Archive | December 2023

வாழ்க்கை ஒரு யதார்த்தம், அதை ஏற்றுக் கொள்ளுங்கள்

நீதி: உண்மை

உப நீதி : ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை  / நம்பிக்கை

ஒரு தாயின் வயிற்றில் இரண்டு சிசுக்கள் இருந்தன.

ஒன்று மற்றொன்றிடம்,  “பிரசவத்திற்குப் பிறகு கூட ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? என்று கேட்டது.

அதற்கு இரண்டாவது சிசு, “ஏன் அப்படி கேட்கிறாய்? கண்டிப்பாக இருக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு ஏதாவது இருக்க வேண்டும். ஒருவேளை நாம் பிற்காலத்தில் என்னவாக இருப்போம் என்பதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள, இங்கே தற்காலிகமாக இருக்கக் கூடும்” என்று கூறியது.

முதல் சிசு அவநம்பிக்கையுடன் ,”முட்டாள்தனம் – பிரசவத்திற்குப் பிறகு வாழ்க்கை நிச்சயம் இல்லை. அப்படி இருந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?” என்று கேட்டது.

அதற்கு இரண்டாவது சிசு “தெரியாது, ஆனால் இங்கு இருப்பதை விட வெளிச்சமாக இருக்கும். மேலும் கால்களின் உதவியால் நம்மால் நடக்க இயலும், வாயினால் உண்ண இயலும் என தோன்றுகிறது” என்றது.

“இது முட்டாள்தனமானது! நடப்பது சாத்தியமற்றது. வாயால் சாப்பிடுவதா? அபத்தமான எண்ணம். தொப்புள் கொடி ஊட்டச்சத்தை அளிக்கிறது. தொப்புள் கொடி மிகவும் சிறியது அதனால் வாழ்க்கை என்பது பிரசவத்திற்குப் பிறகு விலக்கப்படும்.” என்று முதல் சிசு ஆணித்தரமாக கூறியது.

அதற்கு மற்றொன்று, “ஏதோ ஒன்று இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், இங்கே இருப்பதை விட அங்கு வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது” என்று பதில் அளித்தது.

“வெளியே சென்றவர் எவரும் அங்கிருந்து திரும்பி வந்ததில்லை. பிரசவம் என்பது வாழ்க்கையின் முடிவு, பிரசவத்திற்குப் பிறகு இருளும் பதற்றமும் தவிர வேறு எதுவும் இருக்கப்போவதில்லை. அது நம்மை எங்கும் அழைத்துச் செல்ல போவதில்லை.” என்று முதல் சிசு மீண்டும் கூறியது.

“எனக்கு சரியாகத் தெரியாது எனினும் நிச்சயமாக நாம் நம் தாயாரை பார்ப்போம், அவர் நம்மை நன்கு கவனித்து கொள்வார்” என்று இரண்டாவது சிசு கூறிற்று.

“தாயாரா??” அம்மா இருக்கிறார் என்று நீ நம்புகிறாயா? அவள் இப்போது எங்கே இருக்கிறாள்?” என்று முதல் சிசு கேட்டது.

“அவள் நம்மைச் சுற்றி இருக்கிறாள். அவளில் தான் நாம் வாழ்கிறோம். அவள் இல்லாமல் இந்த உலகமே இல்லை.” என்றது இரண்டாவது சிசு.

“நான் அவளைப் பார்த்ததில்லை. அதனால் தர்க்கரீதியாக பார்த்தால் தாய் என்றவள் இல்லை என்பதே உண்மை.” என்று முதல் சிசு விவாதித்தது .

அதற்கு இரண்டாவது சிசு, “சில நேரங்களில் நீ அமைதியாக இருக்கும்போது அவளின் குரலை கேட்கலாம், அவளை உணரலாம். பிரசவத்திற்குப் பிறகு ஒரு உண்மை இருக்கிறது என்று நான் நம்புகிறேன், அந்த யதார்த்தத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளவே  நாம் இங்கே இருக்கிறோம்.” என்று கூறியது.

நீதி:

வாழ்க்கை என்பது இயற்கையான மற்றும் தன்னிச்சையான தொடர் மாற்றங்களின் தொகுப்பாகும். அந்த மாற்றங்களை எதிர்க்காதீர்கள், அது துக்கத்தையே உருவாக்கும். யதார்த்தம் எதுவோ அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலைகளால் நமது புலனுணர்வு திறனில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, மெய்ப்பொருளை முழுமையாக உணர முடியாமல் போகலாம். அதனால் மெய்ப்பொருள் கற்பனையானது என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. பக்தி /விசுவாசம் என்பது நம்பிக்கையில் அடங்கியுள்ளது; நம்பிக்கையே ஒருவரை பலப்படுத்துகிறது.

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

குறைவான சுமையே அதிகமான ஆறுதல்

நீதி : உண்மை

உப நீதி: பற்றின்மை

யானைகள் தங்கள் கட்டுகளை உடைத்து விடுபட முடியாது என்ற நினைப்பில், தான் இருந்த இடத்திலேயே சிக்கிக் கொண்டதைப் பற்றிய கதையை நாம் படித்திருக்கிறோம்.

யானைகளைப் போலவே நம்மில் பெரும்பாலோர் நம் வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல முடியாமல் பின்னிய வலையிலேயே சிக்கிக் கொள்கிறோம். வெறுப்பு, கோபம், வலி, துன்பம், ஆசைகள் போன்ற உணர்ச்சிகள் நம் உடல் மற்றும் மனதை பலவீனபடுத்தும். இந்த சுமை மூட்டைகளை நாம் விடுவிக்காவிட்டால், அவை நம்மை மனரீதியாக தளர்வடையச் செய்யும். ஆன் லேண்டர்ஸ் “ஒருவர் மீது மனக்கசப்பை  வளர்த்துக் கொண்டால், நாம் வெறுக்கும் ஒருவரை நம் தலையில் வாடகையின்றி வாழ அனுமதிப்பதற்கு ஒப்பாகும்” என்கிறார். மன்னிப்பதும் விட்டுவிடுவதும் மனவலிமை கொண்டவர்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு கலையாகும். காந்திஜியின் கூற்றுப்படி, “பலவீனமானவர்களால் பிறரை மன்னிக்க முடியாது. மன்னிப்பது வலிமையானவர்களின் பண்பாகும்.”

வாழ்க்கையில் மிக சிறந்த சந்தோஷத்தையும், உயர்ந்த ஆற்றலையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்றால், நாம் நமது உணர்ச்சி என்ற சுமையை விட்டுவிட வேண்டும். ஒரு பறவை வானத்தில் உயர பறக்க வேண்டும் என்றால், முதலில் தான் பாதுகாப்பாக இருக்கும் மரக்கிளையில் இருந்து, அது வெளிவர கற்றுக் கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையில் பறக்க வேண்டிய செயலுக்கு அச்சிறு பறவைக்கு எவ்வளவு தைரியம் தேவை என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

தற்போது, நம்மால் இந்த உணர்ச்சி சுமைகளை எவ்வாறு விட முடியும் என்ற கேள்வி வருகிறது. “http://zenhabits.net/zen-attachment/” என்ற இணையதளத்தில் கண்ட “விட்டுவிடுதல் – அ முதல் ஃ வரை” என்ற பகுதியை பகிர எண்ணுகிறேன். பற்றுதல்களை விட்டுவிடுதல் என்பதை பற்றி இந்த தளம் விவரிக்கிறது என்றாலும், உணர்ச்சிகள் என்பதும் ஒருவித “பற்று” என்பதால் நாம் கையிலெடுக்கும் அனைத்து சுமைகளுக்கும் இவை பொருந்தும். இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு சுருக்கமான பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இவை சுய விளக்கமுடையதாக இருப்பினும், மேலும் விரிவான புரிதலுக்கு அந்த இணையதளத்தை பார்க்கவும்.

· இந்த தருணத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

· இப்போது எது உள்ளதோ அது போதும் என்ற எண்ணம் வேண்டும்.

· நமது தவறுகளை நாமே சுட்டிகாட்டி கொள்ள வேண்டும்.

· நிரந்தர தன்மை இல்லாத குணநலன்கள் உடையவர்கள் நாம், என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

· இந்த நொடியை முழுமையாக மகிழ்ந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

· நமக்கு நாமே உற்ற நண்பன் என்று நம்மை நேசிக்க பழக வேண்டும்

· சில நேரங்களில் தனியாக போராட வேண்டியிருக்கும் என்பதை உணர வேண்டும்.

· குறைந்த பற்றுதல்களை கொள்ள வேண்டும்.

· பல விதமான மக்களுடன் பழக வேண்டும்.

· நம் செயல்களையோ அல்லது நமக்கு பிடித்தவர்களின் செயல்களையோ அடிக்கடி நியாயப்படுத்தக் கூடாது.

· கடந்த காலத்தை நம்மால் மாற்ற முடியாது என்பதை அறிந்து கொண்டு அதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும்.

· பயத்திற்கு பதிலாக அன்பை பிறருக்கு அளிக்க வேண்டு

· எதிர்காலத்தை அல்லது கடந்த காலத்தை பற்றிய சிந்தனை இல்லாமல் நிகழ் காலத்தில் – இந்த நொடியில் வாழ எண்ண வேண்டும்.

· நிதானமாக எடுத்துரைக்க வேண்டும்.

· மனதை விசாலமாக்கிக் கொள்ளவும்.

· கசப்பான எண்ணங்கள் மனதில் நிலைக்காமல் இருக்க, வேறு ஆக்கபூர்வமான எண்ணங்களில் திசைமாற்ற பயிற்சி செய்ய வேண்டும்.

· உங்கள் “பற்றை” உணர்ந்து கேள்வி கேட்க வேண்டும்.

· தெரிந்து கொள்ள வேண்டிய தேவையை வெளியிட வேண்டும்.

· வாழ்க்கையின் குறிக்கோளை ஒவ்வொறு நொடியும் நிறைவேற்ற வேண்டும்.

· மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

· வருத்தங்களும் வலிகளும் அனைவரது வாழ்விலும் உண்டு என்பதும் அதை தவிர்க்க முடியாத ஒன்று என்பதையம் புரிந்து கொள்ள வேண்டும்.

· உணர்வுகளுக்கு குரல் கொடுக்க வேண்டும், குறைத்தபட்சம் எழுதி வைக்க வேண்டும்.

· வாழ்க்கையில் அனைத்து தருணங்களையும் ஒரு படிப்பினையாக, முழுமையான நன்றியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். பற்று இல்லாத அன்பான உணர்ச்சி – இந்த நிலை உன்னதமானது.

· அமைதியான நிலையில் இருப்பதற்கு ஈடுபாடு காட்ட வேண்டும்.

· இந்த நொடியில் நாம் தன்னிலையை உணர்ந்தால், வாழ்வில் மேலும் மற்றொரு அனுபவத்தை வரவேற்கவும், பாராட்டவும், மகிழவும், முன்னோக்கி செல்லவும் இயலும்.

வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிப்பதற்கான வழிமுறை இவை. அறியப்படாத மூலத்திலிருந்து அழகான மேற்கோள்களாக – அனைத்தையும் சுருக்கமாகக் பட்டியலிடுகிறது. நடந்து முடிந்த சம்பவங்களை விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டிருப்பது, நாம் பிரயாணிக்கும் வாகனத்தை பழுதடைந்த சக்கரத்துடன் ஓட்டுவதற்குச் சமமாகும். பழுதை சரி பார்க்க நிற்காமல், அது தன்னை தானே சரி செய்து கொள்ளும் என்ற நினைப்பில், உண்மை நிலை எதுவென தெரிந்தும், சவாரி சீராக செல்வது போல பாசாங்கு செய்து கொண்டு, ஒரு நாள் வண்டியை செலுத்த முடியாமல் மிகவும் மோசமான நிலை வரும் வரை, நாம் நிறுத்தி பார்க்க வேண்டிய கட்டாயம் வரும் வரை, உண்மையில் உதவி பெறாமல் நகர முடியாது என்ற நிலை ஏற்படும் வரை விட்டுவைத்தால் நமக்கு என்ன ஆபத்துகள் நேருமோ, அதே போன்று தான் வாழ்க்கையில் உள்ள பழுதுகளை உடனுக்கு உடன் சரி செய்யாமல் அப்படியே பிடித்து கொண்டிருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை மிகவும் கருணை மற்றும் தயை நிறைந்தது. எனவே நாம் ஒரு குண்டும் குழியும் நிறைந்த பாதையில் சவாரி செய்வதை நிச்சயமாக விரும்பாது. உணர்ச்சிகள் என்ற சுமைகளை கட்டவிழ்த்து விடும் போது , “குறைவான சுமையே அதிக வசதி” என்பதை நாமும் உணர்வோம்.

நீதி:

கடந்தகால கசப்பான நினைவுகளை விட்டுவிடக் கற்றுக் கொள்வதும், நிகழ்காலத்தில் வாழ்வதும் வாழ்க்கையை எளிதாக்குகிற வழியாகும். அதிக விழிப்புணர்வுடன் இருக்க நம்மை பழக்கிக் கொள்வது பல வழிகளில் நமக்கு பயனளிக்கும். வாழ்க்கை என்பது ஒரு பயணம், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் – தேவையற்ற விஷயங்களை ஏற்றுக் கொண்டால் பாரமாகும், பயணம் சுமையாகிவிடும். நாம் செய்த நல்ல காரியங்களின் தடயத்தை நம் வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில் நிலைநாட்டி விட்டுச் செல்வதே புத்திசாலித்தனம். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் கடமையை செய்தால், எதிர்தரப்பினர் தகுந்த கைம்மாறு செய்யவில்லை என்றாலும் நாம் சோர்வடைய மாட்டோம். பற்றுதல் துன்பத்திற்கும், பற்றின்மை சுதந்திரத்திற்கும் வழி வகுக்கிறது.

ஒரு சூழ்நிலையில் இருக்க வேண்டிய நேரம் என்பதையும், அதிலிருந்து நகர்ந்து செல்ல வேண்டிய நேரம் எப்போது என்பதை அங்கீகரிப்பதும், பற்றின்மையின் ஒரு பெரிய பகுதியாகும். – டேரன் எல் ஜான்சன்

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

பிரச்சனைகளை சமநிலை மனப்பான்மையுடன் அணுகுதல்

நீதி : உண்மை / நம்பிக்கை

உப நீதி: பொறுமை / ஞானம்

பல ஆண்டுகளுக்கு முன்பு, சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று நேரலையாக பல ஆயிரக்கணக்கான நேயர்கள் பார்வைக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் அந்நிகழ்வில் வங்காளப் புலிகள் நிறைந்த கூண்டு ஒன்றில், ரிங் மாஸ்டர் அவற்றை அடக்கும் ஒரு காட்சியும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது.

பயிற்சியாளர் கூண்டுக்குள் நுழைந்ததும் தன் பின்னாலிருந்த கதவைப் பூட்டினான். ஸ்பாட்லைட், கூண்டை ஒளிரச் செய்தது. ஒளிபடக்கருவிகள் கூண்டின் அருகில் சென்றபோது, பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். பயிற்சியாளர் அந்த கொடிய காட்டு பூனைகளை தன் கட்டளைக்கு இணங்க இயக்கினான்; ஆனால் திடீரென்று எதிர்பாராத ஒன்று நடந்தது – சர்க்கஸ் கூடாரத்தில் மின்சாரம் தடைபெற்று விளக்குகள் அணைந்தன!

இருபது அல்லது முப்பது நீண்ட வினாடிகளுக்கு, பயிற்சியாளர் புலிகளுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். அவை தன்னை முழுமையாகப் பார்க்க முடியும் ஆனால் அவனால் அவற்றை பார்க்க இயலாது என்பதையும் அறிந்திருந்தான். அந்த திடுக்கிட வைக்கும் தருணங்களில், அவனுடைய சாட்டையும் ஒரு சிறிய முக்காலியும் மட்டுமே அவனுக்கும் மரணத்திற்கும் இடையில் இருந்தது.

அதிர்ஷ்டவசமாக, அவன் உயிர் பிழைத்தான். விளக்குகள் மீண்டும் எரிந்ததும் அவன் தனது நிகழ்ச்சியை மக்கள் பாராட்டும்வண்ணம் முடித்தான்.

பின்னர், ஒரு நேர்காணலின் போது பயிற்சியாளரிடம், புலிகள் அவனை பார்க்க முடியும் என்பதை அறிந்தும் மின்சாரம் வெட்டுப்பட்ட தருணத்தில் எவ்வித உணர்ச்சிகள் அவன் மனதில் நிறைந்தன என்று கேட்கப்பட்டது. அதற்கு தான் முற்றிலும் இருளில் இருந்ததாகவும், பயம் தனது முதுகுத்தண்டில் வடிந்து சிலிர்க்க வைத்ததையும் அவன் ஒப்புக் கொண்டான். ஆனால் தன்னால் இருட்டில் பார்க்க இயலாது என்பதை புலிகள் அறிந்திராது என்பதை அவன் உணர்ந்தான். “நான் என் சாட்டையை செலுத்திக் கொண்டே இருந்தேன், மேலும் விளக்குகள் மீண்டும் எரியும் வரை நான் அவர்களுடன் பேசிக் கொண்டே இருந்தேன். நான் அவர்களைப் பார்க்க முடியாது என்பதை அவ்விலங்குகளுக்கு சிறிதும் சந்தேகம் வராமல் செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.” என்று விளக்கினான்.

சந்தேகமில்லாமல் நம் வாழ்க்கையிலும் சிலநேரங்களில் மேலே உள்ள கதையில் நடந்ததற்கு இணையான சில சம்பவங்கள் அமைந்திருக்கும்.

ஒரு கட்டத்தில், நாம் அனைவரும் இருட்டில் புலிகளுடன், அதாவது கண்ணுக்கு புலப்படாத பயங்கரங்களுடன் போராடுவோம். ஆனால் நமக்கு உண்மை என்று தெரிந்ததை நம்பிக்கையுடன் ‘துணிவு’ என்ற சாட்டையை செலுத்திக் கொண்டே விடியலுக்காக காத்திருந்தால், எல்லாம் சரியாகிவிடும்.

நீதி:

பொறுமையும் நம்பிக்கையும் நம் அன்றாட வாழ்க்கை முறையில் புகுத்தபட வேண்டிய நற்பண்புகள். பொறுமை என்பது வெறும் காத்திருக்கும் திறன் அல்ல – அது ஒரு நல்ல அணுகுமுறை. எது நடந்தாலும் அமைதியாக இருந்து, நாம் சரி என்று நம்பும் நற்பண்புகளை இறுதி வரை கைவிடாமல் கடைப்பிடித்து, அவற்றை நேர்மறையான வளர்ச்சி வாய்ப்புகளாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதுமே ஆகும். நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று எல்லாம் வல்ல இறைவனை நம்பி, எவ்வித பலனையும் எதிர்பாராமல் செயல்படவேண்டும். வாழ்வில் நடக்கும் அனைத்தையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளவும், கடவுளிடம் முழுமையாக சரணடையவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

மனம் ஒரு குரங்கு

நீதி : உண்மை

உப நீதி : பற்றின்மை / ஞானம்

சூஃபி கதை

ஜுனைத் என்று ஒரு ஆன்மீகவாதி இருந்தார்.

ஒரு நாள் அவர் தனது சீடர்களுடன் நகரத்தின் சந்தை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அவர் எந்த ஒரு சூழ்நிலையையும் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அதைப் பயன்படுத்தி கற்பிப்பது அவருடைய சிறப்பு.

அப்போது ஒரு மனிதன் தனது பசுவை ஒரு கயிற்றால் இழுத்து சென்று கொண்டிருந்தான். ஜுனைத், அந்த மனிதனிடம் “சற்று பொறுங்கள்” என்று கூறி, தனது சீடர்களிடம், ‘இந்த மனிதனையும் பசுவையும் சுற்றி நில்லுங்கள், நான் உங்களுக்கு ஒரு முக்கியமான பாடம் கற்பிக்கப் போகிறேன்’ என்றார்.

அந்த மனிதனும், ஜுனைத் இந்த சீடர்களுக்கு, தன்னையும் பசுவையும் எப்படிப் பயன்படுத்தி, சீடர்களுக்கு என்ன பாடம் கற்பிக்கப் போகிறார் என்ற ஆர்வத்தில் காத்திருந்தான்.

ஜுனைத் தனது சீடர்களை நோக்கி, ‘நான் உங்களிடம் ஒன்றைக் கேட்கிறேன். இங்கு யார் யாருக்குக் கட்டுப்பட்டவர்கள்? மாடு இந்த மனிதனுக்கு கட்டுப்பட்டதா அல்லது இந்த மனிதன் இந்த மாட்டுக்கு கட்டுப்பட்டவரா?’ என்று கேட்டார்.

அதற்கு சீடர்கள், “சந்தேகமென்ன! பசுதான் மனிதனுக்குக் கட்டுப்பட்டது. இம்மனிதன் எஜமானன்; அவன் கயிற்றைப் பிடித்திருக்கிறான், அவன் எங்கு சென்றாலும் பசு அவனைப் பின்தொடர வேண்டும். அவன் எஜமானன், பசு அடிமை’ என்று பதில் அளித்தனர்.

இதற்கு ஜுனைத், ‘இப்போது பாருங்கள்’ என்றபடி தனது கத்தரிக்கோலை எடுத்து கயிற்றை அறுத்தார். மாடு தப்பி ஓடியது. அந்த மனிதன் பசுவின் பின்னால் அதை பிடிக்க ஓடினான். ஜுனைத் தொடர்ந்து, “இப்போது என்ன நடக்கிறது என்று பார்த்தீர்களா. எஜமானர் யார் என்று இப்போது நீங்கள் நினைக்கிறீர்கள்? மாடு இந்த மனிதனில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை – உண்மையில், அது தப்பிக்க எண்ணுகிறது” என்று கூறினார்.

அந்த மனிதன் மிகவும் கோபமடைந்தான். ‘இது என்ன மாதிரியான பரிசோதனை?’ என்றான்.

ஜுனைத் தன் சீடர்களிடம், “நம் மனதின் நிலையும் இப்படிதான். நாம் சுமக்கும் அனைத்து முட்டாள்தனமான எண்ணங்களுக்கு நம் மீது ஆர்வம் இல்லை. நாம் தான் அதில் ஆர்வம் காட்டுகிறோம். அந்த எண்ணங்களை சேகரித்து வைத்து கொண்டு நாம் பைத்தியமாகி விடுகிறோம். நாம் அவற்றில் ஆர்வத்தை இழக்கும் தருணம், அதன் பயனற்ற தன்மையை புரிந்து கொள்ளும் நொடி, அந்த தேவையற்ற எண்ணங்கள் தாமாகவே மறைந்துவிடும்; பசுவைப் போல் தப்பித்துவிடும்” என்று கூறினார்.

நீதி:

மனிதன் தன் விருப்பு வெறுப்புகளைப் பற்றிக் கொண்டு அவற்றிற்குக் கட்டுப்படுகிறான். விருப்பு / வெறுப்பு போன்ற உணர்ச்சிகளில் சிக்கி கொள்வதும் மேலும் பற்று என்ற ‘கயிற்றால்’ பிணைக்கப்படுவதும் ஒரு கொடிய சுழற்சியாகும், இதன் மூலம் பற்றுதலின் எண்ணிக்கை அதிகரிக்கும், கயிறு மேலும் மேலும் இறுகும். இதிலிருந்து தப்பித்து சுதந்திரம் அடைய ஒரே வழி, பற்றுதல் என்ற ‘கயிற்றை’ விடுவதுதான்.

பகவத் கீதையின் (அத்தியாயம் 2 செய்யுள்கள் 62 மற்றும் 63) இரண்டு செய்யுள்களில் மேற்கூறியவற்றை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உறுதிப்படுத்துகிறார். “ஒருவர் தனது கவனத்தை ஒரு பொருளின் மீது செலுத்தும் போது, பற்றுதல் ஏற்படுகிறது. அத்தகைய பற்றுதலில் இருந்து ஆசை அதிகமாகிறது, அது நிறைவேறினால் பேராசைக்கும், நிறைவேறாவிட்டால் / திருப்தியடையாவிட்டால் கோபத்திற்கும் வழி வகுக்கிறது (பாகவதம் 9.19.13). இந்த உணர்ச்சிகள் மதி மயக்கத்திற்கு வழி வகுக்கிறது, இதன் விளைவாக மனம் குழப்பமடைகிறது. அவ்வாறு குழப்பமான நிலையில் இருந்தால், மூளை சரியாக வேலை செய்ய முடியாமல் புத்தி அழிந்துவிடும்; மேலும் புத்தி அழிந்தால் ஒருவனது நிலை தவறி நினைவும் தவறி வாழ்க்கை பாழாகிறது. ஆக, உலகில் மனிதனின் துயரங்களுக்கு மூல காரணம் பற்றுதல்தான்”.

பகவத் கீதையில் (அத்தியாயம் 2 செய்யுள் 64) விளக்கப்பட்டுள்ளது போல, ஐம்புலன்களை உபயோகிக்கும் பொழுதும் எவர் ஒருவர் மனதைக் கட்டுப்படுத்தி, விருப்பு வெறுப்பிலிருந்து விடுபட்டு செயல்படுகிறாரோ அவர் கடவுளின் அருளைப் பெறுவார்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

மனித நேயம்

நீதி: அன்பு / உண்மை

உப நீதி: கருணை

ஒரு மனிதன், 200 மைல்களுக்கு அப்பாற்பட்டு வசித்து வந்த தன் தாய்க்கு, மலர்கள் அனுப்ப வேண்டும் என்று ஒரு பூக்கடைக்கு முன், தன் வாகனத்தை நிறுத்தினான்.

அவன் காரை விட்டு இறங்கியதும், நடை பாதை ஓரத்தில் ஒரு சிறுமி அழுது கொண்டிருப்பதைக் கண்டான்.

அவளிடம் சென்று என்ன பிரச்சனை என்று கேட்டான். அதற்கு அவள், “நான் என் தாய்க்கு ஒரு சிவப்பு ரோஜா வாங்க விரும்பினேன். என்னிடம் 75 காசுகள் தான் உள்ளன. ஆனால் ஒரு ரோஜாவின் விலையோ இரண்டு ரூபாய்” என்று கூறினாள்.

அந்த மனிதன் புன்முறுவலுடன், “நீ என்னுடன் உள்ளே வா! நான் உனக்கு ஒரு ரோஜா வாங்கி தருகிறேன்” என்றான்.

அந்த சிறுமி கேட்ட ரோஜாப் பூவை வாங்கி கொடுத்து விட்டு, தன் அன்னைக்கும் மலர்கள் அனுப்ப ஆணை  கொடுத்தான்.

அங்கிருந்து கிளம்பும் போது சிறுமியிடம், “நான் உன்னை உன் வீட்டில் இறக்கி விடவா?” என்று கேட்டான். அந்த சிறுமி, “சரி! தயவு செய்து என் அம்மாவிடம் கொண்டு விடுங்கள்” என்று கூறினாள்.

அந்தச் சிறுமி அவனுக்கு வழிகாட்டி கொண்டே சென்று, ஒரு  கல்லறையின் முன் நிறுத்தச் சொன்னாள். அங்கு புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சமாதியில் அந்த ரோஜா மலரை வைத்தாள்.

உடனே அந்த மனிதன், தன் காரைத் திருப்பிக் கொண்டு அந்தப் பூக்கடைக்குச் சென்றான். தன் தாய்க்கு மலர் அனுப்பக் கொடுத்திருந்த ஆணையை ரத்து செய்து விட்டு, ஒரு மலர்க் கொத்து வாங்கிக் கொண்டு 200 மைல்கள் காரை ஓட்டிக் கொண்டு, நேராகத் தன் அன்னையின் வீட்டிற்கு சென்றான்.

அவன் அதற்கு மேல் ஒரு வினாடி கூட வீண் செய்ய விரும்பவில்லை.

நீதி:

நீங்கள் அன்பானவர்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க, கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் நழுவ விடாதீர்கள்.

உங்களுக்கு இன்னும் ஒரு நாள் கிடைக்குமா என்று கூற முடியாது. எந்த ஒரு விஷயமும் தாமதமாகிவிட்டது என்ற நிலைக்குச் செல்வதை தவிர்க்க, செயல்களின் முக்கியத்துவத்தை பொறுத்து வரிசைப்படுத்தி செயல்பட வேண்டும். உன் பெற்றோரை நேசி. நாம் வளர வளர, நம் பெற்றோரும் முதிர்வடைகின்றனர்.

மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டம், மனிதன் மனித நிலையில் இருந்து, அன்பு நிலைக்கு மாறுவது தான்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE