்துக் கொள்வதோ, தலையை மழித்துக் கொள்வதோ, காவி உடை அணிவதோ சாதுக்களின் லட்சணம் அல்ல. வெளித் தோற்றத்தைப் பார்த்து, ஒருவர் எப்படிப் பட்டவர் என்று யூகிக்க முடியாது. ஒவ்வொருவரும், தன்னைத் தானே உணர்ந்து கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு, குருவின் பாதங்களில் சரணடைந்து, உண்மையை நாடி, நம் உள்ளே இருக்கும் நற்பண்புகளைப் பலப்படுத்தி கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான், அது உண்மையான மாற்றம் எனக் கூறலாம். வெளித் தோற்றம் ஓரளவிற்கு உள்ளே இருக்கும் நற்பண்புகளை மேம்படுத்த உதவலாம்; ஆனால், முதலில் உள்ளே இருக்கும் நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால், அது வெளித் தோற்றத்தை முற்றிலும் மாற்றி விடும். நடைமுறையில், நற்பண்புகளுடன் வாழ்க்கையை செயலாற்றினால், முகத்தில் அது வெளிப்படும். வெளித்தோற்றம் தற்காலிகமானது. அதனால், உள் உணர்வுகளை புரிந்து கொள்வது மிக முக்கியம்; தூய்மையான மனதுடன், நமக்குத் தேவையான நற்பண்புகளை மேம்படுத்திக் கொண்டால், தெய்வீகப் பாதையில் செல்ல வழி வகுக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

நல்லோர் சேர்க்கையால் பெறும் நன்மைகள்

நீதி – நன் நடத்தை

உபநீதி – மனத் தூய்மை / உண்முக நோக்கு  

The ultimate goal of life picture 1

ஒரு குரு, தனக்குத் தெரிந்த அனைத்துப் பாடங்களையும் தன் சீடனுக்குக் கற்பித்து முடித்தார். அவர், இறுதிப் பாடத்திற்கு, அருகிலிருக்கும் மற்றொரு ஆஸ்ரமத்திற்குச் சென்று அங்குள்ள குருவிடம் பயிலுமாறு கூறினார். உடனடியாகச் சீடன், “குரு நம்மை ஏன் மற்றொரு குருவிடம் அனுப்புகிறார்? அந்த குருவை விட நம் குருதானே அதிக ஞானமுள்ளவர்?” என்று குழம்பினான்.

the ultimate goal of life - picture 2

இவ்வாறு குழப்பத்தில் இருந்தாலும், குருவின் ஆணைக்குக் கீழ்படிய வேண்டும் என்ற முடிவுடன் சீடன் அருகிலுள்ள ஆஸ்ரமத்திற்குச் சென்றான். அவனுக்கு அதிர்ச்சி தரும் விதமாக, அந்த குரு வகுப்பெடுப்பதை நிறுத்தியிருந்தார். அவர் தம் சீடர்களுக்கு அன்போடு உணவு பரிமாறுவதிலும், சாப்பிட்ட மீதியைச் சுத்தம் செய்வதிலும், பாத்திரங்களைக் கழுவுவதிலும் ஈடுபட்டிருந்தார்.

அந்தச் சீடன் இதைப் பார்த்து அன்பு கலந்த சேவை என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டான். பின்னர், இன்னுமொரு முக்கியச் செயலையும் கவனித்தான். குரு உறங்கச் செல்லுமுன், அனைத்து பாத்திரங்களையும் கழுவி, வரிசையாக அடுக்கிவிட்டுச் சென்றார்.

அடுத்த நாள் காலை, அந்த பாத்திரங்களை எடுத்து, மீண்டும் அவை அனைத்தையும் கழுவினார்; பின்னர் சமைக்க ஆரம்பித்தார். அந்தப் பாத்திரங்களெல்லாம் முந்தைய இரவு நன்கு கழுவி வைக்கப்பட்டவையே; மேலும் அவற்றில் ஒரு சிறு துளி தூசு கூட இல்லை. ஆனாலும் ஏன் குரு அவற்றை மீண்டும் கழுவ வேண்டும் என்று அந்த சீடன் அதிசயித்துக் கொண்டிருந்தான். இவையனைத்தையும் நன்கு கவனித்த அவன், தன் முதல் குருவிடம் விவரிக்கலாம் என்று அவரிடம் சென்றான்.

அவன் குருவிடம், “அந்த குரு ஏன் முதல் நாள் கழுவி சுத்தம் செய்த பொருட்களை மீண்டும் அடுத்த நாள் காலையும் சுத்தம் செய்ய வேண்டும்? இது மிகவும் விநோதமாக இருக்கிறதே?” என்று கேட்டான்.

அதற்கு குரு, “ஆம், இதை தான் நீ நன்கு கவனித்து, புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.

நீ உன் மனதை, வழக்கமாக நன்கு சுத்தம் செய்கிறாய். காலப்போக்கில், அங்கு பனிமூட்டம் போன்ற ஒரு தெளிவற்ற நிலை உருவாகிறது. “நான் ஒரு முறை தியானத்தில் அமர்ந்து அதை அப்படியே தடுத்து விடுவேன்” என்று மட்டும் சொல்லிவிடாதே. உன் மனம் தூசு படியாமல் இருக்க, அதை கண்டிப்பாக சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். நம் மனதை துடைத்து சுத்தம் செய்வது ஒரு தொடர்ச் செயலாகும்” என்று கூறினார்.

நீதி:

the ultimate goal of life - picture 3

தன்னுடைய உண்மை நிலையை உணர்ந்து, இறுதியில் மூலாதாரமாகிய அந்த இறைவனுடன் ஒன்றாகச் சேருவதே ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை லட்சியம் ஆகும். நாம் நம் தினசரி கடமைகளிலும், சொந்த பந்தங்கள் மற்றும் லௌகீகச் செயல்களிலும் அதிகமாக சிக்கிக் கொண்டு இருப்பதனால், நமக்கு நம் ஆத்மாவை உணரவோ அல்லது அதைப் பற்றி சிந்திக்கவோ அதிக நேரம் கிடைப்பதில்லை.

நாம் எப்பொழுதும் நம் உடல் மற்றும் நம்மைச் சுற்றயுள்ள உறவுகளுடனேயே நம்மை இணைத்துக் கொண்டிருக்கிறோம். பின்னர், இந்த உறவுகளை இழந்தாலோ அல்லது நம் உடல் நோய்வாய்ப்பட்டாலோ மிகவும் வருந்துகிறோம்; ஏனென்றால், நிலையில்லாத ஒன்றின் பின்னாலேயே நாம் ஓடுகிறோம். உண்மைதான்! இதைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. செயலை விட சொல்வது எளிது.

ஆனால், “சத்சங்கம்” அல்லது சிறந்த ஞானிகளுடன் சேர்ந்தால், “நான் யார்? என் வாழ்க்கை லட்சியம் என்ன?” என்பதைப் பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டும். ஒரு குருவோ அல்லது நல்லோர் சேர்க்கையோ இல்லாமல் ஒருவன் ஆத்ம விசாரணை செய்ய முற்படுவது எளிதல்ல. ஆகையால், ஆத்ம ஞானம் பெறுவதற்கான வழியின் முதல் படி, நல்லோர் சேர்க்கையே. நாம் இப்போது துவங்கினால், எவ்வளவு பிறவிகளுக்குப் பிறகு நம் இலக்கை அடைவோம் என்பது தெரியாது. ஆனால், நாம் இப்படிச் செய்தால், குறைந்த பட்சம் இந்த வாழ்க்கையிலாவது, சரியான வழியில் நம் பயணத்தைத் தொடங்கியிருப்போம்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

பன்றி ரூபத்தில் தேவேந்திரன்

நீதி – தர்மம் / நன் நடத்தை

உபநீதி – தன்னை உணர்ந்து கொள்ளுதல்

Indra as a pig picture 1

ஒரு முறை, தேவர்களின் அரசரான இந்திரன், சிற்றின்பங்களைத் தேடி பூலோகத்திற்கு வந்தார். பன்றிகள் புலன் உணர்ச்சிகளில் அதிகமாக ஈடுபாடு கொள்வதற்குப் பெயர் போனவை. ஆதலால், அவர் பூமியில் பன்றியாகப் பிறவி எடுத்தார். ஒரு அழகான பெண் பன்றியைத் தேர்ந்தெடுத்து, அவர் அவளைத் திருமணம் செய்து கொண்டு பல பன்றிக் குட்டிகளை ஈன்றெடுத்தார். நாளடைவில், தன்னையே மறந்து அவர் பன்றி குடும்பத்தோடு ஈடுபாடு கொண்டார்.

தேவ லோகத்தில் அனைவரும் இந்திரன் திரும்பி வருவதற்காகப் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்திரன் நீண்ட காலத்திற்குப் பிறகும் திரும்பி வராததால், அவர்கள் பூலோகத்திற்கு வந்து, இந்திரன் பன்றியாக பிறவி எடுத்ததின் விளைவுகளைக் கண்டனர். அவர் பன்றியாக பிறவி எடுப்பதற்கு முன்பாக, தேவர்களுக்கு நாயகனான தேவேந்திரனாக இருந்ததை ஞாபகப் படுத்தி, அவர் மனதை தெளிவாக்க தேவர்கள் முயற்சித்தனர். மேலும், பன்றியின் வாழக்கையை விட்டு விட்டு, திரும்பி வருவதற்கும் வலியுறுத்தினர்; ஆனால் தேவேந்திரன் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இந்த பன்றி வாழ்க்கையில் பற்றுதலுடன் இருந்ததால், இந்த அறிவுரையை மறுத்து விட்டு அங்கிருந்து கோபமாக முணுமுணுத்துக் கொண்டு சென்றுவிட்டார்!

உயிரின் இழப்பைக் கண்டால், இந்திரன் இந்த நிலையற்ற வாழ்க்கையை விட்டு விட்டு, தன் இயல்பான தன்மையைப் புரிந்து கொள்வார் என நினைத்து, தேவர்கள் ஒரு பன்றிக் குட்டியின் உயிரை பறிக்க தீர்மானித்தனர். ஆனால், ஒவ்வொரு பன்றியின் இழப்பிற்குப் பிறகும், இந்திரன் உயிரோடு இருக்கும் மற்ற பன்றிகளுடன் இணைந்து இருந்தார். முடிவாக, தேவர்கள் எல்லாப் பன்றிக் குட்டிகளையும் கொன்று விட்டனர்.

indra as a pig picture 2

தேவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், இந்திரன் பன்றிக் குடும்பத்தைப் பெருக்கிக் கொண்டே போனார். மனைவியின் மீது வைத்திருக்கும் பற்று காரணமாக இருக்குமோ, என்று நினைத்த தேவர்கள் மனைவியின் உயிரையும் பறித்தனர். இந்திரன் துயரமடைந்தார். அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அறிவுரையைக் கேட்டு, மறுமணம் செய்து கொண்டார். கதை தொடர்ந்தது.

தேவர்கள் ஒன்றும் புரியாமல் தவித்தனர். அச்சமயம், அவ்வழியாகச் சென்ற நாரத முனிவர் நடந்த எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, “நீங்கள் ஏன் அவருடைய மனைவியையும் குழந்தைகளையும் கொன்றீர்கள்? அவரது பற்று தனது உடலுடன் உள்ளது; உடலை அழித்து விடுங்கள்” என்று கூறினார். எனவே, தேவர்கள் இந்திரனின் உடலை இரண்டு பகுதிகளாக வெட்டினர். உடனே இந்திரன் உடலை விட்டு வெளியேறி, “நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்?” என்று கூறி தேவ லோகத்திற்குத் திரும்பினார்.

உடல் மற்றும் இந்திரியங்களின் இச்சைகள் நம்மை ஆழமாகக் கட்டுப்படுத்தும். நாம் இவ்வுலகில் கொண்டிருக்கும் அனைத்து பற்றுதலுக்கும், இன்ப துயரங்களுக்கும் இதுவே காரணமாகும்.

நீதி:

indra as a pig picture 3

நம் உடல் தற்காலிகமானது என்று அறிந்திருந்தும் நாம் அதன் மேல் கொண்டுள்ள பற்று மிக ஆழமானது. நம் மூச்சு இருக்கும் வரையே உடல் மதிக்கப்படும். ‘பிராணன்’ அதாவது உயிர் சக்தி நம்மை விட்டுவிட்டால், உடல் சிதையத் தொடங்குகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மிகவும் நன்றாக கவனித்துக் கொள்ளப்பட்ட அதே உடல், உயிர் பிரிந்ததும் தேவையற்றதாகிறது.

அதில் ஜீவன் உள்ளவரை, அது ‘சிவம்’ ஆகும் (தெய்வத்தன்மையின் இருப்பிடம்), ஆனால் பிராணன் உடலை விட்டு வெளியேறியவுடன், அது ‘சவம்’ (பிணம்) ஆகிறது. எனவே நாம் இதை நினைவில் வைத்துக் கொண்டு உடலின் மீது அதிகப் பற்று வைக்கக் கூடாது. நம் உடலைக் கவனித்துக் கொள்ளாமல், புறக்கணிக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல.

ஆம், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து, பேரின்பத்தை உணர்வதற்கான ஒரு வழியாக அல்லது ஒரு கருவியாகப் பயன்படுத்த இந்த ‘வாகனத்தை’ (நமது உடலை) நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்; அதன் மீது தவறான பற்றுதலுடன் அல்ல. நாம் தினந்தோறும் சிறிது சிறிதாக மூழ்கிக் கொண்டிருக்கும் அறியாமைப் பெருங்கடலை கடப்பதற்கும், அகற்றுவதற்கும் அந்த புரிதலை நமக்குத் தருமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். பஜகோவிந்தம் என்ற பாடலின் வரிகள் மூலம் சங்கரர் உடலின் தற்காலிக இயல்பை நமக்கு நினைவூட்டி, இறுதியில் நம் ஆத்மாவை வழிநடத்தி, உண்மையான சுயத்தை உணர்ந்து கொள்ள உதவுகிற இறைவனின் பெயரை ஸ்மரணம் செய்ய நமக்கு அறிவுறுத்துகிறார்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

பெற்றுக் கொள்வதற்கு முன் கொடுக்கவும் – கர்மாவின் கொள்கைகளை சார்ந்த ஒரு கதை

நீதி: நன்னடத்தை, நன்னம்பிக்கை

உபநீதி: பெருந்தன்மை, திட நம்பிக்கை

give before you receive picture 1ஒரு சமயம், பாலைவனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு மனிதன் தனது பாதையை தவறவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கவலையுற்றான். அவன் குடுவையில் உள்ள தண்ணீரும் இரண்டு நாட்களுக்கு முன்பே தீர்ந்து விட்டது; அதனால் அவன் மிகவும் சோர்வாக காணப்பட்டான். அவனுக்கு தண்ணீர் கிடைக்காவிட்டால் நிச்சயமாக இறந்து விடுவான் என்று அவனுக்கு தெரிந்திருந்தது. ஒரு பாழடைந்த குடிசை அவன் கண்ணுக்கு தெரிந்தது. இது பிரமையாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டே வேறு வழி தெரியாமல் முன் நோக்கிச் சென்றான். அருகில் சென்ற போது தான் இது உண்மை என்று உணர்ந்தான். தனக்கிருந்த சக்தியை பயன்படுத்திக் கொண்டு, மெதுவாக கதவிற்கு அருகில் சென்றான்.

அந்த குடிசையை நெருங்கியதும், பல நாட்களாக அங்கு யாருமே தங்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டான். மிகுந்த நம்பிக்கையுடன் வீட்டிற்குள் தண்ணீர் கிடைக்கும் என்று நினைத்து, உள்ளே சென்றான்.

குடிசையின் உள்ளே ஒரு நீர்வாங்கு குழாயைக் கண்டதும் அவனின் இதயம் பட படவென்று அடித்துக் கொண்டது. தரையில் உள்ள குழாயைப் பார்த்ததும், தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை சற்று அதிகரித்தது.

அவன் நீர்வாங்கு குழாயை உபயோகப் படுத்தி பார்த்தான். தண்ணீர் வரவில்லை. கடைசியில் சோர்வும் விரக்தியும் அடைந்து தன் முயற்சியை விட்டு விட்டான். தான் இறந்து விடப் போகிறோம் என்று நினைத்தான்.

give before u receive picture 2அப்போது குடிசையின் ஓரத்தில் ஒரு தண்ணீர் பாட்டிலை கண்டான். பாட்டிலிலிருந்து தண்ணீர் வெளியே வழியாமல் இருக்க, பாட்டில் இறுக்கமாக மூடி இருந்தது. அந்த பாட்டிலில் உள்ள தண்ணீரை  குடிப்பதற்கு முன்பு, அதில் ஒரு காகிதம் ஒட்டி இருப்பதைப் பார்த்தான். அதில் “இந்த தண்ணீரை பயன்படுத்தி நீர்வாங்கு குழாயைத் துவக்க வேண்டும். பின்னர் மறக்காமல் இந்த பாட்டில் முழுவதும் தண்ணீர் நிரப்ப வேண்டும்” என்று எழுதி இருந்தது.

அவனுக்கு ஒரே குழப்பம். அந்த காகிதத்தில் உள்ள தகவல்களை பயன்படுத்தி, அந்த குழாயில் தண்ணீரை ஊற்ற வேண்டும் அல்லது அதை விட்டு விட்டு அந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

என்ன செய்வது? தண்ணீரை நீர்வாங்கு குழாயில் ஊற்றினால் குழாய் வேலை செய்யும் என என்ன உத்தரவாதம்? குழாயில் ஏதாவது கோளாறு இருந்தால் என்ன ஆகும்? குழாயில் கசிவு ஏற்பட்டால் என்ன செய்வது? நிலத்தடி நீர்தேக்கம் வறண்டு போயிருந்தால் என்ன ஆகும்?

ஆனால்…காகிதத்தில் எழுதியிருந்தது உண்மையாக இருக்குமோ? இந்த முயற்சியை எடுக்கலாமா? இது தோல்வியில் முடிந்தால் இந்த பாட்டிலில் உள்ள கடைசி சில நீர்த் துளிகளையே அவன் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமாக இருக்கும்.

கைகள் நடுங்கின. குழாயில் தண்ணீரை ஊற்றினான். கண்களை மூடி பிரார்த்தனை செய்துவிட்டு, குழாயைத் துவக்க முயற்சித்தான்.

கல கல என்ற சத்தத்துடன் தண்ணீர் கொட்டியது. அதைக் கண்டதும் அவன் மிகவும் சந்தோசஷப்பட்டு தான் உயிரோடு இருக்கப் போகிறோம் என்று நம்பினான்.

தன்னால் முடிந்த வரை தண்ணீர் குடித்துவிட்டு அந்த குடிசையை சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கு ஒரு பென்சிலும், அப்பகுதியின் வரைபடமும் இருந்தது. அந்த வரைபடத்திலிருந்து அவன் இருக்கும் இடம் எது, எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதையும் மற்றும் அவன் செல்லப் போகும் இடம் வெகுதூரத்தில் இருப்பதையும் தெரிந்து கொண்டான்.

அங்கிருந்த பாட்டிலில் தண்ணீரை நிரப்பி விட்டு அதை கார்க் வைத்து அடைத்தான். அங்கிருந்து கிளம்புவதற்கு முன் அவன் “என்னை நம்புங்கள், இது வேலை செய்யும்” என எழுதி வைத்தான். தனது குடுவையிலும் தண்ணீரை நிரப்பிக் கொண்டு அங்கிருந்து தன் பயணத்தை தொடங்கினான்.

கற்பித்தல்:

இந்த கதை நமது வாழ்க்கையை குறிக்கும். இந்த கதையிலிருந்து, “நாம் எதையும் பெற்றுக் கொள்வதற்கு முன் கொடுத்துப் பழக வேண்டும்” என்று கற்றுக் கொள்கிறோம். முக்கியமாக, நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இந்த கதையிலுள்ள மனிதனுக்கு அவன் செயல் பயனளிக்குமா என்று தெரியவில்லை; எதிர்பார்ப்பு ஒன்றுமில்லாமல் நம்பிக்கையுடன் செயற்பட்டான்.

வாழ்க்கையிலுள்ள நல்ல விஷயங்களை தண்ணீர் குறிப்பிடுகின்றது. தண்ணீரை, முகத்தில் ஒரு புன்சிரிப்பை வரவழைப்பதற்கும், நல்ல வழியில் வாழ்க்கையை நடத்தி செல்வதற்கான ஒரு நல்ல சக்தி என்றும் நினைத்துக் கொள்ளலாம். பொருள் சார்ந்த விஷயமாகவும், தொட்டு உணர முடியாத விஷயமாகவும் அதைக் கருதலாம்; பணம், அன்பு, நட்பு, சுகம், மரியாதை போன்ற விஷயங்களாகவும் இருக்கலாம். வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பெறுவதற்கு ஆசைப் படுகிறோமோ அதை நீர் குறிக்கின்றது.

நீர்வாங்கு குழாய் கர்மச் சுழலை குறிப்பிடுகின்றது. அதில் சிறிதளவில் தண்ணீர் ஊற்றிய பிறகு பல மடங்கு நீர் கிடைப்பதை போல, வாழ்க்கையில் நாம் பகிர்ந்து கொள்வது பல மடங்காக வளர்ந்து நமக்கே  திரும்பக் கிடைக்கிறது.

நல்ல செயல்களின் பயனை, உடனே காண முடியாவிட்டாலும் கர்ம சுழலில் அதற்கு நிச்சயமாக பயனுண்டு. சக்தி வாய்ந்த பலனாக அது நமக்கு திரும்ப கிடைக்கிறது.

கதையில், அம்மனிதன் நம்பிக்கையுடன் நீர்வாங்கு குழாயை நிரப்பியதை போல, நாமும் மற்றவர்களின் வளர்ச்சிக்காக எதிர்பார்ப்பில்லாமல் செயற்பட வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com