Archive | August 2021

பிரச்சனையை நேரடியாக எதிர்கொள்

நீதி உண்மை

உபநீதி ஞானம், திடநம்பிக்கை

ஒரு புத்த மடத்தின் நிர்வாகத்தை, மகா குரு ஒருவரும், பாதுகாவலரும் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு நாள், பாதுகாவலர் இறந்து விட்டதால் வேறு ஒருவரை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. தன்னுடன் வேலை செய்வதற்காக, பொருத்தமானவர் ஒருவரை தேர்ந்தெடுக்க, மகா குரு அனைத்து சீடர்களையும் அழைத்தார்.

மகா குரு “உங்கள் அனைவருக்கும் ஒரு பிரச்சனையை கொடுக்கப் போகிறேன். அந்த பிரச்சனைக்கு முதலில் யார் தீர்வு காண்கின்றார்களோ, அவரை மடத்தின் புதிய பாதுகாவலராக நியமிப்பேன்” என்று கூறினார்.

இந்த சுருக்கமான பேச்சு முடிந்ததும், மகா குரு அறையின் நடுவில் ஒரு முக்காலியை போட்டார். அதற்கு மேல், அவர் அழகான சிவப்பு ரோஜாவை, ஒரு விலை மதிப்பற்ற பீங்கான் குவளைக்குள் வைத்தார்.

மகா குரு “இது தான் பிரச்சனை” என்றார்.

சீடர்கள் அவர்கள் முன் இருந்ததை குழப்பத்துடன் பார்த்தனர். பீங்கான் குவளையின் மேல் அரிதான, மதிநுட்பமான வடிவமைப்புகள் இருந்தன; அதற்குள் அழகான மலர் இருந்தது. இது எதை குறிக்கின்றது? என்ன செய்ய வேண்டும்? புரிந்து கொள்ள முடியாத இந்த புதிரின் அர்த்தம் என்ன?

சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சீடன் எழுந்து நின்று, மகா குருவையும், மற்ற சீடர்களையும் பார்த்தான். பிறகு, உறுதியான மனப்பான்மையுடன் குவளையை கீழே எறிந்தான்; அது உடைந்து சிதறியது. 

மகா குரு “நீ தான் புதிய பாதுகாவலர்” என்றார்.

அந்த சீடன் திரும்பி வந்து “நான் தெளிவாக பிரச்சனையை புரிந்து கொண்டு, அதற்குத் தீர்வு வேண்டும் என எண்ணினேன். எவ்விதமான பிரச்சனையாக இருந்தாலும் சரி, அதை அகற்ற வேண்டும். அதனால் பீங்கான் குவளையை உடைத்தேன்” என்று விவரமாகக் கூறினான்.

நீதி:

ஒரு பிரச்சனை பிரச்சனை தான். அது அரிதான பீங்கான் குவளையோ, அர்த்தமில்லாத உறவு முறையோ, ஒரு செயல்முறையை தடுத்து நிறுத்துவதோ…..

பிரச்சனையை சமாளிக்க ஒரே வழி – நேரடியாக அதை தீர்ப்பது. பிரச்சனையை விட்டு தூரம் விலகினால், தீர்விலிருந்து வெகு தூரம் செல்வதாகும். ஒரு பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ள நாம் அதை நேரடியாக எதிர்கொள்ள வேண்டும். நாம் விவேகமுள்ள மனப்பான்மையுடன், சாந்தமாக பிரச்சனையைக் கையாளுவது நன்மை பயக்கும்; ஏனெனில் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது. 

பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவை

வேதனைப்படுதல் நம்முடைய விருப்பம்  

பிரச்சனைகளுக்கு தீர்வுகள் இருக்கின்றன

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

கேட்புத் திறன்

நீதி: நன்னடத்தை

உப நீதி: பொறுமை / கருணை

ஸ்டீவ் குடியரின் வலைப்பதிவு  http://www.LifeSupportSystem.com லிருந்து எடுக்கப் பட்டது. 

22 வயது ஆன ஜோ என்னும் மின் பணியாளர், செப்டம்பர் 11, 2001 வருடத்தில் உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடந்த சில தினங்களுக்குப் பிறகு, மன்ஹாட்டன் நகருக்குச் சென்றான். தனது நேரத்தை தொண்டு செய்வதில் பயன்படுத்த வேண்டும் என்று அவன் நினைத்தான். அவனது திறமைக்கு அங்கு வேலையில்லை என்பதைக் கண்டுபிடித்தான்.

எனினும், அவன் முற்றிலும் எதிர்பாராத ஒரு கோணத்தில் உதவி செய்ய முடிந்தது.

ரயில் வண்டியில் வீடு திரும்பும் போது, அவன் சக பிரயாணியான ஒரு தீயணைப்பு வீரரைக் கண்டான்; மிகவும் சோர்வுற்றிருந்த அந்த நபர், அந்த பேரிடர் நடந்த இடத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் பார்ப்பதற்கு மிக அழுக்காகவும், உயிரற்றத் தோற்றத்துடனும் காணப்பட்டார். அந்த மனிதரின் தலையில் மண் துகள்களும், கைகள் ரத்தக்கறை படிந்தவையாகவும் தென்பட்டன. இதில் மிகவும் கவலைக்குரியதாக இருந்தது என்னவென்றால், அந்த மனிதரின் ஜீவனற்ற, மங்கிய கண்களே.

மிகுந்த அதிர்ச்சியிலிருந்த அந்த நபர் பேசத் தொடங்கினார். ஜோ அதைக் கேட்டான்.

தன் திறமையினால் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையின் ஏமாற்றத்தை ஜோ மறந்து, தீயணைப்பு வீரர் விவரித்த கோரமான கதையைச் செவி மடுத்தான்.

அம்மனிதர், ஒரு பாதத்தோடு இருந்த காலணியை கண்டெடுத்ததைப் பற்றி கூறினார். ஜோ கேட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு மனிதனின் முகத்திலிருந்த மண் துகள்களை அகற்றிக் கொண்டிருந்த போது, உடல் காணாமல் போயிருந்தது தெரிந்தது. அம்மனிதர் அதைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். ஜோ, எந்த சலனமுமின்றி கேட்டுக் கொண்டிருந்தான்.

ஜோ எதற்கும் எதிர்வினையாற்றவில்லை. அவன் எதற்குமே தீர்ப்பளிக்கவில்லை; குறுக்கிடவில்லை. ஜோ எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

அந்த தீயணைப்பு வீரரின் புலம்பல்கள், அந்த படுகொலையைப் பற்றிய விவரங்கள் மற்றும் ஏராளமான காலணிகள் இறைந்து கிடந்ததைப் பற்றி கூறியதை ஜோ கவனமாகவும், பொறுமையாகவும் கேட்டுக் கொண்டிருந்தான்.

இதுவே அந்த மனிதருக்கு, அந்த மீட்புப் பணியாளருக்கு அந்நொடியில் தேவைப்பட்டது.

மேலும் ஜோ செவி மடுத்ததால், அவர் தொடர்ந்து பேசினார். அம்மனிதர் தன் வலியினை முடிந்த வரையில் வெளிப்படுத்தினார். ஒரு அன்னியர், முகமறியாதவர் முன்னிலையில், அந்நபர் தனது பழைய உலகத்தை ஸ்தாபிக்க முயன்று கொண்டிருந்தார்.

ஜோவும், குறைந்த பட்சம், அந்த நேரத்தில் அம்மனிதரின் நம்ப முடியாத மனபாரத்தை சுமந்து உதவினான்.

அந்த நாள் – ஜோ ரத்ததானம் செய்யவில்லை; தன்னுடைய பணித்திறமையையும் உபயோகிக்கவில்லை. மாறாக, ஒரு மனிதன் சக மனிதனுக்கு செய்யக்கூடிய ஒரு மிக முக்கியமான பணியினை செய்தான். மனமொடிந்த, அதிர்ச்சியில் உறைந்த ஒரு மனிதனுக்குத் தன் முழு கவனத்தையும் அர்ப்பணித்து, ஒரு சிறிய, ஆனால் சிறந்த முறையில் உலகை சீரமைக்க உதவினான்.

மேரி லியு கேஸி, “மக்களுக்கு உண்மையில் தேவைப்படுவது எதுவெனில், ஒரு விஷயத்தை நன்கு செவிமடுப்பதே. அது சுலபமானதல்ல. சில சமயங்களில் அது வேடிக்கையானதுமல்ல. உண்மையில், ஒருவரது பேச்சை கூர்ந்து செவி மடுப்பது ஒரு கடினமான பணியாகும்” என்று கூறுகிறார்.

கவனமாக கேட்பது என்பதே ஒரு நாளினை நாம் திருப்தியாக கழிப்பதற்கான வழியாகும்.

ஆம். இது உண்மை. மக்களுக்கு உண்மையான தேவை என்னவென்றால் நல்ல செவி மடுத்தலே.

நீதி:

மக்களின் வாழ்வில் எவ்வளவோ நிகழ்வுகள். அதனை கேட்போர் எவராவது இருப்பார்களா என ஏங்குகிறார்கள். யாரொருவர் விருப்பத்துடன் அமர்ந்து கேட்கிறார்களோ, அவர் அவர்களது ரட்சகரே. மாறாக நமக்கும் அதில் பலனிருக்கிறது. நாம் நாளடைவில் பொறுமை மற்றும் கருணையை வளர்த்துக் கொள்கிறோம். நம் மனதிலுள்ள எத்தனையோ கேள்விகளுக்கும் விடையை காண்கிறோம். ஆகவே, கேட்பது என்பது நமது சிறப்புரிமை. அதனை நமது சொந்த நன்மைக்கும் பயன்படுத்துவோம்.

“அறிவோடு பேசுவது நமது பிறப்புரிமை; ஞானத்தோடு செவிமடுப்பது சிறப்புரிமை”

மொழி பெயர்ப்பு:

ராஜலக்ஷ்மி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

கல்வியும் அனுபவமும்

நீதி: நன்னடத்தை, பெற்றோரின் வளர்ப்பு

உபநீதி: ஒழுங்குமுறை, கடமை

கல்விக்கும் அனுபவத்திற்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது.

நுணுக்கமாக கவனித்து, படித்து, புரிந்து கொள்வது கல்வி.

அதை படிக்காமல் பெறுவது அனுபவம்.

கல்வி மற்றும் அனுபவத்தால் கற்றுக் கொள்ளுதல் சிறந்தது அல்லவா?

ஒரு நீதிக் கதையை நாம் இங்கு பார்ப்போம்:

இளம் வயது பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, கனவில் ஒரு தேவதை தோன்றி “உலகத் தலைவியாக மாறப் போகும் ஒரு குழந்தையை நான் உனக்கு அளிக்கப் போகிறேன். அவள் தன் அறிவுத் திறனை உணர்ந்து, தன்னம்பிக்கையில் வளர்ந்து, உறுதி மற்றும் உணர்திறனை மேம்படுத்திக் கொண்டு, திறந்த மனதுடன், நற்பண்புகளில் வல்லமையாக இருக்க எப்படி அவளைத் தயார் செய்யப் போகிறாய்? சுருக்கமாக, உலகில் மிகச் சிறந்த தலைவியாகத் திகழ அவளுக்கு எவ்விதமான கல்வியைத் தருவாய்?” என்று கேட்டாள். இந்த இளம் ஆசிரியர், கனவிலிருந்து அதிர்ச்சியுடன் முழித்துக் கொண்டார். இதுவரை இந்தக் கேள்விகள் அனைத்தும் அவருக்கு மனதில் தோன்றவில்லை – இந்தக் கனவில் விவரித்தது போல, அவருடைய தற்போது அல்லது வருங்கால மாணவர்களில் ஒருவர் இப்படி இருக்கலாம் அல்லவா? மாணவர்கள் சிறந்த நிலைக்கு வரும் வகையில் ஆசிரியர் ஏதாவது செய்து கொண்டிருக்கிறாரா? அவர் “பல மாணவர்களில் ஒருவன் இந்த நிலைக்கு வரப் போகிறான் என்று தெரிந்தால், நான் கற்பித்தலை எப்படி மாற்றிக் கொள்ள முடியும்?” என்று நினைத்து கொண்டிருந்தார். அவர் நிதானமாக மனதில் ஒரு திட்டத்தை வகுக்கத் தொடங்கினார்:

  • இந்த மாணவருக்கு அனுபவம் மற்றும் அறிவுரை தேவையாக இருக்கும்.
  • அவள் / அவனுக்கு வெவ்வேறு பிரச்சனைகளை சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • அவள் / அவன் அறிவு மற்றும் நற்பண்புகள் இருக்கும் வகையில் வளர வேண்டும்.
  • அவள் / அவனுக்கு மற்றவர்கள் கூறுவதை கவனமாகக் கேட்டு அவர்களுடன் நன்றாக வேலை செய்வதற்கான தன்னம்பிக்கை வேண்டும்.
  • அவள் / அவன் கடந்த காலத்தை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும்; ஆனால் வருங்காலத்தை நினைத்து நன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
  • அவள் / அவன் வாழ்நாள் முழுதும் நீடித்திருக்கிற கற்றலின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும்; அப்போது தான் மனதை உற்சாகமாகவும், இயங்கும் வகையிலும் வைத்துக் கொள்ள முடியும்.
  • அவள் / அவன் மற்றவர்களை நன்றாகப் புரிந்து கொண்டு, ஆன்மீக வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
  • அவள் / அவன் தனக்காக உயர்ந்த தரத்தை வகுத்துக் கொண்டு, சுய    கட்டுப்பாட்டை கற்றுக் கொள்ள வேண்டும்; மேலும், அன்பு மற்றும் பாராட்டு கிடைத்தால், நற்குணங்கள் நிரம்பியவர்களாகத் திகழலாம்.

ஆசிரியரின் கற்றுக் கொடுக்கும் முறை மாறியது. அவர் வகுப்பில் சேர்ந்த குழந்தைகள், அவர் கண்களுக்கு வருங்கால தலைவர்களாகத் தெரிந்தனர். அச்சமயம் எப்படி இருந்தார்கள் என்பதை விட வருங்காலத்தில் அவர்கள் எப்படி இருக்க முடியும் என்பதைக் கற்பனை செய்தார். அவர் மாணவர்களிடமிருந்து சிறந்ததையே எதிர்பார்த்தார்; ஆனால் அதை பரிவோடு வெளிப்படுத்தினார். வருங்காலத்தில் எல்லாமே அவர் சொற்படி நடக்கும் என யோசனை செய்து, ஒவ்வொரு மாணவர் / மாணவிக்கும் கல்வியை புகுத்தினார். பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு பெண் அந்த உயர்ந்த பதவிக்கு வந்தாள். கனவில் வந்ததைப் போல, அவர் கற்றுக் கொடுத்த மாணவர்களில் ஒருவர் அல்ல; ஆனால் அவள் அவரின் மகள். அவளுக்குக் கிடைத்த ஆசிரியர்களில், அவள் தந்தை தான் சிறந்த ஆசிரியராக திகழ்ந்தார். குழந்தைகள் நம்மிடமிருந்து கற்றுக் கொள்வதை பல இடங்களிலும், நேரங்களிலும் வெளிப்படுத்துகின்றனர். அதற்கு நாம் அவர்களின் பெற்றோர்களாகவோ, ஆசிரியர்களாகவோ இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.  

பெற்றோர்களாக நாம் மாறும் போது, நம்மை வாழ்க்கை கேட்கும் கேள்வி: “உனக்கு அளிக்கப்படும் குழந்தை வாழ்க்கையில்……….ஆவார்” நீங்கள் இந்த வாக்கியத்தை எப்படி நிரப்புவீர்கள்?

உலகத் தலைவராக இல்லாவிட்டால், அற்புதமான தந்தையாக?

அற்புதமான ஆசிரியராக?

அதிமேதையுள்ள மருத்துவ பயிற்சியாளராக?

புதிய வகையில் பிரச்சனைகளை தீர்ப்பவராக?

ஊக்குவிக்கும் கலைஞராக?

பெருந்தன்மையுள்ள கொடையாளியாக?

எங்கு, எப்படி இந்த குழந்தையை சந்திப்பாய் என்பது தெரியாது; ஆனால், இக்குழந்தையின் வருங்காலம் நம் கையில் மட்டுமே இருக்கிறது என்று நம்பினால், நம்மால் அற்புதமான விளைவுகளை ஏற்படுத்த முடியும். இனிமேல் எந்த ஒரு குழந்தையையும் சாதாரணமாக பார்க்க முடியாது. நீங்களும் மாறி விடுவீர்கள்.

நீதி:

பிறக்கும் சமயத்தில், குழந்தைகள் களங்கமற்றவர்களாகவும், புனிதமானவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களை சிறந்த குழந்தைகளாக வடிவமைப்பது பெற்றோர்களின் கடமையாகும். ஆசிரியர்கள் பள்ளியில் அளிக்கும் பயிற்சியை மனதில் நிறுத்திக் கொண்டு, தாயும் தந்தையும் குழந்தைகளுக்கு ஊக்கமளித்து வளர்க்க வேண்டும். வாழ்க்கையை சிறப்பாகவும், எளிமையாகவும் வாழ்வதோடு, குழந்தைகளுக்கு நற்பண்புகளையும் புகுத்த வேண்டும். ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு கல்வியை கற்பித்தலுடன் நிறுத்தி விடக் கூடாது; பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு வீட்டில் எப்படி குழந்தைகள் நடந்து கொள்கிறார்கள் எனக் கேட்டு, ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஒன்றாக செயற்பட வேண்டும். ஆசிரியர் அறிவை புகுத்தலாம்; ஆனால், குழந்தைகளின் கண்ணியமும், கட்டுப்பாடும், நற்பண்புகளும் பெற்றோர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகு இந்த புனிதமான குழந்தைகள் தூய்மையான ஆத்மாக்களாக திகழ்கின்றனர்.

குழந்தைகளுக்குள் எதை திணிக்கிறோம் என்பது முக்கியமல்ல; என்ன விதைக்கிறோம் என்பது தான் முக்கியம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

அன்பு வாழ்க்கையை மாற்றிவிடும்

நீதி: அன்பு, கருணை

உப நீதி: பாசம், பரிவு

ஒரு முறை, அலுவலக மேலாளர்களுக்கானப் பயிற்சி ஒன்றில், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் “நீங்கள் நீண்ட காலம் இப்பணியில் செயலாற்றி மேலாளராக பதவி பெற்றிருக்கிறீர்கள். இவ்வளவு நாட்கள் இங்கு இருந்ததற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்.

மேரி என்ற பங்கேற்பாளர், நடுக்கமான குரலில் “200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பேஸ்பால் கையுறைதான் காரணம்” என்றார்.

மேரி ஒரு சாதாரண குமாஸ்தா பணியில் தற்காலிகமாக சேர்ந்ததாகவும், வேறு வேலை தேடிக் கொண்டிருந்ததாகவும் கூறினார்.

பணியில் சேர்ந்த இரண்டாம் நாளோ, மூன்றாம் நாளோ, அவளுடைய 9 வயது மகன் பாபியிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அவன், ஒரு போட்டியில் கலந்து கொள்ள, தனக்கு ஒரு பேஸ்பால் கையுறை வேண்டும் என்று கூறினான். அதற்கு அவள் தனி ஒருத்தியாக சம்பாதிப்பதாகவும், முதல் மாத சம்பளம் மற்ற கட்டணங்களுக்கே சரியாகிவிடும் என்றும் அவனிடம் கூறினாள். இரண்டாவது அல்லது மூன்றாவது மாத சம்பளம் வந்தவுடன் தான் வாங்கித் தர இயலும் என்றும் விளக்கிக் கூறினாள்.

மேரி அடுத்த நாள் காலை வேலைக்கு வந்தவுடன், கடை மேலாளர் அவளை அலுவலகத்தின் பின்புறம் உள்ள சிறிய அலுவலக அறைக்கு வருமாறு அழைத்தார். மேரி, தான் ஏதாவது தவறு செய்திருப்பாளோ அல்லது முந்தைய தினம்  ஏதேனும் வேலையை முடிக்காமல் சென்று விட்டிருப்பாளோ என பதட்டம் அடைந்தாள்.

அவள் கவலையுடனும், மனக்குழப்பத்துடனும் சென்றாள்.

அந்த மேலாளர் அவள் கையில் ஒரு பெட்டியைக் கொடுத்து விட்டு, “நீங்கள் உங்கள் மகனிடம் நேற்று பேசிக் கொண்டிருந்ததை நான் செவி மடுத்தேன். இந்த மாதிரி விஷயங்களைக் குழந்தைகளுக்குப் புரிய வைப்பது என்பது மிகவும் கடினம். இந்தப் பெட்டியில், மகன் பாபிக்கு, ஒரு பேஸ்பால் கையுறை இருக்கிறது.  இதை வாங்குவதற்கு முன் நீங்கள் சில கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்பது உண்மை தான் என்றாலும், அவன் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவனுக்குப் புரிய வைக்க முடியாது. உங்களைப் போன்ற நல்ல மனிதர்களுக்கு, நாங்கள் விரும்பும் அளவு சம்பளம் கொடுக்க இயலாது. ஆனால், உங்களை எங்களால் அக்கறையாக பார்த்துக் கொள்ள முடியும். நீங்கள் எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்” என்றார்.

இந்தக் கடை மேலாளரின் நற்சிந்தனை, பச்சாதாபம் மற்றும் அன்பு தான் அவள் மனதை மாற்றி, இங்கேயே தொடர்ந்து பணியாற்றி, இன்று ஒரு மேலாளராகப் பணிபுரியும் வரை அவளை தொடர செய்திருக்கிறது.

ஒரு முதலாளி எவ்வளவு ஊதியம் அளிக்கிறார் என்பதை விட, எவ்வளவு அக்கறை காண்பிக்கிறார் என்பதே மக்களின் மனதில் பதிந்து விடும் என்று இந்த நிகழ்வு தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

இது பேஸ்பால் கையுறையின் விலையில் கிடைத்த ஒரு சிறந்த பாடம்.

நீதி:

நாம் வெகு விரைவில், ஒரு மென்மையான தொடுதலின் சக்தி, ஒரு புன்னகை, ஒரு அன்பான சொல், நம்மைப் பரிவுடன் செவி மடுக்கும் செவிகள், ஒரு நேர்மையான பாராட்டு அல்லது ஒரு சிறிய அன்புச் செயல் போன்றவற்றின் சக்தியைக் குறைத்து மதிப்பிட்டு விடுகிறோம். ஆனால், இவை அனைத்தும், ஒருவர் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றவை. அத்தகைய அன்புச் செயல்கள், அவற்றைப் பெற்றுக் கொள்பவருக்கு மட்டும் பலன் அளிப்பதில்லை. அவை, ஒருவிதத் தன்னிறைவையும், மன அமைதியையும் அளிப்பதனால், செய்பவருக்கும் நன்மை அளிக்கின்றன.

வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு அன்பு செயல் செய்து, 365 நாட்களும் மற்றவர்களின் வாழ்க்கையை மாற்ற முயலுவோமாக!

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE