Archives

புதிய வாய்ப்புகளை எப்படி கண்டு பிடிப்பது – அருண்புரங்

நீதி: சாந்தம், உண்மை

உப நீதி: அமைதி  

எம். பி. ஏ படிப்பில் முதன்மை இடம் வகித்த ஒருவர், ஒருமுறை தனது அலுவலக வேலையில் மிகவும் சிரமப்பட்டார். அந்த வேலையை செய்வதற்கு அவர் பல புதிய யோசனைகளை கையாள வேண்டியிருந்தது. ஆனாலும், அவரால் ஒன்றும் முடியவில்லை. அவருக்குக் கீழ் பணிபுரிந்தவர்கள் அனைவரும் புதிய யோசனைகளைக் கண்டறிந்து தங்கள் வேலைகளில் வெற்றி பெற்றனர். அவர் தனது சக தொழிலாளர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்த போது கோபமடைந்தார். கலங்கிய மனதுடன் புதிய யோசனைகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

மிகவும் விரக்தியடைந்த அவர், ஒரு ஜென் குருவிடம் சென்று, “கடவுள் எனக்கு முற்றிலும் அநியாயம் செய்துவிட்டார். எனக்குக் கீழ் பணிபுரிபவர்கள் அனைவரும் சிறந்த யோசனைகளைப் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற அவர் எனக்கு எந்த யோசனையையும் கொடுக்கவில்லை” என்றார்.

துறவி அந்த மனிதரை அருகிலுள்ள கால்பந்து மைதானத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு 5 டென்னிஸ் பந்துகளை மைதானத்தில் வீசினார்.  பின்னர் அவர், அனைத்தையும் சேகரிக்குமாறு அந்த மனிதரிடம் கூறினார்.  சில நிமிடங்களில் அந்த மனிதர் அனைத்து பந்துகளையும் சேகரித்து மகிழ்ச்சியுடன் திரும்பினார். அதற்குப் பிறகு, அவரை அடர்ந்த காட்டிற்கு அழைத்துச் சென்று, அவர் 5 பந்துகளையும் காட்டில் எறிந்து, அவைகளை சேகரிக்குமாறு அந்த மனிதரிடம் கூறினார். சில நொடிகளில் பந்துகள் காட்டில் தொலைந்து போனது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்த மனிதர் துறவியிடம் வந்து அனைத்து பந்துகளையும் இழந்து விட்டதாகக் கூறினார்.

ஜென் மாஸ்டர் சிரித்துக் கொண்டே, “இந்த பந்துகள் வாய்ப்புகள் போலவும், நிலப்பரப்பு நம் மனதைப் போலவும் இருக்கிறது. நம் மனதில் வேண்டாத விஷயங்களை போட்டுக் கொள்ளும் போது, வாய்ப்புகளை இழக்கிறோம்.  கால்பந்து மைதானம் போல் நம் மனம் தெளிவாக இருக்கும் போது, எல்லா வாய்ப்புகளையும் தெளிவாகப் பார்க்கலாம். அனைவருக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் அவைகளை அறிய விரும்பினால், உங்கள் மூளையில் இருக்கும் தகாத விஷயங்களை அகற்றவும்” என்று கூறினார்.  

நீதி:

வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட அனைவரின் வாழ்விலும் வரும் ஒரு சாதகமான நேரம் அல்லது சந்தர்ப்பம்; ஆனால் அதை அடையாளம் காணும் அளவுக்கு ஒருவர் அமைதியாக இருந்தால் மட்டுமே அது பயனுள்ளதாக இருக்கும். நாம் உட்கார்ந்து சிந்தித்தால், கடவுள் நம் வாழ்வில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பதைக் காண்கிறோம்; இந்த வாய்ப்பைப் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் கையில் உள்ளது. சில வாய்ப்புகள் பார்ப்பதற்கு சிறியதாகத் தெரிகிறது; ஆனால் உண்மை என்னவென்றால், சிறிய வாய்ப்புகள் பெரும்பாலும் பெரிய சாதனைகளின் தொடக்கமாகும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

நல்ல வாய்ப்புகளை இழக்காதே

நீதி: உண்மை

உப நீதி: தன்னம்பிக்கை, நன்னம்பிக்கை

இளைஞர்  எஃப். டபிள்யூ. வுல்வொர்த் தனது முதலாளியின் பேச்சைக் கேட்டு, அந்த வாய்ப்பை நழுவ விட்டிருந்தால், புகழ்பெற்ற வுல்வொர்த் அங்காடிச் சங்கிலி எங்கே இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

படியுங்கள்….

இளைஞர்  எஃப். டபிள்யூ. வுல்வொர்த் ஒரு கடையில் எழுத்தராக இருந்த போது, தன் முதலாளியிடம், சரக்குகளைக் குறைப்பதற்காக, “தள்ளுபடி விற்பனை”யை அறிமுகப் படுத்த முயன்றார். முதலாளி ஒப்புக் கொண்டார். யோசனை மகத்தான வெற்றியை பெற்றது.

இந்த வெற்றி, குறைந்த விலையில் பொருட்களை விற்கும் ஒரு கடையை சொந்தமாகத் திறக்க, வுல்வொர்த்தைத் தூண்டியது. அத்தகைய முயற்சிக்கு அவருக்கு மூலதனம் தேவைப்பட்டது, எனவே அவர் முதலாளியிடம் உதவி கேட்டார். அவரது முதலாளி அவரை நிராகரித்தார்.

முதலாளி “இந்த யோசனை மிகவும் ஆபத்தானது,” என்று வுல்வொர்த்திடம் கூறினார். மேலும், “குறைந்த விலையில் விற்க, போதுமான பொருட்கள் இல்லை” என்றும் கூறினார்.

வுல்வொர்த், தனது முதலாளியின் ஆதரவின்றி வியாபாரத்தை தொடங்கினார். மேலும், அவர் தனது முதல் கடையில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் எஃப். டபிள்யூ. வுல்வொர்த் கடைகளின் சங்கிலிக்கே சொந்தக்காரர் ஆனார்.

பின்னர், அவரது முன்னாள் முதலாளி, “எனக்குத் தெரிந்தவரை, வுல்வொர்த்தின் மதிப்பை குறைக்க நான் பயன்படுத்திய ஒவ்வொரு வார்த்தைக்கும் எனக்கு ஒரு மில்லியன் டாலர்கள் செலவு ஆகிவிட்டது” என்று கூறினார்.

நீதி:

மன உறுதி மிகவும் முக்கியமானது, ஏனெனில், அது நம்மைக் கஷ்ட காலங்களில் நிலைத்திருக்க உதவுகிறது. நமது இலக்கை அடையும் வரை அச்சமின்றி நம்பிக்கையுடன் முன்னேற இது நம்மைத் தூண்டுகிறது. வாழ்க்கை எப்போதும் சீராக இருக்காது என்பதால், நம்மில் பலர் தடைகளை சந்திக்கும் போது பின்வாங்குகிறோம். ஆனால் உறுதியுடன் இருந்தால், எந்த வகையான தடைகளையும் நம்மால் சமாளிக்க முடியும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட் சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

திறமையை வளர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்

நீதி: உண்மை

உபநீதி: நேர்மறையான அணுகுமுறை / தன்னம்பிக்கை

ஒரு உணவகத்தில் பியானோ வாசிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்ற ஒருவர்  இருந்தார். அவர் வாசிப்பதை கேட்பதற்காக பலர் அங்கு வந்தனர். ஆனால் ஒரு இரவு, ஒரு ரசிகர் அவரிடம் பியானோ வாசிப்பதற்கு பதிலாக  பாடல் பாட வேண்டும் என்று விரும்பி கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், “நான் பாடுவதில்லை” என்று கூறினார்.

ஆனால் வாடிக்கையாளர் விடாப்பிடியாக இருந்தார். அவர் உணவக உரிமையாளரிடம், “அவர் பியானோ வாசிப்பதை தொடர்ந்து கேட்டு அலுப்பாகி விட்டது. அவர் பாட வேண்டும்!” என்று கூறினார்.

உணவக உரிமையாளர் உரக்கக் குரலில் வாசிப்பாளரிடம், “நண்பா! உனக்குச் சம்பளம் வேண்டுமானால் ஒரு பாடலைப் பாடு. ரசிகர் உன்னைப் பாடச் சொல்கிறார்!” என்றார்.

அதனால் அவர் ஒரு பாடலைப் பாடினார். இதுவரை பொது இடங்களில் பாடாத பியானோ வாசிப்பவர், முதல் முறையாக பாடினார். அன்றிரவு நாட்கிங் கோல், மோனாலிசா என்ற பாட்டை அவ்வளவு அற்புதமாக பாடினார். இதுவரை எவரும் இப்படி ஒரு பாட்டை கேட்டதில்லை.

அவர் தனது வாழ்நாள் முழுவதும் பெயர் இல்லாத உணவகத்தில் பெயர் இல்லாத பியானோ வாசிப்பவராக வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவர் பாட வேண்டியிருந்ததால், அவர் அமெரிக்காவில் எல்லோரையும் மகிழ்விக்கும் ஒரு சிறந்த நபராக மாறினார்.

நீதி:

திறமை என்பது ஒரு நபரின் இயல்பான திறன், கற்பிக்கப்படாமலேயே ஏதாவது ஒரு விஷயத்தில் சிறந்து விளங்கும். உங்கள் திறமையை கண்டறிந்து, முழு திறனையும் வெளிக்கொணருங்கள். மகத்துவத்தை அடைவதற்கு இது சிறந்த வழியாகும்.

நம் அனைவருக்கும் சமமான திறமைகள் இல்லை, இருப்பினும் நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு உள்ளது” – ரத்தன் டாடா

மொழி பெயர்ப்பு:

லக்ஷ்மி கோபாலன், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

மனிதர்களை விட நாய்களின் வாழ்நாள் குறைவு

நீதி: அன்பு, உண்மை

உபநீதி: பச்சாதாபம், இரக்கம்

நான் விலங்குகளுக்கு மருத்துவராக இருப்பதால், ஓநாய்களை  வேட்டையாடும் ஐரிஷ் நாட்டை சேர்ந்த ஒரு வகையான நாயை பரிசோதிக்க என்னை அழைத்தனர். நாயின் மேல் இருக்கும் பாசத்தினால், குடும்பத்தில் இருந்த அனைவரும் ஒரு அதிசயம் நடக்கும் என்று நம்பினர்.

நாயை பரிசோதித்த பிறகு, அது அதிக நாட்கள் உயிர் வாழாது என்று எனக்கு தெரிந்து விட்டது. குணப்படுத்த முடியாத துன்பம் நிறைந்த நோயிலிருந்து, செயற்கை முறையில் இறப்பை  வருவிக்கும் முறையை (euthanasia) பயன்படுத்தலாம் என்று குடும்பத்தினரிடம் கூறினேன்.

ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது, அவர்களின் ஆறு வயது குழந்தை இந்த சடங்குகளை செய்தால் நன்றாக இருக்கும் என்று பெற்றோர்களுக்கு தோன்றியது. அவனுக்கு ஒரு அனுபவமாகவும் இருக்கும் என்று அவர்கள் நினைத்தனர்.

அடுத்த நாள், குடும்பத்தினர் அனைவரும் நாயை சுற்றி இருந்த போது மனது வேதனையாக இருந்தது. ஆனால் சிறுவன், மன அமைதியுடன் இறுதியாக நாயை தடவிக் கொடுத்தான். அவனுக்கு என்ன நடக்கிறது என்று புரிந்தததா என்றும் தெரியவில்லை. சில நிமிடங்களில் நாய் நிம்மதியாக இறந்து விட்டது.

சிறுவன், மனக்குழப்பம் எதுவுமின்றி அந்த நாயின் இறப்பை ஏற்றுக் கொண்டான். மனிதர்களை விலங்குகளுடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது, ஏன் விலங்குகள் விரைவாக இறந்து விடுகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சிறுவன், “எனக்குத் தெரியும்” என்றான்.

ஆச்சரியத்துடன், நாங்கள் எல்லோரும் அவனைப் பார்த்த போது, அவன் சொன்ன பதில் மனதுக்கு ஆறுதல் தந்தது.

அவன், “மனிதர்கள் , வாழ்க்கையை நன்றாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதோடு எல்லோரையும் அன்புடன் நடத்துவதற்கும், நல்லவர்களாக இருப்பதற்கும் பிறவி எடுக்கின்றனர். ஆனால்  நாய்களுக்கு ஆரம்பத்திலேயே அன்பாக இருக்க தெரியும். அதனால் அவை நீண்ட நாட்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை” என்றான். எவ்வளவு நியாயமான வார்த்தைகள் அல்லவா?

நீதி:

விலங்குகளிடமிருந்து நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். நன்றி உணர்வு மற்றும் அன்பான மனப்பான்மை மிகவும் முக்கியம். அழகான கூற்று ஒன்று இருக்கிறது.”நாய்களுக்கு பல நண்பர்கள் இருக்கும் காரணம் என்னவென்றால், மனிதர்களை போல தகாத வார்த்தைகளை பேசுவதற்கு பதிலாக, அவை எவரை பார்த்தாலும் வாலை மட்டுமே ஆட்டுகிறது”.  நம் புலன்களை சரியாக பயன்படுத்த வேண்டும். சரியாகப் பயன்படுத்தும் முறை கடவுளிடமிருந்து மட்டுமே வரும். உடலில் புலன்கள் உள்ளன; ஆனால் உண்மையான சொந்தக்காரர் கடவுள் தான். நாம் அந்த உணர்வுடன் கடவுளிடம் சென்றால்,  அதை சரியாக பயன்படுத்தும் முறையை அவர் நமக்கு கூறுவார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

ஒருவரின் வலிமையை வெளிப்படுத்தும் வழிகள்

நீதி – நன்னடத்தை, உண்மை

உபநீதி – விசுவாசம், சுய நம்பிக்கை, நேர்முறையான அணுகுமுறை, ஏற்புத் தன்மை, மன்னித்தல்

பரமஹம்ச யோகானந்தரின் குருவான ஸ்ரீ யுக்தேஸ்வரர், “சில மனிதர்கள், மற்றவர்களை தாழ்வுபடுத்தி, தங்களை உயர்ந்த நிலையில் காண்பித்து கொள்ள விருப்பப் படுவார்கள்” என்று கூறினார்.

கல்வி பயிற்சியாளரான டி. வாஷிங்டனின் பார்வையில், “ஒருவரின் வலிமையை வெளிப்படுத்த இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று,மற்றவர்களை  தாழ்வு படுத்துவது; மற்றொன்று அவர்களை உயர்ந்த நிலையில் காண்பிப்பது”. தினசரி வாழ்க்கையில் இவ்விரண்டு வகை மனிதர்களோடு நாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

யார் நம்மை உயர்ந்த நிலையில் காண்பித்து, நம் இலக்குகளை அடைவதற்கு ஊக்கமளிக்கிறார்களோ, அவர்கள் நேர்முறையான மனப்பான்மை கொண்ட மனிதர்கள்.

யார் நம் மன நிலையை புண்படுத்தி, நம்மை தாழ்வு படுத்துகிறார்களோ, அவர்கள் எதிர்மறையான மனப்பான்மை கொண்ட மனிதர்கள்.

தெளிவாக, நாம் முதல் வகையான மனிதர்களை மட்டுமே விரும்புவோம். எல்லோருக்கும் உற்சாகம் தேவை. உலர்ந்த தொண்டைக்கு குளிர்ந்த நீர் எப்படி அவசியமோ, அது போல உற்சாகம் நம் வாழ்க்கைக்கு தேவை.

துரதிர்ஷ்டவசமாக, வாழ்க்கையில் எல்லா விதமான மனிதர்களும் இருக்கின்றார்கள். உலகம் இயங்குவதற்கு, எல்லாமே தேவையாக இருக்கிறது.  நேர்மறையான மனிதர்களோடு பழகுவது நமக்கு நன்மை பயக்கும். அவர்களை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. நேர்மறையான அணுகுமுறை கொண்ட மனிதர்களிடம் ஓர் ஈர்ப்பு இருக்கின்றது. எதிர்மறையான மனப்பான்மை கொண்ட மனிதர்களிடம் பழகுவது தான் சற்று கடினமாக இருக்கிறது. அவர்களின் சகவாசம் நமக்கு தாழ்வு மனப்பான்மையை கொடுக்கிறது. அதனால் நம் சுய நம்பிக்கை குறைவாகி, நாமே நம்மை சந்தேகப் படும் நிலை வருகிறது.  

இவ்வகையான மக்களை எப்படி சமாளிப்பது? பெரிய விஷயம் இல்லை.

நாம் அவர்களை பொருட்படுத்தாமல் விட்டு விடலாம்; இல்லையெனில் அவர்களை ஏற்றுக் கொள்ளலாம். பொறாமையால் ஒருவன் மற்றவனை தாழ்த்தும் போது, அவனை பொருட்படுத்தாமல் விட்டு விடலாம். பாரபட்சம் இல்லாமல், உண்மைகள் சார்ந்த திறனாய்வு கொண்ட மனிதர்களை ஏற்றுக் கொள்ளலாம். எந்த ஒரு சூழ்நிலையிலும், மற்றவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு, ஏன் அப்படி செய்தார்கள் என்று யோசித்து, தீர்வு காண வேண்டும். 

இன்னொரு வழியையும் நாம் மேற்கொள்ளலாம். மற்றவர்களின் மனப்பான்மை எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்கட்டும். அவர்களை மாற்றுவது நம் வேலை அல்ல; நம்மை நாமே மாற்றிக் கொண்டு, நம் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மற்றொறு வழி என்னவென்றால், இவ்வகையான மக்களை விட்டு விட்டு, நாம் முன்னேற்றத்திற்கான வழியை பார்க்க வேண்டும்.

இறுதியில் நாம் ஓர் உயர்ந்த வழியை மேற்கொள்ளலாம். இவ்வகையான மக்களிடம் உங்களின் அன்பை செலுத்துங்கள். மிகக் கடுமையான வழி, ஆனால் அப்படி செய்ய முடிந்தால், நன்மை பயக்கும். மற்றவர்களிடம் இல்லாததை நாம் அவர்களுக்கு அளிக்கலாமே. நம் மனதை புண்படுத்துபவர்களுக்கு அன்பு கொடுக்கலாமே! எந்த பண்பு அவர்களிடம் இல்லையோ அதை நாம் கொடுக்கலாமே.

வாழ்க்கை  பெரிய சவால் அல்ல. சில மனிதர்கள் நம்மை தாழ்த்தினாலும், நம்மை உயர்த்துவதற்கு பல மனிதர்கள் இருக்கின்றனர். நாம் உயர்ந்த மனிதர்கள் ஆவதற்கு வாழ்க்கை நமக்கு வாய்ப்பு அளிக்கிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், நன்றி உணர்வோடு இருப்பதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நீதி:

அன்பான மனப்பான்மையை மேம்படுத்துவதற்கு கற்றுக் கொள்ளுங்கள். அன்புடன், ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை மற்றும் பச்சாதாபத்தையும் வளர்த்துக் கொண்டால், சூழ்நிலைகளை சுமூகமாக சமாளிக்கலாம். முயற்சிகள் எடுத்தும், மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்ளாவிட்டால் அவர்களை விட்டு விட்டு முன் செல்ல வேண்டும். பச்சாதாபம், புரிதலை மேம்படுத்தி மதிப்பீடு செய்யும் குணத்தை தவிர்க்க வழி வகுக்கிறது. மற்றவர்களை மாற்றுவதற்கு பதிலாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மேலும் மன்னிக்கும் மனப்பான்மையை தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். மற்றவர்களை மன்னிக்கும் போது, சிக்கலான சூழ்நிலைகளிலிருந்து நாம் விடுதலை பெறுகிறோம். மேலும் குழப்பமான எண்ணங்கள் இருக்கும் போது, உடல் மற்றும் மன ஆற்றல் பலவீனமாகிறது.  மன்னித்தல்  அந்த சூழ்நிலையை சரி செய்து, நம் நலனை மேம்படுத்துகிறது. ஏற்புத் தன்மை மற்றும் மன்னித்தல்  வாழ்க்கையின் இரு தூண்கள்; நம்மை மன அமைதியுடன் இருக்க வழி வகுக்கிறது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

இறை சக்தியின் மீது நம்பிக்கை

நீதி: உண்மை

உப நீதி: தன்னம்பிக்கை, விசுவாசம்

பலத்த காற்றினால் ஏற்படும் புயல் வருவதற்கு முன்பே கழுகு அதை உணர்ந்திருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? புயல் வரும் போது, கழுகு மிக உயர்ந்த இடத்திற்கு பறந்து, புயல் காற்று வீசும் வரை காத்திருக்கும்.

புயல் வீசும் போது, கழுகு தனது இறக்கைகளை விரித்து,பலத்த காற்றுக்கும்  அப்பாற்பட்டு தனது  இறக்கைகளை உயர்த்தும் வகையில், காத்திருக்கும்.

புயல் காற்று சற்று குறைவான விகிதத்தில் வீசும் போது, கழுகு அதில் சிக்கிக் கொள்ளாமல் அதற்கு மேல் உயர்ந்து பறந்து வரும்.

கழுகு புயலிலிருந்து தப்பிக்க பார்ப்பதில்லை. மாறாக, அது புயலை பயன்படுத்திக் கொண்டு மேலே பறக்கிறது. புயலைக் கொண்டு வரும் காற்றின் போக்கிலேயே அது செல்கிறது.

நமது வாழ்க்கையில் ஏற்படும் புயல்களையும் கூட,  நாம் அனைவரும் முழுமனதுடனும், தெய்வ நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறு இறை நம்பிக்கையுடன் இன்னல்களை சந்திக்கும் பொழுது, நாம் அவற்றை கடக்க வேண்டி இருக்காது – இறை சக்தி, அந்த இன்னல்களையே நம்மை உயர்த்தும் கருவியாக மாற்றி அமைத்து தரும்.

நம் வாழ்வில் பிணி, சோகம், தோல்வி மற்றும் ஏமாற்றம் போன்ற துன்பங்களை கொண்டுவரும் புயல்காற்றின் மீது சவாரி செய்யும் திறனை அளிக்க, கடவுள் நமக்கு எப்போதும் அருள்வார். நாமும் புயலுக்கு மேலே உயர்ந்து செல்லலாம்.

வாழ்க்கையின் சுமைகள் நம்மை கீழே தாழ்த்துவது இல்லை; அதை கையாளும் விதம் தான் முக்கியம்.

“கடவுளை நம்புகிறவர்கள் தங்கள் பலத்தை புதுப்பிப்பார்கள், அவர்கள் கழுகுகளைப் போல உயர்ந்து செல்வார்கள்” என்று பைபிளில் உள்ளது.

நீதி:

வாழ்க்கை ஓட்டத்தில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில், மிகுந்த ஆறுதலையும் மகிழ்ச்சியையும் கடவுள் நம்பிக்கையானது நமக்கு அளிக்கும். கடினமான காலங்களில் கூட, கடவுள் மீது நம்பிக்கை வைப்பதற்கு விசுவாசம் உதவுகிறது. பிரச்சனைகளை விட அவற்றை நாம் கையாளும் விதம் மிக முக்கியம். கடவுளை நம்புவது என்றால் தெய்வத்தின் நிலை, திறன், பலம் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பதே ஆகும். கடவுளை விட இன்னல்கள் பெரிதாக இருக்க முடியாது. ஆகவே, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, மேலும் எது நடந்தாலும் அது நம் நலனுக்காகவே நடக்கிறது என்று நம்மை படைத்தவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

வாழ்க்கையின் அர்த்தம்

நீதி: உண்மை

உப நீதி: உள்நோக்கம், ஏற்புத் தன்மை  

ஒரு பெரும் பணக்கார இளைஞன் ஒருவன், தன் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைக் கேட்பதற்காக ஒரு குருவைப் பார்க்கச் சென்றான்.

குரு அவனை ஜன்னலுக்கு அழைத்துச் சென்று, “கண்ணாடி வழியாக என்ன பார்க்க முடிகிறது?” என்று கேட்டார்.

அதற்கு அவன், “ஆண்கள் வந்து போவதையும், பார்வையற்ற ஒருவன் தெருவில் பிச்சை எடுப்பதையும் பார்க்கிறேன்” என்றான்.

அப்போது குரு, ஒரு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டி அவனிடம், “இந்தக் கண்ணாடியைப் பார்த்து, உனக்கு என்ன தெரிகிறது என்று சொல்” என்றார்.

அதற்கு அவன், “என்னால் என்னைப் பார்க்க முடிகிறது” என்றான்.

குரு, “ஆம். ஆனால், மற்றவர்களைப் பார்க்க முடியாது. ஜன்னல் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடி இரண்டும் ஒரே அடிப்படைப் பொருளான கண்ணாடியால் ஆனது என்பதைக் கவனி; ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியில், கண்ணாடிக்குப் பின்னால் மெல்லிய வெள்ளி முலாம் பூசப்பட்டிருப்பதால், நீ பார்க்கக் கூடியது உன்னை மட்டுமே.

இந்த இரண்டு வகையான கண்ணாடிகளுடன் உன்னை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ஏழை – நீ மற்றவர்களைப் பார்த்து அவர்கள் மீது இரக்கம் கொள்கிறாய்.

பணக்காரர் – வெள்ளி முலாம் பூசப்பட்ட நீ, உன்னை மட்டுமே பார்க்கிறாய்.

உன் கண்களை மூடும் வெள்ளித் திரையைக் கிழித்தெறியும் தைரியம் உனக்கு இருந்தால் தான், உன்னால் சக மனிதர்களை நேசிக்க முடியும். மேலும், நீயும் மதிக்கத் தக்கவனாவாய்” என்று கூறினார்.

நீதி:

நாம் ஒருபோதும் பிறரைப் பற்றித் தீர்ப்பளிக்கக் கூடாது, ஏனெனில், நாம் அவர்களைப் பற்றிய குறைந்தபட்ச புரிதலின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கிறோம். இவ்வாறு அளிக்கப்படும் தீர்ப்புகள், வெளித்தோற்றத்திற்கு அப்பாற்பட்ட நல்லதைக் காண்பதையும் தடுக்கிறது. எனவே, மனிதர்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, அவர்களைப் பற்றித் தீர்மானிக்கும் முன், நம்மைப் பற்றிய ஒரு சுய ஆய்வு செய்ய வேண்டும். மாற்றம் உள்ளிருந்து தொடங்க வேண்டும்; பின்னர், நம் கண்ணோட்டமும் மாறும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட் சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

வாழ்க்கையின் போராட்டங்கள்

நீதி: நன்னடத்தை / உண்மை

உபநீதி – பொறுமை

ஒரு பெண், தனது மூன்று வயது சிறுமியுடன் பல்பொருள் அங்காடியில் இருப்பதை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரும் பிஸ்கட் இருக்கும் பிரிவை தாண்டி சென்றனர்.  அப்பொழுது அந்த பெண் குழந்தை சிணுங்கி அழத் தொடங்கினாள். அதற்கு தாய் மெதுவாக, “ப்ரியா, நாம் வேலையை சற்று நேரத்தில் முடித்துக் கொண்டு வீடு திரும்பி விடலாம், அமைதியாக இரு, வருத்தம் வேண்டாம்” என்று கூறினாள். 

அந்த மனிதர் தொடர்ந்து அவர்களுடன் அங்காடியில் நடந்து கொண்டே நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருந்தார்.  தாய் தன் சிறுமியுடன் மிட்டாய் இருக்கும் பிரிவை கடந்து சென்றார்.  அந்தக் குழந்தை தனக்கு மிட்டாய் வேண்டும் என்று மறுபடியும் அழத் தொடங்கினாள்.  அதற்கு தாய், “ப்ரியா, அங்காடியை கடந்து செல்வதற்கு இன்னும் இரண்டே பிரிவுகள் மட்டுமே உள்ளன.  நாம் சீக்கரம் சென்றுவிடலாம்” என்று கூறினாள்.  

இப்பொழுது அந்தத் தாய் சிறுமியுடன் பணம் கட்டும் பிரிவில் நின்று கொண்டிருந்தார். அங்கு வைத்துள்ள மற்ற தின் பண்டங்களைப் பார்த்து, தனக்கு எதுவும் கிடைக்காது என்பதை அறிந்து, குழந்தை அழுதாள்.  அதற்கு தாய், “ப்ரியா இப்பொழுது ஐந்து நிமிடங்களில்  பில்லிங் முடிந்து விடும், பின்பு வீட்டிற்கு சென்று உறங்கலாம்” என்று கூறினாள்.  இதையும் அந்த மனிதர் கவனித்துக் கொண்டிருந்தார்.

இவ்வனைத்தையும் கவனித்த அந்த மனிதர் தொடர்ந்து, பின் சென்று அவளிடம் , “பெண்ணே, நீங்கள் சிறுமியிடம் இவ்வளவு பொறுமையாக நடந்து கொள்வதை  கண்டு எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது”.  உங்களை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை என்று கூறினார். 

அதற்கு தாய், “என் மகளின் பெயர் தான்யா, நான் தான் ப்ரியா” என்றாள்.

பொறுமை ஒரு நல்லொழுக்கம் என்பார்கள். ஆனால், பிடிவாதமாக இருப்பவர்களிடமும், ப்ரியா சந்தித்தது போன்ற சில சோதனைச் சூழ்நிலைகளிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது பாராட்டுக்குரியது. இங்கே ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் உள்ளன . கெட்ட செய்தி என்னவென்றால், காரணத்திற்கு அப்பாற்பட்டு ஒருவர் அவதிக்கு உள்ளாகலாம். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், இந்த நல்லொழுக்கத்தைப் பயன்படுத்துவது சிக்கலானது அல்ல. உண்மையில் அது மிகவும் எளிதானது.

இதை நாம்  ஆராய்ந்தால், பொறுமையின்மை, நம் விருப்பங்கள் உடனடியாக நிறைவேற வேண்டும் என்ற உணர்வால் எழுகிறது என்பது புரியும். நாம் எதற்காகவும் காத்திருக்கும் மனநிலையில் இல்லை. எல்லாம் உடனடியாக நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறோம்.

நாம்  மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவர் சில சமயங்களில் தாமதமாக வந்து நம்மை காத்திருக்க வைக்கிறார். பொறுமையை இழக்கிறோம். மருத்துவர் “இப்போது” வர வேண்டும் என்று நினைக்கிறோம். காலையில் வேலைக்குச் செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொறுமையை இழக்கிறோம்.  உடனடியாக அலுவலகத்தை அடைய விரும்புகிறோம். மாலையில் வீடு திரும்பும்போதும் அதே போக்குவரத்து நெரிசல். கதை மீண்டும் தொடர்கிறது. “இப்போது” வீட்டை அடைய விரும்புகிறோம். விமானங்கள் தாமதமாக புறப்படும் – விமானம் “இப்போது” புறப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

அந்த “இப்போது” தான் நம் மனதில் அழிவை உருவாக்குகிறது. அந்த “இப்போது” என்பதை மனதில் இருந்து அழித்துவிட்டு வேறு வழியைப் பார்ப்பதே வாழ்க்கையின் ரகசியம். மனதை ஏமாற்றுவதற்கான சிறந்த வழி, சூழ்நிலையை அனுபவிக்கத் தொடங்குவதுதான். நாம்  மருத்துவருக்காகக் காத்திருக்கும் நேரத்தில், வீட்டில் படிக்க நேரம் கிடைக்காமல் இருந்த புத்தகத்தைப் படிக்கலாம் அல்லது “சுடோகு” மற்றும் குறுக்கெழுத்துக்களைத் தீர்ப்பதற்கு  நேரத்தைப் பயன்படுத்தலாம் . நாம் அனுபவிக்கும் சிறந்த நேரம் இது. அந்த ஜன நெரிசல் நகரும் வரை  சில நல்ல இசையைக் கேட்டு மகிழலாம் அல்லது அந்த எஃப்.எம்.மில் ஆர்.ஜே அடிக்கும் நகைச்சுவைகளை ரசிக்கலாம். இந்த ஆர்.ஜேகளுக்கு எந்த ஒரு சூழ்நிலையையும் எளிதாக்கும் உண்மையான திறமை இருக்கிறது. அந்த விமானம் புறப்படுவதற்காகக் காத்திருக்கும் போது, உங்களைச் சுற்றி இருக்கும் எண்ணற்ற மனிதர்களை பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் நேரத்தை செலவிடலாம் ……. வாழ்க்கை சுவாரஸ்யமானது! அதை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

ஜினா வெஹ்மனின் அழகான நிஜ வாழ்க்கைக் கதையை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கடந்த இலையுதிர்காலத்தில் நான் என் ஜன்னலுக்கு வெளியே பறவைகளுக்கு உணவு அளிப்பதற்காக ஒரு பறவை தீவனத்தை வைத்திருந்தேன். காட்டுப் பறவைகளைப் பற்றி எனக்கு அனுபவம் இல்லாததால், அந்தப் பறவைத் தீவனத்தை நான் வெளியே தொங்கவிட்டவுடன், பல அழகான பறவைகள் வரும் என்று கருதினேன்.  நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள் சென்றன; பறவைகள் வரவில்லை. என்ன செய்வது என்று நான் பலரிடம் கேட்டேன். நான் என்ன தவறு செய்து கொண்டிருந்தேன்? “ஒன்றுமில்லை” என்று அவர்களில் பெரும்பாலோர் பதிலளித்தனர். “சற்று காத்திரு” என்றனர்.  எனவே நான் இந்த பறவைகளை ஈர்ப்பதற்காக முடிந்த அனைத்தையும் முயற்சித்து காத்திருந்தேன்.

நான் டெக்கை சுத்தம் செய்தேன், உணவை மாற்றினேன், தீவனத்தை சுத்தம் செய்தேன், பூனையையும் வெளியே அனுப்பினேன். ஆனால் எதுவும் பயன் அளிக்கவில்லை. அதனால்… நான் பொறுமையோடும் நம்பிக்கையோடும் காத்திருந்தேன்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒரு சனிக்கிழமை மதியம், நான் உறைந்தேன்! பறவை தீவனத்தில் என் கண்களுக்கு ஒரு அழகான காட்சி , என் வாழ்க்கையில் நான் பார்த்த மிக அழகான பறவை! திடீரென்று எல்லா இடங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான பறவைகள் தோன்றின!

இந்த சிறிய உயிரினத்திலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் எவ்வளவு அழகானது. “பொறுமை மற்றும் நம்பிக்கை” வாழ்க்கையில் அழகான விஷயங்களை ஈர்க்கும். நான் உண்மையில் பொறுமையாக மற்றும் நம்பிக்கையுடன் இதயத்தில் உள்ள கேள்விகளின் பதிலுக்கு காத்திருக்கிறேன் என்பதை உணரவில்லை.

வாழ்க்கையில் அவசரப்பட முடியாத சில விஷயங்கள் இருக்கின்றன என்பதே இங்கு வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடம். காலம் கனியும் போது அவை நடக்கும். பொறுமையாக காத்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் பழுத்த பழம் நம் கைகளில் விழும்போது, அது சுவையாக இருக்கிறது. அந்த உணர்வுக்கு வேறெதுவும் ஈடாகாது. பேரின்ப உணர்வு.

“வாழ்க்கையில் வேகமாக ஓடாதீர்கள். ஒவ்வொரு அடியிலும் ரசிக்க வேண்டிய பயணம் தான் வாழ்க்கை” என்றார் ஒருவர்.

நீதி:

பொறுமை என்பது நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு நற்பண்பு. நாம் ஆராய்ந்தால், பொறுமையின்மை நம் விருப்பங்கள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வால் எழுகிறது என்பது புரியும். பொறுமையை வளர்ப்பதற்கான சிறந்த வழி “ஏற்றுக்கொள்ளுதல்”. நாம் சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளும் போது, ​​அது ஒரு அமைதியான மனதை உருவாக்குகிறது. பொறுமையுடன் சூழ்நிலையை அணுகுவது நாம் வாழும் சுற்றுச் சூழலிலும் அமைதியை ஏற்படுத்தும்.

மொழி பெயர்ப்பு:

லக்ஷ்மிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

பிறருக்காகப் பிரார்த்தனை

நீதி: அன்பு / உண்மை

உபநீதி: அக்கறை / இரக்கம்

மிச்சிகனில் (MICHIGAN) உள்ள தனது வீட்டு தேவாலயத்திற்குச் சென்ற போது, சமயப்பரப்பாளர்  ஒருவர் பிரசங்கத்தில் சொன்ன உண்மைக் கதை இது.

ஒரு சமயப்பரப்பாளர் , ஆப்பிரிக்காவை சென்றடைந்த போது, இரண்டு ஆண்கள் சண்டையிடுவதைக் கவனித்தார். அவர்களில் ஒருவர் பலத்த காயமடைந்தார். அவர் காயங்களுக்கு சிகிச்சை அளித்தார்; அதே நேரத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவரிடம் பேசினார். பின்னர் அவர் இரண்டு நாட்கள் பயணம் செய்தார். ஒரு இரவு காட்டுக்குள் தங்கி, அசம்பாவிதம் இல்லாமல் வீட்டிற்கு வந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் தனது பயணத்தை மீண்டும் தொடங்கினார். ஊருக்கு வந்ததும், அவர் சிகிச்சை அளித்த இளைஞன் அவரை அணுகினார்.

அந்த இளைஞன் அவரிடம், “நீங்கள் பணம் மற்றும் மருந்துகளை எடுத்துச் சென்றது தெரிந்து, நானும் சில நண்பர்களும் உங்களைப் பின்தொடர்ந்து காட்டுக்குள் வந்தோம். நீங்கள் ஒரு இரவு இங்கு தங்குவீர்கள் என்று தெரிந்து கொண்டோம். நாங்கள் உங்களைக் கொன்று உங்கள் பணத்தையும் மருந்துப் பொருட்களையும் கொண்டு செல்ல திட்டமிட்டோம். ஆனால், நாங்கள் உங்கள் முகாமுக்குள் நுழைய முயன்ற போது, 26 ஆயுதமேந்திய காவலர்களால் உங்கள் முகாம் சூழப்பட்டிருந்தது.

இதைக் கேட்ட சமயப்பரப்பாளர் சிரித்துவிட்டு, அந்த காட்டு முகாமில் தான் மட்டும் தனியாக இருந்ததாகக் கூறினார். ஆனால் அந்த இளைஞன், “இல்லை ஐயா, நான் மட்டும் காவலாளிகளைப் பார்க்கவில்லை, என் ஐந்து நண்பர்களும் அவர்களைப் பார்த்தார்கள்.  அந்த காவலர்களைப் பார்த்து பயந்து உங்களை விட்டு நாங்கள் வெளியேறினோம்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.

பிரசங்கத்தின் இந்த கட்டத்தில், சபையில் இருந்தவர்களில் ஒருவன்  சமயப்பரப்பாளரை குறுக்கிட்டு, இது நடந்த சரியான நாளை சொல்ல முடியுமா என்று கேட்டான். சமயப்பரப்பாளர் சபைக்குத் தேதியைக் கூறினார். குறுக்கிட்டவன் அவரிடம் இந்தக் கதையைச் சொன்னான்:

அவன், “ஆப்பிரிக்காவில் சம்பவம் நடந்த அன்றிரவு, இங்கே காலை நேரம். நான் கோல்ஃப் விளையாடத் தயாராகிக் கொண்டிருந்தேன். உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்ற ஆவலை உணர்ந்தபோது நான் விளையாட  இருந்தேன். உண்மையில், கர்த்தருடைய வற்புறுத்தல் மிகவும் வலுவாக இருந்தது. நான் உங்களுக்காக ஜெபிக்க இந்த தேவாலயத்தில் உள்ள மனிதர்களை இங்கே சரணாலயத்தில் என்னுடன் சந்திக்க அழைத்தேன். அன்று என்னைச் சந்தித்த ஆண்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டுகிறேன்” என்றான்.

அன்று ஜெபிக்க ஒன்றாகக் கூடியிருந்த மனிதர்கள் எழுந்து நின்றனர். சமயப்பரப்பாளர்  அவர்கள் யார் என்பதைப் பற்றி கவலைப்படவில்லை – அவர் எத்தனை மனிதர்களைப் பார்த்தார் என்று எண்ணுவதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். 26 மனிதர்கள் இருந்தனர்.

நீங்கள் எப்போதாவது ஒருவருக்காக ஜெபிக்க வேண்டும் என்ற ஆசையை உணர்ந்திருக்கிறீர்களா? நான் அவர்களுக்காக பின்னர் பிரார்த்தனை செய்கிறேன்? என்று சொல்லி ஒரு பட்டியலில் வைத்துள்ளீர்களா?

பிரார்த்தனை செய்ய தூண்டுதல் ஏற்பட்டால் உடனே செய்யுங்கள்.

நீதி:

மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்வது என்பது நாம் அவர்களுக்காக அக்கறை காட்டுவதாகும். நாம் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் போது, அவர்களின் சுமைகளில் பங்கு கொள்கிறோம். “பிரார்த்தனை என்பது விஷயங்களை வெளிப்புறமாக மாற்றுவது அல்ல, ஆனால் ஒரு நபரின் உள் இயல்பில் மாற்றம் செய்யும் அற்புத நிகழ்வாகும்.” மற்றவர்களுக்காக நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது, அவர்களை குணப்படுத்தவோ அல்லது கடினமான நேரங்களில் வலிமையை கொடுக்கவோ கடவுளிடம் மன்றாடுகிறோம். நாமும் மாற்றத்திற்காக நம் இதயங்களைத் திறக்கிறோம். மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் போது, அவர்களின் இதயங்களை மாற்றுவதற்கும், அவர்களின் சூழ்நிலைகளில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், வல்லவராகிய இறைவனுடன் இணைகிறோம். அதே நேரத்தில், அது நம் மனதையும் திருத்துகிறது.

பிரார்த்தனையின் சக்தியை விளக்க முடியாது; அதை அனுபவிக்க மட்டுமே முடியும்.

மொழி பெயர்ப்பு:

சங்கீதா ராஜேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

ஊசியா கத்தரிக்கோலா

நீதி: உண்மை, அன்பு

உபநீதி: ஒற்றுமை

ஒரு உன்னதமான தையற்காரர் பெரிய ரிஷியாக மாறினார்.

அரசர் அவரிடம் தலை வணங்கி, வைரங்களால் பொறிக்கப்பட்ட தங்க கத்தரிக்கோலை அளிக்க வந்தார்.

ரிஷி அதை ஏற்க மறுத்து விட்டார். அவருக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று அரசர் வருத்தமுற்றார்.

அதனால் அரசர் அவரிடம், “நீங்கள் உபயோகிக்கும் வகையில் நான் உங்களுக்கு என்ன கொடுக்கலாம்?” என்று கேட்டார்.

அதற்கு ரிஷி, “எனக்கு ஒரு ஊசி வேண்டும்” என்றார்.

உடனடியாக அரசர் ஒரு ஊசியை ஏற்பாடு செய்து அவரிடம் கொடுத்தார். பிறகு, ரிஷியின் பதிலுக்காக பொறுமையுடன் அரசர் காத்துக் கொண்டிருந்தார்.

ரிஷி, “நான் கத்தரிக்கோலை ஏற்றுக் கொள்ளாத காரணம், அது வெட்டி, பிரிவை ஏற்படுத்துகிறது. நம் மனமும் அப்படிதான்; கத்தரிக்கோலை போன்றது. ஆனால் ஊசி சேர்த்து தைத்து, ஒன்றாக்குகிறது. நம் இருதயம் ஊசியைப் போன்று உறவுகளை சேர்த்து ஒற்றுமையை மேம்படுத்துகிறது.

இன்றைய சமுதாயத்திற்கு ஊசி தான் தேவைப்படுகிறது; கத்தரிகோல் அல்ல!

நீதி:

ஒற்றுமையின் அடித்தளம் நம்பிக்கை; அதனால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், ஒற்றுமையாக செயற்பட முடியும். ஒற்றுமையாக இருந்தால் செயற்படுவது சுலபமாக இருக்கும். பெரும்பாலான சமயங்களில், நாம் தனியாக ஒரு வேலையை செய்ய முடியாது; மற்றவர்களின் துணை தேவைப்படுகிறது. ஒற்றுமை என்ற ஒழுக்கமான நடத்தை நமக்கு சக்தி கொடுக்கிறது. நமக்கு மன வலிமை இருந்தால், எந்த ஒரு சூழ்நிலையையும் ஒற்றுமையாக எதிர்கொண்டு, வெற்றிகரமாகத் திகழலாம்.

பணிவு ஒற்றுமைக்கு வழி வகுக்கும்; ஒற்றுமை நிம்மதியை அளிக்கும் – மதர் தெரேசா

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE