என்னை ஒரு தொலைக்காட்சி பெட்டியாக மாற்றவும்

நீதி: உண்மை

உபநீதி: அன்பு, அக்கறை

தொடக்கப் பள்ளியில் பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியை ஒருவர் தன் மாணவர்களிடம், கடவுள் அவர்களுக்காக என்ன செய்ய விருப்பப் படுகிறார் என்பதைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதச் சொன்னார்.

அந்நாள் இறுதியில், கட்டுரையைப் பார்க்கும் போது, ஒரு கட்டுரை அவரை நெகிழ வைத்தது; ஆசிரியை உணர்ச்சிவசப் பட்டார். அக்கட்டுரையை தன் சக ஆசிரியையிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

மற்றொரு ஆசிரியையும் கட்டுரையைப் படித்து அழத் தொடங்கினார். அச்சமயம் தற்செயலாக வந்த அவருடைய கணவர் உள்ளே நுழைந்து “ஏன் அழுகிறாய்?” எனக் கேட்டார்.

அதற்கு அவர், “இந்தக் கட்டுரையைப் படியுங்கள். என் சக ஆசிரியையின் மாணவர் எழுதியது” எனக் கூறினார்.

கீழ்வரும் கவிதையை படியுங்கள்

“கடவுளே! இன்றிரவு உங்களிடம் சிறப்பான ஒரு விஷயத்தைக் கேட்கிறேன். என்னை ஒரு தொலைக்காட்சி பெட்டியாக மாற்றுங்கள்.

எல்லோரும் என்னை கவனிக்கும் வகையில், குறுக்கீடுகள் மற்றும் கேள்விகள் எதுவும் இல்லாமல் நான் சொல்வதை கேட்க வேண்டும்.

தொலைக்காட்சி வேலை செய்யாமல் இருக்கும் போதும் அதை சிறப்பாக கவனிப்பது போல என்னையும் கவனிக்க வேண்டும்.

என் தந்தை வேலையிலிருந்து வீட்டுக்கு வரும் போது, எவ்வளவு சோர்வாக இருந்தாலும், என்னுடன் நேரம் செலவிட வேண்டும்.

என் தாய் சோகமாகவும், வேதனையாகவும் இருக்கும் போது, என்னை புறக்கணிப்பதற்கு பதிலாக, நான் வேண்டும் என நினைக்க வேண்டும்.

பிறகு என்னுடன் இருப்பதற்கு என் சகோதரர்கள் சண்டை போட வேண்டும்.

குடும்பத்தினர் அனைவரும் மற்ற விஷயங்களை அவ்வப்போது விட்டு விட்டு, என்னுடன் நேரத்தை கழிப்பதற்கு மட்டுமே என்னுடன் இருக்க வேண்டும்.

இறுதியாக, நான் அவர்கள் எல்லோரையும் சந்தோஷப் படுத்தி பொழுதைப் போக்க வேண்டும்.

கடவுளே! நான் அதிகமாக கேட்கவில்லை. நான் தொலைக்காட்சியைப் போல வாழ வேண்டும்.

அந்த சமயம் கணவர், “கடவுளே, பாவம் குழந்தைகள்! மோசமான பெற்றோர்களாக இருப்பார்கள் போலிருக்கே!” எனக் கூறினார்.

மனைவி அவரைப் பார்த்து, “இந்த கட்டுரை நமது குழந்தை எழுதியது தான்!!!” எனக் கூறினார்.

நீதி:

நீங்கள் மற்றவர்களை மதித்து நடந்து கொள்ளும் போது, அவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதற்காக அல்ல; ஆனால், உங்களைப் பற்றியும் அவர்களைப் பற்றியும், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். மனிதர்களை பொருட்களைப் போல நடத்தினால், அவர்களின் மதிப்பை குறைப்பது மட்டுமல்லாமல், பரிவும் புரிதலும் இல்லாத ஒரு மனப்பான்மையை  ஏற்படுத்துகிறது.  

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment