Archive | May 2019

ஆருணியின் பக்தி

நீதி – நன்னடத்தை

உபநீதி – குருவிடம் அன்பு மற்றும் பக்தி

பல வருடங்களுக்கு முன், பாஞ்சால நாட்டில், ரிஷி தௌம்யரின் சிஷ்யனாக ஆருணி என்றொருவர் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வாழ்ந்து வந்தார். குருவின் ஆசிரமத்தில் தெய்வீக ஞானத்தைப் பெற, அங்கு தினமும் நடக்கும் சேவைகளில் பங்கேற்றுக் கொண்டு, பணிவிடை செய்தார்.

குளிர்காலத்தில் ஒரு நாள், சேகரித்த விறகை எடுத்துக் கொண்டு, ஆருணி ஆசிரமத்திற்கு சென்று கொண்டிருந்தார். ஆசிரமத்தின் வயல் வழியாக அவர் வந்து கொண்டிருக்கும் போது, நீரை பிடிப்பில் வைத்திருந்த வயல் அணையில், பிளவு ஏற்பட்டிருப்பதை கவனித்தார். அந்தப் பிளவினால் நீர் சற்று நேரத்தில் கசிந்து வீணாகி, பயிர்கள் அனைத்தும் நீரில்லாமல் சேதம் அடைந்து விடும் என்பதை உணர்ந்தார்.

ஆருணி, “தற்சமயம் நான் என்ன செய்வது? இங்கு நின்று அணையை மறுபடியும் சரி செய்தால், தாமதமாகி விடும்; ஆசிரமத்தில் குளிர் காய்வதற்கு விறகு வேறு இல்லை. முதலில் ஆசிரமத்திற்கு விறகோடு சென்று, பிறகு இந்த அணையை சரி செய்வதற்கு வரலாம்” என்றவாறு யோசித்தார்.

இந்த சமயத்தில், அங்கு ஆசிரமத்தில் குருவும், சிஷ்யர்களும் அந்நாள் பாடத்திற்கு ஒன்று கூடினர். ஆருணியைக் காணவில்லை. கூடிய விரைவில், ஆருணி ஆசிரமத்திற்கு வந்து, முற்றத்தில் விறகை போட்டு விட்டு, குருவிடம் அணையைப் பற்றி கூறிவிட்டு, மறுபடியும் சென்று விட்டார்.

பொறுப்புள்ள சிஷ்யனைப் பார்த்து ரிஷி தௌம்யர் மகிழ்வுற்றார்.

ஆருணி வயலுக்கு ஓடிச் சென்று, அணையில் ஏற்பட்ட பிளவை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், மண் மற்றும் மரத்துண்டுகளை அங்கு சேகரித்தார்; ஆனால், நீர்க் கசிவை கட்டுப்படுத்த முடியவில்லை. நீரின் பளுவான அழுத்தத்தினால், ஆருணி கட்டிய அணைக்கட்டு உடைந்து விட்டது. அவர் உதவியற்ற நிலையில் இருந்தார். தற்சமயம் நீர் கசிவை உதவியில்லாமல் கட்டுப்படுத்த முடியாது என அவர் உணர்ந்தார். ஆனால், உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்ததால், அவருக்கு ஒரு யோசனை வந்தது.

மாலைப் பொழுது, வெளிச்சம் சற்று குறைவாக இருந்தது. ஆசிரமத்தில் எல்லோரும் ஆருணியைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்தனர். ரிஷி மற்றும் சிஷ்யர்கள் ஆருணியைத் தேடுவதற்காக புறப்பட்டனர். வயல் அருகே சென்று, ஆருணியின் பெயரை அழைத்ததும், “நான் இங்கு இருக்கிறேன் குரு!” என்ற தளர்ந்த குரல் கேட்டது.

அதைக் கேட்டு எல்லோரும் அவ்விடத்திற்கு அவசரமாகச் சென்றனர். அங்கு ஆருணி அந்த அணைக்கு அருகில் நீர் கசிந்து வெளியே செல்லாதபடி படுத்திருந்தார். வேறு எதுவுமே பயன்படாத போது, அந்த நீர் கசிவை நிறுத்துவதற்காக, அவர் தன் உடம்பையே அணைக்கட்டாக பயன் படுத்திக் கொண்டார். சிஷ்யர்கள் ஆருணியை அந்த பனி உறைந்த நீரிலிருந்து வெளியே மீட்டனர். அவர்கள் நம்பிக்கையுடன், “கவலைப் படாதே ஆருணி! நாம் இந்த அணையை சரி செய்து விடலாம்” என்றனர்.

ரிஷி, “மகனே! எனக்கு பயிர்களை விட நீ தான் முக்கியம்” என்றார்.

ஆருணியை கம்பளத்தால் நன்றாக போர்த்தி விட்டு, ஆசிரமத்திற்குக் கூட்டிச் சென்றனர். பிறகு ரிஷி, “குருவிற்கு நீ காண்பிக்கும் இணையற்ற பக்தி மற்றும் கீழ்படிதல் உனக்கு புகழை என்றென்றைக்கும் கொண்டு சேர்க்கும்” என சிஷ்யனை ஆசீர்வதித்தார்.

நீதி:

ஆருணியின் இணையற்ற கீழ்படிதல், குருவின் ஆசீர்வாதத்தை அவருக்கு வென்று அளித்தது. நாமும் இத்தகையான பண்புகளை வளர்க்க எவ்விதமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டால், குருவின் ஆசீர்வாதம் நிச்சயமாகக் கிடைக்கும். நம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் சொற்படி நடந்து கொள்வது, இந்த பண்பின் ஒரு உதாரணம் எனக் கூறலாம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

ஒரு சிறந்த பக்தரின் கதை – நந்தனார்

நீதி – அன்பு

உபநீதி – நம்பிக்கை / பக்தி

தமிழ் நாட்டில் ஆதனூர் என்ற ஒரு சிறிய கிராமத்தில் நந்தனார் பிறந்தார். அவர் தாழ்த்தப்பட்ட தலித் இனத்தில் பிறந்தவராக இருந்தாலும், சிவ பெருமானின் சிறந்த பக்தராகத் திகழ்ந்து, ஒரு பிராமண மிராசுதாரருக்கு வேலை செய்தார். ஒரு முறை, அவர் வசித்த கிராமத்திற்கு அருகில் இருந்த திருப்புன்கூர் என்ற கோயிலுக்கு தன் நண்பர்களோடு சென்று, தான் மிகவும் விரும்பிய சிவ பெருமானை தரிசிக்க ஆசைப் பட்டார். சிவலிங்கத்தை கண்ணாற காண முடியாதபடி அங்கிருந்த நந்தி அவரைத் தடுத்தது. அச்சமயம் நந்தனார் பக்தி பரவசத்தோடு சிவ பெருமானின் தரிசனத்திற்காகக் கெஞ்சினார். அப்போது யாரும் எதிர்பாராத அற்புதம் அங்கே நிகழ்ந்தது. நந்தனார் சிவபெருமானை காண வேண்டும் என்பதற்காக நந்தி விலகியது. ஈசனின் கருணையை எண்ணி மகிழ்ச்சியுடன் வணங்கி அங்கிருந்து அவர் சென்றார்.

திருப்புன்கூரில் இருந்த போது, நந்தனார் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலைப் பற்றி கேள்விப் பட்டார். உடனடியாக சிதம்பரம் செல்ல வேண்டும் என்று அவர் ஏங்கினார். ஒவ்வொரு நாளும், எல்லோரிடமும் தான் அடுத்த நாள் சிதம்பரம் செல்வதாகக் கூறி வந்தார்; ஆனால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. அங்கிருந்த எல்லோரும் கேலித்தனமாக அவரை “திருநாளைப் போவார்” என்று அழைத்தனர். நந்தனார் கோயிலுக்குச் செல்ல தன் முதலாளியிடமிருந்து அனுமதி பெற வேண்டியிருந்தது. நந்தனார் பல முறை கெஞ்சிய பிறகு, முதலாளி குறுகிய காலத்தில் விவசாய நிலத்தை பயிரிட்டு அறுவடை செய்து முடிக்க வேண்டும் என்ற கடினமான வேலையை அவருக்குக் கொடுத்தார். நந்தனாருக்கு கடவுள் மேல் பரிபூரண பக்தி இருந்ததால், இந்த வேலையை கடவுளே அவருக்கு பதிலாக செய்து முடித்தார். இப்போது சிதம்பரத்திற்கு சென்று கடவுளை பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததால், நந்தனார் பேரின்பத்தில் மூழ்கினார்.

நந்தனார் சிதம்பரத்திற்குச் சென்ற பிறகு, தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவராக இருந்ததால், கோயிலுக்கு அருகில் செல்ல பயந்தார். யாகக் குண்டங்களிலிருந்து வந்த புகை மற்றும் வேதங்களின் ஒலியின் காரணத்தால், தன் கடவுளைக் காண வேண்டும் என்ற அவருடைய ஏக்கம்  இன்னும் பல மடங்கு அதிகரித்தது. இந்த ஏக்கத்துடன் அவர் கோயிலை வலம் செய்து வந்தார்; சோர்வடைந்து அங்கேயே தூங்கி விட்டார். சிவ பெருமான் அவர் கனவில் தோன்றி, அவரை புனிதமான அக்னி வழியாக கோயிலுக்குள் வரும்படி கூறினார். அதே சமயத்தில், கோயிலில் உள்ள பிராமண அர்ச்சகர்களிடம் அக்னியை எழுப்ப சிவ பெருமான் ஆணையிட்டார்.

அடுத்த நாள், நந்தனார் அக்னியை நோக்கி வந்த போது, சிவ பெருமானின் கட்டளையை அவர்கள் புரிந்து கொண்டனர். நந்தனார் சிவ பெருமானின் பெயரை உச்சரித்துக் கொண்டு அக்னிக்குள் இறங்கி வெளியே வந்த போது பொன்னைப் போன்று ஜொலித்தார். ஜடா முடியோடு, உடம்பு  முழுவதும் புனிதமான திருநீர் பூசி, பூணூலை அணிந்து கொண்டு,  ஒரு பிராமண முனிவர் போன்று அவர் தோன்றினார். தேவ லோகத்திலிருந்த எல்லோரும் அவர் மேல் மலர்களைத் தூவினர்; பிராமணர்கள் அனைவரும் களிப்புற்றனர். அவர்களுடன் சேர்ந்து, கடவுளின் சன்னதிக்குள் நந்தனார் நுழைந்தார். கடவுளைப் பார்த்து பரவசமடைந்த நந்தனாரின் ஆத்ம ஜோதி ஈசனை சென்றடைந்தது.

நீதி:

அறிவு மற்றும் மேலோட்டமான பூஜைகளை விட, பக்தி மற்றும் அன்பு தான் கடவுளுக்கு விருப்பம். ஜாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு, பக்திக்கு மட்டுமே கடவுள் மதிப்பு கொடுக்கிறார். பிரபஞ்சத்தைப் படைத்த ஈசனே மனிதர்களை வேறுபடுத்தி பார்க்காத போது, நாம் ஏன் அப்படி செய்ய வேண்டும்? நாமும் கடவுளிடம் அன்பு, நம்பிக்கை மற்றும் பக்தியை மேம்படுத்திக் கொண்டு, எல்லோரையும் சமமாகக் கருத வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

கசப்பான பொருள் இனிக்குமா

நீதி – உண்மை

உபநீதி – நன்னம்பிக்கை / நல்லெண்ணம்

“யத் பாவம் தத் பவதி” (எண்ணங்கள் எப்படியோ, குணங்கள் அப்படியே) – இந்தத் தத்துவத்தை சார்ந்த ஒரு அருமையான கதை –

ஒரு கிராமத்தில், ராமா என்ற நல்ல குணமுள்ள ஒருவர் அஜீரணத்தால் அவதிப் பட்டார். நீடித்த காலமாக இருந்த இந்த நோயை குணப்படுத்துவதற்காக பல மருந்துகள் எடுத்தக் கொண்ட பிறகும், பயன் ஒன்றுமில்லாமல் இருந்தது. அந்த கிராமத்தில், பண்டிகை சமயத்தில் சொற்பொழிவு அருள ஒரு மகான் வந்தார். அவர் அறிவுவளம் நிரம்பியவராக இருந்தார். சொற்பொழிவுக்குப் பிறகு, ராமா அவரிடம் சென்று தன் பிரச்சனையை கூறினார். மகான் ஒரு எளிமையான மருந்தை ராமாவுக்குக் கொடுத்தார்; தினமும் கல் உப்பை மெல்லுமாறு ராமாவிடம் கூறினார். நாளடைவில் ராமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது.

ராமா பெருந்தன்மையுள்ள ஒரு மனிதராக இருந்ததால், பண்டிகைக் காலத்தில், ஏழை மக்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்பு வகைகளை விநியோகம் செய்து வந்தார். ஒரு சமயம், எப்போதும் போல இனிப்பு வகைகளை வாங்க அங்காடிக்குச் சென்றார்; ருசித்து பார்க்கும் போது, இனிப்பு வகைகள் கசப்பாக இருந்தது. அந்தக் குறிப்பிட்ட கடையில் உள்ள பொருட்களின் தரம் நன்றாக இல்லையோ என்று நினைத்து, மற்ற பல கடைகளுக்குச் சென்றார்; ஆனால், அனைத்து கடைகளிலும் இனிப்பு வகைகள் கசப்பாகவே இருந்தன. அவர் தினமும் கல் உப்பு சாப்பிடுவதனால், இவ்வாறு இருந்தது  என்ற எண்ணமே அவருக்கு வரவில்லை.

அவருடைய இந்த பழக்கத்தை தெரிந்த ஒரு கடைக்காரர், அவரிடம் வாயை கழுவிக் கொண்ட பிறகு இனிப்பை ருசிக்கச் சொன்னார். இவ்வாறு செய்த பிறகு, இனிப்பின் ருசி அவருக்குத் தெரிந்தது.

நீதி:

நாம் கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகும் போது, பல தெய்வீக மனிதர்களின் சகவாசத்தால் கிடைக்கும் புனிதமான அனுபவங்களை புரிந்து கொள்வதில்லை. நம் மனதை நன்றாக தூய்மைப்படுத்திய பிறகே, நாம் பயன் அடைகிறோம். எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை. நாம் என்ன நினைக்கிறோமோ, அவ்வகையான விஷயங்கள் மட்டுமே நம்மை வந்து சேர்கின்றன. அதனால் எப்போதும் நல்லதையே நினைத்து, நல்ல விஷயங்களையே செய்வோமாக! வேண்டாத எண்ணங்களை அகற்றி, நல்ல எண்ணங்கள் மற்றும் மன நிறைவும் இன்பமும் அளிக்கின்ற நல்ல விஷயங்களைப் பற்றியே சிந்தனை செய்வோம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

பகிர்ந்து கொள்வதின் விளைவு

நீதி – அன்பு

உபநீதி – அக்கறை

ஒரு மனிதர், சில ஆரஞ்சுப் பழங்களை வயதான பெண்மணி ஒருவரிடமிருந்து அடிக்கடி வாங்கி, அதன் தோலை உரித்து, சுவை பார்த்து, புளிப்பாக இருக்கிறது என்று அவரிடம் புகார் கூறி, பெண்மணியையும் ருசி பார்க்கச் சொல்லி வற்புறுத்துவார்.

அந்த வயதான பெண்மணியும் அந்த ஆரஞ்சுத் துண்டை வாயில் போட்டுக் கொண்டு, “இனிப்பாகத் தானே இருக்கிறது; ஏன் இப்படி புகார் கூறுகிறாய்?” என சுருக்கென்று பதில் கூறுவதற்கு முன்னாலேயே அந்த மனிதரும் அங்கிருந்து கிளம்பி விடுவார்.

அம்மனிதரின் மனைவி, தினமும் நடக்கின்ற இந்த வேடிக்கையைப் பார்த்து கணவரிடம் விசாரித்தாள்.

அவர் புன்சிரிப்புடன், “அப்பெண்மணி இனிப்பான ஆரஞ்சுகளை மட்டுமே விற்பனை செய்கிறார்; ஆனால் ஒன்றைக் கூட தான் சாப்பிடுவதில்லை. அதனால், நான் இப்படி செய்வதனால், செலவு ஒன்றுமே இல்லாமல் அப்பெண்மணி ஆரஞ்சை சாப்பிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது அல்லவா? அதைப் பார்ப்பதற்கு எனக்கு சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறினார்.

அருகில் இருந்த காய்கறி விற்பனையாளர் தினமும் நடக்கின்ற இந்த நிகழ்வைப் பார்த்து, கேலித்தனமாக வயதான பெண்மணியிடம், “அம்மனிதன் ஆரஞ்சுகளைப் பற்றி அப்படிச் சொல்லும் போது, நீங்கள் ஒவ்வொரு முறையும் அதிகமான எடை போட்டு, அதிகமான ஆரஞ்சுகளை கொடுக்கிறீர்களே. ஏன்?” என்று கேட்டான்.

வயதான பெண்மணி புன்சிரிப்புடன், “எனக்கு ஒரு பழம் தினமும் கொடுப்பதற்கு தான் அவர் அப்படி செய்கிறார் என்று எனக்குத் தெரியும்; ஆனால், அவருக்கு அது புரியவில்லை. நான் அதிக எடை போடுவது இல்லை. அவரின் அன்பின் காரணமாக தானாகவே அந்த எடை அதிகமாகிறது” என்றார்.

நீதி:

கொடுப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சிறு அன்பான செயலினால் மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதை விட நமக்கு வேறு எதுவுமே அதிக இன்பத்தை அளிக்காது. நம்முடன் இருப்பவர்கள் எல்லோரிடமும் அன்பும், மரியாதையும் செலுத்தி வாழ்வதில் மட்டுமே, வாழ்க்கையின் இன்பங்கள் அடங்கியுள்ளன. கொடுப்பதில் மட்டுமே; பறித்துக் கொள்வதில் அல்ல. பணத்திலும் அல்ல.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

உண்மையான தோழன்

நீதி – அன்பு, நம்பிக்கை

உபநீதி – நட்பு

a true friend - first world war

முதல் உலகப் போரில், படை வீரன் ஒருவன் தன் நெருங்கிய நண்பன் கஷ்டப்படுவதைப் பார்த்து, திகிலடைந்தான். அகழியில் சிக்கிக் கொண்ட அவன் நண்பனின் மேல், தொடர்ந்து துப்பாக்கிச் சூடுவதைக் கண்டான்; அதனால் படை வீரன், துணைநிலை ஆளுநரிடம் சென்று, நண்பனுக்கு எப்படியாவது உதவி புரிந்து அவனை மீட்டு வர, யாருமே செல்ல முடியாத அந்த நிலத்திற்கு போகலாமா என்று கேட்டான். அதற்கு லெஃப்டினன்ட், “நீ போவதால் ஒரு பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உன் நண்பன் அனேகமாக இறந்திருக்கலாம்; நீ அங்கு செல்வதால் உன் உயிரையும் இழக்கலாம்” என்று கூறினார். அவர் சொன்னதைக் கேட்காமல், படைவீரன் சென்றான்.

படைவீரன் தன் நண்பன் அருகே சென்று, அவனை தன் தோள்களில் தூக்கிக் கொண்டு திரும்பி வந்து விட்டான். இருவரும் வந்து சேர்ந்தவுடன், லெஃப்டினன்ட் அடிபட்ட படை வீரனை பார்த்த பிறகு, அவனது நண்பனையும் அன்பாக பார்த்தார்.

A true friend

பிறகு லெஃப்டினன்ட், “பயன் ஒன்றும் இருக்காது என்று நான் உன்னிடம் முன்பே கூறினேனே! உன் நண்பன் இறந்து விட்டான். நீயும் அடிபட்டு வந்திருக்கிறாய்” என்றார். அதற்கு படை வீரன், “நான் சென்றது பயனுள்ளதாக தான் இருந்தது” என்றான். மேலும் படை வீரன், “நான் அவன் அருகே சென்ற போது அவன் உயிரோடு இருந்தான். நான் வருவேன் என்ற தீவிர நம்பிக்கையுடன் என்னை எதிர்பார்த்து குரல் கொடுத்தான்” என்று கூறினான்.

நீதி:

வாழ்க்கையில் பல முறை, நாம் நினைக்கும் செயல் ஏற்றத்தக்கதா, இல்லையா என்பது பார்வையாளரின் கண்ணோட்டத்தில் மட்டுமே இருக்கிறது. நாம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஏதாவது ஒரு காரியத்தை மனதளவில் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதை செய்து விட வேண்டும்; பிறகு, செய்திருக்கலாமே என்று நினைக்கக் கூடாது. மற்றவர்கள் எல்லோருமே விட்டு செல்லும் போது, உயிர் நண்பன் அவ்வாறு செய்யாமல், அங்கு நண்பனுக்காக காத்திருப்பான். போர், யார் சரி என்று தீர்மானிப்பதில்லை; போருக்குப் பிறகு யார் இருக்கின்றனர் என்பதை மட்டுமே தீர்மானிக்கின்றது. 

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com