ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

நீதி: அன்பு, கருணை

உபநீதி: ஒற்றுமை

By Steve Goodier www.LifeSupportSystem.com

ஸ்டீவ் குடியரின் வலைப்பதிவு http://www.LifeSupportSystem.com லிருந்து எடுக்கப் பட்டது. 

இது, ஒரு சிறு படகில் மீன் பிடிக்கச் சென்ற இருவரைப் பற்றிய ஒரு பழமையான கதை. ஒரு பெரிய மீன் தூண்டிலில் சிக்குவதற்கு முன்புவரை, அந்த நாள் ஒரு சாதாரணமான நாளாக இருந்தது. ஒருவன் மீனைப் பிடிக்க போராடிய போது, அந்த மீன் அவனை தண்ணீருக்குள் இழுத்தது.  அப்போது, அவன் நீந்த முடியாமல் பயத்தால் நடுங்கினான்.

அவன் “என்னைக் காப்பாற்றுங்கள்” என்று உதவிக்காகக் கூச்சலிட்டான்.

படகில் இருந்த நண்பன் அவனுடைய முடியைப்  பிடித்து படகுக்கு அருகில் இழுத்தான். அப்போது, தண்ணீருக்குள் இருந்த நண்பனின் டோப்பா மட்டும் வெளியே வந்ததால், அவன் மீண்டும் நீருக்குள் தடுமாறி விழுந்தான்.

அவன் “என்னால் நீந்த முடியவில்லை” என்று நீரின் மேலே வந்து அலறினான்.

இதைக் கேட்டு படகிலிருந்த நண்பன், அவனுக்கு அருகில் சென்று அவனது கையைப் பிடித்து இழுக்கும் போது, அது செயற்கைக் கையாக இருந்ததால், கை கழன்று வந்தது. நீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் அந்த மனிதன் இடைவிடாமல் கால்களை உதறிக் கொண்டு தண்ணீரில் தத்தளித்தான்.

மூன்றாவது முறையாக, படகில் இருந்தவன் நீருக்குள் இருந்த நண்பனின் காலைப் பிடித்து இழுத்தான். நீங்கள் நினைத்தது சரி. இம்முறை நண்பனின் கையில் அவனுடைய மரக்கால் கிடைத்தது. படகிலிருந்த நண்பன் விரக்தியுடன், “உன் உறுப்புகள் உன்னுடன் சேர்ந்து இல்லாத போது நான் எப்படி உனக்கு உதவ முடியும்?” என்று கேட்டான். அந்த மனிதன் நீரில் தத்தளித்தவாறே “காப்பாற்றுங்கள்’’ என்று அலறினான்.

இது நம் அனைவருக்கும் பொருத்தமாக இருக்கும் உவமை.

உறவுகள் ஒன்றாக இணையாவிட்டால் எப்படி திருமணங்களும், குடும்பங்களும் நிலைத்து நிற்க முடியும்?

மதம் சார்ந்த சமூகங்கள், நகரக் குழுக்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் வணிகங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாவிட்டால் எப்படி முன்னேற முடியும்?

இதே போல, ஒரு நாடும் உலகமும் ஒற்றுமையின்றி எப்படி செயற்பட முடியும்?

ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டுட்டூ இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்:

“நாம் நன்மை செய்வதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் அன்பிற்காக படைக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் நட்பிற்காக படைக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் இணைந்து இருப்பதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம்.

நாம், நீயும் நானும் அறிந்த அனைத்து அழகிய படைப்புகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறோம்.

உலகில் அன்னியர்களே இல்லை என்று எடுத்துச் சொல்வதற்காகவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்.

கறுப்பு, வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பணக்காரர், ஏழை, படித்தவர், படிக்காதவர், ஆண், பெண் எனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வரவேற்பு அளிக்கப் படுகிறது.  

நாம் எல்லோரும் இக்குடும்பத்தை சேர்ந்தவர்கள்; மனித இனத்தை சேர்ந்த நாம் எல்லோரும் கடவுளின் குடும்பத்தினர்கள்”.

நாம் எவருமே தனிப்பட்ட முறையில் வாழ்வதில்லை. இதில் ஒற்றுமையாக இருக்கிறோம். இப்பாதையில் சில முரண்பாடுகள் ஏற்படுவது இயற்கையே; ஆனால் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதையே உயர்ந்த நோக்கமாக கருத வேண்டும் — ஒருமைப்பாடு. நாம் அனைவரும் கடவுளின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

நீதி:

ஒன்றுபட்டால் உயர்கிறோம்; பிரிந்தால் வீழ்கிறோம். நாம் வாழும் சமுதாயத்தில், நம்மை சார்ந்துள்ள குடும்பமும், நண்பர்களுமே நமது உறவுகளின் அடித்தளமாக விளங்குகின்றன. நாம் வேறுபட்ட கருத்துகளையும் எண்ணங்களையும் கொண்டிருக்கலாம்; ஆனால் நடப்பதை ஏற்றுக் கொண்டு, ஒருவரை ஒருவர் மதித்து முன்னேறிச் செல்வதே, நம் குடும்பத்திற்கும், இந்த சமூகத்திற்கும், அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்.

சமுதாய முன்னேற்றத்திற்குத் தேவையானது ஒற்றுமை. அதற்கு அடிப்படை மனிதநேயம். இவற்றைத் தம் பாடல்கள் மூலம் அறிவுறுத்தினார் பாரதியார்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் இந்த

ஞானம் வந்தால் பின்நமக்கெது வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி லக்ஷ்மணன்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment