Archive | February 2019

பிரச்சனைகளை சமாளிப்போம்

நீதி – நன்னம்பிக்கை

உபநீதி: சமாளிக்கும் மனப்பான்மை

ஒரு முறை, பொருட்காட்சிச்சாலை மற்றும் கலைக்கூடங்களின் அடித்தளத்தில் வாழ்கின்ற சிலந்தி வகைகளில், கலைச்சுவையுள்ள சிலந்தி ஒன்று வாழ்ந்து வந்தது. அழகான ஓவியங்களை வரைந்து, அதைப் பற்றி பல வருடங்கள் மறந்தே போகின்ற இடங்களில் இச்சிலந்தி வகைகள் வாழ்கின்றன. அது சிலந்தி வலைகளை உருவாக்க பொருத்தமான இடம்; ஏனெனில், மனதைக் கவரும் வகையில் அவை இருக்கின்றன. பொருட்காட்சிச்சாலையில் இச்சிலந்தி மிக அற்புதமான சிலந்தி வலைகளை உருவாக்கியிருந்தது. வலைக்கு முக்கியத்துவம் கொடுத்ததனால், சிலந்தியின் முழு முயற்சியும் அதை பாதுகாப்பதிலேயே சென்றது.

எனினும், சில நாட்களுக்குப் பிறகு இந்தப் பொருட்காட்சிச்சாலை, தனது எல்லா ஓவியங்களையும் சற்று ஒழுங்குப்படுத்தி அமைக்க முன் வந்தது. அடித்தளத்தில் உள்ள சில ஓவியங்களை மாடியில் காட்சிக்கு வைக்க இருந்தது. கீழே வசித்து வந்த பல சிலந்திகளுக்கு இந்த விஷயம் புரிந்ததால் எச்சரிக்கையாக இருந்தன; ஆனால், இந்த ஒரு சிலந்தி இதைப் பற்றி கவலைப்படவில்லை.

இச்சிலந்தி, “சில ஓவியங்களை மட்டுமே காட்சியில் வைப்பதால், கவலைப்பட ஒன்றுமில்லை” என்று நினைத்தது.

இன்னும் பல ஓவியங்களை அடித்தளத்திலிருந்து மாடிக்கு நகர்த்திய பின்பும், இச்சிலந்தி தன் வலையைப் பெருமையாகப் பார்த்து விட்டு, “இந்த இடத்தை விட வேறு எங்கு சிறப்பாக இருக்க முடியும்?” என்று நினைத்தது.

ஒரு நாள் அதிகாலையில், சிலந்தி எதிர்பாராத விதத்தில் அதன் ஓவியம் மற்றும் வலையுடன் அவர்கள் இடமாற்றம் செய்தனர். சிலந்தி தன் வலையை இழக்க விரும்பாததால், காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் மற்ற ஓவியங்களுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தை புரிந்து கொண்டது.

இச்சிலந்தி, தைரியமாகவும், உறுதியாகவும், வாழ்க்கை முழுவதும் இந்த வலையை கட்டுவதற்காக தான் பாடுபட்ட முயற்சியை கைவிடத் தயாராக இருந்தது. இப்படி செய்ததனால், கண்காட்சியில் வைத்திருந்த ஓவியங்களின் மேல் அடித்த பூச்சி மருந்திலிருந்து அது தப்பித்தது.

அந்த இடத்திலிருந்து தப்பித்து, பல கஷ்டங்களை சமாளித்து, சிலந்தி ஒரு நிசப்தமான பூந்தோட்டத்திற்கு சென்றது. அங்கு ஒரு ஓரத்தில், இன்னும் சிறப்பான வலையை அமைத்து அது சந்தோஷமாக வாழ்ந்தது.

நீதி:

திட நம்பிக்கை மற்றும் தொடர்ந்த கடுமையான உழைப்பு மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

வார்த்தைகளை விட பாத்திரமே முக்கியமானது

நீதி: நன்னம்பிக்கை

உபநீதி: சரியாக தேர்ந்தெடுப்பது

who you are speaks to me than anything you can say pictureநான் வேலை செய்து கொண்டிருந்த லாஸ் வேகாஸ், நெவாடா பல்கலைக்கழகத்தில், வகுப்பின் துவக்கத்திற்கு முன்பு, திங்கட் கிழமையன்று, சுமார் 8 மணிக்கு, “வார இறுதி எப்படி இருந்தது?” என என் மாணவர்களிடம் இன்முகமாக கேட்டேன். ஒரு இளம் மாணவன், தன் கடைவாய்ப் பல்லை பிடுங்கியதால், வாரயிறுதி நன்றாக இருக்கவில்லை என்றான். தொடர்ந்து எச்சமயமும் நான் இன்பமாக எப்படி இருக்கிறேன் என்று கேட்டான். அவன் இந்த கேள்வியைக் கேட்டவுடன், நான் எங்கேயோ படித்தது எனக்கு ஞாபகம் வந்தது: “ஒவ்வொரு நாளும், இந்த நாள் எப்படி இருக்க வேண்டும் என்பது நம் கையில் இருக்கிறது”. மேலும் அவனிடம், “நான் இன்பமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று கூறி, ஒரு உதாரணத்தை அவனிடம் விவரித்தேன். பேசிக் கொண்டிருந்த மற்ற 6௦ மாணவர்களும் எங்கள் உரையாடலை கேட்க ஆரம்பித்தனர். நான் மோட்டார் வண்டி நிறுவனத்திற்குச் சென்றவுடன், கட்டிழுப்பு வண்டியை அனுப்பச் சொன்னேன். நகர அலுவலகத்திலுள்ள செயலாளர் நடந்த விஷயத்தைக் கேட்டார். நான் “இன்று எனக்கு அதிர்ஷ்டவசமான நாள்” என்றேன். அதற்கு அவர், “உன் வண்டிக்கு சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது; ஆனால் நீ அற்புதமான நாள் என்று சொல்கிறாயே? என்று குழப்பத்துடன் கேட்டார்.

அதற்கு நான், “இந்த இடத்திலிருந்து நான் வசிக்கும் இடம் 17 மைல் தூரத்தில் இருக்கிறது. நடு வழியில், ஏதாவது ஒரு இடத்தில் வண்டி பழுதடைந்து இருக்கலாம்; ஆனால், அது போல நடக்காமல், சுற்றுப்புறத்தில் வசதிகள் இருக்கும் இடத்தில் இப்படி ஆனதால், வண்டியை செப்பனிடுவதற்கு தகுந்தவாறு உள்ளது. இன்று நான் வகுப்பில் குழந்தைகளுக்கு பாடங்களைக் கற்றுக் கொடுத்த பிறகு, கட்டிழுப்பு வண்டியை ஏற்பாடு செய்வதற்கும் என்னால் முடிந்தது. இன்று என் வண்டிக்கு பிரச்சனை ஏற்பட வேண்டும் என்று இருந்திருந்தால், அது எப்படியும் ஏற்பட்டிருக்கும்” என்றேன். செயலாளர் புன்சிரிப்புடன் என்னைப் பார்த்தாள். நானும் பதிலுக்கு புன்சிரிப்போடு வகுப்பிற்குள் சென்றேன். லாஸ் வேகாஸ், நெவாடா பல்கலைக்கழகத்தில், பொருளாதார வகுப்பில் நான் மாணவர்களுக்கு சொன்ன கதை இவ்வாறு முடிவடைந்தது.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த 60 முகங்களையும் கவனித்தேன். அதிகாலை வேளையாக இருந்தும், ஒருவரும் தூங்காமல் நன்றாக விழித்துக் கொண்டிருந்தனர். ஏதோ ஒரு விதத்தில், இந்த கதை அவர்களின் மனதில் பதிந்திருந்தது. நான் கலகலப்பாக இருந்ததை கவனித்த ஒரு மாணவனால் நடைப்பெற்ற சம்பவம் என்று இதைக் கூறலாம்.

ஒரு முறை, அறிவாளி ஒருவர், “உன் பேச்சை விட நீ யார் என்பது இன்னும் முக்கியம்” என்றார். அது உண்மை தான் போல இருக்கிறது.

நீதி:

எந்த ஒரு சூழ்நிலையிலும், நல்ல விஷயங்களைப் பார்ப்பது, நம்மை கலகலப்பாகவும், இன்பமாகவும் இருக்க வைக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

அன்பால் எதையும் சாதிக்கலாம்

நீதி: அன்பு

உப நீதி: விடாமுயற்சி, பொறுமை

முன்பொரு காலத்தில், மீரா என்றொரு இளம் பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு தவித்தாள். அவளுடைய கணவன் போருக்குச் செல்வதற்கு முன்பு, அவளிடம் எப்பொழுதும் அன்பாக இருந்தார்; ஆனால், போரிலிருந்துத் திரும்பிய நாள் முதல், கோபக்காரராகவும், எதிர்பாராத முறையிலும் நடந்து கொண்டார். மீராவிற்கு, தன் கணவருடன் வாழ்வதற்குக் கூட சற்று பயமாகவே இருந்தது. அவள் துவக்கத்தில் அனுபவித்த அன்பு தற்போது கனவாகி விட்டது.

அவள் வசித்த கிராமத்திலுள்ள மக்கள், எந்த ஒரு வியாதி வந்தாலும், மலைப் பகுதியில் வசிக்கும் ஒரு துறவியிடம் ஓடிச் சென்று தீர்வு கேட்டனர்.  மீரா, தன் கஷ்டங்களை தானே தீர்த்துக் கொள்ளலாம் என்ற தீர்மானத்துடன் அங்கு செல்வதை விரும்பவில்லை; ஆனால், இந்த முறை அவளின் நிலைமை வேறுபட்டிருந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலை, அவளை அந்தத் துறவியிடம் போக வைத்தது.

மீரா துறவியின் குடிசையை நெருங்கியவுடன் கதவுகள் திறந்திருப்பதை கவனித்தாள். அந்த வயதான துறவி இவளை திரும்பி பார்க்காமலேயே,  “எனக்கு கேட்கிறது. உன் பிரச்சனை என்ன பெண்ணே?” என்று கேட்டார்.

அவள் தன் நிலைமையை விளக்கிக் கூறினாள். அவர் அவளை பார்க்காமலேயே, “இராணுவத்திலிருந்து வீடு திரும்பும் வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்வது சகஜம் தான். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ எதிர் பார்க்கிறாய்?” என்று வினவினார்.

“என் கனவரை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர ஏதாவது ஒரு மருந்து கொடுங்கள் அல்லது ஏதேனும் ஒரு கை காப்பு மந்திரித்துக் கொடுங்கள்” என்று அவள் கதறினாள்.

அந்த முதியவர் அவள் பக்கம் திரும்பி, “பெண்ணே! உன்னுடைய பிரச்சனை எலும்பு முறிவோ அல்லது காது வலியோ போன்றதல்ல” என்றார்.

“நான் அறிவேன்” என்றாள் மீரா.

துறவி “உன் பிரச்சனையைப் பற்றி யோசிக்க எனக்கு மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும். பிறகு வா” என்றார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, மீரா துறவியின் குடிசைக்குச் சென்றாள். துறவி புன்னகையுடன், “வா மீரா. உனக்கு ஒரு நல்ல செய்தி வைத்திருக்கிறேன். உன் கணவரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர ஒரு மருந்து இருக்கிறது. ஆனால், அதை தயாரிக்க ஒரு வினோதமான பொருள் தேவைப்படுகிறது. நீ உயிருள்ள ஒரு புலியின் மீசையை எனக்குக் கொண்டு வர வேண்டும்” என்றார்.

திடுக்கிட்ட மீரா, “இது என்னால் முடியாத காரியம்” என்றாள்.

அதற்கு அவர் “அந்தப் பொருள் இல்லாமல் என்னால் மருந்து தயாரிக்க முடியாது. அதற்கு மேல் சொல்வதற்கு வேறொன்றுமில்லை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது. உனக்கே தெரியும்” என்று கோபமாகக் கூறி விட்டு திரும்பிக் கொண்டார்.

அன்றிரவு மீராவால் உறங்கவே முடியவில்லை. அவளால் எப்படி ஒரு உயிருள்ள புலியின் மீசையை கொண்டு வர முடியும்?

அவள் மனம் தளராமல், அடுத்த நாள் விடியற்காலையிலேயே, ஒரு பெரிய கிண்ணம் நிறைய சோறும் கறிக் குழம்பும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள். அந்தக் கிராமத்து அருகே ஒரு மலைப் பகுதியில், ஒரு புலி வசிப்பதாகக் கூறப்படும் ஒரு குகைக்குள் அவள் சென்றாள். அவள் இதயம் படபடத்தது. குகைக்கருகில் இருந்த புல்வெளியில் மெதுவாக, சற்றும் ஓசை எழாமல் தான் கொண்டு வந்த சாப்பாட்டுக் கிண்ணத்தை வைத்து விட்டு அவள் சென்றாள்.

அடுத்த நாளும் விடியும் முன்னே, வேறொரு கிண்ணத்தில் அதே போல் உணவை எடுத்துக் கொண்டு அதே இடத்திற்கு, நாவால் மெதுவாக ஓசை எழுப்பியபடி சென்றாள். முந்தைய நாள் வைத்த கிண்ணம் காலியாக இருப்பதைக் கண்டாள். அவள் அதை எடுத்துக் கொண்டு தற்போது கொண்டு வந்த கிண்ணத்தை வைத்தாள். அந்த பயங்கரமான மிருகத்தைத் தட்டி எழுப்பக் கூடிய எந்த ஒரு ஓசையும் வராமல், அங்கு கிடந்த இலை தழைகளால் கூட ஏதும் ஒலி எழாதவாறு மெதுவாக அவள் நடந்து சென்றாள்.

இந்த நிகழ்வு பல மாதங்களுக்குத் தொடர்ந்தது. அங்கிருந்த கால் தடங்களைப் பார்த்து, எந்த ஒரு சிறு மிருகமும் அல்ல; ஒரு புலிதான் தான்  வைக்கும் உணவை சாப்பிடுகிறது என்று அவள் அறிந்து கொண்டாள். அவள் ஒரு நாள் கூட அந்தப் புலியை பார்க்கவில்லை. (அவள் மனதிற்குள் கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டாள்). பிறகு ஒரு நாள், அவள் அந்தக் குகையை நெருங்கும் சமயம் அந்தப் புலியின் தலை மட்டும் வெளியில் தெரிவதைக் கண்டாள். அவள் இதயம் படபடத்தது. குனிந்த தலை நிமிராமல், சற்றும் ஓசை எழுப்பாமல், அவள் காலிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, கையில் கொண்டு வந்த சோற்றுக் கிண்ணத்தை அங்கு வைத்து விட்டு வேகமாகச் சென்று விட்டாள்.

மேலும் சில வாரங்களுக்குப் பிறகு, இவளுடைய காலடி ஓசை கேட்டாலே அந்தப் புலி குகையை விட்டு வெளியே வந்து நிற்க ஆரம்பித்தது; ஆனால் சற்று தூரத்தில் தான்! (எப்படியும் ஒரு நாள் மீசை எடுக்க அதன் அருகில் செல்ல வேண்டும் என்பது மீராவிற்குத் தெரியும். இருப்பினும், இப்பொழுது தூரத்தில் இருப்பதைக் கண்டு கடவுளுக்கு மனதார நன்றி தெரிவித்தாள்.)

மேலும் ஒரு மாதம் கழிந்தது. மீரா வருவதை அறிந்த புலி அந்தக் காலிக் கிண்ணத்தின் அருகில் அவளுக்காகக் காத்திருந்தது. அவள் பழைய கிண்ணத்தை எடுத்து விட்டுப் புது கிண்ணத்தை வைக்கும் பொழுது, அவளால் புலியின் வாடையை நுகர முடிந்தது. புலியும் கண்டிப்பாக இவளை நுகர்ந்திருக்கும்.

தான் கொண்டு வந்த சாப்பாட்டுக் கிண்ணத்தை கீழே வைத்துக் கொண்டே, “நன்கு பழகி விட்டால், உண்மையில் புலி கூட பூனையைப் போல் தான் இருக்கிறது” என்று அவள் நினைத்துக் கொண்டாள். அடுத்த முறை செல்லும் பொழுது மெதுவாக அதை நேருக்கு நேர் பார்த்தாள். ஆஹா! அதன் புருவத்திலிருந்து எவ்வளவு அழகான செந்நிற ரோமங்கள் தொங்குகின்றன? என்று அவள் ரசித்தாள். அடுத்த வாரமே, புலி தன் மேனியை மெதுவாக தடவிப் பார்க்க அவளை அனுமதித்தது. ஒரு வளர்ப்புப் பூனையைப் போல் அவள் முன் அது நின்றது. சரியான தருணம் வந்தது என்று அவள் உணர்ந்தாள்.

அடுத்த நாள் அதிகாலை, அவள் ஒரு கத்தியை எடுத்து வந்தாள். அவள் சாப்பாடு வைத்தவுடன், புலி, அவளைத் தட்டிக் கொடுக்க அனுமதித்தது. அவள், அதனருகில் அமர்ந்து, மெல்லிய குரலில், “எனது அருமைப் புலியே! உன்னிடமிருந்து ஒரே ஒரு மீசை எடுத்துக் கொள்ளவா?” என்று கூறிவிட்டு, ஒரு கையால் அதன் தலையை வருடிக் கொண்டே மற்றொரு கையால் சட்டென்று ஒரு மீசையை வெட்டி எடுத்து விட்டாள். உடனே எழுந்து நின்று இறுதியாகப் புலிக்கு நன்றியை தெரிவித்துவிட்டு அந்த இடத்தை விட்டு அவள் நகர்ந்தாள்.

மறுநாள் எப்பொழுது விடியும் என்று அவள் காத்திருந்தாள். கணவன் வயலுக்குக் கிளம்பியவுடன், அந்த மீசையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, துறவியின் குடிசையை நோக்கி அவள் ஓடினாள். “கிடைத்துவிட்டது! கிடைத்துவிட்டது! புலியின் மீசை கிடைத்துவிட்டது!” என்று அவள் மகிழ்ச்சியாகக் குரல் கொடுத்தாள்.

துறவி திரும்பிப் பார்த்து, “நீ என்ன கூறுகிறாய்? உயிருள்ள புலியிடமிருந்தா?” என்றார். “ஆம்” என்றாள் மீரா.

துறவி ஆர்வமுடன், “நீ அதை எப்படி எடுத்தாய் என்று எனக்கு விவரமாகக் கூறு?” என்றார்.

மீரா, கடந்த ஆறு மாதங்களாகப் பாடுபட்டு ஒரு புலியின் நட்பை பெற்றது, பின்னர் அதன் மீசையை வெட்டி எடுத்தது என அனைத்தையும் விவரித்தாள். மிகவும் பெருமிதத்துடன் அவள் அந்த மீசையை அவரிடம் ஒப்படைத்தாள். துறவி அதை நன்கு பார்த்து, அது உயிருள்ள புலியின் மீசைதான் என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு, பின்னர் தீயிலிட்டார். அது ஒரு நொடியில் பொசுங்கிப் போனது.

மிகவும் மென்மையான குரலில் அவர், “மீரா! கூறு பார்க்கலாம். உன் கணவர் ஒரு புலியை விடக் கொடூரமானவரா? ஒரு கொடிய மிருகமே, பொறுமையாகவும், நீ வெளிப்படுத்திய அக்கறைக்குக் கட்டுப்படும் பொழுது ஒரு மனிதன் உடன்பட மாட்டானா?” என்று வினவினார்.

மீரா வாயடைத்து நின்றாள்; பின்னர், இறங்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் மனதில், புலியின் உருவமும் கணவரின் உருவமும் மாறி மாறி வந்தது. இதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது அவளுக்குத் தெளிவாக விளங்கியது.

நீதி:

அன்பு இருக்குமிடத்தில் அனைத்தும் சாத்தியம். மீண்டும் மீண்டும் அலை அடிப்பதனால் பெரிய பாறை கூட மெதுவாகக் கரைகிறதே!

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

சிந்தித்து செயல்படுதல்

நீதி – நன் நடத்தை

உபநீதி: வம்பு மற்றும் இழிவாகப் பேசுவதை தவிர்த்தல்

பழைய காலத்தில், ஒரு கொடுமையான மந்திரவாதி வசித்து வந்தான். ஓர் இரவு, அவன் ஒரு நகரத்திற்குச் சென்று, அங்கு உறங்கிக் கொண்டிருக்கும் ஆயிரம் மக்களின் நாவுகளைத் திருடினான். பிறகு, அனைத்தையும் மந்திரித்து, அவற்றை உரிமைக்காரர்களுக்கே அளித்து விட்டான். இந்த மந்திரத்தின் விளைவாக, ஒருவருமே சந்தேகப்படாத முறையில், அந்த நாவுகள் மற்றவர்களைப் பற்றி தகாத வார்த்தைகளை மட்டுமே கூறும்படி அவன் செய்தான்.

சில நாட்களிலேயே, நகரத்தில் உள்ள அனைத்து மக்களும் மற்றவர்களிடம் தகாத வார்த்தைகளையே பயன்படுத்தினர்.

அவன் இப்படி செய்தான்…. இவள் சரியாக நடந்து கொள்ளவில்லை…. அவனைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது….. இவன் ஒழுங்காக இல்லை….. இத்தகைய வார்த்தை பரிமாற்றமே நடந்து கொண்டிருந்தது.

சில நாட்களில் ஒருவருக்கொருவர் கோபத்துடன் செயற்பட்டதைப் பார்த்த மந்திரவாதி பேரானந்தம் அடைந்தான்.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ஒரு நல்ல மந்திரவாதி தன் சக்திகளைப் பயன்படுத்த தீர்மானித்தார். நகரத்தில் வசிக்கும் அனைத்து மக்களின் செவிகளுக்கும் ஒரு மந்திரம் உச்சரித்தார். இதன் விளைவாக, மற்றவர்கள் தகாத  வார்த்தைகளை பேசிய போது, செவிகளை இறுக்க அடைத்து எவருக்கும் ஒன்றுமே கேளாதபடி செய்தார்.

நாவுகளுக்கும், செவிகளுக்கும் ஒரு பயங்கரமான போர் துவங்கியது. ஒன்று பரிகாசம் செய்வதும், மற்றொன்று ஒன்றுமே கேட்காமல் இருப்பதுமாக இருந்தன.

இந்தப் போரில் வென்றது யார்? சில நாட்களில், நாவுகள் அனைத்தும் உபயோகம் இல்லாத உணர்வை அனுபவித்தன. எவருமே கேட்காத போது, ஏன் பேச வேண்டும்? பேசினால் கேட்க வேண்டும் என்ற விருப்பம் நாவுகளுக்கு இருந்ததால், பேச்சை மாற்றிக் கொண்டன. இனிமையான வார்த்தைகளை பேசிய போது, எல்லோரும் அதை விரும்பிக் கேட்டதைப் பார்த்து, நாவுகள் பேரின்பத்தில் மூழ்கியன.

இன்று வரை, இந்த கொடுமையான மந்திரவாதி உலகத்திலுள்ள அனைத்து மக்களின் நாவுகளுக்கும் இந்த மந்திரத்தை உச்சரித்து வருகிறான். இந்த வம்புக்கு முற்றுப் புள்ளி வைக்க, இவற்றில் கவனம் செலுத்தாமல் இருப்பது நல்லது என மக்கள் புரிந்து கொண்டனர். இதற்காக நாம் நல்ல மந்திரவாதிக்கு நன்றியை தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறோம்.

நீதி:

எப்போதும் நல்லதையே பேசி, நல்லதையே கேட்க வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் வம்புப் பேச்சுகளை நாம் தவிர்க்க முடியாது; ஆனால், நாம் நல்ல இனிமையான சொற்களை மட்டுமே கேட்டு, நாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது நம் கையில் இருக்கிறது. நாம் பேசுவதற்கு முன்பு யோசனை செய்ய வேண்டும்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com