Archive | March 2019

கலியுகம்

நீதி – பக்தி

உபநீதி – நாமஸ்மரணம்

அரசர் யுதிஷ்டிரரின் ஆட்சியின் போது, நாட்டு மக்களின் பிரச்சனைகளை பீமன் தீர்த்து வைத்தார். அதனால், எவருக்கேனும் கேள்விகளோ, பிரச்சனைகளோ இருந்தால், அவரிடம் மட்டுமே உதவி நாடி வந்தனர். ஒரு நாள், விசித்திரமான சம்பவம் ஒன்றை கவனித்ததாக ஒரு மனிதன் கூறினான். அவன் வீட்டு வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்திருப்பதாகவும், அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் கூறினான். சாதாரணமாக, அரக்கர்களின் தொல்லைகளால் அவதிப்பட்ட மக்களை காப்பாற்றுவது பீமனுக்கு சகஜமாக இருந்தது; ஆனால், இதைப் போன்ற விஷயங்களைக் கண்டு பீமனுக்கு வியப்பாக இருந்ததால், அவனை யுதிஷ்டிரரிடம் செல்லும் படியாக அவர் கூறினார்.

அதே தினத்தில், இன்னொரு விசித்திரமான சம்பவமும் நடந்தது. வேறொருவன் தன் கதையை இவ்வாறு கூறினான் – அவனிடம் ஒரு பானை நிறைய தண்ணீர் இருந்தது. அதை முதலில் சிறிய பானைகளில் நிரப்பிய பிறகு, மறுபடியும் அச்சிறிய பானைகளிலிருந்து பெரிய பானைக்குள் நிரப்பிய போது, பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருந்தது. இதற்கும் பதில் ஒன்றுமே தெரியாமல் தவித்த பீமன், அம்மனிதனையும் யுதிஷ்டிரரிடம் சென்று கேட்குமாறு அனுப்பினார். கூடிய விரைவில், மூன்றாவதாக ஒரு மனிதன் மற்றொரு விசித்திரமான சம்பவத்துடன் பீமனிடம் வந்தான். ஒரு யானையின் பெரிய உடம்பு, ஊசியின் சிறிய துளை வழியாக செல்கிறது; ஆனால், ஆச்சரியப்படும் வகையில் யானையின் வால் அந்த ஊசியின் துளையில் சிக்கிக் கொண்டு விடுகிறது, என்று அந்த மனிதன் புகார் கூறினான். பீமன் மறுபடியும் அம்மனிதனை யுதிஷ்டிரரிடம் அனுப்பி வைத்தார். தற்சமயம், நான்காவதாக ஒரு மனிதன் அங்கு வந்து, தெருவில் ஒரு பெரிய பாறையைப் பார்த்ததாகக் கூறினான். அப்பாறையை வலிமையுள்ள சில மனிதர்களால் நகர்த்த முடியவில்லை; ஆனால், ஒரு சாது கோல் ஒன்றை அசைத்து, அப்பாறையை நகர்த்தியதாகக் கூறினான். இந்த விசித்திரமான சம்பவங்களைப் பார்த்த பீமனின் ஆர்வம் தூண்டி விடப் பட்டது. அவரும் இம்மனிதர்களுடன் யுதிஷ்டிரரிடம் சென்று, இந்த விசித்திரமான சம்பவங்களுக்கு காரணத்தை தெரிந்து கொள்ள விரும்பினார்.

எல்லோரும் சேர்ந்து யுதிஷ்டிரரிடம் சென்று, இந்த சந்தேகங்களைப் பற்றி விசாரித்தனர். அதற்கு அவர், இந்த சம்பவங்கள் அனைவற்றும் வரப் போகின்ற கலியுகத்தை குறிப்பிடுகின்றன என்று கூறி, கீழ்கண்டவாறு விளக்கினார்.

ஒருவனின் வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்த முதலாவது சம்பவத்தில், மற்றவர்களின் உடைமைகளின் மீது ஆசைப்படுவதை குறிக்கின்றது. மன வேதனைகள் மற்றும் கோபம் போன்ற உணர்வுகளுக்கு வழி வகுத்து, மற்றவர்களைப் போல நம்மிடம் இல்லையே என்ற எண்ணங்கள் இருப்பதனால், அதை அடைவதற்கு தகாத வழிகளை தேர்ந்தெடுத்தனர்.

பெரிய பானையிலிருந்து சிறிய பானைகளுக்கு தண்ணீரை ஊற்றி, பிறகு சிறிய பானைகளிலிருந்து பெரிய பானைக்கு ஊற்றும் போது பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும் இரண்டாவது சம்பவத்தில், நாம் செலுத்தும் அன்பு / கருணை / உதவியை ஒப்பிடும் போது, நமக்கு மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு 50% மட்டுமே இருக்கிறது.

ஒரு யானையின் பெரிய உடம்பு ஊசியின் சிறிய துளை வழியாக செல்கிறது; ஆனால், ஆச்சரியப்படும் வகையில் யானையின் வால் அந்த ஊசியின் துளையில் சிக்கிக் கொண்டு விடுகிறது என்ற மூன்றாவது சம்பவத்தில், மனிதர்கள் தங்களின் வருமானம் / வலிமை / வளம் போன்றவற்றை குடும்பம், நண்பர்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்காக செலவழிக்க தயாராக இருக்கின்றனர்; ஆனால், கடவுளுக்கோ, கடவுளின் சேவைகளுக்கோ, சிறிதளவு கூட செலவழிக்க மனம் வருவதில்லை.

ஒரு பெரிய பாறையை வலிமை மிகுந்த மனிதர்களால் நகர்த்த முடியாத நிலைமையில், ஒரு சாது தன் கோலால் சுலபமாக நகர்த்தி விட்டார். இந்த சம்பவம், நாம சங்கீர்த்தனத்தின் மகிமையால், பாவங்களை நிவர்த்தி செய்ய முடியும் என்பதைக் குறிக்கின்றது.

மேலும் யுதிஷ்டிரர், கலியுகத்தில் அளவு கடந்த குறைபாடுகள் இருக்கின்றன, ஆனாலும் நாமஸ்மரணம் செய்வதனால் ஒருவனுக்கு மோக்ஷம் கிடைக்கும் என்பது ஒரு நல்ல விஷயம்.

காலேர் தோஷ-நிதே ராஜன்

அஸ்தி ஹி ஏகோ மஹான் குண:

கீர்த்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய

முக்த-ஸங்க: பரம் வ்ரஜேத்.

அன்புள்ள அரசரே, கலியுகத்தில் பாவங்கள் ஒரு விசாலமான சாகரமாக வெளிப்படுகின்றன. ஆனாலும், பகவான் கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிப்பதால், ஒருவன் நிலையற்ற வாழ்க்கையைக் கடந்து, வைகுண்டம் என்ற சாஸ்வதமான நிலையை சுலபமாக அடைகிறான்.

நீதி:

கலியுகத்தில், பகவானின் நாமத்தை தொடர்ந்து ஜபித்தால், அவரின் ஆசீர்வாதத்தை சுலபமாக பெறலாம். பழைய யுகங்களில் இருந்ததைப் போல், கடுமையான தவங்கள் ஒன்றுமே அவசியமில்லை.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

சமாதானத்தின் தூதராக பகவான் கிருஷ்ணர்

நீதி – அமைதி

உபநீதி – நேர்மை / நியாயம்

பாண்டவர்களுடன் சமாதானம் செய்து, போரை தவிர்க்க வேண்டும் என்று சஞ்சயன் அளித்த அறிவுரையை துரியோதனன் நிராகரித்ததால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அமைதியை நிலைநாட்டுவதற்காக, பாண்டவர்களின் தூதராக ஹஸ்தினாபுரத்திற்கு செல்ல தீர்மானித்தார்.

அரசவையில் கிருஷ்ணருக்கு இன்முகமான வரவேற்பு கிடைத்தது. கிருஷ்ணர் துரியோதனனிடம், “நான் பாண்டவர்களிடமிருந்து ஒரு வேண்டுகோளுடன் வந்துள்ளேன். பாண்டவர்கள் போரை தவிர்த்து, அமைதியை விரும்பும் மனப்பான்மையுடன் இருப்பதால், ராஜ்ஜியத்தை முழுமையாக திருப்பி கொடுப்பதற்கு பதிலாக, ஐந்து கிராமங்களை மட்டுமே வழங்கினால் போதுமானது” என்றார்.

துரியோதனன் இகழ்ச்சியாக, “ராஜ்ஜியம் முழுவதுமே என்னை சேர்ந்தது. நான் ஊசியின் முனை அளவு கூட, நிலத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. எச்சமயமும் அவர்களை சார்ந்தே நீ பேசுகிறாய். நான் உன்னை சிறையில் அடைக்கப் போகிறேன்” என்றான். துரியோதனன் படை வீரர்களிடம் கிருஷ்ணரை சிறையில் அடைக்கக் கட்டளை விடுத்தான்.

கிருஷ்ணர் தன் விராட்ட ரூபத்தை வெளிப்படுத்தினார்; எல்லோரும் பயந்தனர். பிறகு, கிருஷ்ணர் அரசவையிலிருந்து வெளியே சென்றார். கோரிக்கை நிராகரிக்கப் பட்டதால், பகவான் கிருஷ்ணர் தர்மத்தைக் காக்க, போர் தான் ஒரே வழி என்று தீர்மானித்தார்; தவிர்க்க முடியாதது நடந்தது.

நீதி:

ஒருவரின் மனது, அகம்பாவம், பொறாமை, வெறுப்பு மற்றும் பேராசையில் மூழ்கியிருக்கும் போது, மகாபாரதத்தில் நிகழ்ந்தது போல, வேறுபடுத்தி பார்க்கும் தன்மையை இழந்து, தனக்கும் மற்றும் குலத்திற்கே அழிவை தேடிக் கொள்கிறது. “தர்மம் சரிந்து, அதர்மம் தலை ஓங்கிய நிலைமையில் இருக்கும் போது, நல்லோரை காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் அவதாரம் எடுப்பேன்” என்று பகவான் கிருஷ்ணர் கூறினார். மேற்கூறிய கதை, பகவான் கிருஷ்ணரின் உறுதிமொழியை வெளிப்படுத்துகிறது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

அமைதியின் ஓவியம்

நீதி – அமைதி

உபநீதி – நிசப்தம், மன நிம்மதி

ஒரு ஊரில், ஒரு அரசர் இருந்தார். அவர், அமைதியைச் சித்தரிக்கும் சிறந்த ஓவியத்திற்குப் பரிசளிப்பதாக அறிவித்தார். பல ஓவியர்கள் முயற்சி செய்தனர். அரசர் அனைத்து ஓவியங்களையும் பார்வையிட்டார்.

அங்கு இருந்த ஓவியங்களில், இரண்டு ஓவியங்கள் மட்டுமே அரசரை மிகவும் கவர்ந்தன. அவற்றில் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. முதல் படத்தில், ஒரு அமைதியான ஏரி இருந்தது. அந்த ஏரி, சுற்றியுள்ள உயர்ந்த மலைகளின் பிம்பங்களைப் பிரதிபலித்தது; வெண் மேகங்களுடன் கூடிய அழகான நீல நிற வானம் இருந்தது. அந்த ஓவியத்தைப் பார்த்த அனைவரும், இது தான் அமைதிக்கான சிறந்த ஓவியம் என நினைத்தனர்.

இரண்டாவது படத்திலும், பல மலைகள் காணப்பட்டன; ஆனால், அவை கரடு முரடாகவும், வறண்டும் இருந்தன. மேலும் அப்படத்தில், ஆக்ரோஷமான இடி, மின்னலுடன் கூடிய வானம், மற்றும் மலைகளை ஒட்டி வேகமாக கொட்டும் நீர் அருவிகள், என எவ்வித அமைதியும் நிலவாத ஒரு சூழல் வரையப்பட்டிருந்தது.

அரசர் கூர்ந்து கவனித்தார். அந்த நீரருவிக்குப் பின்னால், விரிந்த பாறையிலிருந்து வளர்ந்த ஒரு சிறிய புதரில் ஒரு தாய்க் குருவி கூடு கட்டியிருந்தது. அருவியின் சத்தத்திற்கு இடையில், அந்தத் தாய்க்குருவி, தன் கூட்டில் மிகவும் அமைதியாகவும் நிம்மதியாகவும் காணப்பட்டது.

அரசர் இந்த இரண்டாவது படத்தை தேர்ந்தெடுத்தார்.

நீதி

ஒரு அமைதியான சூழலில், நிம்மதியாகவும், நிசப்தமாகவும் இருப்பது எளிது; ஆனால், மிகவும் சத்தமான மற்றும் கூட்டமான இடங்களில் அமைதியைத் தேடுவது கடினம். நாம் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வெளியில் தேட வேண்டிய அவசியமில்லை. நம்முள்ளேயே தேடக் கற்றுக் கொள்ள வேண்டும். நம்முள்ளேயே உறைந்திருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் நாம் கண்டு பிடித்தால், வெளிப்புறச் சூழ்நிலை நம்மை பாதிக்காது.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

மூன்று விதமான மனிதர்கள்

நீதி – நன் நடத்தை / உண்மை

உபநீதி – நம்பிக்கை / விசுவாசம்

ஒரு ஆசிரியர், மூன்று பொம்மைகளை ஒரு மாணவனிடம் காண்பித்து, அவைகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை கண்டுபிடிக்க சொன்னார். பரிமாணம், வடிவம் மற்றும் வஸ்து என்ற வகைகளில் அவை மூன்றுமே ஒரே மாதிரியாக இருந்தன. கூர்ந்து கவனித்த பின், மாணவன் அப்பொம்மைகளில் துளைகளை கண்டு பிடித்தான். முதல் பொம்மையில், காதுகளில் துளைகள் இருந்தன. இரண்டாவது பொம்மையில், காது மற்றும் வாயில் துளைகள் இருந்தன. மூன்றாவது பொம்மையில் ஒரு காதில் ஒரு துளை இருந்தது.

மாணவன், ஒரு மெல்லிய நீண்ட வைக்கோலை எடுத்து, முதல் பொம்மையின் ஒரு காது வழியாக நுழைத்தான்; ஆச்சரியமாக, மற்றொரு காது வழியாக அவ்வைக்கோல் வெளியே வந்தது. அடுத்ததாக, ஒரு காது வழியாக வைக்கோலை நுழைத்த போது, வாய் வழியாக வெளியே வந்தது. மூன்றாவது பொம்மையில், வைக்கோலை ஒரு காது வழியாக நுழைத்த போது, அது எங்கிருந்தும் வெளியே வரவில்லை.

இதற்குப் பிறகு, மாணவன் ஒரு தீர்மானத்திற்கு வந்தான். உங்களைச் சுற்றி இருக்கும் சிலர், நீங்கள் சொல்வதை கூர்ந்து கவனித்து, உங்கள் மேல் அக்கறை இருப்பது போல நடிக்கின்றனர். எல்லாவற்றையும் கேட்ட பிறகு, முதல் பொம்மையின் வைக்கோல் மற்றொரு காது வழியாக வெளியே வருவது போல, நீங்கள் கூறிய அனைத்து விஷயங்களையும் மறந்து விடுகின்றனர். இவ்வகையான மனிதர்களுடன் சற்று கவனித்துப் பழக வேண்டும்.

இரண்டாவது பொம்மையைப் போல, சிலர் நீங்கள் கூறுவதை கவனித்து, அக்கறை காண்பிப்பது போல நடிக்கின்றனர். ஆனால், நீங்கள் நம்பிக்கையுடன் கூறியதை உளறி விடுகின்றனர்.

மூன்றாவது பொம்மையில், வைக்கோல் எந்த வழியாகவும் வெளியே வருவதில்லை. அதே போல, இவ்வகையான மனிதர்கள் நம்பிக்கையுடனும், விசுவாசத்துடனும் நடந்து கொள்கின்றனர். இவர்களை முழுமையாக நம்பலாம்.

நீதி:

எப்பொழுதும் நம்பிக்கை மற்றும் விசுவாசமுள்ள மனிதர்களுடன் பழக  வேண்டும். நீங்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்பவர்கள், நெருக்கடி சமயங்களில் உங்கள் உதவிக்கு கட்டாயமாக வருவார்கள் என்று சொல்ல முடியாது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

எதற்கு முன்னுரிமை?

நீதி: அமைதி, பொறுமை

உபநீதி: அவசரப்படாமல் செயற்படுதல், கோபத்தை அடக்குதல்

ஒருவர் தனது புத்தம் புதிய மோட்டார் வண்டியை மெருகேற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் நான்கு வயது மகள், வாகனத்தின் மறுபக்கத்தில் கல்லால் கிறுக்கிக் கொண்டிருந்தாள். இதைக் கண்ட அவர், மிகுந்த கோபத்துடன், தன் மகளின் கையில் பலமுறை அடித்தார். அவர் கையில் இருந்த குறடால் அவளை அடித்ததை, பிறகு தான் உணர்ந்தார். உடனே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்; ஆனால், கை விரல்களின் எலும்புகள் அனைத்தும் முறிந்து இருந்தன.

மிகுந்த வலியுடன் இருந்த அவள், தன் தந்தையைப் பார்த்து, “அப்பா, எனது கை விரல்கள் எப்போது வளரும்?” எனக் கேட்டாள். அதைக் கேட்ட தந்தை மிகவும் வேதனைப்பட்டு, பதில் ஒன்றுமே பேச முடியாமல் தவித்தார். அவர் திரும்பிச் சென்று தனது வாகனத்தை கோபத்துடன் பலமுறை உதைத்தார். தனது செயலால் உடைந்து போய், வாகனத்தின் முன்பு உட்கார்ந்து, அதன் மீது இருந்த தன் மகளின் கிறுக்கலைப் பார்த்தார். அதில் “நான் என் அப்பாவை நேசிக்கிறேன்” என்று எழுதி இருந்தாள்.

நீதி:

கோபம் மற்றும் அன்புக்கு எல்லையே இல்லை. “பொருட்களை பயன்படுத்த வேண்டும், மனிதர்களை நேசிக்க வேண்டும்” என்ற எண்ணத்தை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் “பொருட்களை நேசித்து, மனிதர்களை பயன்படுத்துகிறோம்” என்பது வருந்தத்தக்க விஷயம். பொறுமையை மேம்படுத்திக் கொண்டு,  கோபத்தை அடக்கிக் கொண்டால் மட்டுமே நாம் அன்பை எல்லோரிடத்திலும் வளர்த்துக் கொள்ள முடியும்.

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com