Archive | November 2018

நற்சொல் தீயசொல்

இந்த கதைக்கு கீழ்வரும் திருக்குறள் பொருத்தமாக இருக்கும்.

“தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு”

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

நீதி: அஹிம்சை

உபநீதி: இனிமையாகப் பேசுவது

good tongue bad tongue first pictureஅரசர் ஒருவர் தன் நாட்டு மக்கள் இன்பமாகவும், விவேகமுள்ளவர்களாகவும் வாழ என்ன செய்ய வேண்டும் என்று அறிய ஆசைப்பட்டார். அவர் ஒரு பொருட்காட்சி அமைத்து, நாட்டிலுள்ள அறிஞர்கள் அனைவரையும் வரவழைத்து, ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வர அவர்களிடம் சொன்னார். பொருட்காட்சிக்கு வந்த அரசர், அங்கு வரிசையாக அடுக்கியிருந்த மலர்கள், பழங்கள், அழகிய செடிகள், இனிப்புகள், உடைகள், புத்தகங்கள், இசைக் கருவிகள், தங்க ஆபரணங்கள் மற்றும் அழகிய கைவினைப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்த்தார். ஆனால் இவை அனைத்தும் எல்லோரையும் மகிழ்வூட்டும் பொருட்களாக அவருக்குத் தென்படவில்லை. கடைசியாக களிமண்ணால் செய்த ஒரு வண்ணமயமான பொம்மையை அவர் கண்டார். அது ஒரு மனிதனின் நாவு – ஏழ்மையான, மெலிந்த, முதியவரிடம் பேசுவது போல் அமைந்திருந்தது. அந்த பொம்மையின் கீழே “இனிய சொற்களை பேசும் நாவு” என்று எழுதியிருந்தது.

இதைப் பற்றி மேலும் அறிய, அரசர் அந்த பொம்மையை செய்த சிற்பியை வரவழைத்தார். சிற்பி, “அரசே! பொருட்காட்சியிலுள்ள எல்லாப் பொருட்களும், மனிதனை சில காலத்திற்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கும். ஆனால் இனிய சொற்களைப் பேசும் நாவு, பரிவையும், அன்பையும் வெளிப்படுத்தி, கேட்பவரை வெகுகாலம் மகிழிச்சியடையச் செய்யும்; துன்பப்படுபவர்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும், வலுவுற்றவர்களுக்கு மனோபலத்தையும், தன்னம்பிக்கையையும், அனாதைகளுக்குப் பரிவையும், பாசத்தையும் அளிக்கும். இனிய சொற்கள் மட்டுமே மனிதக் குலத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்”.

பேரின்பம் அடைந்த மன்னன், பரிசாக அந்த சிற்பிக்குப் பெட்டகம் நிறைய தங்க ஆபரணங்களை  வழங்கினார்.

Good tongue bad tongue second pictureசில நாட்களுக்குப் பிறகு, மனிதர்களைத் துயரத்தில் ஆழ்த்துபவை எவை என அறிய அரசர் ஆவலுற்றார். அவர் மறுபடியும் நாட்டிலுள்ள எல்லா அறிஞர்களையும் அழைத்து, மனிதர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தும் பொருட்கள் அனைத்தையும் பொருட்காட்சியில் வைக்கச் சொன்னார். இந்த முறை, பொருட்காட்சியில் கத்தி, வாள், கம்பு, சாட்டை, மதுபானம், குரைக்கும் நாய் போன்ற பொருட்கள் நிறைந்திருந்தன. ஆனால் இவை அனைத்தும் அரசருக்கு மன நிறைவை அளிக்க வில்லை. கடைசியில் முன்பு பார்த்தது போல, இம்முறையும் ஒரு களிமண் பொம்மையைக் கண்டார். ஆனால் இந்த பொம்மையின் கண்கள் சிவந்து, நாவு கரிய நிறத்தில் இருந்தது; அது ஏழ்மையான, உடல் மெலிந்த, பசியால் தவிக்கும் ஒரு முதியவரிடம் கடும் சொற்களை உச்சரித்துக் கொண்டிருந்தது. பொம்மையின் கீழே, “தீய சொற்களைப் பேசும் நாவு” என்று எழுதப்பட்டிருந்தது. மறுபடியும் அந்தச் சிற்பி அழைக்கப்பட்டான். அவன் தனது படைப்பைப் பற்றி கீழ்வருமாறு கூறினான் – “அரசே! தீய நாவிலிருந்து வரும் சொற்கள், ஒரு மனிதனின் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொன்றுவிடும்; நம்பிக்கையையும், துணிச்சலையும் நாசமாக்கும். மனிதனை துன்பக்கடலில் மூழ்கடிக்கும். மனது புண்பட்டு, அந்தக் காயம் பல வருடங்களுக்குப் பிறகும் ஆறாதிருக்கும். தீய சொற்களே மனிதனின் மிகப் பெரிய எதிரி”.

அரசன் மீண்டும் அந்த சிற்பிக்கு நகைகளும், வைர வைடூரியங்களையும் பரிசளித்தான். மேலும் அரசர், “உன் மண் பொம்மைகள் கற்றுக் கொடுத்த பாடங்கள், இந்த நகைகள் மற்றும்  வைர வைடூரியங்கள் எல்லாவற்றையும் விட விலையுயர்ந்தது” என்று புகழ்ந்தார்.

நீதி:

மற்றவர்களின் மனதை துன்புறுத்தும் வகையில் கடுமையாகப் பேசுவது வன்முறைக்கு ஈடாகும். கடும் சொற்களால் உண்டான மனக்காயம் எளிதில் ஆறாது. ஆனால் இனிய, அன்பான வார்த்தைகள் மனதுக்கு இதமாகவும், மற்றவர்களை சந்தோஷப் படுத்தும் வகையிலும் இருக்கும். நம்மால் ஒருவருக்கும் உதவ முடியவில்லை என்றாலும், பணிவாகவும் ஆசையாகவும் பேசப் பழகிக் கொள்ள வேண்டும்.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

இனிமையான சொற்கள் இருக்கும் போது, கடும் சொற்களைக் கூறுவது, பழம் இருக்கும் போது காயைத் தின்பதற்கு ஒப்பாகும்.

மொழி பெயர்ப்பு:

கோதண்டராமன், சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

மனத் தூய்மை

நீதி: அன்பு

உபநீதி: அக்கறை, பரிவு

ஈஷ்வர் சந்திர வித்யாசாகர் கருணையும் தாராள மனமும் கொண்ட ஒரு நல்ல மனிதர். சமுதாயத்தில் எல்லோரையும் சமமாகக் கருதி, பரிவோடு பழகினார். அவரது வீட்டில் வேலைகள் அனைவற்றையும் செய்வதற்கு ஒருவன் இருந்தான். வித்யாசாகர் அவனிடம் அன்பாகப் பழகி, தன் வீட்டிலுள்ள உறவினர் போல நடத்தினார். ஒரு நாள், வித்யாசாகர் வெளியே கிளம்பும் போது, வீட்டில் வேலை செய்பவன், கையில் ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு, வாசற் படியில் உறங்குவதைக் கண்டார். அவன் கையிலுள்ள கடிதத்தை எடுத்து பார்த்த போது, அதில் ஒரு துக்கச் செய்தி இருப்பதை கவனித்தார். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்திருப்பதை பார்த்தார்; துக்கம் தாங்காமல் அழுது அழுது அப்படியே அவன் உறங்கி இருக்க வேண்டும் என்று நினைத்தார். அவன் இருந்த வேதனையான நிலைமையைப் பார்த்ததும், வித்யாசாகரின் மனதில் அனுதாபம் அதிகமாகி, அவர் வீட்டிலிருந்து ஒரு விசிறியை எடுத்து வந்து, அவன் நன்றாக உறங்குவதற்கு விசிறினார். அந்த நேரத்தில் வித்யாசாகரின் நண்பர் அங்கு வந்து இந்த நிகழ்வைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். “நீங்கள் செய்யும் செயல் உங்கள் தகுதிக்கு உகந்ததல்ல. ஏழெட்டு ரூபாய் மட்டுமே ஊதியம் வாங்கும் ஒருவனுக்குப் பணிவிடை எப்படி செய்யலாம்?” என அந்த நண்பர் கேட்டார்.

“என்னுடைய தந்தை கூட மாதம் ஏழெட்டு ரூபாய் சம்பளம் மட்டுமே வாங்கியவர் தான். ஒரு நாள் அவர் வீட்டிற்கு வரும் வழியில் மயங்கி விழுந்து விட்டார். வழிப்போக்கன் ஒருவன் அவருக்குத் தண்ணீர் கொடுத்து காப்பாற்றியது என் நினைவுக்கு வந்தது. இன்று இவன் உருவத்தில் என்னுடைய தந்தையை நான் பார்க்கிறேன்” என்று வித்யாசாகர் பரிவுடனும், பண்புடனும் கூறினார்.

நீதி:

உள்ளத் தூய்மை ஏற்படுவதற்கு நாம் பேசும் இனிமையான வார்த்தைகள் மட்டுமல்ல; நாம் நடந்து கொள்கின்ற விதமும் மிகவும் முக்கியம். ஒவ்வொருவரிடமும் நம் அன்பை வெளிப்படுத்தும் போது, நமது தாராள மனப்பான்மை மற்றும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. ஆதலால் நாம் எல்லோரிடமும் அன்பாகவும், பெருந்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

கவியரசு கண்ணதாசனின் எளிமையான வார்த்தைகள்:

ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்

அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.

மொழி பெயர்ப்பு:

கோதண்டராமன், சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

பொறாமை அழிவை விளைவிக்கும்

நீதி – நன் நடத்தை

உபநீதி – தன்னலமற்ற மனப்பான்மை

ஒரு கிராமத்தில், மாதவ் மற்றும் கேஷவ் என்று இரண்டு விவசாயிகள் இருந்தனர். மாதவ் கடுமையாக உழைத்து, புத்திசாலித்தனமாக இருந்தான்; எச்சமயத்திலும் மன நிறைவுடன் காணப் பட்டான். கேஷவ் சோம்பேறித்தனமாக, கவலையும் வருத்தமும் கலந்த மனப்பான்மையுடன் இருந்தான். கேஷவுக்கு மாதவ் மீது எச்சமயமும் பொறாமை இருந்ததால், மாதவ் மகிழ்ச்சிகரமாக இருப்பதைக் கண்டு கேஷவ் எரிச்சலுற்றான்; கேஷவ் கடவுளிடம் மாதவ்வின் வீழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்தான்.

கடவுள், மாதவ் மேல் கருணை பொழிந்தார். மாதவ், தன்னைப் போல கிராமத்தில் எல்லோரும் இன்பமாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். பல வருடங்கள் கடுமையாக உழைத்த மாதவ், ஒரு முறை தன் தோட்டத்தில் அதிசய வகையான பெரிய பூசணிக்காய் வளர்ந்திருப்பதை கவனித்தான். பூசணியின் வெளி பாகத்தில் வானவில்லின் ஏழு வண்ணங்களும் இருந்தன. பூசணிக்கு மல்லிப்பூவின் நறுமணமும், தேனின் சுவையும் இருந்தது; அதற்கு நான்கு கால்களும் ஒரு வாலும் இருந்ததால், அது பார்ப்பதற்கு குட்டி யானையைப் போல இருந்தது.

இந்த அற்புதமான பூசணியை அந்நாட்டு ராஜாவிற்கு பரிசாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என மாதவ் எண்ணினான். அதனால் அவன், இந்த பூசணியை எடுத்துக் கொண்டு ராஜாவின் அரண்மனைக்குச் சென்று அவரிடம் கொடுத்தான். ராஜா மிகவும் மகிழ்ச்சியுற்று, அவனுக்கு ஒரு யானையைப் பரிசாகக் கொடுத்தார்.

இந்த வெற்றிகரமான சாதனையைக் கேட்ட கேஷவ் மிகவும் பொறாமை அடைந்ததால் அவனால் இரவில் தூங்க முடியவில்லை. “ராஜா எனக்கும் சிறப்பான பரிசை அளிக்க நான் என்ன செய்ய வேண்டும்? ஒரு பொம்மை யானை ராஜாவிற்கு அளவு கடந்த இன்பத்தைக் கொடுத்திருகிறது. நான் உண்மையான யானையை அவருக்குப் பரிசாகக் கொடுத்தால், அவர் எனக்கு ஒன்றோ இரண்டோ கிராமங்களைக் கொடுத்து, ஜமீன்தார் என்ற பதவியையும் கொடுப்பார்” என்றவாறு யோசித்தான்.

அடுத்த நாள், கேஷவ் தன் பண்ணை, மாடுகள், எருதுகள், செம்மறியாடுகள் மற்றும் ஆடுகளை விற்றான். அந்தப் பணத்திலிருந்து, ஒரு பெரிய யானையை வாங்கிக் கொண்டு ராஜாவிடம் சென்றான். ஒரு கிராமவாசி இத்தகைய பரிசைக் கொடுப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசனை செய்த ராஜா, அவருடைய  மந்திரியிடம் கலந்து உரையாடி, விவசாயிக்குப் பொருத்தமான பரிசு என்ன கொடுக்கலாம் என்று பார்க்கச் சொன்னார்.

விவேகமுள்ள மந்திரி கேஷவுடன் உரையாடிய பிறகு, பொறாமைக் குணத்தினால் தான் ராஜாவிற்கு யானை கொடுத்தது தெரிய வந்தது. அதனால் மந்திரி ராஜாவிடம் சென்று, “அரசரே, முன்னால் வந்த விவசாயிக்கு, அவன் கொடுத்த பூசணி பரிசிற்காக நீங்கள் கைமாற்றாக யானை அளித்தீர்கள். இவன் கொடுத்த யானைக்கு நீங்கள் பதிலுக்கு பூசணியைப் பரிசாக கொடுங்கள்” என்று கூறினார்.

இந்த சாதாரண பூசணியை பார்த்த கேஷவ், வேதனையுற்றான். அவன் உடைமைகள் அனைவற்றையும் விற்று, அவன் பொறாமை குணத்தால் அழிந்தான்.

நீதி:

பொறாமை வீழ்ச்சிக்குக் காரணமாகும். தன்னலமற்ற சேவை புரிந்தால், மகிழ்ச்சியும், வெற்றியும் நிச்சயம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

பத்மபாதர் – குரு பக்தி

நீதி – நம்பிக்கை

உப நீதி – பக்தி

padmapada - picture 1ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியரின் நான்கு சிஷ்யர்களில் ஒருவர் பத்மபாதர். மற்ற மூவர், ஹஸ்தமாலகர், தோடகர், மேலும் சுரேஷ்வரர் ஆவர்.

பத்மபாதருடைய இயற்பெயர் சனந்தனர் ஆகும்.

சனந்தனருடைய குரு பக்தியின் மகிமையை எடுத்துக் காட்டும் இக்கதை, எனக்கு மிகவும் பிடித்தது.

ஒரு நாள், சங்கரர் காசியில் தங்கியிருந்த போது, அவரும் அவருடைய சிஷ்யர் சனந்தனரும் கங்கையின் எதிர் கரைகளில் இருக்க நேர்ந்தது. சிஷ்யர் குருவின் ஆடைகளை உலர்த்திக் கொண்டிருந்தார். சங்கரர் தன் சிஷ்யரின் பக்தியை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பினார். அவர் நதியில் நீராடிய பிறகு, ஈர ஆடையுடன் சிஷ்யரை அழைத்துத் தமக்கு உலர்ந்த ஆடை எடுத்து வருமாறு கூறினார்.

சனந்தனர் தம் அதீத குரு பக்தியால், “நம் குரு நமக்கு ஏதாவது கட்டைளையிட்டால் நாம் அதனை உடனடியாகச் செய்ய வேண்டும்” என்று தமக்குத் தாமே கூறிக் கொண்டார். குரு ஈர ஆடையில் இருப்பது அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர் இப்பொழுது குரு பக்தியாலும், அன்பாலும் ஆட்கொள்ளப்பட்டவராய்த் திகழ்ந்தார்; சரிவர யோசிக்க நேரமில்லை.

நதியைக் கடந்து அடுத்த கரைக்குச் செல்லப் படகில் செல்லலாம் என்று கூட அவருக்கு ஒரு எண்ணம் வரவில்லை. கங்கையின் கொந்தளிப்பு கூட அவர் கண்களுக்குப் புலப்படவில்லை. “குரு நம்மை ஆடை எடுத்து வரச் சொன்னார்” என்ற ஒரே எண்ணம் தான் மனதில் இருந்தது.

அதனால், சாதாரண நிலத்தில் நடப்பது போல் அவர் நடக்கத் துவங்கினார்! தாம் நதியில் மூழ்கிவிடுவோமோ? அல்லது குருவின் ஆடை மீண்டும் நனைந்து விடுமோ? என்ற எண்ணங்களெல்லாம் சிறிதளவும் இல்லாமல், நதியில் அவர் நடந்தார்.

சிஷ்யரிடம் இப்படிப்பட்ட பக்தி இருக்கும் பொழுது, குரு அவரை தகுந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல மாட்டாரா?

padmapada - lotus flowersஎன்ன ஒரு அற்புதம்! சனந்தனர் பாதம் பதித்த இடங்களிலெல்லாம், அவர் நடப்பதற்கு சாதகமாக அழகிய தாமரை மலர்கள் தோன்றியன. அவர் ஒவ்வொரு அடி வைக்கும் பொழுதும், ஒரு தாமரை மலர்ந்தது. அவருக்கு தாமரைகளின் மீது நடக்கும் உணர்வு கூட இல்லை.

சனந்தனரின் குரு பக்தியைக் கண்ட மக்கள் அனைவரும் இந்த அதிசயத்தைக் கண்டு திகைத்து நின்றனர். அவர் குருவிற்கு ஆடையைக் கொண்டு வந்து கொடுத்தார்.

சங்கரர் ஏதும் அறியாதவர் போல், “நீ எப்படி இந்த கங்கையைக் கடந்தாய் குழந்தாய்?” என்று வினவினார். அதற்கு சனந்தனர், “தங்களை நினைத்தாலே மிகப் பெரிய இந்த சம்சார சாகரமே முட்டியளவு இறங்கிவிடுகிறது. அப்படியிருக்கத் தங்கள் கட்டளையை நிறைவேற்றுவதற்குக் கங்கையைக் கடப்பது ஒரு பொருட்டல்ல குருவே” என்று கூறினார்.

பின்னர் சங்கரர் அவருக்கு நதியில் மலர்ந்தத் தாமரை மலர்களைக் காண்பித்தார். அவை சனந்தனருடைய பாதம் பட்டு மலர்ந்ததனால், அவரைப் “பத்மபாதர்” என்று அழைத்தார்.

நீதி:

எவன் ஒருவன் தன் குருவிடம் திட நம்பிக்கையோடு, அவர் பாதங்களில் பரிபூரண சரணாகதி அடைகிறானோ, அவனுடைய தேவைகளை குரு கவனித்துக் கொள்கிறார்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் திருடனும்

நீதி: பக்தி

உப நீதி: நம்பிக்கை

chittha chora picture 4கடவுளின் புகழைப் பாடி, அதை ஒரு தொழிலாகக் கொண்டிருந்த ஒரு பாகவதர், ஒரு முறை பாகவதத்தின் கதையை ஒரு வீட்டில் பிரவசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டிற்குள் ஒரு திருடன் நுழைந்து, மூலையில் மறைந்து, பிரவசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

chittha chora picture 5ஸ்ரீமத் பாகவதம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் மற்றும் மாய லீலைகள் நிறைந்த ஒரு புனித நூலாகும். திருடன் இக் கதைகளைக் கேட்கும் கட்டாயத்தில் இருந்தான். பாகவதர் அச்சமயம் பால கிருஷ்ணர் அணிந்திருந்த ஆபரணங்களை வர்ணித்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணரை பசுக்களுடன் அனுப்புவதற்கு முன், தாயார் யசோதை அவருக்கு அணிவித்து மகிழ்ந்த நகைகளை பாகவதர் விவரித்தார். இக் கதைகளைக் கேட்டு பரவசம் அடைந்த திருடன், எப்படியாவது அப் பாலகனின் நகைகள் எல்லாவற்றையும் கொள்ளை அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்; தினமும் சிறு சிறு பொருட்களைத் திருடுவதை விட, இது மேல் என்று எண்ணினான். பிரவசனம் முழுவதும் முடியும் வரை திருடன் காத்திருந்து, பிறகு இவ்விடத்தை விட்டுச் சென்றான். இப்பாலகன் இருக்கும் இடத்தை திருடன் அறிய விரும்பினான். ஆதலால் அவன் பாகவதரைப் பின் தொடர்ந்து, அவரை வழி மறித்தான். தட்சிணையாகக் கிடைத்த தனது சிறு செல்வமும் தொலைந்து விடுமோ என பாகவதர் பயந்து, தன்னிடம் ஒன்றும் இல்லை என்று திருடனிடம் கூறினார்.

திருடன், பாகவதரின் பொருளில் தனக்கு எந்த அக்கறையும் இல்லை என்றும், அவர் வர்ணித்த மாடு மேய்க்கும் பாலகனின் ஆபரணங்கள் பற்றிய விவரம் தனக்கு வேண்டும் என்றான். தன்னை அவ்விடத்திற்கு அழைத்துச் செல்லும்படி திருடன் அவரைக் கேட்டான். பாகவதர் குழப்பம் அடைந்தார். அவர் திருடனிடம், “யமுனை நதிக் கரையில் உள்ள பிருந்தாவனம் என்னும் நகரத்தில், பச்சைப் புல்வெளியில் இரு பாலகர்கள் காலை வேளையில் வருவார்கள். ஒருவன் மேகங்களின் நிறத்தைப் போல் நீல வர்ணமாகவும், கையில் புல்லாங்குழலுடனும், மற்றவன் வெளுத்த நிறத்தில் பட்டாடைகளுடனும் இருப்பான். நான் வர்ணித்த நகைகளை அந்த நீல வர்ண பாலகன் அணிந்திருப்பான்” என்று கூறினார்.

chittha chora picture 3பாகவதர் கூறியதை நம்பிய திருடன் பிருந்தாவனத்திற்கு உடனடியாகக் கிளம்பினான். அந்த அழகான இடத்தை அவன் கண்டு பிடித்து, ஒரு மரத்தின் மீது ஏறி, அப் பாலகர்கள் வரும் வழியை எதிர்பார்த்து, காத்திருந்தான். சூரியோதயம் ஆனது. காற்றுடன் புல்லாங்குழலின்  இனிமையான ஓசை மிதந்து வந்தது. அந்த இசை நெருங்கி, ஓசை சற்று வலிதானதும், திருடன் அப் பாலகர்களைக் கண்டான். மரத்திலிருந்து இறங்கிய அவன் பாலகர்களை நெருங்கினான். பால கிருஷ்ணரின் மனோகரமான ரூபத்தைக் கண்டதும், அவன் தன்னை மறந்து அவரை கை கூப்பி வணங்கினான். ஆனந்தக் கண்ணீர் அவன் கண்களிலிருந்து வழிந்தது. இக் கண்ணீர் அவன் உள்ளத்திலிருந்து வந்ததால், தண்மையாக இருந்தது. இந்த அழகான பாலகர்களை எந்தத் தாயார் அனுப்பி இருப்பார்கள் என எண்ணி அவன் வியந்தான். கண்களை அகற்றாமல் அவன் அவர்களைப் பார்த்தான்! அவனுள் மாற்றம் தொடங்கியது!!

அவன் பாலகர்களை நெருங்கி “நில்” என்று கூச்சலிட்டபடி கிருஷ்ணரின் கையைப் பிடித்தான். அக்கணமே, பஞ்சு மூட்டை நெருப்பில் எரிவது போல், அவனது பழைய கர்மாக்கள் அழிந்தன. அவன் கிருஷ்ணரை நெருங்கி மிக அமைதியாக “யார் நீ” என்று கேட்டான்.

கிருஷ்ணர் அவனைப் பார்த்து, ஏதுமறியாதது போல் ‘உன் பார்வை என்னை பயமூட்டுகிறது. தயவு செய்து என் கைகளை விட்டு விடு’ என்றார். திருடன் அவமானத்துடன் “என்னுடைய கெட்ட எண்ணம் என் முகத்தில் பிரதிபலிக்கிறது; எனவே நீ பயந்து கொள்கிறாய். நான் இங்கிருந்து சென்று விடுகிறேன்; ஆனால் நான் உன்னை விட்டு விட வேண்டும் என்று மட்டும் தயவு செய்து கூறாதே” என்றான்.

chittha chora picture 1குறும்புக்கார கிருஷ்ணன் திருடனிடம் அவன் வந்த காரணத்தை நினைவு படுத்தி, சிரித்தபடி, “இதோ, இந்த ஆபரணங்களை எடுத்துக் கொள்” என்றார். குழப்பமடைந்த திருடன் “அனைத்து ஆபரணங்களையும் நீ கொடுத்து விட்டால், உன் தாயார் உன்னை கோபித்துக் கொள்ள மாட்டாரா?” என்று கேட்டான். அதற்கு கிருஷ்ணர் புன்சிரிப்புடன், “நீ அதைப் பற்றி கவலைப் படாதே. என்னிடம் அதிக அளவில் ஆபரணங்கள் இருக்கின்றன. நான் உன்னை விடப் பெரிய திருடன்; ஆனால் நம் இருவரிலும் ஒரு சிறு வித்தியாசம் இருக்கிறது. நான் எவ்வளவு திருடினாலும், எவரும் என்னைப் பற்றி புகார் கூற மாட்டார்கள். என்னை அன்புடன் ‘சித்த சோரா’ என்று அழைப்பார்கள். உனக்கே தெரியாமல், உன்னிடம் பழைய ஆபரணம் ஒன்று இருக்கிறது; உனது சித்தம் (உள்ளம்). அதை நான் இப்போது திருடி எடுத்துச் செல்லப் போகிறேன்” என்று கூறிய பிறகு, இரு பாலகர்களும் கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டனர்.

திருடன் வியக்கும் வகையில், ஆபரணங்கள் நிறைந்த ஒரு பை அவன் தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அதை பாகவதரின் வீட்டுக்கு எடுத்து வந்து, அவன் நடந்த அனைத்தையும் அவருக்கு விவரித்தான். பாகவதர் இப்போது பயந்து, திருடனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, பையைத் திறந்து பார்த்தார். அவர் திகைக்கும் வகையில், பாகவதத்தில் அவர் விவரித்தபடி, கிருஷ்ணர் அணிந்திருந்த அத்தனை ஆபரணங்களும் அப்பையில் இருந்தன.

ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி பாகவதர் திருடனிடம், கிருஷ்ணரை அவன் கண்ட இடத்திற்கு, தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார். திருடன் ஒப்புக் கொண்டு, தான் முந்தைய தினம் கிருஷ்ணரை கண்ட இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றான்.

திடீரென திருடன் ஆச்சரியத்துடன் ‘அதோ, அங்கே அவன் வருகிறான்’ என்று கூறினான். பாகவதர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஏமாற்றம் அடைந்த அவர், “ஒரு திருடனுக்கு நீங்கள் தரிசனம் அளித்தீர்கள்; எனக்கு ஏன் இல்லை?”என்று கேட்டார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மிகுந்த பரிவுடன் இவ்வாறு பதிலுரைத்தார் – நீங்கள் ஸ்ரீமத் பாகவதத்தை, மற்ற கதைகளைப் போல படிக்கிறீர்கள். திருடனோ நீங்கள் என்னைப் பற்றி கூறியதை நம்பி, என்னைத் தேடி வந்தான். என்னிடம் பூரண நம்பிக்கை வைத்து சரணாகதி அடைபவர்களுக்கே நான் தரிசனம் அளிக்கிறேன் .

கடவுளை தரிசித்த திருடனுக்கு வாழ்த்துக்கள்! நாமும் நம் சித்தத்தை சித்த சோராவிடம் அர்ப்பணிப்போம்!!

நீதி:

ஆன்மீக நூல்களை, நம்பிக்கை இல்லாமல் படிப்பதால் ஒரு பயனும் கிடையாது. தீவிர நம்பிக்கை இருந்தால், மலைகள் கூட அசையும்!

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com