Archive | November 2022

சுய நம்பிக்கை கொள்ளுங்கள்

நீதி: உண்மை

உப நீதி: நம்பிக்கை, சுய பரிசோதனை

ஒரு மனிதன் தன் கனவை நனவாக்க முடிவு செய்தான்; ஆனால் அதை செய்வதற்கு அவனிடம் போதுமான வலிமை இல்லை.

அதனால் அவன் தன் தாயிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டான்.

அதற்கு தாய், “கண்ணே! உனக்கு மகிழ்ச்சியுடன் உதவி செய்வேன்;  ஆனால் என்னிடம் ஒன்றுமில்லை. என்னிடம் இருந்த அனைத்தையும் உன்னிடம் முன்பே கொடுத்து விட்டேன்” என்றார்.

அவன் ஒரு அறிவாளியிடம் சென்று, “ஆசிரியரே! சொல்லுங்கள்! வலிமையை நான் எங்கிருந்து பெற முடியும்?” என்று கேட்டான்.

அவர் “அது எவரெஸ்ட்டில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது; ஆனால் பனிக் காற்றைத் தவிர வேறு ஒன்றையும் என்னால் அங்கு காண முடியவில்லை. நான் திரும்பி வரும் போது என் நேரத்தை மீட்டெடுக்க முடியாத அளவுக்கு வீணாகி விட்டது” என்று கூறினார்.

அவன் ஒரு முனிவரிடம் சென்று, “என் கனவை நனவாக்குவதற்கான வலிமையை நான் எங்கே பெற முடியும்?” என்று கேட்டான்.

அதற்கு அவர், “உன்னுடைய பிரார்த்தனையில் மகனே. உன் கனவு போலியாக இருந்தால், நீ அதை புரிந்து கொண்டு உன் பிரார்த்தனையில் அமைதி காண்பாய்” என்று கூறினார்.

அவன் மேலும் பலரைக் கேட்ட போது, வந்த பதில்கள் அவனை மிகவும் குழப்பம் அடையச் செய்தன.

அவன் குழம்பியிருப்பதை பார்த்து வழியில் சென்ற ஒரு முதியவர் “நீ ஏன் மிகுந்த குழப்பம் அடைந்திருக்கிறாய்?”  என்று கேட்டார்.

அவன் “ஆம் பெரியவரே! எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அதை நனவாக்குவதற்கான வலிமையை எங்கே காண்பதென்று எனக்குத் தெரியவில்லை. எவரெஸ்ட்டிலிருந்து நரகம் வரை எல்லோரையும் கேட்டு விட்டேன்; ஆனால் எனக்கு உதவக் கூடியவர் எவருமில்லை” என்றான்.

அந்த முதியவரின் கண்களில் ஒளி தெரிந்தது. அவர்  “நீ அனைவரையும் கேட்கவில்லை” உன்னையே நீ கேட்டாயா?” என்று கூறி

“நீ உன் கனவை நம்புகிறாயா? அதை நீ நம்புவது என்பது 100% உன் மீது நம்பிக்கை வைப்பதாகும். பிறர் என்ன சொல்வாரோ, என்ன நினைப்பாரோ என்று சந்தேகப்படக் கூடாது. உன்னைப் பற்றிய இரணடாம் கணிப்பு இருக்கக் கூடாது. உன்னால் செய்ய முடியும் என்று நீ நினைப்பதை விட, அதிகமாக உன்னால் செய்ய முடியும். உன்னையே நீ முழுவதும் நம்பாவிட்டால் வேறு எவர் நம்புவார்” என்று அறிவுரை கூறினார்.

நீதி:

ஒவ்வொருவரும் தங்களின் மேல் நம்பிக்கை வைப்பது என்பது வாழ்க்கையில் இருக்கக் கூடிய முக்கியமான விஷயங்களில் ஒன்று. அது உங்கள் நம்பிக்கையை அதிகரித்து, பிறர் உங்களை அதிகம் நம்புவதற்கு வழி செய்து, உங்களின் முடிவு எடுக்கும் திறமையை மிக எளிதாக்கும். உங்களை நம்புவதற்கு உங்களுக்குத் தேவை சிறிது முயற்சியும், சுயபற்றை உண்டாக்கி உள்முகமாகப் பார்க்கும் திறமையைக் கண்டறிவதும் ஆகும். சுய பரிசோதனை, சுயபற்று மற்றும் நம்பிக்கை மட்டுமே அறியாமையிலிருந்து வெளியே வருவதற்கான வழியாகும். உங்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ளுதல், உங்களின் முடிவு எடுக்கும் திறமையையும், தன்னம்பிக்கையையும் அதிகமாக்க உதவும்.

துன்பங்கள்தான் விவேகம் அடைவதற்கான வாய்ப்புகளை அளிக்கும்”. – டாக்டர் அப்துல் கலாம்.

மரத்தில் அமர்ந்திருக்கும் பறவை கிளை முறிந்துவிடுமோ என்று எப்போதும் பயந்ததில்லை. ஏனென்றால் அதன் நம்பிக்கை கிளையின் மீது இல்லை; மாறாக அதன் இறக்கைகளின் மீது உள்ளது.

எப்போதும் உங்களை நம்புங்கள்.

மொழி பெயர்ப்பு,

அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

நீங்கள் கடவுளா

நீதி: உண்மை

உப நீதி: ஏற்றுக் கொள்ளுதல், விழிப்புணர்வு        

புத்தர் முதன் முதலில் அறிவொளி அடைந்த போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி “நீங்கள் கடவுளா?”

அதற்கு அவர் “இல்லை” என்று பதிலளித்தார்.

பிறகு வந்த கேள்வி “நீங்கள் முனிவரா?”

அவர் “இல்லை” என்றார்.

“பிறகு நீங்கள் என்ன?” என்ற கேள்விக்கு,

அவர் “நான் விழித்துக் கொண்டிருக்கிறேன்” என்று பதில் கூறினார்.

புத்தர் “நீங்கள் கடவுளா?” என்ற கேள்விக்கு உறுதியாக பதில் அளிக்காத காரணம், கேள்வி கேட்டவருக்கு கடவுள் என்ற வார்த்தைக்குப் பொருளும், கடவுளைப் பற்றிய ஒரு கருத்தும் இருந்தது; அப்படியென்றால் அது கடவுளாக இருக்க முடியாது.

கடவுளைப் பற்றி அவன் உணர்ந்து கொள்வதற்காக, புத்தர் அவனுக்கு ஒரு குறிப்பு கொடுத்தார்.

நீதி:

ஒவ்வொரு நிமிடமும் விழிப்புணர்வுடன் இருப்பதில் நாம் கவனம் கொள்ள வேண்டும். நம்மால், ஒருவரை நம்மிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியும் போது, வேற்றுமை உருவாகிறது.

அறிவார்ந்த புத்தர், கடவுள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார் என்றும், விழிப்புணர்வு என்பது மாயைக்கு அப்பாற்பட்டு கடவுளை அறிவது என்றும் மிக அழகாக விவரிக்கிறார். அறிவொளி என்பது “அறியாமை என்ற உறக்கத்திலிருந்து விழிப்பதாகும்”.

மொழி பெயர்ப்பு,

அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

நீதி நிறைந்த சிறு கதைகள்

சேவல் செய்த கடைசித் தவறு

ஓரிரவில் இரண்டு திருடர்கள் ஒரு பண்ணைக் கட்டிடத்தின் அருகில் திரிந்து கொண்டிருந்தனர். கட்டிடத்திற்குள் ஏதோ ஒன்று நகர்வது போல் அவர்களுக்குக் கேட்டது. மிக ஜாக்கிரதையாக அவர்கள் அது என்ன என்று பார்ப்பதற்காக மேலே ஏறினர். அது ஒரு சேவல். “ஆஹா! நாளை இரவு சாப்பாட்டிற்கு இது சரியாக இருக்கும்” என்று திருடர்கள் கத்தினர்.

அவர்கள் அதைப் பிடித்து இழுத்துக் கொல்ல முற்படும்போது அந்தச் சேவல் பயத்தில் அலறியது. அது  “தயவு செய்து என்னைக் கொல்லாதீர்கள். நான் உங்களுக்கு உபயோகமாக இருப்பேன். நான் தினமும் அதிகாலையில் உங்கள் வேலையைக் குறித்த நேரத்தில் தொடங்குவதற்காக எழுப்பி விடுவேன்”என்றது.

“அதை தான் நாங்கள் விருப்பப் படவில்லை” என்று அந்தத் திருடர்கள் கூச்சலிட்டனர். திருடர்கள் “நீ மக்களை எழுப்பி விட்டால், நாங்கள் அவர்கள் வீடுகளில் திருடும்போது எங்களைப் பிடித்து விடுவார்கள்” என்றனர்.

 அதுதான் அந்தச் சேவலின் இறுதி நாளாக இருந்தது.

 நீதி:

“எங்கே சிந்திக்கும் திறன் அற்றுப் போகிறதோ, அங்கே தற்பெருமையாக பேசுதல் ஆரம்பமாகிறது.” – ஜப்பானியப் பழமொழி

_____________________________________________________

பொறாமை பிடித்த ஆடு

ஒரு ஆடும் ஒரு கழுதையும் ஒரே பண்ணையில் வாழ்ந்து வந்தன. ஆடு தன் உணவைத் தானே தேடிக் கொள்ளும். ஆனால் கழுதையை மிகவும் கடினமாக வேலை வாங்குவதால், பண்ணையார் கழுதைக்குத் தானே உணவளித்தார். கழுதையின் கடினமான உழைப்பை மறந்து, ஆடு அதன் மேல் பொறாமை அடைந்தது. கழுதை வேலை செய்வதை நிறுத்தி விட்டால் தனக்கு உணவு கிடைக்கும் என்று அது நினைத்தது. அதனால் அது கழுதையை ஒரு பெரிய குழிக்குள் தள்ளிவிட்டது. கழுதை மிகவும் காயம் அடைந்தது.

பண்ணையார் விலங்கு மருத்துவரை அழைத்து கழுதையைப் பரிசோதிக்கச் செய்தார். கழுதையை உடனடியாக குணப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு ஆட்டு சூப் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார்.

கழுதையின் உணவைத் தான் அடைய வேண்டும் என்று எண்ணிய ஆடு, தானே அந்தக் கழுதைக்கு உணவானது.

நீதி: “பொறாமையே ஆத்மாவைப் பீடித்த புண்ணாகும்”  – சாக்ரடீஸ்

____________________________________________________

சாப்பிடுவதற்கு முன் கவனி

உங்களுக்கெல்லாம் தெரியும் நாய்கள் எப்படிப் பட்டவை என்று. நீங்கள் ஒரு துளி உணவை மேசையிலிருந்து கீழே போட்டால், அவை அது என்ன என்று தெரியும் முன்பே விழுங்கி விடும். ஆனால் சில சமயம் அப்படிச் செய்திருக்க வேண்டாமோ என்று நினைக்கும்.

ஃபானி என்ற பண்ணை நாயை, அதனுடைய எஜமானர் ஜோஷ் தன் குடும்பத்தினருடன் உணவருந்தும் போது வீட்டினுள் அனுமதிப்பதில்லை. ஒரு நாள் அது யாரும் பார்க்காத  போது, வீட்டினுள் நுழைந்து மேசையின் அடியில் ஒளிந்து கொண்டது.

திடீரென்று அதன் அருகில் ஒரு பெரிய உணவுத் துண்டு விழும்வரை அது மிகவும் அமைதியாக இருந்தது; யோசிக்காமலேயே அதை உடனே விழுங்கி விட்டது. பிறகு பெரிதாக ஊளையிட்டபடி, தன் வயிற்றை ஒரு பாதத்தினால் பிடித்துக் கொண்டே வெளியில் ஓடியது. அந்தக் குடும்பம் ஒரு மிகவும் சூடான கறியை இரவு உணவாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

நீதி: “ஆசை கண்மூடித்தனமானது; பேராசை மன நிறைவை உண்டாக்காது.” – ஒரு சீனப் பழமொழி

____________________________________________________

ஒரு நல்ல திருப்பம் இன்னொன்றுக்கு வழி வகுக்கும்.

ஃப்ரெட் என்ற விவசாயி ஒரு இளம் கழுகு, பொறியில் மாட்டியிருப்பதைப் பார்த்தார். அவ்வளவு அழகான பறவை, வலியில் துடிப்பதைப் பார்த்துத் தாங்க முடியாமல், அவர் அதை விடுவித்தார். சில நாட்கள் கழித்து அவர் ஒரு பழைய சுவரின் நிழலில், மதிய உணவாக ரொட்டியும், பாலாடைக் கட்டியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று அந்தக் கழுகு, தன் இறக்கைகளை அடித்துக் கொண்டு, தாழப்  பறந்து வந்து அவரின் தலையிலிருந்த குல்லாவைத் திருடிச் சென்றது. தரையிலிருந்து சிறிது மேலே பறந்து செல்லும் போது, ஃப்ரெட் அதைத் துரத்திக் கத்திக் கூச்சலிட்டதும், அது குல்லாவைக் கீழே போட்டது. ஃப்ரெட் மறுபடியும் அந்தக்குல்லாவைத் தலையில் அணிந்து, தன் மதிய உணவை முடிப்பதற்காக மிகுந்த சிரமத்துடன் திரும்பினார். ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் எந்தப் பழைய சுவரின் நிழலில் அமர்ந்திருந்தாரோ, அந்தச் சுவர் இடிந்து விழுந்திருந்தது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொண்டார்கள்.

நீதி: “ நீங்கள் நன்மை செய்தால், உங்களுக்கு நன்மை வந்து சேரும்,” – ஒரு டானிஷ் பழமொழி

மொழி பெயர்ப்பு,

அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

பிரச்சனைகளை சுமக்கும் மரம்

நீதி: சரியான நடத்தை / உண்மை

உப நீதி: பிரச்சனைகளை விட்டு விலகுதல்

ஒரு மனிதர் தனது பழைய பண்ணை வீட்டை பழுதுபார்க்க, ஒரு தச்சரை பணியில் அமர்த்தினார். தச்சருக்கு முதல் நாளே வேலை பார்ப்பதில் பல தடைகள் ஏற்பட்டன. காலையில் காரை ஓட்டிச் செல்லும் போது, சக்கரத்தில் பிளவு ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் தாமதம் ஆகியது. மேலும் அவருடைய மின்சார ரம்பம் வேலை செய்யவில்லை; இறுதியாக, அவருடைய பழைய வண்டியும் கிளம்பவில்லை.

அம்மனிதர் தச்சரை வீடு வரை அழைத்து சென்ற போது, தச்சர் வழி முழுவதும் மெளனமாக, ஆழ்ந்த வருத்தத்துடன் இருந்தார். அன்றைய நிகழ்வுகளால் அவர் கவலையாக இருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. வீடு அருகே வந்ததும், குடும்பத்தினரை சந்திக்க தச்சர் அம்மனிதரை உள்ளே அழைத்தார்.

அவர்கள் வாசற் கதவை நோக்கிச் செல்லும் போது, தச்சர் ஒரு மரத்தின் அருகே சிறிது நேரம் நின்று, கிளைகளின் நுனிகளை இரு கைகளாலும் தொட்டுப் பார்த்தார்.

வீட்டுக் கதவை திறந்த பின்னர் தச்சரிடம் ஒரு அற்புதமான மாற்றத்தை அவர் கண்டார். தச்சர் புன்சிரிப்புடன் தனது இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் அன்புடன் அணைத்துக் கொண்டார். அனைவருக்கும் அவரை அறிமுகம் செய்தார். பின்னர் தச்சர் அவரை வழி அனுப்ப வாகனம் வரை உடன் வந்தார்.

அவர்கள் அம்மரத்தை கடந்து சென்ற போது, உடன் வந்த மனிதரால் தனது ஆர்வத்தை அடக்க முடியவில்லை. தச்சரிடம் தான் முன்பு கண்டதை பற்றி விசாரித்தார்.

அதற்கு தச்சர் “ஓ அதுவா, அதுதான் என் பிரச்சனைகளை சுமக்கும் மரம்,” என்று பதிலளித்தார். பிறகு “வேலையில் பிரச்சனைகள் இருக்கும். அவற்றை தடுக்க இயலாது என்பதை நான் அறிவேன்; ஆனால் நிச்சயமாக பிரச்சனை, வீட்டில் இருக்கும் என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இல்லை. அதனால் தினமும் இரவு வீட்டுக்கு வரும் முன், எனது பிரச்சனைகளை இந்த மரத்தில் தொங்கவிட்டு விடுவேன். பின்னர் மறுநாள் காலையில், நான் அவற்றை மீண்டும் எடுத்துச் செல்வேன்” என்றார்.

அவர் சிரித்துக் கொண்டே “வேடிக்கையான விஷயம் என்னவென்றால், முந்தைய இரவு நான் பிரச்சனைகளை தொங்கவிடும் போது நினைவில் இருந்த அளவுக்கு, மறுநாள் அவற்றை எடுத்துச் செல்ல வெளியே வரும்போது இருப்பதில்லை” என்றார்.

நீதி:

பிரச்சனைகளை விட்டு விலகி செல்லுதல் என்பது நாம் ஒரு முறை அல்ல; ஒவ்வொரு நாளும், மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய ஒன்றாகும். கடந்த காலத்தை மறந்து, நம்மை நாமே மன்னித்து, மற்றவர்களையும் மன்னித்து முன் நோக்கி செல்ல வேண்டும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் முன்னேறிச் செல்லும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொண்டால், மன உறுதியுடனும், தைரியத்துடனும் வாழ்க்கையை எதிர்கொள்ள, அது நமக்கு உதவும். கடின உழைப்புடன் இந்த குணங்கள் இருந்தால், நம் வாழ்வில் எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும் சமாளித்து, சிறந்த மிளிர்வுடன் வெளிவர முடியும்.

மொழி பெயர்ப்பு

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE