Archive | May 2018

தன்னையே அறிந்து கொள்ளும் பாதை

நீதி –  குரு பக்தி

உப நீதி – சாசுவதமான உண்மை,  உள்ளார்ந்து நோக்குதல்

Path of self remembrance - picture 1500 துறவிகள் வசித்த ஒரு மடத்தில், மகான் ஒருவர் தலைவராகத் திகழ்ந்து நிர்வாகம் செய்து வந்தார். அங்கிருந்த அனைவரும் உள்ளார்ந்து நோக்குதல் என்ற நற்பண்பை, அதாவது தன்னையே அறிந்து கொள்வதற்கான பயிற்சியைத் தினமும் செய்து வந்தார்கள். இது புத்த மகானால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு பாதை ஆகும். ஒரு நாள், ஒரு மனிதன் சீடனாகும் எண்ணத்துடன் இம்மடத்திற்கு வந்தான். படிப்பறிவில்லாத இக்கிராமவாசியை குரு ஏற்றுக் கொண்டார். குரு அவனிடம் “சமையலறையில் அரிசியை சுத்தம் செய்வது தான் உன் வேலை” என்று கூறினார்.

தினமும் அந்த சமையலறையில், 500 துறவிகளுக்கு உணவளித்து வந்தார்கள். காலையிலிருந்து இரவு வரை, இம் மனிதன் நாள் முழுவதும் அரிசியை சுத்தம் செய்து வந்தான். அவனுக்கு உபதேசங்களுக்கோ பிரார்த்தனைகளுக்கோ  செல்ல நேரம் இல்லை; புனிதமான நூல்களைப் படிப்பதற்கோ, நல்லpath of self remembrance - picture 2 உரையாடல்களைக் கேட்கவோ நேரம் கிடையாது. அங்கு இருந்த 500 துறவிகளும், படித்தறிந்த சிறந்த அறிவாளிகளாக இருந்தனர். இந்த மடம் உலகில் பிரசித்தம் பெற்றிருந்தது. இருபது வருடங்களுக்குப் பிறகும், அம் மனிதன் அரிசி சுத்தம் செய்வதைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவனாக இருந்தான். அவன் வருடங்களின் எண்ணிக்கையைக் கூட மறந்து விட்டான் – என்ன பயன்? அவன் நாட்கள், திதிகளை மறந்து, நாளடைவில் தன் பெயரையே சந்தேகிக்கும் நிலைக்கு வந்து விட்டான்.

இருபது வருடங்களாக யாருமே அவனின் பெயரை உபயோகப் படுத்தவில்லை; அதாவது, யாருமே அப்பெயரைச் சொல்லி அவனை அழைக்கவில்லை – அதுவே தான் அவன் பெயரோ, இல்லையோ என்ற அளவுக்கு சந்தேகம்! இருபது வருடங்களாக அவன் எப்பொழுதும் ஒரே வேலையை செய்து வந்தான் – எழுந்த path of self remembrance - picture 3வினாடியிலிருந்து படுக்கைக்குச் செல்லும் வரை அரிசியை சுத்தம் செய்வது. ஒரு நாள் மடத்தின் குரு, தான் இவ்வுலகை விட்டுச் செல்லும் நாள் நெருங்கிவிட்டதை அறிந்து கொண்டு, தன் பின்னுரிமையாளரை தேர்ந்தெடுக்க விரும்பினார். அதற்கு அவர் ஒரு வழியைக் கையாண்டார் – தன்னை முழுமையாக அறிந்து கொண்டதாகக் கருதும் ஒருவர், குடிலுக்கு வெளியே இருக்கும் சுவரில், உள்ளார்ந்த நோக்கத்துடன் உண்மையை அறிந்து கொண்டார் என்ற விஷயத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுத வேண்டும்.

ஒரு துறவி தன்னை மிக அறிவாளியாகக் கருதி முயற்சி செய்ய முன் வந்தார். அந்த வாக்கியத்தை எழுத அவர் சற்று தயக்கம் அடைந்தார்;  ஏனெனில், அவர் உள்ளார்ந்த நோக்கத்துடன் அறிந்து கொண்ட உண்மை அல்ல, புனித நூல்களிலிருந்து எடுக்கப்பட்டது! அது அவரது அனுபவம் அல்ல; ஆதலால் குருவை ஏமாற்ற முடியாது என்று அறிந்தார். மறுநாள் வெளியே வந்த குரு வேலைக்காரனை அழைத்து, சுவரில் எழுதியதை அழிக்க வைத்தார். பிறகு சுவரைப் பாழ்படுத்திய முட்டாளை அழைத்து வரச் சொன்னார். எழுதிய அறிவாளி பிடிபட்டு விடுவோமோ எனப் பயந்து, தன் பெயரைக் கூட அங்கு எழுதவில்லை.

ஒரு வேளை, குரு அவ்வாக்கியத்தைப் புகழ்ந்து கூறினால், வெளியே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என அவர் நினைத்திருந்தார்; இல்லாவிட்டால் மெளனமாக இருக்கலாம் என அந்த அறிவாளி எண்ணியிருந்தார். 500 பேர்களில் எவர் வேண்டுமானாலும் எழுதி இருக்கலாம்!

path of self remembrance - picture 4பலர் முயற்சி செய்தும், தன் பெயரை எழுதும் தைரியம் எவருக்கும் இருக்கவில்லை. குருவும் தினமும் வாக்கியங்களை அழித்து, “உங்களில் எவரும் உள்ளார்ந்த நோக்கத்துடன் உண்மையை அறிந்து கொள்வதில் தேர்ச்சி அடையவில்லை; தற்பெருமை அடைவதில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளீர்கள். நான் பலமுறை தற்புகழ்ச்சியை வளர்த்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறியுள்ளேன். தற்பெருமைப் படுவதும் ஒரு ஆனந்தமே; ஆன்மீகப் பெருமை, இவ்வுலகு அல்லாது வேறுலகப் பெருமை, தெய்வீகப் பெருமை அளவில்லாத ஆனந்தத்தை அளிக்கக் கூடியது” என்று கூறினார்.

“நானே ஒரு மனிதனைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்”, என்றவாறு எண்ணிய குரு நள்ளிரவில், இருபது வருடங்களுக்கு முன்பு வந்த மனிதனைக் காணச் சென்றார். கடந்த இருபது வருடங்களாக அவர் அவனைப் பார்க்கவில்லை. அவன் எப்பொழுதும் அரிசியை சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தான். மகான் அவன் அருகே சென்று, அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பினார். அம் மனிதன் மகானிடம் “தாங்கள் யார்?” என்று வினவினான். இருபது வருடங்கள் கடந்து விட்டதால்—–அவன் அவரை ஒரே ஒரு முறையே, சில வினாடிகளுக்கு, அங்கு வந்த போது பார்த்திருந்தான்—“என் தூக்கத்தைக் கெடுக்கும் காரணம் என்ன?”எனக் கேட்டான்.

மகான் அவனிடம், “நான் உன் குரு. நீ மறந்து விட்டாயா? உன் பெயர் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” எனக் கேட்டார். அதற்கு அம்மனிதன் “அது தான் என் பிரச்சனை. நீங்கள் எனக்குக் கொடுத்த வேலைக்குப் பெயரோ, புகழோ, அறிவோ, புண்ணியமோ எதுவுமே தேவை இல்லை. அது அவ்வளவு எளியதாக இருந்ததால், நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். இது தான் என் பெயர் என்று நினைப்பது கூட நிச்சயம் அல்ல. சில பெயர்கள் என் நினைவுக்கு வருகின்றன; ஆனால் அதில் எது என் பெயர் என்பது தெரியவில்லை. நான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன்” என்று கூறி குருவின் பாதங்களில் பணிந்தான். மேலும், “தயவு செய்து என் வேலையை மாற்றி விடாதீர்கள். நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன்; அதே சமயம் எல்லாவற்றையும் அடைந்து விட்டேன்” என்றான்.

“நான் கனவில் கூட நினைக்காத ஒரு நிம்மதியை, வார்த்தைகளில் கூற முடியாத ஒரு மௌன நிலையை உணர்ந்துள்ளேன். நான் அடைந்த பேரின்பம் எவ்வாறென்றால், என் உயிரையே இழந்திருந்தாலும், வாழ்க்கை என்னை ஏமாற்றி விட்டதாகக் குறை கூற மாட்டேன். என் தகுதிக்கு மேல் அது எனக்கு அளித்துள்ளது. தயவு செய்து என் வேலையை மாற்றாதீர்கள். அதை நான் சரிவரச் செய்து வருகிறேன். யாரேனும் என் வேலையைப் பற்றி உங்களிடம் குறை கூறினார்களா?” என அந்த மனிதன் மகானிடம் கேட்டான்.

அதற்கு குரு, “இல்லை, யாரும் என்னிடம் ஒரு குறையும் கூறவில்லை; ஆனால் உன் வேலையை மாற்ற வேண்டிய சூழ்நிலை. நான் உன்னை என் பின்னுரிமையாளராகத் தேர்ந்தெடுக்கிறேன்” என்றார். உடனே அம்மனிதன் “நான் வெறும் அரிசி சுத்தம் செய்பவன் மட்டுமே. அதைத் தவிர குருவாகவோ சிஷ்யனாக இருப்பது பற்றியோ வேறொன்றும் அறியேன். எனக்கு எதுவும் தெரியாது. என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் பின்னுரிமையாளராக நான் விரும்பவில்லை; ஏனென்றால் என்னால் அவ்வளவு பெரிய பணியைச் செய்ய இயலாது. அரிசி சுத்தம் செய்வது மட்டுமே என்னால் முடிந்த பணி” என்றான்.

அதற்கு குரு, “மற்றவர்கள் முயற்சித்து வெற்றியடைய முடியாத ஒன்றை நீ அடைந்துள்ளாய். நீ முயற்சி செய்யாததால், அது உனக்கு கிடைத்து விட்டது. நீ ஒரு சாதாரணமான பணியை மட்டுமே செய்து கொண்டிருந்தாய். நேரம் செல்லச் செல்ல யோசிப்பதற்கோ, உணர்ச்சிகளுக்கோ, கோபம், சச்சரவு, பேதங்கள், அவாக்கள் எதற்குமே தேவை இருக்கவில்லை. உன் ஆணவத்துடன் உன் பெயரும் மறைந்து விட்டது. நீ ஒரு பெயருடன் பிறக்கவில்லை. ஆணவத்திற்கே ஒரு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது — அது தான் ஆணவத்தின் ஆரம்பம். உன்னை என்னிடம் கொண்டு சேர்த்த அந்த ஆணவத்தை அகற்றிய பின், நீ உன் குருவையே மறந்து விட்டாய்”. ஆணவம் இருந்த வரையில், நீ ஆன்மீகப் பயணத்தில் இருந்தாய். நீயே சரியான, உகந்த மனிதன். அதனால் என் ஆடை, தொப்பி, கத்தி இவற்றைப் பெற்றுக் கொள். இவை ஒரு குருவால் தன் பின்னுரிமையாளருக்கு அளிக்கப் படுபவை.

ஒரு எண்ணத்தை நினைவில் வைத்துக் கொள் – இவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு, இங்கிருந்து தப்பித்து ஓடி விடு; இல்லாவிட்டால் உன் உயிருக்கு ஆபத்து. இந்த 500 ஆணவக்காரர்களும் உன்னைக் கொன்று விடுவார்கள். நீ மிகச் சாதாரணமானவனாகவும், ஏதும் அறியாதவனாகவும் இருக்கிறாய். அவர்கள் கேட்டால் நீ உடை, தொப்பி, கத்தி எதையும் அவர்களுக்குக் கொடுத்து விடுவாய். இவற்றை எடுத்துக் கொண்டு வெகு தூரம், மலைப் பகுதிக்குச் சென்று விடு. அங்கு மக்கள், மலர்களை வண்டு மொய்ப்பது போல், உன்னிடம் வந்து சேர்வார்கள். நீ மலர்ந்து விரிவடைந்து விட்டாய். நீ மௌனமாகவே இரு. மக்கள் உன்னை ஏதேனும் கேட்டால், நீ செய்தவற்றைப் பற்றிக் கூறு.

அம்மனிதன், “நான் எந்தக் கல்வியும் அறிவும் இங்கு பெறவில்லை. எனக்கு ஒன்றும் கொடுக்கத் தெரியாது” என்றான். குரு அவனிடம், “சிறு பணிகளை எதிபார்ப்பு எதுவுமின்றி, நிம்மதியாக செயலாற்றக் கற்றுக் கொடு. இவ்வுலகிலோ மறு உலகிலோ எதுவும் பெறும் அவா இல்லாமல் இருந்தால், குழந்தையைப் போல் கள்ளம் கபடில்லாமல் இருக்கலாம். கள்ளம் கபடில்லாமையே ஆன்மீகம்” என்றார்.

கற்பித்தல்:

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மனிதன் பொக்கிஷமாக நினைக்க வேண்டும்; வீண் படுத்தக் கூடாது. தன் லட்சியத்தை அடைவதில் ஒரு விழிப்பும், தெளிவும் மனிதனுக்கு அவசியம். அவை நம் லட்சியத்தை அடைவதில் நம்மை ஒருமுகச் சிந்தனையோடு செயலாற்ற உதவும். ஒருவன் தற்பெருமை கொள்வதோ அல்லது செல்வம், உறவு, பதவி, அழகு இவைகளில் அதிக ஈடுபாடு கொள்வதோ கூடாது. இவை நிலையற்றவை; தினசரி மாறும் தன்மை உடையவை. இவ்வுலகமே மாயையால் நிறைந்துள்ளது. ஆதலால் மாயத் தோற்றத்திலிருந்து விடுபட்டு, சாசுவதமான உண்மையைத் தேடாமல் இருப்பது முட்டாள்தனம். சாசுவதமான உண்மையையே நாம் தேடிச் செல்ல வேண்டும். இதற்கு ஆணவத்தை விட்டொழிப்பது மிகவும் இன்றியமையாதது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

சிங்கமாக இரு, நாயாக இருக்காதே

நீதி: நன் நடத்தை

உப நீதி: உள்ளார்ந்து நோக்குதல்

ஒரு பணக்கார வியாபாரி கிராமம் ஒன்றில் வசித்து வந்தார். திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அளவில்லாச் செல்வம் இருந்ததால், அவர் தன் மகனை மிகவும் செல்லமாகவும், சொகுசாகவும் வளர்த்தார்; அம்மகனின் ஒவ்வொரு ஆசையையும் பூர்த்தி செய்தார். பணத்தால் வாங்க முடிந்த அனைத்தையும் அவர் அவனுக்கு அளித்தார்;  அளவற்ற அன்பும் வைத்திருந்தார்.

காலத்திற்குத் தகுந்தாற் போல் மகன் வளர வளர, அவனைச் சுற்றி நண்பர்கள் கூட்டமும் வளர்ந்து,  அம்மகனின் பரிசுகளையும், கேளிக்கைகளையும் அனுபவித்தனர்.

திருமணத் தகுதியை அடைந்த அந்த இளைஞனுக்குப் பல அழகான, பணக்காரப் பெண்களின் வரன்கள் வரத் தொடங்கின. எல்லாம் இன்பமயமாக இருந்தது. தன் தந்தையின் செல்வம் அனைத்தையும் பல வழிகளில் செலவழித்த பின், ஒரு நாள் அவன் கடன் அடைக்க முடியாத அளவிற்கு திவாலானான். தன் நண்பர்களிடம் அவன் உதவி கேட்டான். நண்பர்கள் அனைவரும் இப்போது அவனைக் காண மறுத்தனர்.

செல்வம் தொலைந்தவுடன், நண்பர்களும் அவனிடமிருந்து விலகினார்கள். அவன் மனைவியும், குழந்தைகளும் கூட, அவனிடமிருந்து விலகிச் சென்றனர். தன் கெட்ட குணங்களுடன் அம்மனிதன் தனியாக, உடல் நலக் குறைவுடன் விடப் பட்டான். உடலில் பலம் இல்லாததால் அவன் படுத்த படுக்கை ஆனான்; தன் வாழ்க்கையை உடல் சார்ந்த பொருட்களுக்காக வீணடித்ததை உணர்ந்தான். தன்னை மேம்படுத்திக் கொள்ள எதுவும் செய்யாமல், உடல் மற்றும் ஆன்மீக வாழ்க்கை இரண்டிலும் அவன் தோல்வியடைந்ததை உணர்ந்தான்.

அவன் மிகவும் மனம் தளர்ந்தான்;  ஆனால் விதி அவனை ஒரு மதகுருவை சந்திக்க வைத்தது. கடவுள் அருளினால் மட்டுமே ஒருவனுக்கு சத்குரு போன்றவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. குரு அவனது நிலையைக் கண்டு இரக்கம் கொண்டு, அவனைத் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். குருவின் சிஷ்யர்கள் அவனை அக்கறையுடன், நன்கு கவனித்துக் கொண்டனர். உடல் நலம் சற்று தேறியதும், அம்மனிதன் குருவிடம் ஆசிரமத்திலேயே தங்கி, சேவை புரிய அனுமதி கேட்டான்.

குருவிடமிருந்து சிறிது உபதேசமும், அறிவும் பெற அவன் விரும்பினான். குரு அன்புடன் அவனிடம், “குழந்தாய்! சிங்கம் போல் இரு, நாய் போல் அல்ல” என்று அறிவுரை வழங்கினார். அம்மனிதனுக்கு அதன் தத்துவம் விளங்கவில்லை. பிறகு குரு அவனுக்கு விவரமாக கூறியது யாதெனில் – ஒரு நாய்க்கு முன் ஒரு பந்தை எறிந்தால், அது பந்தின் பின் ஓடும். அதுவே ஒரு சிங்கத்தின் முன் ஒரு பொருளை எறிந்தால், அதன் கவனம் உன் மேல் தான் இருக்கும்; பொருளின் மீது அல்ல. அது உன்னை அடையும் சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கும். இவ்வளவு வருடங்கள் நீ நாய் போல், நிலையில்லாத ஆனந்தங்களான செல்வம், இளமை, மனைவி, குழந்தைகள் இவற்றை நோக்கி ஓடினாய். வாழ்க்கையின் உண்மையான, நிரந்தரமான உண்மையை உணர முயற்சி செய்யவில்லை. இப்பொழுதாவது அதை உணர்ந்து நிரந்தரமான, அழிவில்லாத உண்மையைத் தேட முயற்சி செய், நீ மிக்க மகிழ்வுடன் இருப்பாய்!

அம்மனிதன் குருவிடம் நன்றி உணர்ச்சியுடன், ஆசிரமத்தில் சேவை செய்து, ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட முற்பட்டான். நாளடைவில் அவன் நல்ல ஆரோக்கியத்துடனும், பேரின்பத்துடனும் திகழ்ந்தான். இவ்வுலக வாழ்க்கை மாயை, நிலையற்றது என்பதைப் புரிந்து கொண்டு, அதை விடச் சிறந்த உண்மையைத் தேட முயற்சித்தான்.

அவன் ஒரு அக்கறையான, ஊக்கமுள்ள சிறந்த சிஷ்யனாக இருந்தான். அவனிடம் நிகழ்ந்த மாற்றத்தைக் கண்ட குரு அவனை, தனக்குப் பின் அந்த ஆசிரமத்தின் பின்னுரிமையாளராக நியமித்தார். பிறகு அம்மனிதன் துறவறம் கொள்ள குருவால் ஊக்கப்பட்டு, ஆசிரமத்தின் பொறுப்பை ஏற்று, தன் கடமைகளான உண்மை மற்றும் மெய்யறிவை மற்ற சிஷ்யர்களுக்குப் போதித்தான்.

கற்பித்தல்:

உலகத்தின் பொருட்கள் யாவும் நிலையற்றவை. நாம் தினமும் அனுபவிப்பது உண்மை போன்ற தோற்றம் கொண்டது;  ஆனால், அது உண்மை அல்ல. அதுவே நம் வாழ்வின் தாழ்வு மற்றும் இன்ப துன்பங்களுக்குக் காரணம் ஆகும்; ஏனெனில், அது நிலையற்றது. உண்மையான பரம்பொருளை ஒரு முறை உணர்ந்து விட்டால்,  நாம் பிரம்மன் ஆகிவிடுவோம்; பூலோக விஷயங்கள் நம்மை பாதிக்காது. நாம் ஆழ்ந்த சிந்தனையுடன், நம் உள்நோக்கைப் புரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

சொல்வதை செய், செய்வதை சொல்

நீதி – உண்மை / வாய்மை

உபநீதி – மனம், வாக்கு, செயல் ஒன்றுபடுதல்

Practice what you preach picture 1

மகான்கள் தாங்கள் கடைப்பிடித்ததையே உபதேசம் செய்கின்றனர். அதனால் அந்த உபதேசங்களுக்கு நமக்கு நன்மை செய்யும் சக்தி இருக்கிறது.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஒரு பக்தை, தன் மகனை குருவிடம் அழைத்து வந்து, “குரு தேவா! என் மகன் தினமும் இனிப்பு சாப்பிடுகிறான். அதனால் அவன் பற்கள் பாதிக்கப் படுகின்றன. என்னால் அவனுக்கு தினமும் இனிப்பு கொடுக்க இயலாது. நான் எவ்வளவோ சொல்லியும், அடித்தும், கண்டித்தும் அவன் திருந்தவில்லை. இந்த கெட்ட பழக்கத்தை நிறுத்துவதற்கு, தாங்கள் தான் அவனுக்கு தயவு செய்து அறிவுரை வழங்கி ஆசீர்வதிக்க வேண்டும்” என்றாள்.

பரமஹம்சர் அந்தச் சிறுவனை ஏறிட்டுப் பார்த்து விட்டு, ஒன்றும் பேசாமல்  இரண்டு வாரம் கழித்து, அவனை அழைத்து வரும்படி தாயாரிடம் கூறினார்.

அவர்கள் இரண்டு வாரம் கழித்து மீண்டும் வந்த பொழுது, ராமகிருஷ்ணர் அந்த சிறுவனிடம், “அன்பு மகனே! உன் தாயிடம் தினமும் இனிப்பு தரச் சொல்லிப் பிடிவாதம் செய்கிறாயா?” எனக் கேட்டதற்கு அந்தச் சிறுவன், “ஆம்” என்றான். அதற்கு ராமகிருஷ்ணர், “நீ ஒரு புத்திசாலி பையன். இனிப்பு உன் பற்களைப் பாதிக்கிறது என்பது உனக்குத் தெரியும். உன் அம்மாவும் அதற்காகவே கவலைப் படுகிறாள். தினமும் இனிப்பு வாங்கினால், உனக்குப் புத்தகங்களும், ஆடைகளும் வாங்க பணத்திற்கு அவள் என்ன செய்வாள்? நீ தவறு செய்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லையா?” என்று கேட்டார்.

அந்தச் சிறுவன் “ஆம்” என்று  தலையசைத்து விட்டு மெளனமாக இருந்தான். மேலும் அவர் பேசிய பொன்மொழிகள் சிறுவனின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. “இனிமேல் தினமும் இனிப்பு வேண்டும் என்று கேட்பாயா?” என்று பரமஹம்சர் சிறுவனிடம் கேட்டார்.

 அதற்கு அச்சிறுவன் புன்சிரிப்புடன், “நான் இனிமேல் இனிப்பு வகைகள் வேண்டும் என அம்மாவிடம் கேட்டு தொந்தரவு செய்ய மாட்டேன், சாப்பிடவும் மாட்டேன்” எனக் கூறினான்.

practice what you preach - swami blessing son

சிறுவனின் பதிலால் பிரசன்னமடைந்த ராமகிருஷ்ணர் அன்புடன் அவனை அரவணைத்து, “நீ நல்ல பையன். உனக்கு எது நல்லது, எது கெட்டது என்று தெரியும். நீ ஒரு நல்ல மனிதனாக உருவெடுப்பாய்” என்று ஆசீர்வதித்தார். சிறுவன் அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான்; ராமகிருஷ்ணர் அவனை ஆசீர்வதித்து விட்டு, மற்ற சிஷ்யர்களை திரும்பி பார்த்தார்.

அந்தச் சிறுவன் அங்கிருந்து சென்றதும், அவனுடைய தாயார் குருவிடம், “இந்த ஒரு சில வார்த்தைகளைக் கூற நீங்கள் ஏன் எங்களை இரண்டு வாரம் காக்க வைத்தீர்கள் என அறியலாமா?” எனக் கேட்டாள்.

அதற்கு பரமஹம்சர், “அன்று நீங்கள் வந்த போது, பக்தர்கள் கொடுக்கும் இனிப்புகளை உண்ணும் பழக்கம் எனக்கு இருந்தது. எனக்கே அந்தப் பழக்கம் இருந்த போது, நான் எப்படி உன் மகனுக்கு உபதேசம் செய்வது?

அதனால் இந்த இரண்டு வாரங்கள் நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தினேன். இந்த வைராக்கியம் எனக்கு உபதேசம் செய்யும் வலிமையையும், சக்தியையும் கொடுத்தது.

நாம் சொல்வதை செய்தால் தான், நமது வார்த்தைகள் நேர்மையாக இருக்கும்; கேட்பவர்களுக்கும் மனதில் அது பதியும்” என்றார்.

அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் அறையை விட்டுச் செல்லும் போது, ஒரு ஆழ்ந்த பாடத்தை ராமகிருஷ்ணரிடமிருந்து தாங்களும் கற்றுக் கொண்டதை உணர்ந்தனர்.

நீதி:

இந்தக் கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது –

ஆன்மீக உபதேசங்கள் செய்யும் முன்பாக நாம் அதைக் கடைபிடிக்க வேண்டும். அதை கடைப்பிடிப்பதற்கு உண்டான வழிமுறைகளை நாம் முற்றிலும் பயிற்சி செய்திருக்க வேண்டும்.

மனம், வாக்கு, செயல் மூன்றும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு இணைந்திருந்தால், குழப்பத்திற்கோ, போலித் தனத்திற்கோ இடம் இருக்காது. இந்த பயிற்சிகளை சிறு வயதிலிருந்தே கடைபிடிக்க வேண்டும். ஆசிரியர்களும், பெற்றோர்களும் இதற்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டும். இரட்டை வாழ்க்கை வாழ்வது கடினம். நாம் செய்யாததை செய்தது போலக் காட்டினால், நமது மேல் உள்ள நம்பிக்கை மற்றும் மரியாதை வெகு காலத்திற்கு மக்கள் மத்தியில் நிலைக்காது.

மேலும் இவ்வாறு உபதேசம் செய்பவர்களுக்கு மன நிம்மதியும் இருக்காது; ஏனெனில், அவர்களும் தெய்வத்தின் அம்சங்களாகத் திகழ்வதால், அந்த அம்சங்கள் அவர்களை எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் ஒருங்கிணைப்பு இல்லாததை நினைவு படுத்தும்.

மொழி பெயர்ப்பு:

கோதண்டராமன், சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

நன்றியறிதல்

நீதி – நன் நடத்தை

உப நீதி – நன்றி உணர்வு

Rajs lesson on gratitude picture 1

ராஜ் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுடைய பெற்றோரால் அவனுக்கு விலை உயர்ந்த விளையாட்டு பொருட்களையோ, நவநாகரீகமான ஆடைகளையோ அல்லது காலணிகளையோ வாங்கித் தர முடியவில்லை. அவன் நண்பர்கள் எல்லோரிடமும் இவையெல்லாம் இருந்தன. இதனால், அவனது வகுப்பு தோழர்களால் ராஜ் ஏளனம் செய்யப்பட்டான். ஒரு நாள், அவனுடைய நண்பன் பள்ளிக்கூடத்திற்கு ஒரு சிறிய கணினியை (I pad) கொண்டு வந்து அனைவருக்கும் காண்பித்து, பெருமை பட்டுக் கொண்டிருந்தான். ராஜ் சற்று மனவேதனையுடன், பள்ளி முடிந்து அன்று வீட்டிற்குச் சென்றான்.

அவனுடைய பெற்றோர், அவனுக்காக வாங்கி வந்த ஒரு திருகு வெட்டு புதிரை அவனிடம் காட்டினார்கள். ஒரு சாதாரணமான கல்வி விளையாட்டுப் பொருளை பார்த்த ராஜ், மிகுந்த வருத்தமும் கோபமும் கொண்டு, அவர்களை கடிந்து, கூச்சலிட்டு தவறாக நடந்து கொண்டான். அவனது பெற்றோர் மற்ற நண்பர்களின் பெற்றோர்களை போல, விலையுயர்ந்த அல்லது புதிதாக வெளிவந்த பொருட்கள் எதையும் வாங்கி தருவதில்லையே என்று அவன் வருத்தப்பட்டான்.

rajs lesson on gratitude - picture 2

ராஜ் தேம்பித் தேம்பி அழுதான்; அவன் விரும்பியதை எப்பொழுதுமே ஏன் பெற முடியவில்லை என்று கடவுளிடம் முறையிட்டான். சிறிது நேரம் கழித்து ராஜ் தூங்கி விட்டான்; அப்பொழுது ஒரு கனவு கண்டான்.

கனவில், மரச்சாமான்கள் ஏதும் இல்லாமல், ஒரே ஒரு அறை மட்டுமே உள்ள ஒரு பழைய மாசுபடிந்த வீட்டில், தான் இருப்பதை அவன் கண்டான். அவனது துணிகள் கந்தலாகவும், அந்த வீட்டில் எவ்வித வசதியும் இல்லாமல், ஏறக்குறைய காலி வீடாக இருந்தது. மேலும், துர்நாற்றத்தையும் அவனால் தாங்க முடியவில்லை. ராஜ் இந்த வீட்டிலிருந்து வெளியே வந்து, மற்றொரு வீட்டிற்குள் நுழைந்தான்.

rajs lesson on gratitude - picture 3

இந்த வீடு பெரிதாக, அற்புதமாக இருந்தது. வீட்டின் முன், ஒரு சிறிய அழகிய தோட்டம் இருப்பதை நுழைவாயிலிலிருந்து பார்க்க முடிந்தது. இந்த அழகிய வீடு தற்பொழுது அவன் வசிக்கும் சொந்த வீடு என்பதை சற்று அதிர்ச்சியுடன் உணர்ந்தான்!

அவன் அந்த வீட்டிற்குள் நுழைய முயன்றான், ஆனால் ஒரு பாதுகாவலரால் தடுத்து நிறுத்தப்பட்டான். ராஜ் அவரிடம் அது தான் வசிக்கும் வீடு என்று கூற முயன்றான்; ஆனால் காவலர் அவனை நம்பாமல், உள்ளே அனுமதிக்க மறுத்தார். பக்கத்திலுள்ள பழைய வீடுதான் அவனுடைய வீடு என்றார்; ராஜ் குழப்பமடைந்து, பயந்து போனான். பின்னர் காட்சி முற்றிலும் மாறியது. அவன் கண் விழித்த போது தனது அறையில், படுக்கையில் படுத்திருப்பதை உணர்ந்தான்.

நடந்தது அனைத்தும் ஒரு கனவு என்பதை அவன் உணர்ந்தான் – அவன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதையும், இப்படி நன்றியற்றவனாக தான் நடந்து கொண்டோமே என்பதையும் உணர்ந்தான்! ராஜ் எழுந்து தனது பெற்றோரிடம் சென்றான். அவன் வெட்கத்தில் எதுவும் சொல்ல முடியாமல், தலை குனிந்து நின்றான். அவனது பெற்றோர் அவன் மன வருத்தத்தை புரிந்து கொண்டனர்.

அவனது தாயார் அவனை கட்டிப் பிடித்து, “மகனே, உன் பள்ளியில் உள்ள சில மாணவர்களைப் போல், மனிதப் பண்புகளே அறியாமல் வளரக் கூடாது என்பதால் தான், விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் மற்றும் பிற சாதனங்களை நாங்கள் வாங்கித் தரவில்லை.

நம்மைச் சுற்றி கவனித்தால், ஒவ்வொரு நாளும் சாப்பிடுவதற்கு கூட போதுமான உணவு இல்லாமல் இந்த உலகில் பலர் இருப்பதை நாம் பார்க்கிறோம். விலையுயர்ந்த பொருட்கள் கொண்ட நபர்களைக் காட்டிலும் இவர்கள் எவ்விதத்திலும் தகுதியிலோ, ஆற்றலிலோ குறைந்தவர்கள் இல்லை.

ஒரு மனிதனின் மதிப்பை தீர்மானிப்பது அவனது பண்பும், நடத்தையும் ஆகும். போதுமான பணம் இருந்தால் எல்லோருமே விலையுயர்ந்த பொருட்களை வாங்க முடியும், ஆனால் ஒருவராலும் பணத்தால் நல்ல ஆளுமைப் பண்புகளை வாங்கவோ அல்லது மனிதர்களின் நல்லுறவையோ சம்பாதிக்க முடியாது” என்று அழகாக எடுத்துரைத்தார்.

ராஜின் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. அவனது நன்றியற்ற நடத்தையை எண்ணி அவன் வெட்கப்பட்டான். அவன் தன் பெற்றோரிடமும், கடவுளிடமும் மன்னிப்பு கேட்டான். கடவுள் அவனுக்கு ஆசீர்வதித்திருந்த நல்ல பெற்றோரையும், பொருட்களையும், ஆரோக்கியமான உடலையும் நல்ல புத்தியையும் வைத்து சந்தோஷமாக இருக்க முடிவெடுத்தான்.

நீதி:

நாம் எப்போதும் நம்மைவிட அதிக வசதி உள்ளவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். நமக்கு கிடைத்துள்ள ஆசீர்வாதங்களை மறக்கிறோம். மகிழ்ச்சியோ அல்லது மன நிறைவோ, ஒருவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை வைத்து அளவிட முடியாது. எத்தகைய நற்குணங்கள் நம்மிடம் இருக்கின்றன, உறவுகளை நாம் எவ்வாறு மதித்து, மரியாதை காட்டுகிறோம் மற்றும் எப்படி ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தை உருவாக்குகிறோம் என்பதையும் பொறுத்தே அதன் சிறப்பு அமைகிறது. பணம் அவசியமானது; ஆனால் மகிழ்ச்சியின் அளவுகோல் அது அல்ல. பணத்தை ஒழுங்குமுறையான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நமக்கு கிடைத்த ஆசீர்வாதங்களை நினைத்து, நன்றியுள்ளவர்களாகவும், கடமைப் பட்டவர்களாகவும் இருக்கக் கற்றுக் கொள்வோம்.

நன்றியுணர்வின் மதிப்பை குழந்தைகளுக்கு இளம் வயதிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். பணம் அல்லது நாம் வைத்திருக்கும் பொருட்களின் அடிப்படையில் மகிழ்ச்சியை அளவிடக் கூடாது என்பதை உதாரணங்கள் மூலம் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

இளம் வயதிலிருந்தே பணத்தின் மதிப்பை அவர்கள் அறிய வேண்டும். ஆம், பணம் நிச்சயம் தேவை; மிகவும் முக்கியம் தான்; ஆனால் அதுவே வாழ்க்கை இல்லை. நம் ஆசீர்வாதங்களை எண்ணி, நமக்கு கிடைத்ததை நன்றியுடன் எண்ணிப் பார்க்க வேண்டும். நன்னடத்தை மிகவும் முக்கியம். நன்னடத்தை உள்ள மனிதன் வாழ்க்கையை வளப்படுத்தக்கூடிய நற்பண்புகளை கொண்டிருப்பான். எனவே இளம் வயதிலிருந்து நன்றியுணர்வு மற்றும் அனைத்து நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்; அப்படிச் செய்தால், அவர்கள் வளர்ந்த பின் மனநிறைவுடன் தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வழிநடத்துவதுடன், சமுதாயத்தில் மற்றவர்கள் மீதும் அக்கறை காட்டுவார்கள்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com