Tag Archive | Children’s stories, Human value stories in Tamil, Moral value stories in Tamil, Needhi Kadhai, Needhi Kadhaigal

நூதனம் திறவுகோல் ஆகும்

நீதி: நன்னடத்தை

உபநீதி: விடா முயற்சி, நன்னம்பிக்கை, புதுமை

எனக்கு 20 வயதாகி, பட்டப் படிப்பை அப்போது தான் முடித்திருந்தேன்.  என் தந்தையிடம் சென்று வேலை வாய்ப்புகளை எவ்வாறு அணுக வேண்டும் என்று ஆலோசனை கேட்டேன். அவருக்கு இந்திய இராணுவத்தில் நீண்ட மற்றும் தனித்துவமான தொழில் பதிவேடு இருந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் தொகைக்கு மத்தியில் அவர் முதற்பெரும் படைத் தலைவராக திகழ்ந்தார்.  படைவீரருக்கு படைவீரராக இருந்து, அவரை நேசிக்கும் வகையில் அவர் வாழ்ந்தார். அவருக்கு கண்டிப்பான மற்றும் உறுதியான மனப்பான்மை இருந்தாலும், அவர் எல்லோருடனும் அன்பாகப் பழகினார். மனிதர்களை பாராட்டி, நம்பி அவர்களுக்கு சுதந்திரமும் கொடுத்தார்.

என்னிடம், “வேலையைப் பற்றி பேச வேண்டுமென்றால் என்னை அலுவலகத்தில் வந்து பார்” என்று கூறினார். அதனால் நான் இராணுவ அதிகாரியிடம் முன்பதிவு செய்து, அவரை பார்க்க சென்றேன். அவர் அலுவலகம் பிரம்மாண்டமாக இருந்ததை பார்த்து நான் தலைகுனிந்து நின்றேன்.

அவர் என்னிடம், “நீ நிறைவேற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன” என்று கூறினார். மேலும் அவர், “முதலாவதாக நீ என்ன செய்கிறாயோ, அதை உன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செய்ய வேண்டும். அதே வேலையை இரண்டாவது முறை செய்யும் போது, இன்னும் சற்று முயற்சியை அதில் செலுத்த வேண்டும்.” அவர் கூறியது என்னவென்றால், “முன்முயற்சி எடுத்து புதுமையாக ஆக்கப்பூர்வமாக இருங்கள். எல்லா சமயங்களிலும் கூடுதல் முயற்சி செலுத்துங்கள்”.

ஆதாரம்: கரண் பிலிமோரியா , கோப்ரா பீரின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி. “பிசினஸ் லை ஃ ப்” என்ற பத்திரிகைக்கு செரிடன் விண்ணுடன் பேசியது.

நீதி:

எந்த ஒரு முயற்சியில் ஈடுபட்டாலும், அதை சிறப்பாக செயலாற்ற நாம் பாடுபட வேண்டும். அதற்குப் பிறகு, அடுத்தடுத்த வாய்ப்பில், நாம் முன் செய்ததை விட இன்னும் சிறப்பாக முயற்சிக்க வேண்டும். வெற்றிக்கு அதுவே அறிகுறி ஏனெனில் நாம் ஒவ்வொரு முறையும் நம் முயற்சிகளை மேம்படுத்திக் கொள்ளும் போது, நாம் சிறப்பாக மாறி, கண்டிப்பாக வெற்றியை அடைவோம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

முயற்சியை விட்டு விடாதீர்கள்

நீதி: சரியான அணுகுமுறை

உபநீதி: நன்னம்பிக்கை, வித்தியாசமான அணுகுமுறை

அடுத்த முறை நீங்கள் பெரிய சாதனைகளை செயலாற்றும் போது, கவனமாகக் கேளுங்கள். உங்கள் குருவின் மெல்லிய குரல் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒலிக்கும். அவை என்னவென்றால் “விட்டு விடாதே, முயற்சியை தொடர்ந்து செய்” என்பது தான்.

ஒரு தாய், தனது மகன் பியானோ வாசிப்பதை ஊக்குவிப்பதற்காக அவனை படேரெவ்ஸ்கி(Paderewski) என்ற இத்தாலி நாட்டை சேர்ந்த இசைக் கலைஞரின் கச்சேரிக்கு அழைத்து சென்றாள். இருவரும் அவர்களுடைய இருக்கையில் அமர்ந்தனர். அப்பொழுது தாய் தன் தோழி ஒருவரை அங்கு பார்த்தாள். உடனே ஆவலுடன் அவளிடம் பேசுவதற்காக அங்கு சென்றாள்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த சிறுவன், இருப்பிடத்திலிருந்து எழுந்து கச்சேரி மண்டபத்தை சுற்றி ஆராயத் தொடங்கினான். “அனுமதி இல்லை” என்று தடை செய்ய பட்டுள்ள பகுதியை சென்றடைந்தான். கச்சேரி அறையின் விளக்குகள் மங்கி, கலை நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அப்பொழுது அந்த தாய் தன்னுடைய இருக்கைக்கு  வந்து, தன் மகன் அங்கு இல்லாததை கவனித்தாள்.

திடீரென மேடையின் திரைச்சீலைகள் திறக்கப்பட்டன. மின் விளக்குகள், ஈர்க்கக்கூடிய ஸ்டீன்வே பியானோ  மீது செலுத்தப்பட்டது. பதட்டத்துடன், தாய் தனது மகனை மேடையில் கீபோர்டில், “ட்வின்கில், ட்வின்கில் லிட்டில் ஸ்டார்” பாடல் வாசிப்பதை பார்த்தாள்.

அந்த சமயத்தில் பெரிய பியானோ கலைஞரான படேரெவ்ஸ்கி அங்கு வந்து அந்த சிறுவன் காதுகளில், “நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து வாசித்து கொண்டிரு” என்றார்.

பின்னர் சாய்ந்து, படேரெவ்ஸ்கி தனது இடது கையால் ஒரு பாஸ் (BASS) பகுதியை வாசிக்கத் தொடங்கினார். விரைவில் அவரது வலது கை குழந்தையின் மறுபக்கத்தை அடைந்தது, மேலும் அவர் வாசித்தார். பழைய மாஸ்டர் மற்றும் அந்த சிறுவன் இருவரும் சேர்ந்து ஒரு பயமுறுத்தும் சூழ்நிலையை அற்புதமான படைப்பு அனுபவமாக மாற்றினர். பார்வையாளர்கள் மெய்மறந்தனர்.

நீதி:

குழப்பமான மற்றும் சங்கடமான சூழ்நிலையை, நேர்மறையான மற்றும் மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக மாற்ற முடியும். எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளுக்கு, ஒரு பயனுள்ள தீர்வுக்கு கொண்டு வர முயற்சிப்பதில் நமது ஆற்றலைச் செலவிட வேண்டும். இதுபோன்ற சமயங்களில், கடவுளின் மேன்மையான சக்தியின் கைகளில் நம்மை ஒப்படைப்பது அற்புதமான பலனைத் தரும்.

மொழி பெயர்ப்பு:

லக்ஷ்மி கோபாலன், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

திறமையை வளர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்

நீதி: உண்மை

உபநீதி: நேர்மறையான அணுகுமுறை / தன்னம்பிக்கை

ஒரு உணவகத்தில் பியானோ வாசிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்ற ஒருவர்  இருந்தார். அவர் வாசிப்பதை கேட்பதற்காக பலர் அங்கு வந்தனர். ஆனால் ஒரு இரவு, ஒரு ரசிகர் அவரிடம் பியானோ வாசிப்பதற்கு பதிலாக  பாடல் பாட வேண்டும் என்று விரும்பி கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், “நான் பாடுவதில்லை” என்று கூறினார்.

ஆனால் வாடிக்கையாளர் விடாப்பிடியாக இருந்தார். அவர் உணவக உரிமையாளரிடம், “அவர் பியானோ வாசிப்பதை தொடர்ந்து கேட்டு அலுப்பாகி விட்டது. அவர் பாட வேண்டும்!” என்று கூறினார்.

உணவக உரிமையாளர் உரக்கக் குரலில் வாசிப்பாளரிடம், “நண்பா! உனக்குச் சம்பளம் வேண்டுமானால் ஒரு பாடலைப் பாடு. ரசிகர் உன்னைப் பாடச் சொல்கிறார்!” என்றார்.

அதனால் அவர் ஒரு பாடலைப் பாடினார். இதுவரை பொது இடங்களில் பாடாத பியானோ வாசிப்பவர், முதல் முறையாக பாடினார். அன்றிரவு நாட்கிங் கோல், மோனாலிசா என்ற பாட்டை அவ்வளவு அற்புதமாக பாடினார். இதுவரை எவரும் இப்படி ஒரு பாட்டை கேட்டதில்லை.

அவர் தனது வாழ்நாள் முழுவதும் பெயர் இல்லாத உணவகத்தில் பெயர் இல்லாத பியானோ வாசிப்பவராக வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவர் பாட வேண்டியிருந்ததால், அவர் அமெரிக்காவில் எல்லோரையும் மகிழ்விக்கும் ஒரு சிறந்த நபராக மாறினார்.

நீதி:

திறமை என்பது ஒரு நபரின் இயல்பான திறன், கற்பிக்கப்படாமலேயே ஏதாவது ஒரு விஷயத்தில் சிறந்து விளங்கும். உங்கள் திறமையை கண்டறிந்து, முழு திறனையும் வெளிக்கொணருங்கள். மகத்துவத்தை அடைவதற்கு இது சிறந்த வழியாகும்.

நம் அனைவருக்கும் சமமான திறமைகள் இல்லை, இருப்பினும் நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு உள்ளது” – ரத்தன் டாடா

மொழி பெயர்ப்பு:

லக்ஷ்மி கோபாலன், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

அசாதாரணமான ஆசிரியை

நீதி : அன்பு

உப நீதி: தொடர்பு

பிட்ஸ் & பீசஸ் – ஜூன் 1995, எகனாமிக்ஸ் பிரஸ்

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜான் ஹாப்கின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், பட்டதாரி மாணவ குழுவிற்கு கீழ்வரும் பணியை ஒப்படைத்தார்: சேரிகளை நோக்கி சென்று, 12 முதல் 16 வயதுக்குட்பட்ட 200 சிறுவர் / சிறுமியர்களை அழைத்து, அவர்களின் பின்னணி மற்றும் சூழல் பற்றி விசாரித்து, விவரங்களை சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும் . பின்னர் எதிர்காலத்தில் அவர்களது வாய்ப்புகளை கணிக்க வேண்டும்.

மாணவர்களும் சிறுவர் / சிறுமியர்களுடன் பேசி பல புள்ளி விவரங்களையம் சேகரித்து, தொகுத்து கலந்தாலோசித்தனர். பிறகு அவர்களுள் 90 சதவீத சிறுவர்கள் கண்டிப்பாக சிறையில் சில காலம் கழிப்பார்கள் என்ற முடிவிற்கு வந்தனர்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு பட்டதாரி மாணவ குழுவிற்கு மேற்கண்ட ஆய்வின் கணிப்பையும், தற்போது வாலிப பருவத்தில் உள்ள அதே குழந்தைகளின் நிலையையும் ஒப்பீடு செய்யும் பணி வழங்கப்பட்டது.

மீண்டும் அதே பகுதிக்கு சென்றனர். அங்கே இன்னும் சில சிறுவர் / சிறுமியர்கள் வாலிப பருவத்தில்  இருந்தனர். ஒரு சிலர் இறந்து விட்டிருந்தனர், மேலும் சிலர் அங்கிருந்து சென்றிருந்தனர். ஆனால் அங்கு முதலில் தொடர்பு கொள்ளப்பட்ட 200 நபர்களுள் 180 பேருடன் மறுபடி தொடர்பு கொள்ள இயன்றது. அவர்களுள் நான்கு பேர் மட்டுமே சிறைக்கு சென்றதாக குழுவினர் கண்டறிந்தனர்.

குற்றச் செயல்கள் பெருகி இருந்த கடினமான சூழ்நிலையில் வாழ்ந்த அந்த சிறுவர் / சிறுமியர்களால் எவ்வாறு இத்தகைய வியக்கத்தக்க ஒழுக்கமான நடத்தையை பின்பற்ற முடிந்தது? இந்தக் கேள்வி எழுந்தபோதெல்லாம் ஆராய்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து கூறப்பட்டது ஒரே விதமான பதில் தான்: “உண்மை தான். அதற்கு காரணம் ஒரு ஆசிரியை / ஆசிரியர்.”

அவர்கள் மேலும் அழுத்தம் கொடுத்து விசாரிக்க, அவற்றுள் 75 சதவீத வழக்குகளில், அது ஒரே ஆசிரியையாக இருப்பதை கண்டறிந்தனர். ஆராய்ச்சி குழு குறிப்பிட்ட அந்த ஆசிரியையிடம் சென்றனர். தற்போது அவர் ஆசிரியர்களுக்கான ஓய்வு இல்லத்தில் வசித்து வந்து கொண்டிருந்தார். அந்தப் பிள்ளைகள் மீது அவரால் எப்படி இத்தகைய குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்த முடிந்தது? மேலும் அச்சிறுவர்கள் அவரை எந்த காரணத்திற்காக நினைவு கூர்ந்திருக்கக் கூடும் என்பதற்கான பதிலை அவர் அறிந்திருந்தாரா?

இந்தக் கேள்விகளை அவரிடம் கேட்ட போது – “இல்லை. எனக்கு உண்மையில் இதற்கான பதில் தெரியாது.” என்று அவர் பதிலளித்தார். பின்னர் சிறிது யோசனையோடு, “பல வருடங்கள் பின்னோக்கி நினைத்துப் பார்க்கிறேன் – நான் அந்த சிறுவர்களை மிக நேசித்தேன்…. அவர்களுக்கு கற்பிக்கும்போதும் அல்லது உரையாடும்போதும் சரி, மூளையைவிட இதயத்திலிருந்து எனது எண்ணங்களை பரிமாறினேன்” என்று அவர் கேள்வி எழுப்பியவர்களை விட தனக்கு தானே உரக்க சொல்லிக் கொண்டார்.

நீதி:

குழந்தைகளை உருவாக்குவதில் கருத்து தொடர்பு மிக முக்கிய பங்கு வகுக்கிறது. இது அவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மிகவும் அமைதியான ஆனால் பயனுள்ள வழியில், அது அவர்களின் இதயத்தைத் தொட்டு, நீடித்த பதிவுகளை விட்டுச் செல்கிறது. தரமான கருத்துக்களை நேர்மறையான முறையில் போதித்தால், குழந்தைகள் சிறப்பாக வடிவமைக்கபட்டு, பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

கடவுள் எதிர்பார்ப்பு இல்லாமல் அளிப்பார்

நீதி: அன்பு / இரக்கம்

உபநீதி: நிபந்தனையற்ற அன்பு, பச்சாதாபம்

சி. எஸ். லெவிஸ், தன் புத்தகமான  “ஃபோர் லவ்ஸ்” ல் கிரேக்கிய மொழியில் அன்புக்கு கொடுத்திருக்கும் விளக்கத்தை நான்கு வகைகளாக பிரிக்கிறார் – பாசம், நட்பு, தெய்வீக அன்பு மற்றும் தர்மம் அல்லது கருணை. இறுதியாக வரும் தர்மம் அல்லது கருணை தான் மிகச் சிறப்பானது, மற்றும் நிபந்தனையற்ற அன்பு எனக் கூறலாம். அதை கடவுளின் மேல் பற்று அல்லது அளவில்லா அன்பு என்றும் எல்லையற்ற முடிவிலா அன்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம். அளவில்லா அன்புக்கு சிறந்த உதாரணம் “தாயின் அன்பு”. அது கொடுப்பதற்கு மட்டுமே, பெறுவதற்கு அல்ல.

“தி ராக்” என்ற இதயபூர்வமான கதையில் நிபந்தனையற்ற அன்பைப் பற்றி ஸ்டீவ் குடியர் விவரிக்கிறார் .

http://stevegoodier.blogspot.com/

“பருவ வயதில் இருந்த ஒரு பெண்ணை  கையாள முடியாத அளவிற்கு, நிலைமை மோசமாகி விட்டது. சூழ்நிலை  உச்சநிலைக்கு வந்த பிறகு, திடீரென ஒரு நாள், அந்த பெண் குடித்து விட்டு வண்டியை  ஓட்டியதால், அவளை காவல்காரர்கள் கைது செய்தனர். அங்கிருந்து அவளை அழைத்து வருவதற்காக, அவள் தாய் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. 

மறு நாள் மத்தியானம் வரை, அவர்கள் பேசிக் கொள்ளவில்லை.

அந்தப் பதற்றத்தை தாய் மிகவும் அழகாக சமாளித்தார். தாய் அவளுக்கு  போர்த்தப்பட்ட ஒரு பரிசு பெட்டியைக் கொடுத்தார்.

அவள் சளைக்காமல் பரிசை திறந்த போது, உள்ளே ஒரு சிறிய பாறை இருந்தது.

அவள் கண்களை உருட்டிக் கொண்டு, “இது என்ன அம்மா?” என்று கேட்டாள். 

அதற்கு தாய், “குறிப்புகளை படித்து பார்” என்றார்.

அவள் அட்டையை மேலுறையிலிருந்து வெளியே எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.

அட்டையின் மேல் இவ்வரிகள் இருந்தன: “இந்த பாறை 200,000,000 வயதிற்கு மேற்பட்டது. நானும் உன்னை அப்படி விட்டு விட மாட்டேன். இந்த பாறையின் வயது எவ்வளவு உள்ளதோ, அவ்வளவு சமயம் நானும் உன்னுடன் இருப்பேன்” என்று கூறினார். 

தாய், “நீ இவ்வாறு செய்தால் நான் உன்னை விரும்புவேன்……. என்று கூறாமல், எச்சமயமும் நான் உன்னை நேசிப்பேன். அதில் மாற்றம் எதுவும் இருக்காது” என்று கூறுகிறார்.

உன்னதமான  உதாரணம் என்னவென்றால், நிபந்தனையற்ற அன்பு ஒரு நபரையும், அவன் நடவடிக்கையையும் பிரித்து பார்க்கிறது. அவள் பெண்ணின் நடவடிக்கையை தான் கவனிக்க வேண்டும்; அவளை அல்ல என்று தாய் புரிந்து கொண்டார்.

நிபந்தனையற்ற அன்பு மிகவும் முக்கியம். நாம் உயிர் வாழ்வதற்கு உணவும், காற்றும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் நிபந்தனையற்ற அன்பு. உறவுமுறைகள், குடும்பங்கள்……….நாம் எங்கு சென்றாலும் நமக்கும் வேண்டும். ஏன்? நாம் செய்யும் அனைத்து காரியங்களும் நம்மை பாதிக்கும்; நாம் வாழும் கிரகத்தையும் பாதிக்கும். அன்பில்லாமல் இருப்பதால் தான், தற்சமயம் நிலவிக் கொண்டிருக்கும் அமைதியின்மை, வன்முறை, மது அருந்துதல் அதிகரிக்கும் நிகழ்வுகள், போதைக்கு அடிமையாதல், நிரம்பி வழியும் சிறைகள் எல்லாமே இருக்கின்றன.

நிபந்தனையற்ற அன்புடன் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அன்பான மனப்பான்மை, மன்னிக்கும் குணம், மரியாதை போன்ற நற்பண்புகள் மூலம் நாம் நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தலாம். அதற்கு வாழ்க்கை நமக்கு பல வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது. உலகை மாற்றுவதற்கு நம்மிடம் அளவில்லா சக்திகள் உள்ளன. நம்மைச் சுற்றி சந்தோஷத்தை பரப்ப நம்மிடம் அற்புதமான வாய்ப்புகள் உள்ளன. நாம் தங்கும் கிரகத்தையும் மற்றும் நம்மையும் மாற்றிக் கொள்ள நம்மால் முடியும். இரக்கம், பொருட்படுத்தாமல் விட்டுவிடும் மனப்பான்மை போன்ற கருவிகளை பயன்படுத்தி , தினமும் நாம் எதிர்கொள்கின்ற எதிர்மறையான விஷயங்களை சுலபமாக சந்திக்கலாம்.

நீதி:

ஈர்ப்பு விதி இங்கே ஒரு பெரிய அளவில் செயல்படுகிறது. நாம் அன்பை பகிர்ந்து கொண்டால், சுற்றுப்புறத்திலிருந்து நமக்கு அதிக அளவில் அது திரும்ப கிடைக்கும்.

அன்பு எதுவுமே எதிர்பார்ப்பதில்லை. அதற்கு பயமும் தெரியாது. கடவுள் எதுவுமே எதிர்பார்க்காமல் அளித்துக் கொண்டே இருப்பார் . அன்பு கெடுதலை நினைக்காது; அதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அன்போடு இருப்பதின் அர்த்தம், பகிர்ந்து கொள்வதும் சேவை செய்வதும் மட்டுமே – ஸ்வாமி சிவானந்தா

ஜாதி மற்றும் மத வேறுபாடு இல்லாமல், நம் ஆழ்ந்த மனதில் அதிக அளவு அன்பு இருக்கிறது. நாம் தான் அதை ஆராய்ந்து, புரிந்து கொண்டு, உள் மனதில் இருக்கும் அன்பை வெளியே கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால், இந்த கிரகத்தில் வாழ்வதற்கு அர்த்தம் இருக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

அன்பான மனப்பான்மையுடன் வாழுங்கள்

நீதி: அன்பு, பாசம்

உபநீதி: அக்கறை காண்பித்தல், பகிர்ந்து கொள்ளுதல்

ஒரு மாணவன் ஆசிரியரிடம், “சிலர், மிகுந்த கடுமையான பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வு காண்கின்றனர்; இன்னும் பலர் சிறிய பிரச்சனைகளைக் கூட எதிர்கொள்ள முடியாமல், வேதனையுடன் ஏன் அந்த பிரச்சனைகளுக்குள்ளேயே மூழ்கி விடுகின்றனர்?” எனக் கேட்டான்.

ஆசிரியர் கீழ் வரும் கதையை அவனிடம் சொன்னார்.

ஒரு முறை, ஒரு மனிதன் அன்பின் உருவமாக திகழ்ந்தான். அவன் இறந்த பிறகு, அவன் நல்லவனாக இருந்ததால், எல்லோருமே அவன் சொர்க்கத்திற்கு தான் செல்வான் என்று தீவிரமாக நம்பினர். அந்த மனிதனுக்கு எந்தவிதமான எண்ணங்களும் இல்லை; ஆனால் அவன் அங்கு தான் சென்றான்.

அங்கு இருந்த தேவதை, இந்த மனிதனை மேலோட்டமான பார்வையுடன் பார்த்து, அவன் பெயர் அங்கு குறிப்பிடாததால், அவனை நரகத்திற்கு அனுப்பி விட்டார்.

நரக வாசலில் அவனை எவரும் கவனிக்கவில்லை. அதனால் அவன் உள்ளே நுழைந்து அங்கு தங்கினான்.

சில நாட்களுக்குப் பிறகு, லுசிஃபர் சொர்க்க வாசலில் நின்று கொண்டு,  செயின்ட் பீட்டரிடமிருந்து விளக்கம்  வேண்டும் எனக் கேட்டார். மேலும் “நீங்கள் செய்வது அராஜகம்” என்று கூறினார்.

செயின்ட் பீட்டர், லுசிஃபர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார் என்று கேட்ட போது, அவர் “நீங்கள் ஏன் அந்த மனிதனை  நரகத்திற்கு அனுப்பினீர்கள் . அவன் என்னை மனச் சோர்வு அடையச் செய்கிறான். ஆரம்பித்திருந்தே அவன் மனிதர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். இப்போது எல்லோரும் அவர்களின் உணர்ச்சிகளை எடுத்துக் கூறி, அன்பாக பழகுகின்றனர். நரகத்தில் எனக்கு அது தேவையில்லை. அவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லவும்” என்றார்.

ஆசிரியர் கதையை முடித்த பிறகு, மாணவனை அன்புடன் பார்த்து ஆசையாக, “மிகுந்த அன்புடன் வாழ்க்கையை வாழ்ந்தால், தவறுதலாக நரகத்திற்கு உன்னை அனுப்பி விட்டால், அந்த சாத்தானே உன்னை சொர்க்கத்த்ற்கு அனுப்பி விடுவான்” என்றார்.

நீதி:

நிபந்தனையற்ற அன்பு சுயநலம் இல்லாதது. மதிப்பீடு செய்யாமல் ஒருவரை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். கலப்படமற்ற இரக்கம் என்பது சுய மையத்தால் சிதைக்கப்படுவதில்லை. மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் மட்டுமே, மன திருப்தி வரும். இரக்கம் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், கொடுப்பவருக்கும் சந்தோஷம்; ஏற்றுக் கொள்பவருக்கும் சந்தோஷம். சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் சரி, ஒரு நபரை அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அதற்காக நேசியுங்கள்; நமக்கு என்ன செய்கின்றனர் என்பதை பொருத்து அல்ல.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

சகோதரத்துவம்

நீதி: அன்பு

உபநீதி: இரக்கம் / பச்சாதாபம்

ராமுக்கு, தன் தம்பியிடமிருந்து பிறந்த நாள் பரிசாக ஒரு மோட்டார் வண்டி கிடைத்தது. ஒரு நாள், அலுவலகத்திலிருந்து வெளியே வந்த போது, ராம் ஒரு குறும்புக்கார சிறுவனை பார்த்தான். அவன் ஜொலித்துக் கொண்டிருக்கும் புதிய வண்டியை பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறுவன், “இது உங்களுடைய வண்டியா?” என்று கேட்டான்.

அதற்கு ராம் தலையை ஆட்டி, “என் சகோதரன் என்னுடைய பிறந்த நாளுக்கு பரிசாக அளித்த வண்டி” என்று கூறினார்.

சிறுவன் ஆச்சரியப்பட்டான். அவன் சற்று தயக்கத்துடன், “உங்கள் சகோதரன் பணம் எதுவுமே வாங்கிக் கொள்ளாமல் வண்டியை உங்களுக்கு கொடுத்தாரா? என்று கேட்டான்.

இந்த சிறுவனின் மனதில் என்ன இருக்கிறது என்று ராம் புரிந்து கொண்டார் . அவனுக்கும் இது போல ஒரு சகோதரன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என நினைக்கிறான் என்று ராம் அறிந்தார். இந்த உரையாடலுக்கு பிறகு ராம் யோசனை செய்ய ஆரம்பித்தார். 

மேலும் அச்சிறுவன், “எனக்கும் ஒரு சகோதரன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று கூறினான்.

ராம் உணர்ச்சிவசப்பட்டு, ஆச்சரியத்துடன் அச்சிறுவனை பார்த்து, “என் வண்டியில் சவாரி வருகிறாயா?” என்று கேட்டார்.

சிறுவன், “கட்டாயமாக” என்று கூறினான்.

சற்று தூரம் சென்ற பிறகு அச்சிறுவன், “என் வீட்டுக்கு முன் சற்று வண்டியை ஓட்ட முடியுமா?” என்று கேட்டான்.

ராம் புன்சிரிப்புடன் சரி என்றவாறு, அச்சிறுவன் தன் வீட்டு பக்கத்தில் இருப்பவர்களுக்கு வண்டியை காண்பிப்பதற்காக கேட்கிறான் என்று ராம் நினைத்துக் கொண்டார்.

ஆனால் ராம் நினைத்து தவறு.

சிறுவனின் வீட்டுக்கு முன்னால் இரண்டு படிகள் இருந்தன. சிறுவன் அதற்கு முன் வண்டியை நிறுத்த சொன்னான். பிறகு அவன் படிகளில் விரைவில் ஏறி, திரும்ப வரும் போது தன் ஊனமுற்ற சகோதரனை தூக்கிக் கொண்டு வந்து வண்டியை அவனுக்கு காட்டினான்.

அச்சிறுவன் தன் சகோதரனிடம், “நான் உன்னிடம் கூறியது போல இந்த வண்டியை அவருடைய சகோதரன் அவருக்காக பரிசு கொடுத்தது. செலவு செய்யாமல் கிடைத்த வண்டி. ஒரு நாள் நானும் உனக்கு இதே போல ஒரு வண்டியை கொடுப்பேன். கடையில் இருக்கும் அழகான பொருட்களை  நீயும் பார்க்கலாம்” என்று கூறினான்.

ராம் வெளியே இறங்கி, ஊனமுற்ற சிறுவனை வண்டியின் முன் இருக்கையில் உட்கார வைத்துக் கொண்டு, மூவரும் சவாரி சென்றனர்.

நீதி:

நாம் பச்சாதாபம் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், அன்பு பெறாத ஒருவனுக்கு ஆறுதல் அளிக்கும். அன்பு, இரக்கம், பச்சாதாபம் போன்ற நற்பண்புகள், ஒவ்வொரு மனிதனுக்கும் மேலும் சிறப்பாக திகழ்வதற்கு தேவையானது. அத்துடன், அவர்கள் பார்க்கும் கண்ணோட்டமும் மாறி விடும்.

மரத்தின் கிளைகளைப் போல, நாமும் வெவ்வேறு திசைகளில் வளர்ந்தாலும், வேர்கள் ஒன்றே. குடும்பத்தின் அன்பும் அரவணைப்பும் வாழ்க்கையின் பெரும் பாக்கியம் – சிக் சிக்ளார்

குடும்பங்கள் நம்மை வழிநடத்தும் திசைகாட்டி. உயர்ந்த நிலைமையை சென்றடைய உற்சாகமும், சில சமயங்களில் தவறுகள் செய்யும் போது நமக்கு அளிக்கும் ஆறுதலும் அவர்களே – ப்ராட் ஹென்றி

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

மனிதர்களை விட நாய்களின் வாழ்நாள் குறைவு

நீதி: அன்பு, உண்மை

உபநீதி: பச்சாதாபம், இரக்கம்

நான் விலங்குகளுக்கு மருத்துவராக இருப்பதால், ஓநாய்களை  வேட்டையாடும் ஐரிஷ் நாட்டை சேர்ந்த ஒரு வகையான நாயை பரிசோதிக்க என்னை அழைத்தனர். நாயின் மேல் இருக்கும் பாசத்தினால், குடும்பத்தில் இருந்த அனைவரும் ஒரு அதிசயம் நடக்கும் என்று நம்பினர்.

நாயை பரிசோதித்த பிறகு, அது அதிக நாட்கள் உயிர் வாழாது என்று எனக்கு தெரிந்து விட்டது. குணப்படுத்த முடியாத துன்பம் நிறைந்த நோயிலிருந்து, செயற்கை முறையில் இறப்பை  வருவிக்கும் முறையை (euthanasia) பயன்படுத்தலாம் என்று குடும்பத்தினரிடம் கூறினேன்.

ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது, அவர்களின் ஆறு வயது குழந்தை இந்த சடங்குகளை செய்தால் நன்றாக இருக்கும் என்று பெற்றோர்களுக்கு தோன்றியது. அவனுக்கு ஒரு அனுபவமாகவும் இருக்கும் என்று அவர்கள் நினைத்தனர்.

அடுத்த நாள், குடும்பத்தினர் அனைவரும் நாயை சுற்றி இருந்த போது மனது வேதனையாக இருந்தது. ஆனால் சிறுவன், மன அமைதியுடன் இறுதியாக நாயை தடவிக் கொடுத்தான். அவனுக்கு என்ன நடக்கிறது என்று புரிந்தததா என்றும் தெரியவில்லை. சில நிமிடங்களில் நாய் நிம்மதியாக இறந்து விட்டது.

சிறுவன், மனக்குழப்பம் எதுவுமின்றி அந்த நாயின் இறப்பை ஏற்றுக் கொண்டான். மனிதர்களை விலங்குகளுடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது, ஏன் விலங்குகள் விரைவாக இறந்து விடுகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சிறுவன், “எனக்குத் தெரியும்” என்றான்.

ஆச்சரியத்துடன், நாங்கள் எல்லோரும் அவனைப் பார்த்த போது, அவன் சொன்ன பதில் மனதுக்கு ஆறுதல் தந்தது.

அவன், “மனிதர்கள் , வாழ்க்கையை நன்றாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதோடு எல்லோரையும் அன்புடன் நடத்துவதற்கும், நல்லவர்களாக இருப்பதற்கும் பிறவி எடுக்கின்றனர். ஆனால்  நாய்களுக்கு ஆரம்பத்திலேயே அன்பாக இருக்க தெரியும். அதனால் அவை நீண்ட நாட்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை” என்றான். எவ்வளவு நியாயமான வார்த்தைகள் அல்லவா?

நீதி:

விலங்குகளிடமிருந்து நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். நன்றி உணர்வு மற்றும் அன்பான மனப்பான்மை மிகவும் முக்கியம். அழகான கூற்று ஒன்று இருக்கிறது.”நாய்களுக்கு பல நண்பர்கள் இருக்கும் காரணம் என்னவென்றால், மனிதர்களை போல தகாத வார்த்தைகளை பேசுவதற்கு பதிலாக, அவை எவரை பார்த்தாலும் வாலை மட்டுமே ஆட்டுகிறது”.  நம் புலன்களை சரியாக பயன்படுத்த வேண்டும். சரியாகப் பயன்படுத்தும் முறை கடவுளிடமிருந்து மட்டுமே வரும். உடலில் புலன்கள் உள்ளன; ஆனால் உண்மையான சொந்தக்காரர் கடவுள் தான். நாம் அந்த உணர்வுடன் கடவுளிடம் சென்றால்,  அதை சரியாக பயன்படுத்தும் முறையை அவர் நமக்கு கூறுவார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

ஒருவரின் வலிமையை வெளிப்படுத்தும் வழிகள்

நீதி – நன்னடத்தை, உண்மை

உபநீதி – விசுவாசம், சுய நம்பிக்கை, நேர்முறையான அணுகுமுறை, ஏற்புத் தன்மை, மன்னித்தல்

பரமஹம்ச யோகானந்தரின் குருவான ஸ்ரீ யுக்தேஸ்வரர், “சில மனிதர்கள், மற்றவர்களை தாழ்வுபடுத்தி, தங்களை உயர்ந்த நிலையில் காண்பித்து கொள்ள விருப்பப் படுவார்கள்” என்று கூறினார்.

கல்வி பயிற்சியாளரான டி. வாஷிங்டனின் பார்வையில், “ஒருவரின் வலிமையை வெளிப்படுத்த இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று,மற்றவர்களை  தாழ்வு படுத்துவது; மற்றொன்று அவர்களை உயர்ந்த நிலையில் காண்பிப்பது”. தினசரி வாழ்க்கையில் இவ்விரண்டு வகை மனிதர்களோடு நாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

யார் நம்மை உயர்ந்த நிலையில் காண்பித்து, நம் இலக்குகளை அடைவதற்கு ஊக்கமளிக்கிறார்களோ, அவர்கள் நேர்முறையான மனப்பான்மை கொண்ட மனிதர்கள்.

யார் நம் மன நிலையை புண்படுத்தி, நம்மை தாழ்வு படுத்துகிறார்களோ, அவர்கள் எதிர்மறையான மனப்பான்மை கொண்ட மனிதர்கள்.

தெளிவாக, நாம் முதல் வகையான மனிதர்களை மட்டுமே விரும்புவோம். எல்லோருக்கும் உற்சாகம் தேவை. உலர்ந்த தொண்டைக்கு குளிர்ந்த நீர் எப்படி அவசியமோ, அது போல உற்சாகம் நம் வாழ்க்கைக்கு தேவை.

துரதிர்ஷ்டவசமாக, வாழ்க்கையில் எல்லா விதமான மனிதர்களும் இருக்கின்றார்கள். உலகம் இயங்குவதற்கு, எல்லாமே தேவையாக இருக்கிறது.  நேர்மறையான மனிதர்களோடு பழகுவது நமக்கு நன்மை பயக்கும். அவர்களை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. நேர்மறையான அணுகுமுறை கொண்ட மனிதர்களிடம் ஓர் ஈர்ப்பு இருக்கின்றது. எதிர்மறையான மனப்பான்மை கொண்ட மனிதர்களிடம் பழகுவது தான் சற்று கடினமாக இருக்கிறது. அவர்களின் சகவாசம் நமக்கு தாழ்வு மனப்பான்மையை கொடுக்கிறது. அதனால் நம் சுய நம்பிக்கை குறைவாகி, நாமே நம்மை சந்தேகப் படும் நிலை வருகிறது.  

இவ்வகையான மக்களை எப்படி சமாளிப்பது? பெரிய விஷயம் இல்லை.

நாம் அவர்களை பொருட்படுத்தாமல் விட்டு விடலாம்; இல்லையெனில் அவர்களை ஏற்றுக் கொள்ளலாம். பொறாமையால் ஒருவன் மற்றவனை தாழ்த்தும் போது, அவனை பொருட்படுத்தாமல் விட்டு விடலாம். பாரபட்சம் இல்லாமல், உண்மைகள் சார்ந்த திறனாய்வு கொண்ட மனிதர்களை ஏற்றுக் கொள்ளலாம். எந்த ஒரு சூழ்நிலையிலும், மற்றவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு, ஏன் அப்படி செய்தார்கள் என்று யோசித்து, தீர்வு காண வேண்டும். 

இன்னொரு வழியையும் நாம் மேற்கொள்ளலாம். மற்றவர்களின் மனப்பான்மை எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்கட்டும். அவர்களை மாற்றுவது நம் வேலை அல்ல; நம்மை நாமே மாற்றிக் கொண்டு, நம் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மற்றொறு வழி என்னவென்றால், இவ்வகையான மக்களை விட்டு விட்டு, நாம் முன்னேற்றத்திற்கான வழியை பார்க்க வேண்டும்.

இறுதியில் நாம் ஓர் உயர்ந்த வழியை மேற்கொள்ளலாம். இவ்வகையான மக்களிடம் உங்களின் அன்பை செலுத்துங்கள். மிகக் கடுமையான வழி, ஆனால் அப்படி செய்ய முடிந்தால், நன்மை பயக்கும். மற்றவர்களிடம் இல்லாததை நாம் அவர்களுக்கு அளிக்கலாமே. நம் மனதை புண்படுத்துபவர்களுக்கு அன்பு கொடுக்கலாமே! எந்த பண்பு அவர்களிடம் இல்லையோ அதை நாம் கொடுக்கலாமே.

வாழ்க்கை  பெரிய சவால் அல்ல. சில மனிதர்கள் நம்மை தாழ்த்தினாலும், நம்மை உயர்த்துவதற்கு பல மனிதர்கள் இருக்கின்றனர். நாம் உயர்ந்த மனிதர்கள் ஆவதற்கு வாழ்க்கை நமக்கு வாய்ப்பு அளிக்கிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், நன்றி உணர்வோடு இருப்பதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நீதி:

அன்பான மனப்பான்மையை மேம்படுத்துவதற்கு கற்றுக் கொள்ளுங்கள். அன்புடன், ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை மற்றும் பச்சாதாபத்தையும் வளர்த்துக் கொண்டால், சூழ்நிலைகளை சுமூகமாக சமாளிக்கலாம். முயற்சிகள் எடுத்தும், மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்ளாவிட்டால் அவர்களை விட்டு விட்டு முன் செல்ல வேண்டும். பச்சாதாபம், புரிதலை மேம்படுத்தி மதிப்பீடு செய்யும் குணத்தை தவிர்க்க வழி வகுக்கிறது. மற்றவர்களை மாற்றுவதற்கு பதிலாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மேலும் மன்னிக்கும் மனப்பான்மையை தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். மற்றவர்களை மன்னிக்கும் போது, சிக்கலான சூழ்நிலைகளிலிருந்து நாம் விடுதலை பெறுகிறோம். மேலும் குழப்பமான எண்ணங்கள் இருக்கும் போது, உடல் மற்றும் மன ஆற்றல் பலவீனமாகிறது.  மன்னித்தல்  அந்த சூழ்நிலையை சரி செய்து, நம் நலனை மேம்படுத்துகிறது. ஏற்புத் தன்மை மற்றும் மன்னித்தல்  வாழ்க்கையின் இரு தூண்கள்; நம்மை மன அமைதியுடன் இருக்க வழி வகுக்கிறது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

இறை சக்தியின் மீது நம்பிக்கை

நீதி: உண்மை

உப நீதி: தன்னம்பிக்கை, விசுவாசம்

பலத்த காற்றினால் ஏற்படும் புயல் வருவதற்கு முன்பே கழுகு அதை உணர்ந்திருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? புயல் வரும் போது, கழுகு மிக உயர்ந்த இடத்திற்கு பறந்து, புயல் காற்று வீசும் வரை காத்திருக்கும்.

புயல் வீசும் போது, கழுகு தனது இறக்கைகளை விரித்து,பலத்த காற்றுக்கும்  அப்பாற்பட்டு தனது  இறக்கைகளை உயர்த்தும் வகையில், காத்திருக்கும்.

புயல் காற்று சற்று குறைவான விகிதத்தில் வீசும் போது, கழுகு அதில் சிக்கிக் கொள்ளாமல் அதற்கு மேல் உயர்ந்து பறந்து வரும்.

கழுகு புயலிலிருந்து தப்பிக்க பார்ப்பதில்லை. மாறாக, அது புயலை பயன்படுத்திக் கொண்டு மேலே பறக்கிறது. புயலைக் கொண்டு வரும் காற்றின் போக்கிலேயே அது செல்கிறது.

நமது வாழ்க்கையில் ஏற்படும் புயல்களையும் கூட,  நாம் அனைவரும் முழுமனதுடனும், தெய்வ நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறு இறை நம்பிக்கையுடன் இன்னல்களை சந்திக்கும் பொழுது, நாம் அவற்றை கடக்க வேண்டி இருக்காது – இறை சக்தி, அந்த இன்னல்களையே நம்மை உயர்த்தும் கருவியாக மாற்றி அமைத்து தரும்.

நம் வாழ்வில் பிணி, சோகம், தோல்வி மற்றும் ஏமாற்றம் போன்ற துன்பங்களை கொண்டுவரும் புயல்காற்றின் மீது சவாரி செய்யும் திறனை அளிக்க, கடவுள் நமக்கு எப்போதும் அருள்வார். நாமும் புயலுக்கு மேலே உயர்ந்து செல்லலாம்.

வாழ்க்கையின் சுமைகள் நம்மை கீழே தாழ்த்துவது இல்லை; அதை கையாளும் விதம் தான் முக்கியம்.

“கடவுளை நம்புகிறவர்கள் தங்கள் பலத்தை புதுப்பிப்பார்கள், அவர்கள் கழுகுகளைப் போல உயர்ந்து செல்வார்கள்” என்று பைபிளில் உள்ளது.

நீதி:

வாழ்க்கை ஓட்டத்தில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில், மிகுந்த ஆறுதலையும் மகிழ்ச்சியையும் கடவுள் நம்பிக்கையானது நமக்கு அளிக்கும். கடினமான காலங்களில் கூட, கடவுள் மீது நம்பிக்கை வைப்பதற்கு விசுவாசம் உதவுகிறது. பிரச்சனைகளை விட அவற்றை நாம் கையாளும் விதம் மிக முக்கியம். கடவுளை நம்புவது என்றால் தெய்வத்தின் நிலை, திறன், பலம் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பதே ஆகும். கடவுளை விட இன்னல்கள் பெரிதாக இருக்க முடியாது. ஆகவே, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, மேலும் எது நடந்தாலும் அது நம் நலனுக்காகவே நடக்கிறது என்று நம்மை படைத்தவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE