Archives

எண்ணங்களுக்கு ஏற்றார் போல வாழ்க்கை

நீதி – நன்னடத்தை

உபநீதி – நேர்மை / சரியான மனப்பான்மை

ஒரு ராஜா, தன் மூன்று மந்திரிகளையும் காட்டுக்குச் சென்று ஒரு பையில் பழங்களை நிரப்பி வருமாறு உத்தரவிட்டார்.

முதல் மந்திரி இந்த உத்தரவை மனதில் நிறுத்திக் கொண்டு, சிறந்த பழங்களாக எடுத்து வருவது மட்டுமே தனது பணி என்று நினைத்தார்.

ராஜாவிற்கு பல வேலைகள் இருப்பதால், நேரமின்மை என்ற காரணத்தால் பையில் உள்ளவற்றை பார்க்க மாட்டார் என்று இரண்டாவது மந்திரி எண்ணினார். அதனால், என்ன கிடைத்ததோ அதை பையில் நிரப்பிக் கொண்டார். இறுதியில், அப்பையில் நல்ல மற்றும் அழுகிய பழங்களும் இருந்தன.

ராஜா, பையின் வெளித் தோற்றம் மற்றும் அதன் பரிமாணத்தையும் மட்டுமே பார்ப்பார், உள்ளே இருப்பதைப் பார்க்க மாட்டார் என்று  நினைத்த மூன்றாவது மந்திரி காய்ந்த இலைகளையும், தூசி துகள்களையும் பையில் நிரப்பினார்.

மூன்று மந்திரிகளும் அரசவைக்கு தங்கள் பைகளை எடுத்து வந்து, ராஜா உத்தரவிட்ட பணியை முடித்து விட்டதாகக் கூறினர்.

ராஜா பைக்குள் இருந்ததைப் பார்க்காமல், மூன்று மந்திரிகளையும் தாங்கள் நிரப்பி வந்த பைகளோடு தனித்தனியாக மூன்று மாதங்களுக்கு சிறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

முதல் மந்திரி தான் கொண்டு வந்த நல்ல பழங்களை உண்டு மூன்று மாதங்களை சிறையில் கழித்தார்.

அடுத்த மந்திரி, சில நாட்கள் நல்ல பழங்களை உண்டார்; பிறகு அழுகிய பழங்களை உண்டு, நோய் வாய் பட்டார்.

மூன்றாவது மந்திரிக்கு சாப்பிட ஒன்றுமே இல்லாததால், உயிர் வாழ முடியவில்லை.

நீதி:

ஒவ்வொரு மனிதனும் தாங்கள் செய்யும் நல்ல / தீய காரியங்களுக்கு ஏற்றார் போல விளைவுகளை அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் விளைவு இருக்கிறது.

பண்டைய நூலான மகாபாரதத்தில் (அனுஷாசன பர்வா – ஒழுங்கு முறை என்ற அத்தியாயத்தில்)

“யதா தேனு சஹஸ்ரேஷு,

வத்ஸோ கச்சதி மாதரம்,

யத் ஸ க்ருதம் கர்ம,  

கர்தாரம் அபி கச்சதி” என்று கூறப் பட்டுள்ளது.

பல ஆயிரக் கணக்கான மாடுகளில், கன்று தன் தாயை கண்டுபிடித்து விடும். அதே போல, காலம் காலமாக வருகின்ற நம் கர்ம வினைகள் முதிர்வடைந்த பிறகு, தவறாமல் நம்மை வந்து தாக்கும்.

விதை விதைத்தவன் விதை அறுப்பான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

வாழ்க்கையின் தத்துவம்

 

நீதி – நன் நடத்தை

உபநீதி – தீய குணங்களை கட்டுப்படுத்துதல் / விழிப்புணர்வு

மகாபாரதத்தின் உய்பொருள்…….

வரலாற்று சிறப்புமிக்க மகாபாரத போர் நடந்த புனித இடமான குருக்ஷேத்திரத்தில், சஞ்சயன் இறுதியாக வந்தார்.

இந்தப் போருக்கான உண்மையான நோக்கம் என்ன என்று சஞ்சயன் யோசித்து கொண்டிருந்தார். போர் நடந்த இடத்திற்குச் சென்று பார்த்தால் மட்டுமே அதற்கான சரியான விடை கிடைக்கும் என்று உணர்ந்து, சஞ்சயன் அங்கு சென்றார்.

போர் நடந்த 18 நாட்களில், போரில் ஈடுபட்ட 80 சதவிகித ஆண்கள் வீழத்தப்பட்டனர் என்று நூல்களில் கூறப்பட்டுள்ளது.

சஞ்சயன் அந்த இடத்தை முழுமையாகப் பார்வையிட்டு,  “உண்மையாகவே  அப்படி ஒரு போர் இங்கு நடந்ததா?  இந்த பூமி இரத்த வெள்ளத்தில் மூழ்கியதா? பஞ்சபாண்டவர்களும் பகவான் கிருஷ்ணரும் இங்கு தான்  நின்றனரா?” என்றெல்லாம் தனக்குத் தானே வினவிக் கொண்டிருந்தார்.

“உனக்கு ஒரு போதும் அதன் உண்மை தெரியாது” என்று ஒரு வயதான, மென்மையான குரல் கேட்டது. சஞ்சயன் திரும்பி பார்த்தார்.

காவி உடை உடுத்திய ஒரு முதியவர் ஒரு புகை மண்டலத்திலிருந்து வெளியே வருவது தெரிந்தது.

“குருக்ஷேத்திரப் போரைப் பற்றித் தெரிந்து கொள்ள தான் நீ இங்கு வந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால், போர் என்பது உண்மையில் எதைக் குறிக்கின்றது என்பதை நீ அறியும் வரை உனக்கு அது புரியாது” என்று முதியவர் மறைமுகமாகக் கூறினார்.

தாம் இதுவரை சந்தித்தவர்களிலேயே இவர்தான் இந்தப் போரைப் பற்றி அதிகம் அறிந்தவர் போலும் என்றுணர்ந்த சஞ்சயன், “நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று வினவினார்.

அதற்கு ‍அந்த முதியவர், ” மகாபாரதம் ஒரு காவியம். அது ஒரு உண்மை நிகழ்வாக இருந்தாலும், அதில் ஒரு வாழ்க்கைத் தத்துவமே அடங்கியுள்ளது” என்று கூறினார்.

முதியவர் சஞ்சயனிடமிருந்து மேலும் பல கேள்விகளை எதிர்பார்த்து அவரை உற்று நோக்கினார்.

சஞ்சயன், “அப்படியென்றால் அந்தத் தத்துவத்தை எனக்கு எடுத்துரைக்கவும்” என்று கெஞ்சினார்.

“கண்டிப்பாக” என்று கூறிய முதியவர் தன் உரையை ஆரம்பித்தார்.

“உன்னுடைய ஐம்புலன்கள் அதாவது பார்வை, முகர்வுணர்வு, நாவுணர்வு, தொட்டுணர்வு மற்றும் கேள்விப்புலன் தான் பஞ்சபாண்டவர்கள். கௌரவர்கள் யார் என்று உனக்கு தெரியுமா?” என்று வினவினார்.

சஞ்சயன் தெரியாது என்று தலையசைத்தார்.

முதியவர், “அந்த நூறு கௌரவர்கள் தான், அனுதினமும் நம் ஐம்புலன்களை தாக்கிக் கொண்டிருக்கும் தீய எண்ணங்கள் மற்றும் செயல்கள். உன்னால் அவைகளை ஜெயிக்க முடியும். எவ்வாறு தெரியுமா?” என்றார். மீண்டும் சஞ்சயன் தெரியாது என்று தலையசைத்தார்.

அதற்கு அவர், “கண்ணன் உன் தேரோட்டியாக இருக்கும் பொழுது” என்று கூறி ஒரு குறும்புப் புன்சிரிப்புடன் தென்பட்டார். சஞ்சயனும் அதை கவனிக்கத் தவறவில்லை.

“கிருஷ்ணர் உன் உள்ளுணர்வு, உன் ஆத்மா, மேலும் அவரே உனக்கு வழிகாட்டும் ஒளி. உன் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்தால், நீ எதற்கும் கவலைப்படத் தேவையில்லை” என்று கூறினார்.

சஞ்சயன் உடனே ” பின்னர் ஏன் உத்தமர்களாகிய துரோணாச்சாரியார் மற்றும் பீஷ்மர் ஆகியோர் தீயவர்கள் என்றறிந்தும் கௌரவர்களுக்காக போரிட்டனர்?” என்று கேட்டார்.

முதியவர் வருத்தத்துடன் தலை அசைத்து விட்டு,  “நீ வளரும் பொழுது உனக்கு நல்லவர்களாகத் தெரிந்த சிலர்,  பிற்காலத்தில் அவ்வாறு இல்லை என்பது புலப்படும். அவர்களும் தவறுகள் செய்கின்றனர். அவர்களால் உனக்கு நன்மையா தீமையா என்பதை நீ தான் ஒரு நாள் முடிவு செய்ய வேண்டும். நன்மைக்காக அவர்களுடனேயே நீ சண்டையிட வேண்டியிருக்கும் என்பதைப் பின்னர் புரிந்து கொள்வாய். ஒருவருடைய வளர்ச்சியின் கடினமான கட்டம் இது தான். அதனால் தான் கீதை இன்றியமையாததாகிறது” என்று கூறினார்.

சஞ்சயன் பூமியில் சரிந்தார் – உடல் சோர்வடைந்து அல்ல, நடந்த கொடுமையை எண்ணி மனம் தளர்ந்து சரிந்தார். “அப்படி என்றால் கர்ணன்?” என்று முணுமுணுத்தார்.

முதியவர்,  “ஆஹா! நீ ஒரு சிறந்த கேள்வியை இறுதியில் கேட்டிருக்கிறாய். கர்ணன் தான் உன் ஐம்புலன்களின் சகோதரனாகிய ஆசை. அவன் உன்னைச் சார்ந்து இருந்தாலும், தீமையின் பக்கம் இருப்பான். ஆசைகளைப் போலவே, தவறு செய்ததை உணர்வான்; ஆனால் தீயவர்களுடன் இருப்பதற்குக் காரணம் காட்டுவான். கூறு சஞ்சயா! உன் ஆசைகள் தீமைக்குத் துணை போவதில்லையா? ” என்று கூறி முடித்தார். சஞ்சயன் அமைதியாகத் தலையசைத்தார். அவர் லட்சக் கணக்கான எண்ணங்களை மனதில் ஓடவிட்டு, அனைத்தையும் ஒருங்கிணைத்து சிந்திக்கத் தொடங்கி, நிமிர்ந்து பார்த்தார். அந்த முதியவர் அங்கு தென்படவில்லை. வாழ்க்கையின் மிகப் பெரிய தத்துவத்தை அவருக்கு உணர்த்திவிட்டு முதியவர் மறைந்து விட்டார்.

நீதி:

மகாபாரதம் என்பது நம் ஒவ்வொருவருள்ளும் நடக்கும் ஒரு போர்.  நம்முள் இருக்கும் குறைகளையும், தீமைகளையும் உணர்ந்து கொண்டால், நம்முள் உறைந்திருக்கும் உள்ளுணர்வாகிய கண்ணணின் துணையுடன், நாம் நம்மை உயர்த்திக் கொள்ளும் வழியில் உழைக்கலாம்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

அருணியின் பக்தி

நீதி – நன்னடத்தை

உபநீதி – குருவிடம் அன்பு மற்றும் பக்தி

பல வருடங்களுக்கு முன், பாஞ்சால நாட்டில், ரிஷி தௌம்யரின் சிஷ்யனாக அருணி என்றொருவர் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வாழ்ந்து வந்தார். குருவின் ஆசிரமத்தில் தெய்வீக ஞானத்தை பெற, அங்கு தினமும் நடக்கும் சேவைகளில் பங்கேற்றுக் கொண்டு, பணிவிடை செய்தார்.

குளிர்காலத்தில் ஒரு நாள், சேகரித்த விறகை எடுத்துக் கொண்டு, அருணி ஆசிரமத்திற்கு சென்று கொண்டிருந்தார். ஆசிரமத்தின் வயல் வழியாக அவர் வந்து கொண்டிருக்கும் போது, நீரை பிடிப்பில் வைத்திருந்த வயல் அணையில், பிளவு ஏற்பட்டிருப்பதை கவனித்தார். அந்தப் பிளவினால் நீர் சற்று நேரத்தில் கசிந்து வீணாகி, பயிர்கள் அனைத்தும் நீரில்லாமல் சேதம் அடைந்து விடும் என்பதை உணர்ந்தார்.

அருணி, “தற்சமயம் நான் என்ன செய்வது? இங்கு நின்று அணையை மறுபடியும் சரி செய்தால், தாமதமாகி விடும்; ஆசிரமத்தில் குளிர் காய்வதற்கு விறகு வேறு இல்லை. முதலில் ஆசிரமத்திற்கு விறகோடு சென்று, பிறகு இந்த அணையை சரி செய்வதற்கு வரலாம்” என்றவாறு யோசித்தார்.

இந்த சமயத்தில், அங்கு ஆசிரமத்தில் குருவும், சிஷ்யர்களும் அந்நாள் பாடத்திற்கு ஒன்று கூடினர். அருணியைக் காணவில்லை. கூடிய விரைவில், அருணி ஆசிரமத்திற்கு வந்து, முற்றத்தில் விறகை போட்டு விட்டு, குருவிடம் அணையைப் பற்றி கூறிவிட்டு, மறுபடியும் சென்று விட்டார்.

பொறுப்புள்ள சிஷ்யனைப் பார்த்து ரிஷி தௌம்யர் மகிழ்வுற்றார்.

அருணி வயலுக்கு ஓடிச் சென்று, அணையில் ஏற்பட்ட பிளவை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், மண் மற்றும் மரத்துண்டுகளை அங்கு சேகரித்தார்; ஆனால், நீர்க் கசிவை கட்டுப்படுத்த முடியவில்லை. நீரின் பளுவான அழுத்தத்தினால், அருணி கட்டிய அணைக்கட்டு உடைந்து விட்டது. அவர் உதவியற்ற நிலையில் இருந்தார். தற்சமயம் நீர் கசிவை உதவியில்லாமல் கட்டுப்படுத்த முடியாது என அவர் உணர்ந்தார். ஆனால், உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்ததால், அவருக்கு ஒரு யோசனை வந்தது.

மாலைப் பொழுது, வெளிச்சம் சற்று குறைவாக இருந்தது. ஆசிரமத்தில் எல்லோரும் அருணியைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்தனர். ரிஷி மற்றும் சிஷ்யர்கள் அருணியைத் தேடுவதற்காக புறப்பட்டனர். வயல் அருகே சென்று, அருணியின் பெயரை அழைத்ததும், “நான் இங்கு இருக்கிறேன் குரு!” என்ற தளர்ந்த குரல் கேட்டது.

அதைக் கேட்டு எல்லோரும் அவ்விடத்திற்கு அவசரமாகச் சென்றனர். அங்கு அருணி அந்த அணைக்கு அருகில் நீர் கசிந்து வெளியே செல்லாதபடி படுத்திருந்தார்; வேறு எதுவுமே பயன்படாத போது, அந்த நீர் கசிவை நிறுத்துவதற்காக, அவர் தன் உடம்பையே அணைக்கட்டாக பயன் படுத்திக் கொண்டார். சிஷ்யர்கள் அருணியை அந்த பனி உறைந்த நீரிலிருந்து வெளியே மீட்டனர். அவர்கள் நம்பிக்கையுடன், “கவலைப் படாதே அருணி! நாம் இந்த அணையை சரி செய்து விடலாம்” என்றனர்.

ரிஷி, “மகனே! எனக்கு பயிர்களை விட நீ தான் முக்கியம்” என்றார்.

அருணியை கம்பளத்தால் நன்றாக போர்த்தி விட்டு, ஆசிரமத்திற்குக் கூட்டிச் சென்றனர். பிறகு ரிஷி, “குருவிற்கு நீ காண்பிக்கும் இணையற்ற பக்தி மற்றும் கீழ்படிதல் உனக்கு புகழை என்றென்றைக்கும் கொண்டு சேர்க்கும்” என சிஷ்யனை ஆசீர்வதித்தார்.

நீதி:

அருணியின் இணையற்ற கீழ்படிதல், குருவின் ஆசீர்வாதத்தை அவருக்கு வென்று அளித்தது. நாமும் இத்தகையான பண்புகளை வளர்க்க எவ்விதமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டால், குருவின் ஆசீர்வாதம் நிச்சயமாகக் கிடைக்கும். நம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் சொற்படி நடந்து கொள்வது, இந்த பண்பின் ஒரு உதாரணம் எனக் கூறலாம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

இறுதி ஆசை

நீதி – நன் நடத்தை

உபநீதி – பெற்றோர்களின் கடமை, சரியான எடுத்துகாட்டாக இருப்பது, தலையிடாமல் இருப்பது.

ஒரு குற்றவாளி மரண தண்டனைக்கு செல்லும் முன், இறுதி ஆசையாக ஒரு பென்சில் மற்றும் காகிதம் வேண்டும் எனக் கேட்டான். பல நிமிடங்கள் அக்காகிதத்தில் ஏதோ எழுதிய பிறகு, குற்றவாளி அக்காகிதத்தை சிறையின் காவல்காரரிடம் ஒப்படைத்து, அதைத் தன் தாயிடம் ஒப்படைக்குமாறு கூறினான்.

அந்த கடிதத்தில்……

அம்மா, இவ்வுலகத்தில் இன்னும் நியாயம் இருந்திருந்தால், எனக்கு மட்டுமில்லாமல் நம் இருவருக்கும் மரண தண்டனை கிடைத்திருக்க வேண்டும். நான் வாழ்ந்த வாழ்க்கையில், நீங்களும் எனக்கு இணையான குற்றவாளி தான்.

நினைவு படுத்திக் கொள்ளவும்…….மூன்று சக்கர வண்டி ஒன்றை ஒரு சிறுவனிடமிருந்து நான் திருடி வீட்டிற்கு கொண்டு வந்த போது?

அப்பா அதைப் பார்க்கக் கூடாது என்று நினைத்து, அதை ஒளித்து வைக்க நீங்கள் எனக்கு உதவி செய்தீர்கள்.

பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து பணப்பையை திருடிய போது?

நீங்கள் என்னுடன் கடைக்கு வந்து அதை செலவழித்தீர்கள்.

நான் ஒதுக்கப் பட்ட போட்டியின் இறுதி முடிவை திருடியதால், அப்பா என்னை திருத்த நினைத்தார்.

நான் செய்த செயலை நியாயப்படுத்த அப்பாவிடம் வாதாடிய போது என்ன நிகழ்ந்தது என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

அம்மா, அப்போது குழந்தையாக இருந்தேன், பிறகு மற்றவர்களை துன்புறுத்தும் வாலிபனாக மாறினேன். தற்சமயம் நேர்மையில்லாத மனிதனாக இருக்கிறேன்.

அம்மா, அச்சமயம் நான் செய்த காரியங்களை சம்மதிக்காமல் திருந்தக்  கூடிய குழந்தையாக இருந்தேன். ஆனால், நீங்கள் என்னை கெட்ட பழக்கங்களுக்கு ஆளாக்கி விட்டீர்கள். ஆனாலும் நான் உங்களை மன்னிக்கிறேன்!

இந்தக் கடிதம் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்களிடம் போய் சேர வேண்டும் என்பது தான் என் விருப்பம்; மனிதர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என்று வித்தியாசப்படுத்திப் பார்ப்பது கல்வி மட்டுமே என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அம்மா, வாழ்க்கையை கொடுத்ததற்கும் நன்றி; கைதவற விட்டதற்கும் நன்றி.

உங்கள் குழந்தை குற்றவாளி.

நீதி:

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அதிகமாக விரும்பி, பல சமயங்களில் செல்லம் கொடுத்து கெடுக்கின்றனர். சரியான சமயங்களில் சரியான முடிவுகளை எடுத்தால், பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். “ஒரு சிறிய கொடியை வடிவமைப்பது சுலபம், ஆனால் ஒரு மரத்தை அவ்வாறு செய்தால் அது உடைந்து விடும்.” தவறான செயல்களை துவக்கத்திலேயே தடுக்க வேண்டும். சிறு தவறுகளை கவனிக்காமல்  விட்டால், பெரிய குற்றங்களாக மாறிவிடும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். அன்பு என்றால் அதிகமாக செல்லம் கொடுப்பது என்று அர்த்தமில்லை. குழந்தைகளுக்கு சரியான பண்புகளை கற்றுக் கொடுத்து, சரி மற்றும் தவறுக்கு இடையில் உள்ள வித்தியாசத்தையும் வேறுபடுத்திப் பார்க்க பெற்றோர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும்.

நற்பண்புகளை புகட்டி, சரியான விதத்தில் குழந்தைகளை வளர்ப்பது, அவர்களுக்கு மட்டுமல்லாமல் குடும்பம் மற்றும் சமூகத்திற்கும் முக்கியமாகும்.

இவ்வுலகத்தை மாற்ற கல்வி மிக சக்திவாய்ந்த ஆயுதமாகும். (நெல்சன் மண்டேலா)

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

அகங்காரம் – கொடூரமான விரோதி

நீதி – சரியான நடத்தை

உப நீதி – அகங்காரத்தை விட்டுக் கொடுத்தல்

ஒரு ஊரில், குழந்தைப் பருவத்திலிருந்து பழகிக் கொண்டிருந்த இரு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் வளர்ந்த பின், தங்கள் விருப்பத்திற்கேற்றார் போல் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஒருவன் சந்நியாசியாக மலைகளில் தவங்கள் செய்ய சென்றான். இன்னொருவன் பெரிய அரண்மனை போன்ற வீட்டில் வசதியாக, அரசனைப் போல் வாழ்ந்து வந்தான். சந்நியாசி இடுப்புத் துணியை மட்டுமே அணிந்திருந்தான்; ஆனால், மற்றொருவன் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தான்.

பல காலங்களுக்குப் பிறகு, வசதியுள்ள நண்பன் சந்நியாசியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தன் சிறு வயது நண்பனைப் பார்க்க விரும்பினான். பல இடங்களில் தேடி, தன் நண்பனை கண்ட அவன், தனது நண்பன் ஒரு பெரிய ஞானி என்பதை எண்ணி பெருமை அடைந்தான். தன் நண்பனை வீட்டிற்கு அழைத்து, உணவு அருந்துமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டான். இதற்கு சந்நியாசி நண்பன் ஒப்புக் கொண்டான்.

சந்நியாசி நண்பன் வருவதை முன்னிட்டு, பணக்கார நண்பன் தன் அரண்மனையில் சிறப்பான ஏற்பாடுகளும், அலங்காரங்களும் செய்தான். மேலும், கடுந்தரையில் நடக்காமல் இருக்க, விலையுயர்ந்த கம்பளங்களையும் விரித்தான்.

தன் நண்பனின் வீட்டிற்கு வந்த சந்நியாசி நண்பன், தன்னை வரவேற்க நண்பன் செய்திருந்த அற்புதமான ஏற்பாடுகளைக் கண்டு ஆச்சரியப் படுவதோடு, மகிழ்ச்சியும் அடைந்தான். அவன் பிரதான நுழைவாயில் அருகே சென்ற போது, அங்கு இருந்த ஒருவன், “பார்த்தாயா! உன்னுடைய நண்பன், தான் எவ்வளவு பணமும் செல்வமும் பெற்றவன் என்பதை உன்னிடம் காண்பிக்க இந்த ஏற்பாடுகளை செய்துள்ளான். உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பதை சுட்டிக் காண்பித்து நீ தாழ்ந்தவன் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்துள்ளான்” என்று கூறினான். இதைக் கேட்ட சந்நியாசியின் அகங்காரமும், கோபமும் அதிகரித்தது.

கோபமான மற்றும் பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் சந்நியாசி நண்பனின் மனதில் தோன்றியன. “நான் ஒரு சிறந்த ஞானி; இவனோ தன் செல்வத்தை என் அறிவுடன் ஒப்பிட்டுப் பார்த்து, என்னை அவமானப் படுத்த இவ்வாறு செய்துள்ளான்” என்று தவறாக புரிந்து கொண்டான். கோபத்தில், தன் கால்களை அருகில் இருந்த சேற்றில் ஊன்றி, அங்கு இருந்த கம்பளத்தை அழுக்காக்கினான்.

பணக்கார நண்பன் தன் நண்பனை வரவேற்கும் போது, விலையுயர்ந்த கம்பளங்கள் அழுக்காக இருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து கோபமுற்றான். இதைக் கண்ட சந்நியாசி, “உனக்கு பாடம் புகட்டவே இவ்வாறு உன் கம்பளத்தை வீணாக்கினேன்” என்று கோபத்தோடு கூறினான். மேலும், “நீ செல்வத்தை மட்டுமே பெற்றிக்கிறாய், நானோ உயர்ந்த ஞானத்தை அடைந்துள்ளேன். நான் ஒரு மகான், ஞானி மற்றும் சாது தெரியுமா?” என்று மிகுந்த கர்வத்துடன் கூறினான். அவன் அகங்காரம் எல்லையில்லாமல் பெருகியது.

இதைக் கேட்ட நண்பன், “என் தோழா, நீ லௌகீக மற்றும் பொருள் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் தியாகம் செய்து, ஒரு ஞானியாக இருந்தும் இந்த அகங்காரத்தை உன்னால் கட்டுப்படுத்த முடியவில்லையே. நான் உன்னை மிகவும் மரியாதையுடன் நடத்தி, உன்னைப் பெருமை படுத்தி, உன் சாதனைகளைப் பார்த்து பொறாமை பட்டிருக்கிறேன்; ஆனால் நீ இவ்வளவு கீழ்த்தனமாக நடந்து கொள்வாய் என நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. உனக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் கூட இல்லையே என வருத்தப்படுகிறேன். எனக்கு பணத்தின் மேல் கர்வமும், உனக்கு தவம் மற்றும் ஞானியின் வாழ்க்கையை சார்ந்த கர்வமும் உள்ளன. இந்த அகங்காரத்தினால் நீ தவத்தின் மூலம் பெற்ற அனைத்தையும் இழந்துள்ளாய்” என்று மரியாதையுடனும், மன்னிப்புக் கோரும் வகையிலும் கூறினான்.

நீதி:

ஒவ்வொருவனும் தன்னிடம் அகங்காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் பெற்ற செல்வம், அறிவு இவை அனைத்தும் இறைவன் நமக்கு அருளியது. “நான்” என்ற உணர்வு நம் கொடூரமான எதிரி. சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக, ஒரு விபத்தையோ, தவிர்க்க முடியாத நோயையோ நாம் சந்தித்தோமானால்,  நாம் அடைந்த அனைத்தையும் ஒரு நொடியில் இழக்கக் கூடும். எனவே, இறைவன் நமக்குக் கொடுத்ததை நினைத்து நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உடல், தெளிந்த அறிவு – இவற்றை இறைவன் அருளவில்லை என்றால், இவ்வுலகில் எதையும் அடைந்திருக்க நம்மால் முடியாது. எனவே, மற்றவர்களைக் கண்டு பொறாமையோ, கோபமோ கொள்ளக் கூடாது. இறைவனை நம் மனதில் நினைத்து, நம் கடமையை சரி வர செய்தால், அவர் நமக்கு தேவைக்கு மேல் அளிப்பார்.

மொழி பெயர்ப்பு:

ஸ்ரீராம், சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

மூன்று விதமான மனிதர்கள்

நீதி – நன் நடத்தை / உண்மை

உபநீதி – நம்பிக்கை / விசுவாசம்

ஒரு ஆசிரியர், மூன்று பொம்மைகளை ஒரு மாணவனிடம் காண்பித்து, அவைகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை கண்டுபிடிக்க சொன்னார். பரிமாணம், வடிவம் மற்றும் வஸ்து என்ற வகைகளில் அவை மூன்றுமே ஒரே மாதிரியாக இருந்தன. கூர்ந்து கவனித்த பின், மாணவன் அப்பொம்மைகளில் துளைகளை கண்டு பிடித்தான். முதல் பொம்மையில், காதுகளில் துளைகள் இருந்தன. இரண்டாவது பொம்மையில், காது மற்றும் வாயில் துளைகள் இருந்தன. மூன்றாவது பொம்மையில் ஒரு காதில் ஒரு துளை இருந்தது.

மாணவன், ஒரு மெல்லிய நீண்ட வைக்கோலை எடுத்து, முதல் பொம்மையின் ஒரு காது வழியாக நுழைத்தான்; ஆச்சரியமாக, மற்றொரு காது வழியாக அவ்வைக்கோல் வெளியே வந்தது. அடுத்ததாக, ஒரு காது வழியாக வைக்கோலை நுழைத்த போது, வாய் வழியாக வெளியே வந்தது. மூன்றாவது பொம்மையில், வைக்கோலை ஒரு காது வழியாக நுழைத்த போது, அது எங்கிருந்தும் வெளியே வரவில்லை.

இதற்குப் பிறகு, மாணவன் ஒரு தீர்மானத்திற்கு வந்தான். உங்களைச் சுற்றி இருக்கும் சிலர், நீங்கள் சொல்வதை கூர்ந்து கவனித்து, உங்கள் மேல் அக்கறை இருப்பது போல நடிக்கின்றனர். எல்லாவற்றையும் கேட்ட பிறகு, முதல் பொம்மையின் வைக்கோல் மற்றொரு காது வழியாக வெளியே வருவது போல, நீங்கள் கூறிய அனைத்து விஷயங்களையும் மறந்து விடுகின்றனர். இவ்வகையான மனிதர்களுடன் சற்று கவனித்துப் பழக வேண்டும்.

இரண்டாவது பொம்மையைப் போல, சிலர் நீங்கள் கூறுவதை கவனித்து, அக்கறை காண்பிப்பது போல நடிக்கின்றனர். ஆனால், நீங்கள் நம்பிக்கையுடன் கூறியதை உளறி விடுகின்றனர்.

மூன்றாவது பொம்மையில், வைக்கோல் எந்த வழியாகவும் வெளியே வருவதில்லை. அதே போல, இவ்வகையான மனிதர்கள் நம்பிக்கையுடனும், விசுவாசத்துடனும் நடந்து கொள்கின்றனர். இவர்களை முழுமையாக நம்பலாம்.

நீதி:

எப்பொழுதும் நம்பிக்கை மற்றும் விசுவாசமுள்ள மனிதர்களுடன் பழக  வேண்டும். நீங்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்பவர்கள், நெருக்கடி சமயங்களில் உங்கள் உதவிக்கு கட்டாயமாக வருவார்கள் என்று சொல்ல முடியாது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

சிந்தித்து செயல்படுதல்

நீதி – நன் நடத்தை

உபநீதி: வம்பு மற்றும் இழிவாகப் பேசுவதை தவிர்த்தல்

பழைய காலத்தில், ஒரு கொடுமையான மந்திரவாதி வசித்து வந்தான். ஓர் இரவு, அவன் ஒரு நகரத்திற்குச் சென்று, அங்கு உறங்கிக் கொண்டிருக்கும் ஆயிரம் மக்களின் நாவுகளைத் திருடினான். பிறகு, அனைத்தையும் மந்திரித்து, அவற்றை உரிமைக்காரர்களுக்கே அளித்து விட்டான். இந்த மந்திரத்தின் விளைவாக, ஒருவருமே சந்தேகப்படாத முறையில், அந்த நாவுகள் மற்றவர்களைப் பற்றி தகாத வார்த்தைகளை மட்டுமே கூறும்படி அவன் செய்தான்.

சில நாட்களிலேயே, நகரத்தில் உள்ள அனைத்து மக்களும் மற்றவர்களிடம் தகாத வார்த்தைகளையே பயன்படுத்தினர்.

அவன் இப்படி செய்தான்…. இவள் சரியாக நடந்து கொள்ளவில்லை…. அவனைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது….. இவன் ஒழுங்காக இல்லை….. இத்தகைய வார்த்தை பரிமாற்றமே நடந்து கொண்டிருந்தது.

சில நாட்களில் ஒருவருக்கொருவர் கோபத்துடன் செயற்பட்டதைப் பார்த்த மந்திரவாதி பேரானந்தம் அடைந்தான்.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ஒரு நல்ல மந்திரவாதி தன் சக்திகளைப் பயன்படுத்த தீர்மானித்தார். நகரத்தில் வசிக்கும் அனைத்து மக்களின் செவிகளுக்கும் ஒரு மந்திரம் உச்சரித்தார். இதன் விளைவாக, மற்றவர்கள் தகாத  வார்த்தைகளை பேசிய போது, செவிகளை இறுக்க அடைத்து எவருக்கும் ஒன்றுமே கேளாதபடி செய்தார்.

நாவுகளுக்கும், செவிகளுக்கும் ஒரு பயங்கரமான போர் துவங்கியது. ஒன்று பரிகாசம் செய்வதும், மற்றொன்று ஒன்றுமே கேட்காமல் இருப்பதுமாக இருந்தன.

இந்தப் போரில் வென்றது யார்? சில நாட்களில், நாவுகள் அனைத்தும் உபயோகம் இல்லாத உணர்வை அனுபவித்தன. எவருமே கேட்காத போது, ஏன் பேச வேண்டும்? பேசினால் கேட்க வேண்டும் என்ற விருப்பம் நாவுகளுக்கு இருந்ததால், பேச்சை மாற்றிக் கொண்டன. இனிமையான வார்த்தைகளை பேசிய போது, எல்லோரும் அதை விரும்பிக் கேட்டதைப் பார்த்து, நாவுகள் பேரின்பத்தில் மூழ்கியன.

இன்று வரை, இந்த கொடுமையான மந்திரவாதி உலகத்திலுள்ள அனைத்து மக்களின் நாவுகளுக்கும் இந்த மந்திரத்தை உச்சரித்து வருகிறான். இந்த வம்புக்கு முற்றுப் புள்ளி வைக்க, இவற்றில் கவனம் செலுத்தாமல் இருப்பது நல்லது என மக்கள் புரிந்து கொண்டனர். இதற்காக நாம் நல்ல மந்திரவாதிக்கு நன்றியை தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறோம்.

நீதி:

எப்போதும் நல்லதையே பேசி, நல்லதையே கேட்க வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் வம்புப் பேச்சுகளை நாம் தவிர்க்க முடியாது; ஆனால், நாம் நல்ல இனிமையான சொற்களை மட்டுமே கேட்டு, நாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது நம் கையில் இருக்கிறது. நாம் பேசுவதற்கு முன்பு யோசனை செய்ய வேண்டும்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com