Archive | March 2022

நம்மிடம் இருப்பது

நீதி: அன்பு

உப நீதி: கருணை

ஆன்மீகக் கதை – பாலோ கோஎல்ஹோ

ஒரு முறை, அக்பர் வசிக்கும் கிராமத்திற்கு ஒரு ஞானி வருகை தந்தார். அவ்வூர் மக்களோ அவரை மதிக்கவே இல்லை. ஒரு சிறு இளைஞர் குழுவைத் தவிர மற்ற எவரும் இந்த ஞானி மேல் ஆர்வம் காண்பிக்கவில்லை. மாறாக, மக்கள் அனைவரும் கேலியாக அவரைப் பார்த்தனர்.

ஒரு நாள் ஞானி, தன் சீடர்களுடன் ஒரு தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சில ஆண்களும் பெண்களும் அவரை அவமதித்தனர். உடனே ஞானி அவர்கள் அருகில் சென்று அவர்களை ஆசீர்வதித்தார்.

மக்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றதும், சீடர்களில் ஒருவன் ஞானியைப் பார்த்து, “மக்கள் கடுமையான சொற்களால் அவமரியாதையுடன் பேசுகின்றனர்; ஆனால், நீங்கள் பதிலுக்கு நல்ல வார்த்தைகளைக் கூறி  பதிலளிக்கிறீர்களே?” என்று வினவினான்.

அதற்கு ஞானி “நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் இருப்பதைத் தானே பிறருக்கு அளிக்க முடியும்” என்று பதிலளித்தார்.

நீதி:

நாம் பிறருடைய மனநிலையைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். நாம் பிறர் கஷ்டங்களைப் புரிந்து கொள்ள முயற்சித்தால், நமக்கு அவர்கள் மேல் கருணை உண்டாகும். அதன் மூலம் அவர்கள் இருக்கின்ற வகையிலேயே அவர்களை ஏற்றுக் கொள்ளத் தெரிந்து கொள்வோம். இப்படி செய்வதனால், நாம் மன நிறைவுடனும், நிம்மதியாகவும் இருக்கலாம்.

எல்லோரிடத்திலும் கருணையாக நடந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் துன்பம் இருக்கிறது.

சிலர் அதிகமாக கஷ்டப்படுகின்றனர்

மற்றவர்கள் சற்று குறைவாக கஷ்டப்படுகின்றனர் – புத்தர்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

உலகம் ஒரு கண்ணாடி போன்றது

நீதி: நன்னடத்தை, சுய உணர்தல்

உப நீதி: உள்ளார்ந்து நோக்குதல், மன நிறைவு

மூன்று வெவ்வேறு கதைகள்; ஆனால் ஒரே கோணத்தில் நமக்கு பாடங்களை கற்பிக்கின்றன. நாம் காணும் உலகம் நம் உள் மனதின் பிரதிபலிப்பே.

ஒரு நாள், ஒரு வகுப்பு ஆசிரியை தன் மாணவர்களிடம் அவர்களுக்கு மிகவும் பிடிக்காத நபரின் பெயரை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதும்படி கூறினார்.

உடனே மாணவர்கள் சுறுசுறுப்பாக செயற்பட்டனர். ஒரு மாணவன் “நான் எவரையுமே வெறுக்காத போது யார் பெயரை எழுத முடியும்?” என்று கேட்டான்.

அதற்குள் மற்ற மாணவர்கள் எழுதி முடித்து விட்டதால், ஆசிரியை பெயர்களை நோட்டம் விட்டார்.

ஆசிரியை அனைத்து பெயர்களையும் சரி பார்த்த போது, எந்தத் தாளிலும் இந்த மாணவனின் பெயர் இல்லாததைக் கண்டு அதிசயித்தார்.

———————————-

ஒரு நாள், பகவான் கிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம், நாட்டிலுள்ள தீயவர்களை கணக்கெடுக்கக் கூறினார். அது போல், துரியோதனனிடம், நல்லவர்களின் கணக்கெடுப்பை எடுக்கக் கோரினார்.

துரியோதனன் திரும்பி வந்து, நாட்டில் ஒருவர் கூட நல்லவரில்லை என்று அறிவித்தான். அவனைப் பொருத்தவரையில் சாதுக்கள் முனிவர்கள் மற்றும் நல்ல மனிதர்களில் கூட தீமை நிரம்பியிருந்தது.

யுதிஷ்டிரர் திரும்பி வந்து ஒரு தீயவர் கூட இந்த நாட்டில் இல்லை என்று கூறினார். அவரைப் பொருத்தவரையில், கொலைகாரனும், கொள்ளைக்காரனும் கூட நல்லவர்கள் தான்.

————————–

மலைப் பகுதிகளில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு அறிவார்ந்த பெண்மணி, நீரோடையில் ஒரு மதிப்புமிக்க நவரத்தினக் கல்லைக் கண்டார். ஒரே பார்வையில், அதன் மதிப்பை அறிந்து கொண்டார். மறுநாள் மற்றொரு பயணியை சந்தித்தார். அவர் பசியாக இருப்பதைக் கண்டு தன் உணவைப் பகிர்ந்தளிக்க பையைத் திறந்தார். அப்போது அந்தக் கல்லைப் பார்த்த பயணி, அதனை தருமாறு கேட்டான். எவ்வித தயக்கமுமின்றி அவர் உடனே கொடுத்து விட்டார்.

பயணி தன் நல்ல அதிர்ஷ்டத்தை எண்ணி மகிழ்ந்து சென்றான். அவன் வாழ்நாள் முழுவதும், அவனை பாதுகாக்கும் அளவிற்கு மதிப்பு வாய்ந்த கல் அன்று கிட்டியது என்று அவன் எண்ணினான். எனினும் சில நாட்கள் கழித்து திரும்பச் சென்று அந்தக் கல்லை அப்பெண்மணியிடம் திருப்பி கொடுத்து விட்டான்.

பயணி “இது விலை மதிப்புள்ள கல் என எனக்குத் தெரியும். இதைப் பற்றி யோசித்துக் கொண்டேயிருந்தேன்; இருப்பினும் நான் இதை திரும்பக் கொடுப்பதின் காரணம், இதை விட மேலானதை தருவீர்கள் என்ற நம்பிக்கை தான். இந்தக் கல்லை என்னிடம் கொடுப்பதற்கு காரணமாக இருந்த நற்பண்பை எனக்கு தாருங்கள்” என்றான்.

நாம் பிறரிடம் நல்லவிதமாக இருந்தால் அவர்களும் அவ்வாறே நம்மிடம் நடந்துக் கொள்வர்.

மற்றவர்களில் எப்பொழுதும் நற்பண்புகளை காண்பவராக இருங்கள்.

நீதி:

நாம் மற்றவர்களுக்கு எதை கொடுக்கிறோமோ அதே நமக்கு வருகிறது. எண்ணம், சொல், செயல் – இவற்றின் ஒருங்கிணைப்பு தேவை. மனஸ் ஏகம், வசஸ் ஏகம், கர்மண் ஏகம் மகாத்மன: என்று சொல்லப்படுகிறது. (எவருடைய எண்ணம், சொல் செயல் இணைந்து இருக்கிறதோ அவர்கள் மகான்கள் என்று கூறப்படுகிறது) இந்த நற்பண்புகள் கண்ணுக்கு புலப்படாதெனினும், மற்றவர்களின் இதயத்தில் அடிச்சுவடுகளை விட்டுச் செல்லும். ஆகவே இந்த நேர்மறை குணங்களை வளர்த்து மற்றவர் வாழ்வில் பயன்தரும் விளைவுகளை ஏற்படுத்துவோமாக!

மொழி பெயர்ப்பு:

காயத்ரிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

சோதனைகள் நம்மை வலிமைப் படுத்துவதற்காகவே

நீதி: பக்தி

உபநீதி: தன்னலமற்ற அன்பு, இரக்கம்

ஸத்ய ஸாயி பாபாவின் ‘எனது அருமை மாணவர்களே’ பாகம் 3, அத்தியாயம் 3, ஜூன் 30, 1996.

ஒரு சங்கராந்தி நாளன்று ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி, திரௌபதி மற்றும் பல கோபியர்கள் கிருஷ்ணருடன் சேர்ந்து சந்தோஷமாகக் கரும்பை சுவைத்துக் கொண்டிருந்தனர்.

கிருஷ்ணர் அவர்களை சோதிப்பதற்காகத் தன் விரலில் காயம் பட்டதாக பாவனை செய்தார். கடவுள் எப்போதுமே தன் பக்தர்களை சோதிப்பார். சோதனை செய்வது கடவுளுக்கு விருப்பமானது. பக்தன் அந்த சோதனையில் தேறினால், கடவுளின் அளவற்ற கருணை கிடைக்கும்.

வெறுப்பையோ, பகை உணர்வையோ காட்டுவதற்காக கடவுள் எந்த சோதனைகளையும் செய்வதில்லை. அவர் அதை எப்போதும் ஆழ்ந்த அன்பு மற்றும் கருணையால் செய்கிறார்.

கிருஷ்ணரின் விரலில் காயம்பட்ட இடத்திலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. சத்யபாமா வேலையாளிடம் ஒரு துண்டுத் துணியை உடனே கொண்டு வருமாறு கேட்டாள். ருக்மிணி தானே ஓடினாள்.

இதைக் கண்ட திரௌபதி உடனடியாகத் தன் புடவையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து, கிருஷ்ணரின் கட்டை விரலில் ரத்தம் நிற்பதற்காகக் கட்டினாள்.

இதைப் பார்த்த ருக்மிணியும், சத்யபாமாவும் தங்களின் அன்பும் செய்கைகளும்,  திரௌபதியின் அன்பிற்கு ஈடாகாது என்று எண்ணி வெட்கமடைந்தனர்.

பின்னர் பகவான் கிருஷ்ணர் அளவற்ற கருணையை மிகவும்  தேவைப்பட்ட போது திரௌபதிக்கு பொழிந்தார்.

நீதி:

பக்தியே அன்பாகும்; கடவுளிடம் அன்பு செலுத்துவது என்பதற்கு அர்த்தம் என்னவென்றால் நம்மை நாமே நேசிப்பதும்,  நம்மைச் சுற்றி உள்ள அனைத்து உயிர்களையும் நேசிப்பதாகும். இந்த அன்பு வளர்ந்து, எல்லாப் பக்கங்களிலும் பரவி, இறுதியாக நாம் காணும் அனைத்து உயிரினங்களிலும் கடவுளைக் காணச் செய்யும். மேலும் அவை அனுபவிக்கும் இன்ப, துன்பங்களையும் நம்மை உணரச் செய்யும். இந்த பக்தி மனப்பான்மையுடன் இருக்கும் அணுகுமுறை நம்மை அன்பு, அமைதி மற்றும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு உதவும். பச்சாதாபத்துடன் இருப்பது என்பது பிறர் என்ன நினைக்கிறார்களோ, பார்க்கிறார்களோ, அதை அவர்கள் பார்வையிலேயே உணர்வு பூர்வமாகப் புரிந்து கொள்ளுதல் ஆகும். மேலும் அவர்களிடத்தில் நம்மை நினைத்துப் பார்த்து செயற்படுவதாகும். அடிப்படையில் நம்மை அவர்கள் இடத்தில் பொருத்திப் பார்த்து, அவர்கள் என்ன உணர்கிறார்களோ, அதையே நாமும் உணர்கிறோம்.

நம் நலத்தைவிட பிறர் நலத்தை உயர்த்திப் பார்ப்பதே பக்தியாகும்.

மொழி பெயர்ப்பு:

அன்னப்பூரணிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

மக்கள் சேவையே மாதவன் சேவை

நீதி: அன்பு, நன் நடத்தை

உபநீதி: அக்கறை மற்றும் பகிர்வு, இரக்கம்

ரூத் தனது அஞ்சல் பெட்டியில் ஒரு கடிதத்தைப் பார்த்தாள். அதை திறப்பதற்கு முன்பு, மற்றொரு முறை அக்கடிதத்தைக் கூர்ந்து கவனித்தாள். அதில் அஞ்சல் முத்திரை இல்லை; பெயரும், விலாசமும் மட்டுமே இருந்தன.

அவள் அக்கடிதத்தைப் படித்தாள்:  “அன்புக்குரிய ரூத், வரும் சனிக்கிழமை மதியம், நான் உன் வட்டாரத்தில் இருப்பேன். உன்னை சந்திக்க ஆசைப்படுகிறேன். அன்புடன், கடவுள்” என்று எழுதியிருந்தது.

கடிதத்தை மேஜையில் வைத்த போது அவள் கைகள் நடுங்கின.

“கடவுள் எதற்கு என்னைப் பார்க்க ஆசைப்படுகிறார்? நான் ஒரு சாதாரண பெண் தானே. அவருக்கு சிறப்பாக ஏதாவது கொடுப்பதற்குக் கூட என்னிடம் ஒன்றுமே இல்லையே” என்று நினைத்தாள்.

இந்த எண்ணத்துடன் அவளுக்கு தன்னுடைய சமையலறையில் இருந்த காலி அலமாரி ஞாபகத்திற்கு வந்தது. “அடக் கடவுளே! அவருக்குக் கொடுப்பதற்கு உண்மையாகவே என்னிடம் ஒன்றும் இல்லையே. நான் கடையிலிருந்து சமையல் செய்ய எதையாவது வாங்கி வர வேண்டும்” என்று ரூத் நினைத்தாள்.

அவள் தன் பணப்பையைத் திறந்து பார்த்த பொழுது, ஐந்து டாலர்களும் நாற்பது சென்டுகளும் இருந்தன. “நல்லவேளை! எனக்குக் கொஞ்சம் ரொட்டியும் குளிர்ந்த இரைச்சியுமாவது கிடைக்கும்” என்று நினைத்தாள்.

ரூத் தன் மேற்சட்டையை அணிந்துக் கொண்டு, விரைவாக வெளியில் சென்றாள். ரொட்டித் துண்டு, சில பழங்கள் மற்றும் பாலை வாங்கியபின் அவளிடம் 12 சென்டுகள் மட்டும் இருந்தன; திங்கட் கிழமை வரை சமாளித்து விடலாம் என்று எண்ணி, மன திருப்தியோடு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள்.

ஆழ்ந்த யோசனையில் இருந்த ரூத், குறுக்கு சந்தில் இருந்த இரண்டு நபர்களை முதலில் கவனிக்கவில்லை; கிழிந்த ஆடைகள் அணிந்த ஒரு ஆணும், பெண்ணும் இருந்தனர். அவர்கள் அவளைப் பார்த்து, “எங்களுக்கு உதவ முடியுமா?” என்று கேட்டனர்.

அம்மனிதர் ரூத்திடம் “இங்கே சற்று பார்! எனக்கு வேலை இல்லை; என் மனைவியும் நானும் தெருவில் தான் வசிக்கிறோம். குளிரும், பசியும் எங்களை தாக்குகின்றன. எங்களுக்கு நீ உதவி செய்தால் நாங்கள் நன்றி உணர்வோடு இருப்போம்” என்றார்.

ரூத் அவர்கள் இருவரையும் பார்த்தாள். அவர்கள் அழுக்காகவும், துர்நாற்றத்துடனும் இருந்தனர். அவர்கள் உண்மையாக முயற்சி செய்தால், ஏதாவது ஒரு வேலை அவர்களுக்குக் கிடைக்கும் என்று அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது.

அவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை அவளுக்கு இருந்தாலும், அவளிடம் இருக்கும் பொருட்களைக் கொடுத்து விட்டால், கடவுளுக்கு உணவளிக்க வேறொன்றுமே இல்லையே என்று நினைத்தாள்.

அவள் “ஐயா! நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன்; ஆனால் நானே ஒரு ஏழைப் பெண்மணி. என்னிடம் இருப்பதெல்லாம் சில இரைச்சித் துண்டுகளும் சிறிதளவு ரொட்டியும் தான்; மேலும் ஒரு முக்கியமான விருந்தாளி இன்று இரவு உணவுக்கு வர இருப்பதால் அவருக்கு இதைக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்” என்று பதிலளித்தாள்.

அவர் “பரவாயில்லை, எனக்கு புரிகிறது. மனமார்ந்த நன்றி” என்று கூறிவிட்டு, இருவரும் அங்கிருத்து புறப்பட்டனர்.

அவர்கள் திரும்பிப் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த அவளுக்கு, மனதில் ஏதோ ஒரு வலி தோன்றியது.   

ரூத் “ஐயா! நில்லுங்கள்” என்றாள்.

இருவரும் அவளை திரும்பிப் பார்த்தனர். ரூத் அவர்களை நோக்கி ஓடினாள்.

பிறகு அவள் “நீங்கள் இந்த உணவை எடுத்துக் கொள்ளவும்;  என் விருந்தாளிக்குக் கொடுப்பதற்கு நான் வேறு ஏதாவது ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறி தன் கையில் இருந்த பையை அவர்களிடம் கொடுத்தாள்.

அப்பெண் நடுங்கிக் கொண்டே “மிகவும் நன்றி!” என்று கூறினார்.

ரூத் “சற்று இருங்கள், என்னிடம் வீட்டில் இன்னொரு மேற்சட்டை இருக்கிறது என்று கூறி, அதைக் கழற்றி அந்தப் பெண்ணின் தோள்களில் போட்டாள்.”  தனது விருந்தாளிக்கு கொடுக்க உணவும் இல்லை;  குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மேற்சட்டையும் இல்லை. ஆனாலும், ரூத் மன நிறைவுடன் புன்சிரிப்போடு வீட்டை நோக்கிச் சென்றாள்.

அப்பெண் “மிகவும் நன்றி!” என்று பதிலளித்தார்.

வீட்டிற்கு அருகில் வந்தவுடன் ரூத் பதற்றம் அடைந்தாள். கடவுள் அவளைப் பார்க்க வரும் போது, கொடுக்க ஒன்றுமே இல்லையே என வருத்தப் பட்டாள். வீட்டுச் சாவியை தேடிக் கொண்டிருந்த சமயம், அஞ்சல் பெட்டியில் மற்றொரு கடிதத்தை கவனித்தாள். “தபால்காரன் ஒரே நாளில் இரண்டு முறை வர மாட்டானே” என்று நினைத்துக் கொண்டே கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள்.

“அன்புள்ள ரூத்! உன்னை மறுபடியும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அருமையான உணவிற்கு மிக்க நன்றி; அழகான மேற்சட்டைக்கும் மிக்க நன்றி.

என்றும் அன்புடன், கடவுள்.”

தற்சமயம் மேற்சட்டையும் இல்லை, இன்னும் குளிராக தான் இருந்தது; ஆனால் ரூத் அதை கவனிக்கவில்லை.

மனித குலத்திற்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவையாகும். நாம் செய்யும் ஒவ்வொரு சேவையும் கடவுளின் பாதங்களில் சமர்ப்பிக்கப்படும் ஒரு பூவாகும்.

நீதி:

பெற்றுக் கொள்பவர்களை விட கொடுப்பவர்களே இன்னும் பாக்கியம் செய்தவர்கள். பிறருக்கு உதவுவதும், நம்மிடம் உள்ளதைப் பிறருக்குப் பகிர்ந்தளிப்பதும் தான் உண்மையான மகிழ்ச்சிக்கான ரகசியம். எப்பொழுதெல்லாம் நாம் உதவி தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்கிறோமோ, அப்பொழுதெல்லாம் நாம் உண்மையாகவே கடவுளுக்கு சேவை செய்கிறோம். ஆகவே நாம் நம்மிடம் உள்ளவற்றை பிறருக்குப் பகிர்ந்தளிப்பதை வழக்கமாக்கிக் கொள்வோம். இது படிப்படியாக நம்முள் நல்லொழுக்கத்தை வளர்த்து, உதவி பெறுபவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

மொழி பெயர்ப்பு:

அன்னப்பூரணிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE