முயற்சி செய்

நீதி – உண்மை / விசுவாசம்

உபநீதி – உறுதி, நம்பிக்கை, பொறுமை

ஒரு மனிதன் தன் அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென பிரகாசம் நிரம்பிய அறையில் கடவுள் தோன்றினார். கடவுள் அவனுக்கு வேலை இருப்பதாகவும், அறையின் முன் இருக்கும் பெரிய பாறையை அவனிடம் காண்பித்து, அதன் மீது தன் முழு பலத்தையும் பயன்படுத்துமாறு விவரித்தார். மனிதனும் ஒவ்வொரு நாளும் அவ்வாறே செய்தான்.

பல வருடங்கள், அம்மனிதன் சூரியோதயத்திலிருந்து மாலை அஸ்தமனம் வரை, அந்த நகராத பாறையின் பிரம்மாண்டமான மேற்பரப்பின் மீது தன் தோளை வைத்து, நகர்த்த முயற்சித்தான். ஒவ்வொரு இரவும் அறைக்கு திரும்பும் போது, புண்பட்ட ரணங்களோடு நாளை வீணாக்கிய உணர்வுடன் இருந்தான்.

அம்மனிதனின் நம்பிக்கை இழந்த உணர்வுகளை கவனித்து, களைப்புற்ற மனிதனின் மனதில் “பல நாட்களாக அந்தப் பாறையை நீ தள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறாய்; ஆனால் அது நகரவே இல்லை. நீ ஏன் உன்னை வருத்திக் கொள்கிறாய்? உன்னால் இந்த வேலையை நிச்சயமாக செய்ய முடியாது” போன்ற எதிர்மறையான எண்ணங்கள் தோன்றியன.

உடனடியாக மனிதனின் மனதில், இந்தப் பயனற்ற முயற்சியில், தான் தோல்வி அடைந்த எண்ணம் வந்தது.  

இந்த எண்ணங்கள் அம்மனிதனின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்தது; “நான் ஏன் கஷ்டப்பட வேண்டும்?” என்று நினைத்து அவன் மனச் சோர்வடைந்தான்.

மேலும் அம்மனிதன் “இந்தப் பணியில் சிறிது நேரத்தையே செலவழித்து, மிகக் குறைந்த முயற்சியை செலுத்தினால் அதுவே போதுமானது” என்று  தீர்மானித்தான்; இப்படி தொடர்ந்து செய்து கொண்டிருந்த அந்த மனிதன், ஒரு நாள் இறைவணக்கத்தைக் கோரி, அலைபாய்ந்து கொண்டிருந்த எண்ணங்களை கடவுளிடம் எடுத்துச் செல்ல நினைத்தான்.

பிறகு அவன், “கடவுளே, நீங்கள் கூறிய சேவையில் நான் பல நாட்கள் தீராது உழைத்திருக்கிறேன்; ஆனாலும் பாறையை என்னால் சிறிதளவு கூட நகர்த்த முடியவில்லை. தப்பு எங்கு இருக்கிறது? நான் ஏன் தோல்வி அடைகிறேன்?” என்று கேட்டான்.

அதற்குக் கடவுள் கருணையுடன், “நண்பனே! நீ ஓர் சேவை செய்ய வேண்டும் என்று நான் கூறிய போது அதை ஏற்றுக் கொண்டாய். உனக்கு கொடுத்திருக்கும் வேலை அறையின் முன் இருக்கும் பெரிய பாறையின் மேல் முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று விவரித்த போது அதை நீ செய்தாய். ஒரு முறை கூட, பாறையை நகர்த்த வேண்டும் என்று நான் கூறவில்லை. பலத்தை செலுத்துவது தான் உன் வேலை. உன் பலம் எல்லாமே தீர்ந்து போனது என நினைத்து தற்போது என்னிடம் வந்திருக்கிறாய். அது தான் உண்மையா? உன்னை சற்று பார். உன் கரங்களும் முதுகும் பலமடைந்து, தசை ஆற்றல் வலிமையடைந்து, கால்கள் திடமாகி இருக்கின்றன. இந்த சோதனையை மேற்கொண்டு உன் திறமைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. உன்னால் பாறையை நகர்த்த முடியவில்லை; என் மேல் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை செலுத்தி, உன் பலத்தை பயன்படுத்துவது மட்டுமே உனக்கு நான் கொடுத்திருந்த வேலை. இதை நீ நன்றாக செய்து விட்டாய். இதோ! நான் பாறையை நகர்த்துகிறேன்” என்று கூறினார்.

அவ்வப்போது, கடவுள் நம்மிடம் ஏதாவது கூறும் போது, நம் அறிவைப் பயன்படுத்தி அவர் என்ன எதிர்பார்க்கிறார் என நாம் யோசனை செய்கிறோம்; ஆனால் கடவுளுக்கு நம்மிடமிருந்து கீழ்படிவு மற்றும் நம்பிக்கை மட்டுமே தேவையாக இருக்கிறது.

மலைகளை நகர்த்துவதற்கான நம்பிக்கையை நாம் கடவுள் மீது வைக்க வேண்டும்; ஆனால் கடவுள் தான் அதை செய்கிறார் என்பதை தீவிரமாக நம்ப வேண்டும்.

நீ முயற்சி மட்டுமே செய்ய வேண்டும்!

எல்லாமே தவறாக இருந்தாலும், …. முயற்சி செய்!

ஏதாவது ஒரு வேலை உன்னை கீழ் நோக்கிச் செல்ல செய்தாலும், … முயற்சி செய்!

மற்றவர்கள் நீ நினைக்கின்ற மாதிரி நடந்து கொள்ளாவிட்டாலும்,…முயற்சி செய்!

பணம் சற்று குறைவாகவும், கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும், …முயற்சி செய்!

மனிதர்கள் உன்னை புரிந்து கொள்ளாவிட்டாலும், … முயற்சி செய்!

முயற்சி செய்து விளைவு பெறும் வரை; பிரார்த்தனை செய்.

நீதி:

எந்த ஒரு வேலையை நாம் எடுத்துக் கொண்டாலும், அதற்கு தேவையான திடநம்பிக்கையை மேம்படுத்திக் கொண்டு, அந்த வேலையை கைவிடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒருவன் இந்த நேர்மறையான மனப்பான்மையுடன் முன் நோக்கிச் சென்றால், நம்பிக்கை மற்றும் பொறுமை தானே வளரும். இந்த நேர்மறையான நற்பண்புகளுடன், எந்த ஒரு கடினமான பணியையும் கடவுளின் ஆசீர்வாதங்களுடன் நாம்  செயற்படுத்தலாம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

2 thoughts on “முயற்சி செய்

  1. ஒரு மனிதன் தொண்டத்து முயற்சி செய்தால் எதையும் வெல்ல முடியும்

Leave a comment