நன்றியறிதல்

நீதி – நன் நடத்தை

உப நீதி – நன்றி உணர்வு

Rajs lesson on gratitude picture 1

ராஜ் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுடைய பெற்றோரால் அவனுக்கு விலை உயர்ந்த விளையாட்டு பொருட்களையோ, நவநாகரீகமான ஆடைகளையோ அல்லது காலணிகளையோ வாங்கித் தர முடியவில்லை. அவன் நண்பர்கள் எல்லோரிடமும் இவையெல்லாம் இருந்தன. இதனால், அவனது வகுப்பு தோழர்களால் ராஜ் ஏளனம் செய்யப்பட்டான். ஒரு நாள், அவனுடைய நண்பன் பள்ளிக்கூடத்திற்கு ஒரு சிறிய கணினியை (I pad) கொண்டு வந்து அனைவருக்கும் காண்பித்து, பெருமை பட்டுக் கொண்டிருந்தான். ராஜ் சற்று மனவேதனையுடன், பள்ளி முடிந்து அன்று வீட்டிற்குச் சென்றான்.

அவனுடைய பெற்றோர், அவனுக்காக வாங்கி வந்த ஒரு திருகு வெட்டு புதிரை அவனிடம் காட்டினார்கள். ஒரு சாதாரணமான கல்வி விளையாட்டுப் பொருளை பார்த்த ராஜ், மிகுந்த வருத்தமும் கோபமும் கொண்டு, அவர்களை கடிந்து, கூச்சலிட்டு தவறாக நடந்து கொண்டான். அவனது பெற்றோர் மற்ற நண்பர்களின் பெற்றோர்களை போல, விலையுயர்ந்த அல்லது புதிதாக வெளிவந்த பொருட்கள் எதையும் வாங்கி தருவதில்லையே என்று அவன் வருத்தப்பட்டான்.

rajs lesson on gratitude - picture 2

ராஜ் தேம்பித் தேம்பி அழுதான்; அவன் விரும்பியதை எப்பொழுதுமே ஏன் பெற முடியவில்லை என்று கடவுளிடம் முறையிட்டான். சிறிது நேரம் கழித்து ராஜ் தூங்கி விட்டான்; அப்பொழுது ஒரு கனவு கண்டான்.

கனவில், மரச்சாமான்கள் ஏதும் இல்லாமல், ஒரே ஒரு அறை மட்டுமே உள்ள ஒரு பழைய மாசுபடிந்த வீட்டில், தான் இருப்பதை அவன் கண்டான். அவனது துணிகள் கந்தலாகவும், அந்த வீட்டில் எவ்வித வசதியும் இல்லாமல், ஏறக்குறைய காலி வீடாக இருந்தது. மேலும், துர்நாற்றத்தையும் அவனால் தாங்க முடியவில்லை. ராஜ் இந்த வீட்டிலிருந்து வெளியே வந்து, மற்றொரு வீட்டிற்குள் நுழைந்தான்.

rajs lesson on gratitude - picture 3

இந்த வீடு பெரிதாக, அற்புதமாக இருந்தது. வீட்டின் முன், ஒரு சிறிய அழகிய தோட்டம் இருப்பதை நுழைவாயிலிலிருந்து பார்க்க முடிந்தது. இந்த அழகிய வீடு தற்பொழுது அவன் வசிக்கும் சொந்த வீடு என்பதை சற்று அதிர்ச்சியுடன் உணர்ந்தான்!

அவன் அந்த வீட்டிற்குள் நுழைய முயன்றான், ஆனால் ஒரு பாதுகாவலரால் தடுத்து நிறுத்தப்பட்டான். ராஜ் அவரிடம் அது தான் வசிக்கும் வீடு என்று கூற முயன்றான்; ஆனால் காவலர் அவனை நம்பாமல், உள்ளே அனுமதிக்க மறுத்தார். பக்கத்திலுள்ள பழைய வீடுதான் அவனுடைய வீடு என்றார்; ராஜ் குழப்பமடைந்து, பயந்து போனான். பின்னர் காட்சி முற்றிலும் மாறியது. அவன் கண் விழித்த போது தனது அறையில், படுக்கையில் படுத்திருப்பதை உணர்ந்தான்.

நடந்தது அனைத்தும் ஒரு கனவு என்பதை அவன் உணர்ந்தான் – அவன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதையும், இப்படி நன்றியற்றவனாக தான் நடந்து கொண்டோமே என்பதையும் உணர்ந்தான்! ராஜ் எழுந்து தனது பெற்றோரிடம் சென்றான். அவன் வெட்கத்தில் எதுவும் சொல்ல முடியாமல், தலை குனிந்து நின்றான். அவனது பெற்றோர் அவன் மன வருத்தத்தை புரிந்து கொண்டனர்.

அவனது தாயார் அவனை கட்டிப் பிடித்து, “மகனே, உன் பள்ளியில் உள்ள சில மாணவர்களைப் போல், மனிதப் பண்புகளே அறியாமல் வளரக் கூடாது என்பதால் தான், விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் மற்றும் பிற சாதனங்களை நாங்கள் வாங்கித் தரவில்லை.

நம்மைச் சுற்றி கவனித்தால், ஒவ்வொரு நாளும் சாப்பிடுவதற்கு கூட போதுமான உணவு இல்லாமல் இந்த உலகில் பலர் இருப்பதை நாம் பார்க்கிறோம். விலையுயர்ந்த பொருட்கள் கொண்ட நபர்களைக் காட்டிலும் இவர்கள் எவ்விதத்திலும் தகுதியிலோ, ஆற்றலிலோ குறைந்தவர்கள் இல்லை.

ஒரு மனிதனின் மதிப்பை தீர்மானிப்பது அவனது பண்பும், நடத்தையும் ஆகும். போதுமான பணம் இருந்தால் எல்லோருமே விலையுயர்ந்த பொருட்களை வாங்க முடியும், ஆனால் ஒருவராலும் பணத்தால் நல்ல ஆளுமைப் பண்புகளை வாங்கவோ அல்லது மனிதர்களின் நல்லுறவையோ சம்பாதிக்க முடியாது” என்று அழகாக எடுத்துரைத்தார்.

ராஜின் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. அவனது நன்றியற்ற நடத்தையை எண்ணி அவன் வெட்கப்பட்டான். அவன் தன் பெற்றோரிடமும், கடவுளிடமும் மன்னிப்பு கேட்டான். கடவுள் அவனுக்கு ஆசீர்வதித்திருந்த நல்ல பெற்றோரையும், பொருட்களையும், ஆரோக்கியமான உடலையும் நல்ல புத்தியையும் வைத்து சந்தோஷமாக இருக்க முடிவெடுத்தான்.

நீதி:

நாம் எப்போதும் நம்மைவிட அதிக வசதி உள்ளவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். நமக்கு கிடைத்துள்ள ஆசீர்வாதங்களை மறக்கிறோம். மகிழ்ச்சியோ அல்லது மன நிறைவோ, ஒருவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை வைத்து அளவிட முடியாது. எத்தகைய நற்குணங்கள் நம்மிடம் இருக்கின்றன, உறவுகளை நாம் எவ்வாறு மதித்து, மரியாதை காட்டுகிறோம் மற்றும் எப்படி ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தை உருவாக்குகிறோம் என்பதையும் பொறுத்தே அதன் சிறப்பு அமைகிறது. பணம் அவசியமானது; ஆனால் மகிழ்ச்சியின் அளவுகோல் அது அல்ல. பணத்தை ஒழுங்குமுறையான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நமக்கு கிடைத்த ஆசீர்வாதங்களை நினைத்து, நன்றியுள்ளவர்களாகவும், கடமைப் பட்டவர்களாகவும் இருக்கக் கற்றுக் கொள்வோம்.

நன்றியுணர்வின் மதிப்பை குழந்தைகளுக்கு இளம் வயதிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். பணம் அல்லது நாம் வைத்திருக்கும் பொருட்களின் அடிப்படையில் மகிழ்ச்சியை அளவிடக் கூடாது என்பதை உதாரணங்கள் மூலம் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

இளம் வயதிலிருந்தே பணத்தின் மதிப்பை அவர்கள் அறிய வேண்டும். ஆம், பணம் நிச்சயம் தேவை; மிகவும் முக்கியம் தான்; ஆனால் அதுவே வாழ்க்கை இல்லை. நம் ஆசீர்வாதங்களை எண்ணி, நமக்கு கிடைத்ததை நன்றியுடன் எண்ணிப் பார்க்க வேண்டும். நன்னடத்தை மிகவும் முக்கியம். நன்னடத்தை உள்ள மனிதன் வாழ்க்கையை வளப்படுத்தக்கூடிய நற்பண்புகளை கொண்டிருப்பான். எனவே இளம் வயதிலிருந்து நன்றியுணர்வு மற்றும் அனைத்து நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்; அப்படிச் செய்தால், அவர்கள் வளர்ந்த பின் மனநிறைவுடன் தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வழிநடத்துவதுடன், சமுதாயத்தில் மற்றவர்கள் மீதும் அக்கறை காட்டுவார்கள்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s