Archive | December 2016

உண்மையான முத்து மாலை

நீதி – உண்மை, வாய்மை

உபநீதி – உள்ளார்ந்த சக்தியை உணர்தல் / பாராட்டுதல்

the-real-pearl-necklace-first-pictureஜென்னி என்ற ஒரு ஐந்து வயதுச் சிறுமி, பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாள். ஒரு நாள், அவள் தன் தாயாருடன் ஏதோ கடைக்குச் சென்ற போது, ஒரு பிளாஸ்டிக் முத்து மாலையைப் பார்த்தாள். அதன் விலை ரூபாய் 250ஆக இருந்தது.

அச்சிறுமிக்கு அந்த மாலையை வாங்க வேண்டும் என மிகவும் ஆசையாக இருந்தது. ஆனால், அவளின் தாயார், முத்து மாலையின் விலை சற்று அதிகமாக இருந்ததால், அந்த மாலையை வாங்கித் தரவேண்டுமென்றால், வீட்டில் தான் சொல்லும் சில காரியங்களை பதிலுக்கு சிறுமி செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், சிறுமியின் பிறந்த நாளும் கூடிய சீக்கிரத்தில் வருவதால், சிறுமியின் பாட்டி ஏதேனும் பணம் பரிசளிப்பார் என்றும் கூறினார்.

ஜென்னி தாயாரின் ஆணைக்குக் கீழ் படிந்து, வீட்டு வேலைகளை ஒழுங்காகச் செய்து, பாட்டி கொடுத்த பணத்தையும் வைத்துக் கொண்டாள். முத்து மாலைக்குச் செலவழித்த பணத்தை, வேலை செய்து திருப்பிக் கொடுத்து விட்டாள். தினமும் மாலையை அணிந்துக் கொண்டு பேரின்பம் பெற்றாள். குளியல் நேரம் மட்டும் மாலையைக் கழற்றி வைத்து விட்டாள்; ஏனென்றால், சிறுமியின் கழுத்து அதனால் பச்சையாக மாறி விடும் எனத் தாயார் கூறியிருந்தார்.

ஜென்னியின் தந்தையும் மிகவும் பாசம் உள்ளவர். ஒரு நாள், அவர் ஜென்னியை அழைத்து, அவள் தன்னை விரும்புகிறாளா எனக் கேட்டார். தினமும், உறங்கும் முன், அவளுக்கு ஒரு கதை சொல்வார். மகள் ஆம் என்று ஒப்புக் கொண்டதும் முத்துமாலையைத் தனக்குத் தருமாறு கேட்டார். மகள் மறுத்து விட்டாள். அதற்கு பதிலாக, தன் பிறந்த நாள் பரிசுப் பொம்மையையோ, குதிரை பொம்மையையோ அல்லது ரிப்பன்களையோ தருவதாகச் சொன்னாள். அவற்றை வைத்துக் கொண்டு தந்தையை விளையாடச் சொன்னாள். இது போல, 2 அல்லது 3 முறை நடந்தது.

the-real-pearl-necklace-pictureஒரு நாள், உறங்கச் செல்லும் முன், தந்தை வழக்கம் போல அவளுக்குக் கதை சொன்னார். கதை கேட்டபின், அவள் முத்து மாலையைத் தந்தைக்கு கொடுத்து விட்டாள். உடனே தந்தை ஒரு கையால் முத்து மாலையை வாங்கிக் கொண்டு, மறு கையால் தன் பையில் வைத்திருந்த ஒரு வெல்வெட் பெட்டியை அவளிடம் கொடுத்தார். பெட்டியின் உள்ளே ஒரு அழகான முத்துமாலை இருந்தது. தந்தையிடம் வெகு நாட்களாகவே அந்த மாலை இருந்தது; ஆனால் ஜென்னி விலை மலிவான மாலையை விட்டுக் கொடுப்பதற்காக காத்திருந்தார்.

நீதி

நம் வாழ்வில் பல சமயம் உண்மையைப் புரிந்து கொள்ளாமல், நாம் உபயோகமற்ற பொருட்களில் கவனம் செலுத்துகிறோம். நாம் வசதிகளோடு வாழ வேண்டும் என்ற எண்ணங்களில் மூழ்கி,  குறுகிய மனப்பான்மையுடன் இருக்கிறோம்.

பல நல்ல வாய்ப்புகளை இழந்து விடுகிறோம். எவ்வளவு சுயநலமாக ஒருவர் இருக்க முடியும்! சிலவற்றை விட்டுக் கொடுத்தால் தான் பலவற்றை பெற முடியும். பலம், ஆதரவு, மகிழ்ச்சி என்று பல விஷயங்களை வெளியிலே தேடுகிறோம். அவை நம்முள்ளே இருக்கின்றன என்று அறிந்து கொள்ள தவறி விடுகிறோம். ஆதலால், இனிமேல் உள்மனதை நோக்குவோமாக!

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

சூறாவளிக் காற்று

நீதி – அமைதி / சமாதானம் 

உபநீதி – நம்பிக்கை / பொறுமை 

when-the-wind-blows-picture-1பல வருடங்களுக்கு முன், விவசாயி ஒருவர் அட்லாண்டிக் கடற்கரை ஓரத்தில் சில நிலங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தார். “வேலை செய்ய ஆட்கள் தேவை” எனத் தொடர்ந்து விளம்பரம் செய்து கொண்டிருந்தார். ஆனால், பெரும்பாலான மக்கள், அட்லாண்டிக் கடற்கரை ஓரமாக இருக்கும் பண்ணைகளில் வேலை செய்ய மறுத்தனர். அப்பகுதிகளில், மிக மோசமான சூறாவளிகள் கட்டிடங்களையும், பயிர்களையும் தாக்கிச் சேதப் படுத்திய சம்பவங்கள் அதிகமாக இருந்ததால், அங்கு வேலை செய்ய பயந்தனர்.

வேலைக்காக, விண்ணப்பதாரர்களை நேருக்கு நேர் சந்தித்து பேசிய போது, தொடர்ந்து வந்த பதில்கள் விவசாயிக்கு சாதகமாக அமையவில்லை. கடைசியாக, நடுத்தர வயதைக் கடந்த, ஒல்லியான மற்றும் குள்ளமான ஒரு மனிதர் அங்கு வந்தார். விவசாயி, “நீ நன்றாக வேலை செய்வாயா?” என்று அவரைக் கேட்டார்.

“ஆம், காற்று பலமாக வீசும் பொழுது, என்னால் நன்றாகத் தூங்க முடியும்” என்று பதிலளித்தார். ஆச்சரியத்துடன் பதிலைக் கேட்ட விவசாயி, அச்சமயத்தில் உதவிக்கு அவசியமாக ஆள் தேவையாக இருந்ததனால், உடனடியாக வேலையில் சேர்த்துக் கொண்டார்.

when-the-wind-blows-working-in-the-farmகாலையிலிருந்து மாலை வரை, அம்மனிதர் கடினமாகப் பண்ணையில் உழைத்ததால், விவசாயிக்குத் திருப்தியாக இருந்தது. ஓர் இரவு, பலத்த காற்றடித்தது. விவசாயி, படுக்கையிலிருந்து அவசரமாக எழுந்து, அருகிலிருந்த அம்மனிதரின் வீட்டிற்குச் சென்று, “எழுந்திரு! சூறாவளி வரும் போல இருக்கிறது! பண்ணையில் இருக்கும் எல்லாவற்றையும் பாதுகாப்பாக வைக்கவும். இல்லாவிடில், புயல் காற்றினால் எல்லாம் பறந்து விடும்!” என்றார்.

ஆனால், அம்மனிதர் படுக்கையை விட்டு எழுந்திராமல், “நான் தான் சொன்னேனே, சூறாவளி காற்றடிக்கும் போது, என்னால் தூங்க முடியும்” என்று கத்தினார்.

when-the-wind-blows-heavy-windsஇந்த பொறுப்பில்லாத பதிலைக் கேட்ட விவசாயிக்கு, கோபம் வந்து அந்த நிமிடமே அம்மனிதரை வேலையை விட்டு நீக்கி விடலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால், அந்த நிமிடத்தில், சூறாவளிக் காற்றை எதிர்பார்த்து சில ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. அவசரமாக வெளியே சென்று பார்த்தால், வைக்கோற்போர்  அனைத்தும் தார்ப் பாயால் மூடியிருந்தது. மாடுகள் களஞ்சியத்திலும், கோழிக்குஞ்சுகள் பிரம்புக்கூடையிலும், கதவுகள் நன்றாக அடைக்கப்பட்டிருந்தன. முன் எச்சரிக்கையாக அம்மனிதர் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். இப்போது தான், விவசாயிக்கு அவர் கூறிய அனைத்திற்கும் அர்த்தம் புரிந்தது.

நீதி

நாம் ஆன்மீகக் கொள்கைகளை ஒருமுகச் சிந்தனையோடு கடைப்பிடித்து, மனரீதியாகவும், இயற்பியல் மாற்றங்களை அனுசரித்துப் போகின்ற வகையிலும் முன்னேற்பாடுகள் செய்திருந்தால், எதற்கும் பயப்பட அவசியமில்லை. வாழ்க்கையில் இந்த விவேகமிருந்தால், எவ்விதமான கஷ்டங்கள் வந்தாலும், நிம்மதியாக உறங்க முடியும் அல்லவா? சரியான மனப்பான்மைக்கும், மன தைரியத்திற்கும், திடநம்பிக்கை தான் அடித்தளமாக அமைகின்றது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

பால் வாளியில் தவளை

நீதி – நன்னம்பிக்கை

உபநீதி – விடாமுயற்சி

frog-in-a-pail-of-milk-picture-1ஒரு தவளை, ஒரு பண்ணைக்குக் குதித்துச் சென்று, அங்குள்ள நெற்களஞ்சியத்தை பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென, தன் கவனக் குறைவினால் மற்றும் அதிகமான ஆர்வத்தினால், அரைப் பாகம் பால் வைத்திருந்த வாளியில் விழுந்து விட்டது.

வாளியின் மேற்பகுதிக்கு நீந்தி வர, பல முறை முயன்றது. ஆனால் வாளி உயரமாக இருந்ததனால், அதற்கு மிகவும் கடினமாக இருந்தது. தனது பின் கால்களைச் சற்று நீட்டிக் கொண்டு, வாளியின் கீழ்ப் பகுதியைத் தள்ள முயன்றது. ஆனால், ஆழமான வாளியாக இருந்ததால் முடியவில்லை. ஆனாலும் மனம் தளராமல், மேலே வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்தது.

தவளை உதைத்து, பிறகு உடம்பை வெவ்வேறு கோணங்களில் அசைத்துப் பார்த்து, பிறகு மறுபடியும் உதைத்து பார்த்தது. விடாமுயற்சி இறுதியில் நல்ல விளைவில் முடிந்தது. பால் வெண்ணையாக மாறி, தவளைக்கு வெளியே வருவதற்கு ஒரு பிடிப்பாக அமைந்தது.

நீதி:

முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். இறுதி வரை முயற்சிக்க வேண்டும்.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருக்க உதவும்; முயற்சி இல்லையென்றால், அவனுக்கு வறுமை தான் மிஞ்சும்.

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

ஏழை மனிதனின் செல்வம் மன நிம்மதி

நீதி: சமாதானம்

உபநீதி: மன நிறைவு

poor-mans-wealth

ராம்சந்த் மற்றும் பிரேம்சந்த் அண்டை வீட்டுக்காரர்கள். ராம்சந்த் ஒரு விவசாயியாகவும், பிரேம்சந்த் ஒரு மிராசுதாரராகவும் பணியாற்றி வந்தனர்.

ராம்சந்த் மகிழ்ச்சிகரமாகவும், நிம்மதியாகவும் வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். இரவு நேரத்தில், தன் வீட்டுக் கதவுகளையும், ஜன்னல்களையும் மூடாமல்,  அவனால் பயமில்லாமல் நிம்மதியாகத் தூங்க முடிந்தது. வசதி குறைவாக இருந்தாலும், அவன் மனநிறைவோடு சந்தோஷமாக வாழ்ந்தான்.

பிரேம்சந்த் எல்லா சமயங்களிலும் பதற்றமாக காணப் பட்டான்; மன நிம்மதியும் இல்லை. இரவு நேரங்களில், வீட்டின் கதவுகளையும், ஜன்னல்களையும் மூடாமல் படுக்க செல்ல மாட்டான். யாராவது தன் வீட்டினுள் புகுந்து கொள்ளையடித்து விடுவார்களோ என்ற பயம் அவனை உறுத்திக் கொண்டே இருந்ததனால், அவனால் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியவில்லை. ராம்சந்தின் மன நிறைவான வாழ்க்கையைக் கண்டு அவன் பொறாமையுற்றான்.

ஒரு நாள், பிரேம்சந்த், ராம்சந்திடம் ஒரு பெட்டி நிறைய பணத்தை கொடுத்து, “நண்பா, என்னிடம் நிறைய சொத்து இருக்கிறது. உன்னிடம் அதிக வசதி இல்லை என்பது எனக்குத் தெரியும். அதனால், இந்தப் பெட்டியை ஏற்றுக் கொண்டு நீயும் செழிப்பாக வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன். தயவு செய்து இதை ஏற்றுக்கொள்” என்றான்.

ராம்சந்த் பேரின்பத்தில் மூழ்கினான். அந்தப் பணத்தை ஏற்றுக் கொண்டு, பொழுதை சந்தோஷமாகக் கழித்தான். அன்றிரவு, ராம்சந்திற்குத் தூங்க முடியவில்லை. படுக்கையை விட்டு எழுந்து சென்று, வீட்டு கதவுகளையும், ஜன்னல்களையும்  மூடினான். அதற்குப் பிறகு கூட அவனால் தூங்க முடியவில்லை. அந்த பணப் பெட்டியைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனை உறுத்திக் கொண்டே இருந்தது. அன்றிரவு, அவனால் ஒரு நிமிடம் கூட நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.

பொழுது விடிந்ததும், ராம்சந்த் அந்தப் பணப் பெட்டியைப் பிரேம்சந்திடம் எடுத்துச் சென்றான். அதை மறுபடியும் கொடுத்து விட்டு, “நண்பா, நான் ஏழையாக இருக்கலாம். ஆனால், மனதளவில் நான் ஒரு பணக்காரன். நீ நேற்று தந்த அந்த பணப் பெட்டி என் நிம்மதியை இழக்கக் காரணமாக இருந்தது. தயவு செய்து தவறாக நினைக்காமல் இந்தப் பணத்தை திருப்பி வாங்கிக் கொள்” என்றான்.

நீதி:

பணம் நமக்கு வாழ்க்கையில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே கொடுக்கும். நாம் நம்மிடம் இருப்பதை வைத்துக் கொண்டு மன நிறைவோடு வாழ்ந்தால், வாழ்க்கையில் பேரின்பம் கிடைக்கும்.

மொழி பெயர்ப்பு:

சுப்ரியா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

பார்வையற்ற சிறுவன்

நீதி – நன்னம்பிக்கை

உபநீதி – புலனறிவு, நுண்ணுணர்வு, ஞானம்

the-blind-boy-pictureஒரு பார்வையற்ற சிறுவன், ஒரு கட்டிடத்தின் படிகளில் உட்கார்ந்து கொண்டு, தன் கால்களுக்கு அருகில் ஒரு தொப்பியை வைத்துக் கொண்டிருந்தான். ஒரு அறிவிக்கைப் பலகையில், “நான் பார்வையற்றவன்;  தயவு செய்து எனக்கு உதவி செய்யவும்” என எழுதியிருந்தான். அந்தத் தொப்பிக்குள் சில காசுகள் இருந்தன.

அங்கு ஒரு மனிதர் நடந்து கொண்டிருந்தார். அவர் சில காசுகளைத் தொப்பியில் போட்டுவிட்டு, அறிவிக்கைப் பலகையைத் திருப்பி, வேறு சில வார்த்தைகளை எழுதினார். வழிப்போக்கர்களுக்கு, இந்த புது வார்த்தைகள் தெரியுமாறு வைத்து விட்டுச் சென்றார்.

சிறிது நேரத்தில், தொப்பி நாணயங்களால் நிறைந்து விட்டது. பல மக்கள், அந்தப் பார்வையற்ற சிறுவனுக்கு நிறைய பணம் அளித்தனர். அன்று மதியம், அறிவிக்கைப் பலகையில் மாற்றி எழுதிய அம்மனிதர், ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என்று பார்க்க அங்கு வந்தார். சிறுவன் உடனடியாக அவர் வருவதை அடையாளம் கண்டு,  “நீங்கள் தானே இன்று காலை ஏதோ மாற்றி எழுதினீர்கள்? அது என்ன என்று சொல்ல முடியுமா?” என விசாரித்தான்.

அதற்கு அந்த மனிதர், ”நான் உண்மையைத் தான் எழுதினேன். நீ குறிப்பிட்டிருந்த வார்த்தைகளைச் சற்று மாற்றி எழுதினேன்“ என்றார்.

அவர் மாற்றி எழுதிய வார்த்தைகள்: “இன்றைய நாள் மிகவும் இனிமையானது; ஆனால், என்னால் பார்க்க முடியவில்லையே”

இரண்டு செய்திகளுக்கும் ஒரே அர்த்தம் தான் என நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆம். இரண்டு செய்திகளும் அச்சிறுவன் பார்வையற்றவன் என்பதையே குறிப்பிடுகின்றன. ஆனால் இரண்டாவது  செய்தி, அச்சிறுவனின் மன வருத்தத்தை மற்றவர்களின் உணர்ச்சிகளை தூண்டுகின்ற வகையில் அழகாக வெளிப்படுத்துகிறது.

நீதி:

நாம் ஒவ்வொரு நொடியும், நன்றி உணர்வோடு இருக்க வேண்டும். எப்போதும், சற்று வித்தியாசமாக யோசனை செய்து, நல்லதையே நினைக்க வேண்டும்.

வாழ்க்கையை அன்பான மனப்பான்மையுடன்,  குற்றம் குறைகளைப் பாராட்டாமல் வாழ வேண்டும். வாழ்க்கை நமக்கு அழுவதற்கு 100 காரணங்களை கொடுத்தால், சிரிப்பதற்கு 1000 காரணங்களை அளிக்கிறது என்று திடமாக நம்பி செயல்பட வேண்டும். கடந்த காலத்தை நினைத்து வருத்தப் படாமல், நிகழ் காலத்தைத் திட நம்பிக்கையுடன் வாழ்ந்து, எதிர்காலத்தைப் பயப்படாமல் எதிர் கொள்ள வேண்டும். பயத்தை தவிர்த்து நம்பிக்கையுடன் வாழவும்.

பல ஞானிகள் வாழ்க்கையைப் பற்றி அழகாகக் கூறியிருக்கிறார்கள். வாழ்க்கைச் சக்கரம் பழுது பார்த்துச் சரி செய்யும் ஒரு சுழற்சி. கெட்ட விஷயங்களை மறந்து, நல்லவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்னும் பயணத்தில் அச்சமில்லாமல் செயல்பட, நல்ல மனப்பான்மை என்னும் பயணச் சீட்டு நமக்கு அவசியம்.

மற்றவரின் புன்சிரிப்பே உலகில் மிக அழகான விஷயம்; அதற்குக் காரணமாக நீங்கள் இருப்பது தான் அதைவிட அழகானது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com