Archive | January 2018

அரசரும் இஸ்லாமியத் துறவியும்

நீதி – உண்மை

உபநீதி – பக்தி / பேராசை

ஒரு முறை அரசர் ஒருவர், ஒரு இஸ்லாமியத் துறவியை இரவு உணவிற்கு அழைத்திருந்தார்; இன்னும் பல பண்டிதர்களையும் இவ்விருந்திற்கு அழைத்திருந்ததால், அரசர் அவர்களுடன் ஒன்றாக உணவு மேஜையில் துறவிக்காக காத்திருந்தார். அந்த இஸ்லாமியத் துறவி சாதாரண ஆடையை அணிந்து கொண்டு அங்கு வந்தார். அதைக் கண்ட அரண்மனைக் காவலாளிகள் துறவியை அடையாளம் தெரியாததால், அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. பிறகு அந்தத் துறவி பொருத்தமான ஆடை அணிந்து மீண்டும் அரண்மனைக்கு வந்தார். அப்பொழுது அவரை அமோகமாக வரவேற்றனர். உணவு மேஜையில் அமர்ந்தவுடன், அவர் தன் மேலங்கியை எடுத்து தன் அருகில் உள்ள நாற்காலியில் வைத்தார். உணவு பரிமாறப்பட்டவுடன், அதை எடுத்து அந்த மேலங்கிக்குக் கொடுத்தார். அங்கு இருந்தவர்களுக்கெல்லாம், இச்செயல் முட்டாள்தனமாக இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு செயல் ஒரு அறிவாளிக்குப் பொருந்தாது என்று அனைவரும் வியந்தனர். அரசர் துறவியைப் பார்த்து, “உயிரற்ற பொருளாகிய இந்த மேலங்கிக்கு எதற்கு உணவளிக்கிறீர்கள்? மிகவும் கீழ்த்தரமான செயலாக இருக்கிறதே?” என்று கேட்டார். ஞானியாகிய அந்த குரு, “என்னுடைய வெளித் தோற்றத்தை அடையாளம் காண்பிக்கும் வகையில், இந்த மேலங்கியால் தான், நான் இந்த அரண்மனைக்குள் அனுமதிக்கப்பட்டேன். அதனால், என்னை விட இந்த அங்கிக்குத் தான் மதிப்பும் மரியாதையும் அதிகம். மக்கள் இந்த அங்கியைத் தான் நன்றாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்; அதனால் தான் நான் உணவு உட்கொள்வதற்கு பதிலாக இந்த மேலங்கிக்கு உணவளிக்கிறேன்”  என்று கூறினார்.

நீதி:

மனிதன், உலக விஷயங்களான உடைமைகள் மற்றும் குடும்பம் மேல் பற்று வைத்திருக்கிறான். அவனுடைய குடும்பமும் நண்பர்களும் அவனை மிகவும் நேசிப்பதாக நினைக்கிறான்.

அவர்களுக்காகத் தன்னால் முடிந்தவரைக் கடினமாக உழைக்கிறான். அவன் முதுமையடைந்து, உடல் தளர்ச்சியடையும் போது தான்,  “நம்மை விரும்பியவர்கள் நம் உடமைகளுக்காகவும், நாம் அவர்களுக்குக் கொடுத்து வந்த பொருட்களுக்காகவும் தான் நம்மை விரும்பினார்கள்” என்பது அவனுக்குப் புரிகிறது. அவன் தெளிவடைகிறான். யார் தன்னையும், தன் உணர்வுகளையும் மதிப்பார்கள் என்று நினைத்தானோ, அவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதாகத் தெரிவதில்லை. இதை அவன் தன் வாழ்க்கையில் மிகவும் தாமதமாகத் தான் உணர்கிறான்.

அதனால் ஆதி சங்கரர், நம்மை இளம் வயதிலேயே இந்த உண்மையை உணரும்படி அறிவுறுத்துகிறார். மேலும், “பிறரிடம் அன்பு காட்டுங்கள், கடமையை செய்யுங்கள்; ஆனால், அவர்களிடம் பற்று வைக்காதீர்கள். மாறாக, நம்முடன் என்றென்றும் நிலைத்திருக்கும், நம்மை ஒரு போதும் கைவிடாத அந்த இறைவனின் நாமத்தை எச்சமயமும் உச்சரித்து கொண்டிருக்கும் பழக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

வாழ்க்கை நிலையற்றது

நீதி – உண்மை

உபநீதி – பகுத்தறிவு, ஆழ்ந்த உணர்தல், மதிப்பீடு செய்தல்

Life is transitory picture 1ஒரு சமயம், அமெரிக்கச் சுற்றுலாப் பயணி ஒருவர் எகிப்து நாட்டின் கெய்ரோ பகுதியில் வசித்த பிரபலமான மற்றும் விவேகமுள்ள மனிதர் ஒருவரை பார்க்கச் சென்றார். அந்த மனிதரின் இல்லத்திற்குச் சென்ற போது, அவரிடம் மிகக் குறைவான பொருட்களே இருந்தன. அந்த அறையில் ஒரு படுக்கை, மேஜை மற்றும் நீண்ட இருக்கை மட்டுமே இருந்தன.

பயணி ஆச்சரியத்துடன் அறிவுள்ள மனிதரிடம், “உங்களுடைய மற்ற சாமான்கள் எல்லாம் எங்கே?” என்று கேட்டார். உடனே அவர் பதில் ஒன்றும் கூறாமல் அதே கேள்வியைப் பயணியிடம் கேட்டார். “என்னுடையதா?” என்று வியப்புடன் கேட்ட பயணி, “நான் ஒரு பயணி தானே; சில நாட்களில் சென்று விடுவேன்” என்றார்.

அதை கேட்டவுடன் அறிவுள்ள மனிதர், “பூலோகத்தில் நம் வாழ்க்கை நிலையற்றது. ஆனாலும், சிலர் இங்கேயே நிரந்தரமாக வாழ்வதாக நினைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க மறந்து விடுகிறார்கள். நானும் உன்னைப் போல தான். சிறிது நாட்கள் இருந்து விட்டு சென்று விடுவேன்” என்று பதிலளித்தார்.

நீதி:

Life is transitory picture 2தாமரையில் இருக்கும் பனித் துளிகள் போல வாழ்க்கையும் நிலையற்றது என்று ஆதி சங்கரர் விவரமாகக் கூறுகிறார். தாமரை சேற்றில் வளர்ந்தாலும், சுற்றுப்புறச் சூழலால் பாதிக்கப் படுவதில்லை.

நீர் துளிகள் தாமரை இலையின் மேல் இருந்தாலும், அது அவற்றுடன் ஒட்டுவதில்லை. அதே போல, நம் நிலையற்ற வாழ்க்கையிலும் நோய், துக்கம், அகங்காரம் என்றிருந்தாலும், தாமரையைப் போல நாம் இந்த நிலையற்ற வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நிரந்தரமானதை நாடிச் செல்ல வேண்டும். இந்த நிலையற்ற வாழ்க்கையின் தன்மையை உணர்ந்து, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும். கடவுளை நினைத்து நாமஸ்மரணம் செய்தால், நமக்கு உண்மையான அன்பு, பேரின்பம் மற்றும் எது நிரந்தரமோ அது கிடைக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

சாந்தனுவும் சத்யவதியும்

நீதி: நன் நடத்தை

உபநீதி: உண்மை / பகுத்தறிவு / பேராசை 

Shantanu and sathyavati1ஒரு நாள், ராஜா சாந்தனு யமுனை ஆற்றின் கரையில் உலாவிக் கொண்டிருக்கும் போது, தென்றலில் தெய்வீக நறுமணம் சூழ்ந்திருந்ததை உணர்ந்து, அதற்குக் காரணம் என்னவென்று யோசித்தார்; சற்று நேரத்தில், தேவதைப் போல ஒரு கன்னிப் பெண்ணைப் பார்த்தார். இந்தப் பெண்ணிடமிருந்து வனம் முழுவதும் நறுமணம் பரவ வேண்டும் என்று ரிஷி ஒருவர் அவளுக்கு வரம் அளித்திருந்தார். ராஜாவின் துணைவி கங்கை அவரை விட்டுச் சென்ற பின், அவர் தன் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்; ஆனால் இந்த தேவதையைப் பார்த்தவுடன், தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல், அவளிடம் சென்று தன் மனைவியாக இருக்குமாறு அவளை வேண்டினார்.

அந்தப் பெண், “நான் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவள்; தலைவராகத் திகழும்Shantanu and sathyavati2 என் தந்தையிடம் பேசி, அவரிடமிருந்து சம்மதம் கேட்டுக் கொள்ளவும்” என்றாள். அவள் தோற்றத்தைப் போலவே அவளின் குரலும் மென்மையாக இருந்தது.

அவள் தந்தை கூர்மதியுடையவராகத் திகழ்ந்தார். ராஜாவிடம் அவர், “எல்லோரையும் போல என் பெண்ணும் ஒரு நாள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்; நீங்கள் அவளுக்கு ஏற்றவர் தான். ஆனால், அவளை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, நீங்கள் எனக்கு ஒரு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

அதற்கு சாந்தனு, “ஒரு வாக்கு மட்டும் கொடுக்க வேண்டுமென்றால் நான் ஒத்துக் கொள்கிறேன்” என்றார்.

Shantanu and sathyavati3உடனே, மீனவர் சமுதாயத்திற்கே தலைவராகத் திகழ்ந்த அவளின் தந்தை, “இவளுக்கு பிறக்கும் குழந்தை உங்களுக்குப் பிறகு ராஜாவாக ஆட்சி புரிய வேண்டும்” என்றார்.

மீனவரின் பெண்ணின் மேல் மிகுந்த அன்பு இருந்த போதிலும், இந்த வாக்கை ராஜாவால் கொடுக்க முடியவில்லை; ஏனெனில், கங்காவிற்குப் பிறந்த அவர் மகன் தேவவ்ரதனிற்குத் தான் ராஜாவாக ஆட்சிப் புரிய தகுதியுண்டு எனக் கருதினார். அதனால், ராஜா வேறு விதமாக யோசனை கூடச் செய்ய முடியாமல் ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பி சென்றார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை; ஆனால், மிகுந்த வருத்ததுடன் மெளனமாக இருந்தார்.

ஒரு நாள் தேவவ்ரதன் தந்தையிடம், “உங்கள் மனதிற்கு விருப்பப்பட்டShantanu and sathyavati4 எல்லாமே இருக்கும் போது ஏன் சோகமாக இருக்கிறீர்கள்? நீங்கள் அனுபவிக்கும் ஏதோ ஒரு மன வேதனையை இரகசியமாக வைத்திருக்கும் காரணம் என்ன?” எனக் கேட்டான்.

அதற்கு ராஜா, “ஆம், நீ சொல்வது உண்மை; மன சஞ்சலம் மற்றும் வேதனையால் தவிக்கிறேன். நீ என்னுடைய ஒரே மகன்; உன் எண்ணங்கள் எச்சமயமும் ராணுவ லட்சியங்களில் இருக்கின்றன. வாழ்க்கையும் உறுதியல்ல, போர்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். உனக்கு ஏதாவது நடக்கக் கூடாதது நடந்து விட்டால், நம் குடும்பமே காணாமல் போகி விடும். நீ நூறு மகன்களுக்கு சமம் என்று நான் அறிவேன். ஆனால் Shantanu and sathyavati5நன்றாக வேதம் படித்தவர்களைக் கேட்டால், ஒரு மகன் இருப்பதற்கும், ஒன்றுமே இல்லாததற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை எனச் சொல்வார்கள். நம் குடும்பம் நீண்ட காலம் தொடர்ந்து வாழ்வதற்கு ஒரு மகன் மேல் மட்டும் சார்ந்திருக்கக் கூடாது என்பது என் அபிப்பிராயம். இது தான் என் கவலைக்கு காரணம்” என்றார். மகனிடம் நடந்ததைச் சொல்ல அவமானமாக இருந்ததால், இப்படி பட்டும் படாத வகையில் பேசினார்.

தந்தையின் மன சஞ்சலத்திற்கு ஏதோ ஒரு ரகசியக் காரணம் இருக்க வேண்டும் என்று விவேகமுடைய மகன் புரிந்து கொண்டான். தந்தையின் தேர்ப்பாகனிடம் விசாரித்த போது, யமுனை ஆற்றுக் கரையில் அவர் அந்த மீனவப் பெண்ணுடன் பேசியது தெரிய வந்தது. உடனே மகன், மீனவ சமுதாயத்தின் தலைவரிடம் சென்று, அவர் மகளைத் தன் தந்தைக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டான். பெண்ணின் தந்தை மரியாதையுடன் ஆனால் உறுதியாக, “என் பெண்ணுக்கு உன் தந்தையைத் திருமணம் செய்து கொள்ள எல்லாத் தகுதிகளும் உள்ளன; அக்காரணத்தால் அவள் மகன் உன் தந்தைக்குப் பின் வாரிசாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், உன் தந்தைக்குப் பின் நீ என்றிருக்கும் போது, இது கல்யாணத்திற்குத் தடையாக இருக்கிறது!” என்றார்.

Shantanu and sathyavati6அதற்கு தேவவ்ரதன், “உங்கள் பெண்ணிற்குப் பிறக்கும் மகன் நிச்சயமாக ராஜாவாக இருப்பான் என்ற உறுதிமொழியை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் அந்த தகுதியை இழக்கத் தயாராக இருக்கிறேன் என்பதையும் உங்களிடம் சொல்ல ஆசைப் படுகிறேன்” என்றான்.

அதற்கு மீனவத் தலைவர், “பாரதத்தின் தலை சிறந்த மகனே! ராஜ குடும்பத்தில் பிறந்தவர் எவருமே இதைப் போல ஒரு சிறப்பான விஷயத்தைச் செய்ததில்லை. நீ உண்மையாகவே வீரன். உன் தந்தையின் திருமணத்தை நீயே நடத்தி வைக்கலாம். ஆனால் பெண்ணின் தந்தை என்ற முறையில், நான் சொல்வதைப் பொறுமையாகக் கேள். நீ கொடுத்த உறுதிமொழியை மீறி நடந்து கொள்ள மாட்டாய் என நம்புகிறேன். ஆனால் உனக்குப் பிறக்கும் குழந்தைகளும் அப்படி இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்? உன்னைப் போலவே உன் குழந்தைகளும் வீரர்களாக இருப்பார்கள். ராஜ்ஜியத்தை வலுக் கட்டாயமாகக் கேட்டால் என்ன செய்ய முடியும்? இந்தச் சந்தேகம் தான் என் மன சஞ்சலத்திற்குக் காரணம்” என்றார்.

இந்தக் குழப்பமான கேள்விக்குப் பிறகு, தந்தையின் ஆசைகளை எப்படியாவது பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்த தேவவ்ரதன் இன்னும் ஒரு உறுதியான வாக்கு கொடுத்தான். நிமிர்ந்த சிரத்துடன் அவன், “நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன். என் வாழ்க்கையை இவ்வகையான பண்புகளோடு தூய்மையாக வாழ்வேன்” என்றான். இதை உச்சரிக்கும் போது, தேவ லோகத்திலிருந்து தேவர்கள் அனைவரும் அவர் மீது மலர்களைத் தூவி, “பீஷ்மர்” “பீஷ்மர்” என வாழ்த்தினர்.

ஒரு தீவிரமான உறுதிமொழியை மேற்கொண்டு, அதை வெற்றிகரமாக நிறைவேற்றுபவருக்குத் தான் பீஷ்மர் என்ற பெயர் கொடுக்கப்படுகிறது. அந்த நிமிடத்திலிருந்து தேவவ்ரதனிற்கு பட்டப் பெயராக பீஷ்மர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

இவ்வாறு பீஷ்மர் (கங்கையின் புத்திரன்) சத்யவதியைத் தன் தந்தையிடம் கொண்டு சேர்த்தார். சில காலங்களில், சத்யவதி மற்றும் சாந்தனுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர்; சித்ராங்கதனும், விசித்ரவீர்யனும் தந்தைக்குப் பிறகு நாட்டை ஆண்டனர். விசித்ரவீர்யனுக்கு இரண்டு மனைவிகள் – அம்பிகா மற்றும் அம்பாலிகா – அவர்களுக்கு பிறந்த மகன்கள் தான் திருதராஷ்டிரனும், பாண்டுவும்.  திருதராஷ்டிரனின் மகன்கள் தான் கௌரவர்கள். பாண்டுவின் ஐந்து மகன்கள் பாண்டவர்கள் என பிரசித்தி பெற்றனர்.

பீஷ்மர் பல வருடங்கள் குடும்பத்தினரால் மரியாதையுடன் கவனிக்கப்பட்டு, குருக்ஷேத்திர போர் முடியும் வரை வாழ்ந்தார்.

நீதி:

செல்வமும், ஆசையும் தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கின்றது. மகாபாரதத்தின் துவக்கத்தில், சாந்தனுவிற்குப் பிறகு, அரியாசனத்திற்கு தகுதி பெற்று, உரிமையுள்ள வாரிசாக அவரின் மூத்த மகன் தேவவ்ரதன் இருந்தான். ஆனால், அவர் திகிலுண்டாக்குகிற வகையில் ஒரு சபதத்தை மேற்கொண்டு, திருமணம் செய்து கொள்ளாமல், அரியாசனத்தையும் விட்டுக் கொடுத்து “பீஷ்மராக” மாறினார். (திகிலுண்டாக்குகிற  வகையில் ஒரு சபதத்தை மேற்கொண்டு, அதை நிறைவேற்றுவது தான் பீஷ்மர் என்ற சொல்லிற்கு அர்த்தம்) இப்படிச் செய்து, சத்யவதியுடன் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினார். மேலும், சத்யவதியை திருமணம் செய்து கொண்டால், அரியணை அவர்களுக்கு பிறக்கும் மகனுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் தான் சென்றடைய வேண்டும் என்ற கட்டாயமும் இருந்தது. இந்த நேர்மையற்ற கோரிக்கைக்கு ஆசையும், செல்வமும் தான் காரணமாக அமைந்தது.

சதை மற்றும் எலும்புகளால் ஆன உடலின் மேல் இருக்கும் ஈர்ப்பு தற்காலிகமானது என்று ஆதி சங்கரர் நமக்கு ஞாபகப் படுத்துகிறார். நிலையற்ற பொருட்களின் மீது ஆசை வைத்து ஏன் ஏமாற்றம் அடைகிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

அழுகிய வாழைப்பழங்கள்

Rotten bananas

நீதி – நன்நடத்தை

உபநீதி – காலம் தவறாமை

நரிமன் ஒரு நல்ல மனிதர். அவர் கடவுளை ஈடுபாட்டுடன் தியானித்து, மனோபலம் மற்றும் ஊக்கம் பெற வேண்டினார். அவரது நேரம் மற்றும் பணத்தை பெரும்பாலும் ஏழைகளின் சேவைக்காகவே செலவழித்தார். அவர் இலவச மருத்துவ முகாம்கள் நடக்கும் மருத்துவமனைகளில் சேவை செய்து வந்தார். அவர் மருத்துவமனையில் உள்ள ஏழை நோயாளிகளுக்கு பழங்களை வாங்கிக் கொடுப்பார்; சில சமயங்களில், ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகளைத் திரையரங்கிற்கு அல்லது ஐஸ் கிரீம் விருந்திற்கு அழைத்துச் செல்வார். அவர் மேற்கொண்ட ஒவ்வொரு சேவையையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சேவையாகவே கருதினார். ஒரு நாள் அவர் தனது இளைய மகனிடம், “கடவுளுக்கு வாழைப்பழங்களை நைவேத்தியம் செய்வதற்காக நான் இன்று கோவிலுக்குப் போகிறேன். அதற்குப் பிறகு, அவற்றை கோவில் வாசலில் காத்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு விநியோகிப்பேன். நீ என்னுடன் ஏன் வரக்கூடாது?” என்று கேட்டார். பதிலுக்கு அவன் “அட! நீங்கள் வேறு அப்பா!! கோவிலுக்கு செல்வது, பிரார்த்தனை செய்வது… சேவைகளில் ஈடுபடுவது… இவற்றில் எனக்கு விருப்பம் இல்லை. மேலும் இவையெல்லாம் வயதானவர்கள் செய்யும் சில விஷயங்கள். அதனால், உங்களுக்கு ஈடுபாடு இருக்கிறது. நான் ஒரு இளைஞன்; இப்பொழுது எனக்கு இதில் ஆர்வம் இல்லை. உங்களைப் போல வயதான பிறகு யோசிக்கிறேன்!” என்று கூறி, தான் கேட்டுக் கொண்டிருந்த மேற்கத்திய இசைக்கு ஏற்றவாறு, மெதுவாக தனது உடலை அசைத்துக் கொண்டிருந்தான். நரிமன் பதில் ஒன்றும் கூறாமல், தான் நினைத்த காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்காக வெளியே சென்று விட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு நரிமன், பெரிய கூடை நிறைய கனிந்த வாழைப்பழங்களை வீட்டு வாசலில் வைத்து விட்டு, குளிப்பதற்காகச் சென்றார். அச்சமயம் அவரது மகன் கூடை நிறைய கருப்பு நிற வாழைப்பழங்களையும், அவற்றை மொய்த்து கொண்டிருந்த பூச்சிகளையும் கவனித்தான். பார்வைக்கே சகிக்க முடியாத வண்ணம் சில வாழைப்பழங்கள் அழுகிய நிலையில் இருந்தன. தந்தை ஒரு வெள்ளை நிற குர்தா – பைஜாமா அணிந்து வந்து, தனது காரில் வாழைப்பழங்களை வைத்துக் கொண்டிருந்தார். மகன், “அப்பா, நீங்கள் இந்த வாழைப்பழங்களை எங்கே எடுத்துக் செல்கிறீர்கள்?” என்று கேட்டான். “கோவிலுக்கு”, என்று அவர் சர்வ சாதாரணமாகக் கூறினார்.

“ஆனால் அப்பா, இந்த வாழைப்பழங்கள் அழுகி இருக்கின்றனவே. மேலும், பூச்சிகளும் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் கடவுளுக்கு அவற்றை அர்ப்பணிக்க விரும்பியிருந்தால், குறைந்த பட்சம் புதியவற்றை வாங்கியிருக்க வேண்டும், அல்லவா? இவற்றை ஆலயத்திற்கு வழங்குவது இழிவான செயலாகும்” என்று கூறினான்.

அதற்கு நரிமன், “முதியவனாகியப் பிறகு கடவுளுக்கு சேவை செய்வது சரி என்று நினைக்கிறாய்; அந்த வயதான காலத்தில் நீ சேவை செய்வதற்கு தகுதி உள்ளவனாக இருப்பாயா? அப்படி இருப்பது சரி என்றால், இந்த பழைய, அழுகிய வாழைப்பழங்களை கடவுளுக்கு செலுத்துவது சரி தானே!” என்றார்.

மகனுக்கு என்ன பேசுவது என்று புரியாமல் தவித்தான். அவனால் தனது தந்தையின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. சரியான தருணத்தில் சரியான அஸ்திரத்தால் தாக்கியிருந்ததை தந்தை அறிந்திருந்தார். அவர் தொடர்ந்து, “இளமையும், திறனும் இருக்கும் போது இறைவனுக்கு பணியாற்ற முடியும்; சிறந்த சேவைகளை வழங்க முடியும். தேவைப்படுபவர்களுக்கு சிறிது பணத்தை செலவழித்து, நேரத்தையும் ஒதுக்க முடியும். வயதான பின்னர் நமது உடலில் பிரச்சனைகள் இருக்கக் கூடும்; சேவை செய்ய போதுமான வலிமை இருக்காது. நமக்கு செலவுகள் மற்றும்  நிதி வரம்புகள் இருக்கலாம். நாம் தியானத்தில் உட்கார முடியாமல் போகலாம்; யாருக்கு தெரியும்! வாதம் அல்லது வாத நோயால் ஏற்படும் தொல்லைகள் பல இருக்கலாம். அப்பொழுது நம்மால் என்ன செய்ய இயலும்? அந்த நேரத்தில் நமக்கு இறைவனின் கிருபையும் தயவும் மற்ற சமயங்களை விட அதிகமாக வேண்டும்” என்றார்.

தந்தை கடைசிக் கூடையை வண்டியில் வைத்துவிட்டு வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்றார். அவர் தனது கருத்தை தெரிவித்து விட்டு எங்கே சென்றார் தெரியுமா? ஆலயத்திற்குச் செல்லவில்லை, ஏனென்றால் இந்த வாழைப்பழங்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்க பொருந்தாது என்று அவர் அறிந்திருந்தார். அதற்கு பதிலாக அவர் பசுக்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அவற்றிற்கு வாழைப்பழங்களை உணவாக அளித்தார். எந்த இடத்திற்கு போய் சேர வேண்டுமோ, வாழைப்பழங்கள் அங்கு சரியாக போய் சேர்ந்தன.

நீதி:

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்

கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

மற்றவர்களுக்கு ஒரு உதவியை செய்ய கூடிய நிலையில் இருக்கும் போதே செய்துவிட வேண்டும். இது பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஒரு செயல் அர்த்தமுள்ளதாக மாறுவதற்கு, சரியான நேரத்தில் சில பணிகளை செய்ய ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டும். நேரத்தை கடத்தி தாமதப்படுத்தாமல், கடமைகளை ஆற்ற வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com