Archive | May 2017

கடவுளை நம்பி வாழக் கற்றுக் கொள்

நீதி: பக்தி

உபநீதி: நம்பிக்கை

புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதியர், தங்கள் இல்லத்திற்குத் திரும்பி செல்லும் வழியில், படகில் ஒரு ஏரியைக் கடந்து கொண்டிருந்தனர்; திடீரென ஒரு கடும் சூறாவளி ஏற்பட்டு, அதில் அவர்களின் படகு சிக்கிக் கொண்டது. மாவீரனான அந்த ஆண்மகன் பதட்டப் படாமல் தைரியமாக இருந்தான், ஆனால் அவனுடைய மனைவி பதட்டத்துடன் காணப் பட்டாள். அவர்களின் சிறிய படகானது, புயலின் சீற்றத்தினாலும், முரட்டு அலைகளாலும் சுற்றி வளைக்கப்பட்டுத் தத்தளித்து கொண்டிருந்தது. அது அவளை பெரிதும் அச்சுறுத்தியது. எச்ச்சமயத்திலும் படகு கவிழ்ந்து அதனுடன் அவர்களும் மூழ்கக் கூடும் என்பதை அவள் உணர்ந்தாள். எனினும் அவளுடைய கணவன் அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கவனித்தாள். சிறிதும் சலனமின்றி எதுவுமே நடக்காதது போல அவன் அமர்ந்திருந்தான்.

கவலையுற்ற குரலில், “உங்களுக்குப் பயமாக இல்லையா? இதுவே நம் வாழ்க்கையின் கடைசித் தருணமாக இருக்கலாம்! நாம் பாதுகாப்பாகக் கரையை அடைவோமா என்பதற்கு உத்திரவாதமில்லை. ஏதேனும் அற்புதம் நிகழ்ந்தால் மட்டுமே நாம் உயிர் தப்ப முடியும்; இல்லையெனில் மரணம் நிச்சயம். உங்களுக்கு அச்சமாக இல்லையா? உங்களுக்குப் புத்தி பேதலித்து விட்டதா? உங்கள் மனம் தான் கல்லா?” என்று மனைவி தன் சாந்தமான கணவனைப் பார்த்துக் கேட்டாள்.

அவன் சிரித்துக் கொண்டே தன் வாளை அதன் உறையிலிருந்து உருவினான். மனைவி மேலும் குழப்பமடைந்தாள்; கணவன் என்ன செய்யப் போகிறான் என்று  வியப்புடன் பார்த்து கொண்டிருந்தாள். கணவன் அவள் கழுத்தின் அருகில் வாளை வைத்தான். மிகச் சிறிய இடைவெளி மட்டுமே இருந்தது; கிட்டத்தட்ட அவளது கழுத்தை தொட்டுவிடும் அளவிற்கு, வாள் நெருக்கமாக இருந்தது.

அவன் தனது மனைவியிடம், “உனக்குப் பயமாக இருக்கிறதா?” என்று கேட்டான்.

மனைவி புன்முறுவலுடன், “நான் ஏன் பயப்பட வேண்டும்? கழுத்து முனையில் வாள் இருந்தாலும் அதைப் பிடித்திருக்கும் கைகள் உங்களுடையது. அப்படி இருக்கும் பொழுது, நான் ஏன் பயப்பட வேண்டும்? நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று கூறினாள்.

அவன் வாளை உறையில் திருப்பி செலுத்தியபடி, “என் பதிலும் இதேதான். கடவுள் என்னை நேசிக்கிறார் என்று எனக்கு தெரியும். புயல் அவரது கைகளில் உள்ளது. எது நடந்தாலும் நன்மைக்காகவே என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. எல்லாமே கடவுளின் கைகளில் இருப்பதால், அவர் எல்லோரின் நன்மைக்காக மட்டுமே செயற்படுவார் என்று எனக்கு தெரியும். அவர் தவறு செய்ய மாட்டார்” என்று உறுதியுடன் கூறினான்.

கற்பித்தல்:

நாம் கடவுள் மேல் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே நம் வாழ்வில் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய மாற்றம் ஆகும். இது நம் வாழ்க்கை முழுவதையும் மாற்றிவிடும். ஒரு போதும், அதில் சந்தேகம் இருக்கக் கூடாது.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல்,  மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி,  ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

கிருஷ்ணர், அர்ஜுனன் மற்றும் புறாவின் கதை

நீதி – அன்பு 

உப நீதி – பக்தி / நம்பிக்கை 

The story of Krishna, Arjuna and the dove picture 1

இது, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த புகழ்பெற்ற  உரையாடல்.

ஒரு சமயம், இருவரும் தோட்டத்தில், ஒரு அழகான பாதையில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவை ஒன்றை அவர்கள் பார்த்தனர்.

Image result for pigeon

கிருஷ்ணர் அதை சுட்டிக் காட்டியபடி, “அர்ஜுனா, அந்தப் பறவையைப் பார் – அது புறாதானே?” என்று கேட்டார்.

“ஆம் பிரபு! அது கண்டிப்பாகப் புறா தான்” என்று அர்ஜுனன் கூற முற்பட்டதும் கிருஷ்ணர், “சற்றுப் பொறு! கழுகு போல எனக்குத் தோன்றுகிறதே. அது ஒரு சமயம் கழுகோ?” என்று தொடர்ந்தார்.

See the source image

“ஆமாம்! அது நிச்சயமாகக் கழுகு தான்” என்று அர்ஜுனனிடமிருந்து பதில் வந்தது.

Image result for crow

“இல்லை, இல்லை! அது கழுகு மாதிரி இல்லை” என்று கிருஷ்ணர் கூறி, “கண்டிப்பாக அது காகம் தான்” என்றார்.

“சந்தேகமே இல்லை கிருஷ்ணா, அது காகமே தான்”, என்றவாறு அர்ஜுனன் பதிலளித்தான்.

இந்தத் தருணத்தில், கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே அர்ஜுனனைச் செல்லமாகக் கடிந்து கொண்டு, “நண்பா, நீ என்ன குருடா? உனக்கு சொந்தமாகக் கண்கள் இல்லையா! நான் எது சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறாயே?” என்று கேட்டார்.

அதற்கு அர்ஜூனன், “கிருஷ்ணா, நான் என் கண்களால் காணும் ஆதாரங்களை விட உங்கள் சொற்களின் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறேன். நீங்கள் எது சொன்னாலும், அதை உருவாக்குவதற்கான சக்தி உங்களுக்கு இருக்கிறது. அதை ஒரு காகமாகவோ, புறாவாகவோ அல்லது கழுகாகவோ, நீங்கள் நினைத்தால் மாற்றலாம். ஆகையால், நீங்கள் ஒன்றினைக் காகம் என்று சொன்னால், அது காகமாகத் தான் இருக்க வேண்டும்” என்று கூறினான்.

நீதி:

பக்தி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தக் கதையே சான்று. ஆசிரியர் மற்றும் கடவுளின் மீதும் இப்படிப்பட்ட நம்பிக்கையைத் தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நன்மை தீமைக்கு இடையில் உள்ள போரை வெல்ல, கிருஷ்ணரின் மீது அர்ஜுனன் வைத்த இந்த பக்தியே காரணமாகும்.

ஆன்மீக வெற்றிக்கு மனப்பூர்வமான நம்பிக்கை அவசியம். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் – கடவுள்  பக்தனை விட பக்தியை மட்டுமே விரும்புவார்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி,  ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

கதையைக் கேட்க:

https://www.buzzsprout.com/1498462/8553756

கதையைப் பார்க்க:

https://youtu.be/NevL9zMV5Dg

ஒரே இனம் மாறுபட்ட குணம்

நீதி – நன் நடத்தை

உபநீதி – அக்கறை, பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை

Two seas see differently picture 1இது இரண்டு சமுத்திரங்களைப் பற்றிய ஒரு உண்மையான கதை. மத்தியத்தரைக்கடல் சார்ந்த வடுநிலத்தில் {Mediterranean basin} பிரபலமான சாக்கடல்(Dead Sea) அமைந்துள்ளது. பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் உண்மையில் இது கடல் அல்ல; முரண்பாடாக சாக்கடல் என்று அழைக்கிறோமே தவிர, இது ஒரு ஏரி என்று தெரியும். பிறகு ஏன் கடல் எனக் கூறுகிறோம்? ஏரியின் நல்ல தண்ணீரும், கடலின் உப்பு நீரும், அவைகளை வேறுபடுத்தும் வகையில் உள்ள, குறிப்பிடத்தக்க வித்தியாசம். சாக்கடலில் உப்பு நிரம்பி உள்ளதால், இதைக் கடல் என அழைக்கிறோம். இது 67 கிலோ மீட்டர் நீளமும், மிகவும் பரவலான பகுதியில் 18 கிலோ மீட்டர் அகலமும், 1237 அடி ஆழமும் கொண்டது. பொதுவாக, கடல்களில் இருக்கும் நீரை விட, two seas see differently picture 2.jpgசாக்கடலில் 9 மடங்கு அதிகமாக உப்பு நிரம்பியுள்ளது. அதனால், அக்கடலில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வளமாக இருப்பதற்கோ அல்லது உயிர் வாழவோ வழியில்லாமல் இருக்கிறது. சாக்கடலில் உப்பின் அளவு ஏன் மிகுதியாக இருக்கிறது? எளிமையான பதில். ஜோர்டன் நதியிலிருந்து நீர் சாக்கடலுக்குச் செல்கின்றது. ஆனால், வடிகால் இல்லாததால், சாக்கடலின் நீர் வெளியேறுவதில்லை. சிறிதளவு நீர் ஆவியாக மாறுகின்றது ஆனால், பெரும்பாலும் கடலிலுள்ள உப்பு அங்கேயே தங்கி விடுகின்றதால், அங்கு சுற்றுப்புறச் சூழலில் ஒன்றுமே உயிர் வாழ முடிவதில்லை.

two seas see differently picture 3சாக்கடலின் வடக்கு திசையில், கலிலி (Galilee Sea) என்ற கடல் அமைந்துள்ளது. இது 13 மைல் நீளமும், 8 மைல் அகலமும் கொண்டது. சாக்கடலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இதன் வளங்கள் என்னவென்று தெரியுமா? இக்கடலில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் செழிப்பாக வாழ்கின்றன. இதில் குறைந்தபட்சம், 2௦ வகையான மீன்கள் உயிர் வாழ்கின்றன. இப்பகுதியில், செழிப்பான மீன் பண்ணைகளும், சுற்றுப்புறச் two seas see differently picture 4.jpg.pngசூழலில்  இருக்கும் நிலத்தில் வளமான பயிர்களை அறுவடை செய்வதனாலும், பல மக்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்தச் சிறிய கடலில் எப்படி இவ்வகையான செழுமை? எளிமையான இரகசியம் என்னவென்றால், தன் நீரை பகிர்ந்து கொள்வது தான். இந்த கலிலி கடலுக்குள் வரும் நீர் அதே ஜோர்டன் நதியிலிருந்து வரும் நீர் தான். ஆனால், வடிகால் வழியாக கலிலி கடலிலுள்ள நீர் வெளியேறுகின்றது. அதனால் தான், இங்கு வாழ்க்கை செழிப்பாகவும், வளமாகவும் இருக்கிறது.

நீதி:

நாம் பகிர்ந்து கொள்ளும் போது, நம் வாழ்க்கையை செழிப்பாக அமைத்துக் கொள்கிறோம். பணம், அன்பு, அறிவு, மரியாதை அல்லது வேறு எந்த ஒரு ஆசீர்வாதத்தையும் கடவுளிடமிருந்து பெறும் போது, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால், அவை நாளடைவில் மறைந்து விடும். நாம் எல்லாவற்றையும் நமக்கே என்று வைத்துக் கொண்டால், அப்படியே தேங்கி விடும். கடவுளின் ஆசீர்வாதம் மேலும் மேலும் கிடைக்க வேண்டுமென்றால், நாம் பகிர்ந்து கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கோப்பை காலியாக இருந்தால் தானே அதில் தண்ணீரை ஊற்ற முடியும். அதே போல, நாம் மற்றவர்களுக்குக் கொடுத்து வாழக் கற்றுக் கொண்டால் தான், நம் வாழ்க்கை வளமாக இருக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி,  ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

ஒரு அழகான கண்ணோட்டம்

நீதி –  நம்பிக்கை

உபநீதி – தெளிவான சிந்தனை

A beautiful way of looking at things picture 1

ஒரு சிறுமி, பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்த அவள் தந்தையை அவ்வப்பொழுது தொந்தரவு செய்து கொண்டே இருந்தாள். அவளை ஒரு வேலையில் ஈடுபடுத்துவதற்காக, அவர் உலக வரைபடம் அச்சிடப்பட்ட பக்கத்தைக் கிழித்து அவளிடம் கொடுத்தார். அதனை மேலும் பல துண்டுகளாகக் கிழித்து, அவளிடம் கொடுத்து, “இந்தத் துண்டுகளை இணைத்து மீண்டும் ஒரு முழுமையான வரைபடமாக சேர்க்கவும்” என்று கூறினார். அந்தச் சிறுமி சந்தோஷமாக காகிதப் புதிரை முடிக்க வேண்டும் என்ற ஆவலுடன் அவளுடைய அறைக்கு ஓடினாள்.

அதை முடிக்க அவள் எப்படியும் ஒரு நாள் முழுவதும் எடுப்பாள் என்ற நம்பிக்கையுடன், தந்தை அச்செயலை எண்ணி சந்தோஷப் பட்டு நிம்மதியாக மறுபடியும் படிக்க ஆரம்பித்தார். ஆனால், சில நிமிடங்களுக்குள், மிகவும் சரியாக சேர்த்தமைத்த வரைபடத்துடன் சிறுமி திரும்பினாள். ஆச்சரியப்பட்ட தந்தை, “எப்படி இவ்வளவு விரைவாக இதைச் செய்தாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “அப்பா! அந்தக் காகிதத்தின் பின்புறம் ஒரு மனிதனின் முகம் இருந்தது. இந்த வரைபடத்தை சரியாக அமைக்க, நான் அதன் பின்புறம் இருந்த முகத்தின் துண்டுகளை சரியாக இணைத்தேன். அவ்வளவு தான்” என்று கூறித் தன் தந்தையை வியப்பில் ஆழ்த்திவிட்டு விளையாட ஓடிவிட்டாள்.

நீதி:

வாழ்க்கையில் நாம் எதை அனுபவித்தாலும், அதற்கு மற்றொரு பக்கமும் உண்டு. எப்பொழுதெல்லாம் நாம் ஒரு சவாலையோ அல்லது புதிரான நிலையை சந்திக்கிறோமோ, அப்பொழுதெல்லாம் அதன் மற்றொருப் பக்கத்தையும் பார்க்க வேண்டும். அந்தப் பிரச்சனையை சமாளிக்க ஒரு சுலபமான வழி இருப்பதை உணர்ந்தால், நமக்கே வியப்பாக இருக்கும். ஒரு செயலில் ஈடுபடும் போது, வெவ்வேறு கோணங்களிலிருந்து யோசித்து, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு சரியாக செயற்பட்டால், அந்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com