சொல்வதை செய், செய்வதை சொல்

நீதி – உண்மை / வாய்மை

உபநீதி – மனம், வாக்கு, செயல் ஒன்றுபடுதல்

Practice what you preach picture 1

மகான்கள் தாங்கள் கடைப்பிடித்ததையே உபதேசம் செய்கின்றனர். அதனால் அந்த உபதேசங்களுக்கு நமக்கு நன்மை செய்யும் சக்தி இருக்கிறது.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஒரு பக்தை, தன் மகனை குருவிடம் அழைத்து வந்து, “குரு தேவா! என் மகன் தினமும் இனிப்பு சாப்பிடுகிறான். அதனால் அவன் பற்கள் பாதிக்கப் படுகின்றன. என்னால் அவனுக்கு தினமும் இனிப்பு கொடுக்க இயலாது. நான் எவ்வளவோ சொல்லியும், அடித்தும், கண்டித்தும் அவன் திருந்தவில்லை. இந்த கெட்ட பழக்கத்தை நிறுத்துவதற்கு, தாங்கள் தான் அவனுக்கு தயவு செய்து அறிவுரை வழங்கி ஆசீர்வதிக்க வேண்டும்” என்றாள்.

பரமஹம்சர் அந்தச் சிறுவனை ஏறிட்டுப் பார்த்து விட்டு, ஒன்றும் பேசாமல்  இரண்டு வாரம் கழித்து, அவனை அழைத்து வரும்படி தாயாரிடம் கூறினார்.

அவர்கள் இரண்டு வாரம் கழித்து மீண்டும் வந்த பொழுது, ராமகிருஷ்ணர் அந்த சிறுவனிடம், “அன்பு மகனே! உன் தாயிடம் தினமும் இனிப்பு தரச் சொல்லிப் பிடிவாதம் செய்கிறாயா?” எனக் கேட்டதற்கு அந்தச் சிறுவன், “ஆம்” என்றான். அதற்கு ராமகிருஷ்ணர், “நீ ஒரு புத்திசாலி பையன். இனிப்பு உன் பற்களைப் பாதிக்கிறது என்பது உனக்குத் தெரியும். உன் அம்மாவும் அதற்காகவே கவலைப் படுகிறாள். தினமும் இனிப்பு வாங்கினால், உனக்குப் புத்தகங்களும், ஆடைகளும் வாங்க பணத்திற்கு அவள் என்ன செய்வாள்? நீ தவறு செய்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லையா?” என்று கேட்டார்.

அந்தச் சிறுவன் “ஆம்” என்று  தலையசைத்து விட்டு மெளனமாக இருந்தான். மேலும் அவர் பேசிய பொன்மொழிகள் சிறுவனின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. “இனிமேல் தினமும் இனிப்பு வேண்டும் என்று கேட்பாயா?” என்று பரமஹம்சர் சிறுவனிடம் கேட்டார்.

 அதற்கு அச்சிறுவன் புன்சிரிப்புடன், “நான் இனிமேல் இனிப்பு வகைகள் வேண்டும் என அம்மாவிடம் கேட்டு தொந்தரவு செய்ய மாட்டேன், சாப்பிடவும் மாட்டேன்” எனக் கூறினான்.

practice what you preach - swami blessing son

சிறுவனின் பதிலால் பிரசன்னமடைந்த ராமகிருஷ்ணர் அன்புடன் அவனை அரவணைத்து, “நீ நல்ல பையன். உனக்கு எது நல்லது, எது கெட்டது என்று தெரியும். நீ ஒரு நல்ல மனிதனாக உருவெடுப்பாய்” என்று ஆசீர்வதித்தார். சிறுவன் அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான்; ராமகிருஷ்ணர் அவனை ஆசீர்வதித்து விட்டு, மற்ற சிஷ்யர்களை திரும்பி பார்த்தார்.

அந்தச் சிறுவன் அங்கிருந்து சென்றதும், அவனுடைய தாயார் குருவிடம், “இந்த ஒரு சில வார்த்தைகளைக் கூற நீங்கள் ஏன் எங்களை இரண்டு வாரம் காக்க வைத்தீர்கள் என அறியலாமா?” எனக் கேட்டாள்.

அதற்கு பரமஹம்சர், “அன்று நீங்கள் வந்த போது, பக்தர்கள் கொடுக்கும் இனிப்புகளை உண்ணும் பழக்கம் எனக்கு இருந்தது. எனக்கே அந்தப் பழக்கம் இருந்த போது, நான் எப்படி உன் மகனுக்கு உபதேசம் செய்வது?

அதனால் இந்த இரண்டு வாரங்கள் நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தினேன். இந்த வைராக்கியம் எனக்கு உபதேசம் செய்யும் வலிமையையும், சக்தியையும் கொடுத்தது.

நாம் சொல்வதை செய்தால் தான், நமது வார்த்தைகள் நேர்மையாக இருக்கும்; கேட்பவர்களுக்கும் மனதில் அது பதியும்” என்றார்.

அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் அறையை விட்டுச் செல்லும் போது, ஒரு ஆழ்ந்த பாடத்தை ராமகிருஷ்ணரிடமிருந்து தாங்களும் கற்றுக் கொண்டதை உணர்ந்தனர்.

நீதி:

இந்தக் கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது –

ஆன்மீக உபதேசங்கள் செய்யும் முன்பாக நாம் அதைக் கடைபிடிக்க வேண்டும். அதை கடைப்பிடிப்பதற்கு உண்டான வழிமுறைகளை நாம் முற்றிலும் பயிற்சி செய்திருக்க வேண்டும்.

மனம், வாக்கு, செயல் மூன்றும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு இணைந்திருந்தால், குழப்பத்திற்கோ, போலித் தனத்திற்கோ இடம் இருக்காது. இந்த பயிற்சிகளை சிறு வயதிலிருந்தே கடைபிடிக்க வேண்டும். ஆசிரியர்களும், பெற்றோர்களும் இதற்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டும். இரட்டை வாழ்க்கை வாழ்வது கடினம். நாம் செய்யாததை செய்தது போலக் காட்டினால், நமது மேல் உள்ள நம்பிக்கை மற்றும் மரியாதை வெகு காலத்திற்கு மக்கள் மத்தியில் நிலைக்காது.

மேலும் இவ்வாறு உபதேசம் செய்பவர்களுக்கு மன நிம்மதியும் இருக்காது; ஏனெனில், அவர்களும் தெய்வத்தின் அம்சங்களாகத் திகழ்வதால், அந்த அம்சங்கள் அவர்களை எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் ஒருங்கிணைப்பு இல்லாததை நினைவு படுத்தும்.

மொழி பெயர்ப்பு:

கோதண்டராமன், சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s