செய்நன்றி விதியை மாற்றி விடும்

நீதி – நன்நடத்தை

உபநீதி  –  நன்றி உணர்வு

ஒரு பாலைவனத்தில் சிறிய பறவை ஒன்று வாழ்ந்து வந்தது. பசுமையான செடிகொடி ஒன்றுமே இல்லாததால், நாள் முழுவதும் அப்பறவை சூடான மணலில் உலாவிக் கொண்டிருந்தது.

தேவதை ஒருவர் கடவுளை சந்திப்பதற்காக அவ்வழியாக சென்று கொண்டிருக்கும் போது, அந்தப் பறவையின் துன்பத்தைக் கண்டு அனுதாபப்பட்டு, அதன் அருகில் சென்று, “பறவையே! இந்த சூடான பாலைவனத்தில் நீ என்ன செய்கிறாய்? நான் உனக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும்?” என்று கேட்டார். பறவை, “எனது வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷத்தோடும் மனநிறைவோடும் இருக்கிறேன், ஆனால் இந்த வெப்பம் ஒன்றை தான் என்னால் பொறுக்க முடியவில்லை. என் இரு கால்களும் எரிகின்றன. இங்கே ஒரு மரம் மட்டும் இருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்” என்றது. தேவதை, “பாலைவனத்தின் நடுவில் ஒரு மரத்தை வளர்ப்பது என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. நான் கடவுளை சந்திக்கப் போகிறேன், நான் அவரிடம் உன் விருப்பத்தை தெரிவித்து, அதை நிறைவேற்ற முடியுமா என்று கேட்கிறேன்” என பதிலளித்தார்.

தேவதை கடவுளை சந்தித்து பறவையின் நிலையைக் கூறி, அதற்கு எவ்வாறு உதவ முடியும் என்று கேட்டார். கடவுள், “என்னால் அங்கு ஒரு மரம் வளர்க்க உதவ முடியும், ஆனால் அந்த பறவையின் விதி அதை அனுமதிக்காது. என்னால் விதியை மாற்ற இயலாது. எனினும் நீங்கள் கீழ்வரும் செய்தியைக் கொடுக்கவும் – இது வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள உதவியாக இருக்கும். அப்பறவையை ஒரே ஒரு காலில் நின்று கொள்ளுமாறு சொல்லவும். இவ்வாறாக அதனால் மற்றொரு காலுக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுக்க முடியும்; மேலும், கால்களை அடிக்கடி மாற்றி உபயோகிக்கவும் முடியும். ஒரு பாதம் வெப்பத்தைத் தாங்கும் போது, மற்றொரு கால் சற்று ஓய்வெடுத்து வலுப்பெறும். மேலும் அப்பறவையை அதன் வாழ்க்கையில் நடந்த எல்லா நன்மைகளையும் நினைவு படுத்திக் கொண்டு கடவுளுக்கு நன்றி செலுத்துமாறு சொல்லவும்” என்று கூறினார். தேவதை திரும்பி சென்ற போது, பறவையிடம் கடவுளின் செய்தியை அளித்தார்.

கடவுளின் செய்தியினால் பறவை மகிழ்ச்சியடைந்தது. அதன் துன்பத்தை போக்க தேவதை எடுத்த முயற்சியை எண்ணி நன்றி தெரிவித்தது.

சில நாட்கள் கழித்து, தேவதை மறுபடியும் பாலைவனத்தை கடந்து செல்ல நேர்ந்தது. வழியில் அச்சிறு பறவையை விசாரிக்க எண்ணினார். பாலைவனத்தின் நடுவில் ஒரு பெரிய பசுமையான மரத்தின் மேல் உட்கார்ந்து ஓய்வெடுத்து கொண்டிருந்த பறவையைக் கண்டு, தேவதை மகிழ்ச்சி அடைந்தார். எனினும் இந்த பறவையின் விதியைப் பார்க்கும் போது, அதன் வாழ்க்கையில் மரம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று கடவுள் சொன்னதை நினைவுப் படுத்திக் கொண்டு குழப்பம் அடைந்தார்.

அவர் கடவுளை சந்திக்கச் சென்றார்; மேலும் நடந்தவை அனைத்தையும் கூறி தனது குழப்பத்தையும் தெரிவித்தார். கடவுள் அவரிடம், “நான் உங்களிடம் பொய் கூறவில்லை. பறவையின் விதியில் மரத்தின் சுகத்தை அனுபவிக்கும் வாய்ப்பு இருக்கவில்லை. எனினும், நடந்து முடிந்த நற் செயல்களுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தவும் – என்று கூறிய அந்த வார்த்தைகளை, அப்பறவை செயலில் காட்டியது.

தனது வாழ்க்கையில் சாத்தியமான ஒவ்வொரு நற்காரியத்தையும் அது நினைவு படுத்திக் கொண்டு, தூய இதயத்துடன் கடவுளுக்கு நன்றி தெரிவித்தது. அதன் நன்றியுணர்வின் காரணமாக, பறவை தனது விதியை மாற்றிக் கொண்டது” என்று பதிலளித்தார். தேவதை இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

நீதி:

நன்றியுணர்வு எப்போதும் கடவுளின் அருளை தருகிறது. நம் வாழ்வில் உள்ள அனைத்திற்கும் நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்; அதை நமக்கு வழங்கியதற்காகப் பிரபஞ்சத்திற்கு நன்றி செலுத்துவோம். வாழ்க்கையில் நமக்கு கிடைத்த நன்மைகளை ஆசீர்வாதங்களாக எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு சிறிய நன்றியுணர்வால் நம் வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.

குழந்தைகள் தினந்தோறும் மேற்கொள்ளும் எல்லா செயற்பாடுகளிலும், சில நிமிடங்கள் கடவுளை நினைவுபடுத்திக் கொண்டு, அவர் நமக்கு அருளிய அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி உள்ளவர்களாகவும், நன்றிக்கடன் பட்டவர்களாகவும் இருப்பது அவசியம். நல்ல விழிப்பூட்டும் புத்தகங்களை வாசிப்பதற்கும், கேட்பதற்கும் நேரத்தை செலவழிப்பது, சில நேரம் மெளனமாக தியானத்தில் அமர்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது, ஒரு சமநிலையான மற்றும் திருப்தியான வாழ்க்கையை வாழ நம்மை வழி நடத்திச் செல்லும்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்பது தெய்வப் புலவரின் திருவாக்கு. ஒருவர் நமக்கு செய்யும் தீமையை நாம் உடனே மன்னித்து மறந்து விட வேண்டும். அதே நேரத்தில் ஒருவர் நமக்கு செய்யும் நன்மையை நாம் எப்போதும் மறக்கக் கூடாது.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s