Archive | January 2024

பிறருக்காகப் பிரார்த்தனை

நீதி: அன்பு / உண்மை

உபநீதி: அக்கறை / இரக்கம்

மிச்சிகனில் (MICHIGAN) உள்ள தனது வீட்டு தேவாலயத்திற்குச் சென்ற போது, சமயப்பரப்பாளர்  ஒருவர் பிரசங்கத்தில் சொன்ன உண்மைக் கதை இது.

ஒரு சமயப்பரப்பாளர் , ஆப்பிரிக்காவை சென்றடைந்த போது, இரண்டு ஆண்கள் சண்டையிடுவதைக் கவனித்தார். அவர்களில் ஒருவர் பலத்த காயமடைந்தார். அவர் காயங்களுக்கு சிகிச்சை அளித்தார்; அதே நேரத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவரிடம் பேசினார். பின்னர் அவர் இரண்டு நாட்கள் பயணம் செய்தார். ஒரு இரவு காட்டுக்குள் தங்கி, அசம்பாவிதம் இல்லாமல் வீட்டிற்கு வந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் தனது பயணத்தை மீண்டும் தொடங்கினார். ஊருக்கு வந்ததும், அவர் சிகிச்சை அளித்த இளைஞன் அவரை அணுகினார்.

அந்த இளைஞன் அவரிடம், “நீங்கள் பணம் மற்றும் மருந்துகளை எடுத்துச் சென்றது தெரிந்து, நானும் சில நண்பர்களும் உங்களைப் பின்தொடர்ந்து காட்டுக்குள் வந்தோம். நீங்கள் ஒரு இரவு இங்கு தங்குவீர்கள் என்று தெரிந்து கொண்டோம். நாங்கள் உங்களைக் கொன்று உங்கள் பணத்தையும் மருந்துப் பொருட்களையும் கொண்டு செல்ல திட்டமிட்டோம். ஆனால், நாங்கள் உங்கள் முகாமுக்குள் நுழைய முயன்ற போது, 26 ஆயுதமேந்திய காவலர்களால் உங்கள் முகாம் சூழப்பட்டிருந்தது.

இதைக் கேட்ட சமயப்பரப்பாளர் சிரித்துவிட்டு, அந்த காட்டு முகாமில் தான் மட்டும் தனியாக இருந்ததாகக் கூறினார். ஆனால் அந்த இளைஞன், “இல்லை ஐயா, நான் மட்டும் காவலாளிகளைப் பார்க்கவில்லை, என் ஐந்து நண்பர்களும் அவர்களைப் பார்த்தார்கள்.  அந்த காவலர்களைப் பார்த்து பயந்து உங்களை விட்டு நாங்கள் வெளியேறினோம்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.

பிரசங்கத்தின் இந்த கட்டத்தில், சபையில் இருந்தவர்களில் ஒருவன்  சமயப்பரப்பாளரை குறுக்கிட்டு, இது நடந்த சரியான நாளை சொல்ல முடியுமா என்று கேட்டான். சமயப்பரப்பாளர் சபைக்குத் தேதியைக் கூறினார். குறுக்கிட்டவன் அவரிடம் இந்தக் கதையைச் சொன்னான்:

அவன், “ஆப்பிரிக்காவில் சம்பவம் நடந்த அன்றிரவு, இங்கே காலை நேரம். நான் கோல்ஃப் விளையாடத் தயாராகிக் கொண்டிருந்தேன். உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்ற ஆவலை உணர்ந்தபோது நான் விளையாட  இருந்தேன். உண்மையில், கர்த்தருடைய வற்புறுத்தல் மிகவும் வலுவாக இருந்தது. நான் உங்களுக்காக ஜெபிக்க இந்த தேவாலயத்தில் உள்ள மனிதர்களை இங்கே சரணாலயத்தில் என்னுடன் சந்திக்க அழைத்தேன். அன்று என்னைச் சந்தித்த ஆண்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டுகிறேன்” என்றான்.

அன்று ஜெபிக்க ஒன்றாகக் கூடியிருந்த மனிதர்கள் எழுந்து நின்றனர். சமயப்பரப்பாளர்  அவர்கள் யார் என்பதைப் பற்றி கவலைப்படவில்லை – அவர் எத்தனை மனிதர்களைப் பார்த்தார் என்று எண்ணுவதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். 26 மனிதர்கள் இருந்தனர்.

நீங்கள் எப்போதாவது ஒருவருக்காக ஜெபிக்க வேண்டும் என்ற ஆசையை உணர்ந்திருக்கிறீர்களா? நான் அவர்களுக்காக பின்னர் பிரார்த்தனை செய்கிறேன்? என்று சொல்லி ஒரு பட்டியலில் வைத்துள்ளீர்களா?

பிரார்த்தனை செய்ய தூண்டுதல் ஏற்பட்டால் உடனே செய்யுங்கள்.

நீதி:

மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்வது என்பது நாம் அவர்களுக்காக அக்கறை காட்டுவதாகும். நாம் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் போது, அவர்களின் சுமைகளில் பங்கு கொள்கிறோம். “பிரார்த்தனை என்பது விஷயங்களை வெளிப்புறமாக மாற்றுவது அல்ல, ஆனால் ஒரு நபரின் உள் இயல்பில் மாற்றம் செய்யும் அற்புத நிகழ்வாகும்.” மற்றவர்களுக்காக நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது, அவர்களை குணப்படுத்தவோ அல்லது கடினமான நேரங்களில் வலிமையை கொடுக்கவோ கடவுளிடம் மன்றாடுகிறோம். நாமும் மாற்றத்திற்காக நம் இதயங்களைத் திறக்கிறோம். மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் போது, அவர்களின் இதயங்களை மாற்றுவதற்கும், அவர்களின் சூழ்நிலைகளில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், வல்லவராகிய இறைவனுடன் இணைகிறோம். அதே நேரத்தில், அது நம் மனதையும் திருத்துகிறது.

பிரார்த்தனையின் சக்தியை விளக்க முடியாது; அதை அனுபவிக்க மட்டுமே முடியும்.

மொழி பெயர்ப்பு:

சங்கீதா ராஜேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

பிரார்த்தனையின் மகிமை

நீதி: அன்பு, உண்மை

உப நீதி: திட நம்பிக்கை

சத்ய சாயி பாபாவின் தெய்வீக சொற்பொழிவுகள் – மே 16, 1964.

ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவர் வேலை விஷயமாக மும்பை போக வேண்டியிருந்தது. அங்கிருந்து, நான்கு மனைவிகளுக்கும் என்ன  வேண்டுமோ கொண்டு வருவதாக கடிதம் எழுதியிருந்தார்.

முதல் மனைவி, உடல் ஆரோக்கியத்திற்காக மருந்துகளும், உடல் நலம் சரியில்லாத போது பயன்படுத்துவதற்காக விரிப்புகள் மற்றும் கம்பளி ஆடைகள் கேட்டிருந்தாள்.

இரண்டாவது மனைவி, சமீபத்தில் வெளிவந்த அழகான புடவைகள், நகைகள் மற்றும் பற்பல அலங்கார பொருட்கள் கேட்டிருந்தாள்.

மூன்றாவது மனைவி,  ஞானேஸ்வரி போன்ற தெய்வீக புத்தகங்கள், கவிதைகள் வடிவத்தில் அபங் பாடல்கள்  மற்றும் பண்டரிநாத், பவானி மற்றும் சாயி பாபா இவர்களின் படங்களைக் கேட்டிருந்தாள்.

நான்காவது மனைவி, “நீங்கள் ஜாக்கிரதையாக திரும்பி வந்தால், அதுவே எனக்கு போதுமானது” என்றாள்.

மற்றவர்கள் எல்லோருக்கும் பெரிய பெட்டிகள் நிறைய சாமான்கள் கிடைத்தன; ஆனால் நான்காவது மனைவிக்கு அன்பு கிடைத்தது.

கடவுள்,  நீங்கள் எதற்காக பிரார்த்தனை செய்கிறீர்களோ அதை அளிப்பார்; அதனால், எதைக் கேட்க வேண்டும் என்று நன்றாக யோசித்த பிறகு, கேளுங்கள்.

நீதி:

நம்மைச் சுற்றி பல அன்பானவர்கள் சூழ்ந்திருக்கும் போது, நமக்கு ஆறுதலாக இருக்கும். அன்பு இருந்தால், எதை செய்ய வேண்டுமானாலும் நன்றாக செய்யலாம். எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ளலாம். நிபந்தனையற்ற அன்பை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. அன்பு, வாழ்க்கையில் முன்னேற நம்பிக்கை தருகிறது.

ஆழ்ந்த அன்பை பெறும் போது, சக்தி கிடைக்கிறது; ஆழ்ந்த அன்பை அளிக்கும் போது, தைரியம் கிடைக்கிறது – லாவோ சு

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

ஊசியா கத்தரிக்கோலா

நீதி: உண்மை, அன்பு

உபநீதி: ஒற்றுமை

ஒரு உன்னதமான தையற்காரர் பெரிய ரிஷியாக மாறினார்.

அரசர் அவரிடம் தலை வணங்கி, வைரங்களால் பொறிக்கப்பட்ட தங்க கத்தரிக்கோலை அளிக்க வந்தார்.

ரிஷி அதை ஏற்க மறுத்து விட்டார். அவருக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று அரசர் வருத்தமுற்றார்.

அதனால் அரசர் அவரிடம், “நீங்கள் உபயோகிக்கும் வகையில் நான் உங்களுக்கு என்ன கொடுக்கலாம்?” என்று கேட்டார்.

அதற்கு ரிஷி, “எனக்கு ஒரு ஊசி வேண்டும்” என்றார்.

உடனடியாக அரசர் ஒரு ஊசியை ஏற்பாடு செய்து அவரிடம் கொடுத்தார். பிறகு, ரிஷியின் பதிலுக்காக பொறுமையுடன் அரசர் காத்துக் கொண்டிருந்தார்.

ரிஷி, “நான் கத்தரிக்கோலை ஏற்றுக் கொள்ளாத காரணம், அது வெட்டி, பிரிவை ஏற்படுத்துகிறது. நம் மனமும் அப்படிதான்; கத்தரிக்கோலை போன்றது. ஆனால் ஊசி சேர்த்து தைத்து, ஒன்றாக்குகிறது. நம் இருதயம் ஊசியைப் போன்று உறவுகளை சேர்த்து ஒற்றுமையை மேம்படுத்துகிறது.

இன்றைய சமுதாயத்திற்கு ஊசி தான் தேவைப்படுகிறது; கத்தரிகோல் அல்ல!

நீதி:

ஒற்றுமையின் அடித்தளம் நம்பிக்கை; அதனால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், ஒற்றுமையாக செயற்பட முடியும். ஒற்றுமையாக இருந்தால் செயற்படுவது சுலபமாக இருக்கும். பெரும்பாலான சமயங்களில், நாம் தனியாக ஒரு வேலையை செய்ய முடியாது; மற்றவர்களின் துணை தேவைப்படுகிறது. ஒற்றுமை என்ற ஒழுக்கமான நடத்தை நமக்கு சக்தி கொடுக்கிறது. நமக்கு மன வலிமை இருந்தால், எந்த ஒரு சூழ்நிலையையும் ஒற்றுமையாக எதிர்கொண்டு, வெற்றிகரமாகத் திகழலாம்.

பணிவு ஒற்றுமைக்கு வழி வகுக்கும்; ஒற்றுமை நிம்மதியை அளிக்கும் – மதர் தெரேசா

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

கடவுளின் சக்தி வாய்ந்த கரங்களில் வாழ்க்கை ஒரு சிறிய மெழுகுவர்த்தி போன்றது

நீதி – உண்மை

உபநீதி – விசுவாசம் / நம்பிக்கை

ஒரு மனிதன், ஒரு சிறிய மெழுகுவர்த்தியுடன் கலங்கரை விளக்கத்தின் படிகளில் ஏறிக் கொண்டிருந்தான்.

மேலே சென்று கொண்டிருக்கும் போது, மெழுகுவர்த்தி அம்மனிதனிடம்,“நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்?” என்று கேட்டது.

அதற்கு அம்மனிதன், “பெருங்கடலில் பயணித்து கொண்டிருக்கும் கப்பல்களுக்கு, சைகை காண்பிப்பதற்கு கலங்கரை விளக்கத்தின் படிகளில் மேலே சென்று கொண்டிருக்கிறோம்” என்று கூறினான்.

அதற்கு மெழுகுவர்த்தி, “என்ன கூறுகிறீர்கள்? இந்த சிறிய வெளிச்சம் எப்படி இவ்வளவு பெரிய கப்பல்களுக்கு சைகை கொடுக்க முடியும்?” என்று மெல்லிய குரலில் கேட்டது.

அதற்கு மனிதன், “சிறியதாக வெளிச்சம் இருந்தால், பரவாயில்லை. இது நீ செய்யும் வேலை. நீ செய்ய வேண்டியது என்னவென்றால் அந்த விளக்கு அணையாமல் இருக்கும்படி பார்த்துக் கொள். மற்றவைகளை என்னிடம் விட்டு விடு” என்றான்.

சற்று நேரத்திற்கு பின், கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு கொக்கி போன்ற கருவிக்கு முன் ஒரு பெரிய விளக்கு இருந்தது. அம்மனிதன் இந்த மெழுகுவர்த்தியுடன் அவ்விளக்கை ஏற்றினான். உடனடியாக, அந்த இடம் மிகவும் பிரகாசமாக இருந்தது. பெருங்கடலில் இருக்கும் கப்பல்களுக்கு இந்த விளக்கு ஒளி கொடுத்தது.  

நீதி:

நமக்கு பல வரம்புகள் இருப்பதனால், அர்த்தமுள்ள பல விஷயங்களை நம்மால் செய்ய முடிவதில்லை. நாம் ஞாபக வைத்துக் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் – கடவுளின் சக்தி வாய்ந்த கரங்களில், நம் வாழ்க்கை, ஒரு சிறிய மெழுகுவர்த்தி போன்றது.

நாம் கடவுளின் மேல் நம்பிக்கை செலுத்தினால், நமக்கு இருக்கும் வரம்புகளுக்கு அப்பாற்பட்ட வகையில், நம் வாழ்க்கையை அழகாக கொண்டு செல்வதோடு, நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு வரமாக இருக்கும் வகையில் அவர் மாற்றுவார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE