Archive | December 2018

புதிய கோணத்தில் நினைத்தல்

நீதி: சரியான மனப்பான்மை

உபநீதி: சமயோஜித புத்தி

பல ஆண்டுகளுக்கு முன், இத்தாலி நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊரில், ஒரு வியாபாரி இருந்தார். கடன் கொடுப்பவன் ஒருவனிடம் நிறையக் கடன் வாங்கிய துர்பாக்கிய நிலையில் அந்த வியாபாரி இருந்தார். கோரமாக இருந்த அந்த வயதான கடங்காரன், வியாபாரியின் அழகிய மகள் மீது ஆசை கொண்டான். அதனால் அவன் வியாபாரியிடம் அவரது பெண்ணைத் தனக்கு மணம் முடித்து வைத்தால், அவர் வாங்கிய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதாகப் பேரம் பேசினான். இதைக் கேட்ட வியாபாரியும், அவரது மகளும் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.

கடன் கொடுப்பவன், “நான் ஒரு பையில் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கூழாங்கற்களைப் போடுகிறேன். உன் மகள் அதிலிருந்து ஒரு கல்லை எடுக்க வேண்டும். அவள் கறுப்பு நிறக் கல்லை எடுத்தால், அவள் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்; உன் கடன் முழுவதையும் நான் தள்ளுபடி செய்து விடுவேன். அவள் வெள்ளை நிறக் கல்லை எடுத்தால், அவள் என்னை மணம் செய்து கொள்ள வேண்டாம். அதே சமயம் உன் கடனையும் நீ திருப்பி தர வேண்டாம். அவள் கல்லை எடுக்க மறுத்தால், நீ சிறைக்குச் செல்ல நேரிடும்” என்றான்.

அவர்கள் மூவரும், கூழாங்கற்கள் நிறைந்த பாதையில் கடன் கொடுப்பவனின் தோட்டத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து கொண்டிருந்த போது, கடன் கொடுப்பவன் இரண்டு கூழாங்கற்களை எடுக்கக் குனிந்தான். அவன் அவற்றை எடுத்த போது, இரண்டுமே கறுப்பு நிறக் கற்களாக தேர்ந்தெடுத்து பையில் போடுவதை அந்தப் பெண் கவனித்தாள். அவன் அந்தப் பெண்ணிடம் பையிலிருந்து ஒரு கல்லை எடுக்கச் சொன்னான்.

அந்தப் பெண்ணின் நிலையில் இருந்திருந்தால், நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?  நீங்கள் அவளுக்கு அறிவுரை சொல்லும் நிலையில் இருந்திருந்தால், என்ன கூறியிருப்பீர்கள்?  தீர ஆராய்ந்தால் கீழ்க்கண்ட மூன்று வழிகள் கிடைக்கும்:

  1. அந்தப் பெண் கூழாங்கல்லை எடுக்க மறுப்பது.
  2. பைக்குள் உள்ள இரண்டுமே கறுப்பு நிறக் கற்கள் என்பதை வெளிப்படுத்தி, கடன் கொடுப்பவரின் சூழ்ச்சியை அம்பலப்படுத்துவது.
  3. அந்தப் பெண் கறுப்பு நிறக் கல்லை எடுப்பதன் மூலம், தன் தந்தை அனுபவிக்கின்ற கடன் தொல்லையிலிருந்து அவரைக் காப்பாற்றி, தன்னையே தியாகம் செய்வது.

மேற் சொல்லப்பட்ட கதை, வித்தியாசமான சிந்தனைக்கும், தார்மீக சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை நாம் உணர உதவுகிறது. அந்தப் பெண் பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து அதைப் பார்க்காமல், கூழாங்கற்கள் நிறைந்த பாதையில் அதைத் தவற விட்டாள். அது கண்ணிமைக்கும் நேரத்தில் அங்குள்ள கற்களுடன் கலந்து விட்டது.

அவள் “அடடா! நான் எவ்வளவு பொறுப்பற்றவள். சரி பரவாயில்லை. பையில் இருக்கும் மற்ற கல்லைப் பார்த்தால், நான் எடுத்த கல்லின் நிறம் தெரிந்து விடும்” என்றாள். கடன் கொடுப்பவன், ஒரே நிறக் கற்களை பையில் போட்ட தவறை வெளிப்படையாகச் சொல்ல மாட்டான் என்ற தைரியத்தில், ஒரு இக்கட்டான சூழ்நிலையைத் தனக்கு சாதகமாக அவள் மாற்றிக் கொண்டாள்.

நீதி:

குழப்பமான பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கும். சில நேரங்களில் நாம் அவற்றை மாறுபட்ட கோணத்தில் யோசிக்க வேண்டும். எந்த ஒரு  சூழ்நிலையிலும் நாம் சமயோஜித புத்தியுடன் செயல்பட வேண்டும். சூழ்நிலையைக் கண்டு, மனமுடைந்து சோர்வடைவதற்கு பதிலாக, அமைதியான மனதுடன் சரியான வழியில் யோசித்தால், அந்த சூழ்நிலையை அறிவுடன் கையாள அது வழி வகுக்கும்.

இது தொடர்பான ஒரு நிகழ்ச்சி:

நீடாமங்கலம் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பாகவதர் கண்ணனைப் பற்றி பிரவசனம் செய்யும் போது “கண்ணனின் புல்லாங்குழல் ஓசை கேட்டு பட்டமரமெல்லாம் துளிர்த்தது” என்று சொன்னார். கதை கேட்ட ஒருவர் “கண்ணன் கைப் புல்லாங்குழலும் பட்ட மரத்தில் செய்தது தானே? அது ஏன் துளிர்க்கவில்லை?” எனக் கேட்டார். புத்திசாலித்தனமான கேள்வி!!! பாகவதர் சற்றும் யோசிக்காமல் (கண்ணன் ஸ்மரணையில் ஊறியவர் ஆகையால் சமயோஜித புத்தி அவருள்ளேயே இருந்தது) “பகவான் கை பட்டதால் அது மோட்சம் அடைந்து விட்டது” என்றார். இதுதான் சூழ்நிலையை வித்தியாசமாக அணுகுவது என்பது.

மொழி பெயர்ப்பு:

கோதண்டராமன், சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

தாய் ஆந்தை

நீதி – தன்னலமற்ற அன்பு

உபநீதி – அக்கறை, பாசம்

மனதை நெகிழ வைக்கும் தாய்மை பற்றிய கதை ஒன்றை விலங்கினத்திலிருந்து பார்ப்போம். கேரள மாநிலத்தில், வயநாடு அருகே உள்ள வனப்பகுதியில் அமைந்த கோவில் ஒன்றுக்கு விஜயம் செய்த பக்தர் ஒருவரால் இந்தக் கதை கூறப் பட்டுள்ளது. அவர் கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்த போது, சிறிய அணில் ஒன்று ஜன்னலின் மேற் பகுதியில் சிக்கிக் கொண்டு கீச்சென்ற ஒலியை எழுப்புவதைக் கவனித்தார். அதன் தாய் அங்கு இல்லாததால்,  பாம்பொன்று அந்தக் குட்டி அணிலை இரையாக்கிக் கொள்ளும் நோக்கத்தோடு அதனை நெருங்கிக் கொண்டிருந்தது.

அந்த சமயம், அருகிலிருந்த மரத்திலிருந்து, பெரிய ஆந்தை ஒன்று பறந்து வந்து, பாம்பை அவ்விடத்திலிருந்து நகர்த்தி விட்டு, அந்த குட்டியை காப்பாற்றியது. பின்னர் ஆந்தை கிளையில் சென்று அமர்ந்து கொண்டது; எனினும், அதன் கவனம் முழுவதும் தவித்துக் கொண்டிருந்த அந்த ஆதரவற்ற சிறிய அணிலின் மீதே இருந்தது. தக்க தருணத்தில் ஆந்தை செய்த உதவியைக் கண்டு பக்தர் வியந்தார். சிறிது நேரம் கழித்து, பாம்பு மீண்டும் அணிலைப் பிடிக்க வந்தது. இதோ! உதவியற்ற அணிலைக் காப்பாற்ற ஆந்தை மீண்டும் பறந்து வந்தது. பாம்பு பின்வாங்கியது; ஆனால் அது தன் முயற்சியைக் கைவிடும் மனநிலையில்  இருக்கவில்லை. ஒரு குறுகிய கால இடைவெளிக்குப் பின் மீண்டும் அணிலை நோக்கி பாம்பு சென்றது. ஆந்தை மிகவும் கோபமடைந்து, இந்த முறை பாம்பை முற்றிலுமாக அகற்றி, அதன் கோரப் பிடியிலிருந்து அணிலைக் காப்பாற்றும் நோக்கத்துடன் பறந்து சென்றது.

பொதுவாக, ஆந்தையின் இரையாக அணில் இருந்தாலும், விலங்குகளுக்கு இடையே உள்ள உலகளாவிய தாய்மையின் இந்த வெளிப்பாடு பக்தரை நெகிழ வைத்தது. தாய் இல்லாத நிலையில், குட்டி அணில் அந்த பயங்கர நிகழ்வை சந்தித்தது; அதனால், ஆந்தைக்கு அணிலின் மீது ஓர் ஆழ்ந்த இணக்கம் ஏற்பட்டு, மனம் நெகிழ வைக்கும் வகையில் அது நடந்து கொண்டது. இந்த நிகழ்வை, மனிதர்களின் அலட்சிய மனப்பான்மையுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் அந்த பக்தருக்கு இருக்க முடியவில்லை.

நீதி:

இயற்கை நமக்கு அருளிய உறவுகள் பற்றிய விழிப்புணர்வும், நம்மைச் சுற்றி வியாபித்திருக்கும் அனைத்து ஜீவன்களின் மீதும் சற்று அக்கறையுடன் நடந்து கொண்டால், நம் மனம் விசாலமாகும். மேலும் நம் மனதைப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளின் மீது அன்பும் கருணையும் செலுத்தினால், ஒருவர் மேலும் உயர்ந்து, பிரபஞ்சத்தின் ஆசீர்வாதங்களுக்கு உரிமை உடையவராகத் திகழ்வார்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

நாம் ஒருபோதும் தனிமையில் இருப்பதில்லை

நீதி: நம்பிக்கை

உபநீதி: விசுவாசம், சரணாகதி

ஒரு தந்தை தன் மகனோடு காட்டிற்குச் சென்று, அவன் கண்களைக் கட்டி, தனியாக விட்டு விட்டுச் சென்றார். அவன் இரவு முழுவதும் கண் கட்டை அவிழ்க்காமல், மறுநாள் சூரியன் உதிக்கும் வரை அங்கிருந்த அடி மரக்கட்டையின் மேல் அமர்ந்திருக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருந்தான். அவன் உதவிக்கு எவரையும் அழைக்கக் கூடாது. இரவு முழுவதும் இப்படி சமாளித்து விட்டால், அவன் ஆண்மகனாகக் கருதப்படுவான். அவனுடைய அனுபவத்தை மற்ற சிறுவர்களிடம் சொல்லக் கூடாது; ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்களின் சுய முயற்சியால் ஆண்மகன்களாக ஆக வேண்டும்.

அச்சிறுவன் மிகவும் பயந்து போயிருந்தான். அவனுக்குப் பல விதமான சத்தங்கள் கேட்டன. கொடிய மிருகங்கள் தன்னைச் சுற்றி இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான்; யாராவது வந்து தன்னை துன்புறுத்துவார்களோ என்ற பயத்துடன் அவன் இருந்தான். பலத்த காற்றினால் புல் மற்றும் பூமியின் அசைவை உணர்ந்து, தன்னுடைய கண் கட்டை அவிழ்க்காமல், அந்த மரக் கட்டையின் மீது உட்கார்ந்து இருந்தான். இதுவே அவனை ஆண்மகனாகக் கருத உகந்த வழி ஆகும்.

இறுதியாக, மறுநாள் சூரியோதயத்திற்குப் பிறகு, அவன் தன் கண் கட்டை அவிழ்த்தான். தந்தை தன் அருகிலேயே உட்கார்ந்து இருப்பதை அப்போது தான் அவன் அறிந்தான்.

தந்தை இரவு முழுவதும் தன் மகன் அருகிலேயே அமர்ந்துக் கொண்டு,  அவனுக்கு எந்த விதமான தீங்கும் வராமல் பார்த்துக் கொண்டு இருந்தார்.

நீதி:

நம்மில் ஒருவருமே தனியாக இருப்பதில்லை. நமக்கு அது தெரியாவிட்டாலும், கடவுள் எச்சமயமும் நம்மைப் பார்த்துக் கொண்டு, அருகிலேயே இருக்கிறார். நமக்குத் துன்பம் வரும் போது, கடவுளை நினைத்துக் கொள்ள வேண்டும். கடவுளைக் காண முடியவில்லை என்பதனால் கடவுள் இல்லை என்று அர்த்தம் இல்லை. “பார்வையை விட நம்பிக்கையே சிறந்தது”.

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அது போல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. கடவுள் நம்முடன் தான் இருக்கிறார். துயரம் வரும் வேளையில் தட்டிக் கொடுக்கும் நண்பனாய்!!!

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

பிள்ளையாரும் கார்த்திகேயரும்

நீதி: நற்பண்பு

உபநீதி: மரியாதை

ஒரு நாள், பிள்ளையாரும் அவரது தம்பி கார்த்திகேயரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குக் கடவுளிடமிருந்து ஒரு பழம் கிடைத்தது. குழந்தைகளாக இருந்ததனால், அவர்கள் அந்தப் பழத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்தனர். அதனால், அவர்களின் பெற்றோர்களாகிய சிவனும் பார்வதியும் அந்த வாதத்தைத் தீர்க்க முன் வந்தனர். அவர்கள், “யார் பிரபஞ்சத்தை முதலில் மூன்று முறை வலம் வருகிறார்களோ, அவர்களுக்கு இந்தப் பழம் கிடைக்கும்; இந்தப் பழம், அவர்களுக்கு ஒப்புயர்வற்ற ஞானத்தையும், என்றும் நிலைத்திருக்கும் புகழையும் அளிக்கும்” என்றனர்.

கார்த்திகேயன் உடனடியாக தனது வாகனமான மயிலின் மேல் ஏறி பிரபஞ்சத்தை வலம் வரக் கிளம்பி விட்டான்; ஆனால், அவனுடைய தம்பியோ என்ன செய்வது என்று தெரியாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். வாட்ட சாட்டமாக இருந்த கணேசன், தனது சிறிய வாகனமான எலியோடு எவ்வாறு வேகமாக பிரபஞ்சத்தை வலம் வருவது என்று யோசித்துக் கொண்டிருந்தான்; பறப்பதற்குச் சிறகுகள் கூட எலிக்கு இல்லையே என்ற யோசனையும் மனதில் இருந்தது.

பிறகு, தனது மெய்யறிவினால் கணேசன் ஒரு முடிவுக்கு வந்தான். தனது பெற்றோராகிய சிவனையும் பார்வதியையும் அணுகி, “ நீங்கள் தானே என்னுடைய பிரபஞ்சம். அப்போது, நான் உங்களை மூன்று முறை வலம் வந்தால், அது பிரபஞ்சத்தை சுற்றி வருவதற்குச் சமம் தானே?” என்று கூறி தனது பெற்றோரை மூன்று முறை வலம் வந்தான்.

கணேசன் அந்த போட்டியில் மட்டும் ஜெயிக்க வில்லை; தனது பெற்றோரின் அன்பையையும் வென்றான்.

நீதி:

ஒருவர் தனது மெய்யறிவை சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும். பெற்றோர்களை மதித்து, வாழ்க்கையில் நமக்கு அவர்களை விட முக்கியமானவர்கள் எவருமே இல்லை என்பதை உணர வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சுப்ரியா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com