Archive | July 2019

வாழ்க்கையின் தத்துவம்

 

நீதி – நன் நடத்தை

உபநீதி – தீய குணங்களை கட்டுப்படுத்துதல் / விழிப்புணர்வு

மகாபாரதத்தின் உய்பொருள்…….

வரலாற்று சிறப்புமிக்க மகாபாரத போர் நடந்த புனித இடமான குருக்ஷேத்திரத்தில், சஞ்சயன் இறுதியாக வந்தார்.

இந்தப் போருக்கான உண்மையான நோக்கம் என்ன என்று சஞ்சயன் யோசித்து கொண்டிருந்தார். போர் நடந்த இடத்திற்குச் சென்று பார்த்தால் மட்டுமே அதற்கான சரியான விடை கிடைக்கும் என்று உணர்ந்து, சஞ்சயன் அங்கு சென்றார்.

போர் நடந்த 18 நாட்களில், போரில் ஈடுபட்ட 80 சதவிகித ஆண்கள் வீழத்தப்பட்டனர் என்று நூல்களில் கூறப்பட்டுள்ளது.

சஞ்சயன் அந்த இடத்தை முழுமையாகப் பார்வையிட்டு,  “உண்மையாகவே  அப்படி ஒரு போர் இங்கு நடந்ததா?  இந்த பூமி இரத்த வெள்ளத்தில் மூழ்கியதா? பஞ்சபாண்டவர்களும் பகவான் கிருஷ்ணரும் இங்கு தான்  நின்றனரா?” என்றெல்லாம் தனக்குத் தானே வினவிக் கொண்டிருந்தார்.

“உனக்கு ஒரு போதும் அதன் உண்மை தெரியாது” என்று ஒரு வயதான, மென்மையான குரல் கேட்டது. சஞ்சயன் திரும்பி பார்த்தார்.

காவி உடை உடுத்திய ஒரு முதியவர் ஒரு புகை மண்டலத்திலிருந்து வெளியே வருவது தெரிந்தது.

“குருக்ஷேத்திரப் போரைப் பற்றித் தெரிந்து கொள்ள தான் நீ இங்கு வந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால், போர் என்பது உண்மையில் எதைக் குறிக்கின்றது என்பதை நீ அறியும் வரை உனக்கு அது புரியாது” என்று முதியவர் மறைமுகமாகக் கூறினார்.

தாம் இதுவரை சந்தித்தவர்களிலேயே இவர்தான் இந்தப் போரைப் பற்றி அதிகம் அறிந்தவர் போலும் என்றுணர்ந்த சஞ்சயன், “நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று வினவினார்.

அதற்கு ‍அந்த முதியவர், ” மகாபாரதம் ஒரு காவியம். அது ஒரு உண்மை நிகழ்வாக இருந்தாலும், அதில் ஒரு வாழ்க்கைத் தத்துவமே அடங்கியுள்ளது” என்று கூறினார்.

முதியவர் சஞ்சயனிடமிருந்து மேலும் பல கேள்விகளை எதிர்பார்த்து அவரை உற்று நோக்கினார்.

சஞ்சயன், “அப்படியென்றால் அந்தத் தத்துவத்தை எனக்கு எடுத்துரைக்கவும்” என்று கெஞ்சினார்.

“கண்டிப்பாக” என்று கூறிய முதியவர் தன் உரையை ஆரம்பித்தார்.

“உன்னுடைய ஐம்புலன்கள் அதாவது பார்வை, முகர்வுணர்வு, நாவுணர்வு, தொட்டுணர்வு மற்றும் கேள்விப்புலன் தான் பஞ்சபாண்டவர்கள். கௌரவர்கள் யார் என்று உனக்கு தெரியுமா?” என்று வினவினார்.

சஞ்சயன் தெரியாது என்று தலையசைத்தார்.

முதியவர், “அந்த நூறு கௌரவர்கள் தான், அனுதினமும் நம் ஐம்புலன்களை தாக்கிக் கொண்டிருக்கும் தீய எண்ணங்கள் மற்றும் செயல்கள். உன்னால் அவைகளை ஜெயிக்க முடியும். எவ்வாறு தெரியுமா?” என்றார். மீண்டும் சஞ்சயன் தெரியாது என்று தலையசைத்தார்.

அதற்கு அவர், “கண்ணன் உன் தேரோட்டியாக இருக்கும் பொழுது” என்று கூறி ஒரு குறும்புப் புன்சிரிப்புடன் தென்பட்டார். சஞ்சயனும் அதை கவனிக்கத் தவறவில்லை.

“கிருஷ்ணர் உன் உள்ளுணர்வு, உன் ஆத்மா, மேலும் அவரே உனக்கு வழிகாட்டும் ஒளி. உன் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்தால், நீ எதற்கும் கவலைப்படத் தேவையில்லை” என்று கூறினார்.

சஞ்சயன் உடனே ” பின்னர் ஏன் உத்தமர்களாகிய துரோணாச்சாரியார் மற்றும் பீஷ்மர் ஆகியோர் தீயவர்கள் என்றறிந்தும் கௌரவர்களுக்காக போரிட்டனர்?” என்று கேட்டார்.

முதியவர் வருத்தத்துடன் தலை அசைத்து விட்டு,  “நீ வளரும் பொழுது உனக்கு நல்லவர்களாகத் தெரிந்த சிலர்,  பிற்காலத்தில் அவ்வாறு இல்லை என்பது புலப்படும். அவர்களும் தவறுகள் செய்கின்றனர். அவர்களால் உனக்கு நன்மையா தீமையா என்பதை நீ தான் ஒரு நாள் முடிவு செய்ய வேண்டும். நன்மைக்காக அவர்களுடனேயே நீ சண்டையிட வேண்டியிருக்கும் என்பதைப் பின்னர் புரிந்து கொள்வாய். ஒருவருடைய வளர்ச்சியின் கடினமான கட்டம் இது தான். அதனால் தான் கீதை இன்றியமையாததாகிறது” என்று கூறினார்.

சஞ்சயன் பூமியில் சரிந்தார் – உடல் சோர்வடைந்து அல்ல, நடந்த கொடுமையை எண்ணி மனம் தளர்ந்து சரிந்தார். “அப்படி என்றால் கர்ணன்?” என்று முணுமுணுத்தார்.

முதியவர்,  “ஆஹா! நீ ஒரு சிறந்த கேள்வியை இறுதியில் கேட்டிருக்கிறாய். கர்ணன் தான் உன் ஐம்புலன்களின் சகோதரனாகிய ஆசை. அவன் உன்னைச் சார்ந்து இருந்தாலும், தீமையின் பக்கம் இருப்பான். ஆசைகளைப் போலவே, தவறு செய்ததை உணர்வான்; ஆனால் தீயவர்களுடன் இருப்பதற்குக் காரணம் காட்டுவான். கூறு சஞ்சயா! உன் ஆசைகள் தீமைக்குத் துணை போவதில்லையா? ” என்று கூறி முடித்தார். சஞ்சயன் அமைதியாகத் தலையசைத்தார். அவர் லட்சக் கணக்கான எண்ணங்களை மனதில் ஓடவிட்டு, அனைத்தையும் ஒருங்கிணைத்து சிந்திக்கத் தொடங்கி, நிமிர்ந்து பார்த்தார். அந்த முதியவர் அங்கு தென்படவில்லை. வாழ்க்கையின் மிகப் பெரிய தத்துவத்தை அவருக்கு உணர்த்திவிட்டு முதியவர் மறைந்து விட்டார்.

நீதி:

மகாபாரதம் என்பது நம் ஒவ்வொருவருள்ளும் நடக்கும் ஒரு போர்.  நம்முள் இருக்கும் குறைகளையும், தீமைகளையும் உணர்ந்து கொண்டால், நம்முள் உறைந்திருக்கும் உள்ளுணர்வாகிய கண்ணணின் துணையுடன், நாம் நம்மை உயர்த்திக் கொள்ளும் வழியில் உழைக்கலாம்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

சீப்பு விற்பவர்

நீதி – நன்னம்பிக்கை

உபநீதி – சாமர்த்தியம் / புத்திசாலித்தனம்

பல வருடங்களுக்கு முன், சீப்புகளை விற்கும் ஒரு பெரிய வணிகர் சீனாவில் வாழ்ந்து வந்தார். அவருக்கு வயதாகிய பிறகு, தன் பணியிலிருந்து ஓய்வு பெற்று, அந்தத் தொழிலை அறிவு மற்றும் தகுதியுள்ள ஒருவனுக்கு கொடுக்க ஆசைப் பட்டார்.

வணிகர் தன் மூன்று மகன்களையும் அழைத்து, புத்தத் துறவிகள் வாழுமிடத்தில் சீப்புகளை விற்கும் பணியை எவ்வாறு செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்தார். மகன்கள் அதிர்ச்சியடைந்தனர்; ஏனெனில் அங்கு வாழ்ந்த துறவிகள் அனைவருக்குமே தலை வழுக்கையாக இருந்தது. எனினும், தங்களுக்குக் கொடுத்த பணியை அவர்கள் செயலாற்றினர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, முதலாவது மகன் இரண்டு சீப்புகளை விற்றதாகக் கூறினான். தந்தை எவ்வாறு முடிந்தது என்று கேட்ட போது, முதுகை சொறிந்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்று கூறி, அவற்றை விற்றதாகக் கூறினான்.

துறவிகள் வசிக்கும் இடத்திற்கு புனித யாத்திரை செய்யும் பயணிகள் மற்றும் விருந்தாளிகள் வரும் போது, பயணத்தின் காரணமாக தலை முடி சற்று கலைந்திருக்கும். அந்த சமயத்தில் சரி செய்து கொள்வதற்கு உதவியாக இருக்கும் என, இரண்டாவது மகன் பத்து சீப்புகளை விற்றதாகக் கூறினான்.

மூன்றாவது மகன் ஆச்சரியப்படும் வகையில் ஆயிரம் சீப்புகளை விற்றதாகக் கூறினான். தந்தை பேரின்பத்துடனும், பதற்றத்துடனும் எப்படி முடிந்தது என்று கேட்டார்.

அதற்கு மகன் “புத்தரின் போதனைகளை சீப்பின் மேல் அச்சடித்து, அதை பரிசாக வருபவர்களுக்குக் கொடுத்தால், தினமும் அவர்கள் தலை முடியை சீவும் போது அதை ஞாபகப் படுத்திக் கொள்ளலாம்” என்ற எண்ணத்தை துறவிகளுக்கு கொடுத்ததாகக் கூறினான்.

இந்த ஆக்கப்பூர்வமான யோசனை வெற்றிகரமாக முடிந்தது!

நீதி:

மனம் இருந்தால், மார்க்கம் உண்டு. ஒரு வாய்ப்பை நிராகரித்து, நம்மால் முடிந்ததைக் கூட செய்யாமல் இருக்கலாம். ஆனால், நாம் சிறப்பாக, ஆத்மார்த்தமாக மற்றும் ஆக்கப்பூர்வமாக முயற்சித்தால், வெற்றி நமக்கே.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

 

பட்டத்தின் கதை

நீதி – வாழ்க்கையின் உண்மை

உபநீதி – மரியாதை / அன்பு

ஒரு சிறுவன், தன் தாய் விடும் பட்டத்தை உன்னிப்பாக கவனித்து வந்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு மகன் தாயிடம், “இந்தக் கயிற்றினால் பட்டம் உயரமாகப் பறக்க முடியாமல் இருக்கிறது” என்றான். இதைக் கேட்டவுடன், தாய் புன்சிரிப்புடன் கயிற்றை அறுத்து விடுகிறாள்.

பட்டம் மேலும் சற்று உயரத்தில் பறந்து, சில நொடிகளுக்குப் பிறகு கீழே விழுந்து விடுகிறது.

சிறுவன் மன வேதனையுடன் இருப்பதைக் கண்டு, தாய் பொறுமையாக,

“வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்த பிறகு, வீடு, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கலாச்சாரம் போன்ற காரணங்களால், இன்னும் உயரமான நிலைக்கு செல்ல முடியவில்லையே என்று நினைக்கிறோம். இந்த சில பிரச்சனைகள் தான், நம்மை உயர்ந்த நிலைக்கு செல்வதிலிருந்து தடுத்து நிறுத்துகிறது என எண்ணுகிறோம். ஆனால், நம் வீடு, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கலாச்சாரம் மட்டுமே நம்மை உறுதியான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. நாம் இவற்றிலிருந்து விடுபட நினைத்தால், நம் நிலைமை பட்டம் போல இருக்கும்; விரைவில் விழுந்து விடுவோம்” என்றார்.

நீதி:

எந்தக் காரணத்தைக் கொண்டும் வீடு, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவு முறைகளை விட்டு விட்டு செல்லாதீர்கள். நாம் உயரத்தில் பறக்கும் போது, நாம் உறுதியாக இருப்பதற்கு இவை மட்டுமே காரணமாக இருக்கின்றன.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

நன்மையும் தீமையும் பிறர் தர வாரா

நீதி – உண்மை / நன்னம்பிக்கை

உபநீதி – மனத் தூய்மை / பயமின்மை

பாண்டவர்கள், நாடு கடத்தப்பட்டு வனத்தில் வாழ்ந்த சமயம், கிருஷ்ணர் அவர்களின் நலனை விசாரிப்பதற்காக அங்கு சென்றார். ஒரு இரவு பொழுதை கிருஷ்ணர் அவர்களுடன் கழித்தார். அச்சமயத்தில், பாண்டவர்கள் மிகுந்த வேதனைகளை அனுபவித்தனர். திரௌபதியும் அவர்களுடன் இருந்ததால், ஒவ்வொரு இரவும், ஒரு மணி நேரத்திற்கு எவராவது ஒருவர் கண்விழித்து கண்காணித்து வந்தனர். கிருஷ்ணரும் ஒரு மணி நேரம் கண்காணிக்க முன் வந்தார்.

தர்மராஜர், “பிரபஞ்சத்தையே காக்கின்ற நீங்கள், ஒரு மணி நேரம் எங்களுக்கு காவலராக நிற்பதின் அர்த்தம் புரியவில்லையே” என்றவாறு யோசித்தார். ஆனாலும் அவர், “கிருஷ்ணா, நானும் என் சகோதரர்களும் ஒவ்வொரு இரவும் அரக்கர்களிடம் அவதிப்படுகிறோம். தாங்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். பல சமயங்களில், அரக்கர்கள் எங்களை தாக்கியிருக்கின்றனர். தயவு செய்து எங்களை காக்கும் பணியை எடுத்துக் கொள்ள வேண்டாம். எங்கள் நலனை விசாரிக்க வந்திருக்கிறீர்கள். நாங்கள் உங்களை ஆபத்துக்கு உள்ளாகக் கூடாது. தயவு செய்து ஓய்வு எடுத்துக் கொள்ளவும்” என எச்சரித்தார். அதற்கு கிருஷ்ணர், “தர்மராஜா, என் தெய்வத் தன்மையை இவ்வளவு தான் புரிந்து கொண்டிருக்கிறாயா? ஒரு பக்கம், பிரபஞ்சத்தையே காப்பாற்றுகின்றேன் என புகழ்ந்து பேசுகிறாய், மற்றொரு பக்கம் என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள முடியாது என கவலைப் படுகிறாய். அரக்கன் எனக்கு தீங்கு செய்வான் என கவலைப் படுகிறாய். எந்த அரக்கனும் என்னிடம் நெருங்க முடியாது. அதனால், இந்த காவல் வேலையை உங்களுடன் செய்வதற்கு என்னை அனுமதிக்கவும்” என்றார்.

ஒரு மணி நேரத்திற்கு தன் பணியை முடித்த பிறகு, கிருஷ்ணர் ஒரு பாறையின் மேல் புன்சிரிப்புடன் உட்கார்ந்து கொண்டார். அடுத்ததாக காவல் காப்பதற்கு வந்த அர்ஜூனன், அரக்கன் கிருஷ்ணரை துன்புறுத்தி இருப்பானோ என நினைத்து அவரிடம் விரைந்தான். கிருஷ்ணரின் புன்சிரிப்பை பார்த்து விட்டு, அர்ஜூனன் அவர் பாதங்களில் விழுந்து, அரக்கனை முறியடித்தாரா என விசாரித்தான். அதற்கு கிருஷ்ணர், “நான் அரக்கர்களையோ, தீங்கு உண்டாக்கும் ஆவிகளையோ உருவாக்கினதில்லை. அப்படியென்றால், வனத்தில் அரக்கர்கள் எப்படி தோன்றுகின்றனர்? நீ பேசும் அரக்கன் உண்மையில் அரக்கன் அல்ல. உன்னுள் இருக்கும் வெறுப்பு, கோபம் மற்றும் பொறாமை போன்ற தீய தன்மைகள் வெளியே பிரதிபலிக்கின்றன. உன்னுள் இருக்கும் கோபம், அரக்கனாக வெளிப்படுகிறது. அரக்கனின் சக்தி உன் கோபத்திற்கு ஏற்றார் போல அதிகரிக்கின்றது” என்றார். மனிதனின் தீய தன்மைகள் மட்டுமே அரக்கனாக மாறி அவனை துன்புறுத்துகின்றன. அரக்கர்கள் இருப்பதாகவும், மனிதனின் துன்பங்களுக்கு அவர்களே காரணம் என்று மனிதன் நினைப்பதும் தவறு. அது கற்பனை மற்றும் மனதளவில் உள்ள பயம் மட்டுமே. ஒரு மனிதனே மற்றொருவனை துன்பங்களுக்கு ஆளாக்குகிறான், அரக்கர்கள் அல்ல. கிருஷ்ணர் கூறிய வார்த்தைகளின் உண்மையை புரிந்து கொண்ட அர்ஜுனன், அதற்கு பிறகு அரக்கனைப் பார்க்கவில்லை. கிருஷ்ணர் வெளிப்படுத்திய உண்மைக்கு கடமைப்பட்ட அர்ஜுனன் அவர் பாதங்களில் விழுந்து நன்றி உணர்வை வெளிப்படுத்தினான்.

நீதி:

நல்லதும் கெட்டதும் மனிதன் தானே உருவாக்கி கொள்வது தான். நாம் கற்பனை செய்து, பயந்தால், அதே போல நாமும் மாறிவிடுவோம். பல பிரச்சனைகள் மனதளவில் தான் இருக்கின்றன. நம் பயங்களை தைரியமாக எதிர்கொள்ள நமக்கு உள்ளார்ந்த சக்தி இருந்தால், ஒரு அரக்கனும் நம் அருகே நெருங்க முடியாது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com