Archive | November 2017

விவேகமுள்ள மனிதரும் சிறுவனும்

நீதி – நன்னடத்தை

உபநீதி – சரியான மனப்பான்மை  

The wise man and the boyஒரு செல்வந்தர், விவேகமுள்ள மனிதர் ஒருவரிடம் சென்று, தன் மகனை கெட்ட பழக்கங்களிலிருந்து விடுவிக்குமாறு கெஞ்சினார். அம்மனிதர் இளைஞனை பூந்தோட்டத்திற்கு கூட்டிச் சென்றார். திடீரென, அங்கு வளரும் ஒரு சிறு செடியை வேரோடு பிடுங்கச் சொன்னார்.

அவன் சுலபமாக அந்த வேலையை செய்து விட்டான். பிறகு, பெரிய செடி ஒன்றை அவ்வாறே செய்ய மறுபடியும் அம்மனிதர் உத்தரவிட்டார். சற்று கடினமாக இருந்தாலும், அச்செடியையும் இளைஞன் பிடுங்கி விட்டான். பிறகு, ஒரு புதரை பார்த்து அம்மனிதர், “தற்போது இதை பிடுங்கவும்” என்றார். இளைஞன் தன் பலத்தை பயன்படுத்தி, கடினமாக முயற்சித்து அவ்வேலையை செய்து முடித்தான்.

பிறகு ஒரு பெரிய மரத்தை காண்பித்து, “இதை வேரோடு பிடுங்கு பார்க்கலாம்” என அவனிடம் கூறினார். தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து விட்டு, “இந்த மரத்தின் வேர்கள் அடிதளத்தில் ஆழமாக சென்று மிகவும் வலிமையாக இருக்கின்றன. என்னால் இவைகளை அசைக்கவே முடியாது” என்று இளைஞன் கூறினான்.

அதற்கு அம்மனிதர், “கெட்ட பழக்கங்களும் அப்படி தான். துவக்க காலத்தில் அதை ஒழிக்க சுலபமாக இருக்கும். ஆனால், தொடர்ந்து பழக்கப் படுத்திக் கொண்டால், அதை ஒழிக்கவே முடியாது” என்றார்.

நடைமுறையில் நடந்த உதாரணத்தைப் பார்த்து, இளைஞன் கெட்ட பழக்கங்களை விட்டு விட்டு நல்லவனாக திருந்தினான்.

நீதி

ஒரு இளம் செடியை நம் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கலாம் ஆனால் ஒரு மரத்தை அப்படி செய்ய முடியாது. நற்பண்புகளை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு புரியும்படி கற்பிக்க வேண்டும்; கெட்ட பழக்கங்களை உடனடியாக ஒழிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சிறு வயதில் கற்றுக் கொடுக்கின்ற பண்புகள், சரியான மனப்பான்மையையும், நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தும். அதே போல, கெட்ட பழக்கங்களை சரியான நேரத்தில் கட்டுப்படுத்த முயற்சி எடுக்காவிட்டால், அதை ஒழிக்கவே முடியாது.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

மகிழ்ச்சியின் ரகசியம் – சந்தோஷமான விவசாயி

நீதி: சரியான நடத்தை

உபநீதி: அன்பு கலந்த கடமையுணர்ச்சி

ஒரு அரசர், தன் நாட்டில் எவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார் எனக் கண்டு பிடிக்க மாறுவேடத்தில் புறப்பட்டார்.

பல மனிதர்களைச் சந்தித்த பிறகு, வழியில் ஒரு ஏழை விவசாயி ஆனந்தமாக பாடிக் கொண்டு தன் நிலத்தைப் பதப்படுத்திக் கொண்டிருப்பதை பார்த்தார்; ஆனந்தமான முகத்தைப் பார்த்தவுடன் அவரையும் அறியாமல் அந்த விவசாயியின் அருகே சென்றார்.

“அன்புத் தோழா, உனது மகிழ்ச்சியின் ரகசியம் என்ன?” என்று அந்த ஏழை விவசாயியைப் பார்த்து அரசர் கேட்டார்.

இந்த கேள்விக்குப் பதில் மிகவும் எளிது. நான் சம்பாதித்த பணத்தில், நான்கில் ஒரு பகுதியை நான் வாங்கிய கடனுக்குக் கொடுக்கிறேன்; ஒரு பகுதி என்னுடைய வருங்காலத்திற்கு எடுத்து வைக்கிறேன்; ஒரு பகுதி தானமாக கொடுக்கிறேன்; மற்றொரு பகுதி எனது வேலைக்காக எடுத்து வைக்கிறேன் என்று விவசாயி பதிலளித்தார்.

அரசருக்கு ஒரே குழப்பம்; விளக்கமாக கூறுமாறு விவசாயியை கெஞ்சினார்.

எனது பெற்றோர் இந்த அழகான வாழ்க்கையை கொடுத்து உள்ளார்கள்.  அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். வயதான காலத்தில் அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நான்கில் ஒரு பங்கு வருமானத்தை இவர்களுக்காகச் செலவிடுகிறேன்.

எனது குழந்தைகள் தான் என் எதிர்காலம். அவர்களின் உணவு, உடை மற்றும் கல்விக்கு எனது வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு எடுத்து வைக்கிறேன்.

நான் ஏழையாக இருந்தாலும் என்னை விட ஏழையாக உள்ள நபர்களுக்கு நான்கில் ஒரு பங்கு தானமாக கொடுக்கிறேன்.

என் மனைவி என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறாள். அவளை அன்போடும், பாதுகாப்பாகவும் கடைசி வரை வைத்திருப்பது என் கடமை ஆகும். என் மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நான்கில் ஒரு பங்கு செலவிடுகிறேன்.

இதுவே என் மகிழ்ச்சியின் ரகசியம்.

கற்பித்தல்:

கடவுளுக்கும், குடும்பத்தினருக்கும், மற்றோருக்கும் நாம் செய்ய வேண்டிய நம் அனைத்துக் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றினால், மன நிம்மதியும், பேரின்பமும் கிடைக்கும்; பணத்திலோ, புகழிலோ, உயர்ந்த பதவியிலோ கிடைக்காது.

கடமையறிந்து செயலாற்றினால் சமுதாயத்தில் உள்ள அனைவரின் உரிமைகளும், நலன்களும் முழுமையாகக் காக்கப்படும் – வேதாத்ரி மகரிஷி

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

மானவ சேவையே மாதவ சேவை

நீதி: அன்பு

உபநீதி: கருணை, செயல்களின் நோக்கம்

பிறர் நலத்தின் பொருட்டு உழைப்பது, மனிதன் கோணல்களைத் திருத்துகிறது –விவேகானந்தர்.

ஒரு முறை ஒரு மனிதன், சொர்க்கத்தின் வாசலில் நிற்பது போல கனவு கண்டான். ஆசீர்வாதம் பெற்ற பல நல்லவர்களும் அங்கு சொர்க்கத்தின் பொற்கதவு வாசலில் நின்று கொண்டு,  உள்ளே நுழைய அனுமதிக்காகக் காத்திருப்பதைக் கண்டான்.

முதலில் கதவைத் தட்டியது ஒரு கற்றறிந்த பண்டிதர். வாசலில் காவல் காத்த தேவதையிடம் அவர், “என்னை உள்ளே அனுமதியுங்கள். நான் பல புனித நூல்களை இரவும் பகலும் படித்துள்ளேன். ஆதலால் உள்ளே நுழையும் அதிகாரம் பெற்றுள்ளேன்” என்றார்.

அதற்கு தேவதை, “சற்று பொறுக்கவும். நாங்கள் உங்கள் பூலோக ஆவணங்களைப் படித்துப் பார்த்து விட்டு, நீங்கள் படித்த நூல்கள் கடவுளுக்காகவா அல்லது ஆரவாரப் பாராட்டுதலைப் பெறவா என்பதைத் தெரிந்து கொண்டு, உங்களுக்கு அனுமதி தருவதைப் பற்றி தீர்மானிப்போம்” என்றார்.

அடுத்து ஒரு சந்நியாசி தேவதையிடம், “என்னை அனுமதிக்கவும். நான் பல முறை பட்டினி / உபவாசம் இருந்துள்ளேன்”என்றார்.

அதற்கு தேவதை, “சற்று பொறுக்கவும். உங்கள் எண்ணங்கள் புனிதமாக இருந்திருக்கிறதா என்னும் விபரத்தை  நாங்கள் கண்டு பிடித்த பின் கூறுகிறோம்”  என்றார்.

மூன்றாவதாக ஒரு ஏழை மனிதன், “என்னை உள்ளே அனுமதிப்பீர்களா?” என விசாரித்தான்.

தேவதை அவனிடம், “நீ வாழ்க்கையில் என்ன செய்திருக்கிறாய் எனக் கூறவும்” என்றார்.

அதற்கு அவன் சற்று தயக்கத்துடன், “நடக்க முடியாத, வேலை செய்து பணம் கிடைக்க வழியில்லாத ஒரு முடவனுடன் என் உணவைத் தினசரி பகிர்ந்து கொண்டேன். அவன் இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்து,  தினமும் ஒரு பானை நிறைய தண்ணீர் அவனுக்கு நிரப்பி வைத்தேன். கடவுளிடம், துன்பத்தில் இருப்பவர்களுக்கு சேவை செய்யும் ஒரு வேலைக்காரனாக என்னை மாற்றும்படி வேண்டிக் கொண்டேன்” என்றான்.

தேவதை அவனிடம், “அழிவுள்ள மனிதப் பிறவியில் நீ போற்றத் தக்கவன்! இச் சிறு பாதையில் நடந்து, நீ அழிவற்ற சொர்க்கத்தை அடைந்துள்ளாய். சொர்க்கத்தின் வாசல் உனக்காக திறந்துள்ளது!” என்ற பதில் வந்தது.

நீதி:

தேவைப் பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் சேவை செய்பவர்களே கடவுளுக்கு உரியவர்கள். மானவ சேவையே மாதவ சேவை ஆகும். அவர்களுள் கடவுளைக் காண்பீர்களாக!

உழைக்கும் கரங்களே உலகை உருவாக்கும் கரங்கள் – காந்திஜி

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

அக்கறையுள்ள மகன்

நீதி: நன்னடத்தை

உபநீதி: மரியாதை, அன்பு

ஒருவன், தனது தாயை இரவு உணவிற்காக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். சற்று பலவீனமாக இருந்த அவன் வயதான தாய் சாப்பிடும் போது, உணவெல்லாம் ஆடை மேல் சிந்தியது. அங்கிருந்த எல்லோரும் வெறுப்போடு அவரைப் பார்த்தனர். ஆனால் மகன் மிகவும் சாந்தமாக காணப்பட்டான்.

தாயார் உணவு சாப்பிட்டு முடித்தவுடன், மகன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் தாயைக் கை கழுவும் இடத்திற்குக் கூட்டிச் சென்றான். அங்கு அவரின் ஆடையில் சிந்திய உணவை சுத்தம் செய்து, அதனால் ஏற்பட்ட கறையை நீக்கி, அவரின் தலைமுடியை சரிசெய்து மூக்குக் கண்ணாடியை ஒழுங்காகப் போட உதவினான். அவர்கள் வெளியே சென்ற போது, உணவகத்தில் உள்ள அனைவரும் அமைதியாக அவர்களைப் பார்த்தனர்.  மேலும் கீழும் உணவு சிந்திய போதிலும், மகன் அதைப் பொருட்படுத்தாமல் இருந்ததைப் பார்த்து அவர்கள் பிரமித்துப் போனார்கள்.

சாப்பிட்ட தொகையை உணவகத்தில் கட்டிவிட்டு, மகன்  தன் அம்மாவோடு வெளியே நடந்து சென்றான்.

அந்தச் சமயத்தில், சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு முதியவர் மகனைப் பார்த்து, “எதையாவது விட்டு விட்டீர்களா?” என்று வினவினார்.

“இல்லை ஐயா” என்று அவன் பதிலளித்தான்.

அதற்கு முதியவர், “ஆம்! ஒவ்வொரு மகனும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு தாய்க்கும் நம்பிக்கையையும் விட்டுச் செல்கிறீர்கள்” என்றார்.

உணவகம் நிசப்தமாக இருந்தது.

நீதி:

நம் வயதான பெற்றோர்களை மறக்கக் கூடாது. அவர்களின் தோற்றத்தையோ, நடத்தையை பற்றியோ சங்கடப்பட கூடாது. நம் மேல் தன்னலமற்ற அன்பை செலுத்தக் கூடியவர்கள், பெற்றோர்களை விட வேறு யாராக இருக்க முடியும்? அந்த வகையில், தாயார்களை உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கலாம். அவர்கள் நமக்காகச் செய்த அனைத்திற்கும் நன்றி உணர்வோடு இருப்போம்; அன்பு மற்றும் மரியாதையை அவர்களுக்குச் செலுத்துவோம்.

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com