Archive | December 2014

கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்

God is everywhere

நீதி – வாய்மை / உண்மை

உபநீதி – விவேகம் / மெய்யறிவு / தெய்வீகத் தன்மை

ஒரு சிறிய பையன் வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக் கிழமை அன்று தன் ஆன்மீகப் பாடத்தை முடித்த பிறகு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான். வழியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு விளையாடிய படி நடந்து வந்தான்.

தன் காலணிகளைப் புல்லின் மேல் வேகமாகத் தட்டினான். அங்கு ஒரு சிறு வண்ணாத்திப் பூச்சியைக் கண்டான். சிறிது தூரம் சென்ற பின் சில செடிகளைப் பார்த்தான். அதிலிருந்து பால் நிரம்பிய ஒரு சிறிய இளம் கிளையை ஒடித்து ஊது குழல் போல் அதிலிருந்த சிறு துகள்களை ஊதினான். சற்று தொலைவு நடந்த பின் மரக்கிளையின் மீது இருந்த பறவைகளின் கூடைக் கண்டு ஆச்சரியப் பட்டான். இதுவும் ஒரு அதிசயமாக அவன் கண்களுக்குப் புலப்பட்டது.

அவன் எதையோ தேடிச் செல்வதைப் பார்த்து, பக்கத்திலிருந்த வயல் வெளியிலிருந்து ஒரு பெரியவர் அவனைக் கூப்பிட்டார். அருகில் வந்தவுடன் நாள் முழுவதும் என்ன செய்து கொண்டிருந்தான் என விசாரிக்கத் தொடங்கினார். அதற்குச் சிறுவன் ஆன்மீகப் பாடம்(பைபிள்) கற்றுக் கொள்ள பள்ளிக்குச் சென்றதாகக் கூறியபடி பக்கத்தில் இருந்த புல்கொத்தைக் கையில் எடுத்தான். அதன் கீழ் நெளிந்து கொண்டிருந்த ஒரு புழுவைக் கையில் எடுத்தபடி, “நான் இன்று கடவுளைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்” என கூறினான்.

இதற்குப் பெரியவர், “நல்ல பொழுது போக்கு தான். கடவுள் இருக்கும் இடத்தை நீ எனக்குக் காண்பித்தால் நான் உனக்கு ஒரு புதிய நாணயம் தருகிறேன்” எனக் கூறினார். மின்னல் போன்ற வேகத்துடன் தெளிவாகச் சிறு பையன் கூறிய வார்த்தைகள் – கடவுள் இல்லாத இடத்தைத் தாங்கள் காண்பித்தால் நான் உங்களுக்கு ஒரு டாலர் தருகின்றேன். எவ்வளவு அழகான வார்த்தைகள்!!!

நீதி

இவ்வுலகில் எல்லாமே நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. தூய்மையான மனதுடன் பார்க்கக் கற்றுக் கொண்டால் கடவுள் எல்லாவற்றிலும் தென்படுவார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE:

http://topmoralstories.blogspot.sg/2007_09_01_archive.html

கிறிஸ்துமஸ் பண்டிகை

Christmas 1

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம் தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச் சிறப்பான நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தத் தினத்தை கிறிஸ்துவர்கள் விசேஷமாக கருதுவதால் அன்றைய தினம் பல புதிய பணிகளைத் தொடங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Christmas 2

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள பரிசுப் பொருட்களை பரிமாறி கொள்வதும், போட்டிகளை நடத்துவது என்று பல கோணங்களில் கொண்டாட்டம் விரிவடைந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக முதன்முதலில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம், 1510ம் ஆண்டும் ரிகா என்ற இடத்தில் துவங்கியது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துவர்கள் குழுக்களாக சேர்ந்து கேரல் சர்வீஸ் என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த கேரல் நிகழ்ச்சியில் குழந்தை இயேசுவை வாழ்த்தியும், அவரது பிறப்பு, அவர் உலகில் வந்த நோக்கம் உள்ளிட்ட கருத்துகளை கொண்ட பாடல்கள் பாடப்படுவது வழக்கம். கடந்த 1847ம் ஆண்டு பிரான்சில் தான் முதல் முதலாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த கேரலில் “ஓ ஹோலி நைட்” என்ற பிரபல கிறிஸ்துமஸ் பாடல் பாடப்பட்டதாக கூறப்படுகிறது.

Christmas 3 Christmas 4

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வரலாற்றில் சில ருசிகரமான சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. பண்டைய காலத்தில் வாழ்ந்த பாரசீகர்களும், பாபிலோனியர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடத்தின் நல்ல நாளாக கொண்டாடி வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, பாரசீக நாட்டில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை அளிக்கப்படும். மேலும் சிலர் தங்கள் அடிமைகளை பரிசாக பரிமாறி கொண்டனர். சில எஜமான்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மட்டும், அடிமைகளுக்கு வீ்ட்டில் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும் வரலாற்றில் குறிப்புகள் உள்ளது. பண்டைய காலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர்களுக்கு பேய், பிசாசு, அசுத்த ஆவிகள் உள்ளிட்டவைகளுக்கு அதிகமாக பயந்தனர். வருடத்தில் நீண்ட இரவு கொண்ட நாட்களில் அவை மக்களுக்கு தீமை விளைவிக்கும் என்று நம்பினர். இதனால் நீண்ட இரவுகளுக்கு பிறகு சூரியன் உதிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.

மொத்தத்தில் நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் இந்த நன்னாளை மக்கள் இயேசு பெருமானை இறைஞ்சி, துதி பாடி மகிழ்கின்றனர் என்பது சந்தோஷமான விஷயம்தான்.

 Christmas 5

Source: http://tamil.oneindia.in/art-culture/essays/2011/15-the-history-of-christmas-aid0180.html

பணிவாக இருக்கப் பழகுதல்

practice humility

நீதி – நன் நடத்தை

உபநீதி  – அடக்கம்/பணிவு

பல வருடங்களுக்கு முன்பு ஒரு படைவீரர் குழு, பெரிய பாறை ஒன்றை நகர்த்த முயன்று கொண்டிருந்தது. அந்த வழியாக ஒரு குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்தவர் இந்தக் காட்சியைப் பார்த்தார். படை வீரர்களின் அதிகாரி நின்று கொண்டு அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். சவாரிக்காரர் அதிகாரியிடம், “நீங்கள் ஏன் எந்த உதவியும் செய்யவில்லை” எனக் கேட்டார். அதற்கு அவர், “நான் பெரிய அதிகாரி. கட்டளையிடுவது தான் என் வேலை” என பதிலளித்தார். உடனடியாக குதிரையிலிருந்து இறங்கி படைவீரர்களுக்குப் பாறையை நகர்த்த உதவி செய்தார். பாறையை நகர்த்தியதும், குதிரை மேல் ஏறிக் கொண்ட பிறகு, அந்த அதிகாரியிடம் சென்று, அடுத்த முறை வீரர்களுக்கு உதவி தேவைப்பட்டால் தலைமைக் கட்டளை அதிகாரியை அழைக்குமாறு கூறி விட்டுச் சென்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு தான் அவர் நாட்டின் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் என தெரிய வந்தது.

நீதி:

வெற்றியும், அடக்கமும் ஒன்றுக்குள் ஒன்று அடங்கியுள்ளது. பிறர் நம் பெருமையைப் பற்றி எடுத்துச் சொன்னால், அது நமக்குப் பெருமை சேர்க்கும். சற்று யோசித்துப் பார்த்தால் புரியும் – எளிமையும், அடக்கமும் மகத்துவமான குணங்கள். அடக்கம் என்பது தன்னையே தாழ்த்திக் கொள்வது அல்ல.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

 

 

இஸ்லாமிய மெய்ஞ்ஞானியின் அறிவுரை – கடவுளைப் பார்க்க முடியுமா

can we see god  - sufi saints

நீதி – நன் நடத்தை

உபநீதி – குறைகளை கட்டுப்படுத்துவது

மலையின் உச்சியில், ஒரு இஸ்லாமிய மெய்ஞ்ஞானி வாழ்ந்து வந்தார்.

மாதத்திற்கு ஒரு முறை, மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று வருவார். ஒரு சமயம் அப்படிச் சென்ற பொழுது, ஒருவர் மெய்ஞ்ஞானியிடம், “எனக்குக் கடவுளைப் பார்க்க முடியவில்லையே. அவரைப் பார்க்க ஏதாவது உதவி செய்யுங்கள்” எனக் கெஞ்சினார். “கட்டாயமாக” என பதிலளித்து உன்னிடமிருந்து எனக்கு ஒரு உதவி வேண்டும் என்று கூறினார்.

“என்ன உதவி வேண்டும்” என்று கேட்ட பொழுது, “ஒரே மாதிரியான ஐந்து கற்களை மலைக்கு மேல் எடுத்து சென்று அவர் வாழும் குடிசை வாசலில் ஒரு பிரார்த்தனைக் கூடம் கட்ட வேண்டும்” என கூறினார்.

அவரும் ஒத்துக் கொண்ட பிறகு இரண்டு பேரும் மலையின் உச்சிக்குச் செல்வதற்கு பயணத்தை ஆரம்பித்தார்கள். கொஞ்ச நேரத்திற்கு பிறகு அந்த மனிதன் சோர்வடைந்தான். நடப்பது கூட கடுமையான செயலாக மாறிவிட்டது.

உடனே மெய்ஞ்ஞானி அவரிடம், “ஒரு கல்லைத் தூக்கி எறிந்து விட்டால் சுலபமாக இருக்கும்” எனக் கூறினார்.

அவர் சொற்படி செய்ததும் கொஞ்சம் சுலபமாக இருந்தது. சற்று நேரத்திற்குப் பிறகு மேலே செல்வது மறுபடியும் கடுமையாகத் தெரிந்தது. மீண்டும் ஒரு கல்லைத் தூக்கி போடச் சொன்னார். இது மாதிரி எல்லாக் கற்களையும் தூக்கி எறிந்தார்.

அதற்கு பிறகு “இப்பொழுது நான் உனக்குக் கடவுளிடம் செல்வதற்கு வழி காட்டியிருக்கேன்” என மெய்ஞ்ஞானி கூறினார்.

ஒன்றும் புரியாமல் அந்த மனிதன் குழப்பத்துடன், “எனக்குக் கடவுளை பார்க்க இயலவில்லையே. என்ன சொல்கிறீர்கள்?” எனக் கேட்டார்.

அதற்கு மிக அழகாகப் புரியும்படி அவர் சொன்ன பதில், “இந்த ஐந்து கற்களும் நம்மிடம் இருக்கும் குறைப்பாடுகளை உணர்த்துகின்றது. கடவுளைப் பார்க்க இது தடையாக இருக்கின்றது. இவை இச்சை, கோபம், பேராசை, ஆவல், அகங்காரம். இந்த கெட்ட குணங்களை அகற்ற வேண்டும். நான் உனக்கு எச்சரிக்கை செய்கிறேன். கஷ்டமாக இருந்தாலும் அகற்ற வேண்டும் என்று எண்ணினால் நான் உனக்கு உதவி செய்கிறேன். அப்பொழுது கடவுளைப் பார்ப்பது சுலபமாகி விடும்” என்று புரியும்படி அறிவுரை சொன்னார்.

நீதி:

குறைப்பாடுகளை அகற்றி மன நிறைவுடன் இருந்தால், கடவுளைப் பார்ப்பது சுலபமாகி விடும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE:

http://www.shortstories-online.com/

 

 

 

கடவுளைச் சந்திப்பது

meeting god

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்  – அன்னை தெரசா

நீதி – அன்பு / வாய்மை

உபநீதி – அக்கறை / தெய்வீகத் தன்மை

ஒரு சிறுவனுக்கு கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. வெகு தூரத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து பயணத்திற்குத் தயாராகி, சிற்றுண்டி வகைகளும் குளிர் பானங்களும் ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினான்.

சிறிது நேரம் நடந்த பிறகு அவன் கண்ட காட்சி – ஓர் அழகிய பூங்காவில் ஒரு வயதானவள். அங்கு இருக்கும் புறாக்களை உட்கார்ந்தவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் சென்று அமர்ந்து தன் பெட்டியைத் திறந்தான். அதிலிருந்து குளிர் பானத்தை எடுத்த போது, வயதானவள் பசியோடு உட்கார்ந்திருப்பதைக் கவனித்துச் சிற்றுண்டியை அவளிடம் கொடுத்தான். நன்றியோடு அவனைப் பார்த்தாள். ஒரு புன்சிரிப்பும் முகத்தில் தெரிந்தது.

அவளுடைய புன்சிரிப்பு அவ்வளவு அழகாக இருந்ததால் அதை மீண்டும் பார்க்க ஆசைப்பட்டான். உடனடியாக அவனிடம் இருந்த குளிர் பானகத்தையும் அவளிடம் நீட்டினான். அதே புன்சிரிப்பு முகத்தில் மீண்டும் தெரிந்தது. அளவில்லா மகிழ்ச்சியை அனுபவித்தான்.

பகல் முழுவதும் இருவருமே பேசிக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு புன்சிரிப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாலைப் பொழுதில் வெளிச்சம் மறைந்து இரவு நேரம் ஆரம்பமாகி விட்டது. சிறுவனுக்குக் கொஞ்சம் சோர்வாக இருந்தது. வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டு சில அடிகள் எடுத்து வைத்தான். பிறகு திரும்பிச் சென்று அந்த வயதானவளை அணைத்துக் கொண்டான். அவள் கடைசியாகச் சிரித்த அந்தப் புன்சிரிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது.

வீட்டிற்குச் சென்றவுடன் அவன் முகத்தில் இருந்த சந்தோஷத்தைப் பார்த்து அவன் தாயார், “இன்றைக்கு என்ன நடந்தது? இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாயே?” எனக் கேட்டாள். அதற்கு சிறுவன், “நான் கடவுளுடன் சேர்ந்து உணவு உண்டேன்” என்று கூறினான்.

அவன் தாயார் பதில் சொல்வதற்குள் சிறுவன் தாயாரிடம், “என்னவென்று தெரியுமா?? இவ்வளவு அழகான ஒரு புன்சிரிப்பை நான் பார்த்ததே இல்லை” என்று கூறினான். அதே சமயத்தில், அந்த வயதான பெண்மணி வீட்டிற்குச் சென்றவுடன் அவளின் அமைதியான முகத்தைப் பார்த்து பையன் ஆச்சரியப்பட்டான். விசாரித்த போது அவள் “இன்றைக்கு நான் கடவுளைப் பார்த்தேன். எனக்குச் சிற்றுண்டி கொடுத்ததோடு ஒரு புன்சிரிப்பும் முகத்தில் தெரிந்தது. ஆனால் கடவுள் ஒரு சிறுவனாக இருந்தான்.”  என்று கூறினாள்.

நீதி:

பல சமயங்களில் ஒரு அன்பான வார்த்தை, மற்றவர்களைப் புகழ்ந்து பேசுவது அல்லது செயல்முறையில் ஆதரவாக நடந்து கொள்வது போன்ற சிலவற்றை நாம் புரிந்து கொள்வதில்லை. ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் ஒரு காரணத்திற்காகவே வருகின்றார்கள். அன்பாக இருந்தால் எதையும் வெல்லலாம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE:

http://topmoralstories.blogspot.sg/2007_09_01_archive.html

கார்த்திகை தீபம்

Karthigai1

கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி கொண்டாடும் வழக்கம் பழமை காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்றது. இந்த வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பஞ்ச பூதத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.  நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம் திருவண்ணாமலை.

Karthigai2

குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

கார்த்திகை என்பது, “கிருத்தி” என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது. அத்திரி, காசிபர், கெளதமர், பரத்துவாசர், விசுவாமித்திரர், ஜமதக்னி என்னும் மாமுனிவர்களது தேவியரைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயராகவும், “கிருத்தி” என்பதனைக் குறிப்பிடுகின்றனர் ஆன்றோர்கள்.

ஒரு சமயம் இந்த ஆறு முனிவர்களும் தங்கள் மனைவியருடன், ஒரு திருவிளையாடல் போல ஊடல் கொண்டனர். அப்போது அந்தத் தேவியர் அனைவரும் நட்சத்திரங்களாகி விரதம் மேற்கொண்டனர். அவர்களே “கார்த்திகைப் பெண்கள்” எனப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட விரதத்தின் பலனாகவே முருகப் பெருமானுக்கு பாலூட்டும் பேறு பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. முருகப் பெருமானை வளர்க்கும் பேற்றினை தங்கள் மனைவியர் பெற வேண்டும் என்பதற்காகவே அந்த ஆறு முனிவர்களும் ஆடிய நாடகம், அகிலத்துக்குத் தெரிய வந்தது.

கார்த்திகை என்பது மேஷத்தில் 1/4 பகுதியும், ரிஷபத்தில் 3/4 பகுதியும் அமைந்துள்ள 6 நட்சத்திரங்கள் கொண்ட ஓர் மண்டலம். இது, ஒரு விளக்குபோல் காட்சி அளிக்கும் ஒரு நட்சத்திரக் கூட்டம். மாதமொரு முறை சந்திரன் இந்த நட்சத்திரக் கூட்டத்திற்குப் பக்கத்தில் வரும் நாள் கார்த்திகை எனக் குறிப்பிடப்படுகிறது.

Karthigai3

”கார்த்திகை தீபக் காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள்” என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச் சிறப்பாக குறிப்பிடுகிறார்.

மாணிக்கவாசகர், ”ஜோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்று சிவபெருமானைக் குறித்துப் பாடியுள்ளார்.

குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிக்கு ஒப்பிடுவார்கள்.

அகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது ‘விளக்கு’ என்று அழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன. இந்த அறவொளியையேத் தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம்.

முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால் முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக  ‘பரணி தீபம்’ கொண்டாடப்படுகிறது.

Karthigai4

கார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடபாகத்தில்  அமர்ந்ததாகவும், சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் இருக்கிறான்.

இன்றும் தீபதரிசனத்திற்கு சற்று முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார் சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடிவந்து கொடிக் கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்றவுடன்  வேட்டு சத்தத்துடன் மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும். அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் முருகப் பெருமானுக்கு ஏற்றப்படுகிறது.

Ardhanareeshwara

கார்த்திகை விரதமிருந்து உமாதேவி சிவபெருமானின் இடபாகத்தை பெற்றதும், திருமால் துளசியை மணந்து தன் திருமார்பில் அணிந்து கொண்டதும் கார்த்திகை மாதத்தில் தான். கார்த்திகையன்று தீபமேற்றி நெல், பொரி, அப்பம், பொரி உருண்டை ஆகியவற்றை நிவேதனம் செய்கிறோம். ”கார்த்திகை விளக்கிட்டனன்” என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.

“அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான்” என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

ஆணவம், சுயநலம், மயக்கம், ஆசை போன்ற மாசுகளை, “விவேகம்’ என்னும் தீயில் பொசுக்கி, மெய்ஞானம் பெற்று, அண்டம் அனைத்தையும் ஒளிர்விக்கும் பரஞ்ஜோதியை தரிசனம் செய்வதே கார்த்திகை தீபவிழாவின் அடிப்படை நோக்கம்.

ஞான தீபம் ஏற்றி எங்கும் நாம கீதம் பாடுவோம்! தர்ம சக்தி வாழ்கவென்று சந்ததம் கொண்டாடுவோம்! ஞாலம் முழுவதிலும் ஞான ஒளி பரவுக!!!

Karthigai5

Source:

http://www.thinakaran.lk/2010/11/22/_art.asp?fn=r1011221

http://www.sivankovil.ch/?pn=kaarthihai_theepam

http://www.thinaboomi.com/news/2014/11/22/39707.html

http://spiritualaffairs.blogspot.sg/2010_10_22_archive.html