கோபக்கார சாது

நீதி: நன் நடத்தை / பொறுமை 

உபநீதி: உள் நோக்குதல்

மக்கள் தொகை அதிகமாக இருந்த ஒரு கிராமத்தில், சாது ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு மரியாதை கொடுத்து, அவரிடமிருந்து தெய்வீக ஞானம் மற்றும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக பல மக்கள் அவரைத் தேடி வந்தனர். மக்களின் கேள்விகள் மற்றும் பிரச்சனைகளை சமாளிப்பதற்கே பல மணி நேரம் ஆனதால், சாதுவிற்குத் தன் தினசரி சாதனைகளையும், தெய்வீக பயிற்சிகளையும் செய்வதற்கு நேரம் போதவில்லை; அதனால், அவர் மிகுந்த கோபமுற்றார். கிராமத்தை விட்டு விட்டு, தொலைவில் இருக்கும் மலை ஏதாவது ஒன்றிற்குச் சென்று, அங்கு நிசப்தமாக ஜபம் செய்தால் கோபம் வராமல் இருக்கும் என்று எண்ணி, அவ்வாறே செயற்பட்டார்.

the angry sadhu - the thatched hut

பல பழ மரங்களும், அழகான நதி ஒன்றும் சூழ்ந்திருந்த ஒரு மலைக்குச் சென்று, அங்கு அவர் ஒரு குடிசையைக் கட்டிக் கொண்டு, தன் சாதனையைத் தொடங்கினார்.

ஒரு முறை, அவருக்குத் தாகமாக இருந்ததால், அவரிடமிருந்த மட்கலம் ஒன்றில் தண்ணீர் எடுக்க, மலையிலிருந்து கீழே வந்து கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக, அவருக்குத் தண்ணீர் கண்ணில் தென்பட்டு, மட்கலத்தில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தார்; கை தவறி மட்கலம் கீழே விழுந்து, மலையிலிருந்து உருண்டு சென்றது. சாது மறுபடியும் கீழே சென்று, தண்ணீரை நிரப்பி வந்தார். ஆனால், இச்சமயம் அவர் கால் ஒரு கல்லில் பட்டு,  சற்றுத் தடுமாறினார். உடனே, சாது கோபமுற்று மட்கலத்தைத் தூக்கி எறிந்தார்.

அச்சமயம் அவருக்கு ஞானோதயம் வந்தது. கிராமத்தில் இருந்த போது, மக்கள் தான் அவர் கோபத்திற்குக் காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்; ஆனால், தற்சமயம் இங்கு மலையில் யாருமே இல்லையே. ஆஹா! கோபம் தன்னுடைய இயற்கை குணத்தினால் வருவது என்றும், மக்கள் ஏற்படுத்தியது அல்ல என்பதையும் புரிந்து கொண்டார்.

ஞானோதயத் தேடலுக்காக, காவி நிற உடையணிந்து, தன் குடும்பத்தை விட்டு விட்டு சாதுவாக மாறி என்ன லாபம்? அன்பு, பொறுமை போன்ற நற்பண்புகளை மேம்படுத்திக் கொண்டு, உள் எதிரிகளான கோபம் மற்றும் கர்வத்தை விட வேண்டும் என அவர் புரிந்து கொண்டார். மக்கள் அவருக்கு மரியாதை கொடுத்து, அவரை ஞானியாக கருதினர்; ஆனால், அவரால் கோபத்தைக் கூட கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் போது, வெளியே இருக்கும் தோற்றத்தால் என்ன பயன்?
the angry sadhu picture 3பொறுமை மற்றும் கோபப்படாமல் இருப்பதற்குத் தேவையான நற்பண்புகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் சாது கிராமத்திற்குச் சென்று, தன் தியானத்தைத் தொடர்ந்து, அதற்குப் பிறகு கோபப்படுவதை விட்டு விட்டார்.

நீதி:

ஜடை முடி வைத்துக் கொள்வதோ, தலையை மழித்துக் கொள்வதோ, காவி உடை அணிவதோ சாதுக்களின் லட்சணம் அல்ல. வெளித் தோற்றத்தைப் பார்த்து, ஒருவர் எப்படிப் பட்டவர் என்று யூகிக்க முடியாது. ஒவ்வொருவரும், தன்னைத் தானே உணர்ந்து கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு, குருவின் பாதங்களில் சரணடைந்து, உண்மையை நாடி, நம் உள்ளே இருக்கும் நற்பண்புகளைப் பலப்படுத்தி கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான், அது உண்மையான மாற்றம் எனக் கூறலாம். வெளித் தோற்றம் ஓரளவிற்கு உள்ளே இருக்கும் நற்பண்புகளை மேம்படுத்த உதவலாம்; ஆனால், முதலில் உள்ளே இருக்கும் நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால், அது வெளித் தோற்றத்தை முற்றிலும் மாற்றி விடும். நடைமுறையில், நற்பண்புகளுடன் வாழ்க்கையை செயலாற்றினால், முகத்தில் அது வெளிப்படும். வெளித்தோற்றம் தற்காலிகமானது. அதனால், உள் உணர்வுகளை புரிந்து கொள்வது மிக முக்கியம்; தூய்மையான மனதுடன், நமக்குத் தேவையான நற்பண்புகளை மேம்படுத்திக் கொண்டால், தெய்வீகப் பாதையில் செல்ல வழி வகுக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s