Archive | August 2015

சிந்தனையற்ற செயல்

நீதி – உதவி

உப நீதி – ஆணவம்

நன்கு படித்த விஞ்ஞானி ஒருவர்.. தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது..

yojanaiyatra seyal1

yojanaiyatra seyal2

கடை ஏதும் இல்லை.. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்ததால், அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்..
அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் தவறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டன..

இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தார்..

yojanaiyatra seyal3அப்பொழுது கிழிந்த ஆடைகளோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன்,  இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான்.  இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி “ஒன்றும் இல்லை”  நீங்கள் போகலாம்..என்றார்.

அந்த வழிப்போக்கன் கிளம்பத் தயாரானான்… அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.. இந்தக் குட்டையில் இவனை விட்டால் வேறு யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவனை இறங்கச் சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்தக் குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்துத் தாருங்கள் என்றார்..

ஓ.. இது தான் உங்கள் பிரச்சனையா..? நான் அந்தக் குட்டையில் இறங்கி எடுத்துத் தர ஆட்சேபனை ஏதும் இல்லை..

ஆனால் அதை விட ஒரு சுலபமான வழி இருக்கிறது..

மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்டைக் கழற்றி இந்தச் சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள்
வாங்கி எல்லாச் சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.

தான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் கூட,  இந்தச் சுலபமான வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்..yojanaiyatra seyal4

இவருக்கு மூளை இல்லை என்று தப்பாக நினைத்ததற்கு வருந்தி வெட்கத்தில் தலை குனிந்தார்..

நீதி:

யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.,

ஆம்..நண்பர்களே..,

உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;

உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு.

ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம்.

அதே ஒரு தீக்குச்சியினால்
பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.

நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்

எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.

நல்லதையே நினைப்போம்..

நாளும் நல்லதையே செய்வோம்.

Advertisements

குருவின் பாதங்களில் சரணாகதி

நீதிஅன்பு / சரணாகதி 

உபநீதி திடநம்பிக்கை / பக்தி

surrendering at the feet of the guru picture 1

ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. தினமும் காலை, நாள் தவறாமல் மீனவன் ஒருவன் மீன்களைப் பிடிக்க வலையை விரிப்பான்; இது மீன்களின் ஆச்சத்திற்கு காரணமாக இருந்தது. அவன் வலையில் பல மீன்கள் மாட்டிக் கொண்டு தவிக்கும். சில தூங்கிக் கொண்டிருக்கும், சில எதிர்ப்பாராமல் சிக்கிக் கொண்டு தவிக்கும், சில ஒளிந்து கொள்வதற்கு இடம் தெரியாமல் பலியாகும் மற்றும் சில அபாயம் என்று தெரிந்தும் தப்பிப்பதற்கு வழி தெரியாமல் இருக்கும்.

அவற்றில் ஒரு மீன் எப்பொழுதும் மனநிறைவோடு சந்தோஷமாக இருந்தது. அது வலையைக் கண்டு பயப்படவில்லை; உற்சாகமாக, கலகலப்பாக இருந்தது. மற்ற மீன்களுக்கு ஆச்சரியம்!!! அனுபவமும், விவேகமும் இருந்தும் கூட ஒன்றுமே புரியவில்லையே என்ற ஆதங்கம்!!!  ரகசியம் என்னவென்று அறிய ஆவலாக இருந்ததனால், ஒரு நாள் மாலை, அந்த சிறிய மீனிடம் சென்று மற்ற மீன்கள் பேசத் தொடங்கின.

நாளை மீனவன் வலையை விரிக்க மீண்டும் வருவானே? உனக்கு பயமில்லையா? என்று அவை கேட்டன.

அதற்கு சிறிய மீன், “நான் அந்த வலையில் மாட்டிக் கொள்ள வாய்ப்பே இல்லை” என்றது.

surrendering at the feet of the guru picture 4

“உன் தன்னம்பிக்கைக்கும் வெற்றிக்கும் என்ன காரணம்?” என்று கேட்ட பொழுது அந்தச் சிறிய மீன் மிக அழகாகப் பதிலளித்தது.

“எளிமையான விஷயம். வலையை விரிக்கும் பொழுது மீனவனின் காலடியில் சென்று விடுவேன். சிக்கிக் கொள்ள வாய்ப்பே இல்லை; ஏனெனில் வலையை அங்கு விரிப்பது கடினம்”. வியக்கத்தக்க ஆனால் எளிமையான தீர்வு அல்லவா!!!

 நீதி:

surrendering at the feet of the guru picture 5

கடவுள் மேல் நம்பிக்கை வைத்து, மன நிறைவோடு செயற்பட்டால், வெற்றி நிச்சயம். முடிந்த அளவு முயற்சிகளை எடுத்து, விளைவுகள் அனைத்தையும் வல்ல இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும். அப்படி வாழ்க்கையை நடத்தி வந்தால், சோதனைகளையும், துன்பங்களையும் சமாளிக்கும் திறனும் தானாகவே வந்து விடும். திருவடியே சரணாகதி என்ற மனப்பான்மையுடன் முயற்சிகளை செய்தால் எல்லாமே நன்றாக முடியும்.

இறைவன் திருவடியே நமது கண்கள்

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source:

http://saibalsanskaar.wordpress.com

அன்பும் பரிவும் மனிதனுக்கு அவசியமானவை

be good to all 1

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் .

நீதிஅன்பு

உப நீதிகாருண்யம் / மன்னிக்கும் குணம் 

ராமு என்ற ஒரு மாணவன் இருந்தான். படிப்பில் சிறந்தவனாகத் திகழ்ந்ததோடு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு மரியாதை கொடுப்பதிலும் அவனிடம் ஒரு பணிவு மனப்பான்மை இருந்தது. வகுப்பில் மற்ற மாணவர்களை விட ராமு புத்திசாலியாக இருந்தான்; எல்லோருடனும் அன்பாகப் பழகி வந்தான். இம்மாணவனின் இயல்பான தன்மை மற்றவர்களை ராமுவிடம் ஈர்த்தது; அவனை மிகவும் நேசித்தனர். அதே வகுப்பில் சோமு என்ற மற்றொரு மாணவன் இருந்தான். இவன் படிப்பில் ஆர்வம் இல்லாததோடு பள்ளி நேரத்தில் எப்பொழுதும் விளையாட்டில் விருப்பம் கொண்டிருந்தான். மற்ற மாணவர்களைத் துன்புறுத்தியும், பெற்றோரிடம் மரியாதை இல்லாமலும் நடந்து கொண்டான். சோமு ராமுவையும் துன்புறுத்தி, வகுப்பில் மற்றவர்கள் முன் அவமானப்படுத்தி வந்தான்.

be good to all 1 Aசோமு இதையெல்லாம்  செய்த போதிலும் ராமு மேலும் மேலும் சிறந்து விளங்கினான்; எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்தான்.

ராமுவின் எட்டாவது பிறந்த நாளுக்கு அவனது பெற்றோர் ஓர் அழகிய பேனாவைப் பரிசாக அளித்தனர். அவன் பாடங்களை விரைவாக எழுத அப்பேனா உறுதுணையாக இருந்தது. இதைக் கண்டு பொறாமை கொண்ட சோமு ராமுவிடம், “இந்த பேனா எங்கிருந்து கிடைத்தது? வாங்கியதா?” என விசாரித்தான். ராமுவும் பிறந்த நாள் பரிசாக பேனாவை பெற்றோர்கள் அளித்ததாகக் கூறினான்.  சோமு இதனால் கோபமும் பொறாமையும் கொண்டான். அவனுடைய பெற்றோர் அவனுக்கு இது போன்ற பரிசு ஏதும் கொடுத்ததில்லை. பேனாவைத் திருடும் எண்ணம் கொண்டு, பள்ளிக்கூட இடைவேளையின் பொழுது, சோமு ராமுவின் பேனாவைத் திருடி தன்னுடைய பையில் வைத்துக் கொண்டான்.

வகுப்புக்கு வந்த ராமு பேனா காணாததால் ஆசிரியரிடம் புகார் செய்தான். வகுப்புத் தலைவன் எல்லோருடைய பைகளையும் பரிசோதனை செய்து,be good to all 1b சோமுவின் பையிலிருந்து அந்த பேனாவை வெளியே எடுத்தான். ஆசிரியர் சோமுவைக் கோபித்துக் கொண்டார். ஒன்றும் கூற முடியாமல் அவன் கண்ணீருடன் நின்றான். இதைக் கண்ட ராமு அவனிடம் கருணை கொண்டு, ஆசிரியரிடம் பேனா கிடைத்து விட்டதால் சோமுவைத் தண்டிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டான். சோமுவின் மனம் மாறியது. ராமு எவ்வளவு நல்ல பையன் என்பதை சோமு புரிந்து கொண்டான். புதிய நண்பன் கிடைத்ததை எண்ணி ராமுவும் பெருமிதம் கொண்டான். சோமு தன்னைக் கஷ்டப்படுத்திய போதும், ராமு அன்பையே அவனுக்குப் பதிலாக கொடுத்தான். அன்றிலிருந்து அவனும் ராமுவுடன் நட்புறவுடன் பழக ஆரம்பித்தான் ….

நீதி:

மற்றவர்கள் தீங்கு செய்தாலும் முடிந்த அளவு நாம் அன்பையும், பரிவையும் பகிர்ந்து கொண்டால், அவர்கள் நல்லவர்களாக மாற வாய்ப்பு இருக்கின்றது. அன்பு என்ற மனப்பான்மை பெருஞ் செல்வாக்குடைய ஒரு கருவி. அதை நல்ல மாற்றங்களைக் காண பயன்படுத்தினால், வெற்றி உறுதி; நமக்கு மட்டுமில்லாமல் சமூகத்திற்கும் பயன்படும். எந்த மாற்றத்தை நாம் பார்க்க விரும்புகிறோமோ, அந்த மாற்றத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும். பேசிப் பிரயோஜனம் இல்லை, முனைந்து செயல்பட வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source:

http://saibalsanskaar.wordpress.com

 

நாய்குட்டிகள் விற்பனைக்கு!!!

puppies for sale picture 1 puppies for sale picture1a

நீதிநன் நடத்தை / கருணை / அன்பு

உபநீதிபச்சாதாபம் / அக்கறை

ஒரு விவசாயி சில நாய்க்குட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தார். அதை விளம்பரம் செய்வதற்காக ஒரு பலகையில் சாயம் பூசி, விவரத்தை எழுதி, தனது முற்றத்தில் ஆணி அடித்துக் கொண்டிருந்தார். வேலையை முடிக்கும் சமயம், ஒரு சிறுவன் சட்டையை வந்து இழுத்தான். யார் என்று பார்க்கும் பொழுது, “நான் உங்களிடமிருந்து ஒரு நாய்க்குட்டி வாங்கிக் கொள்ள வேண்டும்”  என கேட்டான்.

சரி, ஆனால் நல்ல இனத்தைச் சேர்ந்த நாய்க்குட்டி என்பதனால் விலை கொஞ்சம் அதிகமாக இருக்குமே என விவசாயி பதிலளித்தார். உடனே அச்சிறுவன் தலை குனிந்தவாறு, சட்டைப் பையிலிருந்து சில்லறைக் காசுகள் எடுத்தான். பிறகு, விவசாயியிடம், “நான் நாய்க்குட்டிகளைப் பார்பதற்கு மட்டும் இந்த காசுகள் போதுமானதா?” என கேட்டான்.

“கட்டாயமாக” என பதில் வந்தது. puppies for sale picture 2நாய் வீட்டிலிருந்து மோஜோவுடன் நான்கு அழகான நாய்க்குட்டிகள் ஓடி வந்தன. அந்தச் சிறுவனுக்கு அவ்வளவு ஒரு சந்தோஷம்.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இன்னொரு நாய்க்குட்டி நடக்க முடியாமல் கொஞ்சம் மெதுவாக வந்து கொண்டிருந்தது. “எனக்கு இந்த நாய்க்குட்டி தான் வேண்டும்” என்று கேட்டான். விவசாயி ஆச்சரியத்துடன், “இந்த நாய்க்குட்டியால் வேகமாக ஓட முடியாது. மற்றவை போல் விளையாடவும் முடியாது” என சொன்னார். அச்சிறுவன் காற்சட்டையை நகர்த்தி ஊன்றுக்கோல் போல காலில் இரும்பு வளையம் காலணியுடன் இணைந்திருப்பதைக் காண்பித்தான். எனக்கும் வேகமாக நடக்க முடியாது. என்னை புரிந்து கொள்ளும்படி யாராவது வேண்டும் என்று கூறினான்.

நீதி

மற்றவர்களை புரிந்து கொண்டு அனுதாபம் என்ற மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான மக்களுக்கு அந்தப் புரிதல் தான் வேண்டும். பிறர் நலத்தை எண்ணிப் பார்க்கும் பரிவும், புரிதலும் இருந்தால், அவர்கள் தொலைத்து விட்ட தன்னம்பிக்கையும், தனித்தன்மையையும் மறுபடியும் அவர்களிடம் வந்து சேருவதற்கு ஒரு வாய்ப்பை நாம் ஏற்படுத்தலாம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source:

http://saibalsanskaar.wordpress.com

விலை உயர்ந்த சால்வை

an expensive shawl picture 1

நீதிநன் நடத்தை

உபநீதிவேற்றுமை உணர்வு

முன்னொரு காலத்தில், தன்னல வாழ்வைத் தவிர வேறொன்றுமே இல்லை என்ற மனப்பான்மையுடன் ஒரு அரசர் இருந்தார். அவர் ஒரு சுயநலவாதி. குடி மற்றும் வேறு அனைத்து கெட்ட பழக்கங்களும் இருந்தன. தன் பிரதம மந்திரியிடம் “மானிட ஜன்மம் கிடைப்பது துர்லபம்; ஆதலால் எல்லா சுகங்களையும் இருக்கும் பொழுதே அனுபவித்து விட வேண்டும்” எனக் கூறி வந்தார்.

பிரதம மந்திரி கண்ணியமும் நியாயமும் உள்ள மனிதராகத் திகழ்ந்தார். அரசரின் செயல்களைக் கண்டு அவர் மிக கவலைப் பட்டார். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அவர் அரசருக்கு புத்திமதி கூறி வந்தார். ஆனால் அரசர் அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை. குடி போதையில் இருக்கும் போது, அரசரால் நல்லவற்றுக்கும் தீயவற்றுக்கும் வேறுபாடு அறிய முடியவில்லை.

ஆதலால் ராஜ்ஜியத்தில் உள்ள மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தார். மக்கள் பயந்து பயந்து வாழ்ந்து வந்தனர். அரசர்  கொடூரமாக நடத்தியதால் அவரை எதிர்க்கும் தைரியம் எவருக்குமே இருக்கவில்லை.

an expensive shawl picture 2ஒரு நாள் பிரதம மந்திரியின் ஏதோ ஒரு செயலால் மிகவும் ஆனந்தப்பட்ட அரசர் அவருக்கு ஒரு விலையுயர்ந்த சால்வையைப் பரிசாக அளித்தார். ராஜ தர்பாரிலிருந்து வெளியேறிய மந்திரி அச்சால்வையால் தன் மூக்கைத் துடைத்துச் சுத்தப் படுத்திக் கொண்டார்.

தர்பாரில் இருந்த அரசவையினர் ஒருவர் அதைப் பார்த்து விட்டார்.

மந்திரியிடம் பொறாமை கொண்ட அவர் அரசரிடம் பிரதம மந்திரியைப் பற்றி புகார் செய்தார். “தாங்கள் கொடுத்த சால்வையை மந்திரியார் அவமானப் படுத்தி விட்டார்” எனக் கூறினார். எங்கனம் என அரசர் விசாரித்த போது அந்த அரசவையினர் “மந்திரி தன் மூக்கைச் சுத்தம் செய்ய சால்வையை உபயோகித்தார்” என்றார்.

கோபமடைந்த அரசர் உடனே மந்திரியை வருமாறு ஆணை இட்டார். “என்ன தைரியம் இருந்தால் நான் கொடுத்த பரிசான சால்வையால் தாங்கள் மூக்கைச் சுத்தப் படுத்தலாம்” எனக் கேட்டார். மந்திரி பணிவுடன் “தாங்கள் சொல்லிக் கொடுத்தபடியே நான் நடந்து கொள்கிறேன்” எனச் சொன்னார் “நான் அவமானப்படுத்தச் சொல்லிக் கொடுத்தேனா? எவ்வாறு? என அரசர் விசாரித்தார்.

அதற்கு மந்திரி, “தங்களுக்கு ஈடில்லா மானிட ஜன்மம் கிடைத்துள்ளது. அது இந்த சால்வையை விடச் சிறந்தது. ஆனால் அந்த வாழ்க்கையை முறைப்படி வாழாமல் தாங்கள் தீய செயல்களில் ஈடுபட்டு வீணடிக்கிறீர்கள். அந்த நடத்தை தான் இந்த சால்வையை உபயோகிக்கும் முறையை எனக்குக் கற்றுக்கொடுத்தது”.

மந்திரி சரியான இடத்தில் சரியான முறையில் பேசினார். அரசர் தன் தவறை உணர்ந்து வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டார்.

நீதி: நற்செயல், தீயச் செயல் இவற்றின் வேறுபாட்டை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதை குழந்தைகளுக்கு இளமையிலேயே கற்றுக்கொடுத்தால் பிற்காலத்தில் நற்புத்தியுடன் நேர்மையான வாழ்க்கையை வாழ்வார்கள்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source:

http://saibalsanskaar.wordpress.com