Archive | August 2018

சக்கிலியனும் பணக்காரனும்

நீதி: உண்மை / மன நிம்மதி

உபநீதி: சிந்தித்து செயல்படுவது

cobbler and the rich man picture 1

ஒரு ஊரில், செருப்புத் தைப்பவன் ஒருவன் மகிழ்ச்சியாக அவன் வேலையை செய்து வந்தான். அவன் காலை முதல் மாலை வரை, மழையோ வெய்யிலோ, கவலையே இல்லாமல் எப்பொழுதும் பாடிக் கொண்டே நாளைக் கழித்தான். ஒரு செல்வந்தர் தினமும் அவ்வழியே சென்றார். அவர், இந்த ஏழைத் தொழிலாளியைப் பார்த்து மிகவும் பரிதாபப் பட்டார். அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றெண்ணினார்.

cobbler and the rich man - picture 2

ஒரு நாள், அந்த செல்வந்தர் செருப்புத் தைப்பவனைப் பார்த்து,  “வணக்கம். நான் தினமும் உன்னுடைய கடின உழைப்பைப் பார்த்து கொண்டிருக்கிறேன். நீ ஒரு வருடத்தில் எவ்வளவு சம்பாதிப்பாய்?”  என்று கேட்டார். அதற்கு அந்த செருப்புத் தைப்பவன், “வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கிறது” என்று பதிலளித்தான்.  செல்வந்தர், “எனக்கு இதைக் கேட்கவே வருத்தமாக இருக்கிறது. நீ மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறாய் என்று நினைக்கிறேன்” என்று கூறினார். செருப்புத் தைப்பவனோ, “எனக்கு இது பழகிவிட்டது. நான் சந்தோஷமாகத் தான்

அடுத்த நாள், அந்த செல்வந்தர் ஒரு பையில் பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு, மீண்டும் செருப்புத் தைப்பவனைக் காண வந்தார். அவனிடம், “என் நண்பரே! நான் உனக்காக பத்தாயிரம் ரூபாய் கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு உன் கஷ்டங்களை சமாளிக்கவும்” என்று கூறினார்.  செருப்புத் தைப்பவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. முதலில் அவன் அதை வாங்க மறுத்தான். ஆனால் செல்வந்தர், “உனக்கு பணம் தேவையான சமயங்களில் உபயோகமாக இருக்கும், எடுத்துக் கொள்” என்று கூறினார். பணத்தைப் பெற்றுக் கொண்டு அவன் செல்வந்தருக்கு நன்றி கூறினான்.

தற்பொழுது அவனுக்கு ஒரு புது பயம் வந்தது. “பத்தாயிரம் என்பது பெருந்தொகை. அதை எங்கு பத்திரமாக வைப்பது?” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான். அவனுடைய குடிசையில் ஒரு குழியை வெட்டி, அதற்குள் பணத்தை புதைத்து விட்டான். எந்த நேரத்திலும், யாராவது வந்து நம் பணத்தை திருட வாய்ப்புள்ளது என்று அவன் அஞ்சினான். இந்த எண்ணமானது அவனை இரவில் சரியாக உறங்க விடாததால் உறக்கத்தை இழந்தான். அவன் தன் புன்னகை, மகிழ்ச்சி அனைத்தையும் இழந்தான்; பாடுவதை மறந்தே போய்விட்டான். அவனால் அவனுடைய வேலையிலும் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இதன் விளைவாக, அவனுடைய வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்குரியதானது. அமைதியும் சந்தோஷமும் அவன் வாழ்க்கையிலிருந்து தொலைந்து விட்டது. அவனிடம் பணம் இருந்தது; ஆனால் மன நிம்மதி இல்லை என்பது அவனுக்கு நாளடைவில் புரிந்தது.

நீதி:

பணம் மட்டுமே மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று கூற முடியாது. பணம் சம்பாதிப்பது கடினம் என்றால், அதை பாதுகாப்பது அதைவிடக் கடினம். அது நமக்கு பயத்தையும், பதட்டத்தையும் தான் அளிக்கிறது.

எந்த செல்வம் மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டுமோ, அதுவே பதட்டத்தையும், பயத்தையும் கொண்டு வந்தது. அதற்காக செல்வம் நல்லதல்ல என்று அர்த்தமல்ல. நம் தேவைக்கும், வசதிக்கும் ஏற்ற அளவு செல்வம் வைத்திருத்தலே நன்று. அதற்கு மேல் இருந்தால் பிறருக்கு உதவலாம்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

ஜாம்பவானும் ஹனுமானும்

நீதி: உண்மை

உபநீதி: உள்ளார்ந்த சக்தி / தன்னைத் தானே உணர்ந்து கொள்ளுதல்

jambavan and hanuman - rama and golden deer

ராமாயணக் கதையில், ராமர் தங்க மானை தேடிச் சென்ற போது, ராவணன் சீதா தேவியை கடத்திச் சென்றான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ராமரும், லட்சுமணனும் சீதா தேவியை தேடிச் சென்ற போது, அவர்கள் ஹனுமானைப் பார்த்தனர்; ஹனுமான் அவர்களை சுக்ரீவனிடம் அழைத்துச் சென்றார்.

ராமரின் உதவியால், சுக்ரீவன் வாலியை அகற்றி, கிஷ்கிந்தாவின் அரச குலத்திற்கு தலைவராக நியமிக்கப் பட்டான்; அப்படிச் செய்ததனால், சீதா தேவியை தேடுவதற்கு சுக்ரீவன் தன் வானரப் படையை அனுப்புவதாக ராமரிடம் உறுதியளித்தான். ஜடாயுவின் சகோதரன் ஸம்பாதி மூலமாக, ராவணன் சீதா தேவியை கடத்தி இலங்கைக்கு சென்ற விஷயம் தெரிய வந்தது. அதனால், சீதா தேவியை காப்பாற்றுவதற்காக இலங்கைக்கு எப்படி செல்லலாம் என்று வானரப் படை கலந்தாலோசித்தனர்.

கிஷ்கிந்தாவின் இளவரசன் அங்கதன், “நான் சிறியவனாக இருப்பதால் என்னால் கடலைத் தாண்ட முடியாது” என்று கூறிய பிறகு, ஹனுமானுக்கு அங்கதனின் பலம் தெரியாததால் மெளனமாக உட்கார்ந்தார். இச்சமயம் ஜாம்பவான் என்ற கரடி ஹனுமானிடம் ரகசியமாக அங்கதனின் பலத்தை எடுத்துரைத்தது.

Jambavan and Hanuman - picture 1

இளம் வானரமான ஹனுமானுக்கு பறப்பது சுலபமாக இருந்தது; சூரியனைக் கடப்பது கூட கடினமாகத் தெரியவில்லை. ஹனுமான் காற்றின் அதிபதியான வாயுவின் புத்திரன் அல்லவா? சூரிய பகவானிடமிருந்து நேரடியாக வேதங்களை ஹனுமான் கற்றுக் கொண்டார் என சரித்திரம் கூறுகிறது. சிறியவனாக இருந்த பொழுதே, அதிக பலத்துடனும், அதனால் ஏற்பட்ட ஒரு பெருமித உணர்வும், கூர்மையான புத்தி மற்றும் குறும்புத்தனமுடனும் இவர் காணப் பட்டார். இந்த சூட்டிகைத்தனத்திற்கு முடிவு கொண்டு வர, அவருக்கிருந்த எல்லா பலங்களையும் மறப்பதற்காக சாபம் கொடுக்கப் பட்டது; ஆனால் இந்த தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு ஒரு காலம் இருந்தது. எப்போது மற்றவர்கள் அவரை உயர்வாகப் பேசி, அவருக்கு இருக்கும் பலங்களை நினைவுப் படுத்துகிறார்களோ, அச்சமயம் அந்த பலங்களை உணரும் சக்தி மீண்டும் அவருக்கு வந்து விடும். ஜாம்பவானுக்கு இந்த விஷயம் தெரிந்திருந்ததால், அது ஹனுமானின் பலங்களையும், திறமைகளையும் வெளிப்படுத்தியது.

ஹனுமானுக்கு தன் உண்மையான பலம் தெரிய வந்ததும், கடலை தாண்டுவதற்கு தயாரானார். எல்லாப் பிரச்சனைகளையும் எதிர் கொண்டு, ராவணனுக்கு எதிராக நடந்த போரில் முக்கிய நபராக ஹனுமான் திகழ்ந்தார்.

போரின் பல முக்கியமான நேரங்களில், ராவணனை தோற்கடிக்க, ராமர் மற்றும் அவர் படைக்கு ஹனுமான் உதவி செய்தார்.

நீதி:

உண்மையான பக்தி மற்றும் கர்வமற்ற பரிபூர்ண சரணாகதி போன்ற நற்பண்புகலோடு, கடவுளின் அடையாளமாக ஹனுமான் வாழ்ந்தார். ஒரு குரங்காக, மனிதனின் கீழ்த்தரமான குணங்களை குறிப்பிட்டு, அந்த வரையறைக்குள் அவரால் என்ன முடிகின்றதோ அவ்வாறே நடந்து கொள்கிறார். அவர் உண்மையாக யார் என்பதை நினைவுப் படுத்தியதும், தன் பலங்களை அறிந்து கொண்டு, கடவுளுடன் தொடர்பு கொண்டு ஒரு உயர்வான ரீதியில் செயற்பட்டு, அவருடனேயே ஹனுமார் ஐக்கியமாகி விடுகிறார். நம் எல்லோரிடத்திலும் அந்த அடிப்படையான உள் சக்தி வெளிப்படும் போது, உலகம் மற்றும் தெய்வீக ரீதியில் நாம் வெற்றிகரமாகத் திகழ்வோம்.

இந்தக் கருத்தை மாணவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் – ஒவ்வொருவரும் வெளியில் இருக்கும் சூழ்நிலை எப்படி இருந்தாலும், திட நம்பிக்கையுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். சிறு வயதிலிருந்தே, நற்பண்புகள் மற்றும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உள் மனதின் நிலைமை மனப்பக்குவத்துடன் இருந்தால், வெளியில் இருக்கும் எல்லாவற்றையும் சமாளித்து விடலாம். அடிப்படையாக, சரியான மனப்பான்மை மிகவும் முக்கியம். மாணவர்கள் கல்வியிலும், வாழ்க்கையிலும் இவ்வகையான பயிற்சி பெற்றால், மனத் தெளிவு மற்றும் உள் சக்தியைப் புரிந்து கொண்டு, உயர்வான கடவுளை சென்றடைய முயற்சிக்கலாம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

தாய்நாட்டின் மீது பற்று

நீதி அன்பு, நன்னடத்தை

உபநீதி தேசப் பற்று

love for motherlandராமர், அரக்கர்களை எதிர்த்துப் போராடி, வெற்றிப் பெற்றார்; ராவணன் கொல்லப் பட்டான். ராமர், சீதா தேவியை மீட்டார். மேலும், இலங்கை ஒரு தவறான அரசாட்சியிலிருந்து விடுபட்டது. அதோடு, அது தன் ஒளிர்வை மீண்டும் பெற ஆரம்பித்தது. அந்த சமயத்தில் லட்சுமணன் ராமரைப் பார்த்து, “அண்ணா! இப்பொழுது தான் இலங்கை அரக்கர்களிடமிருந்து விடுபட்டுவிட்டதே. நாம் ஏன் அயோத்தியா செல்ல வேண்டும்? அதை பரதன் அரசாளட்டும். தாங்கள் இலங்கையின் அரசராகலாமே!” என்று வினவினார்.

உண்மையின் திருவுருவமாக திகழ்ந்த ராமர் புன்முறுவலுடன் “லட்சுமணா! ஒருவனுடைய தாய் எவ்வளவு அசிங்கமாக இருந்தாலும், அவன் வேறு ஒரு தாயைத் தேடி செல்வதில்லை. தாய் எப்படிப் புனிதமானவளோ, அப்படியே தாய் நாடும் புனிதமானது. தாய் மற்றும் தாய் நாடு இரண்டுமே மதிப்பிற்குரியவை; மேலும் போற்றத்தக்கவை. நான் உறுதியளித்தபடி 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து விட்டுக் கண்டிப்பாக அயோத்தியா திரும்ப வேண்டும்; மேலும் என் பெற்றோரும், நாட்டு மக்களும் எதிர்பார்த்தபடி நான் தர்மத்தை நிலை நாட்ட வேண்டும். விபீஷணனே இலங்கையின் அரசனாக பதவி புரியட்டும்” என்று கூறினார்.

நீதி:

தாயும் தாய்நாடும் மிகவும் புனிதமானவை. அவற்றை எவராலும் மாற்ற இயலாது. ஒருவன் தன் தாய் மற்றும் தாய் நாட்டின் மீது மரியாதையும், அன்பும் காண்பிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆதாரம்: ஸாயி பாபாவின் சின்ன கதை

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

புத்தர் – பொறுமையின் சிகரம்

நீதி – நிம்மதி

உபநீதி – பொறுமை

BUDDHA - EPITOME OF PATIENCE PICTURE 1ஒரு நாள், புத்தர் ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தார். முன்கோபமுள்ள இளைஞன் ஒருவன், மரியாதை தெரியாமல் அவரை இகழ்ச்சியாக, “மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய உனக்கு எந்த உரிமையும் இல்லை. எல்லோர் போல நீயும் ஒரு முட்டாள் தான். நீ ஒரு ஏமாற்றுக்காரன்” என்றெல்லாம் கத்தினான்.

புத்தர் இந்த அவமரியாதையான பேச்சைக் கேட்டு வருத்தப்படவில்லை. மாறாக, அவர் அவனிடம், ” நீ எனக்கு ஒரு விஷயம் சொல். நீ ஒருவருக்காக ஒரு பரிசு வாங்குகிறாய். ஆனால் அவர் அந்தப் பரிசை உன்னிடமிருந்துப் பெற்றுக் கொள்ளவில்லை. அப்படியென்றால், அது யாருக்குச் சொந்தம்?” என்று வினவினார்.

அந்த இளைஞனுக்கு இந்தக் கேள்வி ஒரு புதிராக இருந்தது. “அது எனக்கு தான் சொந்தம். ஏனெனில், அதை வாங்கியது நான் தானே?” என்றான். புத்தர் புன்சிரிப்புடன், “அது சரி தான். உன் கோபமும் அதே மாதிரி தான். நீ என்னிடம் கோபப்பட்டுக் கத்தினாய். நான் அந்த அவமதிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியென்றால், அது மறுபடியும் உன்னிடம் தானே வந்து சேர வேண்டும்?” என்று கூறினார்.

நீதி:

ஒருவன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். நம் வார்த்தைகளும், செயல்களும் பிறரைப் பாதிக்கக் கூடும். அதனால், சிந்தித்து வார்த்தைகளை பேச வேண்டும். மேலும் எவரேனும் உங்கள் மேல் கோபப் பட்டால், பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை உங்களுக்கு நிறைய சவால்களையும், சந்தர்ப்பங்களையும் கொடுக்கும். இந்த குணங்களை, உங்கள் இளம் வயதிலேயே வளர்த்து கொண்டால்,  உங்களால் வாழ்க்கையைத் தைரியமாக எதிர்கொள்ள முடியும். மாணவர்கள் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கவும், எதிர்கொள்ளவும் வேண்டும். அவர்கள் அனுபவங்களை கடந்து செல்ல வேண்டும்.  எவன் ஒருவன் சூழ்நிலைகளை எதிர்கொண்டு அவற்றின் ஏற்ற இறக்கங்களை புரிந்து கொள்கிறானோ, அவனுக்குத் தான் இந்த போதனைகளின் மதிப்பு புரியும். உங்களுடைய வாழ்வின் மிக முக்கியமான தருணங்களில் அவை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

அதனால் கவனிக்கவும் – இன்று உங்களை மாற்றிக் கொள்ள விருப்பமில்லாமல் இருக்கலாம்; ஆனால், உங்களுள் விதைக்கப்பட்ட இந்த நற்குணங்கள், ஒரு நாள் உங்களுக்கு மிகவும் அவசியப்படும் போது மலரும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com