அகங்காரம் – கொடூரமான விரோதி

நீதி – சரியான நடத்தை

உப நீதி – அகங்காரத்தை விட்டுக் கொடுத்தல்

ஒரு ஊரில், குழந்தைப் பருவத்திலிருந்து பழகிக் கொண்டிருந்த இரு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் வளர்ந்த பின், தங்கள் விருப்பத்திற்கேற்றார் போல் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஒருவன் சந்நியாசியாக மலைகளில் தவங்கள் செய்ய சென்றான். இன்னொருவன் பெரிய அரண்மனை போன்ற வீட்டில் வசதியாக, அரசனைப் போல் வாழ்ந்து வந்தான். சந்நியாசி இடுப்புத் துணியை மட்டுமே அணிந்திருந்தான்; ஆனால், மற்றொருவன் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தான்.

பல காலங்களுக்குப் பிறகு, வசதியுள்ள நண்பன் சந்நியாசியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தன் சிறு வயது நண்பனைப் பார்க்க விரும்பினான். பல இடங்களில் தேடி, தன் நண்பனை கண்ட அவன், தனது நண்பன் ஒரு பெரிய ஞானி என்பதை எண்ணி பெருமை அடைந்தான். தன் நண்பனை வீட்டிற்கு அழைத்து, உணவு அருந்துமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டான். இதற்கு சந்நியாசி நண்பன் ஒப்புக் கொண்டான்.

சந்நியாசி நண்பன் வருவதை முன்னிட்டு, பணக்கார நண்பன் தன் அரண்மனையில் சிறப்பான ஏற்பாடுகளும், அலங்காரங்களும் செய்தான். மேலும், கடுந்தரையில் நடக்காமல் இருக்க, விலையுயர்ந்த கம்பளங்களையும் விரித்தான்.

தன் நண்பனின் வீட்டிற்கு வந்த சந்நியாசி நண்பன், தன்னை வரவேற்க நண்பன் செய்திருந்த அற்புதமான ஏற்பாடுகளைக் கண்டு ஆச்சரியப் படுவதோடு, மகிழ்ச்சியும் அடைந்தான். அவன் பிரதான நுழைவாயில் அருகே சென்ற போது, அங்கு இருந்த ஒருவன், “பார்த்தாயா! உன்னுடைய நண்பன், தான் எவ்வளவு பணமும் செல்வமும் பெற்றவன் என்பதை உன்னிடம் காண்பிக்க இந்த ஏற்பாடுகளை செய்துள்ளான். உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பதை சுட்டிக் காண்பித்து நீ தாழ்ந்தவன் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்துள்ளான்” என்று கூறினான். இதைக் கேட்ட சந்நியாசியின் அகங்காரமும், கோபமும் அதிகரித்தது.

கோபமான மற்றும் பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் சந்நியாசி நண்பனின் மனதில் தோன்றியன. “நான் ஒரு சிறந்த ஞானி; இவனோ தன் செல்வத்தை என் அறிவுடன் ஒப்பிட்டுப் பார்த்து, என்னை அவமானப் படுத்த இவ்வாறு செய்துள்ளான்” என்று தவறாக புரிந்து கொண்டான். கோபத்தில், தன் கால்களை அருகில் இருந்த சேற்றில் ஊன்றி, அங்கு இருந்த கம்பளத்தை அழுக்காக்கினான்.

பணக்கார நண்பன் தன் நண்பனை வரவேற்கும் போது, விலையுயர்ந்த கம்பளங்கள் அழுக்காக இருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து கோபமுற்றான். இதைக் கண்ட சந்நியாசி, “உனக்கு பாடம் புகட்டவே இவ்வாறு உன் கம்பளத்தை வீணாக்கினேன்” என்று கோபத்தோடு கூறினான். மேலும், “நீ செல்வத்தை மட்டுமே பெற்றிக்கிறாய், நானோ உயர்ந்த ஞானத்தை அடைந்துள்ளேன். நான் ஒரு மகான், ஞானி மற்றும் சாது தெரியுமா?” என்று மிகுந்த கர்வத்துடன் கூறினான். அவன் அகங்காரம் எல்லையில்லாமல் பெருகியது.

இதைக் கேட்ட நண்பன், “என் தோழா, நீ லௌகீக மற்றும் பொருள் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் தியாகம் செய்து, ஒரு ஞானியாக இருந்தும் இந்த அகங்காரத்தை உன்னால் கட்டுப்படுத்த முடியவில்லையே. நான் உன்னை மிகவும் மரியாதையுடன் நடத்தி, உன்னைப் பெருமை படுத்தி, உன் சாதனைகளைப் பார்த்து பொறாமை பட்டிருக்கிறேன்; ஆனால் நீ இவ்வளவு கீழ்த்தனமாக நடந்து கொள்வாய் என நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. உனக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் கூட இல்லையே என வருத்தப்படுகிறேன். எனக்கு பணத்தின் மேல் கர்வமும், உனக்கு தவம் மற்றும் ஞானியின் வாழ்க்கையை சார்ந்த கர்வமும் உள்ளன. இந்த அகங்காரத்தினால் நீ தவத்தின் மூலம் பெற்ற அனைத்தையும் இழந்துள்ளாய்” என்று மரியாதையுடனும், மன்னிப்புக் கோரும் வகையிலும் கூறினான்.

நீதி:

ஒவ்வொருவனும் தன்னிடம் அகங்காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் பெற்ற செல்வம், அறிவு இவை அனைத்தும் இறைவன் நமக்கு அருளியது. “நான்” என்ற உணர்வு நம் கொடூரமான எதிரி. சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக, ஒரு விபத்தையோ, தவிர்க்க முடியாத நோயையோ நாம் சந்தித்தோமானால்,  நாம் அடைந்த அனைத்தையும் ஒரு நொடியில் இழக்கக் கூடும். எனவே, இறைவன் நமக்குக் கொடுத்ததை நினைத்து நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உடல், தெளிந்த அறிவு – இவற்றை இறைவன் அருளவில்லை என்றால், இவ்வுலகில் எதையும் அடைந்திருக்க நம்மால் முடியாது. எனவே, மற்றவர்களைக் கண்டு பொறாமையோ, கோபமோ கொள்ளக் கூடாது. இறைவனை நம் மனதில் நினைத்து, நம் கடமையை சரி வர செய்தால், அவர் நமக்கு தேவைக்கு மேல் அளிப்பார்.

மொழி பெயர்ப்பு:

ஸ்ரீராம், சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s